மகிழ்ச்சியான வாழ்விற்கு…

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பெளதிக வாழ்க்கை மகிழ்ச்சியைத் தேடும் ஒரு போராட்டம். ஆனால் அதை எங்கே தேடுவது என்பதை மக்கள் அறிவதில்லை. இக்கட்டுரையில் நமது மகிழ்ச்சியான வாழ்விற்கு கிருஷ்ணரே ஆதாரம் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

ஏகோனவிம்ஷே விம்ஷதிமே

வ்ருஷ்ணிஷு ப்ராப்ய ஜன்மனீ

ராம-க்ருஷ்ணாவ் இதி புவோ

பகவான் அஹரத் பரம்

“பகவான் பத்தொன்பது மற்றும் இருபதாவது அவதாரங்களில், ஸ்ரீ பலராமராகவும் ஸ்ரீ கிருஷ்ணராகவும் விருஷ்ணி குலத்தில் அவதரித்து உலகின் பாரத்தைக் குறைத்தார்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.3.23)

பிறவிப் பயனை அடைதல்

சந்தன மரம் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் முன்பு மலேசியாவில் அதிக அளவில் சந்தன மரம் வளர்ந்தமையால் அது மலய சந்தனம் என்று அறியப்பட்டது. அதுபோல, பகவான் கிருஷ்ணரால் எங்கு வேண்டுமானாலும் அவதரிக்க இயலும் என்றபோதிலும், அவர் விருஷ்ணி குலத்தில் அவதரித்தார். முதலில் பலராமரும், பின்னர் கிருஷ்ணரும் தோன்றினர். விருஷ்ணி குலத்தில் தோன்றியதால் கிருஷ்ணருக்கு வார்ஷ்ணேய என்ற நாமமும் வழங்கப்படுகிறது.

ஜன்ம கர்ம ச மே திவ்யம், பகவான் கிருஷ்ணரின் தோற்றமும் லீலைகளும் சாதாரணமானவை அல்ல, தெய்வீகமானவை. ஒருவன் கிருஷ்ணரை உண்மையாக அறிந்துகொண்டால், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி, ஜடவுடலைக் கைவிட்ட பிறகு அவன் மீண்டும் இந்த பெளதிக உலகில் பிறக்க வேண்டியதில்லை. கிருஷ்ணர் கூறுகிறார், மாம் ஏதி, ‘என்னிடம் வருகிறான்.’ அதுவே பிறவிப் பயனாகும். கிருஷ்ணரின் தெய்வீகமான தோற்றம், மறைவு மற்றும் செயல்களை ஒருவன்  புரிந்துகொள்ள முயலும்போது, அவனது வாழ்வு வெற்றிகர மானதாகிறது.

பணம் தீர்வல்ல

அனைவரும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதாலேயே ஒருவனால் பெளதிக பந்தத்திலிருந்து விடுபட முடியும். சிக்கல்களிலிருந்து விடுபட வேண்டும் என்று அனைவரும் முயல்கின்றனர். அனைவரும் துன்பகரமான சூழ்நிலையைத் தவிர்க்க விரும்புகின்றனர். அதுவே உண்மை. நாம் அனைவரும் சிரமப்படுகிறோம். உதாரணமாக, இரண்டாயிரம் ரூபாய் வருமானம் போதுமானதாக இல்லை, ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதித்தால் எனது துன்பம் விலகும் என்று நான் எண்ணுகின்றேன். ஆனால், ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்கும்போது, மற்றொரு துன்பம் வருகிறது. ஆகையால், பத்தாயிரம் ரூபாய் வருமானத்திற்காக முயல்கிறேன். இவ்வாறு, எவ்வளவுதான் பணம் ஈட்டினாலும் நமது துன்பம் விலகப்போவதில்லை. கோடீஸ்வரர்களிடம் பெருமளவில் பணம் உள்ளது. இருப்பினும், அவர்கள் தற்கொலை செய்து
கொள்கின்றனர்; ஏனெனில், எவ்வளவுதான் பௌதிக வசதிகளைக் கொண்டிருப்பினும், அது மகிழ்ச்சியைத் தராது என்பதை அவர்கள் அறிவதில்லை.

எவ்வளவு பணம் ஈட்டினாலும், அஃது உண்மையான மகிழ்ச்சியைத் தராது, ஆனால் வரவேண்டிய துன்பமோ நிச்சயம் வந்தே தீரும்.

பழமைவாதியாக இருப்போம்

இந்தியா ஏழை நாடு என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆயினும், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்; ஆனால் வெளிநாட்டினரோ இதனை அறிவதில்லை. இந்தியர்கள், அதிலும் குறிப்பாக கிராமத்து மக்களிடம் பௌதிக உடைமைகள் அதிக அளவில் இருப்பதில்லை—ஒன்று அல்லது இரண்டு ஆடைகளே அவர்களிடம் இருக்கும். ஆயினும், அவர்கள் வேதக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள். அதிகாலையில் நீராடி, வேலைக்குச் செல்கின்றனர். கிடைப்பதை உண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். மக்கள் அவர்களைப் “பழமைவாதிகள்” என்று அழைக்கின்றனர். பழமைவாதிகளாக இருந்தால் என்ன, நாகரிகமானவர்களாக இருந்தால் என்ன? மகிழ்ச்சியே நமது தேவை. நாகரிகத்தில் முன்னேறிய சமூகத்தில் மனிதர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பழமைவாதியாக இருப்பதில் என்ன தவறு?

உண்மையான மகிழ்ச்சி

உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை மக்கள் அறியாமல் உள்ளதால், வாழ்க்கை போராட்டம் தொடர்கிறது. தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31) உண்மையான ஆனந்தம் பகவான் விஷ்ணுவிடம் உள்ளது என்பதை மூடர்கள் அறியார்கள். நமது ஆனந்தம் கிருஷ்ணரே. நாங்கள் கிருஷ்ணருக்காக இரவுபகலாக உழைக்கின்றோம். கர்மிகளும் அபக்தர்களும் கூட இரவுபகலாக உழைக்கின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை, நாங்களோ மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர்கள் செய்யும் அதே வேலையைத்தான் நாங்களும் செய்கின்றோம். நாங்கள் சோம்பேறிகளோ தூங்கிப் பொழுதைக் கழிப்பவர்களோ இல்லை. எங்களது இயக்கத்தில் இருப்பவர்களில், சிலர் எழுதுகின்றனர், சிலர் தட்டச்சு செய்கின்றனர், சிலர் புத்தகங்களை விநியோகிக்கின்றனர், சிலர் கிருஷ்ணருக்குப் படைப்பதற்காக உணவு சமைக்கின்றனர், சிலர் சுத்தம் செய்கின்றனர், சிலர் கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காக நாம ஸங்கீர்த்தனம் செய்கின்றனர். நாங்கள் ஒரு நொடியைக்கூட வீணடிப்பதில்லை. கிருஷ்ணருக்காக உழைப்பதால் எங்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது. இங்கு எவரும் ஊதியம் பெறுவதில்லை. மாறாக, அவர்கள் பணம் தருகிறார்கள். ஆனால், அவர்கள் ஆனந்தமாக உள்ளனர். கர்மிகளோ ஊதியம் பெறினும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஏன்?

சில சமயங்களில், எங்களது பக்தர்களில் சிலர் இங்கிருந்து வெளியே சென்றுவிடுவர். ஆயினும், அவர்களால் எங்களை விட்டு விலகி வசிக்க முடிவதில்லை. கிருஷ்ண பக்தியிலிருந்து விலகிச் சென்று மீண்டும் திரும்பி வந்தவர்கள் கிருஷ்ண பக்தியின்றி இன்பம் இல்லை என்று உணருகின்றனர். சிலர் எங்களைப் பார்த்து, “இவர்கள் முட்டாள்கள், ஏதோ ஒரு கொள்கையின்படி செயல்படுகின்றனர்,” என்று கூறலாம். ஆனால், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனரே. தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், எவ்வாறு மகிழ்ச்சி கிட்டும் என்பதை அபக்தர்கள் அறிவதில்லை.

நாம் கடவுளின் அம்சங்கள் என்பதால், மகிழ்ச்சி என்பது நாம் கடவுளை அடையும்போது மட்டுமே சாத்தியமாகும். உதாரணமாக, கைக்குழந்தை ஒன்று அழும்போது, யாராலும் அக்குழந்தையின் அழுகையை நிறுத்த முடிவதில்லை; ஆனால் தாய் தன் மார்போடு அணைத்துக்கொள்ளும்போது அக்குழந்தை மகிழ்ச்சி அடைகிறது. ஏனென்றால், அக்குழந்தை தாயின் ஓர் அங்கமாகும். அக்குழந்தை தன் தாயின் பாதுகாப்பில் இருப்பதை அறிந்து, உடனடியாக மகிழ்ச்சியும் அமைதியும் அடைகிறது. அதுபோலவே, நாமும் பகவானின் அங்கங்களாவோம். நாம் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் அடைக்கலத்தைப் பெறாத வரை மகிழ்ச்சி என்பதே இல்லை. ஆனால், மூடர்கள் இதை அறிவதில்லை. அவர்கள் பெயரளவிலான அறிவியல் முன்னேற்றத்தின் மூலம் மகிழ்ச்சியைப் பெற முயல்கின்றனர்.

குழந்தை தன் தாயின் பாதுகாப்பில் இருப்பதை அறிந்து அமைதியும் ஆனந்தமும் அடைகிறது; அதுபோல, நாமும் பகவானுடைய அடைக்கலத்தைப் பெற்றால், அமைதியும் ஆனந்தமும் அடைவோம்.

துன்பமற்ற நிலை

துன்பமற்ற, இன்பமயமான வாழ்வை அடைவதே வாழ்வின் குறிக்கோளாகும். ஆனந்தமயோ ’ப்யாஸாத். நீங்கள் கிருஷ்ணரின் பல்வேறு வரைபடங்களைப் பார்த்திருப்பீர்கள். கிருஷ்ணர் இடையர் குலச் சிறுவர்களுடன் விளையாடுகிறார், கோபியர்களுடன் நடனமாடுகிறார், வெண்ணெய் திருடுகிறார். இவ்வாறு அவரால் நிகழ்த்தப்படும் அனைத்து லீலைகளும் ஆனந்தமயமாகவே உள்ளன. கிருஷ்ணரை வாடிய முகத்துடனோ அழுதவாறோ காண முடியாது. அசுரர்களை வதம் செய்யும்போதுகூட, அவர் சிரித்த முகத்துடன் மிகவும் எளிமையாகக் கொல்கிறார். அசுரர்களைக் கொல்லும்போதும் சரி, கோபியர்களுடன் நடனமாடும்போதும் சரி, அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளார்.

துன்பமற்ற மிகவுயர்ந்த இன்பத்தைப் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்குகிறோம், ஆனந்த மயோ ’ப்யாஸாத். ஆனந்தமாக இருத்தலே ஆத்மா மற்றும் பரமாத்மாவின் இயற்கை என்று வேதாந்த சூத்திரம் கூறுகிறது. ஆன்மீக வாழ்க்கை எப்போதும் இன்பமயமானது. அத்தகைய இன்பம் இறைவனுடனான ஒத்துழைப்பினால் கிடைக்கின்றது.

நாம் சிறு தீப்பொறியைப் போன்றவர்கள். சில சமயம் தீப்பொறி மிக அழகாகத் தோன்றலாம். ஆனால் அது நெருப்பிலிருந்து சிதறி விழுந்துவிட்டால், அணைந்து விடுகிறது. நமது பெளதிக வாழ்க்கையும் இதைப் போன்றதே. நாம் கிருஷ்ணருடைய சங்கத்தை நிராகரித்து விட்டு இந்த பெளதிக உலகில் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், துன்பத்தையே அடைவோம். தவறுதலாக நெருப்பிலிருந்து பிரிந்து கீழே விழுந்த பொறியை, மீண்டும் நெருப்புடன் இணைப்பதே கிருஷ்ண பக்தி இயக்கமாகும். இவ்வாறு நெருப்புடன் (இறைவனுடன்) மீண்டும் இணைவதே உண்மையான ஆனந்தமாகும்.

கடவுளை அறிவதற்கான சோதனை

இந்த ஸ்லோகத்தில் ராம-க்ருஷ்ணாவ் இதி, என்று கூறப்பட்டுள்ளது. பகவான் பலராமராகவும் கிருஷ்ணராகவும் அவதரித்துள்ளார். இவர்களிடம் சில அறிகுறிகள் உள்ளன, அதை வைத்து இவர்களைச் சோதிக்கலாம். அஃது என்ன சோதனை? பகவான் அஹாரத் பாரம், பகவான் உலகின் பாரத்தைக் குறைக்கிறார். பலராமரும் கிருஷ்ணரும் அவதரித்தபோது, அவர்கள் உலக அமைதிக்காகப் பல அசுரர்களைக் கொன்றனர். கிருஷ்ணர் பிறந்தது முதல், பூதனை, அகாசுரன், பகாசுரன், கேசி என பல அசுரர்களைக் கொன்றார். தினமும் கிருஷ்ணரும் பலராமரும் வனத்திற்குச் செல்வர், அங்கே அவர்களைத் தொந்தரவு செய்ய அசுரர்கள் வருவர், கிருஷ்ணர் அவர்களது கதையை முடித்து விடுவார். கிருஷ்ணருடைய நண்பர்கள் தங்களது இல்லத்திற்குத் திரும்பிய பின்னர், தங்கள் தாய்மார்களிடம் “தாயே, கிருஷ்ணர் மிகவும் அற்புதமானவர், எவ்வளவு பெரிய அசுரன் வந்தான் தெரியுமா, கிருஷ்ணர் அவனை எப்படி கொன்றார் என்று தெரியுமா!” என்று வனத்தில் நிகழ்ந்தவற்றைக் கதையாக விவரிப்பர். அவர்தான் கிருஷ்ணர். வெறும் தியானம் செய்வதால் யாரும் கிருஷ்ணராக முடியாது. ஒருவன் தன்னை இராமர் அல்லது கிருஷ்ணர் என்று அறிவித்தால், அதற்கு ஆதாரம் என்ன? முட்டாள் மக்கள் ஆதாரத்தைப் பார்ப்பதில்லை. அவர்கள் போலியான நபரை இராமர், கிருஷ்ணர் என்று ஏற்றுக்கொள்கின்றனர்.

பலராமரும் கிருஷ்ணருமே முழுமுதற் கடவுள் ஆவர். அதை அவர்கள் நிரூபித்துள்ளனர். அவர்கள் புற்றுநோயினால் உயிரை விடுகிற இராம-கிருஷ்ணர் அல்லர். நாம் அத்தகைய இராம-கிருஷ்ணரின் பின்னால் செல்வதில்லை. உண்மையான இராமரும் கிருஷ்ணரும் இருக்கும்போது, நாம் ஏன் போலியான இராம-கிருஷ்ணரின் பின்னால் செல்ல வேண்டும்?

நாம் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் ஏமாறக் கூடாது. கிருஷ்ணயே பாஜே சேஇ படா சதுர, புத்திசாலியாக இல்லாவிடில் கிருஷ்ணரிடம் சரணடைய முடியாது.

பலர் கிருஷ்ணருக்குப் போட்டியாக யாரேனும் ஒருவரை அறிமுகப்படுத்த முயல்கின்றனர். ஏன் அந்த கிருஷ்ணர்? இங்கே பெரிய தாடியுடன் வேறொரு கிருஷ்ணர் இருக்கின்றார். அத்தகு கிருஷ்ணர் முட்டாள்
களுக்கானவர், எவன் தன்னை கிருஷ்ணர் என்று பிரகடனப்படுத்துகிறானோ அவனும் முட்டாளே.

உலக நன்மைக்காகத் தோன்றிய கிருஷ்ணரும் பலராமரும் பல அசுரர்களைக் கொன்றனர்.

கிருஷ்ணரை அறிவதே நமது குறிக்கோள்

பகவத் கீதையில் (7,16) கிருஷ்ணர் கூறுகிறார்,

சதுர்-விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ ’ர்ஜுன

ஆர்தோ ஜிஜ்ஞாஸுர் அர்தார்தீ ஜ்ஞானீ ச பரதர்ஷப

துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் ஆகிய நான்குவிதமான மனிதர்கள் புத்திசாலிகளாக இருப்பதால் கடவுளிடம் வருகின்றனர். பொதுவாக ஒரு மனிதன் புண்ணிய ஆத்மாவாக இருந்தால், அவன் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான்: “கடவுளே, நான் துன்பத்தில் உள்ளேன், என்னைக் காப்பாற்று.” ஒருவனுக்கு பணம் தேவைப்பட்டால் அவன் கடவுளை அணுகி, “நான் பணத் தேவையினால் துன்புறுகிறேன், ஆகையால், தயவுசெய்து எனக்கு செல்வத்தைத் தாருங்கள்” என்று வேண்டுகிறான். ஞானி, இறைவனிடம் அறிவை வேண்டுகிறான், கடவுளின் உண்மையான நிலையை அறிய முற்படுகிறான். கேள்வியுடையவன், ‘கடவுள் யார்?’ என்று தேடுகிறான்.

இந்த நான்குவிதமான மனிதர்கள் கடவுளைப் புரிந்துகொள்ள அல்லது கடவுளிடம் செல்ல முயல்கின்றனர். இந்த நான்குவிதமான மனிதர்களில், துயருற்றோரும் செல்வத்தை வேண்டுவோரும் தங்களது பிரார்த்தனை நிறைவேறிவிட்டால், பகவானை மறந்து விடுகின்றனர். கேள்வியுடையவனும் ஞானியும் தொடர்ந்து கடவுளைத் தேடுகின்றனர். இந்த இருவரில் “கடவுள் யார்?” என்பதைப் புரிந்துகொள்பவரே பூரணமானவராவார். இது பற்பல பிறவிகளுக்குப் பிறகே சாத்தியமாகிறது. பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான். அவர்கள் எந்தவிதமான அறிவைப் பெறுகின்றனர்? வாஸுதேவ: ஸர்வம் இதி, “கிருஷ்ணரே எல்லாம், (வாஸுதேவர்).” கிருஷ்ணரின் பல பெயர்களில் ஒன்று வாஸுதேவர் என்பதாகும்.

விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணரை அறிவதே நமது குறிக்கோள். கிருஷ்ணரை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அவர் எல்லையற்றவர். ஆயினும், மஹாஜனங்களையும் தூய பக்தர்களையும் பின்பற்றி, நாம் ஓரளவிற்கு கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயலலாம்.

நமது உண்மையான குறிக்கோள் கிருஷ்ணர்மீது அன்பு செலுத்துவதே. கோபியர்களும் கோபர்களும் கிருஷ்ணரை “கடவுள்” என்று அறியவில்லை. அன்னை யசோதையும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுள் என்று அறியவில்லை. ஆனால் கிருஷ்ணர்மீது அவர்கள் கொண்ட அன்பு இயற்கையானது. கிருஷ்ணரைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது. இந்த நிலையை அடைவதே பூரணத்துவம் ஆகும்.

கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் அளவிற்கு நம்மிடம் போதுமான அறிவு இல்லாதபோதிலும், கடவுளை அவரது லீலைகளின் மூலம் நாம் தரிசிக்கலாம். கிருஷ்ணர் இந்த பூவுலகில் தோன்றி நிகழ்த்திய லீலைகள் அனைத்தும் அசாதாரணமானவை. அவர் மனிதர் அல்லர், ஆனால் மனிதராகத் தோன்றினார். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்கிறான், கிருஷ்ணரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது திருமணம் அற்புதமானது. அவர் 16,108 மனைவிகளை மணந்தார். இதை யாராலும் செய்ய இயலாது. முஸ்லீம் நவாப்கள் பல மனைவிகளை மணந்தனர். ஒரு நவாப் 160 மனைவிகளை மணந்தார். ஆனால் அவரால் அனைத்து மனைவிகளையும் ஒரே நாளில் ஒரே இரவில் சந்திக்க முடியவில்லை. அது சாத்தியமல்ல. ஆனால் கிருஷ்ணரோ தம்மை 16,108 விரிவங்கங்களாக விரித்து ஒவ்வொரு மனைவியுடனும் தனித்தனியே வசித்தார்.

இவ்வாறு கிருஷ்ண பலராமரின் அவதாரம் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பகவானின் அறிகுறிகள், அவருடைய தாய் தந்தை பெயர், அவருடைய இருப்பிடம், லீலைகள் என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால், போலியான அவதாரங்களால் எங்களை ஏமாற்ற முடியாது. யார் ஏமாறுவதற்கு தயாராக இருக்கின்றனரோ, அவர்களே ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் நாங்கள் ஏமாற விரும்புவதில்லை. எங்களுக்கு உண்மையான பகவான் வேண்டும். நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives