வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Back to Godhead பத்திரிகையின் (பகவத் தரிசனத்தின் ஆங்கில மூலம்) நவம்பர் 20, 1958 இதழில் வெளியான இந்த சிந்திக்கத் தூண்டும் சுவாரஸ்யமான கட்டுரையில், ‘திரவ அழகு’ என்ற அற்புதமான கதையை ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார். உண்மையின் இயல்பையும் அழகின் இயல்பையும் அவர் தெளிவாக விளக்குகிறார். இந்த விளக்கம் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில், உள்ளுறையும் ஆத்மாவை அறிய முற்படுபவர்களுக்கு வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.
உண்மையைத் தேடுதல்
சில சமயங்களில், “உண்மை,” “அழகு” ஆகிய இரு சொற்களும் ஒன்றுக்கொன்று இணக்கமான சொற்களா இல்லையா என்னும் விவாதம் எழுகின்றது. உண்மையைச் சொல்ல ஒருவர் விருப்பப்படலாம், ஆனால், உண்மை எல்லா சந்தர்ப்பங்களிலும் அழகாக இருப்பதில்லை. பார்க்கப்போனால், பல சமயங்களில் அது கசப்பானதாகவும் விரும்பத்தகாததாகவும் உள்ளது. எனவே, உண்மையையும் அழகையும் ஒருவர் ஒரே சமயத்தில் எவ்வாறு கொண்டுச் செல்ல முடியும்?
இந்த வினாவிற்கு விடையளிக்கும் வகையில், “உண்மை,” “அழகு” ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை முதலில் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். பூரண உண்மை எப்பொழுதும் அழகானது என்பதை உறுதியாக எடுத்துரைக்க முடியும். உண்மை மிகமிக அழகாக இருப்பதால், அஃது அந்த உண்மை உட்பட எல்லாரையும் வசீகரிக்கிறது; உண்மை மிகமிக அழகாக இருப்பதால் பல முனிவர்களும் மகான்களும் பக்தர்களும் அவ்வுண்மையின் திருப்திக்காக மற்றவை அனைத்தையும் துறக்கின்றனர். நவீன உலகின் முன்மாதிரி என்று போற்றப்படுபவரான மகாத்மா காந்தி, அந்த உண்மையைச் சோதிப்பதற்காக (சத்திய சோதனைக்காக) தம் வாழ்வை அர்ப்பணித்தார். அவரின் செயல்கள் அனைத்தும் உண்மையை இலட்சியமாகக் கொண்டிருந்தன.
மகாத்மா காந்தி மட்டுமா? உண்மையைத் தேடும் உந்துதல் நம் ஒவ்வொருவரிலும் உள்ளது; ஏனெனில், உண்மை அழகானது மட்டுமின்றி ஸர்வ வல்லமை படைத்தது, எல்லா ஐஸ்வர்யங்களும் நிரம்பியது, எல்லாப் புகழையும் கொண்டது, துறவு மயமானது, மற்றும் முழு அறிவு நிரம்பியது.
துரதிர்ஷ்டவசமாக, உண்மையைப் பற்றிய தகவல் மக்களிடம் இல்லை, உண்மையின் பெயரில் 99.9 சதவிகித மக்கள் வாழ்நாள் முழுவதும் உண்மையற்றதையே பின்தொடர்கின்றனர். உண்மையாகச் சொன்னால், நாம் அனைவரும் அந்த உண்மையின் அழகால் கவரப்படுபவர்கள்; ஆயினும், நினைவிற்கெட்டாத காலந்தொட்டு உண்மையைப் போலத் தோன்றும் பொய்யில் நாட்டம்கொள்ளப் பழகியிருக்கிறோம். எனவே, பௌதிகவாதிகளுக்கு உண்மையும் அழகும் இணக்கமற்ற சொற்களாகத் திகழ்கின்றன. பௌதிக உலகின் உண்மையும் அழகும் பின்வரும் கதையில் விளக்கப்படுகிறது.
அழகியின் மீதான ஆவல்
முன்னொரு காலத்தில், மனிதன் ஒருவன் மிகுந்த பலசாலியாக கட்டுடலுடன் வாழ்ந்து கொண்டிருந்தான்; ஆயினும், அவனது நடத்தை தரம்தாழ்ந்ததாக இருந்தது. அவன் ஓர் அழகிய பெண்ணைக் காதலித்தான். அவள் தோற்றத்தில் மட்டும் அழகியாக இருக்கவில்லை, குணத்திலும் சாதுவின் தன்மைகளைப் பெற்றிருந்தாள்; எனவே, அந்த மனிதனின் காதலை அவள் ஏற்கவில்லை. ஆயினும், அவனோ காமத்தால் உந்தப்பட்டு அவளை வற்புறுத்த ஆரம்பித்ததால், அவள் ஏழு நாள் மட்டும் பொறுத்திருக்குமாறு அவனிடம் கூறி, மீண்டும் தன்னைச் சந்திப்பதற்கான நாளையும் குறிப்பிட்டாள். அவனும் அதற்கு ஒப்புக் கொண்டு அந்த குறிப்பிட்ட நாளை எதிர்நோக்கி மிகுந்த ஆவலுடன் காத்திருந்தான்.
திரவ அழகைச் சேகரித்தல்
அவ்வாறு இருப்பினும், நற்குணங்கள் பொதிந்திருந்த அப்பெண் பூரண உண்மையின் நிஜ அழகை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு, அதை நன்றாக அறிவுறுத்தக்கூடிய ஒரு வழிமுறையைக் கையாண்டாள். அவள் சக்தி வாய்ந்த பேதி மருந்தை உட்கொண்டு, ஏழு நாள்கள் தொடர்ந்து மலம் கழித்து உண்டவை அனைத்தையும் வாந்தியும் எடுத்தாள். அதுமட்டுமின்றி, அந்த நீர்த்த மலத்தையும் வாந்தியையும் பாத்திரங்களில் சேகரித்து வைத்தாள். பேதி மருந்தை உட்கொண்டதன் விளைவாக, அழகாக இருந்த அந்தப் பெண் மெலிந்து பார்ப்பதற்கு எலும்புக்கூடுபோல மாறினாள். அவளது நிறம் மிகவும் கறுத்து விட்டது, அழகிய கண்கள் குழிவிழுந்து உள்ளே போயின. அந்நிலையில், அம்மனிதனை சந்திப்பதற்காக முன்பு தான் குறிப்பிட்ட அந்த நேரத்தில், அவனுக்காகக் காத்திருந்தாள்.
அவன் அழகான உடையுடுத்தி பகட்டான தோற்றத்துடன் குறித்த காலத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது, அங்கு விகாரமான ஒரு பெண் இருப்பதைக் கண்டான். தான் சந்திக்கவிருந்த அழகிய பெண்ணைப் பற்றி அவளிடமே விசாரித்தான்! அவன் சந்திக்க விரும்பிய அழகி அந்த அவலட்சணமான பெண்ணே என்பதை அவன் அறியவில்லை. இவள் பொலிவிழந்து காணப்பட்டதால், தானே அந்த அழகி என்று அவள் பலமுறை உறுதிபடக் கூறியும் அவன் நம்பவில்லை.
அழகின் தன்மையை உணருதல்
இறுதியாக, தனது அழகின் வெவ்வேறு அம்சங்களை தனித்தனியாகப் பிரித்து, வெவ்வேறு பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகவும், அழகின் அந்த ரசங்களை அவன் அனுபவிக்கலாம் என்றும் அவள் கூறினாள். அவற்றைக் காண அவன் விரும்பியபோது, மலமும் வாந்தியும் கொண்ட பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அவனை அவள் அழைத்துச் சென்றாள். அங்கு சென்றதும் சகிக்க முடியாத துர்நாற்றம் அவனை வரவேற்றது. இவ்வாறாக, ‘திரவ அழகு’ அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாக, நற்குணம் கொண்ட அப்பெண்ணின் அருளால், துர்குணம் கொண்ட அம்மனிதன் நிழலையும் நிஜத்தையும் சரியாக இனங்காணும் அறிவைப் பெற்றான்.
ஆன்மாவே அழகுடையது
அம்மனிதனின் நிலை, பொய்யான பௌதிக அழகால் கவரப்படும் நம் ஒவ்வொருவரின் நிலையைப் போன்றதே. அப்பெண் தன் மனதின் விருப்பங்களுக்கேற்ப தன் பௌதிக உடலை அழகாக வைத்திருந்தாள். ஆனால் உண்மையில் அவள் தன் தற்காலிகமான பௌதிக உடலிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டவளாக இருந்தாள். பொய்யான தோலினால் கவரப்பட்ட அந்த மனிதனும் உண்மையில் அவளைப் போன்ற ஓர் ஆன்மப் பொறியே.
இகவுலக அறிவாளிகளும் அழகை ரசிக்கும் கலைஞர்களும் சார்புடைய உண்மையின் வெளிப்புற அழகாலும் கவர்ச்சியாலும் ஏமாற்றப்பட்டு, ஒரே சமயத்தில் உண்மையாகவும் அழகாகவும் திகழும் ஆன்மப் பொறியை அறியாமல் இருக்கிறார்கள். ஆத்மா மிகமிக அழகாக இருப்பதால், மலத்தாலும் வாந்தியாலும் நிரம்பியுள்ள நிலையிலும் அழகானதாகக் கருதப்படும் இந்த உடலை விட்டு அது விலகி விடும்போது, அந்த உடல் விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டு மூடப்பட்டிருந்தாலும் யாரும் அதைத் தீண்ட விரும்புவதில்லை.
உண்மையான அழகு
உண்மையான அழகோடு ஒத்துவராத, பொய்யான, முழுமையற்ற உண்மையை நாம் பின்தொடர்கிறோம். ஆனால் நிஜமான உண்மை நித்தியமான (அழியாத) அழகுடையதாகும், அந்த அழகு காலத்திற்கு அப்பாற்பட்டு நீடித்து நிலைபெற்றதாகும். அந்த ஆன்மப்பொறி அழிவடையாதது. வெளிப்புற தோலின் அழகை சக்தி வாய்ந்த பேதி மருந்தால் சில மணி நேரத்தில் அழித்து விடலாம். ஆனால், உண்மையின் அழகு அழிவிற்கு அப்பாற்பட்டது, என்றும் அப்படியே நிலைத்திருப்பது.
துரதிர்ஷ்டவசமாக, இகலோக கலைஞர்களும் அறிவாளிகளும் அழகிய ஆன்மப் பொறியை அறியாதவர்களாக உள்ளனர். மேலும், இந்த ஆன்மப் பொறிகளின் ஆதிமூலமாகிய முழுமையான நெருப்பு, அப்பொறிகளுக்கும் நெருப்பிற்கும் இடையிலான உறவு, அந்த உறவுகள் ஏற்படுத்தும் உன்னத லீலைகள் முதலியவற்றையும் அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். எல்லாம் வல்ல அந்த இறைவனின் கருணையால், அந்த லீலைகள் இங்கு நிகழ்த்தப்படும்போது, புலன்களுக்கு அப்பால் பார்க்கத் தெரியாத முட்டாள் மக்கள், உண்மையும் அழகும் சேர்ந்த அந்த லீலைகளை மேற்குறிப்பிட்ட மலத்தோடும் வாந்தியோடும் குழப்பிக்கொள்கிறார்கள். ஆகையால், உண்மையும் அழகும் ஒரே சமயத்தில் ஒருங்கே அமைவது எவ்வாறு சாத்தியம் என்று அவர்கள் விரக்தியில் வினவுகின்றனர்.
அழகிய உயர்சக்தி
எல்லாவற்றையும் வசீகரிக்கக்கூடிய அந்த ஆன்மீகமயமான உயர் சக்தி ஓர் அழகிய நபர் என்பதை இகலோக மக்கள் அறிவதில்லை. அவரே பரம்பொருள்; இருப்பவை அனைத்திற்கும் ஆதிமூலமும் தோற்றுவாயும் அவரே என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நுண்ணிய ஆன்மப் பொறிகளும்கூட பூரணத்தின் அம்சங்களே என்னும் காரணத்தினால், தன்மையின் அடிப்படையில் அவர்கள் அழகிலும் நித்தியத்துவத்திலும் பூரணத்துடன் ஒத்திருக்கின்றனர். ஒரு வித்தியாசம் என்னவெனில், முழுமை என்றும் நித்திய முழுமையாக உள்ளது; அம்சங்கள் என்றும் நித்திய அம்சங்களாக உள்ளனர். அவ்வாறு இருப்பினும், இருவருமே, பரம சத்தியமாக, ஒப்பிடவியலாத அழகாக, மிகவுயர்ந்த அறிவாக, பரம வலிமையாக, மிகவுயர்ந்த துறவாக, மிகச்சிறந்த செல்வமாக விளங்குகின்றனர்.
எந்தவொரு நூல், இறுதி உண்மையையும் அழகையும் விவரிக்கவில்லையோ, அஃது இவ்வுலகின் மிகப்பெரிய கவிஞரால் அல்லது அறிஞரால் எழுதப்பட்டிருந்தாலும், அது சார்புடைய உண்மையின் மலமும் வாந்தியுமே. உண்மையான நூல் என்பது பூரணத்தின் இறுதி உண்மையையும் அழகையும் வர்ணிக்கக்கூடிய நூலே.