ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி
ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி குறித்து தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அலுவலரான திரு சர்மா அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கும்படி தங்களது ஐக்கிய நாட்டு சபையிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் மனிதனாகப் படைக்கப்பட்டுள்ளேன், அதே போல யானைகளும் எறும்புகளும்கூட படைக்கப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? சூரியனும் சந்திரனும் சரியான நேரத்தில் உதிக்கின்றன, பருவ காலங்கள் மாறுகின்றன. இவற்றின் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?
திரு சர்மா: ஐக்கிய நாடுகள் சபையால் தங்களுடைய வினாவிற்கு பதிலளிக்க இயலாது என்றே நினைக்கிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் பெயரளவிலான கல்வியறிவைப் பெற்றிருப்பினும், மந்த புத்தியுடையவர்களாகவே உள்ளனர்.
திரு சர்மா: ஆம். இன்றைய கல்விமுறை வெறும் புத்தக அறிவாக மட்டுமே உள்ளது.
ஸ்ரீல பிரபுபாதர்: இத்தகைய அறிவு வெறும் கால விரயமே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. உலகம் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தை அறியாத—கிருஷ்ண உணர்வினை எழுச்சி பெறச் செய்யாத—நபர் தனது கடமைகளை பூரணமாக நிறைவேற்றினாலும், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் வெறும் கால விரயமே. எனவே, ஐக்கிய நாடுகள் சபை காலத்தை வீணடிக்கின்றது என்பதே எங்களது கருத்து.
நடைமுறையில் பார்த்தாலும், அவர்களால் எதையும் சாதிக்க முடிவதில்லை. போரை நிறுத்த வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்ப கால குறிக்கோளாக இருந்தது. ஆனால் பல போர்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன; அவர்களால் போரை நிறுத்த முடியவில்லை. தங்களை ஐக்கிய நாடுகள் சபை என்று அறிவித்துக் கொண்டாலும், நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. அவர்கள் உண்மையிலேயே அமைதியை விரும்பினால், முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரே உன்னத அனுபவிப்பாளர் என்றும், பரம உரிமையாளர் என்றும், அனைவரின் உற்ற நண்பர் என்றும் உணர வேண்டும் என பகவத் கீதை அறிவுறுத்துகிறது. இதனை அவர்கள் அறியும்போது உலகில் அமைதி நிலவும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். இல்லாவிடில், பெரிய அலுவலகங்களும் கருத்தரங்குகளும் பயனளிக்காது.
திரு சர்மா: அப்படியெனில், அனைத்தும் கடவுளுக்கு சொந்தம் என்னும் உண்மையை அவர்கள் தவிர்க்கின்றனரா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அதுவே அவர்களது முட்டாள்தனம். ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் இணைந்த கூட்டமைப்பே ஐக்கிய நாடுகள் சபையாகும். சிலர் ஏமாற்றுகின்றனர், சிலர் ஏமாறுகின்றனர். ஏமாறுபவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களின் கூட்டணியினால் மனித குலத்திற்கு எவ்வாறு நன்மையைச் செய்ய இயலும்? அவர்கள் ஏமாற்றுபவர்கள்: அமைதியை அடைவதற்கான வழியை அறியாதவர்கள். ஆயினும், “நாங்கள் அமைதியை நிலைநாட்டுவோம்” என அவர்கள் கூறுவதால், அவர்கள் ஏமாற்றுக்காரர்களே.
திரு சர்மா: பகுத்தறிவின் அடிப்படையில் விளக்கப்படும் கருத்துகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என மக்கள் கூறுகின்றனர். மற்ற கருத்துக்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவை அல்ல.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், எங்களுடைய வாதம் அறிவுபூர்வமானதாகும். இந்த அறையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் படைக்கப்பட்டவையே. இல்லையா?
திரு சர்மா: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: மேஜை, மின்விளக்கு என அனைத்தும் யாரோ ஒருவரால் படைக்கப்பட்டவையே. அவ்வாறு இருக்கையில், இந்த உலகம் ஒரு நபரால் படைக்கப்பட்டது என்பதை எவ்வாறு மறுக்க முடியும்? எல்லாம் தானாக வந்தது என்று நீங்கள் கூறினால், அஃது அயோக்கியத்தனம். யாரோ ஒருவர் படைத்திருக்கிறார். யார் அவர்? நாம் அந்த படைப்பாளி இல்லை. அப்படியெனில், மற்றொரு நபர் இந்த உலகைப் படைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். யார் அந்த உரிமையாளர்? நான் உரிமையாளரா? அல்லது படைத்தவர் உரிமையாளரா?
திரு சர்மா: நிச்சயமாக படைத்தவரே உரிமையாளர்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், “இஃது எனது நாடு” என்று ஏன் அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்?
திரு சர்மா: அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமெரிக்கர்களுக்கு சொந்தமானதல்ல என்று கூறுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இஃது அவர்களுக்கு சொந்தமானதல்ல. இருப்பினும், இந்த அயோக்கியர்கள், “இஃது எனது நாடு, இஃது எனது கொடி”என்று உரிமை கொண்டாடுகின்றனர். எனவே, அவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களே. அனைவரும் கூட்டாகச் சேர்ந்து மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். அமெரிக்கர்கள், “ரஷ்யர்களை எவ்வாறு ஏமாற்றலாம்” என்று சிந்திக்கின்றனர். ரஷ்யர்கள், “அமெரிக்கர்களை எவ்வாறு ஏமாற்றலாம்” என்று சிந்திக்கின்றனர். இதுவா நாகரிகம்? பிறரை ஏமாற்றுவதும் கருத்தரங்குகளில் நேரத்தை வீணடிப்பதுமா நாகரிகம்?
திரு சர்மா: இல்லவே இல்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: செவ்விந்தியர்களை ஏமாற்றி, நிலத்தைக் கைப்பற்றி, “அமெரிக்கா எனது நாடு” என்று அவர்கள் இப்பொழுது சொந்தம் கொண்டாடுகின்றனர். நிலம் எங்கிருந்து வந்தது? செவ்விந்தியர்களை ஏமாற்றி கைப்பற்றிய நீங்கள், இன்று “இஃது எனது நாடு” என்று உரிமை கோருகிறீர்களே. இதுபோன்ற சம்பவம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
நெப்போலியன் பிரான்ஸ் நாடு தம்முடையது என்று எண்ணினார். இன்று பிரான்ஸ் நாடு இருக்கிறது. ஆனால் நெப்போலியன் எங்கே? அவர் எங்கு இருக்கிறார்? பிரான்ஸிலா? நரகத்திலா? ஸ்வர்கத்திலா? பல்வேறு வசிப்பிடங்களும் பல்வேறு உயிரினங்களும் உள்ளன. இந்தப் பிறவியில் நான் ஒரு தேசியவாதியாக—நெப்போலியனைப் போல, காந்தியைப் போல—அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்காகப் போராடும் போராளியாக இருக்கலாம். ஆனால் மரணத்திற்குப் பிறகு, எனக்கு வேறோர் உடல் கிடைக்கிறது. முற்பிறவியில் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தும் வீணாகி விடுகிறது.
திரு சர்மா: அப்படியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், வீணாகி விடும். அவர்கள் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் பூரண அறிவு இல்லை, கற்பனை கருத்துகள் மட்டுமே உள்ளன. ஆனால் அவர்கள் தங்களை நாகரிகத்தில் முன்னேறியவர்களாக எண்ணுகின்றனர். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிரபஞ்சத்துடன் நமக்குள்ள தொடர்பு என்ன? உலகினைப் படைத்தவர் யார்? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? இதையெல்லாம் அவர்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் இந்த விஷயங்களைப் புறக்கணித்துவிட்டு தங்களை உலகத் தலைவர்கள் என்று பிரகடனப்படுத்துகின்றனர்.
திரு சர்மா: இது மிகவும் மோசமான அரசாங்கம். நீங்கள் கூறியதைப் போல ஒவ்வொரு நாட்டு மக்களும் அந்த நாடு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கருதுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆயினும், மனிதனால் இத்தகைய மாயையிலிருந்து விடுபட இயலும். இதற்கு தேவையான தகவல்கள் வேத சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏன் வேத சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ள ஞானத்தைப் பயன்படுத்தி தங்களது வாழ்வைப் பக்குவப்படுத்திக்கொள்ளக் கூடாது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினைப் பரப்புகிறோம். மக்கள் வாழ்வின் குறிக்கோளை மறந்து, தேவையின்றி மாயையில் தங்களது வாழ்வை வீணடிக்கின்றனர். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூலம் நாங்கள் அவர்களைக் காப்பாற்ற முயல்கிறோம்.