கிருஷ்ணரை திருப்தி செய்வதற்கான வழி

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

கிருஷ்ணரை திருப்தி செய்ய விரும்புவோர் அவரை அவரது பிரதிநிதியின் மூலமாக அணுக வேண்டும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது இந்த உரையாடலில் தெரியப்படுத்துகிறார்.

 

சியாமசுந்தர்: கிருஷ்ணரை நாம் மகிழ்விக்கின்றோம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

 

ஸ்ரீல பிரபுபாதர்: அவரை நாம் காணும்போது தெரிந்துகொள்கிறோம். சாப்பிடும்போது பசி நீங்கி பலம் பெறுகிறீர்களா என்று உங்களை யாரும் கேட்க வேண்டிய தில்லை. சாப்பிடும்போது சக்தி உடலில் கிடைப்பதை நீங்களே உணர முடியும். அதுபோலவே, கடவுளுக்கு நீங்கள் உண்மையான முறையில் தொண்டாற்றினால், நீங்களே அவரை அறிந்துகொள்வீர்கள்.

 

ஒரு பக்தர்: அல்லது கடவுளின் பிரதிநிதியின் மூலமாக…

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

 

பக்தர்: அது சற்று சுலபமானது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுளைக் கடவுளின் பிரதிநிதியின் மூலமாக அணுக வேண்டும். யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ, “ஆன்மீக குருவின் கருணையால் கிருஷ்ணரின் கருணை கிடைக்கிறது.” கடவுளின் பிரதிநிதியை மகிழ்வித்தால் கடவுள் தானாகவே மகிழ்ச்சியடைகிறார். இவ்வழியில் நீங்கள் கடவுளை நேருக்கு நேர் காணலாம்.

 

ஓர் இந்தியர்: கடவுளின் பிரதிநிதியை மகிழ்விப்பது எப்படி?

 

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அவரது கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வளவே. கடவுளின் பிரதிநிதி குரு. அவர் உங்களிடம் “அப்படிச் செய், இப்படிச் செய்” என்று சொல்கிறார். அப்படி அதன்படி செய்தால் அஃது அவரை மகிழ்விக்கும். யஸ்யா ப்ரஸாதான் ந கதி: குதோ பி, “குருநாதரின் அருளின்றி முன்னேற்றமடைய முடியாது. அவர் அதிருப்தியடையும்படி நடந்து கொண்டால், நீங்கள் இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவீர்கள். எனவே, நாம் குருவை வணங்குகிறோம்.”

 

ஸாக்ஷாத்-தரித்வேன ஸமஸ்த-ஷாஸ்த்ரைர்

உக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி:

கிந்து ப்ரபோர் ய: ப்ரிய ஏவ தஸ்ய

வந்தே குரோ: ஸ்ரீ-சரணாரவிந்தம்

 

“குருவானவர் பகவானின் அந்தரங்க சேவகராக இருப்பதால், அவரை முழுமுதற் கடவுளைப் போலவே மதிக்க வேண்டும். இதை எல்லா சாஸ்திரங்களும் அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, கிருஷ்ணரின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியாகிய ஆன்மீக குருவின் பாத கமலங்களில் பணிவுடன் சிரம் தாழ்த்துகிறேன்.”

 

குருவைக் கடவுளாகவே ஒப்புக்கொள்ள வேண்டும். எல்லா சாஸ்திரங்களும் அப்படித்தான் சொல்கின்றன.

 

பாப்: குருவைக் கடவுளின் பிரதிநிதியாக ஒப்புக்கொள்ள வேண்டுமா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். குரு கடவுளின் பிரதிநிதி, கிருஷ்ணரின் வெளிப்புறத் தோற்றம்.

 

பாப்: ஆனால், கிருஷ்ணரின் அவதாரங்களைப் போன்றல்ல?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

 

பாப்: கிருஷ்ணரோ சைதன்யரோ இவ்வுலகிற்கு வரும்போது மேற்கொள்ளும் தோற்றத்திற்கும் குருவின் தோற்றத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

 

ஸ்ரீல பிரபுபாதர்: குரு கிருஷ்ணரின் பிரதிநிதி. குரு யார் என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. ஒரு குருவின் பொதுவான அடையாளங்கள் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன:

 

தத் விஜ்ஞானார்தம் ஸ-குரும் ஏவாபிகச்சேத்

ஸமித்-பாணி: ஷ்ரோத்ரியம் ப்ரஹ்ம-நிஷ்டம்

 

குருவானவர் சீட பரம்பரையில் வருபவராக இருக்க வேண்டும், தன் ஆன்மீக குருவிடமிருந்து வேதங்களை முழுமையாகக் கற்றவராக இருக்க வேண்டும். மேலும், அவர் பக்குவம் வாய்ந்த பக்தராக இருக்க வேண்டும். இவை குருவின் பொதுவான அடையாளங்கள். கிருஷ்ணரின் உபதேசங்களை உலகினருக்கு எடுத்துச் சொல்வதன் மூலமாக, குரு கிருஷ்ணருக்கு சேவை செய்பவராக விளங்குகிறார்.

 

பாப்: சைதன்ய மஹாபிரபு இருந்தார், அவர் தங்களிடமிருந்து வேறுபட்ட தன்மையைக் கொண்ட குருவா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லையில்லை. குருக்கள் பலவிதமாக இருக்க முடியாது. எல்லா குருக்களும் ஒரே தன்மையானவர்களே.

 

பாப்: ஆனால் அவர் (சைதன்யர்) அதே சமயத்தில் ஓர் அவதாரமாகவும் விளங்கினாரல்லவா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அவர் கிருஷ்ணரே தான், ஆனால் குருவாகவும் விளங்குகிறார்.

 

பாப்: ஓ, அப்படியா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கிருஷ்ணரே கடவுள் என்பதால் அவர் கட்டளையிடுகிறார், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “எல்லா விதமான தர்மங்களையும் கைவிட்டு என்னை மட்டும் சரணடைவாயாக.” ஆனால் மக்கள் கிருஷ்ணரை தவறாகப் புரிந்து கொண்டார்கள். எனவே, கிருஷ்ணர் மீண்டும் குருவாக வந்து தன்னிடம் சரணடைவது எப்படி என்பதை மக்களுக்கு உபதேசித்தார்.

 

சியாமசுந்தர்: “நானே குரு” என்று அவர் பகவத் கீதையில் கூறுகிறார் அல்லவா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: அர்ஜுனனால் குருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அவரே ஆதி குரு. இதிலென்ன சிரமம்? அர்ஜுனன் பகவானிடம் கூறினான்: ஷிஷ்யஸ்தே ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம், “நான் தங்களின் சீடன், தங்களிடம் சரணடைந்துள்ள ஆத்மா. எனக்கு உபதேசியுங்கள்.” அவர் குருவாக இல்லாவிடில் அர்ஜுனன் எவ்வாறு அவருக்கு சீடனாக முடியும்? அவரே ஆதி குரு, தேனே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதி-கவயே, “முதல் சிருஷ்டியான பிரம்மாவின் இதயத்தில் வேத ஞானத்தைத் தந்தருளியவர் அவரே.” எனவே, அவரே ஆதி குரு.

 

பாப்: கிருஷ்ணர்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அவர்தான் முதல் குரு. அவரையடுத்து, அவரது மாணவரான பிரம்மா குரு. பின்னர், அவரது சீடரான நாரதர் குரு. இப்படியே குரு பரம்பரை வருகிறது. ஏவம் பரம்பரா ப்ராப்தம். குரு சீடப் பரம்பரையின் வழியாக பரமமான ஞானம் பெறப்படுகிறது.

 

பாப்: இவ்வாறாக, சீடப் பரம்பரையின் வழியாக குரு ஞானத்தைப் பெறுகிறார், கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக அல்ல? கிருஷ்ணரிடமிருந்து சிறிதளவு ஞானமாவது நேரடியாக பெறுகிறீர்களா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கிருஷ்ணர் நேரடியாக வழங்கியுள்ள அறிவுரை உள்ளது. அதுவே பகவத் கீதை.

 

பாப்: புரிகிறது. ஆனால்…

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் அதை நீங்கள் பரம்பரையில் வந்த குருவிடம் கற்க வேண்டும். இல்லாவிடில் நீங்கள் அதைத் தவறாக அர்த்தம் கொள்ளக் கூடும்.

 

பாப்: ஆனால் தற்போது தாங்கள் நேரடியாக கிருஷ்ணரிடமிருந்து செய்தி பெறுவதில்லையா? சீடப் பரம்பரையில் வந்த நூல்களின் மூலமாக மட்டுமா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: இதில் வித்தியாசம் எதுவுமில்லை. “இதோ பென்சில் இருக்கிறது” என்று நான் ஒருவரிடம் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அவர் இன்னொருவரிடம் “இது ஒரு பென்சில்” என்று கூறினால், நான் சொல்லித் தந்ததற்கும் அவர் சொல்லித் தருவதற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?

 

பாப்: கிருஷ்ணரின் கருணையால் இப்போது தாங்கள் இதை அறிகிறீர்கள், அப்படித்தானே?

 

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணரின் கருணையென்றும் கூறலாம். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்: ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “எல்லா தர்மங்களையும் புறக்கணித்து விட்டு என்னிடம் சரணடை”, அதனை அப்படியே, எல்லாவற்றையும் உதறி விட்டு கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்று நாம் உபதேசிக்கிறோம். எனவே, கிருஷ்ணர் கற்பித்ததற்கும் நாங்கள் இப்போது கற்பிப்பதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. எனவே, குறைவற்ற முறையில் நீங்கள் அறிவைப் பெறும்போது, அது கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகப் பெறுவதேயாகும். நாங்கள் எதையும் மாற்றுவதில்லை.

 

பாப்: பக்தியோடு உண்மையாக பிரார்த்தனை செய்தால், அதை கிருஷ்ணர் கேட்கிறாரா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

 

பாப்: என்னிடமிருந்து அவருக்குப் போகிறதா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஏனெனில், அவர் உங்களின் இதயத்தில் இருக்கிறார். அவர் எப்போதும் உங்களுக்குச் செவி சாய்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போதும் செய்யாதபோதும், நீங்கள் அசட்டுத்தனமாக ஏதாவது செய்யும்போதும், அவர் கவனித்துக் கொண்டே இருக்கிறார்.

 

பாப்: கிருஷ்ணரின் காதுகளுக்கு பிரார்த்தனையின் ஒலி அர்த்தமற்றதைவிட அதிக சப்தமாகக் கேட்கிறதா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியல்ல, கிருஷ்ணர் பூரணமானவர். அவர் ஒவ்வொன்றையும் கேட்கிறார். நீங்கள் எதையும் பேசாமல், “நான் இதைச் செய்யப் போகிறேன்” என்று நினைத்தால்கூட, அவர் அதனைக் கேட்கிறார்.

 

பாப்: ஆனாலும் அவரை நோக்கிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படித்தானே?

 

ஸ்ரீல பிரபுபாதர்: பிரார்த்தனை அவரவர் செய்ய வேண்டியது.

 

பாப்: யார் செய்ய வேண்டியது?

 

ஸ்ரீல பிரபுபாதர்: உயிர் வாழும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. அஃது ஒன்றுதான் வேலை. ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான் என்று வேதம் சொல்கிறது.

 

பாப்: அதன் பொருளென்ன?

 

ஸ்ரீல பிரபுபாதர்: அவர் (கடவுள்) எல்லாருக்கும் தேவையான எல்லாவற்றையும் வழங்குகிறார். எல்லாருக்கும் உணவு வழங்குபவர் அவரே. ஆகவே, அவரே பரமபிதா. எனவே, “பிதாவே, எனக்கு இது தாரும்” என்று ஏன் ஒருவர் பிரார்த்திக்கக் கூடாது? கிறிஸ்துவ பைபிளில் வருவது போல், “தினசரி அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்” என்று ஏன் பிரார்த்திக்கக் கூடாது? அவர்கள் செய்வது நல்ல காரியமே. ஏனெனில், அவர்கள் பரமபிதாவை ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், முதிர்ச்சியடைந்த குழந்தைகள் தங்களது தந்தையிடம், “இது வேண்டும், அது வேண்டும்” என்று கேட்கக் கூடாது. தந்தைக்கு சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும். அதுவே பக்தி.

 

பாப்: என் கேள்விகளுக்கெல்லாம் மிகவும் பக்குவமாக விடையளிக்கிறீர்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives