வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு சில பதில்கள்
சமீபத்தில் மஹாராஷ்டிர அரசாங்கமும் ஹரியானா அரசாங்கமும் பசு மாமிசம் விற்பதற்கு தடை செய்து சட்டம் இயற்றியுள்ளன. இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்த மக்கள் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் தருணத்தில், சர்ச்சைக்குரிய இவ்விஷயம் குறித்த சில பதில்களை விவாதிப்போமாக.
பசு நமது தாய்
எத்தனையோ உயிரினங்கள் தினந்தோறும் கொல்லப்படும்பட்சத்தில், ஏன் பசுவிற்கு மட்டும் விசேஷ சலுகை கொடுக்கப்பட வேண்டும் என்பது பசு வதை தடுப்புச் சட்டத்தை எதிர்ப்பவர்களின் முக்கிய கேள்வியாக அமைகிறது. ஆம், பசுக்கள் இதர உயிரினங்களைக் காட்டிலும் மிகமிக முக்கியமானவை. இதில் எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. உண்மையில், பசுக்களைக் கொல்வது என்பது மனிதர்களைக் கொல்வதைக் காட்டிலும் பாவகரமானது என்பதால், பசு பராமரிப்பு மிகமிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. ஏன்?
மனித சமுதாயத்தின் அறிவு வளர்ச்சிக்கு பசுவின் பால் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்கள் மனிதர்களுக்குத் தேவையான போஷாக்கினையும் புத்திக்கூர்மையினையும் வழங்குகின்றன. பால் பொருட்களை தங்களது உணவில் இணைத்துக் கொள்பவர்கள் நற்குணம் படைத்தவர்களாக இருப்பர் என்பது சாஸ்திரங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மேலும், நவீன கால ஆராய்ச்சிகளும் பால் பொருட்களின் இன்றியமையாத தன்மையினை விளக்குகின்றன. இதனால் நாம் அனைவரும் பசுவின் பாலை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தோம், வாழ்ந்தோம், வளர்வோம், வாழ்வோம். பாசத்துடன் தனது இரத்தத்தின் ஒரு பகுதியினை பாலாக மாற்றி, அதனை அன்புடன் நமக்கு வழங்குவதால், பசுக்கள் மனித குலத்தின் ஏழு தாய்மார்களில் ஒன்றாக கருதப்படுகின்றன.
சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் நமக்கு பால் வழங்கிய (மனித) தாயினை மதிப்பு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது மனிதாபிமானம். அவ்வாறு இருக்கையில் பல வருடங்கள் நமக்கு பால் வழங்கும் பசுவினை உபயோகம் இல்லாத தருணத்தில் கொலை செய்தல் எந்த விதத்தில் மனிதாபிமானம்? இஃது அசுரத்தனமாக தோன்றவில்லையா? “எனக்கு தேவைப்படும்போது பால் குடிப்பேன், மடி வற்றிய பின்னர் கொன்று தின்று விடுவேன்,” என்னும் எண்ணம் மனிதர்களின் எண்ணமா? இத்தகைய அசுரத்தனம் முற்றிலும் மனிதாபிமானத்திற்கு எதிரானது. “எனது தாயினால் இப்போது எனக்கு பலன் இல்லை, செலவு மட்டுமே உள்ளது. இதனால் இவளை விற்றுவிடலாம், என்னிடமிருந்து வாங்குபவர்கள் இவளைக் கொன்று தின்று கொள்ளட்டும், எனக்கு பணம் வந்தால்போதும்,” என்னும் எண்ணம் மனிதாபிமானம் கொண்ட எண்ணமா? யோசித்துப் பாருங்கள்.
நேரடியாக நீங்கள் பசுவை வளர்க்காவிட்டாலும், பசுவின் பாலை அருந்துவதால், பசு உங்களின் தாயாக இருக்கிறாள். அதனால் அவளைக் கொல்வதோ அவளது சதையினை மாமிசமாக உண்பதோ நிச்சயம் மகா பாவமாகும்.
உயிர்வாழ்வதற்கான உரிமை
நாட்டில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அந்த நாட்டின் பிரஜையாகின்றனர். ஒவ்வொரு பிரஜையையும் காப்பாற்ற வேண்டிய கடமை நாட்டை ஆள்பவருக்கு உள்ளது. இதன்படி, மனிதர்கள் மட்டுமின்றி, பசுக்கள், ஆடுகள், நாய்கள், யானைகள் என நாட்டில் வாழும் ஒவ்வோர் உயிரினமும் அந்த நாட்டின் பிரஜையாக கருதப்படுகின்றன. அந்த ஒவ்வொரு பிரஜைக்கும் அந்நாட்டில் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அந்த உரிமையினைப் பறித்து அவர்களைக் கொலை செய்தல் என்பது நிச்சயம் ஏற்கத்தக்கது அல்ல, தண்டனைக்குரியதாகும்.
எந்தவோர் உயிரினமும் கொல்லப்படக் கூடாது, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தாவர உணவுகளே பொருத்தமானவை–இஃது எல்லா ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்கப்பட்ட ஒன்று. அவ்வாறு இருக்கையில், நாவின் திருப்திக்காக இதர உயிரினங்களைக் கொலை செய்து அதனை உண்பது என்பது நிச்சயம் மாபெரும் பாவச் செயலாகும். யாரேனும் ஒருவன் நாவினைக் கட்டுப்படுத்த இயலாதவனாக இருப்பின், அந்த பாவி மனிதன், குறைந்தபட்சம் உயர்நிலை மிருகமான பசுவினைக் கொல்லக் கூடாது என்று பாரத பாரம்பரியம் அறிவுறுத்துகின்றது. அதிக உணர்வுகளைக் கொண்டதும் தாயைப் போன்றதுமான பசுவின் உயிர்வாழும் உரிமையை எக்காரணம் கொண்டும் யாரும் பறிக்க முயற்சி செய்யக் கூடாது.
பசு வதையினால் எழும் தீமைகள்
மிருகங்களின் மீது (குறிப்பாக பசுக்களின் மீது) தற்போதைய சமுதாயத்தில் காண்பிக்கப்படும் கொடூரத்தனமும் வன்மையும் இதற்கு முன்பு மனித சமுதாயத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. இதன் எதிர் விளைவாக, இன்று மனித சமுதாயத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில், பல விதமான கொடுமைகள் அரங்கேறி வருகின்றன–போர், தீவிரவாதம், இயற்கையின் சீற்றங்கள் போன்றவை மட்டுமின்றி, மனிதர்களிடையே அடிப்படைப் பண்புகள் குறைந்து வருவதற்கும், அப்பாவி மிருகமான பசுவினை ஈவு இரக்கமின்றி அசுரத்தனமாக கொலை செய்வதே காரணமாகும்.
பசுக்களை நாங்கள் கொலை செய்வதற்கும் இத்தகைய சமுதாய பிரச்சனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிலர் வாதிடலாம். ஆனால் இவ்வுலகம் பல்வேறு சூட்சும சட்டங்களின்படி செயல்பட்டு வருகின்றது என்பதை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர் என்பதே உண்மை. “அமைதி வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்பலாம். ஆனால் மிருகங்களின் மீதான கொடூரமான செயல்களினால் பெற்றெடுக்கப்படும் குழந்தை–போர்,” என்று ஜார்ஜ் பெர்னாட் ஷா கூறியுள்ளார்.
மிருகங்களின் மீதான கொடூரத்திற்கும் மனித சமுதாயத்தில் எழும் போர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பவை. இயந்திரங்களைக் கொண்டு மாபெரும் அளவில் கசாப்புக் கூடங்களை அமைக்கும் பணி இருபதாம் நூற்றாண்டில்தான் துரிதப்படுத்தப்பட்டது. அதன் விளைவு: உலகம் அதுவரை கண்டிராத இரத்த ஆறினை ஏற்படுத்திய மாபெரும் உலகப் போர்கள். தற்போதும் அவை தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. உலகில் இன்று நாம் காணும் இரத்த சேதங்களுக்கு நாம் ஏற்படுத்திய இரத்த சேதங்களே காரணம். “பசுவைக் கொல்வதும் மனிதனைக் கொல்வதும் என்னைப் பொறுத்தவரையில் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்,” என்று காந்தியடிகள் கூறியது சிலருக்கு நினைவில் இருக்கலாம்.
பசுவைக் கொல்வது தீவிரவாதம்
தீவிரவாதம் என்று நாம் எதனைக் கூறுகிறோம்? “வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி உயிரினத்தை அறிவியல், அரசியல் அல்லது பொருளாதார காரணத்திற்காக முழு சொந்த விருப்பத்துடன் கொலை செய்வது அல்லது தீங்கிழைப்பதே தீவிரவாதம்,” என்று தீவிரவாதத்திற்கான அடிப்படை விளக்கத்தை ஸ்டீவ் பெஸ்ட் அவர்கள் வழங்கியுள்ளார். இப்போது கூறுங்கள், பசுக்களைக் கொல்வது தீவிரவாதமா? உணவு உற்பத்தியா? நிச்சயம் தீவிரவாதமே. இந்த தீவிரவாதத்தினை ஏறக்குறைய எல்லா நாடுகளும் மாநிலங்களும் ஊக்குவித்து வருகின்றன. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுகின்றது என்று கூக்குரலிடும் மக்கள், தத்தமது நாட்டிலும் தீவிரவாதம் அதைக் காட்டிலும் பன்மடங்கு அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது என்பதை காண மறுக்கின்றனர்.
சில தீவிரவாதிகள் சமீப காலங்களில் பல்வேறு நபர்களின் தலைகளை வெட்டி வருகின்றனர். பசுவின் தலையினை வெட்டக்கூடிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கும் இதர மக்களுக்கும், இத்தகைய தீவிரவாதிகளுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்பதே உண்மை, உண்மையிலும் உண்மை. அவர்களும் அப்பாவி மக்களின் தலையை வெட்டுகின்றனர், இவர்களும் அப்பாவி பசுக்களின் தலையை வெட்டுகின்றனர். இருவரும் தீவிரவாதிகளே. தீவிரவாத குழுவினரின் சமுதாயம் அறியாமையிலும் அகங்காரத்திலும் மயங்கியிருப்பதால், தலையை வெட்டுவது தீய செயல் என்று கருதுவதில்லை, நல்ல செயலாக நினைக்கின்றனர்; அதுபோலவே, பசுவை வெட்டும் தீவிரவாத குழுவினரும் அறியாமையினாலும் அகங்காரத்தினாலும் மதி மயங்கி இருப்பதால், பசுவைக் கொல்வதை தீய செயலாக கருதுவதில்லை, உணவை உற்பத்தி செய்யும் நல்ல செயலாக கருதுகின்றனர்.
எனவே, தாயைக் கொல்வதை ஆதரிக்கும் ஒவ்வொரு மடையனுக்கும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் இதர மடையர்களுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை. ஒரு விதத்தில் கூறினால், ஒரு சிலரை எதிரிகளாக பாவித்து தலையைத் துண்டிக்கும் தீவிரவாதிகளைக் காட்டிலும், சொந்த தாயின் (பசுவின்) தலையைத் துண்டிக்கும் மனசாட்சியற்ற நபர்கள் மோசமான தீவிரவாதிகளாவர்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சட்டபூர்வமாக அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிவிட்டு, மாபெரும் கசாப்புக்கூடங்களை நிறுவி அங்கே நிகழ்த்தப்படும் பசுக் கொலையானது, சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள தீவிரவாதம் என்றே தோன்றுகின்றது.
ஏழைகளுக்கான மாமிசமா?
வேறு சில மூடர்கள், “இதர மாமிசங்களைக் காட்டிலும் பசு மாமிசம் மலிவானது, ஏழைகளுக்கான இந்த மாமிசம் தடை செய்யப்படக் கூடாது,” என்று கூறுகின்றனர். என்னே மடமை! ஆழ்ந்து யோசித்து பார்த்தால், மனிதனுக்குத் தேவையான தாவர உணவிற்கு இவ்வுலகில் கொஞ்சமும் பஞ்சம் இல்லை. தனது உணவிற்காக மற்றொரு மிருகத்தைக் கொல்லும்போது, அதற்கு சாக்காக ஒரு மனிதன் தன்னுடைய உணவுத் தேவையினை முன்வைக்கின்றான். “எனது பசிக்கு என்ன வழி?” என்று தன்னை ஓர் இயலாதவனாக முன்வைத்து கருணையை வேண்டுகிறான். ஆனால் அவன் ஏன் அந்த இயலாமையையும் கருணையையும் மற்ற உயிரினங்களுக்கு வழங்கக் கூடாது? கடவுளைச் சார்ந்து வாழும் மனிதர்களின் மீது கடவுள் கருணை காட்ட வேண்டும் என்று நினைப்பவன், மனிதர்களைச் சார்ந்து வாழும் மிருகங்களின் மீது கருணை காட்ட மறுப்பது ஏன்? மிருகங்களின் மீது கருணையுடன் வாழாதவனுக்கு கடவுளின் கருணை நிச்சயம் கிட்டாது.
ஏழைகளாக இருப்பவர்களுக்கு பசு மாமிசம் தேவைப்படுகிறது என்று கூறுவது முற்றிலும் அபத்தமானதாகும். ஏழைகளாக இருப்பவர்கள் தாங்கள் அதற்கு முன்பு செய்த பாவத்தினால்தான் அவ்வாறு வாழ்கின்றனர். அவர்கள் மேன்மேலும் பாவத்தை சேர்த்துக்கொள்வது நல்லதா? உண்மையில் கூறினால், பசு மாமிசம் சாப்பிடுவதன் மூலமாக அவர்கள் நிச்சயம் இனிமேல் ஏழைகளாக இருக்க மாட்டார்கள்; ஏனெனில், பசு மாமிசம் உண்ட குற்றத்திற்காக அவர்கள் நீண்ட நெடுங்காலம் நரகத்திலும் இதர கீழ்நிலை மிருக வாழ்விலும் கழிக்க வேண்டி இருக்குமே.
மிருகங்களைக் கொன்று வாழ்ந்து வந்த மிருகாரி என்னும் வேடன், நாரதரின் அறிவுரையால் மனம் திருந்தி, பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரித்து நல்வாழ்வை வாழ்ந்த வரலாற்றினை நாங்கள் பகவத் தரிசனத்தின் சென்ற இதழில் (2015 மார்ச் இதழில்) வெளியிட்டிருந்தோம். அதனைப் படிப்பதும் இச்சமயத்தில் உதவும்.
விவசாயிகளுக்கு எதிரானதா?
பசுக்களை கொலை செய்வதற்கு அனுமதி மறுத்தால், அதன் மூலமாக ஏற்கனவே சிரமத்தில் இருக்கும் விவசாயிகள் மேலும் சிரமத்திற்கு உட்படுவர் என்று வேறு சிலர் வாதிடுகின்றனர். விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தைப் பொறுக்க இயலாமல், பலர் ஏற்கனவே தற்கொலை செய்து வருகின்றனர். இந்த தருணத்தில் தங்களது பசுக்களையும் எருதுகளையும் கொன்று அந்த கொலையினால் சற்று பணம் சம்பாதித்து வரும் சில விவசாயிகள் மேலும் நஷ்டத்தை அடைவர் என்று சிலர் கூறுகின்றனர். பசுக்களையும் எருதுகளையும் வெறும் பொருளாதாரத்திற்கான ஒரு ஜடப் பொருளைப் போன்று நடத்தக்கூடிய இவர்களின் வாதம், உண்மையில் சற்று நடைமுறையில் யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்றுதான்.
விவசாயிகளின் இத்தகைய நிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதற்கான மிக முக்கிய காரணம்: டிராக்டர். டிராக்டர் வந்த நாளிலிருந்து எருதுகளுக்கு வேலை போய்விட்டது. விவசாயிகளால் வளர்க்கப்படும் பசுக்களுக்கு நிச்சயம் 50 சதவீதம் எருதுகள் பிறக்கும்; அந்த எருதுகளை என்ன செய்வது? எந்த வேலையும் இல்லாத அவற்றிற்கு உணவளிப்பதை விவசாயிகள் சிரமமாக கருதுகின்றனர். இவ்வாறாக, டிராக்டர்கள் பசு பராமரிப்பின் மிக முக்கிய எதிரியாக அமைகின்றன. எனவே, பசு பராமரிப்பை ஆதரிப்பவர்கள், டிராக்டர்கள் இன்றி விவசாயம் செய்வதால் ஏற்படும் பலவித நன்மைகளையும் டிராக்டர்களினால் ஏற்படும் எண்ணிலடங்காத பிரச்சனைகளையும், விவசாயிகள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியம். அரசாங்கம் இச்செயலை சிரமேற் கொண்டு செயல்படுத்தினால், நிச்சயம் டிராக்டர்களின் தீமையினை உணர்ந்து விவசாயிகள் எருதுகளை உபயோகிக்கத் தொடங்குவர். அப்போது அப்பிரச்சனை தீர்ந்துவிடும்.
எருதுகள், டிராக்டர்கள் பிரச்சனை ஒருபுறம் இருந்தால்கூட, விவசாயிகள் அனைவருக்கும் “பசுக்கள் நமது தாய், எருதுகள் நமது தந்தை,” என்பதை ஆழமாக புரிய வைக்க வேண்டும். அவர்கள் அதனைப் புரிந்து கொண்டால், அவற்றைப் பாதுகாப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர். விவசாயிகள் பெரும்பாலும் மனசாட்சியற்ற நபர்கள் அல்ல; இதர தொழிலதிபர்கள்தான் மனசாட்சியற்றவர்களாக இருந்து கொண்டு, தங்களுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, விவசாயிகளை பாவம் செய்யத் தூண்டுகின்றனர்.
மிருகங்களுக்கு ஆத்மா இல்லை, பசுக்களைக் கொல்வது ஒரு பயிரைக் கொல்வதைப் போன்றதுதான் என பல்வேறு அயோக்கியத்தனமான கருத்துகளை எடுத்துரைக்கும் இந்த தொழிலதிபர்கள் விவசாயிகளை நேரடியாக பாவம் செய்யும் பாவிகளாக மாற்றிவிடுகின்றனர். இதனால், மடி வற்றிய பசுவிற்கு உணவளிப்பதைக்கூட அவர்கள் தேவையற்ற வேலையாக நினைக்கின்றனர். இந்த பாவத்தின் விளைவினால், விவசாயிகளுக்கு, மழை இருப்பதில்லை, போதிய மகசூல் கிடைப்பதில்லை, பஞ்சம் அவர்களை வாட்டுகிறது, இறுதியில் அவர்கள் தற்கொலை செய்கின்றனர். “பசுக்களையும் எருது களையும் எக்காரணம் கொண்டும் நாங்கள் கொல்ல மாட்டோம், கசாப்புக் கூடங்களுக்கு அனுப்ப மாட்டோம்,” என்று ஒவ்வொரு விவசாயியும் உறுதியெடுத்தால், நிச்சயம் விவசாயிகளின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
உண்மையில், பசுக்களையும் எருதுகளையும் பராமரிப்பது என்பது விவசாயிகளுக்கு ஒரு பெரிய காரியம் அல்ல. அவை எந்த செலவும் வைப்பதில்லை, வீட்டில் நாம் வாழைப் பழத்தை உண்டுவிட்டு, தோலைக் கொடுத்தால் பசுக்கள் அதனை உண்கின்றன. ஆங்காங்கே கொஞ்சம் புற்கள் இருந்தால் போதும். அவற்றிற்கான செலவு மிகமிக குறைவானதாகும்.
விவசாயிகளின் முக்கியமான பணி, கோ-ரக்ஷ எனப்படும் பசு பராமரிப்பே என்பதை ஸ்ரீல பிரபுபாதர் பலமுறை வலியுறுத்தியுள்ளார். பசு பராமரிப்பை நாம் உண்மையிலேயே நடைமுறைப்படுத்த விரும்பினால், அஃது அங்காங்கே நிறுவப்படும் கோசாலைகளின் மூலமாக நிச்சயம் சாத்தியமானதல்ல; எத்தனை எருதுகளையும் மடி வற்றிய பசுக்களையும் கோசாலைகளில் வைத்து தீனி வழங்க முடியும்? எனவே, நிலத்தை உழுது பசுக்களுடன் அன்றாடம் வாழக்கூடிய விவசாயிகளே அதற்கு முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும். இயற்கையிலேயே மனசாட்சியுடன் செயல்படும் விவசாயிகள் நிச்சயம் பசு பராமரிப்பினை தங்களது உயிராக ஏற்றுக்கொள்வர் என்று நம்புகிறோம்.
பசுக்களும் பொருளாதார முன்னேற்றமும்
இதுமட்டுமின்றி, பசுக்களும் மனிதர்களைப் போலவே உணர்ச்சிகள் கொண்ட உயிரினம் என்பதால், நீங்கள் பசுக்களிடமும் எருதுகளிடமும் காட்டும் அன்பும் பாசமும் உங்களது வளமான வாழ்விற்கு வித்தாக அமையும். தன்னுடைய எஜமானராக இருப்பவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை கசாப்புக் கூடத்திற்கு அனுப்பி விட்டான் என்பதை அறிந்துகொள்ளும் ஒரு தாயினால் (பசுவினால்), எவ்வாறு தனது எஜமானருக்கு போதிய பாலை வழங்க இயலும்? பால் என்பது குழந்தையின் மீதான பாசத்தினால் தாயிடம் சுரப்பதாகும். மனிதர்கள் அனைவரையும் தனது குழந்தைகளாக கருதும் பசுத்தாய், தனது கன்றுகளுக்குத் தேவையான பாலைவிட அதிகமாகவே சுரக்கின்றது. ஆனால் மனிதர்கள் இராட்சசர்களாக செயல்படும்போது, அந்த பசுத்தாய் பாலின் அளவினைக் குறைத்துவிடுகிறது.
பசுக்களை அன்புடனும் பாசத்துடனும் வளர்ப்பதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்; அந்த அன்பும் பாசமும் விவசாயிகள் மனமகிழ்ச்சியுடனும் செல்வச் செழிப்புடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும். பசுக்களைக் காப்பவன் பசுவினால் காப்பாற்றப்படுவான் என்பது வேத வாக்கு. பசுக்களும் மனிதர்களும் இயற்கையாகவே ஒன்றிணைந்து வாழத் தகுந்தவர்கள் என்பதை வேத இலக்கியங்களும் நவீன கால விஞ்ஞானிகளும் நிரூபித்துள்ளனர். அவ்வாறு ஒருங்கிணைந்து பாசத்துடன் பசுக்களை வளர்ப்பவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவற்றைப் பாருங்கள்! அப்போது உங்களுக்குப் புரியும், பசு பராமரிப்பு உங்களை நிச்சயம் பராமரிக்கும் என்பது, பசுக்களை அன்புடன் பராமரிக்கும் இஸ்கானின் பண்ணை நிலங்களில் உள்ள பசுக்கள், இதர பசுக்களைக் காட்டிலும் பல வருடங்களுக்கு பால் கொடுக்கின்றன என்பதும் அதிகமாக பால் கொடுக்கின்றன என்பதும் யாம் நடைமுறையில் கண்ட உண்மை.
மேலும், பசுக்களிடமிருந்தும் எருதுகளிடமிருந்தும் பெறப் படும் சாணமும் கோமியமும் மாபெரும் இயற்கை உரமாகும்.
எனவே, பசு வதை தடுப்புச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது, விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று சிலர் கூக்குரலிடலாம். ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் எதிரானது; ஏனெனில், பசு வதை தடுப்புச் சட்டம் அவர்களை பாவத்திலிருந்து பாதுகாத்து, வளமாக வாழ்வதற்கு வழி செய்யக் கூடியதாகும்.
இதர மதத்தினரின் சுதந்திரம்!
பசுக் கொலையை ஆதரிப்பவர்களின் மற்றொரு வாதம், பசுக்களுக்கு ஆத்மா இருப்பதை நம்பாத இதர மதத்தினரின் சுதந்திரத்தை பசு வதை தடுப்புச் சட்டம் மறுக்கின்றது என்பதாகும். உண்மையில் இவ்வாறு பசுக் கொலையை ஆதரிப்பவர்கள், எந்த மதத்தையும் பின்பற்றாமல், மிருகங்களைப் போல வாழும் நாத்திகர்களாவர். ஏனெனில், மிருகங்களைக் கொல்வதை எந்தவொரு மதமும் உண்மையில் ஆதரிப்பதில்லை. இக்கூற்றிற்கு ஆதரவாக பல்வேறு முக்கிய மதங்களில் பல்வேறு கோட்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில உங்களின் உடனடி பார்வைக்காக இங்கே வழங்குகிறோம்.
“மாமிசம் உண்பதற்கு நான் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை, கொடுப்பதில்லை, கொடுக்க மாட்டேன்.” (புத்தர், லங்க வதர ஸுத்ரம்)
“மாமிசம் உண்பது கருணை என்பதன் விதையை முற்றிலுமாக கெடுத்துவிடுகிறது.” (புத்த மத நூல்களில் ஒன்றான மஹாபரிநிர்வன)
“கடவுள் இவ்வுலகத்தை அனைத்து உயிரினங்களுக் காகவும் படைத்துள்ளார்.” (குரான், மஜேத் 55:10-12)
“மிருகங்களை கண்ணியமாக நடத்த வேண்டியது உனக்கு பொருத்தமான செயல்.” (குரான், மஜேத் 4:118-19, 5:103)
“பசுவின் மாமிசத்தை சாப்பிடுதல் நோயை உருவாக்கும், அதன் பால் ஆரோக்கியத்தைக் கொடுக்கும், அதிலிருந்து பெறப்படும் நெய் மருந்தாக அமையும்.” (இஹ்யா உலும் உல்-தின், அல்-கஜ்ஜலி)
மேலும், “மெக்காவிற்குச் செல்லும் புனித பணியில் இருப்பவர்கள், கொசு உட்பட எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” (குரான், ஸுரா 5, 96)
“கொல்லாதிருப்பாயாக.” (கிறிஸ்துவ யூத மதத்தின் பத்து முக்கிய கட்டளைகளில் ஒன்று)
“கடவுள் மனிதர்களின் உணவாக தானியங்களையும் பழங்களையும் வழங்கியுள்ளார். நேர்மையுள்ள மனிதனுக்கு தனது உடலைப் பராமரிக்க அவற்றைக் காட்டிலும் வேறு தேவைகள் இல்லை.” (இயேசு கிருஸ்து, பன்னிரு புனிதர்களின் சுவிசேஷம்)
பசுக்களைக் கொல்பவர்கள் அந்த பசுவின் உடலில் எத்தனை மயிர்கள் உள்ளனவோ, அத்தனை ஆயிரம் வருடங்கள் நரகத்தில் துன்பப்படுவர் என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. பசுக்களைக் கொல்வது மகா பாவம் என்பது வேத சாஸ்திரங்களில் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
மிருகங்களைக் கொல்வது குற்றம் என்பது எல்லா மதத்திலும் கூறப்பட்டுள்ளன. எனவே, பசுக்களைக் கொலை செய்வதும் அவற்றைச் சாப்பிடுவதும் எங்களது மத உரிமை என்று யாரேனும் உரிமை கொண்டாடினால், அஃது அவர்களது மதத்தைப் பற்றிய அவர்களது அறியாமையையே சுட்டிக் காட்டுகின்றது.
நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும்
எந்தவொரு கோணத்திலிருந்து பார்த்தாலும், பசுவைக் கொலை செய்வது நிச்சயம் தடை செய்யப்பட வேண்டியதாகும். இதற்கான முயற்சியில் ஈடுபடும் அரசாங்கம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயத்தில், பசு நமது தாய், எருது நமது தந்தை, பசு பராமரிப்பின் முக்கியத்துவம், பசுக்களை பாசத்துடன் நடத்துதல், டிராக்டர்களின் உபயோகத்தை குறைத்து (நிறுத்தமுடியாவிடில்) எருதுகளை உபயோகித்தல், இயற்கை உரங்களை உபயோகித்தல் போன்ற கருத்துகளை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அப்போது நிச்சயம் இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது எளிதாகிவிடும், அத்தகைய சட்டத்திற்கான அவசியமும் இல்லாமல் போய்விடும்.
ஒரு கன்றுக் குட்டியை அறியாமல் தேரில் ஏற்றிக் கொன்ற காரணத்தினால், தனது மகனையே தேரில் ஏற்றி தண்டனை கொடுத்த மனுநீதி சோழனின் பூமி இது. ஆனால் இன்றோ பல்வேறு கட்சிகள் பசு வதையை ஆதரிக்கின்றன. பசுக்களை பராமரிப்பது என்பது ஒரு நாட்டின் தலைவராக செயல்படுவோரது தலையாய கடமை. பசுக்களை பாதுகாத்தால் நாடு முழுவதும் பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்து, எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தயங்காமல், இந்த பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று யாம் வேண்டிக் கொள்கிறோம். அதே நேரத்தில், இச்சட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
தொழிற்சாலைகளை அடிப்படையாக வைத்த பொருளாதாரத்திற்கு மாற்றாக, பசுக்களை அடிப்படையாக வைத்த பொருளாதாரத்திற்கு திட்டம் தீட்ட வேண்டும். பசுக்கள் மகிழ்ச்சியாக வாழும்போது, முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் மகிழ்ச்சியடைவார். அப்போது முழு உலகமும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.