வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ்
ஒவ்வொரு மனிதனாலும் (குறிப்பாக, இக்கட்டான சூழ்நிலையில்) எழுப்பப்படும் முக்கியமான கேள்வி: என் தலையெழுத்து என்ன? சந்தோஷம் வரும் சமயத்தில் ஒருவர் கூட, இத்தகைய நற்பலனை பெற தான் என்ன புண்ணியம் செய்தேன் என்று கேள்வி எழுப்புவதில்லை.
துயரங்கள் தாக்கும் தருணத்தில் பொதுவாக மக்கள் தமது தலையெழுத்துக்கு கடவுளையும் மற்ற ஜீவராசிகளையும் குற்றம் சுமத்துவார்களே தவிர தத்தமது கடந்த காலச் செயல்களே இதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து உணர்வது அரிதாக உள்ளது. உண்மையில் விதி, உடல், வீடு, காலம், கர்மா என அடுக்கடுக்காக தோன்றும் காரணங்கள், உடனடி காரணங்களே தவிர மூல காரணம் அல்ல. தலையெழுத்துக்கு மூல காரணம் என்ன? அதனை முடிவு செய்வது யார்? அஃது எப்படி செயல்படுகின்றது? தொடர்ந்து படியுங்கள்.
தலையெழுத்து–காரணங்கள்
தலையெழுத்து என்றால் என்ன? இந்த கேள்விக்கு நாம் பதில் பெற்று விட்டால் போதும் என்று தோன்றலாம். பதிலை அறிந்தால் மட்டும் போதாது, அதற்கான தீர்வினை அன்றாட வாழ்விலும் கடைப்பிடித்தாக வேண்டும். ஒரு ஜீவனின் தலையெழுத்து என்பது, அவனது ஆசைகள், இயற்கையின் செயல்பாடு, அவனது கடந்த காலச் செயல்கள் (கர்மம்), கர்ம வினைக்கான காலம் ஆகியவை மட்டுமின்றி இதர சில காரணங்களுடன் கூடி பின்னிப் பினையப்பட்ட சிக்கலான முடிச்சு. இக்காரணங்களின் விளைவுகளைக் கூட்டிக் கழித்த பின் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய ஒட்டு மொத்த பலன்களே தலையெழுத்து என்று அறியப்படுகிறது.
தலையெழுத்து அல்லது விதியின்படி சில பலன்களை ஒருவன் அனுபவிக்கும்பொழுது, அவன் மேன்மேலும் புதிய செயல்களைச் செய்கிறான். அது நல்ல செயலாகவும் இருக்கலாம், தீய செயலாகவும் இருக்கலாம். அவற்றினால் அவனுடைய தலையெழுத்து என்னும் முடிச்சு மேன்மேலும் வலுவடைந்து, கடல் அலைகளைப் போல ஓயாத பிரச்சனைகளாக ஜீவனை உருகொண்டு வாட்டுகின்றது.
இப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் ஒருவனின் இதய பலவீனம் என்று ஸ்ரீல பிரபுபாதர் பகவத் கீதைக்கான (15.20) தனது பொருளுரையில், ஒரு ஜீவன் பௌதிக இயற்கையின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தி கட்டுப்படுத்த முயற்சிப்பதாலும், அதன் காரணமாகத் தோன்றும் பற்றுதல்களாலும் இதய பலவீனம் உருவாகின்றது என்று விளக்கமளித்துள்ளார்.
கர்மம், செயல் வினைப் பலன்கள்
நமது தலையெழுத்தைப் புரிந்துகொள்வதற்கு, கர்மம், அதாவது பலன்நோக்கு செயல்களைப் பற்றிய புரிந்துணர்வு இன்றியமையாததாகும். ஏனெனில், ஒருவனின் தலையெழுத்தும் கர்மாவும், நகமும் சதையும் போன்றதாகும். “கர்மம் என்றால் என்ன?” என்று பகவத் கீதையில் அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு (பகவத் கீதை 8.3), பூத-பாவோத்பவ-கரோ விஸர்க: கர்ம-ஸம்ஞத:, ஜீவாத்மாவின் ஜடவுடலை வளர்க்கும் செயல்கள், கர்மம் (பலன்நோக்குச் செயல்கள்) என்று அழைக்கப்படுவதாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விடையளிக்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதே இதன் பொருத்தமான பொருள்.
கர்மத்தினை ஒரு விதைக்கு ஒப்பிடலாம். ஒவ்வொரு விதையும் எவ்வாறு விதைக்கப்பட்ட சில காலத்திற்கு பிறகு முளைத்து உரிய தருணத்தில் கனிகள் தருகின்றதோ, அதுபோல நமது ஒவ்வொரு செயலின் விளைவிற்கும் குறிப்பிட்ட காலம் உள்ளது. அக்காலம் கழிந்தபின் அச்செயலைப் பொருத்து தக்க வினைப் பலன் உண்டாகின்றது. ஆகவே, ஒருவன் (நல்லது, கெட்டது என) எந்த செயலைச் செய்தாலும், அதனைச் செய்த நபர் அதற்கு தகுந்த பலனை, உரிய இடத்தில் உரிய காலத்தில் அனுபவித்தே ஆக வேண்டும். அந்த வினையானது (இன்பமோ துன்பமோ), குறுகிய காலத்தில் அதே உடலிலும் அனுபவிக்கப்படலாம், அல்லது பற்பல பிறவிகளுக்கு பிறகு வேறோர் உடலிலும் அனுபவிக்கப்படலாம். அஃது அவரவரின் செயலையும் அதன் விளைவையும் பொருத்து அமையும். இதுவே பௌதிக இயற்கையின் மீற முடியாத சட்டமாகும்.
தலையெழுத்து மாற்றக்கூடிய ஒன்றா?
நிச்சயமாக மாற்றலாம். ஆனால் அதற்குரிய வழிமுறையினை உணர்ந்து அதனை செயல்படுத்த வேண்டும். ஜீவனின் இச்சைகளே அவனுடைய தலையெழுத்திற்கு காரணமாக அமைகின்றன என்பதால், கிருஷ்ணர் எந்த விதத்திலும் ஒரு ஜீவனின் தலையெழுத்திற்கு நேரடி காரணமாக இருப்பதில்லை. ஜீவன் தனது இச்சையை பரம புருஷ பகவானின் சேவையில் ஈடுபடுத்துவதற்கு மாறாக, தனது சுயநலத்திற்காக துஷ்பிரயோகம் செய்வதால், அவன் கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் செயல்படாமல் ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்கிறான்.
அந்த ஜட இயற்கையின் தொடர்பினால் அவன் வெவ்வேறு இனங்களில் நன்மை தீமைகளைச் சந்திக்கின்றான். எனவே, ஜீவனின் தலையெழுத்துக்குக் கடவுள் எந்த விதத்திலும் காரணம் அல்ல, ஜீவனே காரணமாக அமைகிறான்.
ஆகவே, இந்த பெரும் பிரச்சனைக்குத் தீர்வு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தித் தொண்டில் சேவை செய்து, பகவானின் திருநாமத்திடம் சரணடைவதே. இதனை தூய்மையாகவும் எளிதான முறையிலும் பயிற்சி செய்து வெற்றி பெறுவதற்காக ஸ்ரீல பிரபுபாதர் இஸ்கான் என்னும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினை உருவாக்கியுள்ளார். அவர் அளித்த கோட்பாடுகளை நன்கு பயின்று தலையெழுத்தினை மாற்றிக்கொள்ள முடியும். நமது செயல்களே நமது தலையெழுத்தை நிர்ணயிப்பதால், அச்செயல்களைப் பற்றி தெளிவாக அறிதல் தலை யெழுத்தை வெல்வதற்கு உதவியாக அமையும்.
செயல்களின் வகைகள்
பகவத் கீதை 4.17இல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் செயல்களை கர்மம் (செயல்), விகர்மம் (தடை செய்யப்பட்ட செயல்), அகர்மம் (விளைவுகளை ஏற்படுத்தாத செயல்) என வகைப்படுத்துகிறார்.
கர்மம் என்றால் பொதுவாக எல்லா செயல்களையும் குறிக்கும். இருப்பினும், இங்கே இச்சொல் புண்ணிய செயல்களைக் குறிக்கின்றது. வேத சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு, பகவானால் அனுமதிக்கப்பட்டுள்ள பலன்நோக்குச் செயல்கள், கர்ம அதாவது புண்ணிய செயல்கள் எனப்படுகின்றன. இத்தகைய புண்ணியச் செயல்களைப் புரிபவர்கள் வருங் காலத்தில் நல்ல பிறப்பு, அழகு, செல்வம், வளம், குடும்பம், இலாபம் போன்ற நற்பலன்களை அடைவர். அந்த பலன்கள் அதே பிறவியிலும் கிடைக்கலாம், அடுத்தடுத்து வரும் பிறவிகளிலும் கிடைக்கலாம், அல்லது ஸ்வர்க லோகம் போன்ற உயர் லோகங்களிலும் கிடைக்கலாம்.
வேத சாஸ்திரங்களில் தடை செய்யப்பட்டுள்ள பாவச் செயல்கள் விகர்மம் எனப்படுகிறது. இத்தகைய பாவச் செயல்களைப் புரிபவர்களுக்கு தக்க தண்டனைகள் வழங்கப் படுகின்றது. அவர்கள் தாழ்ந்த பிறப்பு, உடல் ஊனம் அல்லது அவலக்ஷணம், வறுமை, பஞ்சம், பொருளாதார தட்டுப்பாடு, சட்ட ரீதியான வழக்குகள் என எண்ணற்ற துயரங்களை அனுபவிப்பர். அந்த துயரங்கள் இந்த பிறவியிலோ, அடுத்தடுத்து வரும் பிறவிகளிலோ, அல்லது நரக லோகங்களிலோ அனுபவிக்கப்படலாம்.
இவ்விரண்டு வகைச் செயல்களுக்கு அப்பாற்பட்டு, எந்தவொரு விளைவுகளையும் (புண்ணியமும் இல்லை, பாவமும் இல்லை) ஏற்படுத்தாத செயல்கள் அகர்மம் எனப்படுகிறது. அஃது எப்படி? பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக செய்யப்படும் அன்புத் தொண்டானது இந்த பிரிவின் கீழ் வருகின்றது. இங்கு வழங்கப்படும் வேத வாக்குகளை நேர்மையாகவும் உண்மையாகவும் உள்ளது உள்ளபடி ஏற்றால், இதனை மிக எளிதான முறையில் புரிந்துணரலாம்.
கிருஷ்ணருக்கு கர்மம் இல்லை
பரிந்துரைக்கப்படும் செயல்கள் (கர்மம்), தடை செய்யப்பட்ட செயல்கள் (விகர்மம்) ஆகிய இரண்டும் ஜீவன்களுக்கு மட்டுமே உரியதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தகைய புண்ணிய பாவங்களுக்கு அப்பாற்பட்டவர். கிருஷ்ணர் செய்ய வேண்டிய செயல்கள் என்று ஏதுமில்லை, அவர் செய்யும் எந்த செயலும் அவரை பந்தப்படுத்துவதும் இல்லை. பிரம்மா, சிவன் போன்ற தேவர்கள், வேத சாஸ்திரங்கள், ஆச்சாரியர்கள், சாதுக்கள் என பலரும் கிருஷ்ணரைப் பற்றிய இந்த பரம உண்மையை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளனர். பகவான் கிருஷ்ணரே கீதையில் கூறுகிறார்:
ந மே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம்த்ரிஷு லோகேஷு கிஞ்சன
நான்வாப்தம் அவாப்தவ்யம்வர்த ஏவ ச கர்மனி
“பிருதாவின் மகனே, மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்குத் தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப் பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்.” (பகவத் கீதை 3.22)
தம் ஈஷ்வராணாம் பரமம் மஹேஷ்வரம் என்று தொடங்கி, ஸ்வாபாவிகீ க்ஞான-பல-க்ரியா ச என்று முடியும் ஷ்வேதாஷ்வதர உபநிஷத்தின் ஸ்லோகம் (6.7.8) கிருஷ்ணரின் வார்த்தைகளைப் பின்தொடர்ந்து மிக விரிவாக விளக்கமளிக்கின்றது.
ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகம், வாஸுதேவராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே படைக்கப்பட்ட அனைத்திற்கும் மூல காரணம் என்று அழுத்தம் திருத்தமாக விளக்கியுள்ளது. மேலும், அதே ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர், ஸ்வராட் அதாவது பூரண சுதந்திரமானவர் என்றும் வர்ணிக்கப்படுகிறார். அவர் பூரண சுதந்திரமானவர் என்றால், அவரை கர்ம வினைப் பலன்கள் பந்தப்படுத்த முடியுமா? நிச்சயம் இல்லை.
எனவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது விஷ்ணு மட்டுமே முற்றிலும் சுதந்திரமானவர், அவரை எந்த செயலும் விளைவும் பந்தப்படுத்த முடியாது என்பது தெளிவாகின்றது.
வினையற்ற செயலைச் செய்வது எப்படி?
பகவான் கிருஷ்ணர் இரு வகையான கர்மத்திற்கும் அப்பாற்பட்ட பூரண உண்மையாக உள்ளார். ஜீவன்களோ பாவ புண்ணியங் களினால் பந்தப்படுத்தப்பட்டுள்ளனர். பாவச் செயல்களினால் துயரங்களையும் புண்ணியச் செயல்களினால் தற்காலிக இன்பங்களையும் அனுபவித்து வரும் ஜீவன், அதனால் மேன்மேலும் புதிய செயல்களை உருவாக்கி, கொடிய வலையில் சிக்கிக் கொள்கிறான்.
இருப்பினும், இதிலிருந்து வெளியேற ஒரு சுலபமான வழி உண்டு. கர்மத்திற்கு அப்பாற்பட்டவரான பகவானுக்காக நாம் செயல்பட்டால், நாமும் கர்ம வினைகளிலிருந்து விடுபடலாம். பாவ புண்ணிய செயல்களைச் செய்வதற்கு பதிலாக, எல்லா செயல்களையும் கிருஷ்ணருக்காக செயல்படுத்தினால், நாமும் அவரைப் போன்றே விளைவுகளினால் பாதிக்கப்பட மாட்டோம். மேலும், முந்தைய கர்ம வினைகளிலிருந்தும் விமோசனம் பெறலாம்.
யத் கரோஷி யத் அஷ்னாஸியஜ் ஜுஹோஷி ததாஸியத்
யத் தபஸ்யஸி கௌந்தேயதத் குருஷ்வ மத்-அர்பணம்
“குந்தியின் மகனே, எதையெல்லாம் நீ செய்கின்றாயோ, எதையெல்லாம் நீ உண்கின்றாயோ, எதையெல்லாம் நீ படைக்கின்றாயோ, எதையெல்லாம் நீ கொடுக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் நீ செய்கின்றாயோ, அதனை எனக்கு அர்ப்பணமாக செய்வாயாக.” என்று பகவத் கீதையில் (9.27) கிருஷ்ணர் நம்மை அறிவுறுத்துகின்றார். இவ்வாறு செய்யப்படும் செயல்கள் கிருஷ்ணரால் ஏற்கப்படுவதால், இச்செயல்களுக்கு எந்த வினைகளும் கிடையாது.
நமது கடந்த கால பாவ புண்ணியங்களின் விளைவுகளைத் தீர்க்க, பகவான் கிருஷ்ணர் கீதையின் இறுதியில் (18.66) பின்வரும் அறிவுரையினை வழங்குகின்றார்:
ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:
“எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக, உன்னை எல்லா பாவ விளைவு களிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.” கலி யுகத்தில் வாழும் நம் அனைவருக்கும் வழங்கப்படும் இந்த எளிமையான வழிமுறை, பகவத் கீதை மட்டுமின்றி, ஸ்ரீமத் பாகவதம் போன்ற இதர வேத இலக்கியங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமத் பாகவதத்தில் (6.1.15) சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜாவிடம் பின்வருமாறு உபதேசம் அளிக்கின்றார்:
கேசித் கேவலயா பக்த்யாவாஸுதேவ-பராயணா:
அகம் துன்வந்தி கார்த்ஸ்ன்யேனநீஹாரம் இவ பாஸ்கர:
“பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு முழுமையாக, தூய முறையில் பக்தித் தொண்டை ஏற்றுச் செயல்படுத்தும் பக்தர்களால் மட்டுமே, சூரிய கதிர்களால் மறையும் பனியைப் போல, பாவச் செயல்களை வேரோடு களையறுக்க முடியும். மேலும், அவை மீண்டும் முளைத்து விட வாய்ப்பு இல்லாமல் செயல்படுத்த இயலும்.”
கலி யுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடை வதற்கான ஒரே வழி அவருடைய திருநாமத்தை உச்சரிப்பதே என்று பிருஹன் நாரதீய புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்
களௌ நாஸ்த்-யேவ நாஸ்த்-யேவ நாஸ்த்-யேவ கதிர் அன்யதா
“போலித்தனமும் சச்சரவும் நிறைந்த இக்கலி யுகத்தில், விடுதலைக்கான ஒரே வழி, ஹரியின் திருநாமத்தை உச்சரிப்பதே. இதைத் தவிர வேறு கதியில்லை, வேறு கதியில்லை, வேறு கதியில்லை.” மேலும், கலி-ஸந்தாரண உபநிஷத்தில் (5.6) பிரம்மதேவர் நாரதரிடம், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் இந்த பதினாறு வார்த்தைகளைக் கொண்ட மந்திரமே கலி யுகத்தின் பாவங்களை எதிர்த்து செயல்படுவதற்கான பிரத்தியேக வழிமுறை என்று கூறுகிறார்.
எனவே, இக்கலி யுகத்தின் களங்கங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தினை உச்சரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அனைத்து வேத சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்தாலும், இதைக் காட்டிலும் புனிதமான ஒன்றைக் காண முடியாது. இதனால் இந்த திருநாம உச்சாடனமே தலையெழுத்தை மாற்றுவதற்கான சிறந்த வழிமுறையாகும்.