வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஸ்ரீல பிரபுபாதரின் உரையிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் கட்டுரை, சமுதாயத்தின் நான்கு பிரிவுகளையும் அதன் குறிக்கோளையும் விளக்குகின்றது.
அத: பும்பிர் த்விஜ-ஷ்ரேஷ்டா வர்ணாஷ்ரம-விபாகஷ:
ஸ்வனுஷ்டிதஸ்ய தர்மஸ்ய ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம்
இரு பிறப்பு எய்தியவர்களில் சிறந்தவரே, வர்ணத்திற்கும் ஆஷ்ரமத்திற்கும் ஏற்றவாறு ஒவ்வொருவரும் தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதன் மிகவுயர்ந்த பக்குவநிலை, முழுமுதற் கடவுளைத் திருப்தி செய்வதே என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
(ஸ்ரீமத் பாகவதம் 1.2.13)
வர்ணாஷ்ரம அமைப்பின் குறிக்கோள்
உலகெங்கிலும் உள்ள மனித சமுதாயம், நான்கு வர்ணங்களாகவும் (ஜாதிகளாகவும்), நான்கு ஆஷ்ரமங்களாகவும் (வாழ்வின் பருவங்களாகவும்) பிரிக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகளின் பிரிவு, போர் புரிவோரின் பிரிவு, விவசாயம் செய்வோரின் பிரிவு, தொழிலாளர்களின் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளாகும். இவை ஒருவரின் தொழிலுக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன, பிறப்பினால் அல்ல. மாணவப் பருவம், இல்லற பருவம், ஓய்வு பெற்ற பருவம், பக்திப் பருவம் ஆகிய நான்கும் வாழ்வின் பருவங்களாகும். மனித சமுதாயத்தின் சிறப்பான நன்மைக்கு இப்பிரிவுகள் அவசியம்; இல்லையெனில் எந்த சமூக அமைப்பும் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைய முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிலும், பரம அதிகாரியான முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதே நோக்கமாக இருக்க வேண்டும். மனித சமுதாயத்தின் இந்த நிர்வாக அமைப்பு, வர்ணாஷ்ரம-தர்மம் என்று அழைக்கப்படுகிறது. பண்பாடுடைய வாழ்விற்கு இது மிகவும் பொருத்தமானதாகும். வர்ணாஷ்ரம அமைப்பு, பரம்பொருளை அறிவதில் உதவி செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது; ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை செயற்கையான முறையில் அடக்கி ஆள்வதற்காக அல்ல. இந்த்ரிய-ப்ரீதி எனப்படும் புலனுகர்ச்சியின் மீதான அளவுக்கதிகமான பற்றுதலால், பரம்பொருளை உணர்தல் என்னும் வாழ்வின் நோக்கம் இழக்கப்படும்போது, பலவீனமான பிரிவுகளைச் செயற்கையாக அடக்கி ஆள்வதற்காக, இந்த வர்ணாஷ்ரம அமைப்பை சுயநலவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். சண்டை சச்சரவுகள் நிறைந்த இக்கலி யுகத்தில், இத்தகைய செயற்கையான ஆதிக்கம் ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த ஜாதி மற்றும் ஆஷ்ரமப் பிரிவுகள், சமூக ஒற்றுமையையும் தன்னுணர்வையும் பெறுவதற்காகவே உள்ளன, வேறெந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பதை பகுத்தறிவுடைய மக்கள் நன்கறிவர்.
வாழ்வின் மிகவுயர்ந்த நோக்கம் அல்லது வர்ணாஷ்ரம தர்மத்தின் மிகவுயர்ந்த பக்குவநிலை என்பது, முழுமுதற் கடவுளின் திருப்திக்காக ஒருங்கிணைந்து செயல்படுவதே என்று இங்கே பாகவதத்தில் கூறப்படுகிறது. இக்கருத்து பகவத் கீதையிலும் (4.13) உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிராமணர்களில் சிறந்தவர்கள்
இங்கு சூத கோஸ்வாமி தன்னுடைய சொற்பொழிவைக் கேட்பவர்களை த்விஜ-ஷ்ரேஷ்டா: “பிராமணர்களில் தலைசிறந்தவர்களே” என்று அழைக்கிறார். அவர்கள் அனைவரும் கிருஷ்ண பக்தர்கள் என்பதையும், கற்றறிந்த பண்டிதர்களில் தலைசிறந்தவர்கள் என்பதையும் இது குறிக்கிறது. இந்த யுகத்தில் ஒவ்வொருவனும் சூத்திரனாகவே, நான்காம் தர மனிதனாகவே பிறக்கின்றான் (ஜன்மனா ஜாயதே ஷூத்ர:). சடங்குகளின் மூலம் அவன் மூன்றாம் தர மனிதனாக, த்விஜனாக மாறலாம் (ஸம்ஸ்காராத் பவேத் த்விஜ:). ஞானத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதால் இரண்டாம் தர மனிதனாக, விப்ரனாக மாறலாம் (வேத-பாடாத் பவேத் விப்ர:). ஆனால் பிரம்மனை உணர்ந்தவன் மட்டுமே முதல் தர மனிதன், பிராமணன் எனப்படுகிறான் (ப்ரஹ்ம ஜானாதீதி ப்ராஹ்மண). மேலும், நைமிஷாரண்யத்தில் இருந்த முனிவர்கள், பிரம்மனை மட்டுமின்றி, பரம புருஷ பகவானையும் அறிந்தவர்கள் என்பதால், பிராமணர்களில் தலைசிறந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
நான்கு பிரிவுகளின் முக்கியத்துவம்
உண்மையான மனித நாகரிகத்திற்கு பிராமணப் பிரிவினர் மிகவும் அவசியம். அந்த நாகரிகம், நான்கு வர்ணங்களையும் நான்கு ஆஷ்ரமங்களையும் கொண்ட வர்ணாஷ்ரம தர்மம் என்னும் சமுதாய அமைப்புடன் தொடங்குகின்றது. பிராமணர்கள் (அர்ச்சகர்கள், புத்திசாலிகள்), சத்திரியர்கள் (போர் வீரர்கள், நிர்வாகிகள்), வைசியர்கள் (விவசாயிகள், வியாபாரிகள்), சூத்திரர்கள் (உடல் உழைப்பை நல்குபவர்கள்) ஆகியோர் நான்கு வர்ணங்களாகும். பிரம்மசாரிகள் (திருமணமாகாத மாணவர்கள்), கிருஹஸ்தர்கள் (குடும்ப வாழ்வில் உள்ளவர்கள்), வானப் பிரஸ்தர்கள் (ஓய்வு பெற்றவர்கள்), சந்நியாசிகள் (முற்றும் துறந்தவர்கள்) ஆகியோர் நான்கு ஆஷ்ரமங்களை அமைக்கின்றனர். மனித சமுதாயம் இந்த வர்ணாஷ்ரம அமைப்பின்படி விஞ்ஞானபூர்வமாக வடிவமைக்கப்படாவிடில், அது மிருக சமுதாயமே. அது மனித சமுதாயம் அல்ல. மிருக சமுதாயத்தில், நீங்கள் அறிவுபூர்வமான நல்ல விஷயங்களையோ, கடவுளைப் பற்றிய அறிவையோ எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியம் அல்ல.
இந்த வர்ணாஷ்ரம முறை கடவுளால் உண்டாக்கப்பட்டது என்பதால் இயற்கையானதாகும். நமது உடலில், மூளை, கைகள், வயிறு, கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளதுபோல, இந்த சமுதாயமும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இஃது இயல்பானதாகும். ஆனால் தலையை வெட்டிவிட்டால் உடலினால் என்ன பயன்? அஃது ஒரு பிணம். அதுபோலவே, பிராமணப் பண்பாடு இல்லாத இன்றைய சமுதாயம் தலையற்ற சமுதாயமாகும். மிக சக்தி வாய்ந்த பாதுகாப்புத் துறையும் (சத்திரியர்களும்), அனைத்து வசதிகளும் கொண்ட பொருளாதாரத் துறையும் (வைசியர்களும்), எண்ணிலடங்காத தொழிலாளர்களும் (சூத்திரர்களும்) இன்றைய சமுதாயத்தில் இருக்கலாம். ஆனால் தலைப் பாகம் (பிராமணர்களின் பிரிவு) இல்லாததால், இன்றைய சமுதாயம் உயிரற்ற உடலாகவே செயல்படுகிறது. இதனால்தான் அனைவரும் துன்பப்படுகிறார்கள்.
இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில், மனித சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் பிராமணர்களைப் பயிற்றுவிக்கின்றோம். மற்ற பிரிவுகள் முக்கியமற்றவை என்று அர்த்தமல்ல. இந்த உடலில் மூளை மிகவும் முக்கியமானது, ஆனால் கால்களும் முக்கியமானவையே. கால்கள் செயல்படாவிடில், உங்களால் நகர முடியாது. ஆகவே, உடலின் எல்லா உறுப்புகளுக்குமிடையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மூளையானது உடலின் மிக முக்கியமான பகுதியாக உள்ளபோதிலும், கால்களும் தேவைப்படுகின்றன, கைகளும் தேவைப்படுகின்றன, வயிறும் தேவைப்படுகிறது–அனைத்தும் தேவைப்படுகின்றன. அதைப் போலவே இந்த வர்ணாஷ்ரம அமைப்பில், சமுதாயம் சரியான முறையில் செயல்படுவதற்கு நான்கு வர்ணங்களும் நான்கு ஆஷ்ரமங்களும் தேவைப்படுகின்றன.
கிருஷ்ணரின் திருப்திக்காக செயல்படுதல்
இதனால் நாங்கள் எந்தவொரு பிரிவையும் ஒதுக்குவதில்லை. மாறாக, அனைத்துப் பிரிவினரும் கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம். அதன் பின்னர், சமுதாயத்திலுள்ள ஒவ்வொர் உறுப்பினரும் பக்குவத்தை அடையலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பொருட்டல்ல. ஆனால், நீங்கள் உங்களுடைய கலை, அறிவு, கல்வி என உங்களுடைய செயல்களின் மூலமாக கிருஷ்ணரை திருப்திப்படுத்த முடிந்தால், உங்கள் வாழ்க்கை பக்குவமானதாக அமையும். “உங்கள் வேலையைச் செய்யாதீர்கள்,” என்று நாங்கள் கூறவில்லை; மாறாக, உங்கள் வேலையை கிருஷ்ணருக்காகச் செய்யுங்கள் என்று கூறுகிறோம். அப்போது அது பக்குவம் பெறுகிறது. இல்லையேல், நரகத்திற்குச் செல்வீர்கள், ஷ்ரம ஏவ ஹி கேவலம்.
நீங்கள் கடவுள் அல்ல
“நான் ஒரு தத்துவவாதி, நான் எனது கடமைகளைச் செய்கிறேன்,” என்று ஒருவர் கூறலாம்.
“ஆனால் உங்களுக்குக் கடவுளைத் தெரியுமா? நீங்கள் கடவுளுக்கு சேவை செய்கிறீர்களா?”
“ஆமாம், எனக்கு கடவுளைத் தெரியும். நான்தான் கடவுள்.”
இத்தகைய முட்டாள்தனம் உங்களுக்கு உதவாது. ஒரு சாதாரண மனிதன் தன்னை அமெரிக்காவின் அதிபர் என்று பிரகடனப்படுத்தினால், அவன் பைத்தியக்காரன் என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள். அதுபோலவே, “நான் கடவுள்,” என்று ஓர் அயோக்கியன் கூறினால், அவன் பைத்தியக்காரன் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் உங்களுடைய சேவையின் மூலமாக முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்த வேண்டும், அவரை நகல் செய்வதற்கு முயலக் கூடாது. நீங்கள் உங்களையே கிருஷ்ணராக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று பகவத் கீதையில் அவர் ஒருபோதும் அறிவுறுத்தவில்லை, நிச்சயமாக இல்லை. ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ:, “என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பின் கீழ் வருவாயாக,” என்று அவர் கூறுகிறார். எனக்கு சமமாக ஆகு,” என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. அஃது அபத்தமான எண்ணம். அவரிடம் சரணடைந்து தொண்டு செய்வதற்கு நீங்கள் முயற்சிக்கும்போது, கிருஷ்ணர் திருப்தியடைவார். நானே கிருஷ்ணர்,” “கிருஷ்ணர் மறைந்துவிட்டார், நான் இப்போது கிருஷ்ணராகிவிட்டேன்,” அல்லது “கடவுளே இல்லை” என்று நீங்கள் தவறாக உரிமை கொண்டாடினால், அவர் திருப்தியடைய மாட்டார். இம்மாதிரியான அபத்தங்கள் கிருஷ்ணரை ஒருபோதும் திருப்திப்படுத்தாது.
வர்ணாஷ்ரம முறை பௌதிகமானது அல்ல
எனவே, பாகவதத்தின் அறிவுரை என்னவெனில், ஸ்வனுஷ்டிதஸ்ய தர்மஸ்ய ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம், “கிருஷ்ணர், அல்லது ஹரியின் திருப்திக்காக உங்களுடைய கடமைகளை சிறப்பான முறையில் செய்து வந்தால், நீங்கள் பக்குவமடைவீர்கள்.” நான்கு சமுதாயப் பிரிவுகளையும் நான்கு ஆன்மீகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வர்ணாஷ்ரம முறையானது, சில சமயங்களில் பௌதிகமானதாகத் தோன்றலாம். ஆனால் அவை கிருஷ்ணரின் திருப்திக்காக நிறைவேற்றப்படும்போது, பௌதிகமாக இருப்பதில்லை. அவை ஆன்மீகமானவை. கிருஷ்ணரை மறந்திருப்பதே பௌதிக நிலை. பூரண கிருஷ்ண உணர்வில் இல்லாதவர்கள் ஜடத்தையும் ஆன்மீகத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பார்கள். ஆனால் பூரண கிருஷ்ண உணர்வை அடைந்த பின்னர், நீங்கள் எல்லாவற்றின் ஒருமையையும் காணலாம், ஏகத்வம் அனுபஷ்யத: (ஈஷோபநிஷத் 7). அனைத்தும் கிருஷ்ணருடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை உங்களால் காண முடியும் என்பதே இதன் பொருள்.
நமது ஒரே தொழில்
கிருஷ்ணரே பரம புருஷர் என்பதால், அனைத்தும் அவரது பலதரப்பட்ட சக்தியின் தோற்றங்களே. இதற்கான ஒரு நல்ல உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்ளலாம். சூரியனிலிருந்து தோன்றும் சூரியக் கதிர்கள், வெப்பம், ஒளி என்னும் இரு சக்திகளைக் கொண்டுள்ளன. முழு பௌதிகப் படைப்பும் இந்த வெப்பத்தையும் ஒளியையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. சூரியனிடமிருந்து வெப்பமும் ஒளியும் வராதபட்சத்தில், மரங்கள் அனைத்தும் பட்டுப் போய்விடும். சூரியனின் வெப்ப சக்தியையும் ஒளி சக்தியையும் நம்மால் வேறுபடுத்திப் பார்க்க முடியும்; இருப்பினும், உயர் நிலையிலிருந்து பார்த்தால், அவை இரண்டுமே சூரியக் கதிர்களின் சக்தியே என்பதால், அவை இரண்டும் ஒன்றே என்று கூறலாம்.
அதுபோலவே, இவ்வுலகில் கிருஷ்ணரின் இரு சக்திகள் செயல்படுகின்றன–ஜட சக்தி மற்றும் ஆன்மீக சக்தி. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஜட சக்தியாகும். ஆன்மீக சக்தியானது ஜீவராசிகளை உள்ளடக்கியது (ஜீவ-பூதாம் மஹா-பாஹோ யயேதம் தார்யதே ஜகத்). இந்த ஜடவுலகம், கிருஷ்ணருடைய ஆன்மீக சக்தியும் ஜட சக்தியும் இணைந்த கலவையாகும். இவ்வுலகிலுள்ள 99.9 சதவிகித உயிர்வாழிகள் கடவுளை மறந்துவிட்ட காரணத்தால், ஜட சக்திக்கும் ஆன்மீக சக்திக்கும் இடையில் இங்கு வேறுபாடு உள்ளது. ஆனால் நீங்கள் ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றமடைந்து கிருஷ்ண உணர்வுள்ளவராக மாறும்போது, நீங்கள் எதையும் பௌதிகமாகப் பார்க்க மாட்டீர்கள்; அனைத்தையும் ஆன்மீகமாகவே காண்பீர்கள். ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம. சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்ய லீலை 8.274) ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பின்வருமாறு கூறுகிறார்:
ஸ்தாவர-ஜங்கம தேகே, நா தேகே தார மூர்தி
ஸர்வத்ர ஹய நிஜ இஷ்ட-தேவா-ஸ்பூர்தி
“ஆன்மீகத்தில் முன்னேற்றமடைந்த கிருஷ்ண பக்தன், அசைவன, அசையாதன என எதைப் பார்த்தாலும், உண்மையில் அவன் அந்த உருவத்தைக் காண்பதில்லை. மாறாக, அவனது இஷ்ட தெய்வத்தின் தோற்றத்தையே எங்கும் காண்கிறான்.” நாஸ்திகனின் பார்வை இதற்கு நேர் எதிரானது. அவன் கோயிலுக்கு வந்து கிருஷ்ணரின் விக்ரஹத்தைக் கண்டால்கூட, அவரைக் கல்லாகவே காண்கிறான். ஆனால் ஆன்மீகத்தில் முன்னேறியவர், விக்ரஹத்தைக் காணும்போது, கிருஷ்ணரை நேரடியாகக் காண முடியும். புரியிலுள்ள கோயிலுக்குள் நுழைந்த சைதன்ய மஹாபிரபு, ஜகந்நாதரின் விக்ரஹத்தைக் கண்டபோது, உடனடியாக, “என் கிருஷ்ணர் இங்கிருக்கிறார்,” என்று கூவி அழைத்தபடி மயக்கமுற்று வீழ்ந்தார்.
எனவே, கிருஷ்ணரை மறந்திருக்கும் நிலையிலிருந்து விடுபடுவதற்கு, அவரை திருப்திபடுத்துவதையே ஒரே தொழிலாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். (ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம்). கிருஷ்ணரை திருப்திப்படுத்துவது மட்டுமே உங்களுடைய குறிக்கோளாக இருந்தால், உங்கள் வாழ்க்கை பக்குவமடையும்.