ஹரியும் சிவனும் ஒன்றா? அறியாதவன் வாயில் மண்ணா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்கள்: ஸ்ரீ கிரிதாரி தாஸ், ஜீவன கௌரஹரி தாஸ்

சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையிலான அபிப்பிராய பேதங்களும் சண்டை சச்சரவுகளும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சிலர் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றும், வேறு சிலர் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும் கூறி, சிவனையும் விஷ்ணுவையும் வெவ்வேறு துருவங்களாக வழிபடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு” என்று கூறி, இருவரையும் சமாதானப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் வாதங்கள் ஒருபுறம் இருக்க, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களிடம் உள்ள தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் இந்த ஞானவாள் பகுதியில், இதனைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

 

சிவபெருமானை உணர்வது எளிதல்ல

கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பதை பல்வேறு சாஸ்திரங்களைக் கொண்டு பகவத் தரிசனத்தில் பலமுறை விளக்கியிருப்பதால், இங்கே சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் உள்ள உறவையும், அவர்கள் இருவரும் ஒருவரா என்பதை அறிவதிலும் கவனம் செலுத்தலாம்.

சிவபெருமானின் நிலை மிகவும் விசேஷமானது, அதனை உணர்வது எளிதல்ல. மாமன்னர் யுதிஷ்டிரர் தன் பாட்டனாரான பீஷ்மரிடம் சிவபெருமானின் புகழைப் பற்றி கேட்டபோது, “எல்லா பிரபஞ்சங்களிலும் சிவனைப் பற்றி முழுமையாக அறிந்த ஒரே நபர் கிருஷ்ணரே,” என்று பீஷ்மர் பதிலளித்தார் (மஹாபாரதம், அனுஷாசன பர்வம் 14ஆவது அத்தியாயம்).

உடல் முழுக்க சாம்பலை பூசிக் கொண்டு, மண்டையோடு, எலும்பு, மற்றும் பாம்புடனும் மயானத்தில் தியானம் செய்யும் சிவபெருமானை புரிந்துகொள்வது எளிதல்ல. அவரது தோற்றத்தைப் புரிந்துகொள்வதே கடினம் எனும்போது, அவரது புதிரான செயல்களை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? புராணங்களிலிருந்து அங்கொரு கதையும் இங்கொரு கதையும் எடுத்து, சிவபெருமானின் நிலையை நிலைநாட்டுதல் இயலாததாகும்.

புராணங்களை தத்துவபூர்வமாக அணுகாமல் மேலோட்டமாக அணுகுவோர், சிவபெருமான் விஷ்ணுவைக் காட்டிலும் உயர்ந்தவர், விஷ்ணு சிவபெருமானைக் காட்டிலும் உயர்ந்தவர், அல்லது சிவபெருமான், விஷ்ணு ஆகிய இருவரும் ஒருவரே போன்ற முடிவுகளில் எந்த முடிவிற்கு வேண்டுமானாலும் வர இயலும். எனவே, சிவபெருமானின் நிலையை தத்துவபூர்வமாக அறிய முயற்சி செய்யலாம்.

 

சிவபெருமான் யார்?

அனைவருமே விஷ்ணுவின் அம்சம் என்பதால், ஒரு விதத்தில் பார்த்தால், சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பேதம் இல்லை என்று சொல்லலாம்; இருப்பினும், விஷ்ணுவினால் வெளிப்படுத்தப்படும் அனைத்து குணங்களையும் சிவபெருமான் வெளிப்படுத்துவதில்லை என்பதால், அவர்களிடையே நிச்சயம் பேதம் உள்ளது என்பதையும் அறிய வேண்டும்.

முழுமுதற் கடவுளான விஷ்ணுவிற்கும் ஜடவுலகத்திற்கும் நேரடித் தொடர்பு கிடையாது; அவர் இந்த ஜடவுலகில் தோன்றும்போதுகூட ஜடக் குணங்களுக்கு அப்பாற்பட்ட தனது தெய்வீக நிலையிலிருந்து சற்றும் பிறழ்வதில்லை. மாறாக, பௌதிக குணங்களுடன் தொடர்புகொள்ள அவர் விரும்பும்போது, அவர் சிவபெருமானாகத் தோன்றுகிறார். அதாவது, சிவபெருமான் விஷ்ணுவின் அம்சமே என்றபோதிலும், அவர் ஜட இயற்கையின் குணங்களினால் பாதிக்கப்படுவதால், அவர் விஷ்ணுவிற்கு இணையானவர் அல்ல.

பிரம்மா உட்பட எல்லா ஜீவன்களைக் காட்டிலும் சிவபெருமான் உயர்ந்தவர், இருப்பினும் அவர் விஷ்ணுவிற்குச் சமமானவர் அல்ல. அவரது நிலை ஜீவன்களுக்கும் விஷ்ணுவிற்கும் இடைப்பட்டதாகும். அவரது வசிப்பிடம்கூட ஜடவுலகத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது. நாம் வாழும் இந்த ஜடவுலகம் தேவி-தாமம் எனப்படுகிறது. விஷ்ணுவின் ஆன்மீக உலகம் ஹரி-தாமம் எனப்படுகிறது. சிவபெருமானின் உலகமான மஹேஷ-தாமம் மேற்கூறிய இரு உலகங்களுக்குமிடையில் உள்ளது. (பிரம்ம ஸம்ஹிதை 5.43)

சிவபெருமான் சாதாரண ஜீவனும் அல்ல, முழுமுதற் கடவுளும் அல்ல என்பதால், அவர் சிவ-தத்துவம் என்ற பெயரில் தனி தத்துவமாக (தனிப்பட்ட உண்மையாக) எடுத்துக் கொள்ளப்படுகிறார். புண்ணிய காரியங்களை அதிகமாக சேகரிப்பவர்கள் பிரம்மதேவரின் பதவியைக்கூட பெறலாம், ஆனால் சிவபெருமானின் பதவியை யாராலும் பெற முடியாது. ஜீவன்கள் அனைவரும் சிவபெருமானின் மூலமாக ஜடவுலகினுள் வைக்கப்படுவதால், அவர் இவ்வுலகிலுள்ள அனைவருக்கும் தந்தையாக கருதப்படுகிறார்.

சிவபெருமானை முறையாக அறிய வேண்டுமெனில், அவருக்கும் முழுமுதற் கடவுளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டியது அவசியம்.

சிவபெருமான் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர்

சிவபெருமான் உட்பட அனைத்து தேவர்களும் பகவான் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர்கள்; ஆனால் விஷ்ணுவோ பிறப்பற்றவர். பிரபஞ்சம் முழுவதும் கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், அவரது விருப்பப்படி இவ்வுலகில் பல்வேறு தேவர்கள் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றனர் என்பதையும் நாம் பகவத் கீதையிலிருந்து (9.8) அறிகிறோம். சிவபெருமான் உட்பட அனைத்து தேவர்களும் பிரபஞ்சத்தைப் பராமரிப்பதற்காக தன்னால் படைக்கப்பட்டவர்களே என்று மஹாபாரதத்தின் மோக்ஷ-தர்மத்தில் கிருஷ்ணர் கூறுகிறார். 

மேலும், விஷ்ணு-தர்ம-புராணம் பின்வருமாறு கூறுகின்றது:

ப்ரஹ்மா ஷம்புஸ் ததைவார்கஷ்        சந்த்ரமாஷ் ச ஷதக்ரது:

ஏவம் ஆத்யாஸ் ததைவான்யே யுக்தா வைஷ்ணவ-தேஜஸா

“பிரம்மா, சிவன், சூரியன், சந்திரன், இந்திரன் உட்பட எல்லா தேவர்களுக்கும் அப்பதவிகள் மற்றும் அதற்குரிய சக்திகளை வழங்கியவர் பகவான் விஷ்ணுவே. அவர்கள் அனைவரும் விஷ்ணுவின் சேவகர்களே.” 

படைப்பிற்கு முன்பு சிவபெருமானும் கிடையாது, பிரம்மாவும் கிடையாது–வாஸுதேவரும் அவரது வைகுண்ட லோகமும் மட்டுமே இருந்தது என்பதை மஹா-நாராயண உபநிஷத் பின்வருமாறு உறுதி செய்கிறது: வாஸுதேவோ வா இதம் அக்ர ஆஸீன் ந ப்ரஹ்ம ந ச ஷங்கர:.

சிவபெருமான் மாயையுடன் உறவு கொள்கிறார்

சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் உள்ள வேறுபாட்டை அறிவதற்காக சுகதேவ கோஸ்வாமியிடம் மாமன்னர் பரீக்ஷித் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதத்தில், சிவபெருமான் எப்போதும் தனது சக்தியான ஜட இயற்கையுடன் இருப்பதால் முக்குணங்களினால் பாதிக்கப்படுகின்றார் என்றும், பகவான் விஷ்ணுவோ ஜட குணங்களுடன் எந்த தொடர்பும் இன்றி நிர்குணமாக உள்ளார் என்றும் சுகதேவர் பதிலளித்தார். (ஸ்ரீமத் பாகவதம் 10.88.3-5)

அதாவது, பகவான் விஷ்ணு ஜடவுலகுடன் தொடர்பு கொண்டாலும் அவர் அதனால் பாதிக்கப்படுவதில்லை, சிவபெருமானோ பாதிக்கப்படுகிறார் என்பதே பொருள். சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான வேறுபாட்டினை விளக்க பிரம்மதேவர் தனது பிரம்ம ஸம்ஹிதையில், பாலையும் தயிரையும் உதாரணமாக வழங்குகிறார்.

 க்ஷீரம் யதா ததி-விகார-விஷேஷ-யோகாத்

சஞ்ஜாயதே ந ஹி தத: ப்ரதக் அஸ்தி ஹேதோ:

: ஸம்புதாம் அபி ததா ஸமுபைதி கார்யாத்

கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி

“புளிப்புடன் இணையும்போது, பாலானது தயிராக திரிபடைகிறது; இருப்பினும், தயிர் என்பது உண்மையில் பாலைத் தவிர வேறல்ல. அதுபோல, முழுமுதற் கடவுளான கோவிந்தன் பௌதிக விஷயங்களுடன் தொடர்புகொள்வதற்காக சிவபெருமானின் வடிவை ஏற்கின்றார். அந்த ஆதி புருஷரான கோவிந்தனுக்கு எனது வந்தனங்கள்.” (பிரம்ம ஸம்ஹிதை 5.45) 

பாலின் திரிபடைந்த பகுதியான தயிரினை பாலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் கூற இயலாது; அதே சமயத்தில் இது பாலே என்றும் கூற முடியாது. அதுபோல, சிவபெருமானை விஷ்ணுவிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் என்று கூற முடியாது, விஷ்ணுவே என்றும் கூறி விட முடியாது. மாயையுடன் சிவபெருமான் கொள்ளும் தொடர்பின் காரணத்தினால், புளிப்புடன் தொடர்பு கொண்டு தயிராகத் திரிபடைந்த பாலிற்கு அவர் ஒப்பிடப்படுகிறார். விஷ்ணுவோ மாயையுடன் தொடர்பின்றி, பாலாகவே இருக்கின்றார்.

சிவபெருமானிடம் இல்லாத குணங்கள்

ஜீவன்கள் தங்களது பக்குவமான நிலையில் ஐம்பது குணங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றும், பகவான் விஷ்ணுவோ அறுபது குணங்களை வெளிப்படுத்துகிறார் என்றும், பல்வேறு சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்த ஸ்ரீல ரூப கோஸ்வாமி தனது பக்தி ரஸாம்ருத சிந்துவில் கூறுகிறார். சிவபெருமான் ஜீவன்களுக்கும் விஷ்ணுவிற்கும் இடைப்பட்டவர் என்று முன்னரே கூறினோம். அதன்படி, சிவபெருமான் ஐம்பத்தி ஐந்து குணங்களை வெளிப்படுத்துகிறார். அதாவது, ஜீவன்களிடம் இல்லாத ஐந்து குணங்கள் சிவபெருமானிடம் விசேஷமாக உள்ளன என்றபோதிலும், விஷ்ணுவிடம் உள்ள ஐந்து குணங்கள் சிவபெருமானிடம் காணப்படுவதில்லை.

அந்த ஐந்து குணங்களாவன: (1) சிவபெருமானிடம் அசிந்திய சக்தி (புரிந்துகொள்ள இயலாத சக்தி) காணப்படுவதில்லை, மாறாக, யாராலும் நினைத்தற்கரிய செயல்களைச் செய்யும் சக்தி விஷ்ணுவிடம் உள்ளது; (2) சிவபெருமானின் உடலிலிருந்து பிரபஞ்சங்கள் வெளிப்படுவதில்லை, மாறாக, மஹாவிஷ்ணுவின் உடலிலிருந்து எண்ணற்ற பிரபஞ்சங்கள் தோன்றுகின்றன; (3) சிவபெருமான் அவதாரங்களுக்கு மூலமாக இருப்பவர் அல்ல, மாறாக, விஷ்ணு எல்லா அவதாரங்களுக்கும் மூலமாக உள்ளார்; (4) தன்னால் கொல்லப்படும் அசுரர்களுக்கு சிவபெருமான் முக்தியை வழங்குவதில்லை, மாறாக, விஷ்ணுவினால் கொல்லப்படும் அசுரர்கள்கூட முக்தியடைகின்றனர்; மற்றும் (5) சிவபெருமான் முக்திபெற்ற ஆத்மாக்களைக் கவருவதில்லை, விஷ்ணுவோ முக்திபெற்றவர்களையும் கவர்பவராக உள்ளார்.

விஷ்ணுவின் மாயா சக்தியால் மயங்கக்கூடியவர்

பகவான் விஷ்ணு மாயையின் எஜமானர், மற்றவர்கள் அனைவரும் அந்த சக்தியினால் மயங்கக்கூடியவர்கள். சிவபெருமானும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த பின்னர், தேவர்களுக்கு அமிர்தம் வழங்கும் பொருட்டு தோன்றிய பகவானின் மோஹினி அவதாரத்தின் அழகிய ரூபத்தைக் காண்பதற்காக சிவபெருமான், தனது மனைவி, நந்தி மற்றும் சகாக்களுடன் விஷ்ணுவை அணுகி மன்றாடினர். மோஹினி அவதாரத்தை மீண்டும் காண்பிப்பதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும், ஆனால் தாங்கள் நிச்சயம் மயங்கிவிடுவீர்கள் என்றும் சிவபெருமானிடம் பகவான் விஷ்ணு எச்சரித்தார். இருப்பினும், சிவபெருமானது ஆவலினால் பகவான் மீண்டும் தனது மோஹினி ரூபத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது அங்கே நறுமண காற்று வீச, மோஹினி தேவி தன் கையில் பந்தை வைத்து விளையாடியபோது, அவளது கூந்தல் அவிழ்ந்தது. அவளது அழகில் மயங்கிய சிவபெருமான் தன்னிலையை மறந்து, மோஹினியை தழுவிக்கொள்ள முனைந்தார். அவரது பிடியில் சிக்காமல் ஓடி விளையாடிய மோஹினியை சிவபெருமான் அயராது பின்தொடர்ந்தார். காமத்தினால் கிளர்ச்சியூட்டப்பட்டு, மோஹினியின் பின்னால் ஓடிய சிவபெருமானது செயலைப் பார்த்து, அவரது சகாக்களும் மனைவியும் நெளிந்து கொண்டிருந்தனர்.

பகவானது மாயா சக்தியினால் தான் மயக்கப்பட்டதை விந்து வெளியான பின்னர் சிவபெருமான் உணர்ந்தார். சாக்ஷாத் மாயா தேவியான பார்வதியின் கணவர் என்பதால், சிவபெருமானை எந்தவொரு சாதாரண பெண்ணாலும் மயக்க முடியாது. அவர் விஷ்ணுவின் அந்தரங்க மாயை, அதாவது ஆன்மீக மாயையினால் மயக்கப்பட்டார்; சாதாரண பௌதிக மாயையினால் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். இருப்பினும், பகவான் விஷ்ணுவோ, பௌதிக மாயை, அந்தரங்க மாயை ஆகிய இரண்டு மாயைக்கும் எஜமானராகத் திகழ்கிறார்.

இதனை தெளிவாக அறிந்துள்ள சிவபெருமான் மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின்னர் தனது மனைவியிடம் பின்வருமாறு கூறினார்:

“தேவி, எல்லோருக்கும் எஜமானரான முழுமுதற் கடவுளின் மாயையை நீ தற்போது கண்டாய். நான் அவரது முக்கிய விரிவங்கங்களில் ஒருவன் என்றபோதிலும், நானும் அவரது சக்தியினால் மயக்கப்படுகிறேன். அவ்வாறு இருக்கும்பட்சத்தில், மாயையை முழுமையாக சார்ந்திருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?” (ஸ்ரீமத் பாகவதம் 8.12.43)

மேலும், தனது செயலினால் வெட்கப்பட என்ன இருக்கின்றது என்றும், தான் தனது எஜமானரைப் பார்த்துதானே மயங்கியதாகவும் அவர் உணர்ந்தார். இது சிவபெருமானின் சேவக மனப்பான்மையையும், விஷ்ணுவின் உயர்நிலையையும் தெளிவுபடுத்துகிறது.

 

மோஹினி அவதாரம் ஏற்ற பகவானைக் கண்டு சிவபெருமான் மயங்குதல்

விஷ்ணுவின் கருணையால் மட்டுமே முக்தி

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று, முக்திநாதர், “முக்தியளிப்பவர்.” ஆயினும், அவர் கிருஷ்ணரின் கருணையால் அவரது சார்பாகவே அச்செயலைச் செய்கிறார். சுதந்திரமாக முக்தி வழங்க சிவபெருமானால் இயலாது. (பிருஹத் பாகவதாம்ருதம் 1.2.84)

காசியில் இறப்பவர்களுக்கு சிவன் மோக்ஷம் கொடுக்கின்றார் என்பதை பெரும்பாலானோர் அறிவர். ஆனால் அவர் எவ்வாறு மோக்ஷம் கொடுக்கின்றார் என்பதை வெகு சிலரே அறிவர். ஒருவர் காசியில் மரணத்தைத் தழுவுவதற்கு சற்று முன்பு, அவரது காதுகளில், சிவபெருமான் ராம நாமத்தை ஓதுகிறார். அந்த இராம நாமமே ஒருவருக்கு முக்தியைக் கொடுக்கின்றது (பார்க்க, பத்ம புராணம், பாதாள காண்டம், மதுரா-மஹாத்மியம்), சிவபெருமானின் தனிச் சக்தி அல்ல.

இதனை சிவபெருமானே ஒப்புக் கொள்கிறார்: முக்தி-ப்ரதாதா ஸர்வேஷாம் விஷ்ணுர் ஏவ ந ஸம்ஷய:, “விஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் முக்தியளிக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”

சிவபெருமான் ஒரு விஷ்ணு பக்தர்

வழிபாட்டு முறைகளில் சிறந்தது எது என்ற தனது மனைவியின் கேள்விக்கு சிவபெருமான் பின்வரும் பதிலை பத்ம புராணத்தில் வழங்குகிறார்: ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம், “எல்லாவித ஆராதனைகளிலும் சிறந்தது பகவான் விஷ்ணுவை வழிபடுவதே.” மேலும், சாஸ்திரங்களில் பல்வேறு இடங்களில் சிவபெருமான் விஷ்ணுவை வழிபடுவதை நாம் காண்கிறோம்.

சிவபெருமான் எப்போதும் தியானத்தில் இருக்கின்றார். அவரே முழுமுதற் கடவுள் என்றால், அவர் ஏன் தியானத்தில் இருக்க வேண்டும்? இதை பெரும்பாலான மக்கள் யோசிப்பதில்லை. முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரான சிவபெருமான் தனது எஜமானரை எண்ணி எப்போதும் தியானத்தில் இருக்கின்றார் என்பதே உண்மை. தனது இருப்பிற்கு மூல காரணமான ஸங்கர்ஷணரை (விஷ்ணுவை) தான் எப்போதும் தியானிப்பதாக சிவபெருமானே ஸ்ரீமத் பாகவதத்தில் (5.17.16) கூறியுள்ளார்.

எல்லா பக்தர்களிலும் சிவபெருமான் மிகச்சிறந்தவர் என்பதை ஸ்ரீமத் பாகவதம் அறுதியிட்டு கூறுகின்றது:

நிம்ன-கானாம் யதா கங்கா தேவானாம் அச்யுதோ யதா

வைஷ்ணவானாம் யதா ஷம்பு:  பூராணானாம் இதம் ததா 

“எவ்வாறு நதிகளில் கங்கை மிகச்சிறந்ததோ, கடவுள்களில் அச்யுதர் (விஷ்ணு) மிகச்சிறந்தவரோ, வைஷ்ணவர்களில் சிவபெருமான் மிகச்சிறந்தவரோ, அதுபோல புராணங்களில் இந்த ஸ்ரீமத் பாகவதம் மிகச்சிறந்ததாகும்.”

சிவபெருமான் ஒரு மிகச்சிறந்த வைஷ்ணவர் என்பதோடு அல்லாமல், வைஷ்ணவ தர்மத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பன்னிரண்டு மஹாஜனங்களிலும் ஒருவராக உள்ளார். (ஸ்ரீமத் பாகவதம் 6.3.20) 

வைஷ்ணவ சம்பிரதாயங்கள் நான்கு: (1) இலக்ஷ்மி தேவியினால் தொடங்கப்பட்ட ஸ்ரீ சம்பிரதாயம், (2) பிரம்மதேவரால் தொடங்கப்பட்ட பிரம்ம சம்பிரதாயம், (3) சிவபெருமானால் தொடங்கப்பட்ட ருத்ர சம்பிரதாயம், (4) பிரம்மாவின் நான்கு குமாரர்களால் தொடங்கப்பட்ட குமார சம்பிரதாயம். (பத்ம புராணம்) தற்போதைய உலகில் வல்லப சம்பிரதாயம் என்ற பெயரில் அறியப்படும் வைஷ்ணவ சம்பிரதாயம் ருத்ர சம்பிரதாயத்தின் ஒரு பிரிவே.

மிகச்சிறந்த வைஷ்ணவர்களான பிரசேதர்கள் விஷ்ணு பக்தியை சிவபெருமானின் கருணையாலேயே பெற்றனர். அவர்களுக்கு வைஷ்ணவ தர்மத்தைக் கற்றுக் கொடுத்தவர் அவரே. சிவபெருமான் விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமானவர் என்றும், நெருங்கிய நண்பர் என்றும், அவருடன் ஏற்பட்ட சகவாசத்தினால் தாங்களும் விஷ்ணு பக்தர்களாக மாறினோம் என்றும் பிரசேதர்கள் கூறியுள்ளனர். (ஸ்ரீமத் பாகவதம் 4.30.38)

மேலும், கீழ்காணும் பிரபலமான ஸ்லோகத்தில், தான் எப்போதும் ராம நாமத்தை உச்சரித்து அதில் இன்பம் காண்பதாக சிவபெருமான் தனது மனைவியிடம் கூறுகிறார்: 

ராம ராமேதி ராமேதி  ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ர-நாமபிஸ் துல்யம்    ராம-நாம வரானனே

“தேவி! நான் ராம, ராம, ராம என்று திருநாமங்களை உச்சரித்து அந்த அழகிய ஒலியினால் இன்பமடைகிறேன். இராமரின் இந்த திருநாமம் பகவான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு சமமானதாகும்.” (பத்ம புராணம், உத்தர-காண்டம், பிருஹத்-விஷ்ணு-ஸஹஸ்ர-நாம-ஸ்தோத்ரம் 72.335) 

தான் எப்போதும் ராம நாமத்தை உச்சரிப்பதாகசிவபெருமான் பார்வதியிடம் கூறுதல்

சிவபெருமானை நிந்திக்கக் கூடாது

விஷ்ணுவே முழுமுதற் கடவுள், சிவபெருமான் அவருக்கு கீழிருக்கும் அவரது மிகச்சிறந்த பக்தர்–இவற்றை புரிந்துகொள்வதில் கடினம் ஏதும் இருக்கக் கூடாது. இருப்பினும், சிவபெருமானை எக்காரணம் கொண்டும் தரக்குறைவாக நினைத்து இகழ்ந்து பேசுதல் கூடாது. ஜட இயற்கையுடன் தொடர்பு கொண்டுள்ள பகவானின் குண அவதாரமான அவருக்கு நாம் உரிய மரியாதையைச் செலுத்த வேண்டும். பௌதிகச் செயல்களைச் செய்ய விரும்பும் விஷ்ணு, அதனை சிவபெருமானின் மூலமாகச் செய்கிறார். விஷ்ணுவின் செயல் வடிவமாகத் திகழ்வதால், சிவபெருமானுக்கு நாம் உரிய மரியாதையைச் செலுத்துதல் அவசியம். அவர் ஒரே சமயத்தில் விஷ்ணுவுடன் ஒன்றாகவும் வேறுபட்டும் உள்ளார். புகையினால் சூழப்பட்ட நெருப்பினால் முழு வெளிச்சத்தைக் கொடுக்க முடியாது; அதுபோல, அறியாமையுடன் தொடர்பு கொண்டுள்ள சிவபெருமானின் சக்தியானது விஷ்ணுவின் சக்தியுடன் ஒப்பிட இயலாததாகும்.

ஒரு எறும்புக்குகூட மரியாதை கொடுக்கும் வைஷ்ணவர்கள் நிச்சயம் சிவபெருமானுக்கு மரியாதை கொடுக்க தவறுவதில்லை. ஆரம்ப நிலை பக்தர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வத்தை மட்டும் வணங்கி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. பட்டை போட்டுக் கொண்ட அனைவரும் பக்குவமான சைவர்களும் அல்ல, நாமத்தை போட்டுக் கொண்ட அனைவரும் பக்குவமான வைஷ்ணவர்களும் அல்ல.

கூர்ம புராணத்தில் பகவான் விஷ்ணு கூறுவது யாதெனில், “களங்கமற்ற அன்புடன் என்னை வழிபட்டு, அதே சமயத்தில் சிவபெருமானை நிந்திப்பவர்கள் நரகத்திற்குச் செல்வர்.” வைஷ்ணவர்களில் சிலர் சிவபெருமானின் நிலையை உணராது அவரை நிந்திப்பதையும், சைவர்கள் விஷ்ணுவின் உயரிய தன்மையை அறியாது அவரை நிந்திப்பதையும் அன்றாடம் காண்கிறோம். இவையாவும் பக்குவமற்ற அறிவினால் எழுபவை. மற்றுமொரு பக்குவமற்ற நிலையின் வெளிப்பாடே, ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்பது.

அறியாதவன் வாயில் மண்ணா?

சிவபெருமான் சாதாரண ஜீவனுமல்ல, விஷ்ணுவிற்கு சமமானவரும் அல்ல–அவர் ஜீவ தத்துவத்திற்கும் விஷ்ணு தத்துவத்திற்கும் இடைப்பட்டவர். ஹரியையும் சிவனையும் ஒன்றாகக் காண்பதும், வெவ்வேறு துருவங்களாக காண்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஹரி, சிவன் என்று இரு பெயர்கள் இருக்கின்றன; அவர்கள் இருவரும் ஒருவராக இருந்தால் இரு வேறு பெயர்களை ஏன் சாஸ்திரங்கள் உபயோகித்திருக்க வேண்டும்? ஹரி, விஷ்ணு போன்ற பெயர்கள் பகவானின் இதர அவதாரங்களான மத்ஸர், கூர்மர், வராஹர், நரசிம்மர் போன்றவர்களுக்கும் உபயோகிக்கப்படுகின்றன, ஆனால் சிவபெருமானுக்கு உபயோகிக்கப்படுவது இல்லையே. இருவரும் ஒருவரே என்றால் ஏன் பெயர்களை மாற்றி உபயோகிப்பதில்லை?

பெயர் மட்டுமின்றி, ஹரி, சிவன் ஆகிய இருவரின் குணங்கள், ரூபங்கள், செயல்கள், பக்தர்கள், வாழுமிடம் என எல்லாம் வேறுபட்டு இருக்கும்போது, அவர்கள் வேறுபட்டவர்கள் என்பதை உணர்வது எளிதானதாகும்.

 

ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்வதில் உள்ள பிழைகள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் அறிதல் அவ்வளவு எளிதல்ல என்றபோதிலும், அடிப்படை அறிவினை இங்கு வழங்கியுள்ளோம். இதற்கு மேலும், யாரேனும், ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்று கூறினால், அவ்வாறு சொல்பவரின் வாயில்தான் மண்ணை வைக்க வேண்டும்.

 

ஹரியும் சிவனும் ஒன்று, சொல்பவன் வாயில் மண்ணு.

சிவபெருமான் வழங்கிய உயர்ந்த பொக்கிஷம்

யமுனை நதிக்கரையில் சிவபெருமானை பூஜித்த பிராமணர் தனக்கு உயர்ந்த பொக்கிஷம் வேண்டும் என்று வேண்டினார். அந்த பொக்கிஷத்தை பெறுவதற்காக ஸநாதன கோஸ்வாமியை நாடும்படி சிவன் அந்த பிராமணரிடம் அறிவுறுத்தினார். தொட்டதை எல்லாம் தங்கமாக மாற்றும் சிந்தாமணி கல்லை தனது குப்பையிலிருந்து எடுத்துக் கொள்ளும்படி ஸநாதனர் கூறினார். சிந்தாமணி கல் கிடைத்த ஆனந்தத்தில், அதனுடன் பாதி வழி சென்ற பிராமணருக்கு திடீர் ஞானோதயம் பிறந்தது. சிந்தாமணி கல் ஏன் குப்பையில் போடப்பட்டிருந்தது? அவரிடம் இதை விட உயர்ந்த பொக்கிஷம் உண்டோ என்ற ஆவலில் மீண்டும் ஸநாதனரை நாடினார். சிந்தாமணி கல்லை யமுனையில் எறிந்துவிட்டு வரும்படி அவருக்கு கட்டளையிட்ட ஸநாதனர், அதன் பின்னர் அந்த பிராமணருக்கு, ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் என்னும் உயர்ந்த பொக்கிஷத்தைக் கொடுத்தார். ஹரி நாமம் என்னும் உயர்ந்த பொக்கிஷம் சிவபெருமானின் கருணையினால் அந்த பிராமணருக்குக் கிட்டியது.

விஷத்தை அருந்திய சிவபெருமான்

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தைக் குடித்து உலகைக் காத்தவர் சிவபெருமான். அதனால் அவர் விஷ்ணுவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று சிலர் வாதிடலாம்.

ஆனால், அச்யுத, அனந்த, கோவிந்த என்னும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துவிட்டு, அந்த விஷத்தை அவர் அருந்தியதாகவும், அந்த திருநாமங்களே விஷத்தின் பாதிப்பிலிருந்து அவரைக் காப்பாற்றியதாகவும் ஸ்ம்ருதி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. விஷத்தைக் குடிப்பதற்கு முன்பாக கருடனின் மீதமர்ந்த விஷ்ணுவை சிவபெருமான் தியானித்ததாக பிரம்மாண்ட புராணத்திலும் கருட புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. விஷ்ணுவின் கருணையினால் சிவபெருமான் அத்தகு அதிசய செயல்களைச் செய்ய முடிந்தது என்பதை இதிலிருந்து உணரலாம்.

விஷத்திலிருந்து உலகைக் காக்கும்படி சிவபெருமானிடம் விஷ்ணுவே வேண்டியது ஏன் என்ற கேள்வியும் எழலாம். விஷ்ணுவினால் நிச்சயம் அச்செயலைச் செய்திருக்க முடியும். ஆனால் தனது பக்தர்களுக்கு புகழை வழங்க விரும்பும் பகவான், அவ்வப்போது இதுபோன்று செயல்படுவதைக் காணலாம். குருக்ஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனையும், இராவணனுடனான யுத்தத்தில் ஆஞ்சநேயரையும் பகவான் உபயோகிக்கவில்லையா!

கங்கையை சுமக்கும் சிவபெருமான்

சிவபெருமானின் தலையிலிருந்து வருவதால் கங்கை அனைவரையும் தூய்மைப்படுத்துகின்றது என்பதை அறிவோம். பரவலாக அறியப்படாமல் இருக்கும் உண்மை யாதெனில், கங்கையானது ஆதியில் பகவான் விஷ்ணுவுடைய தாமரைப் பாதத்தின் விரலிலிருந்து வந்தது என்பதாகும். பகவானது திருப்பாதங்களிலிருந்து வரும் அந்த நீரானது தன்னைத் தூய்மைப்படுத்தும் என்னும் காரணத்தினால், அதனை சிவபெருமான் தனது தலையில் சுமந்துள்ளார். விஷ்ணுவின் திருப்பாதங்களிலிருந்து வரும் அந்த நீர் சிவபெருமான் உட்பட மூவுலகையும் புனிதப்படுத்துகின்றது. (ஸ்ரீமத் பாகவதம் 1.18.21, 3.28.22)

இராமர் சிவனை வழிபட்டது ஏன்?

இராமேஸ்வரத்தில் இராமர் ஏன் சிவனை வழிபட்டார் என்று கேட்பவர்களும் உண்டு. தனது பக்தர்களின் மீது திருப்தியுற்று, அவர்களின் மீதான அன்பின் காரணத்தினால், சில சமயங்களில் பகவான் தனது பக்தர்களை வழிபடுவது உண்டு. அதை வைத்து பகவானை எடை போடக் கூடாது. விஸ்வாமித்ரர், அகஸ்தியர் உட்பட பல்வேறு ரிஷிகளையும் இராமர் வழிபட்டுள்ளாரே! சமுத்திர தேவனையும் வழிபட்டாரே! கிருஷ்ண அவதாரத்தில் நாரதரையும் குசேலரையும் வழிபட்டுள்ளாரே! பகவான் அவர்களை வழிபட்டதால், அவர்கள் பகவானாகி விட்டார்களா? அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியதால் அர்ஜுனன் பகவானாகி விட்டாரா?

சிவபெருமானை எவ்வாறு வழிபடலாம்?

சிவபெருமானை முழுமுதற் கடவுளாக எண்ணாமல், பரம வைஷ்ணவராக நினைத்து வழிபடுவது பொருத்தமானதாகும். ரகுநாததாஸ கோஸ்வாமியும் ஸநாதன கோஸ்வாமியும் சிவபெருமானை விருந்தாவனத்தில் வழிபட்டுள்ளனர். கோபியர்களும் சிவபெருமானிடம் அனுகூலமான கிருஷ்ண பக்திக்காக பிரார்த்தனை செய்துள்ளனர். ஒருவரின் நோக்கம் கிருஷ்ண பக்தியாக இருக்கும்போது, சிவபெருமானை வழிபடுவதில் தவறு ஏதும் இல்லை.

இருப்பினும், பொதுவாக பௌதிக ஆசைகளுக்காக சிவபெருமானை நாடுபவர்களே அதிகம். மேலும், வைஷ்ணவ தர்மத்தை ஏற்பவர்களில் சிலர் தங்களது முந்தைய வழிபாட்டின் மீதுள்ள ஒருவகையான பற்றுதலினாலும் சிவபெருமானை வழிபடலாம். விஷ்ணுவின் மீதான களங்கமற்ற ஏகாந்த பக்திக்கு இவை தடையாக இருக்கலாம் என்பதால், சிவபெருமானை வழிபடுவது பெரும்பாலும் வைஷ்ணவ சமுதாயத்தில் ஊக்குவிக்கப்படுவதில்லை.

தங்களது பயணத்தின்போது சிவன் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தால், கௌடீய வைஷ்ணவர்கள் அதற்கு மறுப்பதில்லை. அவரை சிறந்த வைஷ்ணவராக எண்ணி மரியாதை செலுத்துவர். சைதன்ய மஹாபிரபு தனது தென்னிந்திய பயணத்தின் போது, ஸ்ரீகாகுலம், ஸ்ரீசைலம், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், விருத்தாசலம் போன்ற சிவ க்ஷேத்திரங்களுக்கும் சென்று சிவபெருமானை தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிவபெருமானின் பாதத்தைப் பார்க்க இயலாத விஷ்ணு

சிவபெருமானின் பாதத்தைக் காண்பதற்காக விஷ்ணு பன்றி ரூபத்தையும், அவரது தலையைக் காண்பதற்காக பிரம்மதேவர் அன்ன ரூபத்தையும் ஏற்று இறுதியில் தோல்வி கண்டதாகவும், அதனால் சிவனே முழுமுதற் கடவுள் என்றும் சிலர் கூறுவதைக் கேட்கிறோம். இதனை எவ்வாறு அணுகுவது?

புராணங்களில் மூன்று வகையுண்டு: ஸாத்வீக புராணங்கள், ராஜஸீக புராணங்கள், மற்றும் தாமஸீக புராணங்கள். புராணங்களுக்கு மத்தியில் ஏதேனும் அபிப்பிராய பேதங்கள் இருப்பின், ஸாத்வீக புராணங்களின் கருத்தினை ஏற்க வேண்டும் என்று மனு தனது ஸ்மிருதி சாஸ்திரத்தில் கூறுகிறார்.

அதன்படி, எல்லா புராணங்களிலும் விஷ்ணுவின் உயர்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ள சமயத்தில், மேற்குறிப்பிட்ட கதையினை நாம் தாமஸீக புராணமான லிங்க புராணத்தில் காண்கிறோம். விஷ்ணுவே பரம்பொருள் என்னும் வேத ஞானத்தின் இறுதி முடிவிற்கும் ஸாத்வீக புராணங்களின் அதே முடிவிற்கும் இக்கதை முரண்பட்டதாக இருப்பதால், இது நிராகரிக்கப்பட வேண்டியதாகும். இதனை ஸ்கந்த புராணத்தில் சிவபெருமானே முருகனிடம் கூறுகிறார்.

எனவே, மேற்குறிப்பிட்ட கதையானது அறியாமையினால் கவரப்பட்டு கிருஷ்ணரின் உயர்தன்மையை அறிய இயலாமல் இருக்கும் சிவபெருமானது பக்தர்களிடம் நம்பிக்கையை அதிகரிப்பதற்கானதாகும். ஏதேனும் ஒரு தேவரின் மீது வைக்கப்படும் நம்பிக்கை அவர்களை படிப்படியாக உயர்த்தும் என்பதால், அந்த நம்பிக்கையை கிருஷ்ணரே பலப்படுத்துகிறார் என்பதை நாம் கீதையில் (7.21) காண்கிறோம்.

குறிப்பு: இக்கட்டுரையின் பல பகுதிகள் திரு. கோகுல சந்திர தாஸ் அவர்கள் அருளிய Who is Supreme? என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives