தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் நான்கு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் ஐந்தாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.
கர்ம யோகம்–கிருஷ்ண உணர்வில் செயல்
நான்காம் அத்தியாயத்தின் சுருக்கம்
பகவத் கீதையின் அழிவற்ற விஞ்ஞானம் பன்னெடுங் காலத்திற்கு முன்பாகவே சூரிய தேவனுக்கு உரைக்கப்பட்டு குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்தது என்றும், தன்னுடைய நண்பனாகவும் பக்தனாகவும் இருப்பதால் அதே ஞானத்தினை தற்போது அர்ஜுனனுக்கு வழங்குவதாகவும் கிருஷ்ணர் கூறினார். தன்னுடைய வயதை ஒத்தவரான கிருஷ்ணர் எவ்வாறு சூரிய தேவனுக்கு உபதேசித்திருக்க முடியும் என்ற அர்ஜுனனின் கேள்விக்கு, தனது சொந்த விருப்பத்தின்படி தான் பல்வேறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக அவர் பதிலளித்தார். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக தான் தோன்றுவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு அவர் தோன்றும்போது, அவருடைய பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை என்பதைப் புரிந்துகொள்பவன் முக்தியடைகிறான்.
கிருஷ்ணரிடம் சரணடைவோர் தங்களது சரணாகதிக்குத் தகுந்த பலனை அடைவர். மக்கள் பெரும்பாலும் இயற்கையின் குணங்களில் இருப்பதால், அக்குணங்களுக்கும் அவர்களது செயல்களுக்கும் ஏற்ப சமுதாயத்தில் நான்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயல்களைப் பற்றி குழம்பியிருந்த அர்ஜுனனிடம், கர்மம், அகர்மம், விகர்மம் ஆகியவற்றைப் பற்றியும், பலதரப்பட்ட யாகங்களைப் பற்றியும், அத்தகு யாகங்களால் அடையப்படும் தெய்வீக ஞானத்தைப் பற்றியும் கிருஷ்ணர் விளக்கினார். தெய்வீக ஞானத்தைப் போன்று உயர்ந்தது ஏதுமில்லை என்று அதன் பெருமையைக் கூறி, அர்ஜுனனைப் போரிடும்படி கிருஷ்ணர் தூண்ட நான்காம் அத்தியாயம் முடிவுற்றது.
நான்காம் அத்தியாயத்திற்கும் ஐந்தாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
ஞானத்தின் தளத்தில் நிலைபெற்ற வனுக்கு கடமைகள் ஏதுமில்லை என்று மூன்றாம் அத்தியாயத்திலும், எல்லாவிதமான யாகச் செயல்களும் ஞானத்தில் முற்றுப்பெறுகின்றன என்று நான்காம் அத்தியாயத்திலும் கூறப்பட்டது. இருப்பினும், நான்காம் அத்தியாயத்தின் இறுதியில், ஞானத்தையும் துறவையும் புகழ்ந்த கிருஷ்ணர், எழுந்து போரிடுவாயாக என்று அர்ஜுனனை அறிவுறுத்தினார். பக்தியுடன் செயலாற்று வதையும் ஞானத்தில் செயலின்மை யையும் ஒரே நேரத்தில் இறைவன் வலியுறுத்தியதால் அர்ஜுனன் சற்று குழம்பிவிட்டான். அதனால், முதலில் செயலைத் துறப்பதையும் பின்னர் பக்தியுடன் செயலாற்றவும் பரிந்துரை செய்துள்ளீர்; இவையிரண்டில் சிறந்த நன்மையைத் தருவது எது என்று அர்ஜுனன் கேள்வி கேட்க, ஐந்தாம் அத்தியாயம் தொடங்குகின்றது.
கர்ம யோகம் துறவறத்திற்கு சமமானது
அர்ஜுனன் குழம்பிய நிலையில் தொடர வேண்டும் என்பதும், அதன் மூலம் துறவும் செயலும் முரண்பட்டதல்ல என்பதை மேலும் வலியுறுத்த முடியும் என்பதும் கிருஷ்ணரின் திட்டம். செயலைத் துறத்தல், பக்தியுடன் செயலாற்றுதல் ஆகிய இரண்டுமே முக்திக்கு ஏற்றவை; இருப்பினும், பக்தியுடன் செயலாற்றுதல் சிறந்ததாகும். ஏனெனில், அஃது எளிமையானதும் பாதுகாப்பானதும் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுமாகும். துறவு மனப்பான்மையுடன் தொடர்ந்து செயலாற்றுதல் ஒருவனது ஞானத்தை பலப்படுத்தும். செயல்களின் பலன்களில் விருப்பு வெறுப்பின்றி இருப்பதால், அவன் நிரந்தர சந்நியாசியாக கருதப்படுகிறான்; பௌதிக பந்தங்களை எளிதில் வென்று முக்தியையும் அடைகிறான். கர்ம யோகத்தையும் ஸாங்கிய யோகத்தையும் சமநிலையில் காண்பவன், உள்ளதை உள்ளபடி காண்பவனாவான். அவ்விரண்டு பாதைகளின் குறிக்கோளும் ஒன்றே: அதாவது, ஜீவன் முழுமுதற் கடவுளின் அம்சம் என்பதை உணர்வதே. நற்செயல்களில் ஈடுபடாத புலன்கள் தீச்செயல்களை நோக்கிச் செல்வது நிச்சயம் என்பதால், புலன்களைக் கொண்டு பக்தித் தொண்டில் ஈடுபடுதல் சிறந்ததாகும். அவ்வாறு ஈடுபடும் சிந்தனையுள்ள மனிதன், தாமதமின்றி பரம்பொருளை அடைய முடியும்.
நிஷ்காம கர்ம யோகம்
மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களில் ஈடுபடுபவன் (நிஷ்காம கர்ம யோகத்தில் ஈடுபடுபவன்) அனைவருக்கும் பிரியமானவன்; செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் பந்தப்படுவதில்லை. பார்த்தல், கேட்டல், நுகர்தல் போன்ற பல்வேறு செயல்களை அவன் செய்தாலும், அவற்றிலிருந்து தான் வேறுபட்டவன் என்பதை அவன் எப்போதும் அறிந்துள்ளான். அவ்வாறு பற்றின்றி தனது கடமைகளைச் செய்து, பலன்களை பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிப்பவன், தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படாமல் உள்ளதோ, அதுபோல பாவ விளைவுகளால் தீண்டப்படாமல் இருப்பான். அத்தகு நபர்கள், தூய்மையடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், உடல், மனம், புத்தி, புலன்கள் என அனைத்தையும் செயல்படுத்துகின்றனர். அவர்கள் பூரண அமைதியையும், அவ்வாறு செயல்பட மறுப்பவர்கள் பௌதிக வாழ்வின் பந்தத்தையும் அடைகின்றனர்.
கர்த்தா யார்?
ஒரு செயலைச் செய்பவன் யார் என்பது குறித்து முந்தைய அத்தியாயங்களில் கூறப்பட்ட கருத்துகளை கிருஷ்ணர் இங்கு தொடர்கிறார். மனதால் ஒருவன் எல்லா செயல்களையும் துறந்துவிடும்போது, அவன் எந்தச் செயலையும் செய்வதில்லை, எந்தச் செயலுக்கும் காரணமாவதில்லை, உடல் என்னும் ஒன்பது கதவுகளைக் கொண்ட நகரில் இன்பமாக வசிக்கின்றான். அவன் செயல்களை உண்டாக்குவதில்லை, செயல்படுமாறு மக்களைத் தூண்டுவதும் இல்லை, செயல்களின் பலன்களையும் உண்டாக்குவதில்லை. இவையனைத்தும் ஜட இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. இருப்பினும், ஜட இயற்கையின் அதிபதியாகத் திகழும் பரம புருஷர் அச்செயல்களுக்குக் காரணமல்ல.
அறியாமையின் காரணத்தினால் ஜீவன் ஒரு செயலைச் செய்வதற்கு விரும்புகிறான். அந்த விருப்பமே செயல்களுக்கு அடிப்படை என்பதால், ஒரு செயல் நடைபெறும்போது, ஜீவன் அச்செயலுக்கு முக்கிய கர்த்தாவாக அமைகிறான். இருப்பினும், அச்செயல் ஜீவனால் மட்டும் செய்யப்பட இயலாது; ஜட இயற்கையின் உதவியும் பரமாத்மாவின் அனுமதியும் அதற்கு அவசியம் என்பதால், ஜட இயற்கை இரண்டாவது கர்த்தா என்றும், பரமாத்மா மூன்றாவது (இறுதி) கர்த்தா என்றும் அறியப்படுகின்றது.
ஜீவன் இறுதி காரணம் அல்ல என்றபோதிலும், செயல்களின் விளைவுகளுக்கு அவனே பொறுப்பாளியாவான். நடுநிலையில் இருந்து அனுமதி கொடுப்பவராகத் திகழும் பரமாத்மா, நல்ல தீய செயல்களுக்குப் பொறுப்பாளி அல்ல. இதைப் புரிந்துகொள்வதே ஞானம், அந்த ஞானத்தின் மூலமாக அறியாமையைக் களைய இயலும்.
பரமாத்மாவை உணர்ந்தவனின் அறிகுறிகள்
மனம், புத்தி, நம்பிக்கை என எல்லாவற்றையும் பரம்பொருளில் நிலைநிறுத்தி, பூரண ஞானத்தினால் களங்கங்களிலிருந்து விடுபடுபவன் முக்திப் பாதையில் முன்னேறுகிறான். அத்தகையோன், எல்லா உயிர்வாழி களிலும் பரமாத்மா வீற்றுள்ளார் என்பதை தனது ஞானத்தினால் உணர்ந்து, பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் என அனைவரையும் சமநோக்கில் காண்கிறான். விரும்பியவற்றை அடைவதால் மகிழ்ச்சியும் விரும்பாத வற்றை அடைவதால் துக்கத்தையும் அவன் அனுபவிப்பதில்லை. ஜடப் புலனின்பங்களால் கவரப்படாமல், தன்னுள் எல்லையற்ற சுகத்தை அனுபவிக்கின்றான். புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பத்திற்கு காரணமாக அமையும் என்பதால், ஆரம்பமும் முடிவும் கொண்ட அத்தகு இன்பங்களில் அறிவுடையோன் மகிழ்ச்சி யடைவதில்லை.
புலன்களின் உந்துதல்களைப் பொறுத்துக் கொண்டு, காமத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவன், இவ்வுலகிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். அவ்வாறு தனக்குள் பார்வையைச் செலுத்தி, தனக்குள் இன்பமாக இருப்பவன், பக்குவமான யோகியாவான். அவன் எல்லா பாவத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைகிறான்.
அஷ்டாங்க யோகப் பயிற்சி
நிஷ்காம கர்ம யோகத்தின் மூலமாக பரமாத்மாவை உணர்வதற் கான பாதையை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணர், பரமாத்மாவை உணர்வதற்கான மற்றொரு பாதையான அஷ்டாங்க யோகத்தைப் பற்றிய சிறு குறிப்பையும் இந்த அத்தியாயத்தில் வழங்குகிறார். ஆறாம் அத்தியாயத்தில் அஷ்டாங்க யோகம் விரிவாக விளக்கப்படும். அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்ய விரும்புபவன், புலன் சார்ந்த விஷயங்களை வெளியில் நிறுத்தி, புருவ மத்தியில் கண்களையும் பார்வையையும் நிறுத்தி, நாசிக்குள் உள் வெளி சுவாசங்களை நிறுத்தி, மனம், புலன், மற்றும் அறிவைக் கட்டுப்படுத்துவதால், ஆசை, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு முக்தியடைகிறான்.
அமைதிக்கான வழி
உலக மக்கள் அனைவரும் எங்கே அமைதி என்று அலைந்து கொண்டுள்ளனர். இங்கே அமைதிக்கான எளிய வழியினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு நல்குகிறார். இவ்வுலகில் கர்ம யோகிகளாலும் ஞான யோகிகளாலும் செய்யப்படும் யாகங்களையும் தவங்களையும் அனுபவிப்பவர் கிருஷ்ணரே; எல்லா லோகங்களையும் தேவர்களையும் ஆள்பவர் கிருஷ்ணரே; எல்லா உயிர்வாழிகளுக்கும் உற்ற நண்பனாக இருப்பவர் கிருஷ்ணரே–இவற்றை எவனொருவன் உண்மையாக அறிகின்றானோ, அவன் அமைதியை அடைய முடியும்.
கர்ம யோகம் என்ற பெயரால் பொதுவாக அறியப்படும் இந்த ஐந்தாம் அத்தியாயம், கிருஷ்ண உணர்வின் நடைமுறை விளக்கமாகும். பகவான் கிருஷ்ணரே உயர்ந்த ஆளுநர் என்பதை அறிந்து, கிருஷ்ண உணர்வுடன் செயலாற்றினால், அச்செயல் திவ்ய ஞானத்திலிருந்து வேறுபட்டதல்ல. பரமாத்மாவைப் பற்றிய அந்த திவ்ய ஞானம், முக்திக்கு வழிவகுப்பதாகும்.