தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் ஐந்து அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் ஆறாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.
தியான யோகம்
ஐந்தாம் அத்தியாயத்தின் சுருக்கம்
பக்தியுடன் செயலாற்றுவதையும் ஞானத்தில் செயலின்மையையும் ஒரே நேரத்தில் கிருஷ்ணர் வலியுறுத்தியதால், குழம்பிய அர்ஜுனன், அவையிரண்டில் சிறந்தது எது என்று வினவினான். இரண்டுமே முக்திக்கு ஏற்றவை என்றும், பக்தியுடன் செயலாற்றுதல் சிறந்தது என்றும் கிருஷ்ணர் பதிலளித்தார். கர்ம யோகத்தையும் ஸாங்கிய யோகத்தையும் சமநிலையில் காண்பவன் உள்ளதை உள்ளபடி காண்பவன். நற்செயல்களில் ஈடுபடாத புலன்கள் தீச்செயல்களில் ஈடுபடப்போவது உறுதி; எனவே, புலன்களைக் கொண்டு பக்தியில் ஈடுபடுபவன் பரம்பொருளை எளிதில் அடையலாம். பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் பந்தப்படுவதில்லை. ஒரு செயல் செய்யப்படுவதற்கு ஜீவன் முதல் காரணமாகவும், ஜட இயற்கை இரண்டாம் காரணமாகவும், பரமாத்மா இறுதி காரணமாகவும் அறியப்படுகின்றது. பரமாத்மாவை உணர்ந்தவன், அனைத்து உயிர்களையும் சமமாகப் பார்க்கின்றான், ஆரம்பமும் முடிவும் கொண்ட புலனின்பத்தில் அவன் நாட்டம் கொள்வதில்லை. தன்னுள் இன்பமாக இருக்கும் அந்த பக்குவமான யோகி, எல்லா பாவத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைகிறான். நிஷ்காம கர்ம யோகத்தினால் அடையப்படும் இப்பலன், அஷ்டாங்க யோகத்தினாலும் அடையப்படலாம். கிருஷ்ணரை முறையாக அறிபவன் அமைதியடைய முடியும்.
ஐந்தாம் அத்தியாயத்திற்கும் ஆறாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
நிஷ்காம கர்ம யோகத்தின் மூலம் எவ்வாறு முக்தியடைவது என்பதை ஐந்தாம் அத்தியாயத்தில் விளக்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அதன் இறுதியில் (5.27-28) அதே முக்தியை எவ்வாறு அஷ்டாங்க யோகத்தின் மூலம் அடைவது என்று மிகவும் சுருக்கமாக உரைத்தார். இந்த ஆறாம் அத்தியாயத்தில் அஷ்டாங்க யோகத்தினை அவர் மேலும் விளக்கமாக எடுத்துரைக்கின்றார்.
அஷ்டாங்க யோகத்தின் இரு நிலைகள்
யோகத்தைப் பயிற்சி செய்வோர் புலனின்ப ஆசைகளிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்பதே முக்கிய கருத்தாகும். யோகத்தின் ஆரம்ப நிலையில் இருப்போர் (யோகாருருக்ஷு என்னும் நிலையில் இருப்போர்) பற்றுதலின்றி தங்களது செயல்களைச் செய்வதால் முன்னேற்றம் பெற முடியும். ஆனால் யோகத்தில் முன்னேறியவனுக்கு (யோகாரூட நிலையில் உள்ளவனுக்கு), செயல்களைத் துறத்தலே வழியாகக் கூறப்படுகிறது. அவ்வாறு உயர்நிலையில் இருப்பவன், பலன்நோக்குச் செயல்களிலோ, புலனுகர்ச்சியிலோ ஈடுபடமாட்டான். அவ்வாறு உயர்வு பெறுவதற்கு மனதின் உதவி அவசியம்; மனதைக் கொண்டு உயர்த்திக்கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; ஆனால் அவ்வாறு செய்யத் தவறுபவனுக்கோ அதுவே மிகப்பெரிய விரோதியாகும். மனதை வென்ற யோகி பரமாத்மாவை அடைந்தவன்; இன்ப துன்பம், குளிர் வெப்பம், மான அவமானம்–அனைத்தும் இவனுக்கு சமமே. அவன் ஞானத்தினாலும் விஞ்ஞானத்தினாலும் பூரண திருப்தியடையும்போது, யோகி என்று அழைக்கப்படுகிறான். கூழாங்கற்களையும் தங்கத்தையும் அவன் சமமாகக் காண்கிறான், நலன் விரும்பிகள், பாசத்துடன் பழகுவோர், நடுநிலையாளர்கள், சமாதானம் செய்வோர், பொறாமையுடையோர், நண்பர்கள், எதிரிகள், சாதுக்கள், பாவிகள் என அனைவரையும் சமமான மனதுடன் நடத்துபவன் மிகவும் முன்னேறியவனாவான்.
தியானம் செய்யும் வழிமுறை
யோகத்தின் அத்தகு உயர்ந்த நிலையை அடைவதற்கு உடல், மனம், மற்றும் ஆத்மாவினை எப்போதும் பரமனின் தொடர்பில் ஈடுபடுத்த வேண்டும்; தனிமையான இடத்தில் தனியே வசித்து, நிலத்தில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரமாகவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். இதன் மேல் அமர்ந்து, மனதையும் புலன்களையும் செயல்களையும் கட்டுப்படுத்தி, யோகத்தைப் பயில வேண்டும். உடல், கழுத்து, மற்றும் தலையை நேராக வைத்து நாசி நுனியை ஸ்திரமாக நோக்க வேண்டும். இவ்வாறாக, கிளர்ச்சியற்ற, அடக்கப்பட்ட மனதோடு, பயமின்றி, பிரம்மசரிய விரதத்துடன், இதயத்தினுள் உள்ள கிருஷ்ணரின் மீது தியானம் செய்து, கிருஷ்ணரையே வாழ்வின் இறுதிக் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
தியானம் என்பது ஏதோவொரு பொருளின் மீதோ நபரின் மீதோ மனதை ஒருமுகப்படுத்துவது அல்ல; மாறாக, இதயத்தினுள் வசிக்கும் கிருஷ்ணரின் அம்சமான பரமாத்மாவின் மீது ஒருமுகப்படுத்துவதாகும். அவ்வாறு பயிற்சி செய்யும் யோகியே இறைவனின் திருநாட்டை அடைய முடியும்.
அதிகமாக அல்லது குறைவாக உண்பவனும் உறங்குபவனும் என்றுமே யோகியாக முடியாது. உண்ணுதல், உறங்குதல், உழைத்தல், கேளிக்கை ஆகிய பழக்கங்களை நெறிப்படுத்தியவன் யோகப் பயிற்சியின் மூலமாக எல்லாத் துன்பங்களையும் களைய முடியும்.
யோகத்தின் பக்குவநிலை குறித்த விளக்கங்கள்
காற்று வீசாத இடத்திலுள்ள தீபம், அசையாமல் இருப்பதைப் போல, மனதை அடக்கிய யோகியும், தனது தியானத்தில் ஸ்திரமாக உள்ளான். ஸமாதி என்றழைக்கப்படும் பக்குவ நிலையில், மனமானது ஜடச் செயல்களிலிருந்து முழுமையாக விலக்கப்படுகிறது. தன்னில் இன்பத்தை அனுபவிக்கும் அவன், உண்மையிலிருந்து என்றும் விலகுவதில்லை, மாபெரும் துன்பங் களாலும் அசைக்கப்படுவதில்லை, உறுதி யுடனும் நம்பிக்கையுடனும் பாதையிலிருந்து பிறழாமல் ஈடுபடுகிறான். இவ்வாறு படிப்படியாக ஸமாதியில் நிலைபெற்று, மனம் தன்னில் மட்டுமே நிலைப்படுத்தப்பட்டு வேறெதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும். மனம் தனது சஞ்சலமான இயற்கையினால் அங்குமிங்கும் சென்றால், அதனை உடனடியாக மீண்டும் இழுத்து கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
சுயக்கட்டுப்பாடுடைய இத்தகு யோகி, இறைவனின் திவ்யமான அன்புத் தொண்டில் பக்குவமான சுகத்தினை அனுபவிக்கின்றான். அவன் கிருஷ்ணரை (பரமாத்மாவை) எல்லா உயிர்களிலும், கிருஷ்ணரில் எல்லா உயிர்களையும் காண்கிறான். கிருஷ்ணரை எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் கிருஷ்ணரிலும் காண்பவன் அவரை ஒருபோதும் இழப்பதில்லை. கிருஷ்ணரும் அவனை ஒருபோதும் இழப்பதில்லை. எல்லா உயிர்களுடைய சுக துக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்பவன் பரம யோகியாகக் கருதப்படுகிறான்.
அமைதியற்ற மனதைக் கட்டுப்படுத்துதல்
கிருஷ்ணரிடமிருந்து அஷ்டாங்க யோக வழிமுறையைக் கேட்ட அர்ஜுனன், அவ்வழிமுறையின்படி மனதைக் கட்டுப்படுத்துதல் தன்னால் இயலாத ஒன்று என்று தெரிவித்தான். நிலையற்றதும் அமைதியற்றதுமான மனதை நடைமுறைக்கு ஒத்துவராததும் தாங்க இயலாததுமான இந்த அஷ்டாங்க யோக முறையினால் கட்டுப்படுத்த இயலாது என்றும், சஞ்சலமும் சக்தியும் மிகுந்த மனதை அடக்குவதைவிட வீசும் காற்றை அடக்குவது எளிதானது என்றும் தெரிவித்தான்.
அமைதியற்ற மனதை அடக்குவது மிகவும் கடினமே என்பதில் சந்தேகமில்லை என்று கிருஷ்ணரும் ஒப்புக் கொண்டார். இருப்பினும் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும் என்று கருத்து தெரிவித்தார். அஃது என்ன பயிற்சி? புனித ஸ்தலத்தில் வசித்தல், பரமாத்மாவின் மீது மனதை ஒருமுகப்படுத்துதல், புலன்களையும் மனதையும் அடக்குதல், பிரம்மசரியத்தை முழுமையாகக் கடைபிடித்தல், தனிமையான இடத்திற்குச் சென்று மழை, வெயில், குளிர் என அனைத்திற்கும் மத்தியில் வாழ்தல் போன்ற கடுமையான சட்டதிட்டங்களை தற்காலத்தில் யாராலும் கடைப்பிடிக்க முடியாது. அர்ஜுனன் ஒரு சாதாரண நபர் அல்ல; தனிச்சிறப்பு வாய்ந்த அர்ஜுனனாலேயே அஷ்டாங்க யோகத்தைப் பின்பற்றி மனதைக் கட்டுப்படுத்த இயலாத பட்சத்தில், இன்றைய கலி காலத்தில் வாழும் நவநாகரிக மனிதர்கள் அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். எனவே, பக்தி யோகத்தின் ஒன்பது வழிமுறைகளைப் பயிற்சி செய்வதே, ஒருவன் மனதைப் படிப்படியாக கட்டுப்படுத்துவதற்கு உதவும் உண்மையான பயிற்சி முறையாகும். மனதைக் கட்டுப்படுத்தி “பக்தி” என்னும் சரியான வழியில் முயல்பவனுக்கு வெற்றி நிச்சயம்.
வெற்றியடையாத யோகியின் நிலை
ஞான யோகம், தியான யோகம், பக்தி யோகம் என்னும் பாதைகளில் ஏதேனும் ஒரு பாதையை நம்பிக்கையுடன் பின்பற்றிய ஆன்மீகவாதி, பிறகு உலக எண்ணங்களினால் அதனை நிறுத்திவிட்டால், அவன் நிச்சயம் பக்குவமடைவதில்லை. அவ்வாறு பாதையிலிருந்து மயங்கிய மனிதன், ஆன்மீகத்திலும் வெற்றியடையாமல், பௌதிகத்திலும் வெற்றியடையாமல், சிதறிய மேகம் போன்று எங்கும் இடமின்றி அழிந்துவிடலாம் என்று நினைத்த அர்ஜுனன், அத்தகு வெற்றியடையாத ஆன்மீகியின் கதி என்ன? என்ற தனது சந்தேகத்தினை கிருஷ்ணரின் முன்வைத்து அதனைத் தீர்க்குமாறு வேண்டினான்.
நற்செயல்களில் ஈடுபட்டவன் இவ்வுலகிலோ பரவுலகிலோ அழிவை அடைவதில்லை, நன்மையைச் செய்தவன் தீமையை அடைவதேயில்லை என்று கிருஷ்ணர் பதிலளித்தார். பௌதிக வாழ்வைத் துறந்து பரம புருஷ பகவானிடம் சரணடைபவனுக்கு நஷ்டமோ இழப்போ இல்லை. ஆன்மீகப் பாதையிலிருந்து விலகியவர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம்: சிறிய முன்னேற்றத்திற்குப் பின் வீழ்ச்சியுற்றோர், நீண்ட கால யோகப் பயிற்சிக்குப் பின் வீழ்ச்சியுற்றோர். சிறிய முன்னேற்றத்திற்குப் பின் வீழ்ச்சியுற்ற யோகிகள், புண்ணிய ஆத்மாக்களின் லோகங்களில் பற்பல வருடங்கள் அனுபவித்து, அதன்பின், நல்லறம் மிக்க பிராமணர்களின் குடும்பத்தில் அல்லது செல்வந்தரின் குடும்பத்தில் பிறக்கின்றனர். அதன் மூலம் வாழ்வின் தேவைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், தனது ஆன்மீகப் பணியில் அவன் எளிதில் கவனம் செலுத்த முடியும். இருப்பினும், இத்தகு குடும்பங்களில் பிறப்போர், தங்களது குலப் பெருமையினாலும் செல்வச் செழிப்பினாலும் மயங்கி, ஆன்மீகப் பயிற்சியை ஏற்றுக் கொள்ள மறுப்பதைக் காண்கிறோம்.
நீண்ட கால யோகப் பயிற்சிக்குப் பின்பு வீழ்ச்சியுற்ற ஆத்மாக்கள், அறிவிற் சிறந்த ஆன்மீகவாதிகளின் (ஆச்சாரியர்கள், கோஸ்வாமிகள் போன்ற உயர்ந்த பக்தர்களின்) குடும்பத்தில் பிறக்கின்றனர், இத்தகு பிறவி நிச்சயமாக மிகவும் அரிதானதாகும். அவ்வாறு பிறவியடைபவன், தனது முந்தைய பிறவியின் திவ்ய உணர்வினை மீண்டும் பெற்று, பூரண வெற்றியை அடைவதற்காக, அந்நிலையிலிருந்து மேலும் முன்னேற்றமடைய முயல் கின்றான். இவன் தனது பூர்வ ஜன்ம உணர்வின் காரணத்தினால், யோகத்தின் மீது இயற்கையாகவே பற்றுதல் கொள்கிறான். அவன் சாஸ்திரங்களின் சடங்குகளில் மயங்காமல், யோகத்தின் மிகவுயர்ந்த பக்குவ நிலையான பூரண கிருஷ்ண உணர்வில் ஆர்வம் காட்டுகின்றான். இதனால் தான், கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிப்பவன், எல்லாவித தவங்களையும் யாகங்களையும் ஏற்கனவே செய்தவ னாகவும், எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடியவனாகவும், எல்லா சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த வனாகவும் கருதப்படுகிறான்.
மிகவுயர்ந்த யோகி
அனைத்து யோக முறைகளையும் இதுவரை விளக்கிய கிருஷ்ணர், பக்தி யோகத்தை விளக்கமாக (ஏழாம் அத்தியாயத்திலிருந்து) எடுத்துரைப்பதற்கு முன்பு, எல்லா யோகிகளையும் ஒப்பிடுகிறார். தவம் புரிபவன், ஞானி மற்றும் பலனை எதிர்பார்த்து செயல்படுபவனைக் காட்டிலும், யோகி சிறந்தவனாக இருப்பதால், யோகியாகும்படி அர்ஜுனன் அறிவுறுத்தப்படுகிறான். யோகியாக வேண்டும் என்றால், எத்தகைய யோகியாக வேண்டும் என்பதையும் கிருஷ்ணர் தெளிவுபடுத்துகிறார். எந்தவொரு யோகி, எப்போதும் கிருஷ்ணரில் நிலைத்து, தன்னுள் அவரை எண்ணி, அவருக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அந்த பக்தி யோகியே யோகத்தில் கிருஷ்ணருடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான். எல்லா யோகிகளிலும் பக்தி யோகியே சிறந்தவன் என்பதை கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தின் இறுதியில் அறுதியிட்டு கூறுகிறார். பக்தி யோகியைவிட அஷ்டாங்க யோகி உயர்ந்தவன் என்று ஆதாரமின்றி உரைக்கும் பல போலி வாதங்களை சந்தித்தவர்கள், கிருஷ்ணரின் உறுதியான அபிப்பிராயத்தால் தெளிவடைவது நிச்சயம்.