தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் ஏழு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் எட்டாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.
ஏழாம் அத்தியாயத்தின் சுருக்கம்
கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்; கிருஷ்ணரை அறிந்தவர் மேலும் அறிவதற்கு ஒன்றும் இல்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய எட்டு பௌதிகப் படைப்புகளும் கிருஷ்ணரின் சக்திகளே, இவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஜீவனும் அவரது சக்தியே. கிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் மூலம், அவரைவிட உயர்ந்த உண்மை வேறெதுவும் இல்லை. அனைத்திலும் அவரே முக்கிய அம்சமாக உள்ளார். அவரது தெய்வீக சக்தியான மாயையை வெல்வது மிகவும் அரிது, ஆனால் அவரிடம் சரணடைவோர் அதனை எளிதில் கடக்கலாம். இருப்பினும், நான்கு வித மக்கள் அவரிடம் சரணடைவதில்லை. அவரிடம் சரணடையும் நான்கு வித நல்லோரில் ஞானியே மிகச் சிறந்தவன். ஆனால் போதிய அறிவற்ற மக்களோ, பௌதிக ஆசைகளில் மயங்கி தேவர்களிடம் சரணடைகின்றனர். அவர்களுக்கான பலன்களை கிருஷ்ணரே வழங்குகிறார் என்றபோதிலும், அவை தற்காலிகமானவை. கிருஷ்ணரின் உருவத்தை மறுத்து, பரம்பொருள் அருவமானது என்று கருதுவோர், தேவர்களை வழிபடுபவர்களைக் காட்டிலும் முட்டாள்கள். அனைத்தையும் அறிந்த கிருஷ்ணரை யாராலும் முழுமையாக அறிய முடியாது. கிருஷ்ணரை முறையாக அறிந்து, அவருக்கு பக்தி செய்பவர்கள், தங்களது வாழ்வின் இறுதியில் அவரிடமே செல்வர்.
ஏழாம் அத்தியாயத்திற்கும் எட்டாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
ஏழாம் அத்தியாயத்தின் இறுதியில் கிருஷ்ணர் கூறிய சில சொற்களை முறையாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு அர்ஜுனன் கேள்விகளை எழுப்புகிறான்.
அர்ஜுனனின் கேள்விகளும் கிருஷ்ணரின் பதில்களும்
“பிரம்மன், அத்யாத்மம், கர்ம, அதிபூதம், அதிதைவம், மற்றும் அதியக்ஞம் என்றால் என்ன? மரண நேரத்தில் உம்மை எவ்வாறு அறிய முடியும்?” என்ற அர்ஜுனனின் கேள்வியுடன் எட்டாம் அத்தியாயம் தொடங்குகிறது. மரண நேரம் குறித்த கேள்வியைத் தவிர இதர கேள்விகளுக்கு இரண்டு ஸ்லோகங்களில் பதிலளித்த பகவான், மரண நேரம் குறித்து விளக்கமாக அத்தியாயத்தின் இறுதி வரை விளக்குகிறார்.
அழிவற்ற உன்னதமான உயிர்வாழி பிரம்மன் என்றும், அதன் நித்தியமான இயற்கை அத்யாத்ம என்றும், ஜீவனின் ஜடவுடலைச் சார்ந்த செயல்கள் கர்ம என்றும் அழைக்கப்படுகின்றது. என்றும் மாறக்கூடிய ஜட இயற்கை அதிபூத என்றும், அனைத்து தேவர்களும் அடங்கிய விஸ்வரூபம் அதிதைவ என்றும், எல்லோர் இதயத்திலும் இருக்கும் பரமாத்மாவான கிருஷ்ணர் அதியக்ஞ என்றும் கூறப்படுகிறது.
மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைத்தல்
மரண நேரத்தில் கிருஷ்ணரை மட்டுமே நினைத்து உடலை விடுபவன், உடனடியாக அவரது ஆன்மீக உலகத்தை அடைகிறான், இதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்வின் இறுதியில் கிருஷ்ணரை நினைக்க விரும்புபவன், அதை தினசரி வாழ்வில் பயிற்சி செய்ய வேண்டும். எவ்வளவு தடைகள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தொடர்ந்து உச்சரிப்பவன், மரண நேரத்தில் அவரை எளிதில் நினைவுகொள்ள முடியும்.
மாறாக, அவன் வேறு எந்த நிலையை நினைத்தாலும், அந்த நிலையை அடைவான். தனது வாழ்நாளில் எத்தகு சிந்தனைகளுடன் விளங்குகின்றானோ, அச்சிந்தனைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மரண நேரத்தில் அவனது சிந்தனையை வடிவமைக்கின்றன. உதாரணமாக, மரண நேரத்தில் ஒருவன் ஒரு மானை நினைத்தால், மறுபிறவியில் அவன் மானாகப் பிறக்க நேரிடும்.
மரணத்திற்குப் பின்பு கிருஷ்ணரை அடைதல் என்னும் உயர்நிலையை அடைய விரும்புவோர், தங்களது கடமைகளைச் செய்யும்போது, எப்போதும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். செயல்களை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, மனதையும் புத்தியையும் அவரில் நிறுத்துபவன், நிச்சயமாக அவரை அடைவான்–இதில் எந்த சந்தேகமும் இல்லை. கிருஷ்ணரை நினைத்தபடி கிருஷ்ணருக்காகப் போர்புரியும்படி அர்ஜுனன் இங்கு தூண்டப்படுகிறான்.
கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக எப்போதும் தியானித்து, மனதை அவரை நினைப்பதில் ஈடுபடுத்தி, அதிலிருந்து சற்றும் பிறழாதவன் நிச்சயமாக அவரை அடைகிறான். அவரது பக்தித் தொண்டில் நேரடியாக ஈடுபடாதவர்கள், அவரை எப்போதும் நினைத்தல் சாத்தியமல்ல என்பதால், யோகம் கலந்த பக்தியின் மூலமாக அவரை நினைக்கும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
யோகம் கலந்த பக்தி
யோகிகளின் இறைவனாக இருக்கும் கிருஷ்ணரை யோகிகள் பத்து வழிகளில் தியானிக்க முடியும். எல்லாமறிந்தவர் (கவிம்), மிகப் பழமையானவர் (புராணம்), எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர் (அனுஷாஸிதாரம்), அணுவைவிடச் சிறியவர் (அணோர் அணியாம்ஸம்), எல்லாவற்றையும் பராமரிப்பவர் (ஸர்வஸ்ய தாதாரம்), பௌதிக நிலைக்கு அப்பாற்பட்டவர், புரிந்துகொள்ள முடியாதவர் (அசிந்திய), உருவமுடையவர் (ரூபம்), சூரியனைப் போன்ற பிரகாசமுடையவர் (ஆதித்ய வர்ணம்), ஜட இயற்கையைக் கடந்த உன்னதமானவர் (தம: பரஸ்தாத்) என்று அவரை தியானிக்க முடியும்.
யோகம் கலந்த பக்தியைப் பயிற்சி செய்பவர்கள், இறக்கும் தருவாயில், உயிர் மூச்சை புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி, யோக பலத்தினால், கிருஷ்ணரை நினைத்தால், அவரை நிச்சயமாக அடைய முடியும். முக்திக்காக முயற்சி செய்யும் இவர்கள், வேதங்களைக் கற்று, ஓம்காரத்தை ஓதி, பிரம்மசர்யத்தைப் பயிற்சி செய்ய வேண்டும். புலன்களின் எல்லா கதவுகளையும் மூடி, மனதை இதயத்திலும் உயிர் மூச்சை தலை உச்சியிலும் நிறுத்தி, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து, கிருஷ்ணரை நினைத்தபடி உடலை விட்டு ஆன்மீக கிரகங்களை அடைய வேண்டும்.
தூய பக்தி
யோகம் கலந்த பக்தியில் ஈடுபடு பவன் அத்தகைய கடினமான வழி முறைகளைப் பின்பற்ற வேண்டிய அதே சமயத்தில், பிறழாத மனதுடன் தூய்மையான பக்தியில் ஈடுபட்டு, எப்போதும் கிருஷ்ணரை நினைப்பவன், அவரை சுலபமாக அடைகிறான். தூய பக்தித் தொண்டில் ஈடுபடும் பக்தன் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை. ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறவோ, பிரம்மஜோதியில் இரண்டறக் கலக்கவோ, மோக்ஷம் பெறவோ அவன் விரும்புவதில்லை. கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களைப் பாதிக்கும் எந்தவொரு பிரச்சனையாலும் தூய பக்தன் பாதிப்பதில்லை. தூய பக்தனால் கிருஷ்ணரை ஒரு கணம்கூட மறக்க முடியாது; கிருஷ்ணராலும் அத்தகு பக்தனை ஒரு கணமும் மறக்க முடியாது.
பக்தி யோகத்தில் நிலைபெற்றிருக்கும் மகாத்மாக்கள், மரணத்திற்குப் பின்பு, துன்பம் நிறைந்த இந்த ஜடவுலகிற்குத் திரும்பி வருவதில்லை. அவர்கள் மிகவுயர்ந்த இருப்பிடமான வைகுண்டத்தை அடைகின்றனர். இந்த ஜடவுலகத்திலுள்ள எல்லா லோகங்களும் தற்காலிகமானவை; பிரம்ம லோகம் முதல் தாழ்ந்த லோகம் வரை எங்கு சென்றாலும், அங்கு நிலையாகத் தங்க முடியாது, மீண்டும் இந்த பூமிக்குத் திரும்ப வேண்டும். ஆனால் கிருஷ்ணரின் இருப்பிடத்தை அடைந்தவன் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை.
ஜடவுலகத்தையும் ஆன்மீக உலகத்தையும் ஒப்பிடுதல்
மனித கணக்கின்படி, பாவங்களற்ற ஸத்ய யுகம் 17,28,000 வருடங்களும், திரேதா யுகம் 12,96,000 வருடங்களும், துவாபர யுகம் 8,64,000 வருடங்களும், இறுதியில் வரும் கலி யுகம் 4,32,000 வருடங்களும் கொண்டதாகும். இந்த நான்கு யுகங்கள் ஆயிரம் முறை சுழலும்போது, அது பிரம்மாவின் ஒரு பகல், அவரது இரவும் அதுபோன்றதே. இவ்வாறு நூறு வருடங்கள் வாழும் பிரம்மா, அதன்பின் இறக்கின்றார். பிரம்மாவின் ஆயுள் மிகவும் நீண்டதாகத் தோன்றினாலும், பிரம்மா உட்பட ஜடவுலகத்தைச் சார்ந்த அனைவரும் பிறப்பு இறப்பிற்கு உட்பட்டவர்களே. பிரம்மாவின் பகல் பொழுதில் அனைத்து ஜீவன்களும் அவ்யக்த (வெளிப்படாத) நிலையிலிருந்து தோன்றுகின்றனர். இரவு வந்தவுடன், அவர்கள் மீண்டும் அவ்யக்தத்துடன் இணைந்துவிடுகின்றனர். மீண்டும் மீண்டும் பிரம்மாவின் பகலில் படைக்கப்பட்டு, இரவில் இவர்கள் அனாதரவாக அழிக்கப்படுகின்றனர். இதுவே ஜடவுலகம்.
தோன்றி மறையும் இந்த ஜட இயற்கைக்கு அப்பால், நித்தியமான தெய்வீக உலகம் உள்ளது. பரமான அந்த உலகம் என்றும் அழிவதில்லை. அவ்வுலகத்திற்குத் தோன்றிய காலம் என்று ஏதுமில்லை, அதற்கு அழிவும் இல்லை, அதுவே வேதாந்திகளின் பரமகதி, அங்கு சென்றவன் மீண்டும் திரும்புவதில்லை; அந்த உயர்ந்த இருப்பிடமே கிருஷ்ணரின் இருப்பிடம்.
கோலோக விருந்தாவனம் என்று அறியப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அந்த உன்னத இருப்பிடம், எல்லா விருப்பங் களையும் பூர்த்தி செய்யக்கூடிய இடமாக வர்ணிக்கப்படுகிறது. சிந்தாமணிக் கற்களால் கட்டப்பட்டு, கற்பக மரங்களும் சுரபிப் பசுக்களும் நிறைந்த அவ்விடத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் இலட்சக்கணக்கான லட்சுமிகளால் சேவை செய்யப்படுகிறார். புல்லாங்குழலை ஏந்தி, கோடானு கோடி மன்மதர்களையும் கவரும் மேக வர்ணம் கொண்ட அழகிய திருமேனியுடன், மஞ்சள் நிற உடையுடுத்தி, தலையில் மயில் தோகையை அணிந்தபடி அற்புதமான லீலைகளில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான தெய்வீக இருப்பிடத்தில் வசிக்கும் அவர், எங்கும் நிறைந்தவராகவும் இருப்பதால், களங்கமற்ற பக்தியினால் அவரை அடைய முடியும்.
கிருஷ்ணரை அடைவதில் தூய பக்தியின் உயர்நிலை
தூய பக்தித் தொண்டில் ஈடுபடாமல், முக்தி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவோரின் நிலையை மேலும் விளக்க விரும்பிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், யோகிகள் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கான உகந்த நேரத்தைப் பற்றி எடுத்துரைக்கத் தொடங்குகிறார். அக்னி தேவனின் ஆதிக்கத்தில், ஒளியில், பகலின் நல்ல நேரத்தில், வளர்பிறை உள்ள இரு வாரங்களில், சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களில், இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகி பரமனை அடைகிறான், மீண்டும் இவ்வுலகிற்கு வருவதில்லை.
ஆனால், புகையிலும், இரவிலும், தேய்பிறையிலும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களிலும், இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகிகள், சந்திர லோகத்தை அடைந்து, பின்னர் மீண்டும் இங்கு திரும்புகின்றனர். ஒளியில் செல்லும் பாதை, இருளில் செல்லும் பாதை ஆகிய இரண்டையும் அறிந்த பக்தர்கள் இவற்றால் ஒருபோதும் குழப்பமடைவதில்லை; ஏனெனில், இப்பாதைகளால் அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
தூய பக்தன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் எந்தவொரு பலனையும் இழப்பதில்லை. அவன் தூய பக்தியில் ஈடுபட்டு, அவையனைத்தையும் தானாகவே பெற்று, இறுதியில் கிருஷ்ணரின் உன்னதமான இருப்பி டத்தை அடைகிறான்.