—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
எளியவன் வலியவனிடமிருந்து சலுகையை எதிர்பார்ப்பது இயல்பு. இதனால்தான், ஏழை செல்வத்தைத் தேடி செல்வந்தனிடம் செல்கிறான், செல்வந்தன் மேலும் செல்வத்தைத் தேடி அரசியல்வாதியிடம் செல்கிறான், அரசியல்வாதி மக்களிடம் ஓட்டுக்காகச் செல்கிறான், யாசகனும் வீடுவீடாக யாசிக்கிறான். இவை மட்டுமின்றி, அன்றாட வாழ்விலும் சலுகைகள் கிடைக்காதா என்று நாம் சின்னஞ்சிறு விஷயங்களிலும் எதிர்பார்க்கிறோம்.
ஆயினும், நாம் எதிர்பார்க்கும் எந்தவொரு சலுகையாக இருந்தாலும், அது நிறைவேற வேண்டுமெனில், அந்த முழுமுதற் கடவுளின் விருப்பத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும். அவரது அனுக்கிரகம் இல்லாவிடில், யாரும் நமக்கு எதையும் வழங்க மாட்டார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்களும் செல்வந்தர்களும் தங்களால் நிகழ்கிறது என்று நினைத்துக்கொள்ளலாம். ஆயினும், அவரால் எதுவும் நிகழ்வதில்லை என்பதையும், கிருஷ்ணரின் அருளாலேயே அனைத்தும் நிகழ்கின்றன என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
செல்வந்தர் ஒருவரை அணுகி கிருஷ்ணரின் தொண்டிற்காக நன்கொடை வேண்டுவதாக எடுத்துக்கொள்வோம். மேலோட்டமான பார்வையில், அவர் உதவி செய்வதுபோலத் தோன்றலாம். ஆனால், கிருஷ்ணர் அனுமதிக்காவிடில், அவரிடமிருந்து நமக்கு எதுவும் கிடைக்காது. கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் வீற்றுள்ளார், அந்தச் செல்வந்தரின் இதயத்திலும் உள்ளார். “இவனுக்கு இவ்வளவு பணம் கொடு,” என்று அவர் கட்டளையிட்டால் மட்டுமே அந்தச் செல்வந்தர் பணத்தைத் தருவார். புத்தக விநியோகத்திலும் கிருஷ்ணரின் கட்டளையினைக் காணலாம். புத்தகத்தை யாரிடம் காண்பிக்கின்றோமோ, அவரது இதயத்திலிருந்து கிருஷ்ணர் அவரைத் தூண்டினால் மட்டுமே அவர் புத்தகத்தை வாங்குவார்.
ஆகவே, கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடும் பக்தன் கிருஷ்ணரை மட்டுமே சார்ந்துள்ளான், எதிர்பார்த்தவை கிடைக்காதபோது அவன் வருந்துவதில்லை. கிருஷ்ணர் நன்கொடை கொடுப்பவருக்கு (அல்லது புத்தகம் வாங்குபவருக்கு) கட்டளையிடவில்லை என்பதை உணர்கிறான். கிருஷ்ணரின் கட்டளையைப் பெறும் பாக்கியம் அவருக்கு இன்னும் கிட்டவில்லை என்பதை எண்ணி, அவரது நலனுக்காக பிரார்த்திக்கிறான். இதுதான் பக்தனின் மனப்பான்மை.
நம்முடைய பக்தித் தொண்டு நேர்மையானதாக இருந்தால், எல்லா உதவிகளையும் கிருஷ்ணர் எப்படியாவது ஏற்பாடு செய்வார். அவரது பெருமைகளைப் பட்டிதொட்டியெங்கும் எடுத்துரைப்பது மட்டுமே நம்முடைய ஒரே பணி. வேண்டிய வசதிகள், சலுகைகள் யாவும் கிருஷ்ணரால் வழங்கப்படுகின்றன. பக்தன் அவரது கருவியாகச் செயல்படும்போது, எதிரில் நிற்பவரின் மனதில் கிருஷ்ணரே ஆர்வத்தைத் தூண்டுவார்.
எனவே, சலுகைகளைக் கொடுப்பது கிருஷ்ணர்தான் என்பதில் பக்தன் திடமான மனவுறுதியுடன் வாழ்கிறான்.