வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக குருவாக ஏற்பதற்கு சமுதாயம் தயாராக உள்ளது. மறுபுறம், ஆன்மீக குருமார்களும் எவ்விதப் பயிற்சியோ பரிட்சையோ இல்லாமல் சீடர்களை ஏற்கின்றனர். இதுதான் இன்றைய நிதர்சனம். ஆனால் வேத இலக்கியங்களோ குரு-சீட இலக்கணங்களை வகுத்து நமக்கு வழிகாட்டியுள்ளது.
ஆயோத தௌம்யர் என்னும் தலைசிறந்த குரு தமது சீடர்களை எவ்வாறு பரிசோதித்தார் என்பதை மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் (அத்தியாயம் 3) காண்கிறோம்.
மடையாய் கிடந்த சீடன்
ஆயோத தௌம்யரின் ஆஷ்ரமம் அடர்ந்த அடவியில் அழகாக அமைந்திருந்தது; அங்கே அவருக்கு ஆருணி, உபமன்யு, வேதன் முதலிய முத்தான சீடர்கள் சேவை செய்து வந்தனர்.
ஒரு நாள் மாமுனிவர் தௌம்யர் ஆருணியை அழைத்து, வயலின் வாய்க்கால் உடைப்பை அடைத்துவிட்டு வரும்படி ஆணையிட்டார். ஆருணி வாடையின் வாட்டலுக்கு வருந்தாது வரப்பு வழியே விரைந்தபோது, வழக்கத்திற்கு மாறாக வாய்க்காலில் வழிந்தோடும் நீர்ப்பெருக்கைக் கண்டு வகையறியாது வருந்தினான். “ஆணையை நிறைவேற்றாதவன்” எனும் அவச்சொல்லுக்கு அஞ்சிய ஆருணி, உடைப்பை அடைப்பதற்காக, சில்லிட்ட நீரையும் சிலிர் காற்றையும் பொருட்படுத்தாது, தானே உடைப்பின் குறுக்கே படுத்துக் கொண்டான். நீரோட்டமும் நின்றுபோனது.
அந்தி சாய்ந்தும் ஆருணியைக் காணாத ஆயோத தௌம்யர், சீடர்கள் சகிதமாய் ஆருணியைத் தேட விரைந்தார். கைகளில் இருந்த பந்தங்கள் அடர்ந்த இருளை அகற்றி விழிகளில் வயல்வெளியை விரித்தாலும், தௌம்யர் தமது அன்பான சீடனைக் காணாது, “பாஞ்சாலத்தின் ஆருணியே! எங்கிருக்கிறாய்?” என்று உரக்க அழைத்தார். குருவின் குரலைக் கேட்டு, உடனடியாக எழுந்த ஆருணி, “நான் இங்கிருக்கிறேன்” என்று கூறி வணங்கி நின்றான். மேலும், அவன் கூறினான், “வாய்க்காலை அடைப்பதற்கு வழியேதும் தெரியாததால், நானே அதன் குறுக்கே படுத்துக் கொண்டேன். நீர் வந்து அழைத்ததும், நீரோட அனுமதித்து, உங்கள் முன் நிற்கின்றேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுவீராக.”
வரப்பாக இருந்து எழுந்து வந்ததால், அன்றிலிருந்து அவருக்கு உத்தாலகன் என்ற சிறப்புப் பெயரை வழங்கிய முனிவர், தனது மாணவனின் செயலை மெச்சிக் கூறினார்: “என்னுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்த உனக்கு நற்பேறு கிட்டட்டும். எல்லா வேதங்களும், தர்ம சாஸ்திரங்களும் உன்னுள் ஒளிரட்டும்.” சீடனுக்கு இவ்வாறு ஆசி வழங்கிய பின்னர், அவர் ஆருணியை விரும்பிய நாட்டிற்குச் செல்ல அனுமதித்தார். உத்தாலக ஆருணியும் பிற்காலத்தில் மிகச்சிறந்த தத்துவ அறிஞரானார்.
மாடு மேய்த்த சீடன்
மற்றொரு நாள், காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் கனையிருளை அகற்றிக் கொண்டிருக்க, தௌம்யர் கட்டான உடலுடன் சிட்டாகச் செயலாற்றும் தமது சீடன் உபமன்யுவை அழைத்து, “மகனே, உன்னை ஆவினம் மேய்க்க ஆணையிடுகிறேன்,” என்றார். வணங்கி விடைபெற்று, ஆவினம் மேய்க்க அடவிக்குப் புறப்பட்டான் உபமன்யு. மாலை சூரியன் அந்நாளுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருந்த வேளையில், அவன் மாடுகளை மேய்த்துத் திரும்பி குருவடி தொழுது நின்றான். கட்டுடல் கலையாத உபமன்யுவைக் கண்ட தௌம்யர், “உனது உடலை எவ்வாறு பார்த்துக்கொள்கிறாய்?” என்று வினவினார். அதற்கு சீடன், “குருவே, நான் யாசகம் பெற்று உடலை கவனித்துக்கொள்கிறேன்” என்றான். அதைக் கேட்ட தௌம்யர், “யாசகத்தினால் கிடைப்பதை எனக்கு அர்ப்பணிக்காமல் பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார்.
உபமன்யு அடுத்த நாளிலிருந்து யாசகம் அனைத்தையும் தனது குருவிற்கே கொடுத்துவிட்டு தொடர்ந்து மாடுகளை மேய்க்கச் சென்று வந்தான். அவன் பகல் முழுவதும் மாடு மேய்த்துவிட்டு, மாலையில் தன் குருவிற்கு மண்டியிட்டு மரியாதை செலுத்தினான். அப்போதும் நல்ல நிலையிலேயே அவன் இருப்பதைக் கண்ட தௌம்யர், “நீ யாசிப்பவை அனைத்தையும் நானே எடுத்துக்கொள்கிறேன், உன்னை எவ்வாறு கவனித்துக்கொள்கிறாய்?” என்று விசாரித்தார். அதற்கு உபமன்யு கூறினான், “நான் இரண்டாவது முறையாக யாசித்து பசியாற்றிக்கொள்கிறேன்.” அதற்கு தௌம்யர் கூறினார், “இது குருவிற்குச் செலுத்தும் மரியாதை அல்லவே. இவ்வாறு செய்வதால், யாசித்து வாழும் மற்றவர்களின் தேவைகளை அழிப்பதோடு, நீ ஒரு பேராசைக்காரன் என்பதையும் நிரூபிக்கிறாய்.”
குருவின் மொழிகளை சிரமேற்ற உபமன்யுவின் உடலில், மறுநாளிலும் மாற்றத்தைக் காணாத குரு, அவனிடம் மீண்டும் விசாரித்தார், “உனது யாசகம் முழுவதையும் நானே எடுத்துக்கொள்கிறேன், நீ இரண்டாவது முறை யாசகத்திற்கும் செல்வதில்லை. இருந்தும் நீ நலம் குன்றாமல் இருக்கிறாயே, எப்படி?” அதற்கு உபமன்யு கூறினான், “பசுக்களின் பாலைக் குடித்து என்னைப் பராமரித்துக்கொள்கிறேன்.” அதைக் கேட்ட தௌம்யர், “என்னுடைய அனுமதி பெறாமல், பால் குடிப்பது முறையல்ல,” என்று கூறி அதையும் தடுத்தார்.
உபமன்யுவின் உடலில் மறுநாளும் மாற்றத்தைக் காணாத தௌம்யர், அதனை விசாரித்தபோது, அவன் கூறினான், “கன்றுக்குட்டிகள் பசுவிடம் பால் குடிக்கும்போது, அவை சிந்தக்கூடிய நுரையை அருந்துகிறேன்.” அதைக் கேட்ட தௌம்யர் கூறினார், “கன்றுகள், உன் மீதான அன்பால் அதிகமான நுரையை வெளியேற்றுவதாகத் தெரிகிறது. இதன் மூலமாக, கன்றுகளின் உணவை நீ குறைக்கின்றாய். மேலும், கன்று உமிழும் பால் அருந்துவதற்கு உகந்ததன்று.”
மறுநாள், புல்லில் படர்ந்திருந்த பனித் துளிகளை சூரியன் தன் வெளிச்சத்தைப் பரப்பி உருக்கத் தொடங்கியபோது, கொட்டிலில் அசைபோட்டுக் கொண்டிருந்த பசுக்களின் கட்டுக்களை அவிழ்த்து, குருவின் வார்த்தைகளை அசைபோட்டவனாய், உபமன்யு அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றான். நேரம் சென்றது, வயிறு வாட்டியது, கண் கட்டியது, வாய் புலர்ந்தது, நடை தளர்ந்தது; உண்பதற்கு வழியறியாத உபமன்யு எருக்கு இலைகளை உண்டான். அதனுடைய நச்சுத் தன்மை அவனது பார்வையைப் பறித்தது, அவன் தட்டுத் தடுமாறி ஒரு கிணற்றுக்குள் விழுந்தான்.
அந்தி சாய்ந்தது, மாடுகள் திரும்பியும் உபமன்யு திரும்பாததை அறிந்த தௌம்யர், மற்றொரு சீடனுடன் காட்டிற்கு விரைந்தார். திரும்பிய திசையெல்லாம் காரிருளை அன்றி வேறொருவரும் இல்லை; தௌம்யர், “உபமன்யு! உபமன்யு! உபமன்யு!” என்று கூவலானார்.
குருவின் குரல் கானகத்தில் எதிரொலிக்க, அதைக் கேட்ட உபமன்யு, “நான் கிணற்றுக்குள் இருக்கிறேன்” என்று பதிலுரைத்தான். “கிணற்றுக்குள் எப்படி விழுந்தாய்?” என்று அவர் விசாரித்தபோது, உபமன்யு நடந்தவற்றைக் கூறினான். அவனைக் கிணற்றிலிருந்து விடுவித்த தௌம்யர், தேவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் அஸ்வினி குமாரர்களை மகிழ்வித்து பார்வையை மீட்கும்படி அறிவுறுத்தினார்.
உபமன்யுவும் ரிக் வேத ஸ்துதிகளால் அஸ்வினி குமாரர்களை பிரார்த்திக்க, அவர்களும் அங்கு தோன்றி அவனுக்கு ஓர் அப்பத்தை வழங்கி உண்ணச் சொன்னார்கள்.
அதற்கு உபமன்யு கூறினான், “தேவர்களே, உங்களது வார்த்தைகள் பொய்த்ததில்லை. இருப்பினும், எனது குருவிற்கு அர்ப்பணிக்காமல் நான் இந்த அப்பத்தை ஏற்க மாட்டேன்.” அவனது உறுதியைச் சோதிக்கும் வண்ணம் அஸ்வினியர்கள் கூறினர், “இதற்கு முன்பு இதே போன்ற அப்பத்தை நாங்கள் உன்னுடைய குருவிற்கும் அளித்தோம், அவர் அதனை தனது குருவிற்கு வழங்காமலேயே ஏற்றுக் கொண்டார். நீயும் உனது குருவின் வழியை பின்பற்றலாம்.”
அப்போது உபமன்யு கூறினான், “என்னை மன்னியுங்கள். எனது குருவிற்கு அளிக்காமல் இந்த அப்பத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” உபமன்யுவின் உறுதியினால் அகமகிழ்ந்த அஸ்வினியர்கள் அவனை ஆசிர்வதித்தனர், “குருவிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பால் நிறைவடைந்தோம். உனது பார்வை உனக்குத் திரும்பட்டும், நீ நற்பேற்றை அடைவாய்.”
பார்வையை மீண்டும் பெற்ற உபமன்யு, தன் குருவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரை வணங்கி நடந்தவற்றைக் கூறினான். உள்ளம் நிறைந்த தௌம்யர், “அஸ்வினியர்கள் கூறியதைப் போலவே, எல்லாச் செல்வத்தையும் வளத்தையும் நீ பெறுவதாகட்டும். அது மட்டுமின்றி, வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் உன்னுள் ஒளிர்வதாக,” என்று கூறி ஆசிர்வதித்து, அவனை விடுவித்து இருப்பிடம் செல்ல அனுமதித்தார். அவரும் மிகச்சிறந்த வேத விற்பன்னரானார்.
மாடுபோல உழைத்த சீடன்
ஒருநாள், இருள் விலகியிராத அதிகாலையில், சில்லென்ற இளங்காற்று மலைச்சரிவில் அமைந்திருந்த தௌம்யரின் தவக்குடிலை தழுவிச் சென்றபோது, அக்னிச் சடங்குகளை முடித்திருந்த ஆயோத தௌம்யர் தமது சீடன் வேதனை அழைத்து, “என்னுடன் எனது இல்லத்திலேயே சில காலம் தங்கியிருந்து அனைத்து அலுவல்களையும் ஆற்றுவாயாக. அஃது உனக்கு நன்மையை நல்கும்,” என்றார். குருவின் வார்த்தையை வரமாய் சிரமேற்ற வேதன், பர்ணசாலையிலேயே தங்கியிருந்து, வெயில், குளிர், பசி, தாகம் முதலானவற்றைப் பொருட்படுத்தாது ஓர் எருதைப் போல உழைத்து அனைத்து சேவைகளையும் ஆற்றினான், அவனது குருவும் மனநிறைவு அடைந்தார். அதன் விளைவாக, வேதன் தனது குருவிடமிருந்து விடைபெற்று வீடு திரும்புகையில், நற்பேற்றையும் உலகளாவிய அறிவையும் பெற்றிருந்தான். மேலும், பிற்காலத்தில் சத்திரியர்களான ஜனமேஜயன், பௌஸ்யன் ஆகியோருக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழ்ந்தான்.
நாம் கற்க வேண்டிய பாடம்
ஆயோத தௌம்யர் தமது சீடர்களை சோதித்துப் பார்த்தே அவர்களுக்கு ஆன்மீக அறிவை வழங்கினார். குரு என்பவர் அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவராகவும், துன்பக் கடலில் வீழ்ந்து தத்தளிப்பவனுக்கு கலங்கரை விளக்காகவும் படகாகவும் இருந்து கரை சேர்க்கின்றார். அவர் முறையான சீடப் பரம்பரையைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். சீடனாக முயலும் ஒவ்வொருவரும் அத்தகு தன்னுணர்வடைந்த ஒருவரை குருவாக ஏற்று அவருக்குப் பணிவுடன் தொண்டாற்றி உண்மையை அறிய முயல வேண்டும் என்று கீதையில் கிருஷ்ணர் (4.34) அறிவுறுத்துகிறார்.
உண்மையான ஆர்வத்துடன் குருவிடம் தஞ்சமடைய விரும்புவோர் அதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நம்முடைய அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில், தீக்ஷை பெற்று சீடர்களாக இருப்பதற்கு சில அடிப்படை விதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டுமென்று ஒவ்வொருவரும் அறிவுறுத்தப்
படுகின்றனர். குருவானவர் விதிமுறைகளை வழங்குகிறார் என்று கூறி, அவரை விலக்கிவிட்டு போலி குருவைத் தேடக் கூடாது. குருவினால் வழங்கப்படும் விதிமுறைகளும் பரிட்சைகளும் நமது உயர்விற்காகவே என்பதை உணர்ந்து, அவற்றைப் பின்பற்றி ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டும்.