ஸ்ரீ-பகவான் உவாச
மய்யாஸக்த-மனா: பார்த-
யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம்
யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு
“புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, என்னிடம் பற்றுதல் கொண்ட மனதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில் யோகத்தைப் பயில்வதன் மூலம் என்னை நீ எவ்வாறு சந்தேகமின்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம் என்பதை இனி கேட்பாயாக.” (பகவத் கீதை 7.1)
யோகத்தின் இறைவன்
யோகம் என்றால் ஆத்மாவையும் பரமாத்மாவையும் அல்லது பரமனையும் சின்னஞ்சிறு உயிர்வாழிகளையும் இணைக்கக்கூடிய தொடர்பு என்று பொருள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அந்த பரமன், முழுமுதற் கடவுள். எனவே, யோகத்தின் இறுதி இலக்காக இருப்பதால், அவருக்கு, யோகேஷ்வரர், யோகத்தின் இறைவன் என்று பெயர்.
பகவத் கீதையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது: “யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கிருக்கின்றாரோ உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கிருக்கின்றானோ, அங்கே வெற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.”
“‘கடவுளே, எங்களது உணவினை தயவுசெய்து வழங்குங்கள்,’ என்று கடவுளிடம் வேண்டுவதைக் காட்டிலும், ‘நான் கடவுளுக்கு உணவளிக்காவிடில் கடவுள் இறந்துவிடுவார்’ என்று நினைக்கக்கூடிய தளம் உயர்ந்ததாகும். இஃது உன்னத அன்பின் பரவசமாகும்.”
மிக உன்னத யோகம்
யோக வழிமுறை விவரிக்கப்படும்போது, கிருஷ்ணரின் பெயர் யோகேஷ்வரர் என்று கூறப்பட்டுள்ளது. யோகத்தின் இறைவனைக் காட்டிலும் யாராலும் சிறந்த யோகியாக இயலாது, கிருஷ்ணரே அந்த இறைவன். யோகத்தில் பல்வேறு வகை உண்டு. அத்தகு யோக வழிமுறையினைப் பின்பற்றுபவர் யோகி எனப்படுகிறார். கிருஷ்ணரே யோகத்தின் பொருளாக, இறுதி இலக்காகப் புரிந்துகொள்ளப்படுகிறார். எனவே, கிருஷ்ண உணர்வு என்றால் யோகத்தின் மிக உன்னத வகையினைப் பயில்வது என்று பொருள்.
இந்த மிக உன்னத யோகமுறையானது கீதையில் கிருஷ்ணரால் தமது மிக நெருங்கிய நண்பனாகிய அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்டது. இந்த யோகத்தின் மீது பற்றுதலை வளர்த்து கொண்டுள்ள நபர்களால் மட்டுமே இதனைப் பயில முடியும் என்று பகவான் ஆரம்பத்திலேயே கூறினார். கிருஷ்ண உணர்வின் இந்த யோக வழிமுறையினை கிருஷ்ணரின் மீது பற்றில்லாத சாதாரண நபர்களால் பயில முடியாது; ஏனெனில், இது வேறுபட்ட யோகமுறை, மிக உன்னத பக்தி யோக முறையாகும்.
கிருஷ்ணருடனான நேரடிப் பற்றுதலும் மறைமுகப் பற்றுதலும்
பக்தி யோகத்திலுள்ள நேரடிப் பற்றுதல் ஐந்து வகைப்படும், மறைமுகப் பற்றுதல் ஏழு வகைப்படும். மறைமுகமான பற்றுதல் பக்தியல்ல. நேரடிப் பற்றுதலே பக்தி எனப்படுகிறது. நேரடி வழிமுறையினால் நீங்கள் கிருஷ்ணரிடம் பற்றுதல் கொண்டால், அது பக்தித் தொண்டு எனப்படுகிறது; மறைமுகமான வழிமுறையினால் நீங்கள் கிருஷ்ணரின் மீது பற்றுதல் கொண்டால், அது பக்தித் தொண்டல்ல. ஆயினும், அதுவும் பற்றுதலே. எடுத்துக்காட்டாக, கிருஷ்ணருடைய மாமனாகிய கம்சனைக் காணலாம்; தனது தங்கையினுடைய மகன்களுள் ஒருவரால் கொல்லப்படுவோம் என்ற எச்சரிக்கை அவனுக்கு இருந்தது. இதனால் அவன் தனது தங்கையுடைய மகன்களை எண்ணி மிகவும் பதற்றமாகவே இருந்தான்.
கிருஷ்ணர் தமது அன்னையின் கருப்பையில் இருந்தபோது, கம்சன் எப்போதும் கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் கிருஷ்ண உணர்வில் இருக்கவில்லை என நீங்கள் கூறலாம், ஆனால் உண்மையில் அவன் கிருஷ்ண உணர்வில்தான் இருந்தான். நேரடியாகவோ அன்பினாலோ அல்ல; அவரை அவன் எதிரியாக நினைத்துக் கொண்டிருந்தான். அவன் ஓர் எதிரியாக கிருஷ்ண உணர்வில் இருந்தான். எனவே, அது பக்தித் தொண்டல்ல. கிருஷ்ணரின் நண்பனாக, கிருஷ்ணரின் சேவகனாக, கிருஷ்ணரின் தாய்தந்தையராக அல்லது அவரது காதலியாக கிருஷ்ண உணர்வில் இருப்பதே பக்தித் தொண்டாகும்.
நீங்கள் கிருஷ்ணரை உங்களது காதலராக நேசிக்கலாம், மகனாக நேசிக்கலாம், நண்பராக நேசிக்கலாம், எஜமானராக நேசிக்கலாம், அல்லது மிக உன்னத பரம்பொருள் என்றும் நேசிக்கலாம். கிருஷ்ணருடனான இந்த ஐந்து வகையான நேரடி உறவுகள் பக்தி என்று அறியப்படுகின்றன. இவை எந்தவொரு பௌதிக இலாபத்திற்காகவும் செய்யப்படுவதில்லை. கடவுளை மகனாக ஏற்கக்கூடிய கருத்து அவரை தந்தையாக ஏற்பதைக் காட்டிலும் உயர்ந்ததாகும். தந்தைக்கும் மகனுக்குமான உறவு
முறையில் மகன் எப்போதும் தந்தையிடமிருந்து ஏதேனும் ஒன்றினை விரும்புகிறான். மகனுடனான தந்தையின் உறவில், தந்தை எப்போதும் தனது மகனுக்கு ஏதேனும் ஒன்றை வழங்க விரும்புகிறார். எனவே, கடவுளாகிய கிருஷ்ணரை மகனாகக் கருதக்கூடிய உறவானது அவரை தந்தையாக நினைப்பதைக் காட்டிலும் உயர்ந்ததாகும். “நான் கடவுளை என்னுடைய தந்தையாக ஏற்றால், எனது தேவைகள் அனைத்தையும் கடவுளிடமிருந்து கேட்டுப் பெறலாம்,” என்று ஒருவன் நினைக்கலாம். ஆனால், நான் கிருஷ்ணருடைய தந்தையாகி விட்டால், அப்போது அவரது குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலிருந்தே எனது பணி அவருக்கு தொண்டாற்றுவது மட்டுமே. தந்தையானவர் குழந்தை பிறந்த மாத்திரத்திலிருந்து சேவை செய்கிறார்; எனவே, வஸுதேவரும் தேவகியும் பெற்றுள்ள உறவுமுறை மிகவுயர்ந்தது.
கிருஷ்ணரின் வளர்ப்புத் தாயாகிய யசோதை, “நான் கிருஷ்ணனுக்கு ஒழுங்காக உணவளிக்காவிடில், அவன் இறந்து விடுவான்,”என்று நினைக்கின்றாள். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதையும் அவரே மூவுலகையும் பராமரிக்கின்றார் என்பதையும் அவள் மறந்துவிடுகிறாள். எல்லா உயிர்வாழிகளின் எல்லாத் தேவைகளையும் அந்த ஒரு பகவானே வழங்குகிறார் என்பதை அவள் மறந்துவிடுகிறாள். அந்த முழுமுதற் கடவுள் யசோதையின் மகனாக இருப்பதால், அவள் நினைக்கின்றாள், “இவனுக்கு நான் நன்றாக உணவளிக்காவிடில், இவன் இறந்துவிடுவான்.” இதுவே அன்பு. தனக்கு முன்பாக ஒரு சிறு குழந்தையாகத் தோன்றியிருப்பவர் பரம புருஷ பகவானே என்பதை அவள் மறந்துவிட்டாள்.
பற்றுதலின் இந்த உறவுமுறை மிக உன்னதமானதாகும். இதைப் புரிந்துகொள்வதற்கு காலமாகும்; ஆயினும், “கடவுளே, எங்களது உணவினை தயவுசெய்து வழங்குங்கள்,” என்று கடவுளிடம் வேண்டுவதைக் காட்டிலும், “நான் கடவுளுக்கு உணவளிக்காவிடில் கடவுள் இறந்துவிடுவார்” என்று நினைக்கக்கூடிய தளம் உயர்ந்ததாகும். இஃது உன்னத அன்பின் பரவசமாகும். இதே போன்ற உறவுமுறை கிருஷ்ணருக்கும் அவரது தலைசிறந்த பக்தையும் தலைசிறந்த காதலியுமாகிய ராதாராணியிடமும் காணப்படுகிறது. யசோதை கிருஷ்ணரின் அன்னையாக அவரை நேசிக்கின்றாள்; சுதாமா கிருஷ்ணரின் நண்பனாக அவரை நேசிக்கின்றான்; அர்ஜுனனும் கிருஷ்ணரின் நண்பனே—இவ்வாறாக, பல்வேறு வகையான கோடிக்கணக்கான நேரடி பக்தர்கள் கிருஷ்ணருக்கு உள்ளனர். எனவே, இங்கு விளக்கப்பட்டுள்ள யோக முறையானது பக்தி யோகத்தை நோக்கி வழிநடத்துகிறது, பக்தி யோகமானது கிருஷ்ணரின் மீது பற்றுதலை வளர்த்துக் கொண்டுள்ள நபர்களால் பயிலப்படுகிறது, மற்றவர்களால் இதைப் பயில முடியாது. அந்தப் பற்றுதலை வளர்த்துக்கொள்ள முடிந்தால், அவன் கடவுளாகிய கிருஷ்ணரை பக்குவமாகப் புரிந்துகொள்வான். அதை விடுத்து, நம்முடைய கொள்கைகள் அல்லது அனுமானத்தின் மூலமாக கடவுளைப் புரிந்துகொள்ள நாம் முயன்றால், அது கடினமான பணியாக இருக்கும்.

பூமி என்னும் இந்த ஒரு கோளிலுள்ள விஷயங்களையே நம் புலன்களால் அறிய முடியாதபோது, இந்தக் குறைபாடுடைய புலன்களை வைத்து ஆன்மீக உலகைப் பற்றியும் பரம புருஷராகிய கிருஷ்ணரைப் பற்றியும் எவ்வாறு அறிய முடியும்?
எல்லைக்கு உட்பட்ட புலன்கள்
கடவுளைப் புரிந்து கொண்டிருப்பதாக நாம் கூறினாலும், அவரை உள்ளது உள்ளபடி நம்மால் சுயமாகப் புரிந்துகொள்ள இயலாது; ஏனெனில், நம்முடைய புலன்கள் எல்லைக்கு உட்பட்டவை, அவரோ எல்லையற்றவர். நம்முடைய எல்லாப் புலன்களும் குறைபாடுள்ளவை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. நம்மால் இந்த பௌதிக உலகத்தைக்கூட பக்குவமாகப் புரிந்துகொள்ள முடியாது. இரவில் நீங்கள் எத்தனையோ கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்க்கின்றீர், ஆனால் அவை யாவை என்பதை அறிய மாட்டீர்கள். மனிதன் ஸ்புட்னிக்கை வைத்துக் கொண்டு பல்வேறு வருடங்களாக நிலவுக்குச் செல்ல முயலும்போதிலும், நிலவு எப்படிப்பட்டது என்பதைக்கூட மனிதர்கள் அறிவதில்லை. பூமி என்னும் இந்த ஒரு கோளைப் பாருங்கள்! இந்தக் கோளத்தில் எத்தனை விதமான தன்மைகள் இருக்கின்றன என்பதைக்கூட நம்மால் அறிய முடிவதில்லை. நீங்கள் கடலுக்குச் சென்றால், வானத்துக்குச் சென்றால், உங்களுடைய கண்ணோட்டம் எல்லைக்கு உட்பட்டது என்பதை உணர முடியும். எனவே, நம்முடைய அறிவு எப்போதும் குறைபாடுடையதாகும். இதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டியது அவசியம். நாம் எல்லா வகையான அறிவையும் பெற்றுள்ளோம் என்று நினைத்தால் அது முட்டாள்
தனமாகும், விஞ்ஞானத்தில் முன்னேற்றமடைந்து விட்டோம் என்று நினைத்தால் அது மற்றொரு வகையான முட்டாள்தனமாகும். அது சாத்தியமல்ல.
நம்முடைய கண்களால் தினமும் காணக்கூடிய பௌதிகப் பொருட்களைக்கூட புரிந்துகொள்வது சாத்தியமல்ல என்னும்பட்சத்தில், ஆன்மீக உலகைப் பற்றியும் பரம புருஷ பகவானாகிய கிருஷ்ணரைப் பற்றியும் என்ன சொல்ல முடியும்? அவர் உன்னத ஆன்மீக வடிவமாவார், அவரை நம்முடைய எல்லைக்குட்பட்ட புலன்களைக் கொண்டு புரிந்துகொள்வது சாத்தியமல்ல. அது சாத்தியமல்ல என்றால், நாம் ஏன் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவதற்கு இவ்வளவு பிரயத்தனம் செய்ய வேண்டும்? இந்த பக்குவமற்ற புலன்களால் அறிய முடியாதா?
கிருஷ்ணரை அறியும் வழிமுறை
இதற்கான விடை என்னவெனில் நீங்கள் அடக்கமுடையவர்களாக மாறினால், கிருஷ்ணரைப் பின்பற்றுவதற்கான ஆன்மீக மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், நீங்கள் கிருஷ்ணருடைய சேவகனாக, நண்பனாக, பெற்றோராக, அல்லது காதலியாக இருந்தால், ஏதோவொரு வகையில் முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்ய விரும்பினால், அப்போது அவரைப் பற்றிய புரிதல் உங்களிடம் துவங்கும்.
உங்களது சேவை நாவிலிருந்து தொடங்குகிறது. எவ்வாறு? நாவை வைத்து நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கலாம், நாவைக் கொண்டு ஆன்மீக உணவாகிய கிருஷ்ண பிரசாதத்தை சுவைக்கலாம். இவ்வாறாக, இந்த வழிமுறையைத் தொடங்குதல் மிகவும் அருமையானதாக இருக்கும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிக்கலாம்; கிருஷ்ணர் தமது கருணையினால் எப்போதெல்லாம் உங்களுக்கு பிரசாதம் வழங்குகிறாரோ, அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் விளைவாக, நீங்கள் பணிவுடையவராக ஆவீர். நாமத்தை உச்சரித்தல், பிரசாதம் ஏற்றல் ஆகிய சேவைகளைத் தொடங்கிய உடனே, கிருஷ்ணர் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
கிருஷ்ணரை அனுமானத்தினால் புரிந்துகொள்ள முடியாது; நம்முடைய புலன்கள் பக்குவமற்றவை என்பதால் அது சாத்தியமல்ல. ஆயினும், சேவை என்னும் வழிமுறையினை நீங்கள் தொடங்கினால், அப்போது அது சாத்தியமாகும், கிருஷ்ணர் எவ்வாறு அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தினாரோ அவ்வாறு “நான் இப்படிப்பட்டவன்” என்று உங்களுக்கும் ஒருநாள் தம்மை வெளிப்படுத்துவார். அர்ஜுனன் பக்தனாகவும் அடக்கமானவனாகவும் இருந்தான், கிருஷ்ணரின் நண்பனாக அவரது நேரடித் தொடர்பில் இருந்தான். எனவே, கிருஷ்ணர் அவனுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
அன்புடனும் பக்தியுடனும் கிருஷ்ணருக்குத் தொண்டாற்றக்கூடிய மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே அவரைப் புரிந்துகொள்ள முடியும், இல்லையேல் இயலாது. பெரிய பண்டிதர்களாகவும் மன அனுமானிகளாகவும் இருப்பவர்களால், அஃது இயலாது; அதே நேரத்தில், கிருஷ்ணரின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தால், ஒரு குழந்தையால்கூட கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, நம்பிக்கையும் பக்தியுமே ஒருவனை தகுதி உடையவனாக மாற்றுகிறது..
நீங்கள் அத்தகு நம்பிக்கையுடனும் சேவை மனப்பான்மையுடனும், கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் கிருஷ்ண உணர்வினை பிரச்சாரம் செய்கிறோம், கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது; நாங்கள் உங்களுடைய நேரத்தையோ எங்களுடைய நேரத்தையோ வீணாக்குவதில்லை. கிருஷ்ண உணர்வு மிகப்பெரிய விஞ்ஞானமாகும், இது மனஎழுச்சியினால் உருவான அனுமானமன்று; பகவத் கீதை, வேதங்கள், பிரம்ம சம்ஹிதை முதலியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள விஞ்ஞானபூர்வமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்; பகவான் சைதன்யர், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், நாரதர், வசிஷ்டர், வியாஸர் மற்றும் பல்வேறு இதர அதிகாரிகளால் ஏற்கப்பட்டதாகும். கிருஷ்ண உணர்வு சாதாரண அன்பை அல்லது பணத்தை உருவாக்கும் தொழிலன்று; இஃது உண்மையானதாகும், இதில் நீங்கள் நேர்மையுடன் தீவிரமாக முயன்றால் உங்களுடைய வாழ்க்கை பக்குவமடையும்.