வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ்
கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்னும் கேள்வி பலரின் மனதில் அவ்வப்போது எழக்கூடிய ஒன்றாகும். கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகர்களுக்கும், கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கும் இடையில் உலகெங்கிலும் அவ்வப்போது வாதங்கள் நடைபெறுகின்றன. அவ்வாதங்களின் இறுதியில், கடவுள் இருக்கின்றார் என்பதே பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றது. எண்ணிலடங்காத அத்தகு வாதங்களின் ஒரு சிறு பகுதி, பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது.
கடவுள் இல்லை என்பதைக் காட்டிலும் கடவுள் இருக்கின்றார் என்பதற்கே சாட்சிகள் அதிகமாக உள்ளன. அதை நிரூபிப்பதற்கான சில தகவல்கள்:
* இவ்வுலகில் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவைக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, தேவைப்பட்டு இல்லாமல் இருப்பதும் ஏதுவும் இல்லை. உதாரணமாக, தாகத்தைத் தணிப்பதற்குத் தண்ணீர் இருக்கின்றது, பலதரப்பட்ட உயிரினங்களின் பசியைத் தணிப்பதற்குப் பலதரப்பட்ட உணவு வகைகள் உள்ளன. இவற்றைக் கூர்ந்து கவனித்தால், இவற்றையெல்லாம் முறையாக நிர்வகிப்பவர் ஒருவர் இருப்பதை நிச்சயம் உணரலாம்.
* ஓர் அழகான ஓவியத்தை பார்த்தால் (உம். மோனாலிஷா ஓவியம்), அந்த ஓவியத்தை வரைந்த ஓவியரை நாம் பாராட்டுவோம். ஆனால் பலதரப்பட்ட வர்ணங்களில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி, பச்சை வர்ணக் கிளி போன்றவற்றிற்கு வர்ணம் தீட்டிய ஓவியர் யார்?
* விண்வெளியில் செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக் கோளைப் பராமரிக்க, பெரிய விஞ்ஞானிகள் குழு இரவு பகலாக உழைக்கின்றது. ஒவ்வொரு செயற்கைக் கோளுக்கும் ஒரு பெரிய கட்டுப்பாட்டு அறை உள்ளது. ஆனால், இயற்கையின் விண்வெளியில் எத்தனையோ கோள்களும் நட்சத்திரங்களும் உள்ளன. அவற்றை வடிவமைத்த விஞ்ஞானி யார், கட்டுப்படுத்துபவர் யார்? இந்த பிரம்மாண்ட சக்திக்குப் பின்னால் இருப்பவர் யார்?
* ஒரு கைக்கடிகாரத்தைப் பார்த்தால், அதனைத் தயாரித்தது
யார் என்பதை நாம் கவனிக்கின்றோம். ஏனெனில், நுணுக்கமான அக்கைக்கடிகாரத்தின் தொழில்நுட்பத்திற்கு உரிமையாளர் என்று ஒருவர் இருத்தல் அவசியம். அப்படியிருக்க, மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பத்தை உடையதும், உலகிலுள்ள எல்லா நூலகங்களின் எல்லா தகவல்களையும் சேகரிக்கும் திறன் படைத்த, சக்திவாய்ந்த, மனித மூளையின் உரிமையாளர் யார்?
* நாம் நடக்கும்பொழுதும், விளை யாடும் பொழுதும், உணவு உண்ணும் பொழுதும், நமது உறுப்புகள் முழுமை யான ஒருங்கிணைப்புடன் செயல்படு கின்றன. அந்த ஒருங்கிணைப்பில் சிறிதளவு குறைந்தாலும் நம்மால் முறை யாகச் செயல்பட முடியாது. முறையான இச்செயல்களுக்குப் பின்னால் இருக்கும் ஒருங்கிணைப்பாளர் யார்?
படைக்கப்பட்ட ஒன்றைப் பார்க்கும்போது அதற்கென்று படைப்பாளி இருப்பதை நாம் உணரலாம். இவ்வுலகில் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. உயர்ந்த நிர்வாகம், பிரம்மாண்ட சக்தி, முழுமையான ஒருங்கிணைப்பு இவையனைத்தும் கடவுளின் இருப்பை நிச்சயம் உணர்த்தக்கூடியவை. எனவே, எல்லாவற்றின் மூல காரணமாக, பரம ஆளுநராக, பரம உரிமையாளராக, பரம அனுபவிப்பாளராக ஒருவர் இருத்தல் அவசியம்–அவரே கடவுள் எனப்படுகிறார். அக்கடவுளைப் பற்றி நாம் அறிந்து கொள்வது எப்படி?
கடவுள் இருக்கின்றார் என்றால், ஏன் பல்வேறு துன்பங்கள்?
(இணையத்தின் மூலம் பெறப்பட்ட சிந்திக்கத் தூண்டும் கதை)
தலைமுடியை வெட்டி தாடியைச் சீர்படுத்த ஒருவன் முடிதிருத்தகத்திற்குச் சென்றான். சவரத் தொழிலாளி தனது பணியை செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினர். பல்வேறு விஷயங்களைப் பேசி வந்த அவர்கள் கடவுளைப் பற்றியும் பேசத் தொடங்கினர். “எனக்குக் கடவுளின் மீது நம்பிக்கைக் கிடையாது,” என்று சவரத் தொழிலாளி கூறினான்.
“ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?” என வாடிக்கையாளர் வினவ, “நீங்கள் தெருவில் நடந்து சென்றால் போதும், கடவுள் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். கடவுள் இருப்பதாக இருந்தால், ஏன் இத்தனை மக்கள் வியாதியுடன் வாழ்ந்து வருகின்றனர்? ஏன் அனாதைக் குழந்தைகள் இருக்கின்றனர்? கடவுள் இருக்கின்றார் என்றால், வலியோ துன்பமோ இருக்கக் கூடாது. அன்புமிக்க கடவுள் இதையெல்லாம் அனுமதிக்கின்றார் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை,” என்று பதில் கிடைத்தது.
ஒரு நிமிடம் யோசித்த வாடிக்கை யாளர், வீண் வாதம் செய்ய வேண்டாம் என்று நினைத்து அமைதி காத்தார். சவரத் தொழிலாளி தனது பணியினை நிறைவேற்ற, வாடிக்கையாளரும் கடையை விட்டு அகன்றார். அவர் கடைக்கு வெளியில் வந்த மாத்திரத்தில், நீண்ட அழுக்கான முடியுடனும் தாடியுடனும் ஒரு மனிதனைக் கண்டார். மீண்டும் கடையினுள் நுழைந்த வாடிக்கையாளர், சவரத் தொழிலாளியிடம், உங்களுக்கு ஒன்று தெரியுமா? சவரத் தொழிலாளிகள் கிடையவே கிடையாது,” என்றார்.
ஆச்சரியமுற்ற சவரத் தொழிலாளி, “எப்படி உங்களால் அவ்வாறு சொல்ல முடியும்? நான் ஒரு சவரத் தொழிலாளி, நான் இங்குதான் உள்ளேன். தற்போதுதான் தங்களுக்குச் சவரம் செய்தேன்.” “இல்லை, சவரத் தொழிலாளிகள் உலகில் இல்லை. அவ்வாறு இருப்பார்களேயானால், வெளியில் உள்ள இந்த மனிதனைப் போன்று நீண்ட அழுக்கான முடியுடனும் தாடியுடனும் யாரும் இருக்க மாட்டார்கள்,” என்று வாடிக்கையாளர் பதிலளித்தார்.
“ஓ, சவரத் தொழிலாளிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்; பிரச்சனை என்ன வெனில், இத்தகு மக்கள் அவர்களை அணுகுவதில்லை.”
அவரது கூற்றினை ஆமோதித்த வாடிக்கையாளர், ஆம். இதுவே கருத்து. கடவுள் இருப்பதும் உண்மையே. பிரச்சனை என்னவெனில், மக்கள் அவரைக் கண்டு கொள்வதில்லை. அதனால் மட்டுமே இவ்வுலகில் வலியும் துன்பமும் அனுபவிக்கப்படுகின்றன,” என்று பதிலளித்தார்.
தொகுப்பாசிரியர் குறிப்பு: இந்த உலகத்தின் இயற்கை துன்பமயமானது என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்கின்றார். துன்பங்கள் நிறைந்த இவ்வுலகினை விடுத்து, ஆனந்தமயமான தன்னுடைய லோகத்திற்கு வருமாறு அவர் நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். அதனை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் முழுமையாக சரணடைவது நம்முடைய பணியாகும்.
மோனாலிஷா ஓவியத்தை வரைந்தவர் இருக்க இயற்கையை வரைந்தவர் யார்? செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்துபவர்கள் இருக்க விண்வெளியை கட்டுப்படுத்துபவர் யார்? கைக்கடிகாரத்தைத் தயாரித்தவர் இருக்க மூளையைத் தயாரித்தவர் யார்?