கடவுளின் அவதார நோக்கம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமிபிரபுபாதர்

பூவுலகிற்கு அப்பாற்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தின் சாரத்தை விளக்குவதற்கான பூவுலகில் தோன்றுகிறார். தர்மம் என்றால் என்ன, அதன் சாரம் என்ன, கிருஷ்ணர் அவதரிப்பதன் நோக்கம் என்ன, மிகவுயர்ந்த பக்தி என்பது யாது போன்றவற்றை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் இவ்வுரையில் தெள்ளத்தெளிவான முறையில் எடுத்துரைக்கின்றார்.

யதா யதா ஹி தர்மஸ்யக்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்யததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

“எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம்

மதம் என்பது நம்பிக்கையல்ல

தர்ம என்னும் சமஸ்கிருத வார்த்தை, ஆங்கிலத்தில் religion (மதம்) என்று மொழிபெயர்க்கப்படுகிறது. religion என்றால், “ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை” என்று அகராதியில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தர்மம் என்னும் சொல், நம்பிக்கையைக் குறிப்பதல்ல. உலகத்தில் ஒரே ஒரு தர்மம் மட்டுமே இருக்க முடியும், ஆனால் பற்பல நம்பிக்கைகள் இருக்கலாம். நீங்கள் ஒரு நம்பிக்கையை ஏற்கலாம், நான் ஒரு நம்பிக்கையை ஏற்கலாம், மற்றொருவர் வேறொரு நம்பிக்கையை ஏற்கலாம். அனைவரின் நம்பிக்கையுமே திருப்திகரமானது என்றால், கிருஷ்ணர் அவதரிப்பதற்கு அவசியம் இல்லையே.

“எனக்கு உங்களுடைய மதம் (நம்பிக்கை) பிடிக்காமல் இருக்கலாம், உங்களுக்கு என்னுடைய மதம் பிடிக்காமல் இருக்கலாம், இருப்பினும் அனைவரின் மதமும் சரியே,” என்று பலர் கூறுகின்றனர். ஆனால், அனைவரின் மதமும் சரியானதே என்றால், கிருஷ்ணர் அதர்மத்தை அழிப்பதற்காகத் தோன்றுவதன் பயன் என்ன? இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மதம் என்பது தனிப்பட்டவர்களின் விருப்பமே என்றால், அதர்மம் என்ற சொல் அர்த்தமற்றதாகிவிடும். உதாரணமாக, மிருகங்களைக் கொல்வதை தங்களது மதம் அனுமதிப்பதாக சிலர் கருதுகின்றனர், வேறு சிலரோ மிருகவதையினை அதர்மமாக நினைக்கின்றனர். இதில் யார் சொல்வது சரி? அதனை கிருஷ்ணர் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

தர்மம் முழுமுதற் கடவுளால் கொடுக்கப்படுவதே

இவ்வாறாக, தர்மம் என்பதை நீங்கள் உண்டாக்க முடியாது–தர்மம் என்பது, நீங்கள் உங்கள் வீட்டில் கற்பனை செய்வதோ, சட்டசபையில் தீர்மானம் இயற்றி உருவாக்கப்படுவதோ அல்ல. மேற்கத்திய நாடுகளில், ஏன் இந்தியாவில்கூட, அரசின் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், அது தர்மமாக அல்லது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், கிருஷ்ணர் அத்தகு தர்மத்தைப் பற்றி இங்கு கூறவில்லை. தர்மம் து ஸாக்ஷாத் பகவத் ப்ரணீதம், முழுமுதற் கடவுளால் அளிக்கப்பட்ட கட்டளைகளே தர்மம் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் சட்டங்கள் அதன் அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்றன. அச்சட்டங்களை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து உருவாக்க முடியாது. உதாரணமாக, வாகனம் ஓட்டுவதற்கான சட்டத்தைப் பொறுத்தவரையில், சில நாடுகளில் “வலதுபுறமாகச் செல்லவும்” என்றும், வேறு சில நாடுகளில், “இடது புறமாகச் செல்லவும்” என்றும் விதி உள்ளது. அப்படியெனில், எது சரி—

வலது புறமா? இடது புறமா? இரண்டும் சரியே, எந்த அரசாங்கம் ஆட்சி புரிகிறதோ அதைப் பொறுத்தே அந்த விதிகள். வலது புறமாகச் செல்லுமாறு அரசாங்கம் கூறினால், நீங்கள் அதை ஏற்றாக வேண்டும். இடது புறமாகச் செல்லுமாறு கூறினால், அதையும் நீங்கள் கடைப்பிடித்தாக வேண்டும். “இல்லை, இல்லை. எங்களது நாட்டில் நாங்கள் இடது புறமாகச் செல்கிறோம், நீங்கள் ஏன் வலது புறமாகச் செல்கிறீர்கள்?” எனக் கேள்விகள் கேட்க முடியாது. அத்தகு வாதம் எடுபடாது. அதுபோல, பகவான் என்ன கூறுகிறாரோ, அதுவே மதத்தின் சட்டம், அதுவே தர்மம். நாம் அதனை கடைப்பிடித்தாக வேண்டும்.

சட்டத்தின்படி நடப்பவர்களைப் பாதுகாத்து, சட்டத்தை மீறுபவர்களை தண்டிப்பது எவ்வாறு அரசாங்கத்தின் கடமையோ, அதுபோலவே, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழிப்பது கிருஷ்ணரின் செயலாகும்.

அரசாங்கம் வழங்கும் விதிகளை நாம் பின்பற்றியாக வேண்டும்; அதுபோலவே கடவுளின் விதிகளும்.

சரணடைவதே தர்மம்

தர்மம் என்பதற்கான மற்றொரு பொருள், “இயற்கையான தன்மை.” உதாரணமாக, சர்க்கரை இனிக்கும் என்பதால், அதன் தர்மம் இனிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். காரமாக இருக்கும் மிளகாயின் தர்மம் காரத்தன்மை. சர்க்கரை காரமாகவும் மிளகாய் இனிப்பாகவும் மாறினால் அஃது அதர்மம். அதுபோல, உயிர்வாழிகளின் தர்மம் (அல்லது இயற்கையான குணம்) சரணடைவதாகும். நீங்கள் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், யாராவது ஒருவரிடம் ஒவ்வொருவரும் சரணடைந்திருப்பதைக் காண முடியும். அது மனைவியாகட்டும், குடும்பமா கட்டும், சமூகமாகட்டும், சங்கமாகட்டும், அரசாங்கமாகட்டும்–ஏதோ ஒன்றிடம் (அல்லது ஒருவரிடம்) நாம் சரணடைந் துள்ளோம். உயிர்வாழியின் தன்மை சரணடைந்திருப்பதே என்பதை நீங்கள் எங்கு சென்றாலும் காண முடியும். சரணடைவதைத் தவிர்க்க உயிர்வாழியினால் இயலாது.

யாரிடம் சரணடைய வேண்டும்?

எனவே, நாம் அனைவரும் சரணடைய வேண்டியவர்களே. ஒருவன் சரியான நபரிடம் சரணடைந்தால், எல்லாம் சரியாக நடக்கும். ஆனால் அவன் தவறான நபரிடம் சரணடைந்தால், பல்வேறு தொல்லைகள் ஏற்படும். யார் அந்த சரியான நபர்? ஜீவேர ஸ்வரூப ஹயா, க்ருஷ்ணேர நித்ய தாஸ, “நாம் அனைவரும் கிருஷ்ணரின் நித்தியமான தொண்டர்கள்” என்று சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார். ஆதலால் நாம் அனைவரும் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும்.

நாம் அனைவருமே சரணடை கிறோம் என்றபோதிலும், நாம் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை என்பது துரதிர்ஷ்டமே. இதுவே நமது நோய். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அந்த நோயைக் குணப்படுத்த முயற்சி செய்து வருகிறது. மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாதபோது, அவர்கள் நிறைய போலிக் கடவுள்களை அல்லது அயோக் கியர்களை உருவாக்கி அவர்களிடம் சரணடைகின்றனர். அதுவே அதர்மம் எனப்படுகிறது. தர்மம் என்றால் கிருஷ்ணரிடம் சரணடைவதே, ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைவதற்குப் பதிலாக, நாய்கள், பூனைகள், என பலவற்றிடம் மக்கள் சரணடைகின்றனர். அஃது அதர்மம் என்பதால், அதனைச் சீர்படுத்த 5000 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணர் அவதரித்தார்.

பெயரளவிலான இந்து தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் தோன்றவில்லை. முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடம் சரணடைவதே உண்மையான மதம். யாரிடம் சரணடைய வேண்டும் என்பதை நாம் தற்போது அறியாமல் உள்ளோம். இதுவே பிரச்சனை. தவறான இடத்தில் சரணடைவதால், முழு உலகமும் குழப்பமான நிலையில் உள்ளது.

எதனிடம் அல்லது யாரிடம் நாம் சரணடைந்துள்ளோமோ அதனை நாம் மாற்றியவண்ணம் உள்ளோம்: “இனிமேல் அந்தக் கட்சி வேண்டாம். இந்தக் கட்சியை அணுகலாம்.” அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்று கட்சிகளை மாற்றிக் கொண்டே இருப்பதால் என்ன இலாபம்? நீங்கள் அந்தக் கட்சியிடம் சரணடைந்தாலும் சரி, இந்தக் கட்சியிடம் சரணடைந்தாலும் சரி, கிருஷ்ணரிடம் சரணடையாத வரை உங்களுக்கு அமைதி கிடைக்காது. இதுதான் கருத்து. ஒன்றைச் சமாளிக்க முடியாமல் மற்றதை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் பிரச்சனை மிகவும் மோசமாகுவதைத்தான் நாம் காண்கிறோம்.

தர்மத்தின் பக்குவநிலை

எனவே, பகவத் கீதையின் இறுதியில் கிருஷ்ணர் பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்,

ஸர்வ தர்மான் பரித்யஜ்யமாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோமோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

“இவ்வெல்லா தர்மங்களையும் கைவிட்டு என்னிடம் சரணடைவாயாக, நான் உன்னைப் பாதுகாப்பேன். பயப்படாதே.” (பகவத் கீதை 18.66) இதுவே தர்மத்தின் பக்குவநிலை. மேலும், ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.6), வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே, “அதோக்ஷஜரிடம் சரணடைவதே முதல் தரமான தர்மம் (அல்லது உயர்ந்த தர்மம்),” என்று கூறப்பட்டுள்ளது. அதோக்ஷஜ என்றால் தெய்வீகமானவர், பரம புருஷர் என்று பொருள்; இது கிருஷ்ணரைக் குறிப்பதாகும். மேலும், ஒருவரது சரணாகதி, அஹைதுகி, அப்ரதிஹதா நிலையில் இருக்க வேண்டும் என்றும் பாகவதம் கூறுகின்றது. அஹைதுகி என்றால், “எவ்வித உள்நோக்கமும் இன்றி” என்று பொருள். “கிருஷ்ணர் எனக்கு இந்தஇந்த விஷயங்களைக் கொடுத்தால், நான் அவரிடம் சரணடைவேன்,” என்று நாம் கூறக் கூடாது. நமது சரணாகதி எவ்வித எதிர்பார்ப்புமின்றி இருக்க வேண்டும். அடுத்ததாக, அப்ரதிஹதா–கிருஷ்ணரிடமான நமது சரணாகதி இடைவிடாது இருத்தல் வேண்டும். பக்தித் தொண்டு தடுத்து நிறுத்தப்பட முடியாதது. நீங்கள் உண்மையாகவே கிருஷ்ணரிடம் சரணடைய விரும்பினால், அதில் எந்தத் தடையும் இருக்க முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சரணடைந்திருக்க முடியும். இவ்வாறு நீங்கள் உங்களது உடல், மனம், மற்றும் ஆத்மாவை முழுவதுமாக கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தால், பூரண திருப்தியை உங்களால் உணர முடியும்–யயாத்மா ஸுப்ரஸீததி. இதுவே கிருஷ்ண உணர்வாகும்.

எந்தவொரு உள்நோக்கமும் இன்றி கிருஷ்ணரிடம் சரணடைவதே தர்மத்தின் பக்குவநிலையாகும்

புலனின்பமே குறிக்கோளாக இருக்கக் கூடாது

துரதிர்ஷ்டவசமாக, கிருஷ்ணரிடம் அவருடைய திருப்திக்காக சரணடை யாமல், நமது திருப்திக்காக வேறு எவரிடமோ சரணடைகிறோம். மந்திரி பதவி, அல்லது வேறு பதவிக்காக நாம் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் சேருகிறோம். அந்தப் பதவிகளே நமது குறிக்கோள்–நாட்டிற்குத் தொண்டு செய்வதல்ல. யாராவது ஒருவர், அல்லது இருவர் அந்த எண்ணத்துடன் கட்சியில் சேரலாம். ஆனால் பொதுவாக நமது இலக்கு, பதவியும் அதிகாரமுமே. எனவே, கட்சிக்கு யாரும் தொண்டாற்றுவதில்லை; தங்களது சொந்தக் குறிக்கோளையே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

கற்றறிந்த பண்டிதர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: காமாதினாம் கதி கதிதா பாலிதா துர்நிதேஷாஸ:, நம்முடைய பெயரளவுத் தொண்டுகள் அனைத்தும் காமம், கோபம், பேராசை, மாயை, போதைப் பொருட்கள், பொறாமை ஆகியவற்றிற்கான தொண்டுகளே. இவையனைத்தும் நமது எஜமானர்கள்; சிலர் காமத்திற்கும், சிலர் கோபத்திற்கும், வேறு சிலர் பேராசைக்கும் மற்றவற்றிற்கும் அடிமைகளாகின்றனர். இவ்வாறாக நாம் நமது புலன்களுக்குத் தொண்டாற்றி வருகிறோம், எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் அல்ல. நாம் அலுவலகத்திற்குச் செல்லும்போது, அங்குள்ள முதலாளிக்காகத் தொண்டு செய்கிறோம்; ஆனால் உண்மையில் நாம் முதலாளிக்குத் தொண்டு செய்வதில்லை, அவர் தரும் பணத்திற்குத்தான் தொண்டு செய்கிறோம். “நாளையிலிருந்து உனக்கு சம்பளம் கிடையாது,” என அவர் கூறினால், “நல்லது. விடைபெறுகிறேன்” என நாம் கூறிவிட்டு வந்து விடுவோம். நாம் பணத்திற்காக உழைக்கிறோம், அந்தப் பணத்தைக் கொண்டு நமது புலன்களைத் திருப்தி செய்யலாம். எனவே, முடிவில் பார்த்தால், நாம் நமது புலன்களுக்காகவே தொண்டு செய்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொருவரும் புலன்களுக்குத் தொண்டு செய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணர் அதனை, தர்மஸ்ய க்லானி:, அதர்மம் என்று கூறுகிறார். நாம் நமது புலன்களுக்குத் தொண்டு செய்தால், அஃது அதர்மம்; மாறாக, கிருஷ்ணரின் புலன்களுக்கு நாம் தொண்டு செய்தால், அதுவே தர்மம் எனப்படுகிறது. இதையே பகவத் கீதையில் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.

உண்மையான பக்தி

பகவத் கீதையில், அர்ஜுனன் நமது நன்மைக்காக ஒரு சாதாரண மனிதனைப் போல நடந்து கொண்டான். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவருக்கு தான் தொண்டு செய்ய வேண்டும் என்றும் அர்ஜுனனுக்குத் தெரியும். அவன் சிறந்த பக்தன், தனது வாழ்நாள் முழுவதையும் கிருஷ்ணரின் தொண்டில் அர்ப்பணித்தவன். பகவத் கீதையின் இறுதியில் கிருஷ்ணரின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட அர்ஜுனன், “சரி, தங்களின் விருப்பப்படி நான் போரிடுகிறேன்” என்று கூறினான். இதுவே உண்மையான பக்தி.

ஸர்வோபாதி வினிர்முக்தம்தத்பரத்வேன நிர்மலம்

ஹ்ருஷிகேன ஹ்ருஷிகேஷஸேவனம் பக்திர் உச்யதே

“பக்தி என்றால், போலியான அடையாளங்களைத் துறந்து, நமது புலன்களைக் கொண்டு பகவான் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வ தாகும்.” “நான் அமெரிக்கன்,” “நான் இந்தியன்,” “நான் பிராமணன்,” “நான் சத்திரியன்” போன்ற போலியான அடையாளங்களிலிருந்து ஒருவன் விடுபட வேண்டும். இந்த அடையாளங்கள் அனைத்தும் உடல் சம்பந்தப்பட்டதால், இவற்றிலிருந்து வெளிவருதல் அவசியம்.

தற்போதைய நடைமுறையில் பார்த்தால், உலகிலுள்ள ஒவ்வொருவரும் உடல்சார்ந்த வாழ்க்கையில், போலி யான அடையாளங்களுடன் அவதிப் பட்டுக் கொண்டுள்ளனர். அந்தப் போலி யான அடையாளங்களின் அடிப்படையில் அவர்கள் பலதரப்பட்ட மதங்களை உருவாக்கியுள்ளனர். அவை உண்மை யான மதங்கள் அல்ல. எனவே, பகவத் கீதையின் இறுதியில் கிருஷ்ணர் கூறுகிறார்: ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ, “எல்லா மதங்களையும் துறந்து என்னிடம் மட்டுமே சரணடைவாயாக.” (பகவத் கீதை 18.66)

பகவத் கீதை இந்து மதத்தையோ கிறிஸ்துவ மதத்தையோ இஸ்லாமிய மதத்தையோ சார்ந்ததல்ல. இஃது எல்லா மதங்களின் சாரம், பரம புருஷ பகவானுக்கும் அவரது அம்சமாகிய ஆத்மாவிற்கும் இடையிலான அன்புப் பரிமாற்றத்தின் விளக்கம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்டு அவரின் தாமரைத் திருவடிகளை சரணடைவதே, பக்தி, அல்லது உண்மையான மதம் எனப்படுகிறது.

அதர்மத்தை அழிக்க கிருஷ்ணர் தோன்றுதல்

இத்தகைய மதத்தை மனித சமுதாயம் எப்போது மறந்து போகிறதோ, அப்போது மக்கள் கடவுளிடம் வெறுப்படைகின்றனர். கடவுளைப் புறக்கணிக்கும் அவர்கள் கடவுளைப் போல தாங்களும் அனுபவிக்கலாம் என்று நினைக்கின்றனர். அதுவே தர்மஸ்ய க்லானி, நெறிதவறிய மதம் எனப்படுகிறது. இயற்கையாகவே நாம் ஒவ்வொருவரும் இந்த பௌதிக உலகத்தை அனுபவிப்பதற்காகவே இங்கு வந்துள்ளோம். ஆனால் பௌதிக இன்பம் என்பது உண்மையான இன்பமல்ல. உண்மையான இன்பம் என்பது ஆன்மீக இன்பத்தை அனுபவிப்பதாகும். அது கிருஷ்ணரிடம் சரணடைவதன் மூலம் பெறப்படுகிறது. தர்மஸ்ய க்லானி: ஏற்படும்போது, அதாவது, நமது ஆன்மீக இயற்கையைப் புரிந்துகொள்வதில் முரண்பாடு ஏற்படும்போது, மக்கள் தங்களது உண்மையான இன்பத்தை மறந்துவிடுகின்றனர். அப்போது கிருஷ்ணர் அவதரித்து தர்மத்தினை சீர்படுத்துகின்றார்

தனக்கு பாலூட்டி விஷம் கொடுக்க முயன்ற பூதனைக்கு, கிருஷ்ணர் தாய்க்கு சமமான உயர்வினைக் கொடுத்தார்.

கிருஷ்ணர் மட்டுமே திருப்தியடைபவர்

பௌதிக சேவையால் ஒருவரையும் திருப்தி செய்ய முடியாது. மகாத்மா காந்தி அவர்கள் தனது ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி இந்தியாவிற்கு சேவை செய்தார். ஆனால் அவரால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியவில்லை: யாரோ ஒருவர் அவரைக் கொன்று விட்டார். பௌதிக சேவையில் ஈடுபட்டு–குடும்பம், சமூகம் அல்லது எதுவானாலும் சரி, அதன் மூலமாக யாரையும் திருப்தி செய்ய இயலாது. “நான் முழுவதுமாக திருப்தியடைந்துவிட்டேன்” என்று எவரும் ஒருபோதும் கூற மாட்டார்கள்.

ஆனால் நாம் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்ய முயற்சி செய்தால், அவர் மிகவும் கருணை வாய்ந்தவர் என்பதால், நமது சிறிய சேவையையும் ஏற்றுக் கொண்டு, நமது வாழ்க்கையை வெற்றிகரமாக்குகிறார். உதாரணத்திற்கு, கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது, பூதனை என்ற அரக்கி அவரைக் கொல்ல முயன்றாள். “நான் எனது மார்பிலே விஷத்தைத் தடவி கிருஷ்ணருக்குப் பாலூட்டினால், அவர் இறந்து விடுவார்”–இதுவே அவளது திட்டம். ஆனால் பாலூட்டிய பூதனையின் உயிரை உறிஞ்சி எடுத்து விட்டார் கிருஷ்ணர். இருப்பினும், அவள் தனக்குப் பாலூட்டியதால் தனது தாயிக்கு சமம் என்று கருதிய அவர், ஆன்மீக உலகில் தனது தாயாக அவளுக்கு உயர்வு கொடுத்தார். அதுவே கிருஷ்ணரின் கருணை.

கருணையே நிரம்பிய அவர், நீங்கள் தவறான நோக்கத்தில் சேவை செய்தாலும் உங்கள் சேவையை ஏற்றுக் கொள்கிறார். பிறகு ஏன் மற்றவர்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும்? நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்தால், மற்ற அனைவருக்கும் (குடும்பம், சமூகம், நாடு என அனைவருக்கும்) சேவை செய்தவராவீர். மரத்தின் வேருக்கு நீரூற்றுவதால் முழு மரமும் செழிப்படைகிறது. அதுபோல அனைத்திற்கும் மூலமாக விளங்கும் கிருஷ்ணருக்கு சேவை செய்வதால் மற்ற அனைவருக்கும் சேவை செய்தவராவீர்.

இந்த தர்மத்தை ஏற்று, கிருஷ்ணரிடம் சரணடைவதால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது உண்மை. கிருஷ்ண உணர்வு, சமுதாயத்திற்கு மிகவும் அவசியத் தேவையாகும். இதனை மக்களுக்கு போதிக்கவே கிருஷ்ணர் அவதரிக்கிறார். (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்: பவதி பாரத) கிருஷ்ணரும் கிருஷ்ணரின் உபதேசங்களும் ஒத்த தன்மையுடையவை. கிருஷ்ணர் தற்போது இல்லையே என எண்ண வேண்டாம், அவர் தனது உபதேசமாகிய பகவத் கீதையின் உருவில் எப்போதும் இருக்கின்றார். அந்த உபதேசங்களை ஏற்று அதன்படி நடப்பதால், நாம் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இதுவே கிருஷ்ண உணர்வாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives