வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
அவ்யக்தோ’யம் அசிந்த்யோ’யம்
அவிகார்யோ’யம் உச்யதே
தஸ்மாத் ஏவம் விதித்வைனம்
நானுஷோசிதம் அர்ஹஸி
“ஆத்மா பார்வைக்கு புலப்படாதவன், சிந்தனைக்கு அப்பாற்பட்டவன், மாற்ற முடியாதவன் என்று கூறப்படுகிறது. இதனை நன்கறிந்து நீ உடலுக்காக வருத்தப்படக் கூடாது.” (பகவத் கீதை 2.25)
சிறியவற்றை விடச் சிறியவர்
ஆத்மா அழிவற்றது (நித்தியமானது) என்பதை பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பலவிதங்களில் எடுத்துரைக்கின்றார். அவ்யக்தோ’யம் அது நமது மழுங்கிய பௌதிகக் கண்களுக்கு புலப்படாது. நாம் அதனைக் காண இயலாது; ஏனெனில், ஆத்மாவின் அளவு முடியின் நுனியில் பத்தாயிரத்தில் ஒரு பகுதியே, ஆத்மா அணுவை விடச் சிறியதாகும்.
ஆத்மா எங்கும் நிறைந்தது, ஸர்வ-கத:. ஆத்மா இப்பௌதிக உலகில் எங்கு வசித்தாலும் அதற்கு உடலும் இதயமும் உண்டு. அதன் இதயத்தில் பகவான் கிருஷ்ணரும் வீற்றிருக்கிறார். ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்தேஷே’ர்ஜுன திஷ்டதி. ஆத்மா, பரமாத்மா இருவரும் இதயத்தில் வசிக்கிறார்கள். அணோர் அணீயான் மஹதோ மஹீயான், கிருஷ்ணரால் பெரியனவற்றை விடப் பெரியதாகவும், சிறியனவற்றை விடச் சிறியதாகவும் ஆக இயலும். அவரே கடவுள்.
கிருஷ்ணர் குழந்தையாக விளையாடியபோது, மண்ணை உண்டார், அவரது தோழர்கள் அன்னை யசோதையிடம், “அன்னையே, உங்கள் மகன் கிருஷ்ணன் மண்ணைத் தின்கிறான்.” என்று புகார் கூறினர்.
அன்னை யசோதை விளக்கம் கேட்டாள்: “கிருஷ்ணா, நான் உனக்கு இனிப்பு கொடுத்தேன்! நீ எதற்காக மண்ணை உண்கிறாய்?”
கிருஷ்ணர் கூறினார், “இல்லை, அம்மா, நான் மண்ணை உண்ணவில்லை.”
இல்லை, நீ மண்ணை உண்டதாக உனது நண்பர்கள் புகார் கூறுகிறார்கள்.”
“இல்லை, காலையில் எங்களுக்குள் சண்டை வந்தது. அவர்கள் எனது எதிரியாகிவிட்டார்கள். எனவே, அவர்கள் இவ்வாறு புகார் கூறுகின்றனர்.”
பிரச்சனையைத் தீர்க்க விரும்பிய அன்னை யசோதை கூறினாள், “சரி, உனது வாயைத் திற, பார்க்கலாம்.”
அப்போது கிருஷ்ணர் தனது திருவாயைத் திறக்க, அதனுள் அண்ட சராசரங்களையும் அன்னை யசோதை கண்டாள்.
அவரே கிருஷ்ணர். அணோர் அணீயான் மஹதோ மஹீயான். கிருஷ்ணர் பிரபஞ்சத்திற்குள் நுழைகிறார், ஆனால் அதேசமயம் இலட்சக்கணக்கான பிரபஞ்சங்கள் அவரது திருவாய்க்குள் உள்ளன. இதுவே, “பெரியனவற்றை விடப் பெரியவர், சிறியனவற்றை விடச் சிறியவர்” என்பதற்கான விளக்கமாகும்.
அப்போதுகூட அன்னை யசோதை கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக நினைக்கவில்லை. இதுவே பிள்ளைப் பாசம்–வாத்ஸல்ய ரஸம் எனப்படுகிறது.
சேவை மனப்பான்மை
பல்வேறு ரஸங்களில் உள்ள தனது பக்தர்களால் கிருஷ்ணர் சேவை செய்யப்படுகிறார். சிலர் அவரது தாஸனாக, சிலர் நண்பனாக, சிலர் தாய் தந்தையராக, சிலர் காதலியாக சேவை செய்கின்றனர். கிருஷ்ணரிடம், பக்தன் இவ்வைந்து முதன்மையான ரஸங்களின் மூலமாக தொடர்புகொள்கிறான்.
இவை தவிர ஏழு இதர ரஸங்களும் உள்ளன. உதாரணமாக, அசுரர்கள் கிருஷ்ணருக்கு விரோதியாக இருக்கலாம், ஆனால் அவர்களும் கிருஷ்ணருக்கு சேவை செய்கின்றனர். அதாவது, சிலர் அவருக்கு இன்பம் அளிப்பதன் மூலம் சேவை செய்கின்றனர். வேறு சிலரோ அவருடன் சண்டையிடுவதன் மூலம் சேவை செய்கின்றனர்.
இவ்வாறாக, பன்னிரண்டு ரஸங்கள் உள்ளன. அகில-ரஸாம்ருத-ஸிந்து, இவ்வுலகில் நாம் உணரும் அனைத்து ரஸங்களும் கிருஷ்ணரிடமிருந்தே வருகின்றன. ஜன்மாத்யஸ்ய யத:, என்று வேதாந்த சூத்திரம் கூறுகிறது. நாம் உணரும் அனைத்தும் கிருஷ்ணரில் உள்ளன. திருடுவதை நல்ல செயலாக நாம் கருதுவதில்லை, ஆனால் கிருஷ்ணர் திருடுகிறார். திருடும் எண்ணம் கிருஷ்ணரில் உள்ளது, அவர் மக்கன்-சோர், வெண்ணெய் திருடன் என்று அறியப்படுகிறார்.
நாம் இவ்வுலகில் செய்யும் எல்லாச் செயல்களும் ஆன்மீக உலகில் கிருஷ்ணருடன் நாம் கொள்ளும் உறவுகளின் திரிபடைந்த பிம்பங்களே. கிருஷ்ணர் எவ்வாறு தனது லீலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்னும் தகவல் அருவவாதிகளிடம் இல்லை; கிருஷ்ணர் எப்பொழுதும் மும்முரமாக இருக்கிறார். அவர் இடையர்குல ஆண்கள், பெண்கள் என அனைவரையும் திருப்தி செய்ய விரும்புகிறார்.
கிருஷ்ணர் ஸநாதன, நித்தியமானவர், அவரது பக்தர்களுடனான அவரது செயல்களும் ஸநாதன, நித்தியமானது. ஆனால் இவை ஸநாதன (நித்திய) உலகில் மட்டுமே சாத்தியம். பௌதிக உலகில் நாம் கிருஷ்ணருடன் நித்திய உறவைப் பெறவியலாது. எனவே, கிருஷ்ணர், நித்திய ஆனந்தத்தையும் நித்திய வாழ்வினையும் பெறுவதற்காக, தமது நித்திய திருநாட்டிற்கு வாருங்கள் என்று கட்டுண்ட ஆத்மாக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் (பகவத் கீதை 15.6), யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம. ஏன் பௌதிக உலகில் அது சாத்தியமாகாதா? சாத்தியமல்ல; ஏனெனில், இந்த உலகின் தன்மை நித்தியமானதல்ல. இது தற்காலிகமானது. இந்த ஜடவுலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் தோன்றிய நாள் என்று ஒன்று உள்ளது. தோன்றிய நாளைக் கொண்ட எதுவும் கண்டிப்பாக மறைவு நாளைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே இந்த ஜடவுலகின் இயற்கையாகும்.
எங்கும் கிருஷ்ணர்
உண்மையில் கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் வீற்றுள்ளார். சூரியன் வானில் வீற்றுள்ளது. சூரியன் மறைந்தவுடன் நமது கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் சூரியன் வானில் இருக்கத்தான் செய்கிறது. அதுபோலவே, கிருஷ்ணர் எப்பொழுதும் இருக்கிறார். அவரைக் காண்பதற்கு நமது கண்களை நாம் தயார் செய்ய வேண்டும். எவ்வாறு?
கிருஷ்ணரிடம் பிரேமை (தூய அன்பு) உடையவர்கள் மட்டுமே அவரைக் காண இயலும். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதற்கான விருப்பம் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. ஆனால் அதை நாம் மாயைக்கு மாற்றம் செய்துவிட்டோம். மாயையிடம் உள்ள அன்பை மீண்டும் கிருஷ்ணரிடம் செலுத்துவதே கிருஷ்ண உணர்வின் ஒட்டுமொத்த செயல்முறையாகும். இதுவே கிருஷ்ண உணர்வைப் பற்றிய எளிமையான விளக்கம். கிருஷ்ணருக்கான அன்பு நம்மிடம் உள்ளது, ஆனால் அந்த அன்பு தற்போது தவறான இடத்தில், மாயையிடம் உள்ளது. கிருஷ்ணரல்லாத ஒன்றிடம், மாயையிடம் அன்பு செலுத்த நாம் முயற்சிக்கிறோம். இது கிருஷ்ணரது மாயையாகும்.
கிருஷ்ணர் கூறுகிறார், மம மாயா, “மாயை என்னுடையது.” உதாரணமாக, மேகம் சூரியனால் உருவாக்கப்படுகிறது, சூரியன் கடலிலிருந்து நீரை ஆவியாக்கி மேகமாக மாற்றுகிறது. ஆயினும், அந்த மேகத்தின் வேலை, சூரியனை நமது கண்களிலிருந்து மறைப்பதே. அதுபோலவே, மாயை சில நேரங்களில் தோன்றி, நமது கண்களை மறைக்கின்றது. மேகத்தினால் எனது கண்களை மறைக்க முடிந்தாலும், சூரியனை மறைக்க இயலாது. அதுபோலவே மாயையால் கிருஷ்ணரைத் தொடவியலாது.
மாயையிலிருந்து விடுதலை
இருப்பினும், நாம் மாயையிலிருந்து விடுபட இயலும். மேகங்களுக்கு அப்பால் விமானம் செல்லும்போது அளவற்ற சூரியஒளியைப் பெறலாம். அதுபோல நாமும் மாயைக்கு அப்பால் செல்லவியலும். மாயையைக் கடந்து கிருஷ்ணரை எப்பொழுதும் காணலாம். இது சாத்தியமே. எவ்வாறு? மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே, கிருஷ்ணரிடம் சரணடைந்தால் போதும், அவர் நம்மை மாயையின் கீழ் இல்லாததுபோல பார்த்துக்கொள்வார். இஃது எளிய வழிமுறை. கிருஷ்ணர் கட்டளையிடுகிறார், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “எல்லா தர்மங்களையும் துறந்து என்னிடம் சரணடைவாயாக.” இதுவே ஸநாதன தர்மமாகும்.
நாம் அனைவரும் கிருஷ்ணரின் சேவகர்களே, ஆனால் செயற்கையாக பௌதிக உலகின் தலைவர்களாவதற்கு முயற்சி செய்கிறோம். எனவே, நாம் இங்கு அனுப்பப்பட்டுள்ளோம். நாட்டின் சட்டத்தை மதிக்காமல், வீண் புரட்சியில் ஈடுபடுபவர்கள் சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள் அல்லது சிறையில் தள்ளப்படுகிறார்கள். அதுபோல கிருஷ்ணரிடம் சரணடையாமல் புரட்சியில் ஈடுபடுபவர்கள் பௌதிக உலகமென்னும் சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்கள் சரணடைய வற்புறுத்தப்படுகிறார்கள்.
“நான் விடுதலை அடைந்துவிட்டேன், நான் முக்தி அடைந்துவிட்டேன், நான் கடவுளாகிவிட்டேன்” என்று முட்டாள்தனமாக நினைக்கும்போது, நீங்கள் மாயையின் வலையில் விழுகிறீர்கள். நீங்கள் எவ்வாறு கடவுளாக முடியும்? என்ன தகுதி உள்ளது? கடவுள் பல்வேறு விஷயங்களைப் படைத்துள்ளார், நீங்கள் எதைப் படைத்துள்ளீர்கள்? கடவுள் பல விஷயங்களைக் காட்டியுள்ளார், நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?
கிருஷ்ணருக்கு சேவை செய்வதே நமக்கும் அவருக்கும் இருக்கும் உறவுமுறையாகும். ஆனால் அந்த நித்திய நிலையினை இப்போது நாம் மறந்துள்ளோம். உயிர்வாழி பூரணத்தின் பகுதி என்பதால், பூரணத்திற்கு சேவை செய்வதே பகுதியின் நிலையாகும். விரலானது எனது உடலின் அங்கமாக இருக்கின்ற காரணத்தினால் எனது கட்டளையை நிறைவேற்றி எனது உடலுக்கு சேவை செய்வதே அதன் பணியாகும். எனது விரல் எனது தலைக்கு அருகில் வர வேண்டும் என்று நான் விரும்பினால், அது வந்துவிடுகிறது. அதுபோன்றே கிருஷ்ணருக்கு சேவை செய்வதே நமது பணி. கிருஷ்ணரிடமிருந்து சுதந்திரம் பெற்று தலைவனாக நாம் விரும்பும்போது, நம்மை நாமே மாயையில் வைக்கின்றோம். பிரேம-விவர்த கூறுகிறது, க்ரிஷ்ண பஹிர்முக ஹஞா போக-வாஞ்சா கரே நிகட-ஸ்த மாயா தாரே ஜபடியா தரே, பௌதிக இயற்கையை உயிர்வாழி ஆள நினைக்கும்போது, உடனடியாக அவன் அதற்கு பலியாகிறான்.
கிருஷ்ணர் நித்தியமானவர். நாமும் நித்தியமான வர்கள், ஆனால் நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்வதை மறந்துவிட்டு, தற்காலிகமான விஷயங்களுக்கு சேவை செய்கிறோம். கிருஷ்ணரின் சேவையில் மீண்டும் ஈடுபடும்போது, மீண்டும் நமது நித்திய நிலையான ஸநாதன நிலைக்கு (நித்தியமாக பகவானுக்கு சேவை செய்யும் நிலைக்கு) திரும்புகிறோம்.
கிருஷ்ணரே அனைவருக்கும் தந்தை
சில நேரங்களில் நாம் ஸ்வர்கம் செல்கிறோம், சில நேரங்களில் நரகம் செல்கிறோம். இந்த பௌதிக உலகில் சில நேரங்களில் பணக்காரனாக, சில நேரங்களில் ஏழையாக, பிராமணனாக, சூத்திரனாக, புலியாக, மரமாக, மாயையின் கட்டுப்பாட்டில் பல்வேறு உடல்களை மாற்றிமாற்றி, கடுமையாக உழைக்கின்றோம். இவ்விதமாக, இப்பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் உயிர்வாழி வாழ்க்கைக்காக போராடுகிறான். கிருஷ்ணர் (பகவத் கீதை 15.7)கூறுகிறார்,
மன: ஸஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி
உயிர்வாழிகள் அனைவரும் கிருஷ்ணரின் அம்சங்களே, ஆனால் மூடத்தனமாக, மனக் கற்பனையில் இப்பௌதிக உலகில் அவர்கள் தலைவனாவதற்காக போராடுகிறார்கள். இதுவே நோயாகும். நமது பணி தொண்டு புரிவதே. கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பாத காரணத்தினால், அல்லது நானே கிருஷ்ணர், என்ற எண்ணத்தை நாம் கொண்டிருக்கின்ற காரணத்தினால், மாயையின் வலையில் உடனடியாக நாம் வைக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு மாயையின் பிடியில் பல்வேறுவிதமான பௌதிக இயற்கையின் குணங்களில் தொடர்புகொள்வதால், நாம் பிறவியெடுக்க வேண்டியுள்ளது. ஸத் அஸத் யோனி ஜன்மஸு. 84,00,000 வகையான உடல்களில் ஒன்றாக–பன்றியாக, நாயாக, மனிதனாக, தேவனாக, மரமாக, செடியாக ஒருவன் ஆகிறான்.
கிருஷ்ணரே அனைவரின் தந்தை. ஒருவன் பிராமணனாக, சூத்திரனாக, மரமாக, புலியாக, பன்றியாக, இந்திரனாக, பிரம்மதேவராக ஆகிறான். இஃது எவ்வாறு சாத்தியம்? ஒருவன் பல்வேறு குணங்களுடன் தொடர்புகொள்வதால் பல்வேறு விதமான உடல்களைப் பெறுகிறான். “இந்த மனிதன் மடிந்துவிட்டான், அனைத்தும் முடிந்துவிட்டது,” என்று கூறுவது மூடத்தனமாகும். இஃது அயோக்கியத்தனம். அவன் அழியவில்லை, அவனது வாழ்க்கை (வேறு பிறவியில்) சென்றுகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் இதனை அறியாத மூடர்களும் அயோக்கியர்களும் தலைவர்களாகவும் பேராசிரியர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் ஆகின்றனர். எப்பொழுதும் அறியாமையை நோக்கி வழிநடத்தப்பட்டும், கிருஷ்ணரின் வெளிப்புறச் சக்தியான மாயையினால் மயக்கப்பட்டிருக்கும் மக்களால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
உடல் சார்ந்த வாழ்க்கை, மகிழ்ச்சியல்ல
பௌதிக உலகமும் கிருஷ்ணரின் சக்தியே. ஆன்மீக சக்தியினால் கவரப்பட வேண்டிய நாம் பௌதிக இயற்கையால் கவரப்படுகிறோம். குழந்தை விளையாட விரும்பும்போது “குழந்தாய், இதுபோன்று விளையாடாதே, அது நல்லதல்ல” என்று தந்தை கூறுகிறார். ஆயினும், குழந்தை அடம்பிடிக்கிறது, அப்போது, “சரி, விளையாடு” என்று தந்தை கூறுகிறார். அதுபோல நாம் இப்பௌதிக உலகிற்கு வருவதையோ பௌதிகப் பொருட்களால் கவரப்படுவதையோ கிருஷ்ணரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த உடல் சார்ந்த வாழ்வில், அமெரிக்கன், இந்தியன், பிராமணன், இது, அது என்று நாம் கவரப்படுகிறோம். இவை எல்லாம் மாயை. உடல்சார்ந்த வாழ்க்கையில் உங்களால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
தனிப்பட்ட ஆத்மாவை உடைக்க முடியாதது, கரைக்க முடியாதது, எரிக்க முடியாதது, உலர்த்த முடியாதது. இந்த உடல் எரிக்கப்பட்டு சாம்பலாகிறது; ஆனால் ஆத்மா அழிவதில்லை. இந்த உடலானது கபம், பித்தம், வாயு என்னும் மூன்று தாதுக்களால் ஆனது. எலும்புகள், சதை, இரத்தம் ஆகியவற்றைக் கொண்ட பையே இந்த உடல். எனவே, “நான் இந்த உடல்” என்று ஒருவன் நினைத்தால், அவன் பசு, அல்லது கழுதை (கோ-கரா) எனப்படுகிறான். உடல்சார்ந்த வாழ்க்கை வாழும் எவரும் மிருகமே.
உண்மையைக் கூறினால், ஒவ்வொருவரும் உடல்சார்ந்த வாழ்க்கையையே வாழ்கின்றனர். எனவே, நவீன நாகரிகம் மனித நாகரிகமல்ல, மிருக நாகரிகமாகும். நான் இந்த உடலல்ல, ஆத்மா என்பதைப் புரிந்துகொள்ளும்போது மனித நாகரிகம் ஆரம்பமாகிறது. நன்றி.