தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ந ஸாது மன்யே யத ஆத்மனோ அஸன்ன் அபி க்லேஷத ஆஸ தேஹ:
“புலனின்பமே வாழ்க்கையின் பிரதான நோக்கம் என்று கருதுபவன் நிச்சயம் பௌதிக வாழ்வில் பைத்தியமாகி பல்வேறு பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். முந்தைய பாவச் செயல்களின் பலனாக தான் அடைந்துள்ள உடல், தற்காலிகமானதாக இருப்பினும், துன்பத்திற்கு காரணம் அதுவே என்பதை அவன் அறிவதில்லை. உண்மையில் உயிர்வாழி பௌதிக உடலை பெற்றிருக்கக் கூடாது; ஆயினும், புலனுகர்ச்சிக்காக அவனுக்கு பௌதிக உடல் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், பிறவிதோறும் உடல்களை மாறி மாறித் தரவல்ல புலனுகர்ச்சி செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது புத்திமானுக்குப் பொருந்தாது என்று நான் கருதுகிறேன்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4)
மக்களின் பைத்தியக்காரத்தனம்
மக்கள் தங்களது புலன்களை திருப்தி செய்வதில் பைத்தியமாக உள்ளனர் என்று பகவான் ரிஷப தேவர் இங்கே கூறுகிறார். ப்ரமத்த: என்றால் மிகவும் பைத்தியமானவன்” என்று பொருள். புலன்களைத் திருப்தி செய்வதில் தீவிரமான வெறியுடன் இருப்பதே மக்களின் பௌதிக நோயாகும். அடுத்ததாக, குருதே விகர்ம, புலன்களை திருப்தி செய்வதற்கான இந்த பற்றுதலால் மக்கள் எந்த வகையான அபத்தமான செயல்களிலும் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளனர். எடுத்துக்காட்டாக, திருடுவது நல்லதல்ல என்று ஒருவனுக்குத் தெரிந்தாலும், புலன்களை திருப்தி செய்யும் ஆசையினால் அவன் திருடுகிறான். திருடினால் தண்டிக்கப்படுவேன் என்பதை அறிந்தும், அவன் பாவச் செயல்களைச் செய்கிறான். இது பைத்தியக்காரத்தனம்.
புலன்களை திருப்தி செய்வதில் நாம் இவ்வளவு மும்முரமாக உழைக்க வேண்டுமா என்பதை நாம் தத்துவ ரீதியில் யோசித்துப் பார்க்க வேண்டும். புலன்கள் என்றால் என்ன? புலன்கள் இந்த உடலின் ஒரு பகுதியாகும். இந்த உடல் என்னுடையதாக இருந்தால், என்னுடைய புலன்களை திருப்தி செய்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. ஆனால் இந்த உடலை நான் எனது தாய் தந்தையிடமிருந்து பெற்றேன். ஆகையால் இந்த உடல் அவர்களுடையது. நான் ஓர் அடிமையாக இருந்தால், இந்த உடல் எனது முதலாளிக்கு சொந்தமானது. நான் ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தால், இந்த உடல் அந்த நாட்டிற்குச் சொந்தமானது. “நாட்டில் போர் நடக்கிறது, உடலை போரில் தியாகம் செய்ய வாருங்கள்” என்று நாடு அழைத்தால், நீங்கள் இதை தியாகம் செய்யவேண்டியதுதான்.
எனவே, நீங்கள் உங்களது நிலையை ஆய்வு செய்தால், இந்த உடல் உங்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதைக் காண்பீர்கள். அவ்வாறு இருக்கையில், உடலின் புலன்களை திருப்திபடுத்துவதில் ஆவலாக இருப்பது ஏன்? புரிந்துகொள்ள முயலுங்கள். புலன்களை திருப்தி செய்வதற்காக ஏன் பைத்தியம் போல முயற்சி செய்ய வேண்டும்?
வாழ்வின் குறிக்கோள்
ஆகையால், புலன்களை திருப்தி செய்ய முயல்பவர்களை ஸ்ரீமத் பாகவதம், ப்ரமத்த, தீவிரமான பைத்தியங்கள் என்று கூறுகிறது. இந்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவால், நாம் பல்வேறு வகையான உடல்களைப் பெறுகிறோம். ஆனால் எதுவுமே நமக்குச் சொந்தமானதல்ல. எடுத்துக்காட்டாக, பணத்திற்கு தக்கவாறு பலவகையான குடியிருப்புகள் உள்ளன. உங்களால் நிறைய பணம் கொடுக்க முடிந்தால், நியூயார்க்கில் நல்ல குடியிருப்பு கிடைக்கும். உங்களால் பணம் நிறைய கொடுக்க முடியவில்லையெனில், குறைந்த மதிப்புடைய குடியிருப்பில் சந்தோஷமாக இருக்க வேண்டியதுதான். அதுபோலவே, முந்தைய பிறவியில் நாம் எவ்வாறு செயல்பட்டோம் என்பதை பொறுத்துதான், நமது உடல் நமக்கு கிடைக்கிறது.
மீண்டும் ஓர் உடலைப் பெறுவதற்கான அவசியம் இல்லாதபடியான, ஓர் உடலைப் பெறுவதே நமது வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால், மக்கள் இதை அறிவதில்லை. ஆகையால், நாங்கள் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவியுள்ளோம். குழம்பிய மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையின் நோக்கத்தை எடுத்துரைப்பதே எங்களின் நோக்கம். பகவத் கீதையில் கிருஷ்ணர் (8.15) கூறுகிறார்:
நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா:
“பக்தி யோகிகளான மகாத்மாக்கள் என்னை அடைந்த பிறகு, முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த தற்காலிகமான உலகத்திற்கு திரும்பி வருவதே இல்லை. ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்துவிட்டனர்.” உங்களுக்கு மன்னரின் உடல், நாயின் உடல் என எந்த உடல் கிடைத்தாலும், அது ஜடவுடல் என்பதால், துன்பப்பட்டே ஆக வேண்டும். இதிலிருந்து தப்பிக்க முடியாது.
உண்மையான மகிழ்ச்சி
அமெரிக்காவின் சில கனவான்கள் இந்தியா வறுமையில் வாடும் நாடு என்ற அபிப்பிராயத்துடன் இருப்பதை நான் சில நேரங்களில் கவனித்துள்ளேன். அந்த அபிப்பிராயம் உண்மையல்ல. ஆயினும், இந்தியா வறுமையில் வாடும் நாடு என்பதை நாம் வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்கா மகிழ்ச்சியான நாடு என்று அர்த்தமில்லை. அமெரிக்கர்கள் தங்களிடம் போதுமான அளவு பணம் இருப்பதால், மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனர், ஆனால் இது தவறு. அமெரிக்காவில் அவ்வளவு மகிழ்ச்சி இருந்தால், ஏன் அமெரிக்க இளைஞர்களும் யுவதிகளும் ஹிப்பிகளாக இருக்கிறார்கள்? மகிழ்ச்சி என்பது மாறுபட்டதாகும். நமக்கு ஜடவுடல் இருக்கும் வரை–அந்த உடல் அமெரிக்க உடலாக, இந்திய உடலாக, அல்லது எந்த உடலாக இருந்தாலும்–மகிழ்ச்சி என்ற கேள்விக்கே இடமில்லை.
தத்துவ அறிஞர்களும் விஞ்ஞானிகளும் துன்பத்திற்கான உண்மையான காரணத்தை ஆராய்வதில்லை. ஒவ்வொருவரும் துன்பங்களிலிருந்து தப்பிக்க முயல்கின்றனரே தவிர, யாருமே துன்பத்திற்கான உண்மையான காரணத்தை அறிவதற்கு முயல்வதில்லை. உண்மையான காரணம் இந்த உடல்தான். துரதிர்ஷ்டவசமாக, இந்த உடல் என்றால் என்ன? இஃது எவ்வாறு வேலை செய்கிறது? ஆத்மா என்றால் என்ன? ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு எவ்வாறு மாறுகிறது என்பதை மக்கள் அறிவதில்லை. அவர்கள் எல்லாரும் முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் உள்ளனர். அவ்வாறு இருந்து கொண்டு, அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்கின்றனர்.
மறுவுலகம் செல்வோம்
எனவே, எங்களது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதே. இந்த ஜடவுலகிற்கு அப்பால் மற்றொரு உலகம் ஒன்று உள்ளது. நாம் ஜட இயற்கையை அறிந்துகொள்வதில் மும்முரமாக உள்ளோம்–இங்கே எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உள்ளன–ஆனால் நடைமுறையில் நமக்கு இந்த ஜடவுலகைப் பற்றி மிகக் குறைந்த அறிவே உள்ளது. இந்த ஜடவுலகம் கடவுளுடைய படைப்பில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே என்பதை நாம் வேத சாஸ்திரங்களிலிருந்து அறிகிறோம். இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட “ஆன்மீக இயற்கை” எனப்படும் மற்றோர் இயற்கை உள்ளது. அங்கே வைகுண்டங்கள் எனப்படும் ஆன்மீக லோகங்கள் உள்ளன. அந்த வைகுண்ட லோகங்களில், கோலோகம் எனப்படும் கிருஷ்ணருடைய லோகமே மிகவுயர்ந்ததாகும்.
ஹரி நாமமே தீர்வு
கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் கிருஷ்ண லோகத்திற்கு மாற்றம் பெறுவதற்கு உதவிசெய்வதே. அதற்கான வழிமுறை இந்த யுகத்தில் மிக எளிமையானதாகும்: ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தால் போதும். சண்டை சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் நிறைந்த இந்த யுகத்தில் ஹரே கிருஷ்ண உச்சாடனத்தைத் தவிர வேறு வழியில்லை. தியானம், யாகம், கோயில் வழிபாடு போன்றவற்றை நம்மால் முறைப்படி செய்ய முடியாது; ஏனெனில், தற்போதுள்ள சூழ்நிலை முந்தைய யுகங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆகையால், கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா, “இந்த யுகத்தில் பௌதிக பந்தங்களிலிருந்து விடுபட பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.”
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரித்தல் என்னும் இந்த எளிய வழிமுறை பகவான் சைதன்ய மஹாபிரபுவால் நமக்கு கொடுக்கப்பட்டது. அவர் இந்த வழிமுறையை புதிதாக கண்டுபிடிக்கவில்லை; அங்கீகரிக்கப்பட்ட வேத இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலமாக, “நாம் யார்? நமது இலக்கு என்ன? நமது மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” முதலியவற்றை நம்மால் எளிதில் உணர முடியும். இன்றைய விழாவில் யாம் சில சீடர்களுக்கு ஹரி நாம தீக்ஷை வழங்குகிறோம். அதாவது, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண,ஙுஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்ற மந்திரத்தைக் கொடுக்கிறோம். தீக்ஷை என்பது ஆரம்பமே, தீக்ஷை பெற்ற உடனேயே யாரும் பக்குவமடைவதில்லை. கொஞ்சம்கொஞ்சமாக பயிற்சியின் மூலம் பக்குவநிலையை அடைய முடியும்.
திருமணம் ஒரு தடையல்ல
இன்று நடைபெறும் தீக்ஷை நிகழ்ச்சியுடன் நாங்கள் திருமண விழாவையும் சேர்த்து நிகழ்த்துகிறோம். சந்நியாசியாக இருந்து கொண்டு எனது சீடர்களின் இந்த திருமண விழாவில் நான் கலந்துகொள்வது புதிதாக இருக்கலாம்; சீடர்கள் கவலையின்றி வாழ வேண்டும் என்பதற்காக நான் இவற்றில் ஈடுபடுகிறேன். ஒருவர் ஏக்கத்துடன் இருந்தால், அவரால் கிருஷ்ண உணர்வை முறையாக பயிற்சி செய்ய முடியாது. எனது சீடர்கள் விரும்பினால், வாழ்க்கை முழுவதும் பிரம்மசாரியாக வாழலாம். ஆனால், அஃது அவ்வளவு சுலபம் அல்ல என்பதால், நாங்கள் இந்த திருமண விழாவையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும்கூட திருமணம் செய்து கொண்டவரே, அவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி இறந்து விட்டதால், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். எனவே, திருமணம் என்பது எங்கள் இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானதல்ல. நரோத்தமதாஸ தாகூர் என்ற சிறந்த வைஷ்ணவ கவிஞர் பாடுகிறார், க்ரிஹே வா வனேதே டாகே, ’ஹா கௌராங்க போலே டாகே, “ஒருவர் கிருஹஸ்தராக இருந்தாலும் சந்நியாசியாக இருந்தாலும், பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.”
நான் ஒரு சந்நியாசி, ஆனால் எங்கள் இயக்கத்தில் நிறைய கிருஹஸ்தர்களும் உள்ளனர். எனவே, ஒருவன் கண்டிப்பாக துறவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதில்லை. அனைவரும் கிருஷ்ண உணர்வில் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
இந்த குறிப்பை மனதில் வைத்து, நாம் நான்கு கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து வாழ வேண்டும்ஶீதகாத பாலுறவு, மாமிச உணவு, போதைப் பொருட்கள், சூதாட்டம் ஆகியவை கூடாது. அப்போது நம்மால் அமைதியாகவும் ஆனந்தமாகவும் கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்ய முடியும்,
விவாகரத்து கூடாது
இப்போது இங்கே நிகழும் திருமண விழா பௌதிகப் புலனுகர்ச்சிக்காக அல்ல. இந்த திருமணம் கணவன், மனைவி இருவரும் கிருஷ்ண உணர்வில் ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்காகவே. கணவன் என்பவன் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும், மனைவி என்பவள் கணவனுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போது இருவரும் கிருஷ்ண உணர்வில் முன்னேறி, மனித வாழ்வின் பக்குவநிலையை அடைவர். புலனுகர்ச்சிக்காக ஒருவரையொருவர் பிரிந்து செல்லுதல் அல்லது விவாகரத்து செய்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. நவீன நாகரிகத்தில், புலன்களை திருப்தி செய்வதில் ஏதேனும் குறை ஏற்பட்டால், உடனடியாக விவாகரத்து செய்கிறார்கள், அல்லது பிரிந்து விடுகிறார்கள். இங்கே, இதுபோன்ற கேள்விக்கே இடமில்லை.
மணமகனும் மணமகளும் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலையிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும். அவர்கள் கிருஷ்ண உணர்வில் தங்களது கவனத்தை ஒருநிலைப்படுத்தினால், அவர்களால் ஒன்றாக வாழ முடியும். இல்லையெனில், மாயை பல வழிகளில் தாக்கி, தடைகளை ஏற்படுத்தும். கணவன், மனைவி என இருவருக்கும் கிருஷ்ண உணர்வில் பல கடமைகள் இருக்கின்றன. அக்கடமைகளை அவர்கள் சரியான முறையில் செயல்படுத்தி, கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டால், அவர்கள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகையால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருங்கள்.
ஹரி நாமம் என்னும் தடுப்பூசி
கிருஷ்ணரை எப்பொழுதும் எவ்வாறு நினைப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த தீக்ஷை நிகழ்ச்சி. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஙுஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம. ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிப்பதே மிகச்சிறந்த வழியாகும். நாம் கிருஷ்ணரை “ஹரே கிருஷ்ண” உச்சாடனத்தின் மூலமாக நினைப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். அப்பொழுது, நாம் எப்பொழுதும் களங்கமடையாமல் இருப்போம். ஆனால் நீங்கள் கிருஷ்ணரை மறந்தால், களங்கமடைய வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, ஏதேனும் ஒரு தொற்று நோய் பரவுகிறது என்றால், மருத்துவர் தடுப்பூசி போடுவார். லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் “ஹாங்காங் ப்ளூ” என்ற நோய் பரவியபோது, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள், நானும் போட்டுக் கொண்டேன். ஆகையால், நான் நோயினால் தாக்கப்படவில்லை.
இந்த முழு உலகமும் “ஹாங்காங் ப்ளூ” நோயினால், அதாவது, மாயையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஹரே கிருஷ்ண உச்சாடனம் என்னும் தடுப்பூசியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பக்திவினோத தாகூரின் பாடல் ஒன்றில், பகவான் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், ஏனேசி ஔஷதி மாயா நாஷிபாரோ லாகி, ஹரி-நாம மஹா-மந்த்ர லஓ துமி மாகி “மாயை என்ற நோயைக் கொல்ல, நான் ஹரே கிருஷ்ண மந்திரம் என்னும் மருந்தைக் கொண்டு வந்துள்ளேன். எடுத்துக்கொள்ளுங்கள்.” மாயையின் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கு, இந்த ஹரே கிருஷ்ண உச்சாடனம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நமக்கு வழங்கியுள்ள மிகச்சிறந்த வழிமுறையாகும்.
நாம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தால், கிருஷ்ணரின் நினைவு தானாக நிகழும். நாம் அதிகமாக ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கஜபிக்க, நமக்கு கிருஷ்ண உணர்வு கிடைக்கிறது. காலப்போக்கில், கிருஷ்ண” என்ற வார்த்தையை உச்சரித்த மாத்திரத்தில், நாம் கிருஷ்ணரைக் காண்போம். எனவே, கிருஷ்ண உணர்வை தீவிரமாக புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் தற்போதைய நிலை என்ன என்பது முக்கியமல்ல. கிருஷ்ண உணர்வை உடனடியாக பயிற்சி செய்யுங்கள், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையுங்கள்.