வாழ்விற்கான பணமும் பணத்திற்கான வாழ்வும்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

என்றுமே பரபரப்பாகக் காணப்படும் பாரதம், சமீப நாள்களில் அதிக பரபரப்புடன் காணப்படுகிறது. எங்கே சென்றாலும் யாரைப் பார்த்தாலும், பணத்தைப் பற்றிய பேச்சு ஓயாமல் ஒலித்துக் கொண்டுள்ளது. என்ன பகவத் தரிசனத்திலும் இதே பேச்சா என்று நினைக்க வேண்டாம். எமது பார்வை முற்றிலும் வேறுபட்டது.

கலி யுகத்தின் அசுரர்கள்

வேத புராணங்களைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் “அசுரர்கள்” என்று ஒரு பிரிவினர் இருப்பதை நன்கறிவர். ஆனால் இன்றைய உலகில் நாம் அதுபோன்ற அசுரர்களைக் காண முடியாததால், புராணக் கதைகளின் மீது ஐயம் கொள்பவர்களும் உள்ளனர். ஆனால் சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்தால், யார் அசுரன் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். மற்ற யுகங்களில் குறிப்பிட்ட நபர்களிடம் தோன்றிய அசுரத்தனம், கலி யுகத்தில் அனைவரிடமும் இருப்பதாக சாஸ்திரங்கள் உரைக்கின்றன. அதாவது, நாம் அனைவரும் அசுரர்களே, அந்த அசுரத்தனத்தின் அளவு வேண்டுமானால் மாறுபடலாம். பகவத் கீதையின் பதினாறாவது அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அசுர குணங்களையும் நற்குணங்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறார். பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படிப்பவர்கள், நம் ஒவ்வொருவரிடமும் அசுர குணம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை உணரவியலும்.

அந்த அத்தியாயத்தின் பதினோறாவது ஸ்லோகத்தில், ஈஹந்தே காம-போகார்தம் அன்யாயேனார்த-ஸஞ்சயான், “அசுரர்கள் தங்களது புலனுகர்ச்சிக்காக அநியாயமான வழிகளில் (அல்லது சட்ட விரோதமான வழிகளில்) செல்வத்தைச் சேகரிக்கின்றனர்,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். “நான் நியாயமாகவே பணம் சேகரிக்கின்றேன்,” என்று நினைப்பவர்கள், “புலனுகர்ச்சிக்காக” என்னும் சொல்லையும் சற்று கவனிக்க வேண்டும்.

 

புலனுகர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம்

இன்றைய மனித சமுதாயம் புலனுகர்ச்சியே வாழ்வின் குறிக்கோள் என்று ஏற்று, அக்கருத்தினை மரணம் வரை தொடர்கின்றது. மக்கள் அதற்காக நாள்தோறும் புத்தம் புது திட்டங்களை தீட்டிக் கொண்டே உள்ளனர். புலனுகர்ச்சி கிடைக்காவிடில், நாடு, சமுதாயம், உறவினர்கள் ஆகியோர் மட்டுமின்றி, சொந்த குடும்ப உறுப்பினர்களையும்கூட மக்கள் புறக்கணித்து விடுகின்றனர். புலனுகர்ச்சி கிடைக்காவிடில், கணவனும் மனைவியும் பிரிகின்றனர், குழந்தைகள் பெற்றோரைக் கைவிடுகின்றனர், பெற்றோர்கள் குழந்தைகளைக் கைவிடுகின்றனர், அண்ணனும் தம்பியும் சண்டையிட்டு பிரிகின்றனர் என பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. புலனுகர்ச்சியைப் பெறுவதற்காக எதையும் செய்ய மக்கள் துணிந்து விட்டனர், கொலை செய்வர், கொள்ளை அடிப்பர், சட்ட விரோதச் செயல்களிலும் ஈடுபடுவர். இதன் ஒரு தோற்றமே கறுப்புப் பணம். இதை ஒழிப்பதற்காக இதுவரை யாரும் செய்திராத துணிச்சலான நடவடிக்கையை எடுத்தமைக்காக யாம் பாரத பிரதமரை உளமாற பாராட்டுகிறோம். அதே சமயத்தில், மக்களிடையே பரவிக் கிடக்கும் புலனுகர்ச்சியைக் கட்டுப்படுத்தாமல், கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பது தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கும்.

வாழ்வின் அடிப்படையாக மாறிய பணம்

பணத்தைக் கொண்டு புலனுகர்ச்சியைப் பெறலாம் என்ற பொய்யான எண்ணம் மக்களிடையே எப்படியோ குடி கொண்டு விட்டது. பணம் இருந்தால்தான் நன்றாக சாப்பிடலாம், நன்றாக தூங்கலாம், அனைவரிடமும் மரியாதையைப் பெறலாம், நினைத்ததைச் சாதிக்கலாம் என்று மக்கள் நினைக்கின்றனர். இத்தகு எண்ணத்தில் சிறிது உண்மை உள்ளது என்றபோதிலும், வெறும் பணம் மட்டுமே இவற்றை வழங்கி விடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. நிம்மதியாக நான்கு இட்லிகூட சாப்பிட முடிவதில்லை, படுத்தால் தூக்கம் வருவதில்லை, சுற்றியிருக்கும் கூட்டமெல்லாம் வெறும் பணத்திற்காக மொய்க்கும் வண்டுகள்–இதுவே பணக்காரனின் உண்மையான நிலை. அளவோடு பணமிருந்தால்தான் புலனுகர்ச்சியும் சாத்தியம், அளவிற்கு மீறி பணமிருந்தால் அந்த பணமே புலனுகர்ச்சிக்குத் தடையாகி விடும். ஆனால் அந்தோ பரிதாபம்! மக்கள் இதனை உணர மறுக்கின்றனரே! பணத்தின் பின்னால் பேயாக அலைகின்றனரே!

காகிதப் பணம்

வாழ்வின் எல்லா இன்பத்தையும் தொலைத்து மக்கள் எந்தப் பணத்தைச் சேர்க்கிறார்களோ, அந்த பணத்தின் உண்மையான மதிப்பு என்ன? வெறும் காகிதங்கள், அங்கீகாரம் பெற்ற காகிதங்கள்–அவ்வளவுதான். ஆயிரம் ரூபாய் நோட்டிற்கான உண்மையான மதிப்பு (அச்சிடும் செலவு) ரூபாய் 3.17 என்று கூறுகின்றனர். என்னிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணம் உள்ளது என்று நினைப்பவனிடம், உண்மையில் வெறும் 317 ரூபாய் மதிப்புடைய பொருள் மட்டுமே உள்ளது என்பது யாரும் பெரும்பாலும் கவனிக்கத் தவறும் உண்மை. முந்தைய காலங்களில் செல்வம் என்பது உண்மையான செல்வமாக இருந்து வந்தது. நாணயங்கள் அனைத்தும் மதிப்புடைய நாணயங்களாக (தங்கம், வெள்ளி, தாமிரம் என) இருந்தன. ஆனால் இன்றைய செல்வங்களோ, வெறும் காகிதங்கள்! உண்மையான மதிப்புடைய தங்க நாணயங்களை யாரேனும் ஆற்றிலும் சாக்கடையிலும் குப்பைத் தொட்டியிலும் வீசுவார்களா?

காகிதங்கள் செல்லாது என்று அறிவித்தால், மறுவேளை உணவிற்கான மளிகைப் பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். யாரிடம் தானியங்களும் பசுக்களும் உள்ளனவோ அவர்களே உண்மையான செல்வந்தர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன (தான்யேன தனவான், கவயோ தனவான்). ஆனால் இன்றைய செல்வந்தர்கள் வெறும் காகிதங்களை வைத்துக் கொண்டு தங்களை பணக்காரர்களாக எண்ணிக் கொண்டுள்ளனர். அதிலும் ஒரு படி மேலே போய் தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த 3.17 ரூபாய் மதிப்புடைய காகிதம்கூட உங்களிடம் இனிமேல் தங்கப் போவதில்லை.

கோடிக்கணக்கான பணத்தினைக் கொள்ளை யடித்து வைத்திருந்தவர்கள் அனைவரும் தற்போது எவ்வாறு அதனை வெள்ளையாக மாற்றுவது என்று அலைந்து கொண்டுள்ளனர். ஒரே இரவில் செல்வங்கள் அனைத்தும் செல்லாக் காசாகி விட்டன. காகிதப் பணத்தின் இயற்கை இதுவே. வங்கியில் இருந்தால் பாதுகாப்பு என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஜடவுலகில் (அதிலும் கலி யுகத்தில்) எதற்குமே உண்மையில் பாதுகாப்பு கிடையாது. 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பல வங்கிகள் இழுத்து மூடப்பட்டன என்பதையும் அவற்றில் பணத்தை வைத்திருந்தவர்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆயினர் என்பதையும் மக்கள் ஏனோ மறந்துவிட்டனர்!

கடவுளின் பாதுகாப்பு

பேருந்தில் பணத்தைத் தொலைத்தவரைத் தேடிக் கண்டுபிடித்து நடத்துநர் அப்பணத்தினை அவரிடம் ஒப்படைத்தார் என்று சில நேரங்களில் செய்தியைப் படிக்கின்றோம். வீட்டில் பூட்டி வைத்திருந்த நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டன என்று சில நேரங்களில் செய்தியைப் படிக்கின்றோம். இதை ஸ்ரீமத் பாகவதம் (7.2.40) மிக அழகாகக் கூறுகிறது, “சில நேரங்களில் ஒருவன் தனது பணத்தை மக்கள் கூடும் பொதுவிடத்தில் தொலைத்து விடுகிறான். ஆயினும், அவனது பணம் மற்றவர்களால் தீண்டப்படாமல் விதியினால் பாதுகாக்கப்படுகிறது. அதனால் அவன் இழந்த பணத்தை மீண்டும் பெறுகிறான். மறுபுறம், பகவான் பாதுகாப்பளிக்காவிடில், வீட்டில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும் பணமும் தொலைந்து விடுகிறது. முழுமுதற் கடவுளின் பாதுகாப்பு இருக்குமெனில், ஒருவன் யாருமின்றி காட்டில் தனியாக இருக்க நேரிட்டாலும், அவன் பிழைத்துக்கொள்வான்; ஆனால் அவரது பாதுகாப்பு இல்லாவிடில், வீட்டில் உறவினர்கள் பலரின் பாதுகாப்பில் இருந்தாலும், ஒருவன் மடிந்து விடுவான்.” எனவே, முழுமுதற் கடவுளின் பாதுகாப்பைப் பெறுவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.

மனித வாழ்க்கை பணத்திற்காகவா?

பணத்தை வைத்து பொருளாதாரத்தைக் கணக்கிடுகின்றனர். ஆனால் வெறும் பொருளாதார முன்னேற்றமா மனித வாழ்க்கை? பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்று அதனைத் தன்னுணர்விற்காக பயன்படுத்தாமல், வெறும் பொருளாதார முன்னேற்றத் திற்காக உழைக்கின்றனரே! “நாளை மகிழ்ச்சியாக வாழலாம்” என்ற எண்ணத்துடன் பிறந்தது முதல் சாவது வரை கடினமாக உழைக்கின்றான் மனிதன். ஆனால் மகிழ்ச்சி மட்டும் அவனுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. “மனிதன் கழுதையைப் போன்று உழைக்கிறான்” என்று நாம் கூறுவது வழக்கம். ஆனால் ஒரு விதத்தில் பார்த்தால், அச்சொற்றொடர் கழுதைக்கு ஓர் அவமானம்; ஏனெனில், கழுதை மனிதனைப் போன்று இவ்வளவு கடினமாக வேலை செய்வதில்லையே.

மனித வாழ்வின் நோக்கம் கடவுளை உணர்வதே. இந்த அரிதான மனிதப் பிறவியினை மலம் உண்ணும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கிடைக்கக்கூடிய புலனின்பத்திற்காக கழித்துவிடக் கூடாது. இந்த உடல் மடிந்து மண்ணில் விழுவதற்கு முன்பாக, வாழ்வைப் பக்குவப்படுத்துவதற்கான வழிகளைச் செய்ய வேண்டும்.

ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று அறிவிக்கப்பட்டவுடன் அதனை மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுக்கின்றோம், இதற்கு 50 நாள் அவகாசமும் கொடுக்கப்படுகிறது. ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு நாள் வரும், அன்றைய நாளில் நம்மிடம் இருப்பவை அனைத்துமே செல்லாது என்று அறிவிக்கப்படும், நமது கர்மா மட்டுமே நம்மிடம் எஞ்சி நிற்கும். அதை மாற்றுவதற்கு நமக்கு நேரமும் கொடுக்கப்படாது. அப்போது என்ன செய்வீர்?

பொருளாதாரம் என்றும் சரியலாம்

நவீன பொருளாதாரம் என்று வேண்டுமானாலும் சரியலாம், பெட்ரோல் முடிந்த பின்னர் அனைத்தும் முடிந்து விடும். பொருளாதார முன்னேற்றத்துடன் இணைந்து வரும் பிரச்சனைகள் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் எண்ணிலடங்காத பிரச்சனைகளைக் கொண்டு வந்துள்ளன என்பதை பலரும் ஏன் காண மறுக்கின்றனர்? கண் இருந்தும் குருடர்களாக வாழ்வது தகுமோ? கண் திறந்து பாருங்கள்: நவீன பொருளாதார முன்னேற்றத்திற்கு முந்தைய காலங்களில், மனித சமுதாயத்தினர் நல்ல ஆரோக்கியமான உணவினை உண்டு வந்தனர், இன்றோ மெல்லக் கொல்லும் விஷம் நிறைந்த உணவையே உண்கிறோம்; வருடம் மும்மாரி பொழிந்து நாடு செழிப்பாக இருந்தது, இன்றோ சில துளி மழைக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம்; எங்கும் எப்போதும் ஏதேனும் சப்தம் காதுகளின் அமைதியைக் கெடுத்துக் கொண்டே உள்ளது; சுவாசிப்பதற்கு தூய காற்றுகூட இல்லையே; மனிதர்களிடையே உருவாகியுள்ள மன அழுத்தம், போட்டி, பொறாமை, வஞ்சகம் போன்றவற்றைப் பற்றி கூறவும் வேண்டுமா!

பொருளாதாரத்தில் இந்தியா மேற்கத்திய நாடுகளை நகல் செய்ய முயல்கிறது, ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனெனில், மேற்கத்திய நாடுகளில் இந்தியாவைப் போன்ற பெரும் மக்கட்தொகை இல்லை. அமெரிக்காவில் 1,000 மக்களுக்கு 797 கார்கள் உள்ளன, இந்தியாவில் 18 கார்கள் மட்டுமே உள்ளன (2014 கணக்கெடுப்பின்படி). அமெரிக்காவைப் போன்ற கார் பொருளாதாரத்தை நாம் விரும்பினால், அவ்வளவு கார்களை இங்கே நிறுத்துவதற்குக்கூட இடம் கிடையாது என்பதைச் சிந்தித்தவர்கள் யாரேனும் உளரோ! ஏன் அந்த பொருளாதாரத்தை நாம் நகல் செய்ய வேண்டும்? அத்தகு பொருளாதாரத்தில் அப்படி என்ன நன்மையைக் கண்டு விட்டார்கள்? வீட்டிற்கு அருகில் செய்ய வேண்டிய பணிகளுக்காக தினமும் பல நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்கின்றனர். இதுவா வாழ்வின் நோக்கம்? நாய் நான்கு கால்களில் ஓடுகிறது, மனிதன் நான்கு சக்கரம் பூட்டிய காரில் ஓடுகிறான்? இதுவா முன்னேற்றம்?

பெட்ரோலை அடிப்படையாகக் கொண்ட மனித நாகரிகம் என்று வேண்டுமானாலும் சரியலாம்.

எளிய வாழ்வும் தன்னிறைவும்

இந்திய தேசத்திற்கென்று சில விசேஷ தன்மைகள் உள்ளன. இந்தியாவின் ஆன்மீகப் பண்பாடு, தத்துவ அறிவு, புண்ணிய நதிகள், எளிமையான மனித உறவுகள் முதலியவற்றை உலகில் எத்தனை கோடி கொடுத்தாலும் எங்கும் பெற இயலாது. பாரதப் பண்பாட்டினைக் காப்போம், போலியான பொருளாதார மயக்கத்தில் வீழாமல் நம்மைப் பாதுகாப்போம். இந்த மயக்கத்திலிருந்து மக்களைக் காப்பதற்காகவே ஸ்ரீல பிரபுபாதர் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட “எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும்” என்னும் கொள்கையினை வகுத்துக் கொடுத்துள்ளார். தங்களுக்கு வேண்டிய உணவினைத் தாமே தயாரித்துக் கொண்டு தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக்கொள்ளும் தன்னிறைவு பெற்ற சமுதாயமாக வாழ்வதற்கு மக்கள் முன்வர வேண்டும். பணம் என்னும் ஓட்டப்பந்தயத்திலிருந்து விலகி, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து வாழ்வின் நோக்கத்தை அடைவதற்கு அனைவருக்கும் வழி வகுத்துக் கொடுத்துள்ளார் ஸ்ரீல பிரபுபாதர்.

அதன்படி, பக்தர்கள் இந்த நவ நாகரிக வாழ்வைக் கைவிட்டு, கிராம வாழ்வினை எளிமையான முறையில் மேற்கொள்ள வேண்டும். நாம் இந்த உலகில் வாழும் வரை நமக்கு சிறிது பொருளாதாரமும் அவசியம். விவசாயத்தையும் பசு பராமரிப்பையும் நாம் சிறப்பாகக் கையாண்டால், அதுவே அந்த பொருளாதாரத்திற்கு போதும். அதையும் நமது முன்னோர்கள் பன்னெடுங் காலமாக எவ்வாறு நிறைவேற்றினார்களோ, அவ்வாறு எளிமையாக நிறைவேற்றுவதற்கு நாம் முன்வர வேண்டும்–நவீன காலத்தின் வசதிகள் வேண்டாம், விவசாயத்தை ஒழிக்கும் டிராக்டர்களும் மருந்துகளும் வேண்டாம், மின்சாரமும் வேண்டாம். நாம் வேண்டுபவை அனைத்தும், உணவு, உடை, உறைவிடம்–இவற்றிற்குத் தேவையான அடிப்படைப் பொருளாதாரம் மட்டுமே. மீதி நேரத்தை கிருஷ்ண உணர்வை வளர்ப்பதற்குச் செலவிட வேண்டும். கிருஷ்ண உணர்வில் நேரத்தைச் செலுத்துவதற்கு உகந்தாற் போன்ற பொருளாதாரத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரமே வேண்டாம் என்று யாம் கூறவில்லை, பொருளாதாரத்திற்காக வாழ்க்கையையே தியாகம் செய்து விட வேண்டாம் என்று கூறுகிறோம். வேறு விதமாகக் கூறினால், அத்தியாவசிய வாழ்விற்காக பணத்தைச் சேர்க்க வேண்டும், பணத்தைச் சேர்ப்பதற்காக வாழக் கூடாது.

இது ஒரு புரட்சிகரமான கருத்து. ஆம், ஐயமில்லை, ஆன்மீக புரட்சி இன்றைய அவசியத் தேவை. இப்போது இப்புரட்சி நிகழாவிடில், இந்த அசுர நாகரிகத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் பெட்ரோல் நின்று (அல்லது குறைந்து) விடும்போது, மக்கள் என்ன செய்வதென்று அறியாமல் தவிப்பர், திணறுவர், சூழ்நிலை மிகமிக மோசமாகி விடும், மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடிவர், மனிதனை மனிதன் சாப்பிடுவான், எங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். நகரத்தில் கொடி கட்டிப் பறக்க கோடிகளைக் கொட்டி வீடு வாங்கிய கோடீஸ்வரர்கள், உண்ண உணவின்றி வீட்டைக் காலி செய்து விட்டு காட்டிற்கு ஓடுவர். சொல்லவொண்ணா துயரங்களை மனிதர்கள் சந்திக்க நேரிடும். அந்த நிலை வரும் முன்னரே மக்களுக்கு நாம் மாற்று சமுதாயத்தை அமைத்துக் காட்ட வேண்டும்.

பொருளாதாரத்தைக் குறைப்போம்

மக்கள் அமைதியாக ஆனந்தமாக அன்புடன் வாழ்வதற்கு யாம் இங்கே வழி சொல்கிறோம். ஆனால் இவ்வாறு அமைதியாக வாழ்ந்து விட்டால், நாட்டின் பொருளாதாரம் சரிந்து விடும் என்று சிலர் கூக்குரலிடலாம். ஆம், சரிந்தால் சரியட்டும். நாட்டு மக்களின் மகிழ்ச்சியை விட காகிதக் கணக்கில் காட்டப்படும் இந்த பொருளாதாரம்தான் பெரியதா? நிச்சயம் இல்லை. மக்களே, கிருஷ்ண பக்தியை ஏற்று எளிய வாழ்வைப் பின்பற்ற முன்வாருங்கள், போதும் இந்த பொருளாதார மயக்கம்!

பொருளாதாரத்தைக் குறைப்பதற்கான எமது அழைப்பினால், அதிகமானோர் அதிர்ச்சியடையலாம். பெரும்பாலானோர் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இன்றைய சூழ்நிலையில், இப்படியொரு தகவலா? ஆம், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு நிச்சயம் நாங்களும் ஆதரவு தருகிறோம்; பாராட்டத்தகுந்த செயலே என்பதில் ஐயமில்லை. ஆயினும், கறுப்புப் பணத்தை ஒழித்தும் பல இதர நடவடிக்கைகளை எடுத்தும் அடையப்படும் முன்னேற்றத்தைக் காட்டிலும், யாம் கூறும் எளிய பொருளாதார முறை மனித சமுதாயத்திற்கான அவசியத் தேவை, பல மடங்கு உயர்ந்த தேவை என்பதை இங்கே எடுத்துரைக்க யாம் கடன்பட்டுள்ளோம்.

குறைந்தபட்சம் பக்தித் தொண்டினைப் பயிற்சி செய்யும் பக்தர்களாவது இதனை உணர வேண்டும், நேரத்தை மிச்சப்படுத்தி கிருஷ்ண பக்தியில் ஈடுபட வேண்டும். விவசாயம் சார்ந்த எளிய வாழ்விற்கு அனைவராலும் முற்றிலும் மாற முடியாமல் இருக்கலாம். ஆயினும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், பக்தர்கள் அனைவரும் இங்கு வழங்கப்பட்டுள்ள உண்மையினைப் புரிந்துகொள்ள முன்வர வேண்டும். கண்ணில் காணும் பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து வாழ்வை அனுபவிக்கும் எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள், காற்றில் பறக்க விடுங்கள்; வாழ்க்கை உயரிய நோக்கத்திற்கானது என்பதை உணர்ந்து, உடலையும் ஆத்மாவையும் தக்க வைப்பதற்கு எவ்வளவு பொருளாதாரம் தேவையோ அதற்காக மட்டும் உழைப்போமாக. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரத்தை மிச்சப்படுத்தி, கிருஷ்ண பக்தியின் செயல்களில் ஈடுபடுவோமாக. அவ்வாறு செய்தால், இறுதியில் நாம் கிருஷ்ணரிடம் செல்வது உறுதி.

 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட எளிய பொருளாதாரத்தை அணுகுவோம், வாரீர்!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives