பகவத் கீதையும் ஜாதியும்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்கள்: ஜெய கிருஷ்ண தாஸ் & ஸ்ரீ கிரிதாரி தாஸ்

ஜாதி–தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?–பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய ஜாதியே உயர்ந்தது” என்று சிலர் நினைக்க, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஜாதிகளால்தான் வந்தன என்றும் ஜாதிகளே வேண்டாம் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.

பகவத் கீதை ஜாதி வேற்றுமையினைப் பரப்புகின்றது என்று கூறி, கீதையைப் படிக்கக் கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கூறுபவர்களும் உள்ளனர். ஜாதி அமைப்பின் நுணுக்கங்களை சிறு கட்டுரையில் எழுதிவிட முடியாது என்றபோதிலும், பகவத் கீதைக்கும் ஜாதிக்கும் இடையிலுள்ள விஷயங்களை அறிய முற்படுவோம்.

வர்ணாஷ்ரமம்–ஓர் அடிப்படை விளக்கம்

வர்ணாஷ்ரமம் என்று அறியப்படும் வழிமுறை பகவத் கீதையில் மட்டுமின்றி இதர வேத சாஸ்திரங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. வர்ணாஷ்ரமம் என்னும் சொல், வர்ணம், ஆஷ்ரமம் ஆகிய இரு சொற்களின் கலப்புச் சொல்லாகும். வர்ணம் என்பது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு சமுதாயப் பிரிவுகளையும், ஆஷ்ரமம் என்பது பிரம்மசாரி, கிருஹஸ்தர், வானபிரஸ்தர், சந்நியாசி ஆகிய நான்கு ஆன்மீகப் பிரிவுகளையும் குறிக்கும்.

வர்ணத்தின் (அல்லது சமுதாயத்தின்) நான்கு பிரிவுகளும் அதன் உட்பிரிவுகளும் ஜாதி என்ற பெயரிலும் அறியப்படுகின்றன. இருப்பினும், ஜாதி என்ற வார்த்தைக்கு இன்றைய மக்கள் எடுத்துக்கொள்ளும் பொருளும் சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருளும் வேறுபட்டவை.

ஜாதி என்பதை இன்றைய சமுதாயம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வேத சமுதாயம் குணத்தின் அடிப்படையிலும் செய்யும் தொழிலின் அடிப்படையிலும் அதனை ஏற்றுக்கொள்கிறது. இன்றைய சமுதாயத்தில் பிராமணரின் மகனாகப் பிறந்தவன் பிராமண ஜாதியைச் சேர்ந்தவனாக ஏற்கப்படுகிறான்; ஆனால் முறையான சாஸ்திரங்களின்படி, ஒருவன் பிராமணரின் மகனாகப் பிறந்தாலும் அவனிடம் பிராமணத் தன்மைகள் இல்லாவிடில், அவன் பிராமணனாக ஏற்கப்படுவதில்லை.

சமுதாயப் பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் அல்ல, தகுதிகளின் அடிப்படையிலேயே என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒரு மருத்துவரின் மகன், மருத்துவக் குடும்பத்தில் பிறந்ததால் மட்டும் மருத்துவனாக ஏற்றுக்கொள்ளப்படுவானா? நிச்சயம் இல்லை. அவனும் மருத்துவக் கல்வி பெற்று போதிய தகுதியை அடையும்போது, அவன் மருத்துவனாக ஏற்றுக்கொள்ளப்படுவான். அதுபோலவே, வேத சாஸ்திரங்களில், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு பிரிவினருக்கும் சில தகுதிகள் விளக்கப்பட்டுள்ளன. அத்தகைய தகுதியுடையவர்கள் மட்டுமே அப்பிரிவுகளினுள் அடங்குவர். தகுதியற்ற நபர்கள் வர்ணத்திற்கு அப்பாற்பட்டவராக புறக்கணிக்கப்படுகின்றனர்.

கிருஷ்ணரால் படைக்கப்பட்ட பிரிவுகள்

இந்த நான்கு வர்ணங்களும் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்டவை. கிருஷ்ணரே இதனை பகவத் கீதையில் (4.13) உறுதி செய்கிறார்: சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம். இவை குணத்தின் அடிப்படையிலும் செய்யும் செயலின் அடிப்படையிலும் பகுக்கப்பட்டவை என்று அவர் கூறுகிறார். குண-கர்ம-விபாகஷ:. பிறப்பின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிரிப்பதாக கிருஷ்ணர் பகவத் கீதையில் எங்கும் கூறவில்லை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட இன்றைய ஜாதி அமைப்பு கிருஷ்ணரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.

பிரிவுகள் அவசியமா?

பிறப்பின் அடிப்படையிலா, தகுதிகளின் அடிப்படையிலா என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்–இந்த நான்கு பிரிவுகள் அவசியம்தானா என்ற கேள்வி எழலாம். அனைத்து மனிதர்களின் உடலிலும் சிகப்பு இரத்தம்தானே ஓடுகிறது, எதற்காக இந்தப் பிரிவுகள் என்று நினைக்கலாம். காரணத்தைக் காண்போம்.

உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவனும் பல்வேறு ஆசைகளைக் கொண்டுள்ளான். அவற்றை நிறை வேற்றுவதற்காக பல தரப்பட்ட உடல்கள் ஜீவன்களுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, நீர்வாழ்வன, தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் என மொத்தம் 84,00,000 வகையான உயிரினங்கள் உள்ளன. ஜீவன்கள் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப, பல்வேறு உயிரினங்களில் மாறி மாறி பிறவியெடுத்து இவ்வுலகில் சுற்றிக் கொண்டுள்ளன.

ஜீவன்களின் உண்மையான நன்மையை என்றும் விரும்பும் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கு மேலோட்டமான அனுமதியைக் கொடுத்தாலும், அவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து நிரந்தரமாக விடுதலை பெற வேண்டும் என்று பேராவல் கொண்டுள்ளார். பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மனிதர்களுக்கு மத்தியிலும் பலதரப்பட்ட ஆசைகளும் தன்மைகளும் இருப்பதால், அதற்கு ஏற்றவாறு சமுதாயத்தினை நான்கு வர்ணங்களாக அவர் பிரித்துள்ளார். இப்பிரிவுகளின் மூலம் புலனின்பத்தில் மூழ்கியுள்ள மக்களைப் படிப்படியாக அவற்றிலிருந்து விடுவித்து முக்தியடையச் செய்யும் வகையில் மொத்த வழிமுறையையும் அவர் வடிவமைத்துள்ளார்.

உண்மையில், உலகின் எல்லாப் பகுதிகளிலும் பிரிவுகள் உள்ளன. பிரிவுகளுக்கு ஏற்றாற்போல சமுதாயத்தில் மதிப்பும் உள்ளது. உதாரணமாக, ஒரு தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால் அங்கும் நான்கு பிரிவுகள் இருப்பதைக் காணலாம். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களை தரமுள்ளதாக வடிவமைப்பதற்கென்று இருக்கும் புத்திசாலிகள் ஒரு பிரிவினர்; தொழிற்சாலையை நிர்வகிப்பவர்கள் இரண்டாம் பிரிவினர்; பொருட்களை மக்களிடையே கொண்டு சென்று வர்த்தகம் புரிவோர் மூன்றாம் பிரிவினர்; பணி புரிந்து பொருட்களை தயாரிப்பவர்கள் நான்காம் பிரிவினர். இத்தகைய பிரிவுகள் (துறைகள்) ஒரு தொழிற்சாலையில் இல்லாவிடில் அத்தொழிற்சாலை திறம்பட செயல்பட இயலாது.

அதுபோல, சமுதாயம் என்னும் தொழிற்சாலையிலும் நான்கு பிரிவினர் அவசியம். மக்களை தரமுள்ளவர்களாக வடிவமைப்பதற்காக ஆன்மீக விஷயங்களை எடுத்துக்கூறுபவர்கள் பிராமணர்கள் என்றும், சமுதாயத்தை நிர்வகித்து மக்களைப் பாதுகாப்பவர்கள் சத்திரியர்கள் என்றும், விவசாயம் செய்து வாணிபம் செய்பவர்கள் வைசியர்கள் என்றும், உடலால் உழைத்து வாழ்பவர்கள் சூத்திரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

தொழிற்சாலையின் ஒவ்வொரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவருக்கும் குறிப்பிட்ட தகுதிகள் இருப்பதுபோல, சமுதாயத் துறைகளிலும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட தகுதிகளும் கடமைகளும் உள்ளன.

 

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகள்,சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்

பிராமணரின் கடமைகள்

மனித சமுதாயத்தினை ஓர் உடலுடன் ஒப்பிட்டால், பிராமணர்கள் அதன் தலையைப் போன்றவர்கள். அவர்கள் வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், மற்றும் பஞ்சராத்ரங் களைக் கொண்டு, கிருஷ்ணரைப் பற்றிய ஞானத்தினை அறிந்து, சமூகத்தின் மற்ற பிரிவினர்களுக்கு உபதேசித்து வழிநடத்துவர். இவர்கள் சம்பளம் எதுவும் பெறாமல், தானம் பெற்று தங்களது வாழ்வை நடத்த வேண்டும். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது சத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும் உள்ள ஒரு கடமையாகும். இவர்கள் ஸத்வ குணத்தில் இருத்தல் அவசியம்.

“அமைதி, சுயக் கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகியவை பிராமணரின் தன்மைகள்.” (பகவத் கீதை 18.42)

சத்திரியரின் கடமைகள்

சமுதாய உடலின் கைகளாகக் கருதப்படும் சத்திரியர்களின் முக்கிய கடமை மக்களைப் பாதுகாப்பதாகும். காட்டு விலங்குகள், எதிரிகள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றிலிருந்து இவர்கள் மக்களைக் காப்பர். மேலும், மக்கள் அனைவரும் தர்மத்தின்படி வாழ்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டியதும் இவர்களின் கடமை. இவர்கள் அரசாங்கப் பணிக்காக மக்களிடம் வரி வசூலித்துக் கொள்ளலாம். நாட்டில் மக்கள் செய்கின்ற பாவங்களில் அரசர்களுக்கும் பங்கு உண்டு என்பதால், பிராமணர்களின் உதவியுடன் சமுதாயத்தில் தர்மம் தழைத்தோங்குவதற்கு இவர்கள் பாடுபடுவர். சத்திரியர்கள் ரஜோ குணத்தைச் சார்ந்தவர்கள்.

“சூரத்தனம், வலிமை, மனவுறுதி, வளமை, போரில் தைரியம், கொடை, ஆளும் தன்மை ஆகியவை சத்திரியர்களின் தன்மைகள்.” (பகவத் கீதை 18.43)

 

வைசியர்களின் கடமைகள்

வைசியர்கள் சமுதாய உடலின் வயிற்றைப் போன்றவர்கள். விவசாயம், பசுக்களைப் பராமரித்தல், வியாபாரம் ஆகியவை இவர்களது முக்கியப் பணிகள் (பகவத் கீதை 18.44). சமுதாயத்திலுள்ள மற்ற மூன்று பிரிவினர்களுக்கும் இவர்களே பொருளாதார ஆதாரம். அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்வதும் தர்ம செயல்களைச் செய்வதும் இவர்களின் பணியாகும். வைசியர்கள் ரஜோ குணமும் தமோ குணமும் இணைந்த தன்மையுடையவர்கள்.

சூத்திரர்களின் கடமைகள்

சமுதாயத்தின் கால்களாக வருபவர்கள் சூத்திரர்கள். இதர வர்ணத்தினருக்கு உடலால் உழைத்து உதவி செய்தல் இவர்களின் கடமையாகும். (பகவத் கீதை 18.44) சூத்திரர்கள் தமோ குணத்தைச் சார்ந்தவர்கள்.

 

ஒருவரைக் காட்டிலும் மற்றவர் சிறந்தவரா?

ஓர் உடலுக்கு அனைத்து உறுப்புகளும் இன்றியமையாதவை. மூளை, கைகள், வயிறு, கால்கள் என அனைத்தும் வேண்டியவை. இதில் எந்தவொரு உறுப்பை இழப்பதற்கும் நாம் விரும்புவதில்லை. இருப்பினும், நடைமுறையில் பார்த்தால், மூளை சரியாக இருந்தால் மட்டுமே மற்ற உறுப்புகள் சரியாக இயங்க முடியும் என்பதால், “எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம்” என்று கூறிடுவர். அதன்படி, முறையான பிராமணர்கள் சமுதாயத்தின் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்குத் தகுந்த மரியாதையைப் பெறுகின்றனர். பிராமணர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்யும் சத்திரியர்கள், அதற்கு அடுத்த நிலையில் மதிக்கப் படுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து, வைசியர்கள், சூத்திரர்கள் என அனை வரும் மதிக்கப்படுகின்றனர். தலை மட்டும் இருந்தால் போதும், மற்ற பாகங்கள் தேவையற்றவை என்று யாரும் கூறமாட்டார்கள்.

அனைவரும் சமம் என்று பெயரளவில் வாதிடக்கூடிய இன்றைய சமுதாயத்தில்கூட, ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்றாற்போல மதிப்பும் மரியாதையும் வேறுபடுகின்றன என்பதை நாம் காணலாம். நாட்டின் முக்கியஸ்தர்களான ஆட்சியாளர் களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அதிகமான மதிப்பு கொடுக்கப்படுவதை மறுக்க இயலாது. அனைவரும் சமம் என்றால், விஐபி என்று ஒரு பிரிவினர் எதற்காக? அவர்களுக்கு மட்டும் உயர்ந்த பாதுகாப்பு வசதிகள் எதற்காக? அனைவரும் சமம் என்ற பேச்சுகள், வெறும் மேடைப் பேச்சுகளே. தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் அறியப்படுவது இயற்கையே.

பொதுவுடைமை பேசும் மக்களிடையேயும் தலைவர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏற்றத்தாழ்வு நிலைகள் உண்டு. அறிவுள்ளவர்களே தலைவர்களாக வேண்டும். இல்லை என்றால் இயக்கம் காணாமல் போய்விடும். அதுபோன்று கடவுளை உணர்ந்த அறிவுடைய நபர்களே சமூகத்தினை வழிநடத்த வேண்டும்.

பிறப்பினால் அனைவரும் சூத்திரர்களே

ஒருவர் எந்த வர்ணத்தில் அல்லது ஜாதிகளில் பிறக்கின்றாரோ, அவரும் அதே ஜாதிதான் என்று எங்கும் கூறப்படவில்லை–இதனை முன்னரே கண்டோம். பிறக்கும்போது அனைவரும் சூத்திரர்களே. ஜன்மனா ஜாயதே ஷூத்ர என்னும் வேத வாக்கியம் இதனைத் தெளிவாக்குகின்றது. பின்னர், ஸம்ஸ்காரத்தின் (சடங்குகளின்) மூலமாகவும், வேதக் கல்வியின் மூலமாகவும், பிரம்மனை உணர்வதாலும் ஒருவன் உயர்வு பெறுகிறான்.

பிராமண குலத்தில் பிறந்தவன் இறைவனைப் பற்றி அறியாமல், புலனின்பச் செயல்களில் மூழ்கியிருந்தால், அவன் நிச்சயமாக பிராமணன் அல்ல. பிறப்பினால் மட்டும் தன்னை பிராமணர் என்று ஒருவன் கூறிக் கொண்டால், அஃது அவரின் அறியாமையைக் காட்டுகிறது.

வர்ணாஷ்ரமத்தின் குறிக்கோள்

இப்பிரிவுகளின் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட மக்களைக் கீழ்நிலையில் வைப்பதோ, வேறு சிலரை உயர்நிலையில் வைப்பதோ அல்ல. இந்த வழிமுறை, சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரையும் அவரவரது உண்மையான நிலையில் வைத்து, அந்நிலையிலிருந்து படிப்படியாக உயர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒற்றுமையுடன் தத்தமது ஆன்மீக முன்னேற்றத்திற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

வர்ணாஷ்ரமத்தின் இறுதிக் குறிக்கோள் விஷ்ணுவைத் திருப்திப்படுத்துவதே. ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைச் செய்தபடி, விஷ்ணுவை வழிபடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பகவான் விஷ்ணுவின் மீதான பற்றுதலை ஒருவன் வளர்த்துக் கொள்ளாவிடில், அவனுடைய செயல்கள் அனைத்தும் கால விரயமாகக் கருதப்படும். எனவே, வர்ணாஷ்ரமத்தின் குறிக்கோள் மக்களை வஞ்சிப்பதல்ல, உயர்த்துவதே.

அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள் என பலரும் ஹரி நாம சங்கீர்த்தனத்தினால் உயர்ந்த பிராமணர்களாக மாறி வருகின்றனர்.

வர்ணாஷ்ரமம்–ஓர் ஆரிய கொள்கையா?

வர்ணாஷ்ரமம் என்பது ஆரியக் கொள்கை என்றும் தமிழ்நாட்டைச் சார்ந்ததல்ல என்றும் சிலர் கூறி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தவறாகப் புரிந்து வைத்துள்ள கருத்துகளில் ஆரிய திராவிட கொள்கைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆரியன் என்பதை ஓர் இனமாகவே பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், ஆரியர்கள் என்பது வாழ்வின் குறிக்கோளை உணர்ந்த, பண்பாடுடைய மக்களைக் குறிக்கும் சொல்லாகும். எனவே, ஆரியன் என்னும் சொல், உலகின் எந்தப் பகுதியிலுள்ள மனிதனுக்கும் பொருத்தமானதாக இருக்கலாம். வர்ணாஷ்ரம அமைப்பு அத்தகைய மனிதர்களுக்கு உரியதாகும். (விரைவில் இதுகுறித்த ஒரு கட்டுரையை பகவத் தரிசனத்தில் வாசகர்கள் எதிர்பார்க்கலாம்)

யார் வேண்டுமானாலும் பிராமணராக முடியுமா?

தாழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் பிராமண நிலையை எட்ட முடியுமா என்று கேட்கலாம். நிச்சயமாக அடைய முடியும் என்பதே அதற்கான பதில். எமது இஸ்கான் இயக்கத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் இதற்கு சாட்சிகளாக உள்ளனர்.

தீன-ஹீன ஜாத சிலோ, ஹரி நாமே உத்தாரிலோ, “ஒருவன் மிகவும் தாழ்ந்தவனாக நீச்சமானவனாக இருந்தாலும் ஹரி நாமம் அவனை உயர்த்தும்,” என்பதை இன்று உலகெங்கிலும் நடைமுறையில் காண்கிறோம். ஒருகாலத்தில் சூத்திரர்களைவிட கீழ்நிலையில் உள்ளவர்கள் என்று ஒதுக்கப்பட்ட அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள் என பலரும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூலமாக இன்று ஹரி நாமத்தை உச்சரித்து, உயர்ந்த தகுதிகளைப் பெற்று, தலைசிறந்த பிராமணர்களாக இருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

எனவே, யார் வேண்டுமானாலும் பிராமணராகலாம்; அதற்கான தகுதிகள் இருந்தால் போதும். உண்மையில், வழிதவறி சீர்கெட்டுச் சென்று கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தினை முறையாக வழிநடத்துவதற்குப் பக்குவமான பிராமணர்கள் அவசியம் தேவை.

இருப்பினும், பிராமண நிலையை எட்டினால் சமுதாயத்தில் மதிக்கப்படுவோம் என்ற காரணத்திற்காக, ஒருவன் பிராமணனாக மாறுவதற்கு முயற்சி செய்தால், அகங்காரத்தினால் மேற்கொள்ளப்படும் அத்தகு முயற்சி ஏற்கத் தக்கதல்ல. அவன் ஒருவித மரியாதையை எதிர்பார்ப்பதால், பிராமணனாக மாறுவதற்கான தகுதியை இழந்துவிடுகிறான். ஏனெனில், பிராமணனின் தன்மை பணிவுடன் செயல்படுவதே. சத்திரியராகப் பிறந்த விஸ்வாமித்ரர் போட்டி மனப்பான்மையின் காரணத்தினால் பிராமணராக வேண்டும் என்று முயற்சி செய்ததையும், அவர் தனது கர்வத்தை விட்டொழித்த பிறகே பிராமணராக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பதையும் புராணங்களில் காண்கிறோம்.

கலி யுகத்தின் ஜாதி முறை

கலி யுகத்தின் தாக்கத்தினால் உலகிலுள்ள பல்வேறு நிலைகள் மாறியிருப்பதுபோல, முறையான தூய்மையான வர்ணாஷ்ரம முறையும் சிதைந்துவிட்டது. பண்பற்ற உயர்வகுப்பினர் மற்றவர்களை வஞ்சிக்கத் தொடங்கியதால், சூழ்நிலை சீர்குலையத் தொடங்கியது என்று கூறலாம். வர்ணாஷ்ரமம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, தகுதியின் அடிப்படையில் என்று கூவிக் கூவிக் கூறினாலும், பிறப்பின் அடிப்படையிலான ஜாதி உணர்வுகள் மக்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளன. இத்தகைய ஜாதி உணர்வுகளை போக்குவதற்கு யாரும் உண்மையான முயற்சி மேற்கொள்வதில்லை. ஜாதிகளை எதிர்ப்பவர்களாகவும் ஜாதிகளைப் பரப்பும் பகவத் கீதையை எதிர்ப்பவர்களாகவும் கூறிக்கொள்பவர்கள்கூட, ஜாதியின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர் என்பதை யாவரும் அறிவர்.

பெயரளவில் உயர்குடியில் பிறந்தவர்களும் தங்களது பண்பாட்டை விட்டுவிட்டு, மது, மாது, மாமிசம் என்று அலைவதை இன்று கண்கூடாகக் காண்கிறோம். எனவே, சுருக்கமாகச் சொன்னால், தற்போதைய ஜாதி முறை வர்ணாஷ்ரம அமைப்பிலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டது என்று சொல்லலாம். இதனால்தான், கலௌ ஷூத்ர ஸம்பவ, கலி யுகத்தில் இருப்பவர்கள் அனைவரும் சூத்திரர்களே என்று கூறப்படுகிறது.

மக்களின் இறுதி நன்மையைக் கருத்தில் கொண்டு, முறையான, பக்குவமான வர்ணாஷ்ரம தர்மத்தினை சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டும் என்று இஸ்கான் இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விரும்பினார். சமுதாயத்தை சீர்திருத்துவதற்குப் பக்குவமான பிராமணர்களே முதல் தேவை என்பதால், அத்தகு பிராமணர்களை உருவாக்குவதற்கு ஸ்ரீல பிரபுபாதர் முக்கியத்துவம் கொடுத்தார். உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு பின்னனிகளைக் கொண்ட மக்களையும் தமது சீடர்களாக ஏற்று, அவர்களுக்கு பிராமண தீட்சை கொடுத்து, பூணூல் அணிவித்து, முறையான பிராமணத் தன்மைகளைக் கற்றுக் கொடுத்து, மிகவுயர்ந்த வைஷ்ணவர்களாக மாற்றும் திருப்பணியினை அவர் மேற்கொண்டார். அதனைப் பின்தொடர்ந்து, முறையான வர்ணாஷ்ரமத்தை வடிவமைக்க அவரது சீடர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பகவத் கீதையின் அறிவுரை

வர்ணாஷ்ரமம் கீதையில் எடுத்துரைக்கப்பட்டுள்ள போதிலும், கீதையின் குறிக்கோள் மக்களை ஜாதியில் மூழ்கடிப்பதல்ல. ஒவ்வொருவரும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட வேண்டும் என்பதே கீதையின் குறிக்கோள். கிருஷ்ண பக்தியில் ஈடுபடுவதற்கு எந்தவொரு தகுதியும் அவசியமில்லை. புத்திசாலி பிராமணராக இருக்க வேண்டும் என்பதோ, திறமை வாய்ந்த சத்திரியனாக இருக்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. தத்தமது தகுதிக்கு ஏற்றபடி கிருஷ்ணரை வழிபட்டு, எல்லாரும் உயர்ந்த பக்குவநிலையை அடைய முடியும். வைசியர்கள், சூத்திரர்கள், பெண்கள் என யாராக இருந்தாலும், பரம கதியை அடையலாம் என்பதை கிருஷ்ணர் கீதையில் (9.32) உறுதி செய்கிறார்.

கீதை, நாம் இந்த உடலே அல்ல என்றும், ஜீவன்கள் என்றும், கிருஷ்ணரின் நித்திய சேவகர்கள் என்றும் கற்றுத் தருகின்றது. உடலே அல்ல என்னும்போது, ஜாதி எங்கிருந்து வந்தது? கீதையின் குறிக்கோள் வர்ணாஷ்ரமத்தில் பற்று கொள்வதல்ல, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பற்று கொள்வதே.

மேலும், ஜடவுலகிலுள்ள உயர்நிலை, தாழ்நிலை என இரண்டுமே தற்காலிகமானவை என்பதையும் கீதை நமக்கு எடுத்துரைக்கின்றது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என எந்த நிலையில் இருந்தாலும், அவையனைத்தும் தற்காலிகமானவை. தற்காலிக விஷயங்களில் பற்றுதல் கொண்டு நேரத்தை விரயம் செய்வது கூடாது.

எந்த வர்ணத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டு தங்களையும் மற்றவர்களையும் மேம்படுத்த வேண்டும். கலி யுக தர்மமான ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிப்பதன் மூலம், சமுதாயத்திலுள்ள அனைவரும் கிருஷ்ண உணர்விற்கு ஏற்றம் பெற இயலும் என்பதே முடிவு.

ஆழ்ந்து யோசிக்காமல், பகவத் கீதையை முறையாகக் கற்காமல், ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மட்டுமே பகவத் கீதை ஜாதியைப் பரப்புகின்றது என்ற குற்றச்சாட்டினை முன்வைப்பர் என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறோம். இதுகுறித்த கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives