நவீன சமுதாயம் முன்னே செல்கிறதா, பின்னே செல்கிறதா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு நான் சிறுவனாக இருந்த காலக் கட்டத்தின் சூழ்நிலைகளை சற்று யோசித்து பார்க்கின்றேன். ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு பொது தொலைபேசியில் சுற்று, சுற்று, சுற்று என சுற்றி எதிர்முனையில் இருப்பவரை தொடர்பு கொள்ளலாம்; சுய தொலைபேசி என்பது அரிதான ஒன்று; மஹாபாரதம் நாடகத்தைப் பார்ப்பதற்காக இரண்டு தெருக்கள் சென்று அடுத்தவர் வீட்டில் ஓர் ஓரமாக அமர்ந்து கருப்பு வெள்ளையில் ரசித்து பார்க்கலாம்; யாரேனும் இரண்டு மாடிக் கட்டிடம் கட்டினால் அதனை ஊரார் அனைவரும் ஆச்சரியமாகப் பார்ப்பர்; பெரும்பாலான மக்களின் வீட்டில் சைக்கிள் இருப்பதுகூட அரிதாக இருந்தது.

நான் ஏதோ ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்தவன் அல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான திருச்சியில் இருந்த சராசரி வாழ்க்கை அது. ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. செல்போன்கள், வண்ணத் தொலைக்காட்சிகள், பல மாடிக் கட்டிடங்கள், வகை வகையான சொகுசு கார்கள், பல தரப்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் என வாழ்க்கையின் வசதிகள் எங்கும் பரவிவிட்டன. இவற்றை நினைத்துப் பார்க்கும் பெரும்பாலான நபர்கள், இந்தியா கடந்த இருபது வருடங்களில் எவ்வளவு வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை எண்ணி பெருமிதமும் பூரிப்பும் அடைகின்றனர்.

இந்தியா தனது வளர்ச்சிப் பாதையில் மேன்மேலும் முன்னேறி, உலகின் வல்லரசாக மாற வேண்டும் என்பதும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான வசதிகளுடன் திகழ வேண்டும் என்பதும் இன்றைய இந்தியர்களின் (குறிப்பாக இளைஞர்களின்) விருப்பம்.

மகிழ்ச்சியான சமுதாயம்

பத்தாம் வகுப்பு படித்தால் பெரியதாக கருதிய நாட்டில் பொறியியல் படிப்பு சகஜமாகி விட்டது, ரேடியோ சிக்னல் ஒழுங்காக கிடைக்காமல் போராடிய நாட்டில் அங்காங்கே செல்போன் டவர்கள் கம்பீரமாக நிற்கின்றன, 40 கிமீ வேகத்தில் தடதடவென அம்பாஸிடர் மட்டும் ஓடிய நாட்டில் 100 கிமீ வேகத்தில் சலனமின்றி செல்வதற்கு உகந்த கார்களும் சாலைகளும் அமைக்கப்பட்டு விட்டன, விமானம் தலைக்கு மேலே பறந்தால் ஊரே கூடி பார்த்த நாட்டில் தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் அங்காங்கே பறக்கின்றன, ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் நிறைந்து காணப்பட்ட நாட்டில் பற்பல மாடல்களில் கண்களைக் கவரும் கட்டிடங்கள் வளர்ந்து வருகின்றன, இவை மட்டுமின்றி மக்களுக்கு பலவித காம சுகங்களைக் கொடுக்கும் பொருட்டு தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் கவர்ச்சிப் படங்களை வெளியிடுகின்றன.

இவ்வாறு, பட்டப்படிப்பு, தொழில்நுட்ப வசதிகள், காம வாழ்க்கை, வேகமான கார்கள், எத்தனையோ விமானங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், ஐபேட், டச் ஸ்க்ரீன் என எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. இவற்றினால் இன்றைய மக்கள் நிச்சயமாக கடந்த இருபது வருடங்களுக்கு முந்தைய மக்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த மாற்றங்கள் அனைத்தும் மக்களின் மகிழ்ச்சிக்காக செய்யப்பட்டவையே. ஆனால், மகிழ்ச்சி என்பது இன்றைய சமுதாயத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டது என்னும் கசப்பான உண்மையினை சிந்தனையுடைய மனிதர்கள் நிச்சயம் உணர்கின்றனர். மகிழ்ச்சிக்காக பல காரியங்களைச் செய்தும், மகிழ்ச்சி ஏன் நம்மை விட்டு விலகிச் செல்கின்றது? இதைப் பற்றி யாரும் ஏன் யோசித்துப் பார்ப்பதில்லை?

இதோ மகிழ்ச்சியடைந்துவிடுவோம், இதோ மகிழ்ச்சியடைந்துவிடுவோம் என்ற எண்ணத்தில், கடின வேலைப்பளு, சொல்லவியலா மன அழுத்தம் போன்றவற்றுடன் வாழ்க்கை கொஞ்சமும் ஓய்வின்றி ஓடிக் கொண்டே உள்ளது. இன்றைய சமுதாயம் நிச்சயம் வெகு வேகமாகச் செல்கிறது, ஆனால் எங்கே செல்கிறது? நீங்கள் யோசித்தது உண்டா? எங்கே செல்கிறது இன்றைய சமுதாயம்? தெளிந்த பார்வையுடன் நோக்கினால், இன்றைய சமுதாயம் நிச்சயம் கீழ்நோக்கிச் செல்வதை உணர முடியும். ஆனால் இதைச் சொல்வதற்காக, இன்றைய மனிதர்களை அணுகினால், “நான் பிஸியாக இருக்கிறேன், வேகமாகச் செல்ல வேண்டியுள்ளது, அப்புறம் யோசிக்கலாம்” என்று நம்மிடம் கூறிவிட்டு, என்றுமே யோசிக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

“இன்னும் சில நாள்கள் போதும், என்னுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்,” என்ற கற்பனையில் மனிதன் கடினமாக உழைக்கிறான். சாப்பிடக்கூட நேரமில்லை, நேரம் கிடைக்கும்போது அங்காங்கே கண்ணில்படும் ஓட்டலில் உண்கிறான், நல்ல வீட்டைக் கட்டியுள்ளபோதிலும் அதில் அவன் தூங்குவதோ குடும்பத்தினருடன் நேரத்தைக் கழிப்பதோ இல்லை.

கழுதையைப் போன்ற இன்றைய மனிதர்கள்

இவர்களைப் பார்க்கும்போது கழுதைகள்தான் நினைவிற்கு வருகின்றன. முந்தைய காலத்தில், கழுதைகளிடமிருந்து கடின உழைப்பைப் பெறுவதற்காக, சலவைத் தொழிலாளிகள் அதன் கண்ணெதிரே சில காய்கறிகள் அல்லது புற்களை வைத்து, அதனை உடம்புடன் சேர்த்து கட்டிவிடுவர். இங்கேதான் புல் உள்ளது என்று எண்ணி கழுதை நடக்கும், ஆனால் அந்த புல்லானது அதன் உடம்புடன் சேர்த்து கட்டப்பட்டுள்ளதால், புல்லும் முன்னே நகரும். கழுதையும், இதோ, இதோ என்று நடந்து கொண்டேயிருக்கும். வர வேண்டிய இடத்திற்கு வந்தவுடன், எஜமானர் அந்த கழுதைக்கு சற்று புல்லைக் கொடுத்து மகிழ்ச்சியூட்டுவார், பின்னர் மீண்டும் அதே சுமையுடன் அதே வழிமுறையில் கழுதை திரும்பிவரும்.

கழுதைக்கு வேண்டிய புல் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும், ஆனால் இதோ, இதோ என்று சுமையைத் தூக்கிக் கொண்டு செல்வதால், கழுதை எப்போதுமே முட்டாள்களுக்கு உதாரணமாக கூறப்படுகிறது. உண்மையில், மூடா என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு முட்டாள் என்ற பொருளுடன், கழுதை என்று மற்றொரு பொருளும் உள்ளது. “இதோ மகிழ்ச்சி வந்துவிடும், இதோ மிகழ்ச்சி வந்துவிடும்,” என்ற எண்ணத்தில் எல்லா மகிழ்ச்சிகளையும் தியாகம் செய்து கடினமாக உழைக்கும் இன்றைய மக்களுக்கும் முட்டாள் கழுதைக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்றால், அது நிச்சயம் மிகையல்ல.

அனைவரும் இன்றைய உலகின் அசுர வளர்ச்சியைக் கண்டு (ஆம், உண்மையிலேயே அசுரத்தனமான வளர்ச்சிதான்) மயங்கியுள்ளனர். இந்த வளர்ச்சியுடன் இணைந்து வளர்ந்துள்ள பல்வேறு சமூகப் பிரச்சனைகளை யாரும் பார்ப்பதில்லை, அல்லது பார்த்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதைவிட கேவலம், சிலர் அந்த பிரச்சனைகளையும் முன்னேற்றமாக நினைத்துக் கொள்கின்றனர். உதாரணமாக, மேற்கத்திய வாழ்க்கை முறையை இந்தியா (வேகமாக) பின்பற்றத் தொடங்கிய கடந்த இருபது ஆண்டுகளில் காதல் திருமணம், விவாகரத்து போன்றவை பெருமளவில் வளர்ந்து வருகின்றன. இதிலுள்ள பிரச்சனைகளை பெரும்பாலான மக்கள் கண்டுகொள்வதில்லை, சிலரோ இதனை முன்னேற்றமாக நினைக்கின்றனர்.

இதோ கேரட் சாப்பிட்டு விடலாம் என்று முன்னே செல்லும் கழுதைக்கும், இதோ மகிழ்ச்சி வந்துவிடும் என்று கடினமாக உழைக்கும் இன்றைய மனிதனுக்கும் வேறுபாடு உண்டோ!

சீரழிந்து வரும் நற்பண்புகள்

வசதிகள் மட்டும் மகிழ்ச்சியைக் கொடுக்காது, இந்த உண்மையைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். வசதியினால் மட்டும் மகிழ்ச்சி இருக்கும் என்றால், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமே! ஆனால் அங்கும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள். மனித சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கு அவற்றின் நற்பண்புகள் அவசியம், வசதிகள் இருந்தும் நற்பண்புகள் இல்லாவிடில், சமுதாயம் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இன்றைய சமுதாயத்தின் தொடர் ஓட்டத்தினால், மக்கள் யாரும் நற்பண்புகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, அவர்களுக்குத் தேவையெல்லாம் பணம், பணம், பணம். பணத்திற்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். சமீபத்தில் ஓர் ஆட்டோவில் கண்ட வாசகம்: “காந்தி நாட்டிற்காக உழைத்தார், நாம் காந்தி நோட்டிற்காக உழைக்கிறோம்.”

பணத்தின் பின்னால் அலையும் சமுதாயம், பணத்தைப் பெறுவதற்காக எதைச் செய்யவும் தயாராக உள்ளது. நற்பண்புகள் பல, அவற்றில் நான்கு மிகவும் முக்கியமானவை: (1) கருணை, (2) வாய்மை, (3) தூய்மை, மற்றும் (4) தவம் (உயர்ந்த நன்மைகளுக்காக சிரமங்களை ஏற்றல்). இந்த நான்கு பண்புகளும் தர்மத்தின் (அறத்தின்) நான்கு தூண்களாக சொல்லப்படுகின்றன. ஆனால் இன்றோ இவை கொஞ்சம்கூட சட்டை செய்யப்படுவதில்லை.

கருணையுடன் இருப்பதற்கு பதிலாக, கடைக்குக் சென்று கிலோ என்ன விலை என்று கேட்கின்றனர். அதாவது, மாமிச உணவு உண்ணும் பழக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. எளியோரைக் கண்டால் வலியோர் பரிவு கொள்ள வேண்டும் என்ற நிலை மாறி, எளியோர் (அல்லது, உள்ளூர் மொழியில் கூறினால், இளிச்சவாயன்) என்று யாரையாவது கண்டால், அவரை எப்படி ஏமாற்றலாம் என்பதுதான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலையாக உள்ளது. கொஞ்சம் ஏமாந்தால் போதும், சற்றும் கருணையின்றி அனைத்தையும் சுருட்டிக்கொள்ள நம்மைச் சுற்றியுள்ளோர் தயாராக உள்ளனர்.

பணத்திற்காக பொய் பேச யாரும் தயங்குவதில்லை. பொய் பேசாமல் இருப்பதற்கு தமிழில் வாய்மை என்று ஒரு வார்த்தை உள்ளது என்பதைக்கூட அநேக நபர்கள் மறந்துவிட்டனர். தூய்மையின் கோட்பாடுகளை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதே இல்லை. காலையில் எழுந்து பல்கூட துலக்காமல், பெட் காபி குடிப்போர் ஏராளம், தினமும் குளித்து துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்ற நிலை மாறி, குளிக்காமல் சென்ட் அடித்து கொண்டு போட்ட ஜீன்ஸ்ஸை பல நாள்கள் போடுகின்றனர். எந்தவொரு சின்ன அசௌகரியத்தையும் பொறுத்துக் கொள்ள மக்கள் தயாராக இல்லை, அனைத்தும் உடனடியாக வேண்டும் என்ற எண்ணத்தில் சோம்பேறிகளாகி வருகின்றனர். வாய்மை, தூய்மை, தயை, தவம் ஆகிய தர்மத்தின் நான்கு தூண்கள் இல்லாத ஊரில், தர்மம் மட்டும் நிலைக்குமா என்ன? தர்மம் இல்லாத ஊரில் மகிழ்ச்சி இருக்குமா என்ன?

: ஷாஸ்த்ர-விதிம் உத்ஸ்ருஜ்ய  வர்ததே காம-காரத:

ந ஸ ஸித்திம் அவாப்னோதி  ந ஸுகம் ந பராம் கதிம்

“சாஸ்திர விதிகளை (தர்மத்தின் கோட்பாடுகளை) புறக்கணித்துவிட்டு மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவநிலையையே மகிழ்ச்சியையோ பரம கதியையோ அடைய முடியாது.” (பகவத் கீதை 16.23)

அதிகரித்து வரும் தீய பண்புகள்

நற்பண்புகள் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் தீய பண்புகள் நாள்தோறும் பெருகி வருகின்றன. தர்மத்திற்கு நான்கு தூண்கள் இருப்பதுபோலவே, அதர்மத்திற்கும் நான்கு தூண்கள் உள்ளன. அவையாவன: (1) மாமிசம் உண்ணுதல், (2) போதை வஸ்துக்களை ஏற்றல், (3) சூதாடுதல், மற்றும் (4) தகாத பாலுறவு கொள்ளுதல். இவை நான்கும் தர்மத்தின் தூண்களை சீர்குலைத்து, சமுதாயத்தின் அமைதியையும் மகிழ்ச்சியையும் சீர்குலைக்கின்றன. ஆனால் இன்றைய மக்கள் இதை அறியாமல் இருப்பதோடு, இந்த நான்கு பாவச் செயல்களில்தான் தங்களது வாழ்க்கையின் இன்பமே உள்ளது என்று எண்ணி, எந்த அளவிற்கு அவற்றில் அதிகமாக ஈடுபட முடியுமோ அந்த அளவிற்கு அதிகமாக ஈடுபடுகின்றனர்.

கொத்து கொத்தாக மிருகங்களை வதை செய்யும் கசாப்புக்கூடங்கள் இருக்கும் நாட்டில், சுனாமி, தீவிரவாதம், விபத்துகள், நிலநடுக்கம், புயல் போன்றவற்றினால் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சற்று யோசித்துப் பாருங்கள்: முந்தைய காலங்களில் மக்கள் இதுபோன்று கொத்து கொத்தாக கொல்லப்பட்டனரா? நிச்சயம் இல்லை என்று சொல்லாம், அல்லது குறைவாக என்று சொல்லலாம். ஏன் இன்று இவ்வாறு நடக்கின்றது? மக்களிடம் அசைவ உணவு உண்ணும் பழக்கம் அதிகரித்துவிட்டதே இதற்கான அடிப்படை காரணமாகும்.

குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி வைத்துவிட்டாலும், புகைப் பழக்கம் புற்றுநோயைக் கொடுக்கும் என்று எழுதி எழும்புக்கூட்டின் படத்தைப் போட்டாலும், மக்கள் போதைப் பொருட்களை கைவிடுவதாக இல்லை. உண்மையில், அரசாங்கமும் மக்களை போதையிலேயே வைத்திருக்க விரும்புவதால், இதைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை. ஒருபுறம் குழந்தையைக் கிள்ளி விட்டுவிட்டு மறுபுறம் தொட்டிலை ஆட்டுதல் யாரை ஏமாற்றுவதற்கு? தெருவிற்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு, மறுபுறம் மக்கள் துன்பப்படுகின்றனரே என்று ஒப்பாரி வைப்பதை கபடத்தனம் என்று கூறாமல் என்னவென்று சொல்வது! எத்தனையோ அரசியல்வாதிகள் மது தயாரிக்கும் தொழிற்சாலைகளை வைத்துள்ளனர், எங்கு போய் சொல்வது இந்த நிலையை!

நவீன சமுதாயத்தின் வர்த்தக முறையினால், ஏறக்குறைய எல்லா வியாபாரங்களும் சூதாட்டங்களாக மாறி வருகின்றன. வெளிப்படையான சூதாட்டங்களும் லாட்டரி சீட்டுகளும் பலரது நற்பண்புகளை அழிக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்ற விளம்பரத்தை மாற்றிவிட்டு, பாதுகாப்பான உடலுறவு என்ற விளம்பரத்தை ஊக்குவிப்பதன் மூலமாக, தகாத பாலுறவும் பெருகி வருகிறது.

 

மாமிசம் உண்ணுதல், குடிப் பழக்கம், தகாத பாலுறவு, திருட்டு, கொலை, கொள்ளை என அனைத்து தீய செயல்களும் நவீன சமுதாயத்தின் அங்கங்களாகி விட்டன.

இதர பிரச்சனைகள்

பன்னாட்டு நிறுவனங்களின் வரவினால் பிரபலமாகியுள்ள பார்ட்டி கலாசாரம் மேற்கூறிய நான்கு தீய பழக்கத்திற்கும் வழிவகுக்கின்றது. பார்ட்டி என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் நட்சத்திர ஓட்டலில் கூடி, மதுவருந்தி, மாமிசம் உண்டு, சூதாட்டத்தில் ஈடுபடுவதால், இயற்கையாகவே தகாத பாலுறவும் பெருகி வருகிறது. இந்தியாவின் ஆன்மீக பண்பாட்டினை சீரழித்தவற்றில் இந்த பார்ட்டிகள் சிறப்பிடம் பெறுகின்றன. நூற்றுக்கணக்கான வருடங்கள் கட்டிக்காத்த பாரம்பரியத்தினை சில வருடங்களில் அழித்த பெருமை இந்த பார்ட்டிகளுக்குச் சாரும். பார்ட்டியிலிருந்து ஒதுங்கி நல்ல பிள்ளைகளாக இருக்க விரும்பும் பலரும், சூழ்நிலையின் தாக்கத்தினால் இவற்றில் மயங்கி வருவதை அன்றாடம் காண்கிறோம்.

செல்போன் மூலமாக நண்பர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது என்பது உண்மை. ஆனால் அதனுடன் இணைபிரியாமல் பல்வேறு பிரச்சனைகளும் வருகின்றன. இருபது வருடங்களுக்கு முன்பு திருமணமாகாத ஆணும் பெண்ணும் தெருவில் நடந்து செல்வது மிகமிக அரிது, ஆனால் தற்போது சகஜம். இவ்வாறு அதிகரித்துள்ள ஆண், பெண் தகாத உறவிற்கு செல்போனின் பங்கும், அதிலுள்ள எஸ்எம்எஸ்-இன் பங்கும் நிச்சயம் புறக்கணிக்க இயலாதவை.

நவீன உலகம் எத்தனையோ மருத்துவமனைகளை பல்வேறு வசதிகளுடன் வழங்கியுள்ளது உண்மையே, ஆனால் அதனுடன் இணைந்து பல்வேறு வியாதிகளையும் கொடுத்துள்ளதே! செயற்கை உரங்களாலும் கொடிய பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், நாம் சாப்பிடுபவை அனைத்திலும் விஷம் உள்ளது, இயற்கை மருத்துவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வர். இந்த விஷங்களால் இன்றைய இளைய தலைமுறையில் பெரும்பாலானோர் புற்றுநோயினால் மடிவர் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். நிலம், நீர், காற்று என மாசு இல்லாத இடமே இல்லை. தொடர்ந்து பெருகி வரும் தொழிற்சாலைகளும் வாகனங்களும் தொழில்நுட்பமும் இந்த பூமியினை மனிதன் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி வருகின்றன.

உள்ளத்தில் சொல்லவியலா வருத்தம், ஆயினும் வெளியே போலியான சிரிப்பைக் காட்டும் எத்தனையோ மக்களை நான் பார்த்து வருகிறேன். வெளியில் சிரிப்பர், ஆனால் சற்று ஆழமாகப் பார்த்தால், அவர்களின் வாழ்வில் திருப்தி இல்லை என்பதை உணரலாம். மக்களின் கவலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன, எதிலும் ஒரு ஸ்திரமான நிலை இல்லை. பள்ளியில் படிப்போருக்கு அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவோமா என்ற பயம், படித்து முடித்தபின் வேலை கிடைக்குமா என்ற பயம், வேலை கிடைத்தபின் அந்த வேலை நிலைக்குமா என்ற பயம், நிலைத்தாலும் அதில் கொடுக்கப்பட்ட பணியையும் டார்கெட்டையும் அடைய முடியுமா என்ற பயம், திருமணம் ஆனாலும் பயம், திருமணம் ஆகாவிட்டாலும் பயம், திருமணம் நிலைத்திருக்குமா என்ற பயம், குழந்தைகளைப் பெற முடியுமா என்ற பயம், அவர்களுக்கு பள்ளிக்கூட தொகையைக் கட்ட முடியுமா என்ற பயம், அவர்களுக்கு நல்ல கல்லூரி கிடைக்குமா என்ற பயம், வயதான காலத்தில் யார் நம்மை பாதுகாப்பார் என்ற பயம், இப்படி வாழ்க்கை முழுவதும் பயம் நிறைந்து இருப்பதால், மக்களிடம் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. மனநல மருத்துவரை அணுகும் மக்களின் எண்ணிக்கை தினம்தினம் அதிகரித்து வருகிறது.

இவை மட்டுமின்றி, சமுதாயக் கலவரங்கள், மதக் கலவரங்கள், தீவிரவாதம், கற்பழிப்பு என எத்தனை எத்தனையோ பிரச்சனைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருகின்றன.

ஏன் இவ்வளவு பிரச்சனைகள்?

ஒருபுறம் வளர்ச்சிகள் தென்பட்டாலும், அவற்றைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக பிரச்சனைகளே தென்படுகின்றன. இவ்வளவு பிரச்சனைகள் உள்ள சமுதாயம் உண்மையிலேயே முன்னேறியுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயம் இந்த சமுதாயத்தில் ஏற்றத்தைக் காட்டிலும் இறக்கமே அதிகமாக உள்ளது. முன்னரே கூறியபடி, மக்கள் தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் வாழ்வதே பிரச்சனைகள் இந்த அளவிற்கு வளர்வதற்கு முக்கிய காரணமாகும்.

மனிதனுக்கும் மிருகத்திற்கும் பொதுவான செயல்கள் நான்கு: (1) உண்ணுதல், (2) உறங்குதல், (3) இனப்பெருக்கம் செய்தல், மற்றும் (4) தற்காத்தல். ஆனால் மனிதனை மிருகத்திடமிருந்து வேறுபடுத்துவது தர்மமே, தர்மம் இல்லாவிடில் மனிதன் மிருகத்திற்கு சமமானவன், தர்மேண ஹீன பஸுபி: ஸமான, என்று ஹிதோபதேஷம் கூறுகின்றது. மனிதர்கள் இன்று தர்மத்தைப் பற்றி சற்றும் யோசித்துப் பார்ப்பதில்லை. இதனால் இவர்கள் த்வி-பாத-பஸு, இரண்டு கால்களைக் கொண்ட மிருகங்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பண்பாட்டினை மறந்து, அறப் பழக்கங்களை மறந்து, கடவுளை மறந்து வாழ்வதால், நிச்சயம் இந்த சமுதாயத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அறப் பழக்கங்கள் இல்லாத மனிதன் மிருகத்திற்கு சமமானவன் என்பதைக் கண்டோம். எனவே, யோசித்துப் பாருங்கள்: மிருகங்களின் சமுதாயத்தில் அமைதி கிட்டுமா?

தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), மோக்ஷம் (வீடு) ஆகிய நான்கும் மனித சமுதாயத்தின் நான்கு குறிக்கோள்கள் என வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் இன்றைய நவீன சமுதாயமோ, பொருள், இன்பம் ஆகிய இரண்டினை மட்டுமே ஏற்று, தர்மத்தையும் மோக்ஷத்தையும் பற்றி கவலைப்படுவதில்லை. பொருளாதார முன்னேற்றம் வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறவில்லை, மாறாக அந்த பொருளாதார முன்னேற்றம் தர்மத்தின்படி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன, இன்பமும் தர்மத்தின்படி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. எல்லா இன்பத்தையும் துறந்து அனைவரும் சந்நியாசி ஆகி விடுங்கள் என்று சாஸ்திரங்கள் கூறவில்லை, அது சிலருக்கு மட்டுமே உரிய பாதை. தர்மாவிருத்தோ பூதேஷு காமோ’ஸ்மி “தர்மத்திற்கு விரோதமில்லாத காமம் நானே,” என்று கிருஷ்ணரே பகவத் கீதையில் (7.11) கூறுகிறார்.

எனவே, பொருளும் இன்பமும் தர்மத்துடன் இணைந்து செயல்பட்டால், அது படிப்படியாக மக்களை மோக்ஷத்தை நோக்கி அழைத்துவரும். தர்மம் இல்லையேல், பொருளும் இன்பமும் மக்களை மிருகங்களின் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். திருவள்ளுவர்கூட தனது திருக்குறளில், அறத்துப்பாலை முன்வைத்து தான் பொருளையும் இன்பத்தையும் பற்றி பேசுகின்றார்.

தர்மத்தை பயிற்சி செய்தல்

இன்றைய பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு, மக்கள் ஸ்திரமாக தர்மத்தை பயிற்சி செய்வதே. அப்போது படிப்படியாக சமுதாயத்தில் அமைதியும் ஆனந்தமும் வளரும். தர்மத்தைப் பற்றி சற்றும் அறியாத மக்கள், எங்கிருந்து தர்மத்தை தொடங்குவது? கவலை வேண்டாம்.

தர்மத்தின் உயர்நிலையினை பயிற்சி செய்வோம், அப்போது இதர நிலைகள் தானாக வந்துசேரும். தர்மத்தின் உயர்நிலை, பகவான் கிருஷ்ணருக்கு பிரியமான செயல்களைச் செய்வதே, தர்மம் து ஸாக்ஷாத் பகவத் ப்ரணீதம். (ஸ்ரீமத் பாகவதம் 6.3.19) அதாவது, ஆத்மாக்களாகிய நம் அனைவரின் உண்மையான தர்மம், முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணருக்கு தொண்டு செய்வதே. அவ்வாறு தொண்டு செய்து நாம் கிருஷ்ண பக்தர்களாக ஆகும்போது, நம்மிடம் உள்ள தீய பண்புகள் அனைத்தும் தானாக விலகி, நற்பண்புகள் அனைத்தும் தானாக வந்துவிடும். ஆனால் பக்தித் தொண்டில் ஈடுபட மறுப்பவர்களிடம் எந்தவொரு நற்பண்புகளும் காணப்படுவதில்லை. (ஸ்ரீமத் பாகவதம் 5.8.12)

தர்மம் ஒவ்வொரு யுகத்திற்கும் தகுந்தாற்போல மாற்றம் பெறுகின்றது என்றும், கலி யுகத்திற்கான தர்மம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்வது என்றும் சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் கூறுகின்றன. ஸத்ய யுகத்தில் தியானம் செய்வதும், திரேதா யுகத்தில் யாகம் செய்வதும், துவாபர யுகத்தில் கோயில் வழிபாடும் தர்மங்களாக இருந்து வந்ததைப் போலவே, கலி யுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களைப் பாடுவதே தர்மம் என்று ஸ்ரீமத் பாகவதம் (12.3.52) கூறுகின்றது.

மேலும், கலி யுகம் மிகவும் தோஷங்கள் நிறைந்த காலம் என்றபோதிலும், ஹரி நாம ஸங்கீர்த்தனம் அந்த தோஷங்களை எல்லாம் விலக்கி மிகவுயர்ந்த நன்மையைத் தரும் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (12.3.51) எடுத்தரைக்கின்றது. எனவே, கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்வது மட்டுமே இவ்வுலக வாழ்வின் எல்லாவித பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வை நல்கும்.

வளர்ச்சிகள் வேண்டாமா

தர்மத்தை பயிற்சி செய்து நற்பண்புகளை வளர்த்தால் மட்டும் போதுமா? வளர்ச்சிகள் வேண்டாமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். குறிப்பாக, நவீன விஞ்ஞான வளர்ச்சியினால் உருவாகிய பொருட்களை கிருஷ்ண பக்தர்கள் உபயோகிக்கும்போது, “ஸ்வாமிகளே, நவீன உலகின் முன்னேற்றத்தை நீங்கள் பின்னடைவாக கருதுகிறீர்கள், ஆனால் நீங்கள் ஏன் கார்களில் பயணம் செய்கிறீர்கள், எலக்ட்ரானிக் பொருட்களை உபயோகிக்கிறீர்கள்?” என்று சிலர் வாதிடலாம்.

ஸ்ரீல பிரபுபாதர் ஓர் உதாரணம் வழங்குவதுண்டு. 40 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இடத்தில் 60 கிமீ வேகத்தில் ஒருவன் சென்றால், அவனைப் பிடிப்பதற்காகச் செல்லும் காவல்துறையினர் நிச்சயம் 80 கிமீ வேகத்தில் சென்றாக வேண்டும். இங்கு 40 கிமீ தான் சட்டம் என்று நடந்தால், தவறு செய்பவரை காவல் அதிகாரியினால் என்றுமே கைப்பற்ற இயலாது. அதுபோல, கிருஷ்ண பக்தர்கள் நவீன உலகின் பொருட்களை கிருஷ்ணரின் தொண்டில் உபயோகிக்கலாம். மக்கள் கிருஷ்ணரிடமிருந்து விலகிச் செல்வதற்கு வழி செய்யும் அதே பொருட்களைக் கொண்டு, அதே மக்களை கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணரை நோக்கி அழைத்து வருகின்றனர்.

எனவே, வளர்ச்சிகளில் தவறில்லை. ஆனால் அந்த வளர்ச்சிகள் அசுரத்தனமாக இருப்பதாலும் தர்மத்தை விட்டு முற்றிலும் விலகிச் செல்வதாலும்தான் பிரச்சனைகள் வளர்கின்றன. ஹரி நாம ஸங்கீர்த்தனம் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் அதனதன் முக்கிய வீதிகளில் தினந்தோறும் நிகழ்த்தப்பட வேண்டும். அரசாங்க அலுவலர்கள், சட்டசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் இதில் கலந்து கொண்டால், சமுதாயம் படிப்படியாக உண்மையான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

கிருஷ்ணரிடம் சரணடைந்து அவரது வார்த்தையின்படி நடப்பதே மிகவுயர்ந்த தர்மம். அதனை கலி யுகத்தில் நாம ஸங்கீர்த்தனத்தினால் எளிமையாகச் செய்ய முடியும்.

பண்பாடுடன் வளர்வோம்

நாய் நான்கு கால்களில் ஓடுகிறது, மனிதன் நான்கு சக்கரங்கள் பூட்டிய வாகனத்தில் ஓடுகிறான். ஆனால் இருவரது ஓட்டத்தின் குறிக்கோள் ஒன்றாக இருக்குமாயின், மனிதனின் ஓட்டத்தில் பயன் இல்லை. மாறாக, அதே மனிதன் கிருஷ்ணருக்காக ஓடினால் அது சிறப்பானதாக அமையும்.

எனவே, வளர்ச்சிகள் வேண்டாம் என்று யாம் கூறவில்லை. ஆனால் அந்த வளர்ச்சிகள் தர்மத்தோடு இணைந்து செல்ல வேண்டும் என்பதே எமது கருத்து. கலி யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்துடன் இணைந்து நமது வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டால், மனித சமுதாயத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் சுமூக தீர்வை அடைய முடியும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives