பெண்விடுதலை
ஒருபெண்நிருபருடனான கீழ்காணும்தனது உரையாடலில்,பெண்கள்ஆண்களுக்கு பணிந்து வாழ வேண்டியதன்அவசியத்தை ஸ்ரீல பிரபுபாதர்எடுத்துரைக்கின்றார்.
நிருபர்: ஆண்களுக்கு கீழ்ப்பட விரும்பாத பெண்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: எனது அறிவுரை அல்ல, வேத இலக்கியங்களின் அறிவுரை யாதெனில், பெண்கள் கற்புடையவர்களாகவும், கணவரிடம் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே.
நிருபர்: அமெரிக்காவில் உள்ள நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இங்கு பெண்களை ஆண்களுக்கு நிகராக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக இயலாது; ஏனெனில், பல்வேறு விவகாரங்களில் உங்களுடைய பணிகள் வேறுபடுகின்றன. பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று செயற்கையாக கூறுவதற்கு என்ன காரணம்? மனைவிதான் கர்ப்பம் தரிக்க முடியமே தவிர, கணவனால் முடியாது. இதை உங்களால் மாற்ற முடியுமா? கணவன், மனைவி இருவரும் கர்ப்பம் தரிக்க முடியுமா? அது சாத்தியமா?
நிருபர்: (மௌனம்)
ஸ்ரீல பிரபுபாதர்: முடியுமா? சொல்லுங்கள்.
நிருபர்: இல்லை, அதுவல்ல…
ஸ்ரீல பிரபுபாதர்: எனவே, இயற்கையிலேயே ஒருவர் மற்றவரிடமிருந்து மாறுபட்டு செயல்பட வேண்டியுள்ளது.
நிருபர்: பெண் கர்ப்பம் தரிப்பதாலும் ஆண் கர்ப்பம் தரிக்காததாலும், பெண்கள் பணிந்து நடக்க வேண்டும் என பொருளில்லையே.
ஸ்ரீல பிரபுபாதர்: இயற்கையின்படி, குழந்தை பிறந்தவுடன் கணவரின் ஆதரவு உங்களுக்கு தேவை, இல்லையேல் நீங்கள் துன்பப்படுகிறீர்கள்.
நிருபர்: குழந்தைகள் உள்ள பெருவாரியான பெண்களுக்கு கணவரின் ஆதரவு இருப்பதில்லை. அவர்களுக்கு…
ஸ்ரீல பிரபுபாதர்: கணவரின் ஆதரவு இல்லாவிடில், அவர்கள் பிறரிடம் ஆதரவு பெற வேண்டும். இதை நீங்கள் மறுக்க முடியாது. அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவு தருகிறது, அதனால் இன்றைய அரசாங்கம் மிகவும் சங்கடப்படுகிறது. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கணவன் ஆதரவளித்தால், அரசாங்கம் சமூக நல செலவுகள் பெருமளவில் மிச்சமாகும். எனவே, இது ஒரு பிரச்சனைதான். (அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆதரவரற்ற பெண்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகின்றது. பெண் விடுதலை என்ற போர்வையில் முற்றிலும் சீரழிந்துபோன பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் அங்கு அதிகரித்து வருவதை ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக் காட்டுகிறார்.)
நிருபர்: பெண்கள் ஆண்களுக்கு ஆதரவு கொடுத்தால் என்ன நேரிடும்?
ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் நீங்கள் மற்றவர்களின் ஆதரவில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் இணைந்தவுடன், குழந்தைகள் பிறக்கின்றன. ஆண்கள் வெளியேறிவிட்டால், நீங்களே சங்கடப்படுகிறீர்கள், பெண்களே சங்கடப்படுகிறார்கள். ஏன்? குழந்தையுடன் சங்கடப்படும் பெண்கள் அரசாங்கத்திடம் பிச்சையெடுக்க வேண்டியுள்ளது. இதனை நல்ல விஷயம் என்று நினைக்கிறீர்களா? வேதப் பண்பாடு என்னவெனில், ஒரு பெண் ஓர் ஆணை மணம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது அந்த ஆண், அந்த பெண்ணையும் குழந்தைகளையும் தானே சுயமாக காப்பாற்ற வேண்டும். அதன் மூலமாக அவர்கள் அரசாங்கத்திற்கோ பொதுமக்களுக்கோ சுமையாக இருக்க மாட்டார்கள்.
நிருபர்: சமூக குழப்பங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் நீங்கள் எனக்கு பதில் கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் கேள்வியை மட்டும் கேட்டுக் கொண்டே உள்ளீர்கள். நான் உங்களைக் கேட்கிறேன். அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இவ்வாறு சுமையாக இருப்பது நல்லது என நினைக்கிறீர்களா?
நிருபர்: நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொரு வருடமும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அரசாங்கம் பல கோடி டாலர்களை செலவழிக்க வேண்டியுள்ளது. கணவன் தனது மனைவியை விட்டுச் செல்வதால் இந்த சுமை ஏற்படுகிறது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் இந்த சுமை நல்லதா?
நிருபர்: இல்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: பெண்கள் கீழ்ப்படிய ஒப்புக் கொள்வதில்லை என்பதே இதற்கு காரணம். அவள் சம உரிமையையும் முழு சுதந்திரத்தையும் விரும்புகிறாள்.
நிருபர்: பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்படிந்தால், அது நமது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் என்கிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கணவனுக்கு மனைவி கீழ்ப்படிபவளாகவும் நம்பிக்கை உடையவளாகவும் இருப்பின், கணவன் பொறுப்பேற்க தயாராகிறான். ஆணின் மனப்பாங்கும் பெண்ணின் மனப்பாங்கும் மாறுபட்டவை. எனவே, பெண், ஆணுக்கு கீழ்படிபவளாகவும் நம்பிக்கை உடையவளாகவும் இருந்தால், குடும்ப வாழ்க்கை அமைதியாக அமையும். மாறாக, கணவன் தனியாக சென்றால், மனைவி குழந்தைகளுடன் தனியாக சங்கடப்படுகிறாள். இதனால் இவர்கள் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் சுமையாக மாறிவிடுகிறார்கள்.
நிருபர்: பெண்கள் வேலை செய்வதில் ஏதேனும் தவறு உள்ளதா?
ஸ்ரீல பிரபுபாதர்: எவ்வளவோ தவறுகள் உள்ளன. ஆனால், ஒருவனுடைய மனைவியும் குழந்தைகளும் ஏன் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் சுமையாக இருக்க வேண்டும்? முதலில் இதற்கு பதில் அளியுங்கள். ஏன் அவர்கள் சுமையாக இருக்க வேண்டும்?
நிருபர்: (மௌனம்)
ஸ்ரீல பிரபுபாதர்: உங்கள் பதில் என்ன?
நிருபர்: உம், ஆண்கள்கூட அரசாங்கத்திற்கு சுமைதானே?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆதரவற்ற பெண்களும் தந்தையற்ற குழந்தைகளும் இந்த சமுதாயத்திற்கு நல்லதா?
நிருபர்: நான் சொல்ல விரும்புவது என்னவெனில், அதுபோன்ற நிலை சில பெண்களுக்கு நேரலாம். அதுபோன்ற நிலையில் இல்லாத பெண்களைப் பற்றி…
ஸ்ரீல பிரபுபாதர்: அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பெண்களின் நிலை இவ்வாறுதான் உள்ளது. இதை நான் பார்த்து வருகிறேன். சிலர் என்று சொல்ல முடியாது. பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்படிந்து இருந்தால், ஆண்கள் பெண்களுக்கு பொறுப்பேற்பார்கள். அப்போது இந்த பெண்கள் பொதுமக்களுக்கு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள்.
நிருபர்: இஃது எல்லா பெண்களுக்கும் எல்லா ஆண்களுக்கும் பொருந்துமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அதுவே இயற்கையின் நியதி. நீங்கள் நாய்களைப் பாருங்கள். அவைகூட தங்களது குட்டிகளை பாதுகாக்கின்றன, புலிகளும் தங்களது குட்டிகளை பாதுகாக்கின்றன. ஆகையால், மனித சமுதாயத்தில், ஒரு பெண்ணை கர்ப்பம் தரிக்கச் செய்துவிட்டு ஆண் ஓடிவிட்டால், அந்த பெண் சங்கடம் அடைகிறாள். அவள் அரசாங்கத்திடம் கையேந்தும்படி ஆகிறது. இது நல்ல நிலையல்ல.
நிருபர்: குழந்தை இல்லாத பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: அஃது மற்றுமொரு செயற்கையான நிலை. அவர்கள் கருத்தடை முறைகளை உபயோகிக்கிறார்கள், அல்லது கருக்கலைப்பின் மூலமாக குழந்தைகளைக் கொல்கிறார்கள். இவை நல்லதல்ல. இவையனைத்தும் பாவச் செயல்களே.
நிருபர்: புரியவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: கருக்கலைப்பு முறையினால் கருவில் உள்ள குழந்தையைக் கொல்வது பாவச் செயல். இதுபோன்ற பாவச் செயல்களுக்காக ஒருவர் துன்பப்பட்டே ஆக வேண்டும்.
நிருபர்: இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமுதாய குழப்பத்திற்கு காரணம்…
ஸ்ரீல பிரபுபாதர்: காரணம் மேற்கூறியவையே. ஆனால் இஃது அவர்களுக்குத் தெரியாது. பெண்கள் ஆண்களுக்குப் பணிந்து நம்பிக்கையுடன் செயல்பட்டால், ஆண்கள் பொறுப்பேற்க தயாராக இருக்கிறார்கள். அப்போது குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
நிருபர்: மிக்க நன்றி.