ஸ்ரீல பிரபுபதாதருடன் ஓர் உரையாடல்
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் என்றால் “அனைவரையும் கவரக்கூடியவர்” என்று பொருள். கடவுள் அனைவரையும் கவரக்கூடியவராக இல்லாவிடில், அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? யாரேனும் ஒருவர் கவரக்கூடியவராக இருந்தால், அவர் முக்கியமானவர், சரியா?
பாப்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் எல்லாரையும் கவரக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதால், கடவுளுக்கு ஏதாவது பெயர் இருக்குமானால், அல்லது கடவுளுக்கு ஏதாவது பெயர் கொடுக்க விரும்பினால், “கிருஷ்ணர்” என்று பெயர் கொடுக்கலாம்.
பாப்: ஏன் கிருஷ்ணர் என்ற பெயரை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில், அவர் வசீகரம் நிறைந்தவராக இருக்கிறார். கிருஷ்ணர் என்றால் “எல்லா வகைகளிலும் வசீகரமானவர், கவரக்கூடியவர்” என்று பொருள்.
பாப்: அப்படியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், கடவுளுக்கு பெயர் கிடையாது. ஆனால், அவரின் தன்மைகளைப் பொருத்து அவருக்கு நாம் பல்வேறு பெயர்களைத் தருகிறோம். ஒரு மனிதன் மிக அழகாக விருந்தால், அவனை நாம் “சுந்தரம்” என்று அழைக்கிறோம். ஒருவன் மிகுந்த புத்திசாலியாக இருந்தால், அவனை “அறிவாளி” என்கிறோம். எனவே, பெயர் என்பது தன்மையைப் பொருத்து அமைகிறது. கடவுள் எல்லா வகையிலும் வசீகரமிக்கவராக விருப்பதால், அவருக்கு “கிருஷ்ணர்” என்ற பெயர் பொருந்தமானதாகும், “கிருஷ்ணர்” என்றால் “வசீகரம் நிறைந்தவர்” என்று பொருள். எல்லா அம்சங்களும் இதில் அடங்கும்.
பாப்: “எல்லா வல்லமையும் கொண்டவர்” என்ற பொருளில் கடவுளுக்கு பெயர் ஏதேனும் உள்ளதா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம் வல்லமை இல்லாவிடில், எவ்வாறு வசீகரம் இருக்க முடியும்? கடவுள் எல்லா தன்மைகளும் கொண்டவர்; அவர் மிகுந்த அழகுள்ளவராக, சிறந்த புத்திமானாக, பலமானவராக, புகழ் மிக்கவராக இருக்க வேண்டும். கிருஷ்ணர் பூரணமானவர் என்பதால், அவரிடம் அனைத்து குணங்களும் உள்ளன.
பாப்: கிருஷ்ணரை வசீகரமானவர் என்று கருதாதவர்கள் இருக்கிறார்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. எல்லாருமே கிருஷ்ணரை வசீகரமானவராகவே காண்கிறார்கள். அவரால் வசீகரிக்கப்படாதவர்கள் யாருமுண்டோ? எங்கே, ஓர் உதாரணம் சொல்லுங்கள்: “இந்த மனிதனுக்கு, அல்லது இந்த உயிரினத்திற்கு கிருஷ்ணரைப் பிடிக்கவில்லை” என்று எடுத்துக்காட்டுங்கள். அப்படிப்பட்ட ஒருவரைக் கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்.
பாப்: தவறு என்று தெரிந்திருந்தும், அதிகாரம், பணம், கௌரவம் போன்றவற்றிற்காக கடவுளை மறுப்பவர்கள் உள்ளனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
பாப்: அவர்கள் கடவுளை விரும்பாததுபோல தோன்றினாலும், அவர்களிடம் ஒரு குற்ற உணர்வு காணப்படுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: அவன் அதிகார பலம் பெறுவதற்கும் பணக்காரனாகுவதற்கும் ஆசைப்பட்டால்கூட, கிருஷ்ணரை விடச் செல்வமிக்கவர் எவருமில்லை என்பதால், அவனும் கிருஷ்ணரை விரும்பத்தக்கவராகவே நினைக்கிறான்.
பாப்: செல்வத்தை விரும்புபவன் கிருஷ்ணரைப் பிரார்த்தித்தால் அவனுக்கு செல்வமெல்லாம் கிடைக்குமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஓ, நிச்சயமாக.
பாப்: இந்த முறையை அனுசரிப்பதால் அவன் செல்வந்தனாக ஆக முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், கிருஷ்ணர் சகல சக்திகளும் வாய்ந்தவர். செல்வம் வேண்டுமென்று கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தால், அவர் உங்களைச் செல்வந்தராக ஆக்குவார்.
பாப்: தீய செயல்களில் ஈடுபட்டிருப்பவன் பணம் வேண்டுமென்று பிரார்த்தித்தால் அவனுக்கும் கூட செல்வம் கிட்டுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், கிருஷ்ணரிடம் பிரார்த்திப்பது கெட்ட செயல் அல்ல.
பாப்: அது சரி.
ஸ்ரீல பிரபுபாதர்: (உள்ளூர சிரித்தபடி) எப்படியோ கிருஷ்ணரை நோக்கி அவன் பிரார்த்திக்கிறான், அவனைக் கெட்டவன் என்று கூற முடியாது.
பாப்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணரை நோக்கிப் பிரார்த்திக்க தொடங்கியவுடன், ஒருவனது செயல்கள் தீங்கற்றவையாகிவிடும். இவ்வாறாக, அவர் எல்லாரையும் கவருகிறார். பரம புருஷனான முழுமுதற் கடவுள், எல்லா இன்பங்களின் இருப்பிடம் என்று வேதங்களில் கூறுப்பட்டுள்ளது: ரஸோ வை ஸ:. அவர் தெய்வீக இன்பங்கள் நிறைந்தவர்.
அருகிலிருந்த சீடர்: கிருஷ்ணர் விஞ்ஞானிகளுள் மிகச் சிறந்தவர் என்று நீங்கள் கூறுவது ஏன்?
ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில், அவர் எல்லாம் அறிந்தவர். விஞ்ஞானி என்பவன் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் அறிந்துள்ளான். கிருஷ்ணர் எல்லாவற்றையும் முழுமையாக அறிந்துள்ளதால், அவர் ஒரு விஞ்ஞானியாவார்.
பாப்: நானும் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியனாகவே உள்ளேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: கற்பிக்கிறீர்கள், ஆனால் உங்களிடம் முழுமையான அறிவு இல்லை; அஃது இல்லாமல் உங்களால் எப்படி கற்பிக்க முடியும்? இதுவே எங்களின் கேள்வி.
பாப்: முழுமையான அறிவு இல்லாவிட்டாலும்கூட ஒருவர் கற்பிக்கலாம்…
ஸ்ரீல பிரபுபாதர்: அது ஏமாற்றுவதாகும். கற்பிப்பதல்ல, ஏமாற்றுவது. ஓர் அதிர்வெடி ஏற்பட்டது, சிருஷ்டிகள் தோன்றின, அது இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் சொல்வது ஏமாற்றுவதேயாகும். அது கற்பிப்பதல்ல, ஏமாற்றுவது!
பாப்: முழுமையான அறிவில்லாமல் நான் சில விஷயங்களைக் கற்பிக்கக் கூடாதா?
ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்குத் தெரிந்தவரையில் சொல்லித் தரலாம்.
பாப்: ஆனால், எனக்குத் தெரிந்ததற்கு மேல் நான் கற்பிக்க முற்படக் கூடாது.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படிச் செய்வது ஏமாற்றுவதாகும். மனிதனின் உணர்வுகள் நிறைவு பெறாதவை. எனவே, நிறைவான அறிவை அவனால் எவ்வாறு போதிக்க இயலும்? நமது கண்களால் நேரடியாகக் காணும்போது, சூரியன் ஒரு தட்டினைப் போல காணப்படுவதாக எடுத்துக்கொள்வோம். சூரியனை அணுகுவதற்கான சாதனம் உங்களிடம் இல்லை, நீங்கள் தொலைநோக்கியின் வழியாக சூரியனைப் பார்க்கலாம். ஆனால், நீங்கள் குறைபாடுகள் கொண்டவர் என்னும் பட்சத்தில், உங்களால் செய்யப்பட்ட எந்திரங்கள் எவ்வாறு குறைவற்றதாக இருக்க முடியும்? எனவே, சூரியனைப் பற்றிய உங்களது அறிவு குறையுள்ளதாகும். ஆகையால், முழுமையான அறிவு இருந்தாலொழிய சூரியனைப் பற்றிக் கற்பிக்காதீர்கள். அஃது ஏமாற்றுவதாகும்.
பாப்: சூரியன் 9,30,00,000 மைல்களுக்கு அப்பால் இருப்பதாகக் கருதப்படுகிறது; இதை நான் கற்பிப்பது தவறா?
ஸ்ரீல பிரபுபாதர்: ‘கருதப்படுகிறது’ என்று சொல்வது, விஞ்ஞான ரீதியிலான கூற்று அல்ல.
பாப்: அப்படியெனில், அனேகமாக விஞ்ஞானம் முழுவதுமே விஞ்ஞானமாகாது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அதுதான் விஷயம்!
பாப்: விஞ்ஞானமெல்லாமே ஏதாவதொரு அனுமானத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அவர்கள் கற்பிப்பதில் குறைபாடுகள் இருக்கின்றன. அவர்களுடைய அறிவு முழுமையானதென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
பாப்: இல்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: பிறகு?
பாப்: அப்படியெனில், சமுதாயத்தில் ஆசிரியர்களின் சரியான கடமை என்ன? ஒரு விஞ்ஞான ஆசிரியர் வகுப்பறையில் செய்ய வேண்டியது என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: வகுப்பறை? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கிருஷ்ணரைப் பற்றிக் கற்பிப்பதேயாகும். கிருஷ்ணரைப் பற்றிக் கற்பிப்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகும். கிருஷ்ணரை அறிவதே அவரின் நோக்கமாக இருக்க வேண்டும். மற்றொரு நாள் நான் விளக்கிக் கொண்டிருந்தேன்: ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் இரசாயன விதிகளின்படி இணைக்கும்போது, நீர் உருவாகுவதாக கூறப்படுகிறது.
பாப்: ஆம். உண்மைதான்.
ஸ்ரீல பிரபுபாதர்: அட்லாண்டிக் கடலிலும் பசிபிக் கடலிலும் மாபெரும் அளவில் நீர் இருக்கிறது. இதற்கு எவ்வளவு ரசாயனங்கள் தேவைப்பட்டிருக்கும்?
பாப்: எவ்வளவா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், எத்தனை டன்கள்?
பாப்: ஏகப்பட்டது.
ஸ்ரீல பிரபுபாதர்: அதை அளித்தது யார்?
பாப்: இதைக் கடவுள் அளித்திருக்கிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: இது விஞ்ஞானம். இப்படி நீங்கள் போதிக்கலாம். ஹைட்ரஜனும் அக்ஸிஜனும் இல்லாமல் நீர் உற்பத்தியாகாது. அட்லாண்டிக், பசிபிக் மட்டுமல்ல, கோடிக்கணக்கான கோள்கள் உள்ளன; அங்குள்ள நீர் அனைத்தையும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு யார் சிருஷ்டித்தது? பகவத் கீதையில், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றை கிருஷ்ணர் தன்னுடைய சக்திகளாக கூறுகிறார். உங்களுடைய உடல் உங்களது சக்தியால் உண்டாக்கப்படுவதுபோலவே, பிரபஞ்சமாகிய இந்த மாபெரும் தோற்றம் முழுவதும் கடவுளின் சக்தியினால் உருவானது. இதுவே உண்மை.
பாப்: ஆம். இப்போது தெரிகிறது.