வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
காலமோ கலி காலம்! மக்களிடம் இருப்பதோ மடமை! கடவுளை சாமனியரைப் போல கருதுவோர் ஏராளம்! மஹாபாரதம், இராமாயணம் போன்ற காவியங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துகளும் ஏக்கச்சக்கம்! அவற்றில் ஒன்று: வேடனின் அம்பில் கிருஷ்ணர் மடிந்தார் என்னும் கருத்தாகும். முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் ஒரு சாதாரண வேடனின் அம்பினால் மடிதல் சாத்தியமா? சற்று அலசிப் பார்ப்போம்.
இறைவன், ஆதி அந்தம் அற்றவர்
கிருஷ்ணரின் மறைவைப் பற்றி நாம் விவாதிப்பதற்கு முன்பாக, கிருஷ்ணரின் தன்மைகளை சற்று அறிந்துகொள்ளுதல் அவசியமாகும். கிருஷ்ணர் என்பவர் ஒரு சாதாரண மனிதனோ, பல்வேறு கடவுள்களில் ஒருவரோ அல்ல. அவர் எல்லா காரணங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள், ஆதி அந்தம் அற்ற இறைவன்; மேலும், தனக்கு நிகராகவோ தன்னை விட உயர்ந்தவராகவோ யாரும் இல்லாத பெருமாள். இந்த உண்மை, கிருஷ்ணரின் மறைவினை எடுத்துரைக்கும் இரண்டு சாஸ்திரங்களிலும் (மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம்) தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் அனைத்து செயல்களும் தெய்வீகமானவை என்றும், அவையனைத்தும் அவரது சொந்த விருப்பத்தின்படியே நிகழ்கின்றன என்றும் பகவத் கீதை (4.6, 4.9) அறுதியிட்டு உரைக்கின்றது. எனவே, இதில் நாம் துளியும் சந்தேகம்கொள்ளுதல் கூடாது. சாஸ்திரங்களின் இத்தகைய கூற்றுகளை சந்தேகம் கொள்வோர், கிருஷ்ணரின் மறைவைப் பற்றிய விவாதத்திற்கு முற்றிலும் தகுதியற்றவர்கள் ஆகின்றனர்; ஏனெனில், கிருஷ்ணரின் மறைவானது அந்த மஹாபாரதம் மற்றும் பாகவதத்தில்தானே விளக்கப்பட்டுள்ளது!
முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் தனது தெய்வீக திருமேனியில் இந்த பூவுலகில் அவதரிக்கின்றார். அவரது உடல் நம்மைப் போன்று பஞ்சபூதங்களினால் ஆனது அல்ல. அவரது உடல் நித்தியமானது, ஆனந்தமும் அறிவும் நிறைந்தது. தனது தெய்வீகத் திருமேனியில் அவதரிப்பதால், அவர் என்றும் வயோதிகத்தை அடைவதில்லை. கிருஷ்ணரை நாம் ஒருபோதும் எங்குமே வயதானவரின் தோற்றத்தில் காண்பதில்லை. குருக்ஷேத்திர போர் நிகழ்ந்தபோது, கிருஷ்ணரின் வயது 90; ஆனால் அவர் அப்போதும் ஒரு பதினாறு வயது இளைஞனைப் போலவே காணப்பட்டார். ஆன்மீக உலகில் கிருஷ்ணர் எந்த தெய்வீக திருமேனியுடன் வீற்றுள்ளாரோ, அதே திருமேனியுடன் இங்கே இறங்கிவருகிறார். எனவே, அவரது உடல் நமது உடல்களைப் போல பிறப்பிற்கும் இறப்பிற்கும் உட்பட்டதல்ல. பிறப்பற்ற அந்த பெருமானின் தெய்வீக பிறப்பு குறித்து, பகவத் தரிசனத்தில் அடியேன் நான்கு வருடங்களுக்கு முன்பே (செப்டம்பர் 2010) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். தற்போது, மரணமற்ற அந்த பெருமானின் தெய்வீக மறைவு குறித்து எழுதுகிறேன்.
அவதாரங்களின் மறைவு
ஸ்ரீமத் பாகவதத்திலும் இதர புராணங்களிலும் பரம புருஷ பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் எங்கு பிறந்தார் (பிறப்பார்), அவருடைய பெற்றோர் யார், அவர் நிகழ்த்திய அசாத்தியமான செயல்கள் யாவை போன்ற விவரங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவருடைய மறைவு பற்றி மிகக் குறைந்த தகவல்களே கொடுக்கப்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தோன்றிய மத்ஸர், வராஹர், கூர்மர், நரசிம்மர் போன்ற அவதாரங்கள் இவ்வுலகிலிருந்து மறைந்ததுபற்றி எந்த தகவலும் இல்லை.
மனித சமுதாயத்தில் மக்களுடன் மக்களாக வாழ்ந்த அவதாரங்கள் வெகு சிலரே; அவர்களின் மறைவு குறித்த சில தகவல்கள் சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. பகவான் இராமரும் இலக்ஷ்மணரும் சராயு நதியில் இறங்கி இவ்வுலக மக்களின் பார்வையிலிருந்து மறைந்ததாக இராமாயணம் விளக்குகின்றது. பரசுராமர் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். பகவான் சைதன்யரோ பூரியின் கோபிநாதர் கோயிலுள்ள கிருஷ்ண விக்ரஹத்தினுள் மறைந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில், பகவான் கிருஷ்ணர் மட்டும் ஒரு வேடனின் அம்பினால் அடிபட்டு, அதனால் மடிந்ததாக கூறப்படுகிறதே! இஃது ஏன்? கிருஷ்ணருடைய மறைவு அவ்வாறு நிகழ்வதற்கு ஏதேனும் காரணம் உண்டா? அல்லது, அவரது மறைவு அவ்வாறுதான் நிகழ்ந்ததா? வேடனின் அம்பினால் துளைக்கப்பட்டு கிருஷ்ணர் மடிந்தார் என்பதை மட்டுமே பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர், ஆனால் அதன் முழு விவரத்தையும் அவர்கள் அறியாத காரணத்தினால், கிருஷ்ணரைப் பற்றி புரிந்துகொள்ள இயலாமல் தவிக்கின்றனர். கிருஷ்ணரின் மறைவினை ஸ்ரீமத் பாகவதம் எவ்வாறு எடுத்துரைக்கின்றது என்பதை இங்கு காண்போம்.
ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படும் கிருஷ்ணரின் மறைவு
உத்தவர் பத்ரிகாஷ்ரமத்திற்குச் சென்றபின், தனது லீலைகளை முடித்துக் கொள்ள விரும்பிய கிருஷ்ணர், யாதவர்களை துவாரகையிலிருந்து பிரபாஸ க்ஷேத்திரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களைப் பல்வேறு சடங்குகளில் ஈடுபடுத்தினார். தனது உறவினர்கள் அனைவரும் தனக்கு முன்பாக இவ்வுலகிலிருந்து செல்ல வேண்டும் என்று விரும்பிய கிருஷ்ணர், அவர்களை தனது மாயச் சக்தியினால் கவர, அவர்கள் ஒருவகையான மதுபானத்தினை அருந்தி போதையில் மூழ்கினர். அவர்களின் அறிவு மயக்கப்பட்டதால் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினர், கிருஷ்ண பலராமரைத் தவிர மற்ற அனைவரும் மடிந்தனர்.
அதன் பின்னர் கடற்கரைக்குச் சென்ற பலதேவர், அங்கிருந்தபடி இவ்வுலகிலிருந்து மறைந்தார். பலராமர் மறைந்ததைக் கண்ட கிருஷ்ணர் ஓர் அரச மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்தார். பின்னர், பிரகாசமான தனது நான்கு கரங்களைக் கொண்ட ரூபத்தினை வெளிப்படுத்தினார். அதனால் ஏற்பட்ட பிரகாசம் சுற்றியிருந்த இருளை நீக்கியது. கருநீல மேகம் போன்ற மேனியுடனும், உருக்கிய பொன்னிற பிரகாசத்துடனும் திகழ்ந்த அவரது திருமேனி ஸ்ரீவத்ஸக் குறியினைத் தாங்கியிருந்தது. அழகிய புன்னகை அவரது முகத்தில் அரும்பியிருக்க, சுருளான கருநீல முடி அவரது தலையை அலங்கரித்தது. அவரின் தாமரைக் கண்கள் வசீகரமாக இருந்தன, மகர குண்டலம் மின்னியது, பட்டுத் துணிகளை உடுத்தியிருந்தார். அலங்கார ஒட்டியாணம், வளையல்கள், இதர கையாபரணங்கள், தலையில் கிரீடம், கௌஸ்துப மணி, கழுத்தணி, என பல உயர்ந்த ஆபரணங்களை அணிந்திருந்தார். அவரது உடலை மலர் மாலைகளும் ஆயுதங்களும் அலங்கரித்தன. அவர் தனது இடதுகாலின் அடிப்பாதங்கள் தெரியும்படி, இடது காலை வலது தொடையின் மீது வைத்தபடி அமர்ந்திருந்தார்.
அப்பொழுது ஜரா என்னும் வேடன், பகவானின் அடிப்பாதத்தினை மான் என்று நினைத்து அம்பு தொடுத்தான். நான்கு கரங்களுடன் இருந்த கிருஷ்ணரைக் கண்டவுடன், வேடன் தனது தவறை எண்ணி நடுங்கினான். அசுரர்களின் எதிரியான இறைவனின் பாதங்களில் தனது தலைபடும்படி விழுந்து வணங்கினான். தன் தவறினை உடனடியாக உணர்ந்த வேடன், தன்னை மன்னிக்கும்படி சரணடைந்து வேண்டினான். “எனதன்புள்ள ஜரா, பயப்படாதே, எழுந்திரு. தற்போது நடந்த செயல் எனது விருப்பத்தின்படியே நடந்தது. கவலைப்படாதே, உன்னை நான் ஆன்மீக உலகத்திற்கு அனுப்பி வைக்கிறேன்,” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எந்தவொரு சலனமும் இன்றி பதிலளித்தார். பகவானின் கட்டளையை ஏற்ற ஜரா, அவரை மூன்றுமுறை வலம் வந்து வணங்கினான். அப்போது அங்கு தோன்றிய விமானத்தில் ஏறிய வேடன், அங்கிருந்து ஆன்மீக உலகத்திற்குப் புறப்பட்டான்.
அப்போது தனது எஜமானரைத் தேடிய தாருகன் அங்கு வந்தான். கிருஷ்ணர் இருந்த இடத்தின் அருகில் வந்தவுடன், துளசியின் மணம் வந்த திசையினை நோக்கிச் சென்றான். சுற்றிலும் தன் ஆயுதங்கள் இருக்க, அரச மரத்தினடியில் இருந்த கிருஷ்ணரைக் கண்டவுடன், அவர் மேல் பொங்கிய அன்பினை தாருகனால் கட்டுப்படுத்த இயலவில்லை. தேரிலிருந்து இறங்கி பகவானை நோக்கி ஆனந்தக் கண்ணீருடன் விரைந்து வந்து அவரது பாதங்களில் பணிந்தான். பகவானின் சாரதியான தாருகன் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கையில், பகவானின் தேர் அங்கிருந்து எழுந்து மேலே சென்றதை தாருகன் தன் இரு கண்களால் கண்டான். கருடனின் கொடியைத் தாங்கிய அத்தேருடன் குதிரைகளும் சென்றன. விஷ்ணுவின் திவ்ய அஸ்திரங்களும் மேலெழுந்து, தேரினைப் பின்தொடர்ந்தன. பிரம்மதேவர், சிவபெருமான் உட்பட பல்வேறு தேவர்கள் சூழ, விண்வெளியிலிருந்து வாத்தியங்கள் முழங்க மலர் மாரி தூவப்பட்டபோது, கிருஷ்ணரும் அங்கிருந்து புறப்பட்டார்.
கிருஷ்ணரின் மறைவு குறித்த ஸ்ரீமத் பாகவதத்தின் மேற்கூறிய தகவல்களைப் படித்தவர்களுக்கு, மேலும் சில விளக்கங்களையும் வழங்குகிறோம்.
ஏன் வேடனின் அம்பில் மடிய வேண்டும்?
கிருஷ்ணர் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் மடிந்தார், சரி. ஆனால் அவர் ஏன் வேடனால் கொல்லப்பட வேண்டும்?
உண்மையில், கிருஷ்ணர் வேடனால் கொல்லப்படவில்லை. கிருஷ்ணரைக் கொல்ல யாராலும் முடியாது. குருக்ஷேத்திர போரில் கிருஷ்ணரின் உடல் முழுவதையும் பீஷ்மரின் அம்புகள் துளையிட்டன என்று கூறப்பட்டுள்ளது. பீஷ்மரின் ஆயிரக்கணக்கான அம்புகளை மலர் மாலைகளாக ஏற்ற கிருஷ்ணரின் திருமேனி, சாதாரண ஒரு வேடனின் ஒரே ஒரு அம்பினால் மடிந்துவிடுமா என்ன? அதுமட்டுமின்றி, உள்ளங்காலில் அம்பு எய்தப்பட்டு, சாதாரண மனிதர்கள்கூட மடிய மாட்டார்கள்; கிருஷ்ணர் அதனால் மடிவாரோ? இது சற்றும் பொருத்தமில்லாததாக தோன்றுவதை சிறிதளவு அறிவு படைத்தவர்கள்கூட புரிந்துகொள்ளலாம். சரி; என்னதான் காரணம்?
நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்யயோக–மாயா–ஸமாவ்ருத:
மூடோ ’யம் நாபிஜானாதிலோகோ மாம் அஜம் அவ்யயம்
“சிற்றறிவுடையோனுக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் மறைக்கப்பட்டுள்ளதால், நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை.”
கிருஷ்ணர் தன்னை தனது பக்தர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்த விரும்புகிறார் (பகவத் கீதை 18.55) என்பதால், தன்மீது பொறாமை கொண்டுள்ள இதர நபர்களை ஒதுக்கிவைப்பதற்காக கிருஷ்ணர் கையாண்ட தந்திரமே அவரது மறைவு லீலை (மௌஷல லீலை). கிருஷ்ணரது தெய்வீக திருமேனியை அறியாமல் அவரை ஏளனம் செய்யும் மக்களை மேலும் குழப்பும்பொருட்டு, கிருஷ்ணர் இந்த லீலையினை வெளிப்படுத்தினார். இறைவனின் தோற்றம் எவ்வாறு ஜட இயற்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதோ, அதுபோன்று அவரது மறைவும் ஆச்சரியமானது என்பதை நாம் காணலாம்.
வேடனின் அம்பினால் கிருஷ்ணர் மரணமடைந்தார் என்று நினைக்கும் குறைமதியாளர்கள், இறைவன் தனது சொந்த விருப்பத்தினால் இவ்வுலகை விட்டுச் சென்றார் என்பதை பாகவதத்திலிருந்து அறியலாம். இவ்வாறாக, பக்தியினால் கிருஷ்ணரை அணுகுவோர் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அவரது மறைவு லீலை அரங்கேற்றப்பட்டது.
மத்வாசாரியரின் விளக்கம்
ஸ்ரீபாத மத்வாசாரியர் தனது மஹாபாரத-தாத்பர்ய-நிர்ணயத்தின் இறுதியில், கிருஷ்ணரின் மௌஷல லீலை குறித்து பின்வருமாறு எழுதியுள்ளார். “அசுரர்களை குழுப்புவதற்காகவும் தன்னுடைய பக்தர்கள் மற்றும் பிராமணர்களின் வார்த்தையினை உறுதிப்படுத்துவதற்காகவும், முழுமுதற் கடவுள் ஜட சக்தியினாலான ஒரு மாய உடலை உருவாக்கினார். வேடனின் அம்பு அந்த மாய உடலையே தாக்கியது, கிருஷ்ணரின் தெய்வீக திருமேனியை அல்ல. பகவானின் உண்மையான தெய்வீக ரூபம் ஒருபோதும் ஜராவின் அம்பினால் தாக்கப்படவில்லை. வேடன் ஜரா தனது முந்தைய பிறவியில் பகவானின் பக்தரான பிருகு முனிவராக இருந்தார். பகவானின் மார்பில் காலை வைத்த குற்றத்திற்காக, அவர் வேடனாக பிறக்க நேர்ந்தது. இழிவான நிலையில் தனது பக்தர்கள் இருப்பதைக் காண விரும்பாத பகவான், வேடன் ஜராவின் உருவிலிருந்த தனது பக்தரான பிருகு முனிவர் மோக்ஷம் பெறும் பொருட்டு, ஜட சக்தியினாலான ஒரு போலியான உடலை ஏற்பாடு செய்தார்.
“இவ்வாறாக, தனது பக்தரான பிருகுவை திருப்திப்படுத்துவதற்காகவும் அசுரர்களைக் குழப்புவதற்காகவும், முழுமுதற் கடவுள் தனது மௌஷல லீலையினை பிரபாஸத்தில் வெளிப்படுத்தினார். பரம புருஷ பகவானான கிருஷ்ணர் தனது லீலைகளின் ஆரம்பத்திலிருந்தே எந்தவொரு பௌதிக குணங்களையும் வெளிப்படுத்தவில்லை. அவர் தனது தாயின் கருவிலிருந்து தோன்றவில்லை. மாறாக, தனது அசிந்திய (புரிந்துகொள்ளவியலா) சக்தியின் மூலமாக தோன்றினார். அதுபோலவே, இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போதுகூட, அசுரர்களைக் குழப்பக்கூடிய மாயமான சூழ்நிலையில் மறைந்தார். ஸச்-சித்-ஆனந்தமான தனது தெய்வீக திருமேனியில் நித்தியமாக வீற்றிருக்கும் பகவான், ஜட சக்தியைக் கொண்டு ஒரு பௌதிக உடலை உருவாக்கி, அதனை வீழ்ச்சியடையச் செய்தார். தனது தெய்வீக திருமேனியில் மீண்டும் தனது இருப்பிடத்திற்குச் சென்றார்.”
சாதுக்கள் மற்றும் காந்தாரியின் சாபம்
கிருஷ்ணர் மற்றும் யது வம்சத்தினரின் மறைவிற்கு மற்றொரு பௌதிக காரணமாகக் கூறப்படுவது: காந்தாரி கிருஷ்ணருக்கு வழங்கிய சாபமும், சாம்பனின் விளையாட்டினால் கோபமுற்ற சாதுக்கள் யது வம்சத்தினருக்கு வழங்கிய சாபமும் ஆகும்.
இந்த சாபங்கள் உண்மையில் வேலை செய்ததா? புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரையும் பல்வேறு தேவர்களை உள்ளடக்கிய யது வம்சத்தினரையும் சபிக்கும் அளவிற்கு காந்தாரியும் முனிவர்களும் சக்தி பெற்றவர்களா? நிச்சயம் இல்லை. சிவபெருமான், பிரம்மதேவர் உட்பட மிகவுயர்ந்த தேவர்கள் வழங்கிய பல்வேறு வரங்களையும் சாபங்களையும் கிருஷ்ணர் வெவ்வேறு தருணங்களில் தனது சக்தியினால் முறியடித்துள்ளார். (உதாரணங்கள்: சிவபெருமான் பானாசுரனுக்கு வழங்கிய வரம், பிரம்மதேவர் ஹிரண்யகசிபுவிற்கு வழங்கிய வரம், இந்திரன் விரஜவாசிகளுக்கு வழங்கிய சாபம், மற்றும் பல) அவ்வாறு இருக்கையில், காந்தாரியின் சாபத்தினையும் முனிவர்களின் சாபத்தினையும் போக்குவதற்கான சக்தி கிருஷ்ணரிடம் இல்லையா என்ன? கிருஷ்ணரும் யது வம்சமும் எந்தவொரு சாபத்தினாலும் அழியாது என்பதில் எந்தவொரு சந்தேகமும் கொள்ளக் கூடாது.
அப்படியெனில், அந்த சாபத்திற்கு என்ன அர்த்தம்? அந்த சாபங்களும் கிருஷ்ணரின் விருப்பத்தினால் வழங்கப்பட்டவையே. கிருஷ்ணரின் மீது நம்பிக்கையற்ற மூடர் களை குழப்புவதற்காக, சாபங்களினால் மடிவதுபோன்ற ஒரு மாயையினை கிருஷ்ணர் ஏற்படுத்தினார் என்பதே உண்மை. சற்று யோசித்துப் பாருங்கள்: தனது மகன்களின் மரணத்தினால் வருத்தமுற்ற யாரேனும் சாபமளிக்க விரும்பினால், எவ்வாறு சாபமளிப்பார்கள்? “36 வருடங்கள் கழித்து, உங்கள் குடும்பம் அழிந்துவிடும்” என்று யாரேனும் சபிப்பார்களா? “உங்கள் குடும்பம் உடனடியாக அழிய வேண்டும்,” என்றுதானே சபிப்பார்கள்? ஏன் காந்தாரியின் வாயிலிருந்து 36 வருடங்கள் என்ற கால அளவு வந்தது? கிருஷ்ணரின் விருப்பமே இதற்கான காரணம்.
காந்தாரியிடமிருந்து சாபத்தைப் பெற்றவுடன், புன்னகை பூத்த முகத்துடன் கிருஷ்ணர் பின்வருமாறு உரைத்தார்: “விருஷ்ணிகளை அழிப்பதற்கு என்னைத் தவிர வேறு யாராலும் இயலாது. இதை அறிந்துள்ள நான் அவர்களின் முடிவிற்காக ஒரு திட்டத்தினை தீட்டி வருகிறேன். இந்த சாபத்தின் மூலமாக நீங்கள் எனது திட்டத்திற்கு உதவி செய்துள்ளீர்.” (மஹாபாரதம், ஸ்திரீ விலப பர்வம்) காந்தாரியின் சாபம் கிருஷ்ணரின் ஏற்பாடு என்பதை மஹாபாரதத்திலேயே கண்ட பின்னர், இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமோ!
மேலும், சாதுக்களை மிகவும் மதித்துப் போற்றக்கூடிய யது வம்சத்தினர், அவர்களிடம் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டு சாபம் பெற்றதும், கிருஷ்ணரின் ஏற்பாடே தவிர வேறல்ல.
பகவான் இவ்வுலகிற்கு வருகையில், பல்வேறு லோகங்களைச் சார்ந்த தேவர்களும் இங்கு வந்து அவரது திருவிளையாடல்களில் ஈடுபட்டு அவரது நேரடி உறவினை அனுபவிக்கின்றனர். பகவான் கிருஷ்ணர் இவ்வுலகினை விட்டுச் செல்ல முடிவெடுத்தவுடன், முதலில் தன் குடும்ப உறுப்பினர்களான யாதவர்கள் அனைவரையும் அவர்களுடைய உயர் லோகங்களுக்குச் செல்ல வழிசெய்தார். இதுவே அந்த சாபங்களின் உள் அர்த்தமாகும்.
வேடனின் அம்பு பகவானின் பாதத்தினை துளைத்ததா?
வேடனின் அம்பு பகவானின் பாதங்களை துளைக்கவே இல்லை. மாறாக, அது அவரது பாதத்தினை தீண்டிச் சென்றது என்பதே உண்மை. “பாதத்தினை துளைத்தது” என்பது வேடனின் பார்வையில் மட்டுமே. வேடனின் அம்பு உண்மையிலேயே பகவானின் பாதங்களை துளைத்திருந்தால், பகவானைக் கண்ட வேடன் அவரது திருவடிகளை நமஸ்கரித்த தருணத்தில், அந்த அம்பினை வெளியே எடுத்தான் என்னும் தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற எந்த தகவலும் பாகவதத்திலோ மஹாபாரதத்திலோ காணப்படவில்லை.
பகவானின் லீலா சக்தியில் மயங்கிய வேடன்
வேடன் ஜரா அந்த இடத்திற்கு வந்து பகவானின் மீது அம்பு எய்துவதற்கு முக்கிய காரணம், அவன் பகவானின் லீலா சக்தியினால் மயங்கியிருந்ததே ஆகும். பிரமாணங்களின்படி, யது வம்சத்தினர்களுக்கு இடையிலான சண்டை சூரிய அஸ்தமனத்தின்போது நிகழ்ந்தது; அதன் பின்னர் சரஸ்வதி நதிக்கரையில் பகவான் அமர்ந்தார். வேடன் ஜரா மானைக் கொல்லும் நோக்கத்துடன் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அதற்கான வாய்ப்பு அசாத்தியமான ஒன்றாகும். ஏனெனில், அப்போதுதான் அங்கே மாபெரும் சண்டை நிகழ்ந்து, சுமார் 56 கோடி மக்கள் மடிந்தனர்; இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க சடலங்கள் அவற்றில் மிதந்து கொண்டிருக்க, அவற்றைப் பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் ஒரு வேடன் மானைத் தேடி வருவது என்பது அசாத்தியமானதாகும்.
மான்கள் பெரும்பாலும் பயந்த சுபாவம் கொண்டவை, மாபெரும் சண்டை நிகழ்ந்த இடத்தில் மான்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தருணத்தில், மானைத் தேடி வேடன் வருவதற்கும் வாய்ப்பே இல்லை. எனவே, மானைத் தேடி வேடன் வந்ததும் கிருஷ்ணர் இப்பூமியிலிருந்து மறைந்ததும், அவரது அந்தரங்க சக்தியின் ஏற்பாடே தவிர வேறல்ல. (ஆதாரம், ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் பாகவத விளக்கவுரை)
வாலியைக் கொன்றதன் தண்டனையா?
கிருஷ்ண லீலைகளைப் புரிந்துகொள்ள இயலாத சில மூடர்கள், கிருஷ்ணரை வேடன் ஜரா மறைந்து நின்று தாக்கியதற்கான காரணம், அவர் தனது முந்தைய (இராம) அவதாரத்தில் வாலியை மறைந்து நின்று கொன்றதே என்று கூறுகின்றனர். கிருஷ்ணர் கர்ம விதிகளுக்கு உட்பட்டவர் அல்ல என்பது இத்தகைய மூடர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தங்களது மனக் கற்பனையில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை மற்றொரு நிகழ்ச்சியோடு இணைத்து விளக்கம் கொடுக்கும் இத்தகையோர் உண்மையில் அயோக்கியர்கள் ஆவர். இவர்கள் முழுமுதற் கடவுளின் தன்னிகரற்ற நிலையினை குறைத்து மதிப்பிட்டு, மக்களிடையே அவரை சாதாரண மனிதனாகக் காட்ட முயற்சி செய்கின்றனர். வாலி தனது மறுபிறவியில் ஜரா என்ற வேடனாக வந்தான் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. அதே சமயத்தில், ஜரா தனது முந்தைய பிறவியில், பிருகு முனிவராக இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, சாஸ்திரங்களை ஏற்போம், மனக் கற்பனைகளை தூர எறிவோம். (வாலியை இராமர் மறைந்து நின்று கொன்றது ஏன்? என்பதை நாங்கள் பகவத் தரிசனம் வாசகர்களுக்கு செப்டம்பர் 2012 இதழில் விளக்கியுள்ளோம்)
நடிகரின் நடிப்பு
கட்டுண்ட ஜீவன்களின் பிறப்பு மற்றும் இறப்பினைப் போலவே தோன்றக்கூடிய கிருஷ்ணரின் தோற்றமும் மறைவும், அவரது மாய சக்தியினால் ஏற்படுத்தப்பட்டு, அதில் அவர் ஒரு நாடக நடிகரைப் போல செயல்படுகிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் (11.31.31) கூறுகின்றது. அங்கே உபயோகிக்கப்பட்டிருக்கும் நடஸ்ய, “நடிகர் அல்லது மாயாஜாலம் செய்பவரைப் போன்று” என்னும் சொல் முக்கியமானதாகும். பகவானின் லீலா சக்தியின் கீழ் நிகழ்ந்த அந்த மாயாஜால சண்டையை விளக்குவதற்கு ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர், மரணமடைவதுபோல மாயாஜாலம் செய்த ஒருவரின் பின்வரும் கதையினை உதாரணமாக அமைக்கின்றார்:
“ஒரு மாமன்னரின் முன்பாக வந்த மாயாஜாலம் செய்பவர், விலை மதிப்புமிக்க நகைகள், நாணயங்கள் போன்றவற்றை அணுகினார்; அவையனைத்தையும் மன்னரின் முன்பாக ஒன்றன்பின் ஒன்றாக, வித்தைக்காரர் மறையச் செய்தார். மன்னரிடம் சவால் விடுத்து, அவரது 7,000 குதிரைகளை மறையச் செய்தார். அதன் பின்னர், அவர் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, அதில் மன்னரின் குழந்தைகள், பேரன்கள், சகோதரர்கள் என அனைவரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாகும்படி செய்தார். வித்தைக்காரர் பேசுவதை மன்னர் கேட்டுக் கொண்டிருக்க, அதே வேளையில் அவருக்கு முன்பாக அந்த பேரழிவையும் அவர் கண்டார்.
“சிறிது நேரத்திற்குப் பின்னர், வித்தைக்காரர், தனது வாழ்வில் தனக்கு எந்த விருப்பமும் இனிமேல் இல்லை என்று கூறி, முறையான யோகாசனத்தில் அமர்ந்தார். சிறிது நேரத்தில், அவரது சமாதியினால் எழுந்த நெருப்பானது அவரது உடலை பஸ்பமாக்கியது. அதன் பின்னர், வித்தைக்காரரின் அனைத்து மனைவியரும் வருத்தத்தில் மூழ்கியவர்களாக உடன்கட்டை ஏறினர்.
“மூன்று அல்லது நான்கு நாள்கள் கழிந்த பின்னர், மாயாஜாலக்காரர் தனது நாட்டிற்குத் திரும்பினார். தனது மகள்களில் ஒருத்தியினை மன்னரிடம் அனுப்பி வைத்தாள். அவள் மன்னரிடம் கூறினாள், ’மன்னரே, நான் என்னுடன் கண்களுக்குத் தெரியாத முறையில், உங்களுடைய அரண்மனை, செல்வம், மக்கள் என அனைவரையும் கொண்டு வந்துள்ளேன். எங்களுடைய மாயாஜால கலைக்கு தாங்கள் மனமுவந்து வழங்கும் எந்த சண்மானத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.’
“சாதாரண வித்தைக்காரர்களே பிறப்பையும் இறப்பையும் ஜாலம் செய்ய முடியும் என்னும் பட்சத்தில், முழுமுதற் கடவுளால் முடியாதா?”
அனைத்தும் அவரது லீலைகளே
இயற்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராக உள்ளபோதிலும் சாதாரண முட்டாள்களை மயக்குவதற்காக முழுமுதற் கடவுள் ஒரு மனிதனைப் போல உடலை விட்டுச் சென்றார் என்பதைப் புரிந்துகொள்ளுதல் கடினமானதல்ல. உண்மையில், கிருஷ்ணர் தனது தெய்வீகத் திருமேனியுடன் ஆன்மீக உலகிற்குத் திரும்பிச் சென்றார் என்பது எல்லா வேத சாஸ்திரங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பகவான் கிருஷ்ணர் தனது குருவின் மகனை அதே உடலில் யமராஜரின் இடத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார், மன்னர் பரீக்ஷித்தை அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்திலிருந்து காப்பாற்றினார், சிவபெருமானையும் போரில் வென்றார். வேடன் ஜராவினை அவனது மனித உடலிலேயே நேரடியாக வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட இறைவனால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதா என்ன?
எனவே, பகவானின் மறைவு என்பது அவரது விருப்பத்தின்படி நிகழ்ந்த உன்னத லீலை என்பதை பகவத் தரிசன வாசகர்கள் அனைவருக்கும் தெளிவாக உரைத்துவிட்டு, இந்த லீலையினை அறிவதால் விளையும் பலனை இறுதியில் கூறி, இக்கட்டுரையினை முடித்துக்கொள்கிறேன். நன்றி.
க்ருஷ்ணஸ்ய பதவீம் பரம் ப்ரயத: கீர்தயேத் பக்த்யா தாம் ஏபாம்நோத்யனுத்தமாம் “யாரெல்லாம் அதிகாலையில் எழுந்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக மறைவினையும் அவர் தனது திருநாட்டிற்கு திரும்பிச் சென்றதன் பெருமையினையும் பக்தியுடனும் கவனத்துடனும் தினமும் தொடர்ந்து உச்சரிக்கின்றாரோ, அவர்கள் அதே உன்னத திருநாட்டினை அடைவது நிச்சயம்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.31.14)