அர்ஜுனன் நிராகரித்த யோகம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

தற்காலத்தில் ஏராளமான யோக முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும், உண்மையாகச் சொல்லப் போனால், அவற்றில் ஒன்றுகூட யோகத்தின் முடிவு நிலை என்ன என்பதைக் கற்பிக்கவில்லை. யோகத்தின் பூரண நிலையினை பகவத் கீதையில் புருஷோத்தமரான ஸ்ரீ கிருஷ்ணரே நேரடியாக அர்ஜுனனுக்குக் கற்பிக்கின்றார். ஆகவே, யோகத்தினால் அடையக்கூடிய உன்னத நிலையில் பங்குபெறும் விருப்பம் நமக்கு உண்மையாக இருக்குமானால், பகவத் கீதையில் பரம புருஷர் வழங்கியுள்ள ஆதாரபூர்வமான விளக்கங்களைக் காணலாம்.

 

போர் புரிவதற்கான யோகம்

பகவத் கீதையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது! அது மட்டுமல்ல; சொந்த உறவினர்களோடு போர் புரியத் தயாராக நின்ற ஒரு போர் வீரனுக்கு, அதாவது அர்ஜுனனுக்கு அது கற்பிக்கப்பட்டது. வெறும் பாச உணர்வினால் உந்தப்பட்டு, “நான் ஏன் என் சொந்த உறவினர்களுடன் போர் புரிய வேண்டும்” என்று அர்ஜுனன் எண்ணமிட்டு நின்ற சமயம் அது. அர்ஜுனன் போரிடத் தயங்கி நின்றதற்கு காரணம் மாயையே. அந்த மாயையைக் களைவதற்காகவே ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். எவ்வளவு குறுகிய காலத்திற்குள் பகவத் கீதை உபதேசிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் யூகித்து உணர வேண்டும். இருதரப்பிலும் போர் வீரர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர், அங்கிருந்த சமயம் மிகக் குறைவு; மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரமே. ஆயினும், இந்த ஒரு மணி நேரத்திற்குள் முழு பகவத் கீதையும் உரையாடப் பட்டுவிட்டது. ஸ்ரீ கிருஷ்ணரும் எல்லாவிதமான யோகப் பயிற்சிகளினாலும் அடைய வேண்டிய உண்மையான முடிவு நிலை என்னவென்பதை தனது நண்பனான அர்ஜுனனுக்கு எடுத்துரைத்தார். இம்மாபெரும் உரையாடலின் விளைவாக அர்ஜுனன் தனது எல்லாவித மனக்குழப்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு யுத்தம் புரிந்தான்.

இந்த உரையாடலின் ஒரு பகுதியாக அர்ஜுனன் தியான யோக முறையைப் பற்றிய விளக்கத்தை, அதாவது தியானம் புரிய எவ்வாறு உட்கார வேண்டும், எவ்வாறு சரீரத்தை நேர்கோடாக வைக்க வேண்டும், எவ்வாறு கண்களைப் பாதி மூடியவாறு மனதைச் சிதறடிக்காமல் உன்னிப்பாக நாசியின் நுனியை நோக்க வேண்டும், எவ்வாறு இப்பயிற்சிகளை தனிமையான இடத்தில் புரிய வேண்டும் என்று கிருஷ்ணரிடமிருந்து செவிமடுத்தான். செவிமடுத்தபின் அவன் கூறியதாவது:

யோ ’யம் யோகஸ் த்வயா ப்ரோக்த:ஸாம்யேன மதுஸூதன

ஏதஸ்யாஹம் ந பஷ்யாமிசஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்

“மதுஸூதனரே, சுருக்கமாக நீங்கள் எடுத்துரைக்கும் இந்த யோக முறை எளிதில் கடைப்பிடிக்க முடியாததாக எனக்குத் தோன்றுகிறது. அப்படியே கடைப்பிடித்தாலும் இறுதிவரை பின்பற்றக்கூடியதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், மனமானது அந்த அளவிற்கு அமைதியற்றதாகவும் அலைபாயும் தன்மையுடையதாகவும் விளங்குகின்றது.” (பகவத் கீதை 6.33)

ஜடவுலகில் கவலைகள் எப்போதும் இருக்கும்

இது கவனிக்கத்தகுந்த விஷயமாகும். இந்த ஜடவுலகில் ஒவ்வொரு வினாடியும் நமது மன நிம்மதியைக் குலைக்கும் விதத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது. இதுவே இந்த உலகின் இயல்பாகும். இதை நாம் மறக்கவே கூடாது. உண்மையில் சொல்லப்போனால், இந்த ஜடவுலக வாழ்க்கை என்பது ஏராளமான கவலைகள் நிறைந்ததாகும். இடைவிடாது கவலைகள் எதிர்ப்பட்டபோதிலும், சில குறிப்பிட்ட கவலைகளைத் தீர்ப்பதன் மூலம் மன நிம்மதியை அடைவோம் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். அது மட்டுமின்றி, எல்லா வித கவலைகளும் ஒருநாள் அறவே நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் நமக்கு உண்டு. ஆனால் இந்த ஜடவுலகில் கவலைகள் இல்லாமல் நம்மால் வாழவே முடியாது என்பதே உண்மையாகும். நாம் இடைவிடாது நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்கின்றோம். ஆனால் இந்த தீர்வுகள் நம்மை வந்தடையாத வண்ணம் இவ்வுலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதே நமது உண்மையான பிரச்சினையாகும்.

அரக்கனைக் கொல்லும் கிருஷ்ணர்

ஏமாற்றுக் கலையை அறியாததாலும் மனதிற்குத் தோன்றியதை வெளிப்படையாகக் கூறுபவன் என்பதாலும், அர்ஜுனன் கிருஷ்ணரால் விவரிக்கப்பட்ட இந்த யோக முறையை தன்னால் பின்பற்ற இயலாது என்று கூறிவிட்டான். மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில், கிருஷ்ணரை “மதுஸூதன” என்று அர்ஜுனன் அழைத்ததற்குத் தகுந்த காரணம் உண்டு. “மதுஸூதன” என்ற பெயருக்கு, மது என்ற பெயர் கொண்ட அரக்கனைக் கொன்றவர் என்று பொருள். கடவுளுடைய லீலைகளுக்கு ஏற்றவாரு அவருக்கு பெரும்பாலான பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஆகவே அளவில்லாத லீலைகளைப் புரியும் அவருக்கு, அளவில்லாத பெயர்களும் உள்ளன. இதைப் புரிந்துகொள்வது கடினமல்ல.

நாமனைவரும் கடவுளின் சிறு அம்சங்களே. சிறு வயதிலிருந்து இன்று வரை நாம் எத்தனை செயல்களை செய்திருக்கின்றோம் என்பதை நம்மால் அளவிட முடிவதில்லை. நமக்கே இவ்வளவு செயல்கள் இருக்கும்பட்சத்தில், என்றும் நிலைத்திருப்பவரும் அளவில்லாதவருமான கடவுள் எவ்வளவு செயல்களைப் புரிந்திருக்க வேண்டும்! ஆகையால், அவரது பெயர்களும் ஏராளமானவையே. அவை எல்லாவற்றிலும் முதன்மையானது ‘கிருஷ்ண’ என்ற பெயரேயாகும். அப்படியிருக்க, அர்ஜுனன் கிருஷ்ணரை “மதுஸூதன” என்று ஏன் அழைக்க வேண்டும்? கிருஷ்ணரின் நெருங்கிய நண்பனான அவன், அவரை நேரடியாக ‘கிருஷ்ண’ என்று அழைத்திருக்கலாமே? அர்ஜுனன் தன் மனதை மதுவைப் போன்ற ஒரு கொடிய அரக்கனுக்கு ஒப்பிடுகின்றான் என்பதே இதற்குத் தகுந்த பதிலாகும். மனம் என்னும் இந்தக் கொடிய அரக்கனைக் கொல்வது கிருஷ்ணருக்குச் சாத்தியமானதாகும்; அதன் பிறகே அர்ஜுனனால் யோகத்தின் உன்னத நிலையை எய்த முடியும்.

“எனது மனம் மது அரக்கனைவிட வலியது” என்றே அர்ஜுனன் குறிப்பிடுகின்றான். “தயவுசெய்து அதை நீங்கள் கொன்றுவிட்டால், அதன் பிறகு என்னால் இந்த யோக முறையைப் பின்பற்ற முடியும்.” அர்ஜுனனைப் போன்ற ஓர் உயர்ந்த மனிதனின் மனம்கூட இடைவிடாது கொந்தளித்துக் கொண்டே இருக்கின்றது.

சஞ்சலம் மிகுந்த மனம்

அர்ஜுனனே கூறுவது போல்:

சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ணப்ரமாதி பலவத் த்ருடம்

தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யேவாயோர் இவ ஸு-துஷ்கரம்

“கிருஷ்ண, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி வாய்ந்ததுமாயிற்றே. வீசும் காற்றை அடக்குவதைவிட மனதை அடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகின்றது.” (பகவத் கீதை 6.34)

நமது மனம், “இங்கே செல், அங்கே செல், இதைச் செய், அதைச் செய்” என்று இடைவிடாது நம்மைக் கூறுவது உண்மையே. அலைபாயும் இந்த மனதைக் கட்டுப்படுத்துவதே யோக முறையின் அடிப்படைத் தத்துவமாகும். தியான யோக முறையில் பரமாத்மாவைத் தியானிப்பதன் மூலம் மனமானது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் அர்ஜுனனோ இந்த மனதைக் கட்டுப்படுத்துவதென்பது வீசும் காற்றை நிறுத்துவதைவிட கடினமானது என்கிறான். வெறும் கைகளை விரித்து புயல் காற்றை நிறுத்த முயற்சி செய்யும் ஒரு மனிதனின் நிலையை சற்று கற்பனை செய்து பாருங்கள். அப்படியானால், நாம் என்னதான் முடிவுகட்டுவது? மனதைக் கட்டுப்படுத்துவதற்கான தகுதிகளைப் புரிந்துகொள்ளக்கூட நம்மால் முடியாது. குறைந்தபட்சம், அவன் இறைவனின் அந்தரங்க நண்பனாவான். இது மிகவுயர்ந்த ஸ்தானமாகும். பெரும் தகுதிகள் இல்லாமல் அடையக்கூடிய ஸ்தானமல்ல.

அதோடு மட்டுமின்றி, பெரும் போர் வீரனென்றும், திறமையான நிர்வாகி என்றும் அவன் புகழ் பெற்றிருந்தான். அவனுடைய அறிவுத்திறன் எப்படிப்பட்டது? தற்காலத்தில் பெரும் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள்கூட வாழ்நாள் முழுவதும் படித்தும் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிறார்கள். ஆனால் அர்ஜுனனோ ஒரு மணி நேரத்திற்குள் பகவத் கீதையை முழுவதுமாக புரிந்து கொண்டான். அத்தகைய அர்ஜுனனே மனதைக் கட்டுப்படுத்துவதென்பது தன்னால் இயலவே இயலாது என்று கருதினான். வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்த அந்நாள்களில் வாழ்ந்த அர்ஜுனனாலேயே புரிய முடியாத சாதனையை சீரழிந்த இக்காலத்தில் வாழும் நம்மால் சாதிக்க முடியும் என நாம் எண்ணிவிடலாமா? அர்ஜுனனுடைய நிலையில் நாம் இருப்பதாக ஒரு நிமிடம்கூட எண்ணக் கூடாது. நமது நிலை அவனைவிட ஆயிரம் மடங்கு தாழ்வானதாகும்.

தியான யோகப் பயிற்சி தன்னால் இயலாதது என்று பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் எடுத்துரைத்தல்

காலத்திற்கு ஏற்ற யோகப் பயிற்சி

போர்க்களத்தின் நடுவேதான் தியான யோக முறையை அர்ஜுனன் நிராகரித்தான் என்றல்ல, வேறு எந்தச் சமயத்திலும் அர்ஜுனன் யோகப் பயிற்சிகளைச் செய்ததாக நமக்கு தகவல் இல்லை. ஆயினும், பகவத் கீதையைப் புரிந்துகொள்ளும் தகுதி வாய்ந்த ஒரே மனிதன் என்று அர்ஜுனன் கிருஷ்ணரால் புகழப்படுகிறான். யோகங்களே புரிந்திராத அர்ஜுனனிடமிருந்த பெரும் தகுதி என்ன? ஸ்ரீ கிருஷ்ணரே உரைக்கின்றார்: “நீ எனது பக்தன், அருமை சிநேகிதன்.” இந்த தகுதி இருந்தும், ஸ்ரீ கிருஷ்ணர் விவரித்த தியான யோக முறையைக் கடைப்பிடிக்க அர்ஜுனன் மறுத்தான். நாம் என்ன செய்வது? மனதைக் கட்டுப்படுத்தவே முடியாது என்று தளர வேண்டுமா? இல்லை. மனதைக் கட்டுப்படுத்தலாம். அதற்கான உபாயமே கிருஷ்ணரைச் சார்ந்த வாழ்க்கை முறையாகும். மனமானது எப்போதும் கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களிலேயே நிலைத்து நிற்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு மனம் கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அது யோகத்தின் பூரண நிலையை எய்துகின்றது.

நமது கவனத்தை சற்றே ஸ்ரீமத் பாகவதத்தின் பக்கம் திருப்புவோமாயின், அங்கே சுகதேவ கோஸ்வாமி மஹாராஜா பரீக்ஷித்திடம், ஸத்ய யுகம் எனும் பொற்காலத்தைப் பற்றி விவரித்ததைக் காணலாம். ஸத்ய யுகத்தில் மக்கள் பொதுவாக ஒரு இலட்சம் வருடங்கள் உயிர் வாழ்ந்தனர். அக்கால மக்கள் எல்லோருமே ஆன்மீகத் துறையில் மிகவும் முன்னேற்றமடைந்தவர்களே; இவ்வாறு நெடுங்காலம் வாழ்ந்தமையால் தியான யோக முறை அவர்களால் கடைப்பிடிக்கக் கூடியதாக இருந்தது. ஸத்ய யுகத்தில் தியான யோக முறையினால் எந்த உயர்நிலை அடையப்பட்டதோ, அதே நிலை அதற்கடுத்த திரேதா யுகத்தில் யாகங்கள் புரிவதன் மூலமாகவும், அதற்கடுத்த துவாபர யுகத்தில் கோயில் வழிபாட்டு முறைகளினாலும் அடையப்பட்டது. தற்போது நிகழும் கலி யுகத்திலோ அதே உன்னத நிலையை நாம் கடவுளின் பெயர்களை உச்சரிக்கும் ஹரி கீர்த்தனத்தின் மூலமாக அடையலாம். ஆகவே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே எனும் மந்திரத்தை உச்சரிப்பதே இந்த யுகத்தில் யோகத்தின் சிகரமாகும் என்று ஆதிகாரபூர்வமான நூல்களிலிருந்து நாம் அறிகின்றோம்.

நாம ஸங்கீர்த்தனமே கலி யுகத்திற்கான வழி

இந்நாள்களில் ஐம்பது அல்லது அறுபது வருடங்கள் வாழ்வதே மிகக் கடினமானதாக உள்ளது. மிஞ்சிப் போனால், நம்மில் சிலர் எண்பது அல்லது நூறு வருடம் வாழ்கின்றனர். இந்த குறுகிய வாழ்நாளையும் நாம் பொதுவாக மாபெரும் கவலைகளில் கழிக்கின்றோம். மேலும், யுத்தங்கள், வியாதிகள், பஞ்சம் போன்ற தீவிரச் சூழ்நிலைகளுக்கும் நாம் உள்ளாகிறோம். அதிக அறிவுத் திறனும் நம்மிடம் இல்லை; அதே சமயத்தில் துரதிர்ஷ்டசாலிகளாகவும் விளங்குகின்றோம். இவையெல்லாம் கலி யுகம் என்னும் இந்த சீரழிந்த யுகத்தில் வாழும் மனிதர்களின் குணாதிசயங்களே. ஸ்ரீ கிருஷ்ணரால் விவரிக்கப்படும் தியான யோக முறையில் நம்மால் வெற்றி காணவே முடியாது என்பதுதான் உண்மையான பேச்சாகும். மிஞ்சிப் போனால், தியான யோகம் என்ற பெயரில் அரைகுறையான ரீதியில், உடற்பயிற்சிகள், ஆழ்ந்து மூச்சுவிடுதல் ஆகியவற்றைக் கற்பிக்கும் வகுப்புகளுக்கு மக்கள் பணம் கொடுத்துச் செல்கின்றனர். அதன் மூலம் தமது வாழ்நாள்கள் மேலும் சற்று நீடிக்கும், அல்லது இன்னும் அதிகமாக உடலுறவு இன்பம் பெறலாம் என்று தோன்றினால் அதனால் மகிழ்ச்சியடைகின்றனர்.

ஆனால் இவையெல்லாம் உண்மையான யோகம் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். இந்த யுகத்தில் தியான யோக முறையை சரிவர கடைப்பிடிக்கவே முடியாது. மாறாக தியான யோகத்தினால் அடையக்கூடிய எல்லா உயர் முடிவுகளையும் பக்தி யோகமெனும் கிருஷ்ணரைச் சார்ந்த வாழ்க்கை நிலையின் மூலம் பெறலாம். குறிப்பாக, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து, கிருஷ்ணரின் பெருமைகளைத் துதிக்கும் மந்திர யோகமே பக்தி யோக நிலையைக் குறிக்கிறது.

இந்த வழிமுறை வேத நூல்களினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு போன்ற பெரும் புருஷர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். மஹாத்மாக்கள் எப்பொழுதும் இறைவனின் மகிமைகளை கீர்த்தனம் செய்தபடி உள்ளனர் என்று பகவத் கீதையும் மொழிகின்றது. ஆகையால், வேத நூல்கள், பகவத் கீதை, மற்றும் அவதார புருஷர்களினாலும் விவரிக்கப்படுகின்ற உண்மையான மஹாத்மாவாக நாம் மாற விரும்பினால், இந்த கிருஷ்ண மையமான வாழ்க்கை நிலையை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தாக வேண்டும். செங்குத்தாக உட்கார்ந்து ஒரு நாடக  நடிகனைப் போன்று தியானத்தில் ஆழ்வதுபோல நடிக்கக் கூடாது; அத்தகு நடிப்பில் நாம் திருப்தியடைந்தால், அது வேறு விஷயம். ஆனால் குறைந்தபட்சம் இம்மாதிரியான போலி நடவடிக்கைகளுக்கும் உண்மையான யோக நிலைக்கும் தொலைதூரம் உள்ளது என்பதையாவது நாம் உணர வேண்டும். உலக வாழ்க்கை எனும் கொடிய நோயை எந்தவித மருந்துகளைக் கொண்டு நம்மால் குணப்படுத்த இயலாது. உண்மையான மூலிகையை கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகப் பெற வேண்டும்; ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை அடிப்படையாகக் கொண்ட பக்தி யோகமே அந்த வழிமுறையாகும்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து, கிருஷ்ணரின் பெருமைகளைத் துதிக்கும் மந்திர யோகமே கலி யுகத்திற்கான யோகப் பயிற்சியாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives