லஹர்ட்: – ஆனால் இளைஞர்கள் அறிவைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் எவ்வாறு துறவற வாழ்விற்கு பொருத்தமானவர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: – அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். உதாரணமாக, இங்கே எண்ணற்ற இளைஞர்கள் சந்நியாசிகளாக உள்ளனர். இளைஞன் சந்நியாசியாக இருக்க முடியாது என்று கூறிவிட இயலாது. அவரால் முடிந்தால், அவர் ஆரம்பத்திலேயே சந்நியாசம் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் அவரால் இயலாவிடில், இல்லற வாழ்வினுள் நுழைந்து 50 வயதுவரை இல்லறத்தவனாக இருக்கலாம். அதன் பின்னர் அவர் ஓய்வு பெற்று சந்நியாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். எதுவும் பலவந்தப்படுத்தப்படுவதில்லை, இது படிப்படியான வழிமுறையாகும். ஆயினும், இறுதியான முடிவு எல்லா பௌதிகப் பற்றுதல்களிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டு வாழ்வை கிருஷ்ண உணர்விற்காக முழுமையாக அர்ப்பணிப்பதாகும். இதுவே இறுதி நிலையாகும். மனித வாழ்வானது அந்த தன்னுணர்விற்கு உரித்தானது. இதற்கான வாய்ப்பு எல்லா மனிதர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய நாகரிகத்தில் ஆன்மீக உணர்விற்கான வாய்ப்பே இல்லை. மனிதர்கள் உண்ணுதல், உறங்குதல், பாலுறவு கொள்ளுதல், தற்காத்தல் என்று மிருகங்கள்போன்று வாழ்ந்து வருகின்றனர். ஆன்மீக வாழ்வைப் பற்றி அவர்கள் ஏதுமறியர். தற்போது நாங்கள் அவர்களுக்கு அதனைக் கற்றுக்கொடுக்க முயற்சித்து வருகிறோம்.
லஹர்ட்: – பௌதிக வாழ்க்கையை ஒருவன் எந்த அளவிற்கு எடுத்துக்கொள்வது அவசியம்?
ஸ்ரீல பிரபுபாதர்: – நீங்கள் உங்களை கிருஷ்ண உணர்வை நிறைவேற்றுவதற்கான உடற்தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் நோய்வாய்ப்பட நேர்ந்தால், உங்களால் கீர்த்தனம் செய்ய இயலாது. நம்முடைய நோக்கம் கீர்த்தனம் செய்வதாகும். அதற்கு தகுந்தாற்போல உங்களுடைய உடலையும் வைத்துக்கொள்ளுதல் அவசியமாகும். அதிகமான கவனமும் அவசியமல்ல. உண்ணுதல் என்பது அவசியமானதாகும், உண்ணாவிடில் நான் மடிந்து விடுவேன். இதனால் நாங்கள் கிருஷ்ண பிரசாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் உணவகங் களில் உண்பதில்லை. அருமையான காய்கறிகள், சாதம், தானியங்கள், சர்க்கரை, பால் போன்ற பொருட்களை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். எங்களுடைய உணவில் எந்தக் குறைபாடும் இல்லை, இதனால் மிருகங்களைக் கொல்வது அவசியமற்றதாகும்.
லஹர்ட்: – நீங்கள் பண்ணை நிலங்களையும் வைத்துள்ளீர்களா?
ஸ்ரீ பிரபுபாதர்: – ஆம்.
லஹர்ட்: – அந்தப் பண்ணை நிலங்கள் வேலை செய்வதற்காகவா? உணவு உற்பத்திக்காகவா?
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். அமெரிக்க நாட்டில் எங்களுக்கு பல்வேறு பண்ணைகள் உள்ளன. தற்போது நான் வெஸ்ட் வெர்ஜினியாவில் உள்ள நியூ விருந்தாவனத்திலிருந்து வருகிறேன். பல்வேறு பக்தர்கள் அங்கு வசிக்கின்றனர். உங்களுக்கு சற்று நேரம் கிடைத்தால், அவர்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை நீங்கள் அங்கு சென்று காணலாம். இதர இடங்களிலும் எங்களுக்கு பண்ணை நிலங்கள் உள்ளன. நாங்கள் நாளை பென்சில்வானியாவில் உள்ள எங்களுடைய பண்ணைக்குச் செல்கிறோம். எங்களுக்கு போதுமான அளவு பால், உணவு தானியங்கள், பழங்கள் ஆகியவை கிடைக்கின்றன, இங்கே பொருளாதாரப் பிரச்சனை என்பது இல்லை. வாழ்வின் தேவைகளுக்கான தேவையற்ற உழைப்பிலிருந்து நாங்கள் எங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறோம், கிருஷ்ண உணர்வை வளர்ப்பதற்காக நேரத்தை உபயோகிப்பதே எங்களுடைய நோக்கமாகும். உடலைப் பொறுத்தவரையில் இதனைப் பராமரிப்பதற்கு என்ன தேவையோ அதனை நாம் வைத்துக்கொள்ள வேண்டும், அதற்குமேல் அதிகமாக இருக்கக் கூடாது. “எளிமையான வாழ்வு, உயர்ந்த சிந்தனை.” இதுவே எங்களுடைய கோயில்கள் மற்றும் பண்ணை நிலங்களின் குறிக்கோளாகும்.
லஹர்ட்: – உங்களுடைய சமுதாயம் அனைத்து தரப்பினரையும் வரவேற்கின்றதா?
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். சமுதாயத்தின் எந்த நிலையிலிருந்து யார் வந்தாலும் நாங்கள் அவர்களுக்கு உதவி செய்கிறோம். நாங்கள் அவர்களுக்கு உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் வழங்குகிறோம், அறிவுரைகளும் வழங்குகிறோம், உடைகளையும் வழங்குகிறோம். யாருக்கும் எந்தத் தடையும் விதிப்பதில்லை. நாங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம், தயவுசெய்து இங்கு வந்து எங்களுடன் வாழுங்கள்.” எங்களிடம் தற்போது உலகம் முழுவதும் 100 கோயில்கள் உள்ளன, நாங்கள் அனைவரையும் இங்கு அழைத்து எங்களுடன் வசதியாக வாழ்ந்து கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்யும்படி அழைக்கின்றோம்.
லஹர்ட்: – அமெரிக்காவில் தங்களுக்கு எத்தனை மையங்கள் உள்ளன?
ஸ்ரீல பிரபுபாதர்: – பண்ணைகளையும் சேர்த்தால் 50க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன.
லஹர்ட்: – அவையனைத்தும் எவ்வாறு செயல்படுகின்றன? அவற்றிற்கான வருமானம்?
ஸ்ரீல பிரபுபாதர்: – அவையனைத்தையும் கிருஷ்ணர் பார்த்துக்கொள்கிறார்.
லஹர்ட்: – கிருஷ்ணர் அவற்றைப் பார்த்துக்கொள்கிறாரா?
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானது. கிருஷ்ணர் உங்களுக்குள்ளும் இருக்கிறார். அந்த கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார், கிருஷ்ணருடைய கோயிலுக்கு மூவாயிரம் டாலர்களைக் கொடுப்பீராக.” அதைக் கேட்டு நீங்கள் அதனை வழங்குகிறீர்கள். இதுவே உண்மையாகும். ஒரு மனிதன் என்னிடம் வந்து மூவாயிரம் டாலருக்கான காசோலை வழங்கினார். நான் அவரிடம் பணம் கேட்கவில்லை, ஆனால் கிருஷ்ணர் அவர் மூலமாக பணத்தை கொடுத்தனுப்பினார். நாங்கள் நாளை என்ன நிகழும் என்பதைக் கண்டு வருந்துவதில்லை, ஆனால் கிருஷ்ணரால் மிகவும் அருமையாக பராமரிக்கப்படுகிறோம். இதுவே கிருஷ்ண உணர்வாகும். பகவத் கீதையில் (9.22) கிருஷ்ணர் கூறுகிறார், அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: – பர்யுபாஸதே/ தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக-க்ஷேமம் வஹாம்-யஹம், பக்தியுடன் என்னை வழிபட்டு என்னுடைய தெய்வீக ரூபத்தை தியானம் செய்பவர்களுக்கு, அவர்களிடம் இருப்பவற்றை பராமரித்து இல்லாதவற்றை நானே வழங்குகிறேன்.”
லஹர்ட்: – இருப்பினும், நீங்கள் வெளியே சென்று அவ்வப்போது மக்களிடம் யாசிக்கின்றீர்களே?
பலிமர்தன்: – ஆம். நாங்கள் வெறுமனே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கிருஷ்ணர் எங்களுக்காக பொருட்களை அனுப்புவார் என்று காத்துக் கொண்டிருப்பதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். நாங்கள் செயல்படாமல் அமர்ந்திருப்பதில்லை. நாங்கள் செயல்பாடுகளற்ற பிரச்சாரகர்கள் அல்ல. நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கின்றோம், சாதாரண மக்களைக்காட்டிலும் கடுமையாக உழைக்கின்றோம்.
இராமேஸ்வர ஸ்வாமி: – நாங்கள் விநியோகிக்கக்கூடிய புத்தகங்கள் ஆன்மீக அடையாளம் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதற்கானவை, மக்கள் அந்த புத்தகத்தைப் பிரசுரிப்பதற்கான பணத்தினை நன்கொடையாக வழங்குகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: – நான் தற்போது 80 வயதை எட்டியுள்ளேன். நான் தினமும் 21 மணி நேரம் வேலை செய்கிறேன். என்னுடைய இளம் சீடர்களைக்காட்டிலும் நான் அதிக நேரம் உழைப்பதாக நினைக்கின்றேன்.
இராமேஸ்வர ஸ்வாமி: – ஆம். ஸ்ரீல பிரபுபாதருடன் இணைந்து செயல்படுவது மிகவும் கடினமானதாகும். நாங்கள் அவருடைய நூல்களைப் பிரசுரிக்கின்றோம், சில நேரங்களில் அவர் எங்களைக்காட்டிலும் 17 புத்தகங்கள் அதிகமாக எழுதி வைத்துள்ளார்.
லஹர்ட்: – உங்களுடைய நாள்களை நீங்கள் எவ்வாறு கழிக்கிறீர்கள்? நீங்கள் நிறைய பயணம் செய்வதாக நான் அறிகிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். நாங்கள் உலகம் முழுவதும் பயணம் செல்கின்றோம். நான் எங்கு சென்றாலும், அங்கே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுகிறேன். இரவு நேரத்தில் புத்தகங்களை எழுதுகிறேன், பகல் நேரத்தில் பக்தர்களைச் சந்தித்து இயக்கத்தின் பல்வேறு நிர்வாகப் பணிகளையும் கவனித்துக்கொள்கிறேன். என்னுடைய சீடர்கள் என்னிடம் பல்வேறு விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர், என்னுடைய முடிவினை அவர்கள் இறுதியாக எடுத்துக்கொள்கின்றனர். உலகெங்கிலும் இருந்து பல்வேறு கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கு இருபது காரியதரிசிகள் உள்ளனர். அவர்களும் என்னிடம் ஆலோசனை செய்கின்றனர், நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன்.
பலிமர்தன்: – ஸ்ரீல பிரபுபாதர் இரவு நேரத்தில் 10 மணிக்கு உறங்கச் செல்கிறார், 11:30 மணிக்கு எழுந்து மொழிபெயர்ப்புப் பணியினை தொடங்குகிறார்.
லஹர்ட்: – நீங்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: – இல்லை 1:30 மணி நேரம் மட்டுமே.
லஹர்ட்: – அவ்வளவுதானா?
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். பகல் நேரத்தில் நான் ஒரு இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துக்கொள்கிறேன். இவ்விதமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே நான் ஓய்வெடுக்கின்றேன். அமைதியாக அமர்ந்து கொண்டு கடவுள் எல்லாவற்றையும் அனுப்புவார் என்று இருப்பது எங்களுடைய தத்துவம் அல்ல. கடவுள் எல்லாவற்றையும் அனுப்புவார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம், இருப்பினும் நாங்கள் பணியாற்றுகின்றோம். கடவுளுடைய அனுமதி இல்லாவிடில், எதுவும் வர இயலாது. நாம் உழைத்தாக வேண்டும் அதன் மூலமாக கடவுளின் கருணையைப் பெற இயலும்.
லஹர்ட்: – உங்களுடைய இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டது உண்டா?
ஸ்ரீல பிரபுபாதர்: – எனக்கு இதில் ஏதும் ஆச்சரியமில்லை. இஃது இயற்கையானதாகும். நீங்கள் ஒரு தொழிலை முறையாக நிறைவேற்றினால், அதில் நிச்சயம் இலாபம் இருக்கும். அதுபோலவே, அறிவை வழங்கும் இந்த பகவத் கீதை என்னும் நூலின்படி நீங்கள் செயல்பட்டீர்களேயானால், உங்களுடைய முயற்சிகள் விரிவடைந்து வளர்ச்சிபெறும். இரண்டையும் இரண்டையும் கூட்டினால் எப்போதும் நான்குதான் வரும். அதனுடைய கூட்டுத்தொகை ஒருபோதும் மூன்றாகவோ ஐந்தாகவோ ஆவதில்லை. அதுபோல, பகவான் கூறுகிறார், 24 மணி நேரமும் என்னுடைய சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, தேவையானவற்றை நானே வழங்குகிறேன், அவர்களிடம் இருப்பவற்றை நான் பாதுகாக்கின்றேன்.” இதனால் நீங்கள் உண்மையிலேயே கிருஷ்ணருக்கு சேவை செய்தால், உங்களுக்குத் தேவையானவை அனைத்தும் தங்களுக்குக்கிட்டும்.
லஹர்ட்: – கடவுள் உங்களிடம் நேரடியாகப் பேசுகிறாரா?
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். நீங்கள் தகுதியுடையவராக இருப்பீர்களெனில், கடவுள் உங்களுடன் நேரடியாகப் பேசுவார். உங்களுடைய கட்டளைகளை நிறைவேற்றுபவராக நீங்கள் கடவுளை எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் அவர் தங்களைத் தகுதியுடையவர் என்று கருதும்போது, தங்களிடம் அவர் பேசுவார்.
இராமேஸ்வர் சுவாமி: – கடவுளால் ஒரு மனிதருடன் பேச முடியும் என்பதைப் புரிந்துகொள்வது மக்களுக்கு கடினமானதாக உள்ளது.
ஸ்ரீல பிரபுபாதர்: – மக்களால் பல்வேறு விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. வானொலியின் செய்தியைப் பெறும்போது, அந்த வானொலி எவ்வாறு செயல் படுகின்றது என்பதை முட்டாள் மனிதனால் புரிந்துகொள்ள முடியாது. இஃது எவ்வாறு பேசுகிறது?” என்று அவன் நினைக்கின்றான். எனவே, கடவுள் எவ்வாறு உங்களுடன் பேச முடியும் என்பதை ஒரு சாதாரண மனிதன் ஆச்சரியமானதாகக் கருதலாம். அஃது அவனுடைய முட்டாள்தனம். கடவுள் கூறுகிறார், தேஷாம் ஸதத-யுக்தானாம் பஜதாம் ப்ரீதி-பூர்வகம்/ ததாமி புத்தி-யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே, எனக்கு அன்புடன் தொண்டு செய்வதில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு, என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்.” கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றுள்ளார். ஒருவரை தகுதியுடையவர் என்று அவர் காணும்போது, அவர் அந்த நபருக்கு உபதேசமளிக்கிறார்.
லஹர்ட்: – இருப்பினும், கிருஷ்ணர் உங்களுக்கு வழங்குபவற்றை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் சற்று பணியாற்ற வேண்டியுள்ளது.
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். நீங்கள் கிருஷ்ணருக்காக பணியாற்றுங்கள். பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.
லஹர்ட்: – கிருஷ்ணருடனான தொடர்பு நேரடியானதா மறைமுகமானதா என்பதை அறிவதில் நான் ஆர்வத்துடன் உள்ளேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: – மறைமுகமாக அல்ல. கிருஷ்ணர் தன்னுடைய தூய பக்தரிடம் நேரடியாகத் தொடர்பு கொள்கிறார். தூய பக்தர் எப்போதும் கிருஷ்ணரிடம் ஆலோசனை பெறுகிறார். இவ்வாறு செய்வாயாக” என்று கிருஷ்ணர் அவருக்கு அறிவுறுத்துகிறார். இது மறைமுகமானது அல்ல, நேரடியாக கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.
லஹர்ட்: – இஃது எல்லாவிதமான முடிவுகள் மற்றும் செயல்களுக்கும் பொருந்தக்கூடியதா?
ஸ்ரீல பிரபுபாதர்: – அனைத்திற்கும் பொருந்தும்; ஏனெனில், கிருஷ்ணருடன் கலந்தாலோசிக்காமல் பக்தன் எதையும் செய்வதில்லை.
லஹர்ட்: – ஆயினும், அது மிகமிக உயர்ந்த ஆத்மாவிற்கு மட்டுமே பொருந்தக்கூடியதா?
ஸ்ரீல பிரபுபாதர்: – ஆம். இதர பக்தர்கள் தங்களுடைய ஆன்மீக குருவிடம் கலந்தாலோசிக்கின்றனர். இதுவே எங்களுடைய வழிமுறையாகும்.
இராமேஸ்வர ஸ்வாமி: – நன்றி, ஸ்ரீல பிரபுபாதரே.
ஸ்ரீல பிரபுபாதர்: – இங்கு வந்தமைக்கு நன்றி.
லஹர்ட்: – நன்றி.
ஸ்ரீல ப்ரபுபாதர்