பாப்: நேர்மையானவர் யாரென்று தாங்கள் சொல்ல முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: நேர்மை என்றால் என்னவென்று தெரியாதபோது ஒருவனால் எவ்வாறு நேர்மையானவனாக ஆக முடியும்? நேர்மை என்றால் என்னவென்று தெரிந்தால் நேர்மையாக இருக்க முடியும். நேர்மை என்றால் என்ன? நீங்கள் முதலில் விளக்கம் சொல்லுங்கள்.
பாப்: நேர்மை என்பது ஒருவர் சரியானது என்று தனக்கு உண்மையாகப் படுவதைச் செய்வது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு திருடன்,”என் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நான் திருடுகிறேன். நான் செய்வது சரியே” என்று எண்ணுகிறான். அவனை நேர்மையானவன் என்று சொல்ல முடியுமா? எல்லாரும் தன்னை நேர்மையானவனாகவே எண்ணுகிறார்கள். கசாப்புக் கடைக்காரன்,”இது என் வாழ்க்கை முறை. நான் தினமும் மிருகங்களின் கழுத்தை வெட்ட வேண்டும்” என்று நினைக்கிறான். நாரத முனி சந்தித்த மிருகாரி என்ற வேடனும் அதுபோலவே எண்ணினான். நாரதர் அவனை,”ஏன் இப்படிக் கொன்று குவிக்கிறாய்?” என்று கேட்டபோது, அவன்,”இஃது என் தொழில், என் தந்தை எனக்குக் கற்றுத் தந்தது” என்றான். அவன் தான் செய்தது நேர்மையானது என்றே எண்ணினான். ஆக, எது நேர்மை என்பதைப் பற்றிய உணர்வு அவரவர் பண்பின் வளர்ச்சியைப் பொறுத்தது. ஒரு திருடனின் பண்பு வேறு விதமானது, திருடுவது நேர்மையான செயல் என்று அவன் எண்ணுகிறான்.
பாப்: அப்படியானால், நேர்மை என்பது என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: அதுதான் என் கேள்வியும். (எல்லாரும் சிரிக்கிறார்கள்) உண்மையான நேர்மை மற்றொருவனுக்குச் சொந்தமான பொருளை ஆக்ரமிக்காமல் இருப்பதாகும். அதுவே நேர்மை. உதாரணமாக, இஃது என் மேஜை. நீங்கள் போகும்போது இதை எடுத்துக் கொண்டு போக நினைத்தால், அது நேர்மையாகுமா? எனவே, மற்றொருவரின் உரிமையை அபகரிக்கக் கூடாது என்பதே நேர்மையின் தெளிவான விளக்கம். அதுவே நேர்மை.
பாப்: எனவே, நேர்மையாக இருப்பவன் நற்குணத்தின் (ஸாத்வீக குணத்தின்) தன்மையை உடையவர் என்பது சரியாகுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக, நிச்சயமாக. ஏனெனில், ஸாத்வீக குணம் அறிவைச் சார்ந்ததாகும். “இந்த மேஜை எனக்குச் சொந்தமானதல்ல, ஸ்வாமிஜிக்கு சொந்தமானது” என்பது அறிவு. இஃது உங்களுக்கிருக்கும்போது நீங்கள் அதை எடுத்துச் செல்ல முயற்சிக்க மாட்டீர்கள். எனவே, ஒருவர் அறிந்தவராக இருக்கவேண்டும். எல்லாவற்றையும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அப்போது அவர் நேர்மையுடையவராகிறார்.
பாப்: ஸாத்வீக குணம் கடவுளை அறிவதாகும் என்று சொல்கிறீர்கள். ஆனால் கடவுளைப் பற்றிய அறிவு அவ்வளவாக இல்லாத ஒருவரும் நேர்மையானவராக இருக்கலாமல்லவா?
ஸ்ரீல பிரபுபாதர்: உம்?
பாப்: கடவுளின் விருப்பத்திற்காக நேர்மையாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே ஒருவர் நேர்மையாக நடக்க விரும்பலாமே?
ஸ்ரீல பிரபுபாதர்: எல்லாரும் நேர்மையாக நடக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். கடவுள் ஏன் வேறு விதமாக எண்ண வேண்டும்?
பாப்: கடவுளின் விருப்பப்படி நடக்கிறோம் என்பதை அறியாமலேயே கடவுளின் விருப்பத்தைப் பின்பற்றலாமல்லவா? உதாரணமாக…
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. அறியாமல் பின்பற்றுவது அபத்தமானது. கடவுளின் கட்டளையை அறிந்திருக்க வேண்டும். அறிந்து அதைப் பின்பற்றினால் அது நேர்மை.
பாப்: அப்படியானால் கடவுளை அறியாமல் நேர்மையாக இருக்க முடியாதா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஏனென்றால், கடவுளே உன்னதமான உடைமையாளர்; உன்னதமான அனுபவிப்பாளர்; உன்னதமான நண்பர். இதுவே பகவத் கீதையின் கூற்று. இந்த மூன்று விஷயங்களை அறிந்த எவரும் முழு அறிவைப் பெற்றவராகிறார். இந்த மூன்று விஷயங்கள் போதும்: (1) கடவுளே எல்லாவற்றிற்கும் சொந்தமானவர், (2) கடவுளே எல்லாருக்கும் நண்பர், (3) கடவுளே எல்லாவற்றையும் அனுபவிப்பவர். உதாரணமாக, உடலில் வயிறே அனுபவிப்பாளர் என்பதை யாவரும் அறிவர். கைகளோ கால்களோ கண்களோ காதுகளோ அல்ல. இவையெல்லாம் வயிற்றுக்கு உதவவே அமைந்திருக்கின்றன. கண்கள்ஶீகழுகின் கண்கள் ஏழு மைல் உயரத்திலிருந்து வயிற்றுக்குத் தேவையான உணவு எங்கிருக்கிறது என்று காணக் கூடும். இல்லையா?
பாப்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்போது, அதன் இறக்கைகள் அந்த இடத்திற்குப் பறக்கின்றன, அலகுகள் இரையைப் பிடிக்கின்றன. உடம்பில் வயிறே அனுபவிப்பாளராக இருப்பதுபோல, பௌதிக மற்றும் ஆன்மீக பிரபஞ்சம் முழுமைக்குமான மையம் கிருஷ்ணரே, கடவுளே. அவரே அனுபவிப்பாளர். நம் உடலைக் கவனித்தே நாம் இதை அறிந்துகொள்ளலாம். உடலும் ஒரு சிருஷ்டியே. பிரபஞ்சம் முழுவதிலும் காணப்படும் இயக்கத்தின் இயல்பையே நம் உடலும் பெற்றிருக்கிறது. இந்த இயக்கத்தின் இயல்பை, அல்லது ஏற்பாட்டை எங்கும் காணலாம். நீங்கள் இதனை சுலபமாக புரிந்துகொள்ள முடியும். என் உடலில், உங்கள் உடலில் என எல்லா உடலிலும் வயிறே அனுபவிப்பாளர். வயிறு உடலின் நண்பரும்கூட. அஃது உணவை ஜீரணிக்காவிடில், உடலின் மற்ற உறுப்புகள் பலவீனமடைகின்றன. எனவே வயிறு உடலின் நண்பர். அதுவே உணவை ஜீரணித்து சக்தியை எல்லா பாகங்களுக்கும் விநியோகிக்கிறது. அப்படித்தானே?
பாப்: ஆம், அப்படித்தான்.
ஸ்ரீல பிரபுபாதர்: அதுபோலவே, சிருஷ்டி முழுமைக்கும் மையமான வயிறு கடவுள், கிருஷ்ணர். அவரே அனுபவிப்பாளர், அவரே நண்பர், அவரே உன்னதமான உடைமையாளர். அவர் எல்லாரையும் பரிபாலிப்பவர். அரசன் உடைமையாளனாக இருப்பதால், குடிமக்கள் எல்லாரையும் அவன் பரிபாலிப்பதுபோல, கடவுளும் பரிபாலிக்கின்றார். உடைமையாளராக இல்லாமல் ஒருவர் எவ்வாறு எல்லாருடைய நண்பராக ஆக முடியும்? இவற்றைப் புரிந்துகொள்வது அவசியம். கிருஷ்ணரே உடைமையாளர், கிருஷ்ணரே அனுபவிப்பாளர், கிருஷ்ணரே நண்பர். இந்த மூன்று விஷயங் களையும் அறிந்திருப்பவர் முழு அறிவும் பெற்றவராவார். இதற்குமேல் அறிய வேண்டியது யாதொன்றுமில்லை. இதை அறிந்தவர் அமைதியுடையார் என்று பகவத் கீதை (5.29) கூறுகிறது.
ஆனால் நாம் இதை ஒப்புக்கொள்ள மாட்டோம். போலியான உடைமையாளர்களை, போலியான நண்பர்களை, போலியான அனுபவிப்பாளர்களை நாம் கொண்டு வருவோம். அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிடுகின்றனர். இஃது இன்றைய உலகின் நிலை. உண்மையான கல்வி கற்பிக்கப்பட்டு மக்கள் இந்த அறிவை ஏற்றுக்கொள்வார்களானால், அங்கு உடனேயே அமைதி பிறக்கும். இதுவே அறிவு. இந்தக் கொள்கையை கடைபிடிப்பவன் நேர்மையானவன்.
“இஃது என்னுடையது” என்று அவன் உரிமை கொண்டாடுவதில்லை. அவன் எல்லாம் அறிந்தவன்,”இது கிருஷ்ணரைச் சேர்ந்தது. எனவே, எல்லாவற்றையும் கிருஷ்ணரின் சேவைக்காக பயன்படுத்த வேண்டும்.” அதுவே நேர்மை. இந்த பென்சில் என்னுடையது என்பதால், எனது மாணவர்கள், “இந்த பென்சிலை உபயோகிக்கலாமா?” என்று கேட்கின்றனர். இதுவே நற்பண்பு. அதுபோலவே, எல்லாம் கிருஷ்ணருடையவை என்று நான் அறிந்திருந்தால், அவருடைய அனுமதியில்லாமல் நான் எதையும் உபயோகிக்க மாட்டேன். அதுவே நேர்மை. அதுவே அறிவு.
ஸ்ரீல பிரபுபாதர்