கடவுளை உண்மையாக அறிய விரும்புபவன் அவரை எவ்வாறு அணுக வேண்டும் என்பதுகுறித்து, கரோல் கேமரோன் என்ற மானிடவியல் அறிஞருக்கும் ஸ்ரீல பிரபுபாதருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி.
கரோல்: ஸ்வாமிஜி, கடவுளிடம் அன்பு செலுத்துதல் குறித்து கொஞ்சம் கூறுங்களேன்?
ஸ்ரீல பிரபுபாதர்: அன்பு என்பது ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதாகும். உதாரணமாக, நான் ஏதேனும் ஒன்றை உண்ண விரும்பினால், அதனை நான் என் அன்பிற்குரியவருக்கும் கொடுத்து அவரையும் உண்ணச் செய்வேன். மேலும், அன்பு செலுத்துபவர்கள் இயற்கையாகவே ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளைப் பகிர்ந்துகொள்வர். உதாரணமாக, ஓர் ஆண் ஒரு பெண்ணை நேசிக்கும்போது, அவன் அவளுக்கு அன்பளிப்பினை வழங்குகிறான், அவளும் அன்பளிப்பினை வழங்குகிறாள். என்னிடமுள்ள இரகசியத்தை நான் என் காதலியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், அவளும் எதையும் மறைக்காமல் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவள் அழகாக இருக்கிறாள் என்று நினைத்து வெறும் புலனின்பத்திற்காக மட்டும் அவளை நேசித்து, தன்னுடைய இரகசியங்களை மறைத்துக் கொண்டால், அஃது உண்மையான அன்பல்ல, புலனின்பமே.
நேசிப்பவர்களுக்கு இடையில் நேசத்தில் ஆறு வித பரிமாற்றங்கள் நிகழ வேண்டும். அதுவே அன்பின் அறிகுறியாகும்.
ததாதி ப்ரதிக்ருஹ்ணாதி குஹ்யம் ஆக்யாதி ப்ருச்சதி
புங்க்தே போஜயதே சைவ ஷட்-விதம் ப்ரீதி லக்ஷணம்
ப்ரீதி என்றால் அன்பு.” பரிசு கொடுத்தல், பரிசு பெறுதல், உணவு கொடுத்தல், உண்ணுதல், மனதை வெளிப்படுத்துதல், மனதின் விஷயங்களைக் கேட்டல் ஆகிய ஆறு வித பரிமாற்றங்கள் அதிகமாகும்போது அன்பும் அதிகரிக்கின்றது.
கரோல்: ஒருவன் தனது அன்பினைப் பக்குவப்படுத்த விரும்பினால், அவன் இந்த உலகிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: முதலில், அன்பு என்பது ஒரு தனி நபருக்குள் இருப்பதல்ல, அது குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்கு இடையிலானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு, நாம் அன்பை அதிகரிப்பதுகுறித்து முயற்சிக்கலாம். அன்பு என்றால், அங்கே அன்பு செலுத்துபவர், அன்பு செலுத்தப்படுபவர் என இருவர் தேவை. ஆகவே, அன்பு பரிமாற்றமானது இருவருக்குமிடையே நிகழ்கின்றது; பிறகு, அஃது அதிகரிக்கின்றது.
கரோல்: நீங்கள் இருவர் என குறிப்பிடுவது படைப்பாளியையும் நபரையும் தானே?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். படைப்பாளி மற்றும் படைக்கப்பட்டவன். நீங்கள் படைப்பாளியை நம்புகிறீர்களா?
கரோல்: நம்புகிறேன், அருவமான படைப்பாளியை.
ஸ்ரீல பிரபுபாதர்: அருவமான படைப்பாளியா?
கரோல்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: அருவமான படைப்பாளி! இஃது எத்தகைய கொள்கை?
கரோல்: அவர் குணங்கள் ஏதும் அற்றவர்.
ஸ்ரீல பிரபுபாதர்: படைத்தல் என்பதும் ஒரு குணமே. எனவே, படைப்பாளி என்பவர் குணமுடையவர்தானே. (மற்றவர்களை அழைப்பதற்கு உபயோகிக்கும் ஒரு மணியை காட்டிக் கூறுகிறார்) நான் இந்த மணி அழைப்பானை உருவாக்குகிறேன் என்று எடுத்துக் கொண்டால், உருவாக்குவதற்கான கலை எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த படைக்கும் கலை எனது குணம். ஆகவே, படைப்பாளிக்கு குணங்கள் இல்லை என எவ்வாறு கூறவியலும்? இது தவறான கொள்கை. எனக்கு மணி அழைப்பானை உருவாக்கத் தெரியும். இஃது எனது படைப்புத் திறன். ஆகவே, நான் குணங்கள் ஏதுமில்லாதவன் என்று எவ்வாறு உங்களால் கூறவியலும்? படைப்பாளி என்று நீங்கள் கூறும்பொழுதே, அவர் குணங்கள் உள்ளவர் என்றே அர்த்தமாகிறது அல்லவா!
கரோல்: அறியாமையை எவ்வாறு போக்குவது?
ஸ்ரீல பிரபுபாதர்: அறியாமையில் உள்ளவர்கள் அறிவுடையோரிடமிருந்து அறிவைப் பெற வேண்டும். படைப்பாளி என்பவர் குணங்களற்றவர், அருவமானவர் என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் அறிவற்றவர் என்பதையே அது காட்டுகிறது. இது மிகவும் எளியது. படைப்பாளி என்று கூறும்பொழுதே அவர் குணங்கள் அல்லது பண்புகள் நிறைந்தவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
இந்த மணி அழைப்பானை நான் அழுத்துகிறேன் என்று வைத்துக்கொள்வோம், இதன் ஸ்பிரிங் தளர்ந்திருப்பின் இந்த மணியிலிருந்து ஒலி எழும்பாது. மற்றவர்கள் இதில் ஏன் ஒலி எழும்பவில்லை என்பதற்கான காரணத்தை அறியாமல் இருக்கலாம். ஆனால் இதை உருவாக்கியவனுக்கு, ஸ்பிரிங் தளர்ந்துள்ளது, இதைச் சரி செய்ய வேண்டும்,” என்பது தெரியும். அதாவது, படைப்பாளி தனது படைப்பின் அனைத்து விஷயங்களையும் அறிவார். இதுவே படைப்பாளியின் அடிப்படைத் தன்மை.
சற்று யோசித்துப் பாருங்கள்: உலகிலுள்ளவை அனைத்தையும் படைத்தவர், அந்தப் படைப்பிலுள்ள அனைத்தையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆகவே, அவர் எவ்வாறு அருவமாக இருக்க முடியும்? இஃது என்ன கொள்கை? நீங்கள் ஒரு தத்துவ அறிஞரல்லவா? பதில் கூறுங்கள்.
கரோல்: ஆனால், அத்தகு குணங்களை நாமே அவருக்குச் சூட்டுகிறோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு நிமிடம். நீங்கள் அவர்” என்று கூறினீர்கள். அவர்” என்று கூறிவிட்டு, அருவமானவர் என்றால் என்ன அர்த்தம்? (சிரிக்கிறார்)
கரோல்: ஆம். (சிரிக்கிறார்) படைப்பு என்றால், அங்கே அறிவு இருத்தல் அவசியம், உணர்ச்சிகளும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
ஸ்ரீல பிரபுபாதர்: என்ன ஒரு தெளிவற்ற சிந்தனை. இதுவே உங்களது அபத்தமான பண்பாடு. இந்த தெளிவற்ற சிந்தனைகளை தத்துவம் என்று கூறுகின்றனர். அவர்” என்னும் சொல் உங்களது அருவமான கருத்திற்கு முரணாக உள்ளது. அவர்” என்று கூறுகிறீர், ஆனால் அந்த அவர்” அருவமானவர் என்றும் வலியுறுத்துகிறீர்.
கரோல்: உணர்ச்சிபூர்வமாக அணுகினால், படைப்பாளி ஒரு நபராகத் தோன்றலாம்…
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் ஏன் உணர்ச்சிபூர்வமாக அணுக வேண்டும்? நீங்கள் ஒரு தத்துவ அறிஞர், அறிவுபூர்வமாக பேசுங்கள்.
கரோல்: இல்லை. நான் இதை தத்துவமாக்கவில்லை. கடவுள் அருவமானவர் என்பதும், அவர் குணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதும் எனது கருத்து. கடவுள் அனைத்திலும் இருக்கிறார் என்பதால், ஒரு நபருக்குரிய குணங்களும் அவரில்” அல்லது அதில்” இருத்தல் வேண்டும். ஆனால் கடவுளை ஒரு நபர் எனும் எல்லைக்குள் அடைக்க இயலாது.
ஸ்ரீல பிரபுபாதர்: அவர் அனைத்தும் அறிந்தவர்,” அவர் படைக்கிறார்,” என்றெல்லாம் நீங்கள் கூறும்போதே, இவை அனைத்தும் அவர் ஒரு நபர் என்பதைக் குறிக்கின்றன. அவர்” எனும் சொல்லை நீங்கள் திரும்பத்திரும்ப பயன்படுத்துகிறீர். இவை அனைத்தும் ஒரு நபரையே குறிக்கின்றன.
கரோல்: கடவுளைப் பற்றி நாங்கள் அறிந்துள்ள கருத்து இதுவே.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களிடம் கடவுளைப் பற்றிய தெளிவான சிந்தனை இல்லை என்று பொருள். கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் முன்வர வேண்டும்.
கரோல்: கடவுளின் இயற்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். நீங்களும் அதனை அறிந்துகொள்ளலாம்.
கரோல்: அறிவுபூர்வமாகவா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். நிச்சயமாக.
கரோல்: உங்களது இதயத்தில் உங்களுக்கு ஒன்று தெரிந்திருக்கலாம், ஆனால் அதை உங்களால் வெளிப்படுத்த இயலாமல் இருக்கலாம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஏன் வெளிப்படுத்த இயலாது? உங்களால் வெளிப்படுத்த இயலும். உங்கள் மனதில் உள்ளதை உங்களால் வெளிப்படுத்த இயலவில்லை எனில், நீங்கள் பக்குவமானவரல்ல. நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். என் மனதில் உள்ளது, ஆனால் அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது எனக்குத் தெரியாது,” என்பதெல்லாம் பக்குவமற்றவை.
கரோல்: அவ்வப்போது எமது அறிவு வேறுவிதமாகப் பயணிக்கிறது; அதாவது இதயத்தின் மூலமாக, உணர்ச்சிகள், எண்ணங்கள் என நகர்கிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: கடவுளைப் பற்றிய விஞ்ஞான அறிவிற்கு உணர்ச்சிகள் தேவையில்லை. உணர்ச்சிகள் தேவையே இல்லை. அவை உபயோகமற்றவை. கடவுளைப் பற்றிய அறிவு உண்மையானதாக இருக்க வேண்டும், உணர்ச்சிகளால் எந்தப் பயனும் இல்லை. பக்தியின் மிகவுயர்ந்த நிலையில் உணர்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் கடவுளைப் பற்றிய ஆரம்ப விஞ்ஞான அறிவைப் பெறுவதற்கு உணர்ச்சிகள் தேவையில்லை.
கரோல்: ஆனால் பல்வேறு வழிகளில் பக்தி புரிகையில், இந்த உணர்ச்சிகளும் அன்பும் உண்மையில் மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளன அல்லவா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஆனால் அஃது உயர்ந்த நிலை. ஆரம்ப நிலையில் அல்ல. ஆரம்ப நிலையில் நான் அறிவுபூர்வமாக கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும். நான் கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும் என்றால், அவர் அதற்குத் தகுந்தவராக இருக்க வேண்டும். அவர் தகுந்தவரா என்பதை அறியாமல் எவ்வாறு என்னால் பக்தியில் ஈடுபடவியலும்? உதாரணத்திற்கு, கிருஷ்ணர், என்னிடம் சரணடைவாயாக,” என்று கூறுகிறார். நான் சரணடைவதற்கு தகுந்த நபர் கிருஷ்ணர் என்பதை அறியாதபட்சத்தில், என்னால் எவ்வாறு அவரிடம் சரணடைய இயலும்? நீங்கள் இங்கு வந்தவுடன் உங்களை நான் சரணடையும்படி வற்புறுத்தினால், அதை நீங்கள் விரும்புவீர்களா? எனது குணங்கள், திறமைகள் முதலியவற்றை அறியாதபட்சத்தில், நீங்கள் ஏன் என்னிடம் சரணடைய வேண்டும்?
ஆகவே, சரணடைவதற்கு முன்பு ஒருவன் தான் சரணடைய போகும் நபரைக் குறித்து ஆராய வேண்டும். பிறகு, சரணடைய வேண்டும். அதுவே உண்மையான சரணாகதி. கண்மூடித்தனமாக சரணடைந்தால், அது நீண்ட நாள் நீடிக்காது.
அதுபோலவே, கண்மூடித்தனமாக கடவுளிடம் சரணடைவதும் நெடுநாள் நீடிக்காது. இந்த மனிதப் பிறவியில் நமது முதல் பணி கடவுளிடம் சரணடைவதே என்பதால், கடவுள் என்பவர் யார், கடவுள் என்றால் என்ன, என்பனவற்றை அறிந்து, நீங்கள் சரணடைய வேண்டும். அதன் பின்னர், உங்களது சரணாகதி திடமான அறிவுடன் நிலைபெறும்போது, உங்களது உணர்ச்சிகள் நன்மை தரும். அதாவது, அத்தருணத்தில் நீங்கள் முன்னேறியவராக இருப்பீர்.
கடவுள் நமக்கு அனைத்தையும் வழங்குகிறார்” என்ற அறிவில் உங்களது உணர்ச்சிகள் நிலைபெற்றிருப்பின், அது நல்ல உணர்ச்சியாகும். கடவுள் மிகவும் அன்பானவர், அவர் மிகப் பெரியவர். நமது தேவைகள் அனைத்தையும் அவர் வழங்குகிறார். ஆகவே, நான் அவருக்கு சேவை செய்தாக வேண்டும்,” என்று ஒருவன் ஆரம்ப நிலையிலேயே எண்ணினால், அந்த உணர்ச்சி மிகவும் நல்லது.
ஆனால் சாதாரண மனிதனுக்கு, இத்தகு உணர்ச்சிகள் வருவதில்லை. கடவுள் யார், கடவுள் என்றால் என்ன என்பன குறித்து அவன் முதலில் கற்க வேண்டும். கடவுள் மிகப் பெரியவர்,” என்பதை அவன் முழுமையாகப் புரிந்துகொள்ளும்போது, அதன் பின்னர் அவனில் எழும் உணர்ச்சிகள் மிகவும் நல்லவை. அதுவே நேர்மையான உணர்ச்சி. இல்லையெனில், கடவுளிடம் அவன் சரணடைதல் என்பது போலியான மனவெழுச்சியாகவே இருக்கும். அது நீண்ட நாள் நீடிக்காது, தற்காலிகமாகவே இருக்கும்.
ஒரு மணி அழைப்பானில் ஒலி வராவிடில் அதன் படைப்பாளியால் அதற்கான காரணத்தை அறிய முடியும். அதுபோல, உலகின் படைப்பாளி உலகம் சார்ந்த அனைத்தையும் அறிவார்.
சரணடைவதற்கு உரிய நபர் கிருஷ்ணரே என்பதை அறிந்தவர்களால் மட்டுமே அவரிடம் சரணடைய முடியும்.