வண்ணானைக் கொன்ற கண்ணன்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

விருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ணர் கம்சனுடைய அழைப்பின் பேரில், மதுராவிற்கு வந்தபோது அவர் அங்கிருந்த வண்ணான் ஒருவனிடம் அவன் கம்சனுக்காக துவைத்து வைத்திருந்த புதிய துணிகளைத் தம்மிடம் வழங்கும்படி கட்டளையிட்டார். அதற்கு அவன் மறுத்தபோது, கிருஷ்ணர் அவனைக் கொன்று விட்டார். இது தெரிந்த கதை, தெரியாத துணுக்கு என்ன?

மதுராவினுள் நுழைந்த கிருஷ்ணர், தமது வழியில் சில நயமான துணிகளை வைத்திருந்த வண்ணானைச் சந்தித்தார், தமக்கும் பலராமருக்கும் அற்புதமான ஆடைகள் சிலவற்றை வழங்கும்படி அவனிடம் வேண்டினார். அவ்வாறு செய்தால் மிகவுயர்ந்த நன்மையினை நிச்சயம் பெறுவாய் என்று அவனுக்கு உறுதியும் கொடுத்தார். இருப்பினும், கர்வம் கொண்டிருந்த அந்த வண்ணான் கிருஷ்ணரை நோக்கிக் கூறினான், திமிர் பிடித்தவனே, காட்டில் திரியும் உனக்கு அரசுருக்குரிய ஆடையில் ஆசையா? முட்டாளே, உயிருடன் வாழ விரும்பினால் இங்கிருந்து உடனே ஓடி விடு. இல்லையேல், கம்சனின் ஆட்கள் உன்னைக் கொன்று விடுவர்.”

ஆணவத்துடன்கூடிய அவனது பேச்சைக் கேட்ட கிருஷ்ணர் கோபம் கொண்டு, உடனடியாக தமது வெறும் கையால் அவனது கழுத்தை வெட்டி வீழ்த்தினார். வண்ணான் மடிந்து வீழ்ந்தவுடன் அவனது சகாக்கள் எல்லா திசையிலும் பறந்தனர். கிருஷ்ணரும் பலராமரும் தமக்குப் பிடித்த ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டனர், தங்களது இடையர்குல நண்பர்களுக்கும் ஆடைகளை வழங்கினர்.

அந்த வண்ணான் மன்னனாக இருந்த கம்சனின் ஒரு சாதாரண வேலைக்காரன், அவன் கிருஷ்ணருக்கு துணிகளை வழங்க மறுத்ததில் பெரிய பிழை ஏதும் இல்லை என்றும், அதற்காக கிருஷ்ணர் உடனடியாக எந்த வாய்ப்பும் வழங்காமல் ஏன் அவனைக் கொல்ல வேண்டும் என்றும் பலருக்கு ஐயம் எழலாம்.

இதற்கான விடையினை கர்க ஸம்ஹிதை என்னும் நூலில் ஸ்ரீ நாரத முனிவர் விளக்கியுள்ளார். திரேதா யுகத்தில் பகவான் இராமர் மாறுவேடம் பூண்டு வீதி உலா வந்த சமயத்தில், இராமரையும் அவரது பத்தினியான சீதையையும் ஒரு வண்ணான் தவறாகப் பேசினான். இராவணனின் இடத்தில் ஓர் ஆண்டு வசித்து விட்டுத் திரும்பிய சீதையை இராமர் ஏற்றுக் கொண்டதை அவன் ஏளனமாகப் பேசினான். அதன் விளைவாக, இராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனை அனைவரும் அறிவர். அதே வண்ணான் பற்பல பிறவிகளைக் கடந்து துவாபர யுகத்தின் இறுதியில் கம்சனின் அரண்மனையில் வண்ணானாக வாழ்ந்து வந்தான்.

அவனை திரேதா யுகத்தில் இராமர் கொல்லவில்லை என்றபோதிலும், அதே பகவான், துவாபர யுகத்தில் கிருஷ்ணராக வந்தபோது, அவனது தலையைக் கொய்த்து அவனைக் கொன்று, அவனது பாவத்திற்கு விமோசனம் வழங்கி, அவனுக்கு முக்தியும் வழங்கினார். இதுவே வண்ணானைக் கொன்ற கண்ணனின் லீலைக்குப் பின்னால் இருக்கும் மர்மம்.

 

ஆதாரம்: கர்க ஸம்ஹிதை, ஐந்தாவது காண்டம், பத்தாவது அத்தியாயம், ஸ்லோகங்கள் 3-8.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives