ஜபம் செய்வதும் கவனம் சிதறுவதும்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் விருந்தினர் ஒருவருக்குமிடையில் ஆகஸ்ட் 14, 1971ஆம் ஆண்டில் இலண்டன் நகரில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க வேண்டும். இதுவே எங்கள் இயக்கம். நாங்கள் கடவுளிடம் அன்பு செலுத்தும்படி பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது பொருட்டல்ல. அவருக்குக் கடவுளின் மீது அன்பு இருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கின்றோம். கடவுளின் மீதான அன்பினை வளர்க்க உதவுவதே முதல் தரமான மதம் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகின்றீர் என்பது முக்கியமல்ல, ஆனால் அதன் மூலம் கடவுள்மீதான அன்பை வளர்த்துள்ளீர்களா என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

விருந்தினர்: அப்படியெனில், நீங்கள் மதமாற்றம் செய்வ தில்லை…

பிரபுபாதர்: நாங்கள் மதமாற்றம் செய்வதில்லை, கடவுளிடம் அன்பு செலுத்துவதற்குக் கற்றுக் கொடுக்கின்றோம்.

விருந்தினர்: நாங்களும் அதைத்தான் செய்து வருகிறோம்.

பிரபுபாதர்: ஆனால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் கடவுளின் மீது அன்பு செலுத்துகிறார்களா, நாயின் மீது அன்பு செலுத்துகிறார்களா என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவன் நாயின் மீது அன்பு செலுத்துபவனாக மாறிவிட்டான் என்றால், அவனது மதம் உபயோகமற்றது.

விருந்தினர்: இதை எப்படி அறிந்து கொள்வது?

பிரபுபாதர்: ஒருவர் கடவுளின் மீது அன்பு செலுத்துகிறாரா நாயின் மீது அன்பு செலுத்துகிறாரா என்பதை நீங்களே காணலாம். இதுவே சோதனை. கடவுளைப் பிரிந்து வாழும் ஒரு கண நேரத்தைப் பல யுகங்களாக உணர்வதாக சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். கோவிந்தன் இல்லாமல் அனைத்தையும் வெற்றிடமாக அவர் கருதுகிறார். கடவுளின் மீதான அன்பிற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம்.

மற்றொரு சோதனை என்னவெனில், ஒருவன் கடவுளின் மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டால், அவன் இயற்கையாக பெளதிக இன்பத்திலிருந்து விலகியிருப்பான். கடவுளின் மீதான அன்பும் ஜடவுலகத்தின் மீதான அன்பும் ஒன்றாகச் செல்ல இயலாது. இயேசு கிருஸ்துவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பொருளாதார முன்னேற்றத்தையோ தொழில் முன்னேற்றத்தையோ அறிவுறுத்தவில்லை. அவர் எல்லாவற்றையும் கடவுளுக்காக அர்ப்பணித்தார், இதுவே கடவுளை நேசிப்பவருக்கான சோதனை. எனவே, நீங்கள் எந்தப் பாதையைப் பின்பற்றினாலும் பிரச்சனை இல்லை என்றும், கடவுளின் மீது அன்பை வளர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கின்றோம்.

ஒருவன் கணிதத்தில் முதிர்ச்சி பெற விரும்பினால், அவன் எந்த பல்கலைக்கழகத்திலிருந்து தேர்ச்சி பெறுகிறான் என்பது பொருட்டல்ல. அதுபோல, கடவுளின் மீதான அன்பை வளர்ப்பதற்கு மதம் ஒரு பொருட்டல்ல. எனவே, கடவுளின் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொடுப்பதே எங்களின் கொள்கை. இதனால் கடவுளை உண்மையாகத் தேடுபவர்கள் எங்களிடம் வருகிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, கனடா என எந்தப் பகுதியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, இதில் கலந்துகொள்ளலாம். வழிமுறையும் மிக எளிதானது. கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதே வழிமுறை. நாங்கள் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கின்றோம், ஆனால் இதைத்தான் உச்சரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. உங்களுக்கு கடவுளின் பெயர் தெரிந்திருந்தால், நீங்கள் அப்பெயரை உச்சரிக்கலாம்.

விருந்தினர்: நாங்கள் இயேசு கிருஸ்து என்று சொல்கிறோம்.

பிரபுபாதர்: ஆனால் இயேசு கிருஸ்து ஒருபோதும் தன்னைக் கடவுள் என்று கூறவில்லை. அவர் தன்னை கடவுளின் மைந்தன் என்றுதான் கூறினார். நீங்கள் கடவுளின் எந்தவொரு பெயரை உச்சரித்தாலும் சரி, நாங்கள் அதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. கடவுளின் திருநாமத்தை உச்சரியுங்கள் என்று நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். கடவுளின் திருநாமம் என்னவென்று தங்களுக்குத் தெரியாதபட்சத்தில், நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரியுங்கள்.

நாம்நாம் அகாரி பஹிதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ்
தத்ரார்பிதா நியமித: ஸ்மரணே ந கால:
ஏதாத்ருஷீதவ க்ருபா பகவன் மமாபி
துர்தைவம் ஈத்ருஷம் இஹாஜனி நானுராக:
(ஸ்ரீ சிக்ஷாஷ்டகம் 2)

கடவுளுக்கு எண்ணிலடங்காத திருநாமங்கள் இருப்பதாகவும் அவ்வெல்லா நாமங்களும் சர்வசக்தி படைத்தவை என்றும் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். இறைவனின் திருநாமத்தைச் சொல்வதற்குக் கடுமையான நிபந்தனைகள் ஏதும் இல்லை. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் இதனை ஜபிக்கலாம். நான் உட்பட இங்கிருப்பவர்கள் அனைவரிடமும் ஜப மாலை உள்ளது. நாங்கள் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று ஜபம் செய்கிறோம். இதில் என்ன நஷ்டம்? நேரமில்லை என்று சொல்ல முடியாது. நாம் தெருவில் நடந்துசெல்லும்போதுகூட ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று ஜபம் செய்யலாம். நான் இங்கு அமர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டுள்ளேன். உரையாடலை முடித்த பின்னர், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வேன். இதில் என்ன கஷ்டம்? ஆனால் இத்திருநாமங்களை உச்சரிக்கும்படி மக்களை அணுகினால், அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை; துரதிர்ஷ்டமான நிலை. நீங்கள் தேவாலயத்திற்கோ, கோயிலுக்கோ, ஸ்வர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை, நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் இருந்தபடியே இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கலாம். இது மிகவும் எளிமையானது. இதற்குக் கட்டணம் ஏதுமில்லை, எந்த இழப்புமில்லை. மாறாக, பெருமளவில் இலாபம் கிட்டும்; ஏன் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது?

விருந்தினர்: நீங்கள் ஜபம் செய்யும் போது உங்களின் கவனம் ஜபத்தில் இருக்க வேண்டுமல்லவா? மற்ற செயல்களைச் செய்வதோ நினைப்பதோ எவ்வாறு சாத்தியம்?

பிரபுபாதர்: மற்ற செயல்கள் என்றால்?

விருந்தினர்: எண்ணற்ற செயல்கள் உங்கள் கவனத்தை திசைத் திருப்பலாமே.

பிரபுபாதர்: நாம் முதலில் நாமத்தை ஜபிக்கலாம். அதன் பின்னர், கவனத்தைப் பற்றி யோசிக்கலாம்.

விருந்தினர்: இரண்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்வது சாத்தியமில்லை அல்லவா!

பிரபுபாதர்: இல்லை! நான் ஜபம் செய்யும் போது திருநாமங்களை என் காதுகளால் கேட்கிறேன். இதுவே கவனம். கவனம் என்பது உடனடியாக தானாகவே வருகின்றது.

விருந்தினர்: ஆனால் ஜபம் செய்யும்போது மற்றவர்களுடன் பேசுவதோ புத்தகங்களைப் படிப்பதோ இயலாததாயிற்றே…

பிரபுபாதர்: படித்தல் என்பதற்கு இடமில்லை. நாம் வெறுமனே ஜபம் செய்யச் சொல்கிறோம். படித்தல் என்பதைப் பிறகு செய்யலாம். சிறிய குழந்தைகளுக்கு அகர வரிசையைச் சொல்லித் தருவதுபோல எங்களின் இயக்கத்தில் அனைவருக்கும் (ஆரம்ப நிலையிலிருந்து) பயிற்சி அளிக்கப்படுகின்றது. இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்று பள்ளியில் கற்றுத் தருகிறார்கள். ஒரு மாணவன், “இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு” என்று சொல்ல மற்றவர்கள் அதனைத் திருப்பிச் சொல்வர். அவ்வாறு தொடர்ந்து உச்சரிப்பதால், இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். அதுபோலவே, கடவுளின் நாமத்தை மீண்டும் மீண்டும் சொல்வதால், கடவுளை உணர முடியும்.

விருந்தினர்: நீங்கள் உச்சரிப்பது உங்கள் இதயத்தினுள் செல்வதாக உணர்கிறீர்களா?

பிரபுபாதர்: ஆம். ஏன் இல்லை?

விருந்தினர்: அது இதயத்திற்குள் ஆழமாக செல்லுமா?

பிரபுபாதர்: ஆம். நாம் சொல்பவை அனைத்தும் இதயத்திற்குள் செல்லும். நான் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் போது, அஃது என் இதயத்தில் செல்லாதா? “நீ ஒரு முட்டாள், நீ ஓர் அயோக்கியன்” என்று சொல்லும்போது, அவை இதயத்தினுள் செல்கின்றதா, இல்லையா? முட்டாள், அயோக்கியன் போன்ற வார்த்தைகள் இதயத்தினுள் செல்லும்போது, இறைவனின் திருநாமங்கள் இதயத்தினுள் செல்லாதா? நான் உங்களைக் கடுமையான சொற்களால் திட்டும் போது, உங்களுக்கு கோபம் வருவது ஏன்? ஏனென்றால், நான் கூறிய வார்த்தைகள் உங்களின் காதுகளின் வழியாக இதயத்திற்குள் செல்கின்றன.

விருந்தினர்: நானும் சில சமயங்களில் பிரார்த்தனை செய்வதுண்டு.

பிரபுபாதர்: சில சமயங்களில் செய்வது போதுமானதல்ல, நீங்கள் எப்போதும் ஜபித்தால், அஃது உங்களது இதயத்தில் நிலைத்து நிற்கும்.

விருந்தினர்: எப்போதும் செய்ய வேண்டுமா?

பிரபுபாதர்: ஆம். வேறு வழியில்லை, எப்போதும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரியுங்கள். அப்போது அது இதயத்தில் நிலைத்து நிற்கும். உங்கள் இதயத்தில் மட்டுமல்ல, அனைவரின் இதயத்திலும் நிலைக்கும். சிலர் வேடிக்கையாக எங்களைப் பார்த்து, ஹரே கிருஷ்ண என்று சொல்வதுண்டு. சென்ற முறை நான் ஆப்பிரிக்காவிற்குச் சென்றபோது, ஏதென்ஸ் என்ற இடத்தில் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த சில மக்கள், எங்களைப் பார்த்து, ஹரே கிருஷ்ண என்று சொன்னார்கள். எங்களைப் பார்த்ததும், எங்களுடைய உடையையும் திலகத்தையும் பார்த்ததும், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கின்றனர், சில நேரங்களில் வேடிக்கையாகவும் சொல்லலாம். இருப்பினும் அவர்களும் ஹரே கிருஷ்ண ஜபத்தின் உயர்ந்த பலனை அடைகின்றனர். இதுவே ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் பலன். கேளிக்கையோ வேடிக்கையோ, அவர்கள் உயர்ந்த பலனை அடைகின்றனர்.

ரேவதி நந்தன்: நான் மான்செஸ்டரில் உள்ள பூங்காவில் கீர்த்தனம் செய்தபோது, அங்குள்ள சிறுவர்கள் என் பின்னால், “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண” என்று கூவிக் கொண்டு ஓடி வந்தனர். நாள் முழுவதும் என்னுடனே இருந்தனர்.

பிரபுபாதர்: எல்லாவிடங்களிலும் இதைக் காணலாம். மும்பையில் நாம் செல்லும் இடங்களிலெல்லாம் ஹரே கிருஷ்ண என்று சொல்வர். சிலர் கைகளைத் தட்டி, வேடிக்கையாக ஹரே கிருஷ்ண என்று சொல்வர். எல்லா இடங்களிலும் கடவுளின் திருநாமத்தைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். இஃது உயர்ந்த பலன்களைக் கொடுக்கவல்லது. நெருப்பை விளையாட்டாகத் தொட்டாலும் உண்மையாகத் தொட்டாலும், அது நிச்சயம் சுடும். எனவே, இந்த திருநாமத்தைப் பரப்பும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடவுள் உணர்வு இல்லாமல் மொத்த உலகமும் தவித்துக் கொண்டுள்ளது. இந்த எளிமையான வழிமுறையைக் கற்றுத் தரவேண்டியது அனைத்து மதத்தின் கடமையாகும்.

விருந்தினர்: ஜபம் செய்யும்போது நீங்கள் தெளிவு பெறுகிறீர்களா?

பிரபுபாதர்: ஆம். நிச்சயமாகத் தெளிவடைகிறோம். இறைவனுக்கும் அவரது திருநாமத்திற்கும் வேறுபாடு இல்லை.

விருந்தினர்: ஜபிக்கும் போது உங்களது மனநிலை எவ்வாறு உள்ளது? மனதை எவ்வாறு கட்டுப்படுத்துகிறீர்?

பிரபுபாதர்: என் மனதில் என்ன இருந்தாலும், ஜபம் செய்யும் போது அதைப் பற்றி நான் யோசிப்பது இல்லை.

விருந்தினர்: ஜபம் செய்யும்போது உங்கள் மனதை எங்கு நிலைநிறுத்துவீர்?

பிரபுபாதர்: என் மனம் கடவுளின் உணர்வில் மூழ்கியிருக்க வேண்டும். இதுவே ஜபத்தின் விளைவு. மனம் வேறு எங்கும் செல்வதற்கு இல்லை.

விருந்தினர்: ஆனால் அவ்வாறு மனதை மூழ்கச் செய்தல் மிகவும் கடினமானதாயிற்றே?

பிரபுபாதர்: இல்லை. இதில் எந்த கஷ்டமும் இல்லை. பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமே இது கடினம். மற்றவர்களுக்கு அல்ல. பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களால் கவனம் செலுத்த முடியாது. இதனால் தான் எங்கள் மாணவர்களிடம், தகாத பாலுறவைக் கைவிட வேண்டும், மாமிசம் உண்பதைக் கைவிட வேண்டும், போதைப் பொருள்களை கைவிட வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இவை பாவச் செயல்கள். பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்வரை கடவுளின் திருநாமத்தில் கவனம் செலுத்த முடியாது. இந்த பாவச் செயல்களை சுய விருப்பத்துடன் கைவிட வேண்டும். அப்போது கவனம் என்பது சாத்தியமாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives