வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஓம் அஜ்ஞான-திமிராந்தஸ்ய
ஜ்ஞானாஞ்ஜன-ஷலாகயா
சக்ஷுர் உன்மிலிதம் யேன
தஸ்மை ஸ்ரீ-குரவே நம:
“நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.”
இருளிலிருந்து ஒளிக்கு வாருங்கள்
ஜடவுலகிலுள்ள அனைவரும் அறியாமை என்னும் இருளில் பிறக்கின்றனர். இருள் சூழ்ந்த இந்த ஜடவுலகானது சில நேரங்களில் சூரியன், நிலா, நெருப்பு அல்லது மின்சாரத்தால் ஒளியூட்டப்படுகிறது. ஆனால், அதன் இயற்கை தன்மை இருளே. மிகவுயர்ந்த நபரான பிரம்மாவிலிருந்து கடைநிலையிலுள்ள எறும்பு வரை ஜடவுலகிலுள்ள அனைவரும் அறியாமை என்னும் இருளில்தான் பிறக்கின்றனர்.
வேதங்கள் நமக்கு வழங்கும் அறிவுரை: தமஸி மா ஜ்யோதிர் கம, “இருளைக் கைவிட்டு வெளிச்சத்திற்கு வாருங்கள்.” அறியாமை என்னும் இருளில் மூழ்கியவனது கண்களை அறிவு என்னும் ஒளியைக் கொண்டு திறக்க ஆன்மீக குரு அவசியமாகிறார். எனவே, ஒருவன் ஆன்மீக குருவிற்கு மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்ப்பித்தல் அவசியம். மனிதர்கள் அறியாமை என்னும் இருளிலிருந்து ஞானம் என்னும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். அதுவே மதத்தின் நோக்கமாகும். எனவே, மனித சமுதாயம் முழுவதிலும் இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், பெளத்தம் என ஏதேனும் ஒரு மத அமைப்பு உள்ளது.
கடவுளின் சட்டம்
தர்மம் து ஸாக்ஷாத் பகவத் ப்ரணீதம், “மதக் கோட்பாடுகள் முழுமுதற் கடவுளால் நேரடியாக வழங்கப்படுகின்றன,” என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. நாட்டின் தலைவர் சில சட்டங்களை இயற்றுகிறார். காலம், சூழ்நிலை, மக்கள் முதலியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் சட்டங்கள் மாறுபடலாம். இந்தியாவின் சட்டங்கள் அமெரிக்காவின் சட்டங்களுடன் முற்றிலும் ஒத்துப்போகாமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் சட்டங்கள் உள்ளன. ஒருவன் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், இல்லாவிடில், சமுதாயத்தால் அவன் குற்றவாளியாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவான்.
அதுபோலவே, மதம் என்றால் கடவுளின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடத்தல் என்பது பொருள். கடவுளின் சட்டத்திற்குக் கீழ்ப்படியாத மனிதன் விலங்கினைக் காட்டிலும் மேலானவன் அல்லன். எல்லா மதங்களும் சாஸ்திரங்களும் மனிதனை விலங்கின் தளத்திலிருந்து மனிதனின் தளத்திற்கு உயர்த்துவதற்காகவே வழங்கப்பட்டுள்ளன.
உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல் இந்த நான்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவானவை. மனித வாழ்விற்கும் மிருக வாழ்விற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், மனிதனால் கடவுளைத் தேட முடியும், விலங்குகளால் அஃது இயலாது. எனவே, கடவுளைத் தேடும் ஆர்வமில்லா மனிதன் விலங்கினைக் காட்டிலும் மேலானவன் அல்லன்.
துரதிர்ஷ்டவசமாக, தற்கால மக்கள் கடவுளை மறக்க முயல்கின்றனர். சிலர் கடவுள் இல்லை என்று வெளிப்படையாகக் கூறுகின்றனர், வேறு சிலரோ கடவுள் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். வானுயர கட்டிடங்களைக் கட்டுவதன் மூலம் நாகரிகத்தில் முன்னேறியுள்ளதாக எண்ணுகின்றனர். ஆனால் அனைத்து முன்னேற்றங்களும் பகவான் கிருஷ்ணரையே சார்ந்துள்ளன என்பதை மறந்துள்ளனர். இது மனித சமுதாயத்திற்கு ஆபத்தான நிலையாகும்.
இயற்கையின் சட்டத்திற்குக் கீழ்ப்படியாத மனிதன் அவன் அந்த சட்டத்திலாயே தண்டிக்கப்படுவான்.
கடவுளை மறந்தால்
முழுமுதற் கடவுளை மறந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்கும் சிறந்த கதை ஒன்று உள்ளது.
ஒரு சமயம், ஓர் எலிக்கு ஒரு பூனையினால் தொல்லை ஏற்பட்டது. ஆகவே, அந்த எலி இறைத்தன்மையை உணரச் செய்யும் ஆற்றல் படைத்த ஒரு சாதுவிடம் சென்று, “அன்புள்ள ஐயா, நான் மிகுந்த கவலையில் உள்ளேன்,” என்று கூறியது.
“என்ன கஷ்டம்?”
எலி கூறியது, “என்னை ஒரு பூனை எப்போதும் துரத்துவதால், எனக்கு மன அமைதி இல்லை.”
“என்ன வேண்டும் உனக்கு?”
“தயவுசெய்து என்னை பூனையாக மாற்றிவிடுங்கள்.”
“சரி. பூனையாக மாறுவாயாக!”
சாதுவின் வாக்கினால் அந்த எலி உடனடியாக பூனையாக மாறியது. ஆயினும், சில நாள்களுக்குப் பிறகு அந்தப் பூனை சாதுவிடம் வந்து கூறியது, “அன்புள்ள ஐயா, மீண்டும் நான் கவலையில் உள்ளேன்.”
“என்ன கவலை?”
“நாய்கள் என்னைத் துரத்துகின்றன.”
“என்ன வேண்டும் உனக்கு?”
“என்னை ஒரு நாயாக மாற்றிவிடுங்கள்.”
“சரி. நாயாக மாறுவாயாக!”
பூனை நாயாக மாறியது. சில நாள்களுக்குப் பிறகு அந்த நாய் மீண்டும் அவரிடம் வந்து கூறியது, “மீண்டும் நான் கவலையில் உள்ளேன்.”
“என்ன கவலை?”
“நரிகள் என்னைத் துரத்துகின்றன.”
“என்ன வேண்டும் உனக்கு?”
“என்னை நரியாக மாற்றுங்கள்.”
“சரி. நரியாக மாறுவாயாக!”
நரியாக மாறிய சில நாள்களில் மீண்டும் அது சாதுவை அணுகியது, “புலிகள் என்னைத் துரத்துகின்றன.”
“அப்படியெனில், உனக்கு என்ன வேண்டும்?”
“நான் புலியாக மாற விரும்புகிறேன்.”
“சரி, புலியாக மாறுவாயாக!”
அது புலியாக மாறியவுடன் சாதுவை முறைத்து பார்த்துக் கூறியது, “நான் உங்களை உண்ணப் போகிறேன்.”
“என்னை உண்ணப் போகிறாயா? நான் உனக்கு உதவி புரிந்தேன், நீ என்னையே உண்ண விரும்புகிறாயா?”
“ஆம், இப்போது உங்களை உண்ணப் போகிறேன்.”
உடனடியாக அந்த சாது அப்புலியை நோக்கி, “மீண்டும் எலியாக மாறு,” என்று சபித்தார். அந்தப் புலி எலியாக மாறியது.
நமது மனித நாகரிகம் இதுபோன்றுதான் உள்ளது. ஒருநாள் நான் உலக பஞ்சாங்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அடுத்த நூறு ஆண்டுகளில் மனிதர்கள் எலிகளைப் போல பூமிக்கடியில் வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக மனிதர்களைக் கொல்வதற்காக அணுகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு பயன்படுத்தப்பட்டால் மக்கள் பூமிக்கடியில் பதுங்கி எலிகளைப் போல வாழ வேண்டும். கதையில் வருவதைப் போல புலியிலிருந்து எலியாக மாறுவோம், அது நடக்கத்தான் போகிறது, அதுவே இயற்கையின் சட்டம்.
நாட்டின் சட்டங்களை மீறுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அதே போல முழுமுதற் கடவுளின் அதிகாரத்தை மீறுபவர்களும் தண்டிக்கப்படுவார்கள். நீங்கள் மீண்டும் எலியாக மாறுவீர்கள். அணுகுண்டு வெடித்தவுடன் உலகிலுள்ள எல்லா நாகரிகமும் முடிந்துவிடும். இந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கக்கூட நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இது கேட்பதற்கு மிகவும் கசப்பாக இருக்கலாம், ஆனால் இதுவே உண்மை.
மக்கள் மகிழ்ச்சியடைய
கடவுளற்ற நாகரிகம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே, மக்கள் இந்த கடவுளற்ற நாகரிகத்திலிருந்து விழித்தெழுவதற்காக நாங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். பகவானை நேசிக்க முயலுங்கள், இதுவே எங்களது வேண்டுகோள். நேசிக்கும் தன்மை உங்களிடம் இயற்கையாகவே உள்ளது, நீங்கள் யாரையாவது நேசிக்க விரும்புகிறீர்கள். இளைஞன் இளம் பெண்ணை நேசிக்க முயல்கிறான், இளம் பெண் இளைஞனை நேசிக்க முயல்கிறாள். இஃது இயற்கை, நேசிக்கும் தன்மை எல்லாரிடமும் உள்ளது. ஆனால் நமது அன்பு விரக்தியைத் தரும் வகையில் நாம் நமது சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். கணவன், மனைவி, இளைஞன், இளம் பெண் என அனைவருமே விரக்தியடைகின்றனர். எங்கும் விரக்தியே மிஞ்சியுள்ளது. நமது நேசிக்கும் தன்மை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால், நாம் இறைவனிடம் அன்பு செலுத்த மறந்து விட்டோம். இதுவே நமது நோய்.
எனவே, கடவுளின் மீது அன்பு செலுத்துவதற்கான பயிற்சியை மக்களுக்கு அளிப்பதே அனைத்து மதங்களின் நோக்கமாகும். கடவுளிடம் அவ்வாறு அன்பு செலுத்துவதே உங்களது உண்மையான நிலை என்பதால், கிறிஸ்துவம், இந்து, இஸ்லாம் என எந்த மதமாக இருந்தாலும், உங்களது மதத்தின் நோக்கம் கடவுளிடம் எவ்வாறு அன்பு செலுத்துவது என்பதற்கு பயிற்சி அளிப்பதே.
நமது தர்மம்
ஆங்கில அகராதியில் தர்மம் என்னும் சொல், “ஒரு வகையான நம்பிக்கை,” “சமயம்” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தர்மம் என்னும் சொல்லின் உண்மையான பொருள், “அவசியமான தன்மை,” என்பதாகும். உதாரணமாக, சர்க்கரையின் தர்மம் அல்லது அவசிய தன்மை “இனிப்பு” என்பதாகும். உங்களுக்கு ஒரு வெண்ணிற மாவு கொடுக்கப்பட்டு அது இனிப்பாக இல்லாவிடில், “இது சர்க்கரை அல்ல, வேறு பொருள்” என்று நீங்கள் உடனே கூறுவீர்கள். ஆகவே, இனிப்பே சர்க்கரையின் “தர்மம்.” அதே போல உப்பின் இயற்கை கரிப்புச் சுவை, மிளகாயின் இயற்கை காரம்.
நீங்கள் ஓர் உயிர்வாழி, உங்களது இயற்கை என்ன? அந்த இயற்கையே உங்களது தர்மம். யாரையாவது நேசித்து அவர்களுக்கு சேவை செய்ய விரும்புவதே உங்களின் இயற்கையாகும். குடும்பம், சமுதாயம், தேசம் முதலியவற்றை நீங்கள் நேசிக்கிறீர்கள்; அதனால் அவற்றிற்கு சேவை செய்ய விரும்புகிறீர்கள். அன்புத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் இந்த விருப்பமே உங்களது இயற்கையாகும், இதுவே உங்களது தர்மமாகும். கிருஸ்துவ சமயம், இந்து சமயம், இந்த சமயம், அந்த சமயம் முதலியவை உங்களது தர்மம் அல்ல. நீங்கள் கிறிஸ்துவராக, முகமதியராக, அல்லது இந்துவாக இருக்கலாம், ஆனால் உங்களது இயற்கை என்றும் மாறாமல் தொடர்ந்து இருக்கும். உங்களது சேவை மனப்பான்மை, நேசிக்கும் ஆர்வம் முதலியவை உங்களுக்குள் என்றென்றும் தொடரும். ஆகவே, நேசிப்பதும் மற்றவர்களுக்கு சேவை செய்வதுமே உங்களது தர்மம் அல்லது உங்களது சமயம். இதுவே பிரபஞ்சம் முழுவதற்குமான சமயம்.
முதல்தர மதம்
எனவே, நீங்கள் உங்களது அன்பையும் சேவையையும் பூரண திருப்தியடையும் வகையில் ஈடுபடுத்த வேண்டும்; ஏனெனில், உங்களது அன்பு தற்போது இடம் மாறியுள்ளது, நீங்கள் மகிழ்ச்சியுடன் இல்லை, விரக்தியுற்று குழம்பியுள்ளீர்கள். அன்புத் தொண்டு என்னும் நமது ஆர்வத்தை எவ்வாறு பக்குவமாகச் செயல்படுத்துவது என்பதை ஸ்ரீமத் பாகவதம் (1.2.6) கூறுகிறது.
ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ
யதோ பக்திர் அதோக்ஷஜே
அஹைதுக்யப்ரதிஹதா
யயாத்மா ஸுப்ரஸீததி
பகவானை நேசிப்பதற்குப் பயிற்சியளிக்கும் மதமே முதல் தர மதமாகும். இதன் மூலம் நீங்கள் முழு திருப்தியடைவீர்கள். இறையன்பினை முழுமையாக வளர்த்துக் கொண்டால், நீங்கள் பக்குவம் பெற்ற மனிதராக மாற முடியும். நீங்கள் பூரண திருப்தியைத் தேடி அலைந்து கொண்டுள்ளீர்கள், ஆனால் பகவானை நேசிக்கும்போது மட்டுமே அதனைப் பெறுவீர்கள். பகவானை நேசிப்பது எல்லா உயிர்வாழிகளின் இயற்கையான செயலாகும். நீங்கள் கிறிஸ்துவரா இந்துவா முகமதியரா என்பது பொருட்டல்ல. இறையன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களது மதம் இனிமையானதாக இருக்கும்; இல்லாவிடில், அது நேரத்தை வீணடிப்பதாகும், ஷ்ரம ஏவ ஹி கேவலம். உங்களது வாழ்க்கை முழுவதும் ஒரு குறிப்பிட்ட மதச் சடங்குகளை மேற்கொண்ட பின்னரும், இறையன்பை அடையாவிடில், நீங்கள் நேரத்தை வீணடித்தவராக ஆவீர்கள்.
எல்லா வகையான மதங்களுக்கும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் தலையாய இயக்கமாகும். கிறிஸ்துவர்கள், முகமதியர்கள், இந்துக்கள் என அனைவரையும், எங்களுடன் இணைந்து இறையன்பை அடைய முயலுங்கள் என்று நாங்கள் அழைக்கிறோம். இதற்கான வழிமுறை மிகவும் எளிமையானது. இறைவனின் திருநாமங்களை உச்சரியுங்கள்—ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. மிக விரைவில் நீங்கள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதைக் காண்பீர்கள்.
ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒரு வாரம் உச்சரியுங்கள், எவ்வளவு ஆன்மீக முன்னேற்றத்தை அடைகிறீர்கள் என்பதை நீங்களே காணுங்கள். இதற்கு நாங்கள் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. எனவே, இழப்பு ஏதுமில்லை. மாறாக, இதில் பெரும் இலாபம் உள்ளது, நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். எனவே, தயவுசெய்து உச்சரியுங்கள்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே