அகிலத்தை மாற்றிய அபய்

Must read

Satsvarupa Dasa Goswami
தவத்திரு. ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சிஷ்யரும் மூத்த ஸந்நியாசியுமாவார். இவர் மிகவும் பிரபலமான ஸ்ரீல பிரபுபாதரின் லீலாம்ருதத்தை இயற்றியவரும், பல புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

இந்தியாவிற்குள் மட்டும் முடங்கிக்கிடந்த, உண்மையில் இந்தியாவிலும் சுருங்கிக் கொண்டிருந்த வைஷ்ணவ தர்மத்தினைத் தனது குருவின் கட்டளைக்கு இணங்க, பாரெங்கும் பரவச் செய்தவர் ஸ்ரீல பிரபுபாதர். ஜடத்தில் மயங்கியிருந்த ஜகத்தை மாற்ற ஜகந்நாதரான மாதவரின் துணையுடன் ஜலதூதா கப்பலில் அவர் படியேறிய அற்புதத் திருநாள் ஆகஸ்ட் 13, 1965. அதன் 50வது நினைவு நாளை உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடி வரும் வேளையில், ஸ்ரீல பிரபுபாதரின் அப்பயணம் குறித்து அவரது சீடரான தவத்திரு. ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி அவர்கள் எழுதிய உங்கள் நலனை என்றும் விரும்பும் பிரபுபாதர் என்னும் நூலிலிருந்து ஒரு சிறு பகுதியினை பகவத் தரிசன வாசகர்களுக்காக இங்கு அர்ப்பணிக்கின்றோம்.

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கல்கத்தா, ஆகஸ்ட் 13, 1965: வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்கத்தாவிலிருந்து நியூயார்க் நோக்கி புறப்படவிருந்த ஸிந்தியா நேவிகேஷன் கம்பெனிக்கு சொந்தமான ஜலதூதா சரக்குக் கப்பலின் ஒரே பயணியர் அறையில் நியூயார்க் செல்வதற்கான இலவச டிக்கெட்டுடன் பயணத்திற்கு ஆயத்தமாக இருந்தார் 69 வயது நிரம்பிய பக்திவேதாந்த சுவாமி. கப்பல் துறைமுகத்தை விட்டு புறப்பட்ட சமயத்தில், தனது பயணத்திற்கெல்லாம் சுமதி மொரார்ஜியை உதவி செய்யத் தூண்டிய கிருஷ்ணருக்கு நன்றி என்று அவர் தனது டைரியில் எழுதினார்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி கப்பல் வங்காளக் கடலின் நடுவில் சென்றபோது, பக்திவேதாந்த சுவாமிக்குக் கடல் காற்று ஒத்துக் கொள்ளாமல், தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டது. 19ஆம் தேதி கப்பல் இலங்கையின் கொழும்பு நகரத்தை அடைந்தபோது, அவரது உடல்நிலை சற்று தேறியது. கப்பலின் கேப்டன் அருண் பாண்டியன் அவரைக் கரைக்குக் கூட்டிச் சென்று காரில் கொழும்பு நகரைச் சுற்றிக் காட்டினார். பிறகு, கப்பல் கொச்சின் நகரத்தை நோக்கி பிரயாணத்தைத் தொடர்ந்தது. ஆகஸ்ட் 20ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி. பக்திவேதாந்த சுவாமி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கப்பல் ஊழியர்களுக்கு பகவான் கிருஷ்ணரைப் பற்றி எடுத்துரைத்தார். தானே பிரசாதம் தயாரித்து விநியோகம் செய்தார். மறுநாள் அவரது 70ஆவது பிறந்த நாள். அன்று கப்பல் கொச்சியை அடைந்தது. பம்பாயிலிருந்து இரயில் மூலம் கொச்சி வந்த ஸ்ரீமத் பாகவதம் புத்தகங்கள் அடங்கிய அவரது டிரங்க் பெட்டி கப்பலில் ஏற்றப்பட்டது.

பிறகு, கப்பல் செங்கடலை அடைந்தவுடன் பக்திவேதாந்த சுவாமியை பல கஷ்டங்கள் எதிர்கொண்டன–மழை, கடல் காற்றினால் உடல் நலமின்மை, தலைசுற்றல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்ற துயரங்களை அவர் தனது டைரியில் குறிப்பிட்டிருந்தார். அடுத்த இரண்டு தினங்களில் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. தன் பயணத்தின் குறிக்கோளை தியானம் செய்தவாறு அவற்றை சமாளித்தார். இரண்டு முறை வந்த மாரடைப்பு மூன்றாம் முறை வருமானால், தன்னால் நிச்சயம் சமாளிக்க முடியாது என்று கவலையடைந்தார். இரண்டாம் நாள் இரவு அவரது கனவில் தோன்றிய ஸ்ரீ கிருஷ்ணர், பயப்பட வேண்டாம் என்றும், பயணத்தைத் தொடர்ந்து தைரியமாகச் செய்யலாம் என்றும் ஆறுதல் கூறினார். தனக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பாதுகாப்பு எப்போதும் உண்டு என்ற அவரின் நம்பிக்கையை இந்தக் கனவு பன்மடங்கு பலப்படுத்தியது. அவர் பயந்தபடி மூன்றாவது முறையாக மாரடைப்பு வரவில்லை.

செப்டம்பர் 1ஆம் தேதி கப்பல் சூயஸ் கால்வாயை அடைந்து, செய்டு என்ற துறைமுகத்தில் நின்றது. கேப்டனுடன் இணைந்து செய்டு நகரத்தைச் சுற்றிப் பார்த்த பக்திவேதாந்த சுவாமி, அந்த நகரம் தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறினார். செப்டம்பர் 6ஆம் தேதி அவரது உடல்நிலை சற்று தேறியது, தானே சமைத்த கிச்சடி மற்றும் பூரியினை நேரப்படி சாப்பிடத் துவங்கினார். தனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பலம் திரும்புவதாகத் தனது டைரியில் குறிப்பிட்டிருந்தார்.

செப்டம்பர் 10, வெள்ளிக்கிழமை: “இன்று கப்பல் ஆட்டமில்லாமல் செல்கிறது. இன்று நான் நலமாக இருக்கிறேன். ஆனால் ஸ்ரீ விருந்தாவனம், ஸ்ரீ கோவிந்தர், ஸ்ரீ கோபிநாதர், ஸ்ரீ ஸ்ரீ ராதா தாமோதரர் ஆகியோரின் பிரிவு என்னை வாட்டுகின்றது. எனக்கு ஆறுதல் கூறும் ஒரே பொருள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தேவாமிருத லீலைகளைத் தன்னுள் அடக்கிய ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மட்டுமே. நான் இந்தியாவை விட்டுக் கிளம்பியது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆணையை நிறைவேற்றும் வகையில், எனது குரு மஹாராஜர் ஸ்ரீ பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான். மற்றபடி எனக்கென்று தகுதிகள் ஏதும் கிடையாது. இந்த வயதில் தொலைதூர பயணத்தை நான் துணிந்து மேற்கொண்டதன் ஒரே நோக்கம் என் குருநாதரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் கருணையை நம்பி விருந்தா வனத்தை விட்டு இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.”

கப்பல் பயணத்தின் நடுவில், ஸ்ரீ கிருஷ்ணர் பிரபுபாதரின் கனவில் தோன்றி ஆறுதல் கூறினார்.

ஸ்ரீல பிரபுபாதர் தங்கியிருந்த YMCA கட்டிடம்.

1965ஆம் வருடத்தின் அந்த கடற்பயணம் ஜலதூதாவிற்கு மிகவும் அமைதியான பயணமாக அமைந்தது. தனது பல வருட அனுபவத்தில் அட்லாண்டிக் சமுத்திரம் அவ்வளவு அமைதியாக இருந்ததைப் பார்த்ததில்லை என்று ஜலதூதாவின் கேப்டன் அருண் பாண்டியன் கூறினார். அட்லாண்டிக்கின் அமைதிக்குக் காரணம் கிருஷ்ணரின் அருள் என்று பக்திவேதாந்த சுவாமி பதிலளித்தார். அவர் தனது டைரியில் எழுதினார்: “அட்லாண்டிக் கடல் தன் சுயரூபத்தை இந்த பயணத்தில் காட்டியிருந்தால், நான் இறந்திருக்கலாம். ஆனால் கிருஷ்ணர் முன்நின்று கப்பலை வழிநடத்தி சமுத்திரத்தை அமைதிப்படுத்தி என்னைக் காப்பாற்றியுள்ளார்.”

முப்பத்தைந்து நாள் பயணத்திற்குப் பிறகு, ஜலதூதா கப்பல் போஸ்டன் துறைமுகத்தை 1965 செப்டம்பர் 17, காலை 5:30 மணிக்கு அடைந்தது. அங்கு அக்கப்பல் ஓரிரு நாள்கள் இருந்துவிட்டு நியூயார்க் செல்வதாக இருந்தது. பக்திவேதாந்த சுவாமியின் விசாவில் அவர் இரண்டு மாதம் மட்டுமே அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. போஸ்டனில் அவர் குடியேற்றம் (Immigration) மற்றும் சுங்க இலாகாவினரின் சோதனைக்கு உட்பட்டபோது, அவரது விசாவில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய தினமும் முத்திரையிடப்பட்டது. கேப்டன் அருண் பாண்டியன், பக்திவேதாந்த சுவாமி அவர்களை போஸ்டன் நகருக்குள் ஒருமுறை போய் வர தன்னுடன் வருமாறு அழைத்தார். நடைபாதை பாலத்தைக் கடந்து, அவர்கள் சர்ச்சுகள், அலுவலகங்கள், மதுபான கடைகள், புத்தகக் கடைகள், நைட் கிளப்புகள், ஓட்டல்கள் என ஜன நடமாட்டம் அதிகமான பகுதிக்கு வந்தார்கள். அமெரிக்க நகரம் எப்படி இருக்கும் என்பதை பக்திவேதாந்த சுவாமி அறிந்து கொண்டார். போஸ்டனில் அவர் தங்கிய குறுகிய காலத்தின் முக்கிய அம்சம், அமெரிக்காவில் கிருஷ்ண உணர்வைப் பரப்புவது குறித்து அவர் அங்கு எழுதிய வங்காளப் பாடலே.

செப்டம்பர் 19ஆம் தேதி ஜலதூதா நியூயார்க் நகரின் புரூக்ளீன் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு நின்றது. பக்திவேதாந்த சுவாமி நியூயார்க்கின் பிரமிக்க வைக்கும் கட்டிடங்களையும் பிரசித்தி பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தையும் லிபர்ட்டி சிலையையும் பார்த்தார்.

ஒரு விருந்தாவனவாசி என்பதற்கேற்ப பக்திவேதாந்த சுவாமியின் தோற்றமும் உடையும் அமைந்திருந்தன. கழுத்தில் துளசிமாலை, இடுப்பில் எளிமையான காவி நூல் வேட்டி, கையில் ஜபமாலை, தோளில் பழைய துண்டு, பொன்னிறமான உடல், குடுமி தவிர நன்கு சவரம் செய்யப்பட்ட தலை, நெற்றியில் பளிச்சென்று வைஷ்ணவ திலகம், கால்களில் ரப்பர் செருப்புகள்–இத்தோற்றம் இந்தியாவில் ஒரு மாதிரியாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் நியூயார்க்கில் இப்படிப்பட்ட தோற்றம் உடையவரைப் பார்ப்போம் என்று யாரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். இடத்திற்குத் தகுந்த வேடம் போடாமல் அமெரிக்காவிற்கு வந்த முதல் வைஷ்ணவ சந்நியாசி பக்திவேதாந்த சுவாமியாகத்தான் இருக்க வேண்டும். நியூயார்க்வாசிகள் விந்தையான தோற்றத்துடன் பலரும் அவ்வப்போது நகருக்குள் வருவதை அறிவார்கள். எனவே, அவர்கள் அத்தகையவர்களின் மீது தனிப்பட்ட கவனம் எதுவும் செலுத்துவதில்லை.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த அகர்வால் அவர்கள் பக்திவேதாந்த சுவாமிக்கு உதவி செய்வதாகக் கூறியிருந்தார். எனவே, தன்னை வரவேற்க யாராவது வருவார்கள் என்று சுவாமிஜி எதிர்பார்த்தார். இருப்பினும், கப்பலை விட்டு இறங்கித் துறைமுகத்தில் காலை வைத்தபோது, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அவருக்குத் தெரியவில்லை. இடப்பக்கம் போவதா வலப்பக்கம் போவதா என்றுகூட தெரியாது. துறைமுகத்தைவிட்டு வெளியே வருகையில், அவரை பயணிகள் உதவும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தித்து, தான் அகர்வால் அவர்களால் பக்திவேதாந்த சுவாமியை அழைத்துவர அனுப்பப்பட்டதாகக் கூறினார். பென்சில்வேனியாவின் பட்லர் என்ற இடத்திலுள்ள அகர்வாலின் வீட்டிற்கு பக்திவேதாந்த சுவாமி காலை 4 மணிக்குப் போய் சேர்ந்தார். அகர்வால் பக்திவேதாந்த சுவாமியை ஷோஃபாவில் படுத்து ஓய்வெடுக்குமாறு கூறினார்.

அகர்வாலின் வீடு, முன்னறை, சாப்பாட்டு அறை, சமையல் அறை தவிர, மாடியில் இரண்டு படுக்கை அறைகளுடன் இருந்தது. கோபால் அகர்வால் என்பது அவரின் முழுப்பெயர். இந்த வீட்டில் அவர் தனது அமெரிக்க மனைவி ஸாலி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன் வீட்டின் இட நெருக்கடி காரணமாக, சுவாமிஜி அவர்கள், YMCAவில் அறை எடுத்துத் தங்கி, பகல் வேளையில் மட்டும் தங்கள் வீட்டுக்கு வந்து போனால் அவருக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணினார்கள். இட நெருக்கடியை விட ஓர் அமெரிக்க வீட்டின் சூழ்நிலையில், அவர் தன்னை எப்படி ஐக்கியப்படுத்திக்கொள்ள முடியும் என்ற கேள்விதான் அவர்களை மிகவும் பாதித்தது.

செப்டம்பர் 22ஆம் தேதி அகர்வால் வீட்டிற்கு வந்த ஒரு போட்டோகிராபர், சுவாமிஜி தனது கையில் பாகவத நூலை வைத்துக் கொண்டு நிற்பதுபோல சில படங்களை எடுத்துச் சென்றார். அந்தப் புகைப்படத்துடன் பட்லர் ஈகிள் என்ற பத்திரிகையில் “பக்தியோகத்தின் தூதர்” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் சில வரிகள்: “ஒரு மாநிறமுள்ள மனிதர் சிறிது சாயம் போன காவி உடையில் வெள்ளை நிற ரப்பர் காலணிகளுடன் ஒரு சிறிய காரிலிருந்து பட்லரின் YMCAவில் வந்து இறங்கினார். அவர்தான் பக்திவேதாந்த சுவாமி, இந்தியா விலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு வந்துள்ள ஆன்மீக தூதர்.”

அந்தக் கட்டுரையில் ஸ்ரீமத் பாகவதமானது பைபிள் போன்ற ஒரு புத்தகம் என்று கூறப்பட்டிருந்தது, பக்தி வேதாந்த சுவாமி மிகவும் கற்றறிந்த ஒரு குரு என்றும் கூறப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில், “என்னுடைய குறிக்கோள் மக்களின் மனதில் உறங்கிக் கிடக்கும் கடவுள் உணர்வைத் தட்டி எழுப்புவதுதான். கடவுள் சகல ஜீவராசிகளுக்கும் தந்தை. ஆத்மாவின் படிப்படியான முன்னேற்றத்தில் மனிதப் பிறவி என்பது அரிதானது; கடவுளை உணர்ந்து பூரணத்துவம் அடைவதற்காக உருவானது. மானிடப் பிறவி எடுத்துள்ள நாம் இந்த வாய்ப்பைத் தவற விட்டால், மீண்டும் பல பிறவிகள் எடுத்து அவதியுற நேரிடும்,” என்று பக்திவேதாந்த சுவாமி கூறியிருந்தார்.

பக்திவேதாந்த சுவாமி எவ்வாறு ஒரு துறவியாக வாழ்கிறார் என்பதையும், அவர் எவ்வாறு ஆறு வாரங்கள் கடல் வழியாக அமெரிக்காவிற்கு வந்தார் என்பதையும் அக்கட்டுரை விளக்கியது. மேலும், அகர்வால் வீட்டில் அவர் தன் உணவைத் தானே சமைத்துக் கொள்ளும் அபூர்வமான முறை–ஒன்றின் மேல் ஒன்றாகப் பித்தளை பாத்திரங்களை அடுப்பின் மேல் வைத்து, ஒரே சமயத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் இவற்றை வேக வைக்கும் முறை–பற்றியும் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருந்தது. அவர் கண்டிப்பாகத் தாவர உணவை மட்டுமே உண்பவர் என்றும் கூறப்பட்டிருந்தது. அமெரிக்கர்கள் ஆன்மீக விஷயத்தில் சிறிது நாட்டம் காண்பித்தால், அவர்கள் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சுவாமிஜி கூறியதாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

அதன் பின்னர், பல்வேறு சிரமங்களைத் தாண்டி பக்திவேதாந்த சுவாமி அவர்கள் கிருஷ்ண பக்தியினை அமெரிக்க மண்ணில் மட்டுமின்றி அகிலமெங்கும் பரப்பினார்.

குறிப்பு: ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் புத்தகம் அனைத்து இஸ்கான் கோயில்களிலும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு, 9894814553

அகர்வாலின் வீட்டில் சமைக்கும் சுவாமிஜி.

பட்லர் ஈகிள் என்ற பத்திரிகையில் வெளிவந்த சுவாமிஜியின் படம்

மேலும் பார்க்க

பகுதி 1

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives