வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
இராமர் மிகவும் நேர்மையானவர், கிருஷ்ணர் தந்திரக்காரர்; இதனால் நான் இராமரை ஏற்கும்போதிலும் கிருஷ்ணரை ஏற்பதில்லை–அவ்வப்போது காதில் கேட்கும் இக்கூற்றினை சற்று ஆராயலாம்.
மக்கள் கூறும் காரணங்கள்
கடவுள் என்பவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும். நல்லவர் என்றால், உலகின் நீதி நெறிகளுக்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். ஸ்ரீ இராமர் உலக நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார். உதாரணமாக, ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்தார், போரின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினார், பெற்றோர்களை மதித்து நடப்பவராக செயல்பட்டார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரோ உலக நியதிகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, பல்வேறு மனைவியரை ஏற்றுக் கொண்டார், இதர மக்களின் மனைவியருடன் ராஸ லீலை நடத்தினார், குருக்ஷேத்திர போர்க்களத்தில் பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கிருஷ்ணரை ஏற்க முடியவில்லை என்று சிலர் நினைக்கின்றனர்.
இராமரும் கிருஷ்ணரும் யார்?
இராமரையும் கிருஷ்ணரையும் பற்றி விவாதிப்பதற்கு முன்பாக, இவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியம். இதனை முறையாக அறிந்துகொண்டால், பெரும்பாலான சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.
முழுமுதற் கடவுள் ஒருவரே; அவர் தன்னுடைய பக்தர்களின் குறிப்பிட்ட விருப்பங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு, பல்வேறு வடிவங்களில் நித்தியமாக வீற்றுள்ளார். இராமர், கிருஷ்ணர், நரசிம்மர், நாராயணர், விஷ்ணு, வாமனர் போன்ற எண்ணற்ற ரூபங்கள் ஒரே நபரைக் குறிக்கின்றன.
ஓர் உச்சநீதிமன்ற நீதிபதியானவர், நீதிமன்றத்தில் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட தன்மை மற்றும் உடையுடன் உள்ளார், வீட்டில் இருக்கும்போதும் வெளியில் செல்லும்போதும் வேறுபட்ட தன்மை மற்றும் உடையுடன் உள்ளார். அதுபோல, முழுமுதற் கடவுளும் தன்னுடைய பக்தர்களுக்குத் தகுந்தாற்போல பல்வேறு தன்மைகளையும் ரூபங்களையும் வெளிப்படுத்துகிறார். நீதிமன்றம், வெளியுலகம், வீடு என்று மூன்று இடங்களில் மூன்று விதமாக நீதிபதி செயல்படுகிறார்; முழுமுதற் கடவுளோ நீதிபதியைக் காட்டிலும் எண்ணிலடங்காத அளவு பெரியவர் என்பதால், அவர் எண்ணிலடங்காத இடங்களில் எண்ணிலடங்காத விதத்தில் செயல்படுகிறார். நீதிபதியினால் ஒரே சமயத்தில் மூன்று இடத்திலும் இருக்க முடியாது. ஆனால் முழுமுதற் கடவுள் சர்வ சக்தி படைத்தவர் என்பதால், அவரால் ஒரே சமயத்தில் எண்ணிலடங்காத இடங்களில் இருக்க முடியும்; மேலும், ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு செயல்களையும் செய்ய முடியும்.
அதன்படி, முழுமுதற் கடவுள் தனது நித்திய ஸ்தலமான வைகுண்ட லோகத்தில் ஒரே சமயத்தில் பல்வேறு வடிவங்களில் வீற்றுள்ளார். அங்குள்ள எண்ணிலடங்காத கிரகங்கள் ஒவ்வொன்றிலும் அவர் ஒவ்வொரு குறிப்பிட்ட ரூபத்தில் உள்ளார். அவர்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை. பகவானின் பல்வேறு தோற்றங்களும் செயல்களும் பல தரப்பட்ட பக்தர்களின் திருப்திக்காகவே தவிர, இந்த ரூபங்களுக்கு நடுவில் எந்த வேற்றுமையும் இல்லை. அதாவது, கிருஷ்ணருக்கும் இராமருக்கும் இடையில், இராமருக்கும் விஷ்ணுவிற்கும் இடையில், விஷ்ணுவிற்கும் நரசிம்மருக்கும் இடையில் என எந்த வேறுபாடும் இல்லை.
ரூப-பேதம் அவாப்னோதி த்யான-பேதாத்ததாச்யுத:
வைடூரியக் கல்லானது நீலம், மஞ்சள் போன்ற பல்வேறு நிறங்களை வெளிப்படுத்தக்கூடும். அதுபோல, பக்தனுடைய தியானத்தின் மனோபாவத்தைப் பொறுத்து, அச்சுதர் என்று அறியப்படும் இறைவன், ஒருவராக உள்ளபோதிலும் பல ரூபங்களில் தோன்றுகிறார். (நாரத பஞ்சராத்ரம்
கிருஷ்ணருக்கும் இராமருக்கும் உள்ள ஒற்றுமை
இராமரும் கிருஷ்ணரும் ஒரே நபர்கள், ஆனால் வேறுபட்ட ரூபத்தையும் வேறுபட்ட தன்மைகளையும் வெளிப்படுத்துகின்றனர். அதன் அடிப்படையில், இவர்கள் இருவருக்கும் இடையில் (அதாவது, இருவராகத் தெரியும் ஒருவருக்கு இடையில்) சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன.
தர்மம் சீர்குலைந்து அதர்மம் தழைத்தோங்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக முழுமுதற் கடவுள் இவ்வுலகில் யுகந்தோறும் அவதரிக்கின்றார் என்பதை நாம் பகவத் கீதையில் (4.7ஶி8) காண்கிறோம். இவ்வாறாக, இராமர், கிருஷ்ணர் ஆகிய இருவருமே தர்மம் சீர்குலைந்து அதர்மம் தழைத்தோங்கிய காலத்தில் தோன்றினர். ஸ்ரீ இராமர், சாதுக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த இராவணன் உட்பட பல்வேறு அசுரர்களைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினார். ஸ்ரீ கிருஷ்ணரும் கம்சன், ஜராசந்தன், துரியோதனன் உட்பட பல்வேறு அசுரர்களைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினார்.
முழுமுதற் கடவுள் மனித சக்திக்கு மட்டுமின்றி, தேவர்களின் சக்திக்கும் அப்பாற்பட்டவர் என்பதை இராமர், கிருஷ்ணர் என இருவருமே வெளிப்படுத்தினர். இராமர் தேவர்களையே அச்சம்கொள்ளச் செய்த இராவணனைக் கொன்றது மட்டுமின்றி, சமுத்திரத்தின் மீது பாலம் கட்டியது போன்ற அமானுஷ்யமான செயல்களை நிகழ்த்தினார். கோவர்தன மலையை உயர்த்தியது, விஸ்வரூபத்தைக் காட்டியது, பிரம்மதேவரையும் மயக்கியது என பல்வேறு அமானுஷ்யமான செயல்களை கிருஷ்ணரும் நிகழ்த்திக் காட்டினார்.
கிருஷ்ணருக்கும் இராமருக்கும் உள்ள வேற்றுமை
இராமர், கிருஷ்ணர் ஆகிய இருவருமே இரண்டு திருக்கரங்களுடன் தோற்றமளித்தபோதிலும், கிருஷ்ணரின் கையில் புல்லாங்குழலும் இராமரின் கையில் வில்லும் அம்பும் துணையாக இருந்தன. கிருஷ்ணரின் கையில் இருக்கும் புல்லாங்குழலானது அவர் அனுபவிப்பாளர் என்பதையும், இராமரின் கையில் இருக்கும் வில்லும் அம்பும் அவர் முதன்மையான பண்பாளர் என்பதையும் காட்டுகின்றன. ஸ்ரீ இராமர், மர்யாத புருஷோத்தமர், அதாவது, சீரான நடத்தையை வெளிப்படுத்தும் முழுமுதற் கடவுள் என்றும், ஸ்ரீ கிருஷ்ணர், லீலா புருஷோத்தமர், அதாவது லீலைகளை அனுபவிக்கும் முழுமுதற் கடவுள் என்றும் அறியப்படுகின்றனர். ஸ்ரீ இராமர் தனது பக்தர்களிடம் எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்ளும் சுபாவம் கொண்டவர், கிருஷ்ணரோ தனது பக்தர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகும் சுபாவம் கொண்டவர்.
மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஸ்ரீ இராமர் உதாரணமாகத் திகழ்ந்தார். மன்னர், புதல்வர், சகோதரர், கணவர், எஜமானர் என எல்லா உறவுகளிலும் ஸ்ரீ இராமரின் நடத்தை சீரானதாக இருந்தது. வேறுவிதமாகக் கூறினால், ஸ்ரீ இராமர் தன்னைக் கடவுள் என்று காட்டிக் கொள்ளாமல், மனிதருள் ஒருவராக வாழ்ந்து, மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு வழி வகுத்துக் கொடுத்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரோ தான் கடவுள் என்பதையும், மனிதனைப் போலத் தோன்றினாலும் மனிதர்களுக்கான விதிகளுக்குத் தான் உட்பட்டவன் அல்ல என்பதையும் வெளிப்படுத்தினார். பௌதிக உலகத்தைச் சார்ந்த எந்தவொரு விதியும் கடவுளுக்கு கீழ்ப்பட்டதே என்றும், விதிகளை வகுப்பவன் இறைவனான தானே என்றும் தனது வசீகரமான லீலைகளின் மூலமாக அவர் தெரிவித்தார். முழுமுதற் கடவுள் தான் செய்ய விரும்புவதை செய்யக்கூடிய பூரண சுதந்திரம் கொண்டவராக இருத்தல் வேண்டும்; கிருஷ்ணர் அதனை நிரூபித்தார்.
கடவுள் நமது எல்லைக்கு அப்பாற்பட்டவர்
இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுக்கும் மக்களிடம் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை, கடவுளை மனிதனின் தளத்தில் வைத்துப் பார்ப்பதே. முழுமுதற் கடவுள் நமது விதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை உணரும்போது மட்டுமே உண்மையான இறையுணர்வு ஏற்படுகிறது. கடவுள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனித சக்தியை அடிப்படையாகக் கொண்டு கடவுளுக்கே ஒரு வரையறையை வகுக்கும் நபர்கள், அந்த கடவுள் தங்களின் வரையறைக்குள் சிக்காமல் விலகியிருக்கும்போது, அவரை ஏற்க மறுக்கின்றனர். நானும் கடவுளை நம்புகிறேன் என்று பெயருக்குச் சொல்பவர்கள், கடவுளைக் கடவுளாக (அதாவது, அவரை உள்ளபடி) ஏற்காமல், தங்களது குறுகிய மனம் என்ன சொல்கிறதோ அதன்படி ஏற்க முன்வருகிறார்கள். கடவுளை அறிவதில் உண்மையான ஆர்வம் கொண்டோர், கடவுள் நமது எண்ண எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை உணர்தல் மிகவும் அவசியம்.
கிருஷ்ணரை நிந்தித்தல் சரியல்ல
கடவுளைப் பற்றிய தங்களது அறிவுப் பற்றாக்குறை யினாலும் குறுகிய எண்ணத்தினாலும், ஸ்ரீ இராமரை ஏற்று ஸ்ரீ கிருஷ்ணரை ஏற்க மறுக்கின்றனர். கிருஷ்ணருடைய செயல்கள் அனைத்தும் தெய்வீகமானவை (பகவத் கீதை 4.9), இதில் பௌதிக விஷயங்களைக் கலக்கக் கூடாது. கிருஷ்ணரை நமது பார்வையின் அடிப்படையில் எடைபோட்டு, அவரைக் குறை கூறுதல் மிகப்பெரிய குற்றமாகும். பக்குவ அறிவு கொண்ட பக்தர்கள், இராமர், கிருஷ்ணர் ஆகிய இருவரின் லீலைகளையும் மனதார ஏற்று, ஸ்ரீ இராமர் வழிவகுத்த நீதிகளை தங்கள் வாழ்வில் கடைபிடித்து, ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிய அற்புத லீலைகளை தினம் தினம் போற்றிப் புகழ வேண்டும்.
ஸ்ரீ இராமர், ஒரே மனைவியுடன் வாழும் ஏக பத்தினி விரதத்தை மேற்கொண்டிருந்தார். சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டபோதும் சீதை காட்டிற்குச் சென்றுவிட்ட பிறகும், ஸ்ரீ இராமர் மறுதிருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் அதன் மூலமாக உலகிற்கு ஒரு நீதியைக் கற்பித்தார். கிருஷ்ணர் 16,108 மனைவியரை திருமணம் செய்தார். முதலில் அவர் எட்டு பேரை மணம் முடித்திருந்தார். பின்னர், நரகாசுரனைக் கொன்று அவனால் சிறைப்படுத்தப்பட்டிருந்த 16,100 இளவரசிகளை அவர் சிறையிலிருந்து விடுவித்தபோது, “நாங்கள் வீட்டிற்குச் சென்றால், எங்களை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. நீங்களே எங்களை மணந்துகொள்ளுங்கள்,” என்று அவர்கள் கிருஷ்ணரிடம் கோரிக்கை வைத்தனர்.
அபயம் ஸர்வதா தஸ்மை ததாம்யேதத் வ்ரதம் மம
“யாரேனும் என்னிடம் வந்து, எம்பெருமானே, இன்றிலிருந்து நான் உங்களிடம் சரணடைகிறேன்,” என்று கூறினால், நான் அவருக்கு எப்போதும் பாதுகாப்பளிப்பேன். இஃது எனது சபதம்.” இராமாயணத்தில் (யுத்த காண்டம் 18.33) ஸ்ரீ இராமர் கூறிய இவ்வார்த்தைகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் பொருந்தும். இருவரும் ஒருவரல்லவா! இதனால், ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து இளவரசிகளையும் ஏற்று அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் மணமுடித்தார். அவருக்கு மட்டுமே சாத்தியமான அசாத்திய செயல் அது! 16,100 என்ன, 16,100 கோடி பெண்களையும் அவரால் ஒரே நேரத்தில் மணக்க முடியும். இதுதானே கடவுளின் சக்தி! அவரால் முடியாதது என்று ஏதேனும் இருந்தால், அல்லது சரணடைந்த பக்தர் யாரேனும் அவரிடம் ஏதேனும் கேட்டு அதனை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அவர் எப்படி கடவுளாக முடியும்?
இருப்பினும், ஸ்ரீ இராமருக்கு இதில் ஒரு பிரச்சனை எழுந்தது. அவரது பேரழகில் மயங்கிய தண்டகாரண்ய வனத்தைச் சார்ந்த ரிஷிகள் அனைவரும் பெண்ணாகப் பிறந்து இராமரை மணக்க விரும்பினர். ஆனால் அவரோ ஏக பத்தினி விரதம் ஏற்றிருந்த காரணத்தினால், அவர்களின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை. தனது அடுத்த அவதாரத்தில் (கிருஷ்ண அவதாரத்தில்) அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தார். அதன்படி, கிருஷ்ண அவதாரத்தின்போது இராமரை விரும்பிய தண்டகாரண்யத்தைச் சார்ந்த முனிவர்கள் அனைவரும் விருந்தாவனத்தில் கோபியர்களாகத் தோன்றி கிருஷ்ணருடன் இராஸ நடனத்தில் பங்கு கொண்டு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர். (பத்ம புராணம், உத்தர காண்டம்)
கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடியதைச் சுட்டிக் காட்டி இராமரை மட்டும் ஏற்பவர்கள், கிருஷ்ணரும் இராமரும் ஒருவரே என்பதை மறந்தது மட்டுமின்றி, இராமரே விரும்பிய தண்டகாரண்ய ரிஷிகளே கிருஷ்ணருடன் ராஸ நடனத்தில் கலந்து கொண்டனர் என்பதையும் மறந்துவிடுகின்றனர். கிருஷ்ணர் மீது குற்றம் சுமத்துவோர், உண்மையில் இராமர் மீதே குற்றம் சுமத்துகின்றனர்; ஏனெனில், இருவரும் வேறல்லவே.
கிருஷ்ணரின் செயல்கள் ஏற்கக்கூடியதா?
கிருஷ்ணரின் தெய்வீகச் செயல்களை சிலரால் ஏற்க முடியாமல் இருப்பதற்கு அவர்களின் அறியாமையே காரணமாகும். அவரது திவ்ய லீலைகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின், பாரதப் பண்பாட்டின் மாபெரும் ஆச்சாரியர்கள் பலரும் கிருஷ்ணரைப் போற்றுவது ஏன்? அவரை முழுமுதற் கடவுளாக ஏற்பது ஏன்? அவரது லீலைகளைக் கேட்பதற்கும் பரப்புவதற்கும் அயராது செயல்பட்டது ஏன்? அவர்கள் யாவரும் நீதி நெறிகளை செம்மையாகப் பின்பற்றியவர்கள். பௌதிக புலனின்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட சுகதேவ கோஸ்வாமி, இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், சைதன்ய மஹாபிரபு போன்றவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி செயல்படுவதே நமக்கு சாலச் சிறந்தது. எந்தவொரு பண்பாடும் இன்றி, புலனின்பமே பிரதானம் என்று வாழும் அடிமட்ட முட்டாள்கள் கிருஷ்ணரைப் பற்றி ஏதுமறியாமல் பேசக்கூடிய குழந்தைத்தனமான வாதங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.
கிருஷ்ணரின் ஒவ்வொரு செயலும் தெய்வீகமானது, எல்லாருக்கும் நன்மை பயப்பது, ஆனந்தமயமானது. அவரிடம் தவறுகள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இதனை உணர்ந்து செயல்படுவதால், சாதாரண மனிதனால் புரிந்துகொள்ள இயலாத கிருஷ்ண லீலைகளை காலப்போக்கில் புரிந்துகொள்வது சாத்தியமாகும். மேலும், கிருஷ்ணருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களிலிருந்தும் இஃது ஒருவரைக் காப்பாற்றும். (அறியாமையின் காரணத்தினால் கிருஷ்ணரின் மீது சுமத்தப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளை இந்த ஞான வாள் பகுதி படிப்படியாக வெட்டி வீழ்த்தும்)
தேவர்களுடன் ஒப்பிடக் கூடாது
அதே சமயத்தில், பெருமாளின் ரூபங்களை தேவர்களின் ரூபத்திற்கு சமமாக எண்ணிவிடக் கூடாது. அவ்வாறு நினைத்தல் நிச்சயமாக பெரும் அபராதமாகும். இது வைஷ்ணவ தந்திரத்தில் பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது:
ஸமத்வேநைவ வீக்ஷேத ஸ பாஷண்டீ பவேத் த்ருவம் “பிரம்மதேவர், சிவபெருமான் போன்ற மிகவுயர்ந்த தேவர்களைக்கூட முழுமுதற் கடவுளான நாராயணருடன் சமப்படுத்தக் கூடாது. அவ்வாறு கருதுபவன் நாத்திகன்.” (ஹரி பக்தி விலாஸ், 7.117)
குறிப்பிட்ட உருவத்தின் மீதான பற்றுதல்
இராமர், கிருஷ்ணர், நாராயணர், நரசிம்மர் என பெருமாளின் அனைத்து ரூபங்களும் ஒரே நபர் என்றபோதிலும், பக்தியில் மிகவுயர்ந்த நிலையிலுள்ளவர்கள் குறிப்பிட்ட ரூபத்தின்மீது பற்றுதல் கொள்வது வழக்கம். அவர்கள் மற்ற ரூபங்களை ஏற்பதில்லை என்று நினைத்துவிடக் கூடாது. மாறாக, அவர்களின் பற்றுதல் ஒரு குறிப்பிட்ட பெருமாளிடம் அதிகமாக இருக்கும். இதில் எந்தவொரு பிழையும் கிடையாது.
உதாரணமாகப் பார்த்தால், இராமரின் மிகச்சிறந்த பக்தரான ஆஞ்சநேயர், லட்சுமியின் நாதரான நாராயணரும் ஜானகியின் நாதரான இராமரும் ஒரே பரமாத்மா என்றபோதிலும், தனது வணக்கத்திற்குரிய பெருமான் கமலக் கண்களைக் கொண்ட ஸ்ரீ இராமரே என்பதை பின்வரும் ஸ்லோகத்தில் தெரிவிக்கின்றார்.
ததாபி மம ஸர்வஸ்வம் ராம: கமல-லோசன:
அதுபோல, விருந்தாவனவாசிகள் கிருஷ்ணரின் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தனர். கிருஷ்ணரே இராமர் என்பதை அவர்கள் அறிந்திருந்தபோதிலும், கிருஷ்ணராலேயே கவரப்பட்டனர். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ரூபத்தின்மீது பற்றுதல் கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை. அதற்கு மாறாக, பகவானின் மற்ற ரூபங்களைக் குறை கூறுதல் சரியல்ல.
இராமரைக் காட்டிலும் கிருஷ்ணர் சிறந்தவர் என்றோ, கிருஷ்ணரைக் காட்டிலும் இராமர் சிறந்தவர் என்றோ நினைத்தல் குற்றமாகும். சாஸ்திரங்களின் முடிவை அறியாத ஆரம்பநிலை பக்தர்கள், எந்தவொரு அவசியமும் இன்றி இதுபோன்ற அபராத சூழலை உருவாக்குகின்றனர். ஈஷ்வரத்வே பேத மானிலே ஹய அபராத, “இறைவனின் பலதரப்பட்ட ரூபங்களுக்கு மத்தியில் வேற்றுமை பார்த்தல் அபராதமாகும்,” என்று சைதன்ய மஹாபிரபு (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை, 9.154) கூறியுள்ளார்.
எனவே, கிருஷ்ணரும் இராமரும் ஒருவரே என்பதை உணர்ந்து பக்குவ அறிவுடன் செயல்படுதல் சாலச் சிறந்தது.