வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
பகவானுடனான உறவு
பெரியோர்களே, தாய்மார்களே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கு பெற வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கும் பரம புருஷ பகவானுக்கும் நித்தியமான உறவு உள்ளது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் போன்றது. இந்த உறவை எந்நிலையிலும் முறிக்க இயலாது. எனினும், மகன் சில சமயங்களில் தனது பாசமிகு தந்தையைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதுபோலவே பகவானுடைய அம்சங்களாகிய நாமும் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பகவானை விட்டு பிரிந்துள்ளோம்.
பகவான் கிருஷ்ணரே நமது உண்மையான தந்தை. நாம் அந்த உன்னத தந்தையாகிய கிருஷ்ணரை மறந்து சுதந்திரமாக வாழ விரும்புகிறோம். இது பெயரளவிலான சுதந்திரம். ஆனால் இத்தகைய சுதந்திரத்தினால் நாம் என்றும் மகிழ்ச்சியடைவதில்லை.
கட்டுண்ட வாழ்வு
நாம் பகவானை விட்டு சுதந்திரமாக வாழத் தொடங்கும்போது, நமது கட்டுண்ட வாழ்வு ஆரம்பமாகிறது. கட்டுண்ட வாழ்வில் ஆத்மாக்களாகிய நமக்கு பௌதிக உடல் வழங்கப்படுகிறது. இந்த உடல் ஆறுவித மாற்றங்களுக்கு உட்பட்டதுஶீபிறப்பு, வளர்ச்சி, தக்கவைத்தல், இனவிருத்தி, தோய்வு, மறைவு. இந்த ஆறு வகையான மாற்றம் மட்டுமின்றி, பலவிதமான துன்பங்களையும் ஆத்மா இந்த உடலில் அனுபவிக்கிறான். அவை மூவகைத் துன்பங்கள் எனப்படுகின்றன: உடலாலும் மனதாலும் ஏற்படும் துன்பங்கள், மற்ற உயிரினங்களால் ஏற்படும் துன்பங்கள், இயற்கையினால் ஏற்படும் துன்பங்கள். இவை அனைத்தையும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்று சுருக்கமாகக் கூறலாம். இதுவே பௌதிக வாழ்க்கை எனப்படுகிறது.
இவ்வுலகின் பொய்யான இன்பத்திற்காக நாம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கு தொடர்ந்து மாறிக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு பௌதிக உடலும் ஒரு குறிப்பிட்ட இன்பத்தைக் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஆகாயத்தில் பறப்பதற்கு விரும்புகிறோம். ஆனால், பறப்பதற்கான இறகுகள் நம்மிடம் இல்லை. நம்மைவிட கீழ்நிலை உயிரினங்களான பறவைகளோ எளிதாக வானில் பறக்கின்றன.
உண்மையான வாழ்வு
இவ்விதமாக கூர்ந்து ஆராய்ந்தால், ஒவ்வோர் உடலிலும் ஒரு குறிப்பிட்ட வசதி உள்ளது என்பதையும், ஓர் உடலில் இருக்கும் வசதி மற்றோர் உடலில் இல்லை என்பதையும் அறியலாம். இதனை மறந்து, நவீன விஞ்ஞானிகள் மற்ற கிரகங்களுக்குச் செல்ல விரும்புகின்றனர். சூரிய கிரகம், சந்திர கிரகம், செவ்வாய் கிரகம் என இலட்சக்கணக்கான கிரகங்கள் நம்முன் இருக்கின்றன. விஞ்ஞானிகள் அவற்றைப் பார்த்து, ஒரு நாள் அங்கே செல்வோம்,” என்று கூறுகின்றனர். ஆயினும், கட்டுண்டு இருப்பதால் நம்மால் அங்கே செல்ல இயலாது. நாம் சுதந்திரமாக இல்லை.
முக்தியடைந்த நிலையில் ஆத்மாக்களால் எங்கும் எளிதாகச் செல்ல இயலும். நாரத முனிவரை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் அனைத்து கிரகங்களுக்கும் செல்கிறார், விரும்பும் இடத்திற்குச் செல்கிறார். ஆன்மீக நிலையில் நமக்கு அளவற்ற சுதந்திரம் இருக்கிறது. ஆனால் நமது தற்போதைய நிலையோ அதற்கு முற்றிலும் எதிரானது. நமது உண்மையான சுதந்திரத்தை, அந்த ஆன்மீக நிலையை மீண்டும் பெறுவதற்கான நல்வாய்ப்பே இந்த மனிதப் பிறவி.
இரு வகையான பௌதிக உடல்
தற்போதைய நிலையில், நமது ஆன்மீக உடலானது, ஸ்தூல உடல், சூட்சும உடல் எனும் இரு வகையான பௌதிக உடல்களால் மூடப்பட்டுள்ளது. ஸ்தூல உடலானது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் உருவானது; சூட்சும உடலானது, மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றால் உருவானது. நம்மால் ஸ்தூல உடலை மட்டுமே காணவியலும். சூட்சும உடலைக் காண இயலாது. உங்களுக்கு மனம் உள்ளது, புத்தி உள்ளது; அதுபோல எனக்கும் மனம் உள்ளது, புத்தியும் உள்ளது. ஆனால், உங்களுடைய மனதை என்னால் காண இயலாது, என்னுடைய மனதை உங்களால் காண இயலாது. இருப்பினும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயத்தாலான ஸ்தூல உடலை நம்மால் காண இயலும். நானும் உங்களது ஸ்தூல உடலைக் காண்கிறேன், நீங்களும் எனது ஸ்தூல உடலைக் காண்கிறீர்கள்.
உடலைக் கைவிடுவதே இறப்பு
ஆத்மா ஸ்தூல உடலைக் கைவிடும்போது, சூட்சும உடலானது அதனை வேறு உடலுக்கு அழைத்துச் செல்கிறது. அதுவே இறப்பு எனப்படுகிறது. தந்தை மரணிக்கும்போது, ஐயோ, எங்க அப்பா என்னை விட்டுப் போய்விட்டாரே, போய்விட்டாரே,” என்கிறோம். தந்தையின் உடல் அங்குதானே இருக்கிறது! அவர் போய்விட்டார் என்று ஏன் கூறுகிறோம்? ஆம். உடல் இங்குதான் இருக்கிறது. ஆனால், ஆத்மாவானது சூட்சும உடலுடன் இணைந்தபடி, இந்த ஸ்தூல உடலை விட்டுச் சென்றுவிட்டது.
இரவு நேரத்தில் நாம் உறங்கும்போது, சூட்சும உடல் நம்மை மலைக்கு அழைத்துச் செல்கிறது. அந்த பெரிய மலையிலிருந்து நாம் கீழே விழுகிறோம். ஆனால் நமது ஸ்தூல உடல் வீட்டின் அறையில் கிடக்கிறது, சூட்சும உடலோ நம்மைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அதாவது, ஸ்தூல உடலை விட்டு சூட்சும உடலில் நாம் பயணிக்கிறோம். இதை அனைவரும் தினசரி அனுபவத்தில் உணரலாம்.
இறப்பு என்பது நமது ஸ்தூல உடலை மாற்றுவதாகும். நீங்கள் சட்டையும் அதற்கு மேல் அங்கியும் (கோட்) அணிந்திருக்கிறீர்கள், அங்கியைக் கழற்றி விட்டு சட்டையை மட்டும் அணியலாம். அதுபோலவே, நாம் நமது சூட்சும உடலை வைத்துக் கொண்டு ஸ்தூல உடலைக் கைவிடுகிறோம்; இதுவே இறப்பு எனப்படுகிறது.
புது உடலை ஏற்பதே பிறப்பு
இயற்கையின் விதிப்படி, ஆத்மாவை சூட்சும உடலானது வேறொரு தாயின் கருவிற்கு அழைத்துச் செல்கிறது. அந்தத் தாயின் வயிற்றில் அதற்கு மற்றொரு ஸ்தூல உடல் தயாராகின்றது. உடல் முழுமையாகத் தயாரானவுடன் அவன் தாயின் கருவிலிருந்து வெளியே வருகிறான், இதுவே பிறப்பு எனப்படுகிறது.
உடல்விட்டு உடல் மாறக்கூடிய இந்நிலையிலிருந்து விடுபட்டு, நாம் ஆன்மீக உடலை அடைய வேண்டும். அதற்கான வழிமுறையே பாகவத தர்மம் எனப்படுகிறது. (ஸ்தூல, சூட்சும என) இரண்டு பௌதிக உடல்களையும் கைவிட்டு நமது உண்மையான ஆன்மீக உடலை நாம் அடையும்போது, கட்டுண்ட நிலையிலிருந்து விடுதலையடைகிறோம்-உண்மையான ஆனந்தத்தை உணர்கிறோம். இது மிகவும் அறிவுபூர்வமானது. இந்த நல்வாய்ப்பை கிருஷ்ண பக்தி இயக்கம் அனைவருக்கும் வழங்குகிறது, மக்கள் ஆன்மீக நிலையை அடைவதற்கு உதவுகிறது. இதுவே வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவநிலையாகும்.
கட்டுண்ட பௌதிக வாழ்விலிருந்து விடுபடுவதற்கு நாம் இறையுணர்வை, கிருஷ்ண உணர்வைப் புதுப்பிக்க வேண்டும். கிருஷ்ண உணர்வே நமது உண்மையான உணர்வாகும்.
உடலுக்கேற்ற உணவு
இதுகுறித்து, எங்களது பூர்வீக ஆச்சாரியராகிய நரோத்தம தாஸ தாகூரின் பாடல் ஒன்றை விளக்குகிறேன். அவரது பாடல்கள் கௌடீய வைஷ்ணவர்களால் வேதத்திற்கு நிகராக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவர் வேதத்தின் உண்மைகளை வங்காள மொழியில் எளிய நடையில் வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்று, ஹரி ஹரி பிபலே ஜனம கோனாஇனு என்று தொடங்கும் பாடலாகும்.
அன்புள்ள பகவானே, நான் எனது மதிப்புமிக்க வாழ்வை வீணடித்துக் கொண்டிருக்கிறேன். மனிதனாகப் பிறந்தும் மனித வாழ்வை எவ்வாறு உபயோகிப்பது என்பதை நான் அறியவில்லை, மிருகங்களைப் போல வாழ்கிறேன்.” நரோத்தம தாஸர் தம்மை இங்கு சாமானியனின் நிலையில் வைத்துப் பாடுகிறார். எண்ணற்றோர் மனிதர்களாகப் பிறக்கின்றனர், ஆனால் மனித வாழ்வை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறியாமல் அவர்கள் விலங்குகளைப் போல வாழ்கின்றனர்.
விலங்குகள் உண்கின்றன, நாமும் நம்முடைய உணவை உண்கிறோம்; விலங்குகளின் உலகில் ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு வகையான உணவு உள்ளது. புலியானது இரத்தத்தையும் சதையையும் உண்கிறது. நீங்கள் ஆரஞ்சு, திராட்சை முதலியவற்றை புலிக்குக் கொடுத்துப் பாருங்கள், அவற்றை அது தீண்டவே தீண்டாது; ஏனெனில், அஃது அதற்கான உணவல்ல. அதுபோலவே பன்றியானது மலத்தை உண்கிறது. அதற்கு நீங்கள் சுவைமிக்க அல்வாவை வழங்கினால், அஃது அதனை உண்ணாது. ஏனெனில், ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு வகையான உணவுகள் உள்ளன. அதுபோலவே மனிதர்களாகிய நமக்கு பால், பழம், காய்கறி, தானியம் ஆகியவையே உணவுகளாகும். நமது பற்கள் இத்தகைய உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. இந்தப் பற்களைக் கொண்டு பழங்களை எளிதாகக் கடித்து உண்ணலாம், ஆனால் மாமிசத்தைக் கடிப்பது சாத்தியமில்லை. புலிகளுக்கோ மாமிசத்தை உண்பதற்குத் தகுந்த பற்கள் வழங்கப்பட்டுள்ளதால், அந்த உணவினை அவை எளிதில் துண்டு துண்டுகளாக்குகின்றன.
மனித வாழ்வின் பயன்
எனவே, மனித வாழ்வு விலங்குகளைப் போன்று வாழ்வதற்கு அல்ல. மனித வாழ்விற்கென்று ஒரு குறிப்பிட்ட பணி இருக்கின்றது. ஸ்ரீமத் பாகவதத்தை படிக்கவும் அதனைப் பற்றி விவாதிக்கவும் நாம் நமது வாழ்வைப் பயன்படுத்த வேண்டும். அதுவே இயற்கையான வாழ்வாகும், கிருஷ்ணரைப் பற்றிக் கேட்க வேண்டும், அவரை அறிந்துகொள்ள முயல வேண்டும்.
கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறார். நமது பௌதிகக் களங்கத்தின் காரணமாக நாம் அவரை மறந்திருக்கிறோம். கிருஷ்ணரைப் பற்றி கேளுங்கள், உங்களது வாழ்வு வெற்றியடையும். இதற்கு நீங்கள் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இறைவன் நமக்கு இரண்டு காதுகளை வழங்கியுள்ளார், அந்தக் காதுகளைக் கொண்டு, தன்னை உணர்ந்த ஆத்மாக்களிடமிருந்து அவரைப் பற்றி பணிவுடன் கேட்கும்போது, நமது இதயத்தின் களங்கங்கள் எல்லாம் அழிகின்றன, இதயம் தூய்மையடைகிறது, நமது வாழ்வும் வெற்றியடைகிறது.
நரோத்தம தாஸ தாகூர் தமது பாடலில் கூறுகிறார்:
ஹரி ஹரி பிபல ஜனம கோனாஇனு,
மனுஷ்ய-ஜனம பாஇயா, ராதா-க்ரிஷ்ண நா பஜியா,
ஜானியா ஷுனியா விஷ காஇனு
அன்புள்ள இறைவனே, நான் இந்த மதிப்புமிக்க மனித உடலைப் பெற்றுள்ளேன், ஆனால் இதனை ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை. இந்த மனித வாழ்வு ராதா-கிருஷ்ணரை அறிவதற்கானது. ஆனால் நான் அதனைச் செய்யாமல், தெரிந்தே விஷத்தை அருந்துகிறேன்.”
விஷத்தை அருந்துவதால் இறந்து விடுவேன் என்பதை அறிந்தும்கூட, தற்கொலை செய்ய விரும்பும் மனிதன் அதனை அருந்துகிறான். அதுபோலவே, மனித வாழ்வின் பயனை அறிந்தும் கிருஷ்ண உணர்வை ஏற்காதவன் தெரிந்தே விஷத்தை அருந்துபவனாகக் கருதப்படுகிறான். இந்த மனித வாழ்வானது கிருஷ்ண உணர்வைப் பெறுவதற்கான வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தாவிடில், நாம் தெரிந்தே விஷத்தை அருந்துகிறோம் (ஜானியா ஷுனியா விஷ காஇனு) என்றே அர்த்தம்.
ஹரி நாமமே வழி
நரோத்தம தாஸ தாகூர் மேலும் பாடுகிறார்:
கோலோகேர பிரேம-தன ஹரி-நாம-ஸங்கீர்தன
ரதி ந ஜனிலோ கேனே தாய்
ஸம்ஸார-விஷானலே, திப-நாஷி ஹியா ஜ்வலே,
ஜுஃடாஇதே நா கோஇனு உபாஇ
ஹரி நாம ஸங்கீர்த்தனம் கோலோக விருந்தாவனத்திலிருந்து வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து ரேடியோ அலைகளை நாம் பெறுவதைப் போலவே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே எனும் இந்த ஒலியதிர்வை நாம் ஆன்மீக உலகிலிருந்து பெறுகிறோம். பௌதிக வாழ்வெனும் விஷத்தினால் நான் தொடர்ந்து துன்பத்திற்கு உள்ளாகிறேன். இந்த துன்பகரமான நிலையிலிருந்து வெளியேற நான் வழியின்றி தவிக்கிறேன்.
வ்ரஜேந்த்ர-நந்தன ஜேஇ ஷசீ-ஸுத ஹைல ஸேஇ, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நந்த மஹாராஜரின் மகனான கிருஷ்ணரே தற்போது ஸச்சி தேவியின் மைந்தனாக அவதரித்துள்ளார். பலராம ஹஇல-நிதாய், கிருஷ்ணரின் அண்ணனாகத் தோன்றிய பலராமரே தற்போது நித்யானந்தராக அவதரித்துள்ளார். பாபீ-தாபீ ஜத சில ஹரிநாமே உத்தாரில, அவர்கள் இருவரும் பாவிகளுக்கும் ஹரி நாமத்தை வழங்கி அவர்களை விடுவிக்கின்றனர். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அனைவரும் விடுதலையடையலாம்.