கலி யுகத்தின் சக்திவாய்ந்த ஆதிக்கத்தின் காரணத்தால் தர்மம், சத்தியம், தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள், தேகபலம், ஞாபகசக்தி ஆகியவை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும். (ஸ்ரீமத் பாகவதம் 12.2.1)
வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி
கலி யுகத்தின் தோற்றம்
ஆன்மீகம் குன்றிய தற்போதைய கலி யுகம் சண்டையும் ஏமாற்றமும் நிறைந்த யுகம் என்று வேத சாஸ்திரங்கள் விவரிக்கின்றன. சப்தரிஷி மண்டலம் மகர நட்சத்திரத்தைக் கடந்து சென்றபோது கலி யுகம் தோன்றியது என்று ஸ்ரீமத் பாகவதம் (12.2.31) கணித்துள்ளது. கி.மு.3102, பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அதிகாலை 2:27 மணிக்கு கலி யுகம் ஆரம்பமானதாக ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்து சுமார் 36 வருடங்களுக்குப் பிறகு கலி யுகம் தோன்றியது.
கீழ்த்தரமான மக்கள்
4,32,000 ஆண்டுகளைக் கொண்ட இக்கலி யுகத்தில், மனித சமுதாயம் படிப்படியாகச் சற்றும் பண்பாடற்ற நிலைக்கு மாறி வருகிறது. தூய்மை, மரியாதை போன்ற நல்லொழுக்கங்கள் மக்களிடம் இல்லை; பேராசை, தீய நடத்தை, இரக்கமின்மை போன்ற குணங்கள் பெருகிவிட்டன. கலி யுகத்தின் மனிதர்களைப் பயனற்றவர்களாகவும் கீழ்த்தரமான உள்ளுணர்ச்சிகளால் தூண்டப்பட்டவர்களாகவும் லிங்க புராணம் விவரிக்கின்றது. உணவுக்காக உயிர்களைக் கொல்லும் இவர்கள், போதைப் பொருள்களிடம் அடிமையாகி, நல்லது எது, தீயது எது என்பதைப் பகுத்தறிய முடியாதவர்களாக வாழ்கின் றனர். புலன்களின் இடைவிடாத உந்துதலால் தூண்டப்பட்டு, எல்லை களை மீறி தவறான உறவில் ஈடுபடுகின்றனர்.
காமத்தினால் பெறப்பட்ட கீழ்த்தரமான தலைமுறையினர், உலகில் முரட்டுத்தனமான வேகத்தில் வளர்ந்து வருகின்றனர். மதவெறியர்கள், தீவிரவாதிகள், மற்றும் போலி ஆன்மீக வாதிகளின் கூடாரங்கள் அனைத்தும் புலனின்பமே பிரதானம் என்னும் கொள்கையில் மூழ்கியுள்ள மக்களால் நிரம்பியுள்ளன.
முறையற்ற ஜாதி முறை
ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழும் சமுதாயப் பிரிவுகளான பிராமணர்கள் (பூஜாரிகள், கல்விமான்கள்), சத்திரியர்கள் (அறிவார்ந்த அரசர்கள்), வைசியர்கள் (நியாயமான வியாபாரி கள்), சூத்திரர்கள் (நம்பிக்கைக்குரிய பணியாட்கள்) ஆகியோர்களைக் கொண்ட பண்டைய நாகரிகம் தற்போது இல்லை. உயர்குடியில் பிறந்துவிட்டோம் என்ற ஒரே காரணத்தைக் கொண்டு, அதிகாரத்தையும் பதவியையும் உரிமையுடன் கேட்கின்றனர்; சமுதாய நன்மைக்கான தங்களது கடமைகளை இவர்கள் செய்வதில்லை, மாறாக, தாழ்ந்த குலமக்களை அடிக்கடி துன்புறுத்துவதால், தாழ்ந்த குலமக்கள் உயர் குடியினரை எதிர்ப்பதுடன் அவர்களைக் கவிழ்த்தும் விடுகின்றனர். ஆதலால் உண்மையான பிராமணர்களையும் சத்திரியர்களையும் தற்போது காண முடிவதில்லை, வைசியர்களின் நிலையும் அதுவே.
அர்த்தமற்ற வழிபாடுகள்
மிகவும் இழிவானவர்களும் கொள்கையற்றவர்களும் பெயரளவில் ஆன்மீகத் தலைவர்களாகி, ஏமாறத் தயாராக இருக்கும் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர். கற்பனையான கடவுள்கள் போலியான ஆஸ்ரமங்களில் வழிபடப்படுகின்றனர்; அங்குள்ள வழிபாட்டு முறை, தவம், தானம் என அனைத்தும் கற்பனையானவை. சமயச் சடங்குகள் அனைத்தும் பெயருக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே செய்யப்படுகின்றன. புனித நூல்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாததால் சமூகம் ஆன்மீக வழிகாட்டுதலை இழந்து நிற்கின்றது. நாஸ்திகம் வளர்கிறது, சில சமயங்களில் ஆன்மீகத்தின் போர்வையில். மக்கள் தங்களை அதிபுத்திசாலிகளாக எண்ணிக் கொண்டிருந்தாலும், அர்த்தமற்ற தத்துவங்களில் நம்பிக்கை கொண்டிருப்பதால், முட்டாள்களாகவே உள்ளனர். இவ்வாறு, தவறான நம்பிக்கைகளும் தவறாக வழிகாட்டும் போதனைகளும் உலகம் முழுவதும் பரவியுள்ளன.
துன்பத்திற்குள்ளாகும் மக்கள்
தொன்றுதொட்டு விளங்கிய மன்னராட்சி அழிந்து விட்டது. அரசாங்கத் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் கொள்கையற்ற நபர்கள், மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அதிகமாக வரி வசூலித்து அவர்களைத் துன்புறுத்துகின்றனர். குற்றவாளிகளான பலர் கைகோர்த்து பொதுமக்களைத் துன்புறுத்துகின்றனர், மக்கள் அனைவருமே அடிமைகளாகி மடிகின்றனர். குறிப்பாக, சாதுக்கள், ஆசிரியர்கள், புத்திமான்கள், தத்துவஞானிகள் ஆகியோர் மிகவும் துன்பத்திற்குள்ளாகின்றனர்.
பணமும் ஏழ்மையும்
கலி யுக மக்கள் மனசாட்சியின்றியும் நீதி நேர்மையின்றியும் பணத்தை மட்டுமே தேடுகின்றனர். கொலை, ஏமாற்றுதல், இலஞ்சம் ஆகியவற்றால் செல்வந்தராக மாறியவர்கள் உயர்ந்த வகுப்பினராக மதிக்கப்படுகின்றனர். பணத்தால் அதிகாரத்தையும் நியாயத்தையும் விலைக்கு வாங்கிவிடும் நிலை உள்ளது.
ஏழைகள் பணக்காரர்களின் அடிமைகளாகின்றனர். விவசாயிகள் கிராமங்களை விட்டு இடநெருக்கடி மிகுந்த நகரத்திற்குக் குடிபெயர்ந்து இன்னல்களுக்கு உட்படுகின்றனர். பலர் சரியான உடைகூட இல்லாமல், ஒரே உடையைத் தினமும் உடுத்திக் கொள்கிறார்கள். வயிற்றை நிரப்புவதே ஏழைகளின் முக்கிய குறிக்கோளாக உள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் வேலை கிடைக்காமல் தெருக்களில் திரிந்து கொண்டும் தங்களது ஏழ்மையை நிந்தித்துக் கொண்டும் வாழ்கின்றனர்.
பொறுப்பற்ற திருமணங்கள்
திருமணம் ஒரு புனிதமான பந்தம் என்ற காலம் மலையேறிவிட்டது. அப்படியே திருமணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் விவாகரத்து கோரு கின்றனர். திருமணம் செய்யாமல் வெறும் சிற்றின்பத்திற்காக இணைந்து வாழ்வோர் பலர், காம சுகத்திற்காக தேகத்தை அழகுபடுத்திப் பராமரிப்பதே மக்களின் முக்கியமான நோக்கமாக உள்ளது. தங்களது பாரம்பரிய கடமைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலையும் பெண்கள், ஆண்களால் தகாத முறைகளில் பயன்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்படுகின்றனர்.
குலம், இனம், குடும்பம் போன்ற பந்தங்கள் மறக்கப்பட்டுவிட்டன. குடும்பங்கள் பிளவுபட்டுள்ளன. வயதான பெற்றோர்களைப் பிள்ளைகள் கவனித்துக் கொள்வதில்லை, தங்களது குழந்தைகளையும் பராமரிப்பதில்லை, குழந்தைகள் தங்களது அன்னை யாலேயே கருவில் கொல்லப்படுகின்றனர், தப்பிப் பிழைத்த குழந்தைகளும் கொடுமையாக நடத்தப்பட்டு பிறகு கைவிடப்படுகின்றனர்.
தூய்மையற்ற நெறிகள்
இந்த யுகத்தின் மக்கள், உணவு உண்ட பிறகும், மல ஜலம் கழித்த பிறகும், தங்களை தூய்மைப்படுத்திக் கொள்வதில்லை. பிரம்மசரியம் என்பது கடைபிடிக்கப்படாத ஒன்றாகவும், சில சமயங்களில் கேள்விப்படாத ஒன்றாகவும் உள்ளது. பொய்யும் பித்தலாட்டமும் அன்றாட வழக்கம். கெட்ட வார்த்தைகள் நடைமுறை வார்த்தைகளாகிவிட்டன. சீர்மிகு நீதி நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை–ஒவ்வொருவரும் சொந்த நெறிகளை உருவாக்கி அதன்படி வாழ்கின்றனர், அத்தகு வாழ்க்கை சரியானதாக ஏற்கப்படுகிறது.
இயற்கையின் அழிவு
மக்கள் நாகரிகமின்றி மிருக வாழ்க்கை வாழ்வதால், பஞ்சம், தொற்றுநோய், இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றின் வடிவில் கர்மவினை அவர்களை வாட்டுகின்றது. அசுத்தம், பசி, மற்றும் பயம் எங்கும் பரவியுள்ளன. இயற்கையைத் துன்புறுத்துவதால் தன்னை உயர்ந்தவன் என்று மனிதன் நினைத்துக் கொண்டாலும், தூய உணவு, காற்று, அல்லது நீர் அவனுக்குக் கிடைப்பதில்லை. மாசடைந்த மனமுடையோர், நிலம், நீர், ஆகாயம் என அனைத்தையும் மாசுபடுத்துகின்றனர். மாசடைந்த அழுகிய பொருள்களால் மக்கள் தொற்று நோய்களுக்கு உள்ளாகின்றனர். பல்வேறு புத்தம்புது வியாதிகள் தோன்றி, இயற்கைக்குப் புறம்பான, செயற்கையான வாழ்க்கை வாழும் பெரும்பாலான மக்களைப் பாதிக்கின்றன.
வாழ்க்கைப் போராட்டம்
இன்பமோ ஆனந்தமோ இன்றி வாழ்க்கை கடினமானதாகிவிட்டது. மக்கள் நம்பிக்கையிழந்து மனசோர்வுக்கு உள்ளாகும்போது, தற்கொலை செய்து கொள்வதும் பைத்தியமாகுவதும் சகஜமாகிவிட்டன.
தேவையற்ற வன்முறை, கொடூரம், மற்றும் இம்சைகளில் மக்கள் ஆனந்தம் காண்கின்றனர். கொலை என்பது தினசரி வாழ்க்கையின் நிகழ்வாகிவிட்டது. மக்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக வாழ முடிவதில்லை. விலங்குகளை சகஜமாகக் கொல்வதற்கு மனிதன் அறிந்து கொண்டுள்ளான், அதை அப்படியே தனது சக மனிதனிடமும் செயல்படுத்துகிறான். வீடு போர்க்களமாகிவிட்டதால் உலக மக்கள் அனைவரும் பூமியில் சுற்றித் திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பூமியின் பெரும்பாலான பகுதிகள் இடைவிடாத போரினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீமத் பாகவதத்தின் தீர்வு
இவ்வுண்மைகள் யாவும் பல்வேறு புத்தகங்களில் விளக்கப்பட்டுள்ளன; அதுமட்டுமின்றி, அனைத்துச் செய்தித்தாள்களிலும் இந்நிகழ்வுகளை தினமும் படிக்கலாம். அதிர்ஷ்டவசமாக, இந்நிலைமையை தீவிரமாக ஆராய்ந் துள்ள ஸ்ரீமத் பாகவதம் காலத்திற்கேற்ற தகுந்த தீர்வையும் வழங்கியுள்ளது:
“இக்கலி யுகம் கடலளவு குற்றங்கள் நிறைந்ததாக இருப்பினும், இந்த யுகத்தில் ஒரு நல்ல குணமும் இருக்கின்றது. அஃது என்னவெனில், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தால் போதும், பௌதிக பந்தங்களிலிருந்து விடுபட்டு உன்னதமான இறைவனின் தெய்வீகத் திருநாட்டிற்குச் செல்ல முடியும்.” (ஸ்ரீமத் பாகவதம் 12.3.51)
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை ஜபிப்பவர்கள் கலி யுகத்தின் தீய விளைவுகளிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை ஒளிவிடத் தொடங்குகிறது, அவர்களது நடத்தை தூய்மை யானதாகிறது. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்து வாழ்க்கையில் மாற்றமடைந்த ஆயிரக்கணக்கானோர் இதற்குச் சான்றாக உள்ளனர். நாம உச்சாடனம் என்னும் இந்த வழிமுறையை மேன்மேலும் அதிகமான மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது, உலகின் மொத்த நிலைமையும் மாறிவிடும். கலி யுகத்தில் 10,000 வருடங்கள் பொற்காலமாகத் திகழும் என சாஸ்திரங்கள் கணித்துள்ளன. ஹரே கிருஷ்ண இயக்கத்தின் மூலம் அந்த பொற்காலம் வந்து கொண்டுள்ளது. நரகம் போன்று விளங்கும் நமது பூமி, வைகுண்டமாக மாறிவிடும். பகவானுக்கு அன்பு செய்வதே வாழ்வின் உண்மையான குறிக்கோள் என்பதில் மக்கள் கவனம் செலுத்தும்போது அமைதியும் மகிழ்ச்சியும் இயற்கையாகவே எழுச்சிபெறும். நாசகரமான கலி யுகத்தின் விளைவுகளிலிருந்து விடுபட, புத்திசாலிகள், இந்த ஹரே கிருஷ்ண இயக்கத்தில் இணைந்து, தங்கள் வாழ்வை முன்னேற்றிக் கொண்டு மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்.
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 35 வருடங்களாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.
(தமிழாக்கம்: அமுதவல்லி தேவி தாஸி)