பக்தியை விஞ்ஞானபூர்வமாக அணுகலாமே!

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

23 ஆகஸ்ட், 1972, லாஸ்ஏஞ்சல்ஸ்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஏவம் ப்ரஸன்ன-மனஸோபகவத்-பக்தி-யோகத:

பகவத்-தத்த்வ-விஜ்ஞானம்முக்த-ஸங்கஸ்ய ஜாயதே 

களங்கமற்ற ஸத்வ குணத்தில் நிலைபெற்று பகவத் பக்தியின் தொடர்பினால் தெளிவான மனதைப் பெற்றவன், எல்லா பௌதிகத் தொடர்புகளிலிருந்தும் விடுபட்டு பரம புருஷ பகவானைப் பற்றிய உண்மையான விஞ்ஞானத்தைப் பெறுகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.20)

ஸத்வ குணத்தின் தேவை

விஞ்ஞானம் என்றால் அனுபவபூர்வமான அறிவு என்று பொருள். கிருஷ்ண உணர்வென்பது அனுமானமோ கற்பனையோ அல்ல, இது கணிதத்தைப் போல, அனுபவபூர்வமான அறிவு. கணிதத்தில் இரண்டும்இரண்டும் கூட்டினால், நான்கு. இரண்டையும்இரண்டையும் கூட்டி நான்கிற்கு பதிலாக ஐந்து என்று கூறவியலாது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எங்குச் சென்றாலும் இரண்டும் இரண்டும்–நான்குதான். இதை அனைவரும் ஒப்புக்கொள்வர்; ஏனெனில், இஃது ஒரு விஞ்ஞானம்.

எனவே, விஞ்ஞானம் என்பது அனைத்து இடங்களிலும் ஒன்றாகவே இருக்கும். கடவுளைப் பற்றிய அறிவும் ஒரு விஞ்ஞானமே. எனது அனுமானத்திற்கு ஏற்பவோ உங்களது அனுமானத்திற்கு ஏற்பவோ கடவுளை அறிந்துகொள்ள இயலாது. கடவுளைப் பற்றி அறிவதில் அனுமானத்திற்கு இடமில்லை.

பகவத்-தத்த்வ-விஜ்ஞானம்ஶீபகவானைப் பற்றிய இந்த அறிவானது, முக்த-ஸங்க, பௌதிக சங்கத்திலிருந்து விடுபட்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள இயலும். பௌதிக சங்கத்திலிருந்து இவ்வாறு முற்றிலும் விடுபட்ட நிலையில் இருப்பவன், ஏவம் ப்ரஸன்ன மனஸ:, எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் இருப்பவனால் மகிழ்ச்சியாக இருக்க இயலாது. ஆகவே, நாம் ஸத்வ குணத்தின் தளத்திற்கு வர வேண்டியது அவசியம்.

ததா ரஜஸ்-தமோ-பாவா:காம-லோபாதயஷ் ச யே

சேத ஏதைர் அனாவித்தம்ஸ்திதம் ஸத்த்வே ப்ரஸீததி

பக்தித் தொண்டு இதயத்தில் நிலைநிறுத்தப்பட்ட உடனேயே, ரஜோ, தமோ குணங்களின் விளைவுகளான காமம், லோபம் முதலியவை இதயத்திலிருந்து மறைந்துவிடுகின்றன. அதன் பின்னர், பக்தன் ஸத்வ குணத்தில் நிலைபெற்று பூரண மகிழ்ச்சியடைகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.19)

மனித வாழ்வு கடவுளை அறிவதற்கானது. அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ. மிருகப் பிறவிகளில் கடவுளை அறியவியலாது. ஆனால், உணர்வு மேம்பட்டுள்ள மனிதனால் கடவுளை அறிந்துகொள்ள முடியும். கடவுளை அறிந்துகொள்வதற்கான அறிவை எவ்வாறு பெறுவது? ஸத்வ குணத்தில் நிலைபெறும்போது, கடவுளை அறிந்துகொள்ள இயலும். பறவைகளும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையான உணவு, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகின்றன. அவை அதற்காக எந்தவொரு தொழிலிலும் ஈடுபட்டு பொருள் ஈட்டுவதில்லை,” என்பதை ஸத்வ குணத்தில் நிலைபெறும்போது ஒருவன் காண்கிறான்.

எறும்பிலிருந்து யானை வரையுள்ள அனைத்து உயிர்வாழிகளுக்கும் குடும்பம், உறைவிடம், உணவு முதலிய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இவற்றை வழங்குபவர் யார்? ஸத்வ குணத்தில் இருப்பவன் இதனைச் சிந்திக்கத் தொடங்குகிறான்.

கடின உழைப்பு என்ன தருகிறது?

ஸத்வ குணமானது ஞானம் என்றும், தமோ குணமானது அறியாமை அல்லது இருள் என்றும் அறியப்படுகிறது. இருளில் இருக்கும்போது நம்மால் எதையும் காண முடிவதில்லை. ஸத்வ குணம் பிரகாசமானது. 84,00,000 வகையான உயிரினங்கள் அனைத்தும் அவற்றிற்குத் தேவையான உணவு, உறைவிடம், பாலுறவு முதலியவற்றைப் பெறுகின்றன. அவை தங்களை அதிக சிரமமின்றி தற்காத்துக்கொள்கின்றன. இயற்கை அவற்றின் தேவைகளை நிறைவேற்றுகின்றது. இவ்வாறிருக்கும்போது, மனித சமுதாயம் மட்டும் எதற்காக மேற்கண்ட விஷயங்களுக்காக கடினமாக உழைக்கின்றது? விலங்குகளைக் காட்டிலும் மேம்பட்ட அறிவைப் பெற்றுள்ள மனிதன் விலங்குகளைக் காட்டிலும் வசதியாக வாழ வேண்டியவனாவான், ஆனால் அதற்கு மாறாக, அவன் விலங்குகளைவிட அதிகமாக போராடிக் கொண்டிருக்கிறான்.

இஃது எத்தகைய நாகரிகம்? நாகரிகமே அல்ல. கடினமாக உழைக்கும் பெரும் தொழிலதிபர்கள்கூட அமைதியாக, நிம்மதியாக வாழவே விரும்புகின்றனர். வார இறுதி நாள்களை எந்த தொந்தரவுமின்றி தனிமையான இடங்களில் கழிக்க அவர்கள் விரும்புகின்றனர். உண்மையில் அனைவரும் இவ்வாறுதான் வாழ வேண்டும். உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காத்துக்கொள்ளுதல் இவற்றிற்காக மனிதன் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்? நவீன நாகரிகம் இந்நான்கு தேவைகளுக்காக மனிதனை இரவுபகல் பாராமல் கழுதையைப் போன்று உழைக்கச் செய்கின்றது. இது தவறான நாகரிகமாகும்.

இந்நான்கு தேவைகளினால் நாம் திருப்தியடைவோம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. நான் உங்களது நாட்டிற்கு வருவதுகுறித்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா மிகவும் செல்வம் மிக்க நாடு. அங்கே உண்ணுதல், உறங்குதல், பாலுறவு முதலிய செயல்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது,” என்று எண்ணினேன். ஆனால், இங்கு அனைத்தும் நான் நினைத்தவற்றிற்கு மாறாக உள்ளது. மக்களில் சில குறிப்பிட்ட பிரிவினர் அடைக்கலம் ஏதுமின்றி, வீதிகளிலும் பூங்காக்களிலும் உறங்குகின்றனர். இது நாகரிகமே அல்ல. மக்கள் இவ்வாறு கவலைகளால் தொந்தரவிற்கு உட்பட்டுள்ளபோது, அவர்களால் எவ்வாறு கடவுளை அறிந்துகொள்ள இயலும்

மனிதனை இரவுபகல் பாராமல் கடினமாக உழைக்க வைப்பதால், நவீன நாகரிகம், நாகரிகமே அல்ல.

பக்தி யோகமே தலைசிறந்தது

முதலில் நீங்கள் ஏவம் ப்ரஸன்ன-மனஸ:, அதாவது, தொந்தரவுகள் ஏதுமற்ற அமைதியான நிலையை அடைய வேண்டும். ப்ரஸன்ன-மனஸ: என்பதற்கு எப்போதும் மகிழ்ச்சியான மனமுடையவன்” என்று பொருள். இந்நிலையை பகவத்-பக்தி-யோகத: பக்தி யோகத்தால் மட்டுமே அடைய இயலும், மற்ற முறைகளால் அல்ல.

கர்ம யோகம், தியான யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பல்வேறு யோக முறைகள் உள்ளன. ஆன்மீக முன்னேற்றத்திற்கான அனைத்து முயற்சிகளும் யோகம்” என்று அறியப்படுகின்றன. பல யோக முறைகள் இருப்பினும், பக்தி யோகமே தலைசிறந்தது. ஆகவே, கிருஷ்ணர் கீதையில் (6.47) கூறுகிறார்:

யோகினாம் அபி ஸர்வேஷாம்

மத்-கதேனாந்தர்-ஆத்மனா

ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்

ஸ மே யுக்ததமோ மத:

எனது வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபட்டு, எப்போதும் என்னை இதயத்தில் நினைக்கும் எனது பக்தன் மிகவுயர்ந்த யோகியாவான்.”

ஷ்ரத்தாவான் பஜதே என்றால், நம்பிக்கையுடன் வழிபடுபவன் என்று பொருள். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மந்திரத்தை ஜபித்து பகவான் கிருஷ்ணரை இதயத்தில் தியானிப்பவன் முதல்தர யோகியாவான். இதுவே பகவத்-பக்தி-யோகத: எனப்படுகிறது. பக்தி யோக முறையில் ஆரம்ப நிலையில் உள்ளவனும் விதிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இந்நிலையை அடையலாம். அதன் பிறகு, வருத்தத்திற்கு இடமில்லை. இதுவே பக்தி யோகத்தின் அறிகுறியாகும்.

க்க இயலாது.

எச்சரிக்கை

வாருங்கள், நீங்கள் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, நான் உங்களுக்கு கடவுளைக் காண்பிக்கின்றேன்,” என்று சில அயோக்கியர்கள் கூறுகின்றனர். இதெல்லாம் ஏமாற்று வேலை. கடவுள் ஒன்றும் மலிவானவர் அல்ல. ஏமாற்றுவோர் பலர் உள்ளனர்; மக்கள் ஏமாற்றப்பட விரும்புவதால் இந்த ஏமாற்றுக்காரர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். பக்தி யோகத்தின் நிலையை அடையும்பொழுது மட்டுமே கடவுளை அறிந்துகொள்ள இயலும். இஃது ஒரு விஞ்ஞானம்.

சிலர் உங்களிடம் வந்து, நான் உங்களுக்கு வேதியியல் அல்லது கணிதத்தை ஒரு நிமிடத்தில் கற்றுத் தருகிறேன், எனக்குப் பணம் கொடுங்கள்,” என்று கூறினால், அது சாத்தியமா? இல்லை. இவ்வாறு இருக்கையில், ஏன் இந்த அயோக்கியர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்? கடவுளைப் பற்றிய அறிவானது ஒரு விஞ்ஞானம், வெறும் மனவெழுச்சி அல்ல. பகவானை சாஸ்திரங்களைக் கொண்டே அறிவதற்கு முயல வேண்டும். சாஸ்திரங்களை விடுத்து பகவானை அறிய முயல்வது நிச்சயம் தொந்தரவையே ஏற்படுத்தும். இதுகுறித்து ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத சிந்துவில் கூறுகிறார்:

ஷ்ருதி-ஸ்ம்ருதி-புராணாதி-பஞ்சராத்ர-விதிம்-வினா

ஐகாந்திகீ ஹரேர் பக்திர்உத்பாதாயைவ கல்பதே 

சாஸ்திரங்களைப் பின்பற்றாத பாதை ஒரு தொந்தரவாக கருதப்படுகிறது. யாரேனும் ஒருவன் சாஸ்திரங்களைப் புறக்கணித்து தான் கடவுளை அறிந்துகொண்டுவிட்டதாக கூறுவானாயின், அது நிச்சயம் தொந்தரவே. கடவுளைப் பற்றிய அறிவும் பக்தியும் விஞ்ஞானபூர்வமானவை. அவற்றை உங்களால் உருவாக்க இயலாது.

பகவான் கிருஷ்ணரை தியானிப்பவனே முதல்தரமான யோகியாவான்.

மதமும் தத்துவமும்

தத்துவபூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் அணுகப்படாத மதம் வெறும் மனவெழுச்சியே, உண்மையான மதமல்ல. மேலும், மதமற்ற தத்துவமும் வெறும் அனுமானமே. இதுவும் உபயோகமற்றது. பூரண உண்மை என்றால் என்ன? கடவுள் யார்? முதலியவற்றை அறிந்து அதுகுறித்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்லாத தத்துவம், ஓர் அனுமானமே. மேலும், தத்துவமற்ற கடவுள் அறிவும் மனவெழுச்சியே. எனவே, தத்துவம், மதம் ஆகிய இரண்டும் இணைந்திருக்க வேண்டியது அவசியம்.

விஞ்ஞானம் என்றால் விசேஷ ஞானம் என்று பொருள். ஞானம் என்பது சாதாரண அறிவைக் குறிக்கின்றது. அதனுடன் வி என்னும் சொல் சேர்க்கப்படும்பொழுது, அது நடைமுறையில் உணரக்கூடிய அறிவைக் குறிக்கின்றது. இது விஞ்ஞானம்.

இந்த விஞ்ஞானத்தை கீழ்நிலை குணங்களான ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டவரால் மட்டுமே அறிந்துகொள்ள இயலும். ஆகவே, இந்த பகவத் தத்துவ விஞ்ஞானத்தை விதிமுறைகளின்றி ஒரே நாளில் மலிவாக வழங்குவதாகக் கூறும் பல்வேறு அயோக்கியர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஏமாந்துவிடக் கூடாது. இந்த விஞ்ஞானத்தை அவ்வாறு மலிவாக வழங்குவது சாத்தியமல்ல. இது கற்கப்பட வேண்டும், பயிற்சி செய்யப்பட வேண்டும், உணரப்பட வேண்டும்.

இந்த விஞ்ஞானம் ஸ்ரீமத் பாகவதத்தில் வழங்கப்பட்டுள்ளது. பாகவதத்தின் தொடக்கத்திலேயே, தர்ம-ப்ரோஜ்ஜித கைதவோ  அனைத்து போலி தர்மங்களும் விரட்டியடிக்கப்படுகின்றன. கிருஷ்ண உணர்வானது மனவெழுச்சியில் செயல்படுபவர்களுக்கானது அல்ல. நாங்கள் கிருஷ்ண உணர்வை விஞ்ஞானபூர்வமாக வழங்குகிறோம்.

மஹாபிரபுவினால் வழங்கப்படும் எளிமையான பக்தி

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு, வாழ்வைப் பக்குவப்படுத்த முயலும் ஆயிரக்கணக்கான மனிதர்களில் யாரேனும் ஒருவனே கிருஷ்ணரை அறிந்துகொள்கிறான். எனவே, பகவான் கிருஷ்ணரைப் பற்றி அறிவது அவ்வளவு எளிதானதல்ல. ஆயினும், கிருஷ்ணரின் கருணையால் அஃது எளிதானதாகும். இந்த யுகத்தின் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களிடம் மிகவும் கருணை கொண்ட பகவான், ஸ்ரீ சைதன்யராகத் தோன்றி அனைவருக்கும் கிருஷ்ணரை வழங்குகிறார். அதுவே அவரின் தனிச்சிறப்பு. அவர் கிருஷ்ணரை தாராளமாக வழங்குவதால் மட்டுமே, இது சாத்தியமாகின்றது; இல்லையேல், இஃது எளிதானதல்ல.

கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்தல் எளிதானதல்ல. ஆனால் அவ்வளவு பணத்தை ஒரே சமயத்தில் வழங்கக்கூடிய நபர் உங்களுக்கு கிடைத்தால், அது மிகவும் சுலபமாகின்றது. ஆகவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை, நமோ மஹா-வதான்யாய க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாயதே, பொதுவாக உங்களை மக்களால் அறிந்துகொள்ள இயலாது. ஆயினும், தற்போது நீங்கள் உங்களை தாராளமாக விநியோகம் செய்கிறீர்கள். ஆகவே, நீங்களே மிகவும் கருணைவாய்ந்த அவதாரம், என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரார்த்திக்கிறார். நாமும் ரூப கோஸ்வாமியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், நம்மால் சைதன்ய மஹாபிரபுவை அறிந்துகொள்ள இயலும்; அப்போது, கிருஷ்ணரையும் அறிந்துகொள்ள இயலும். இதுவே வழிமுறை.

நீங்கள் பகவானை அறிந்துகொள்ள விரும்பினால், பக்தி யோகத்தை மேற்கொள்ள வேண்டும். ஆகவே, பகவத் பக்தி யோகத: என்று பாகவதம் கூறுகிறது. மேலும், பக்த்யா மாம் அபி ஜானாதி, பக்தியால் மட்டுமே தம்மை அறியவியலும் என்று கிருஷ்ணரும் கீதையில் (18.55) தெளிவாகக் கூறுகிறார். இந்த யுகத்தில் அதற்கான விதிமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தால் போதும். பகவானின் நாமத்தை ஜபிப்பதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை, எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஒருவன் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கலாம், அவ்வாறு ஜபித்து வாழ்வின் பக்குவத்தை அடையலாம்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரார்த்தித்தல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives