வழங்கியவர்: திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ்
பாகுபலிக்கும் பகவத் தரிசனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். பாகுபலியையும் மஹாபாரதத்தையும் ஒப்பிடப் போகிறார்களோ என்றும் நினைக்கலாம். இல்லை. பாகுபலியின் காய்ச்சல் மக்களிடம் சற்று தணிந்துள்ள இவ்வேளையில், அதைக் காட்டி சில போதனைகளை உரைத்தால், யாம் கூறுவதை மக்கள் காது கொடுத்து கேட்பர் எனும் நம்பிக்கையில் பாகுபலி பகவத் தரிசனத்திலும் நுழைந்துள்ளது.
பாகுபலி காய்ச்சல்
இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை கண்டிராத பிரம்மாண்டத்துடன் மன்னர் காலத்துக் கதையை மையமாக வைத்து உருவான பாகுபலி திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாக, இந்து மத மரபுகளையும் பழக்கங்களையும் கேலி செய்து வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில், பாகுபலியில் பங்கு பெற்றவர்களில் சிலர் நாஸ்திகர்களாக உள்ளபோதிலும், இத்திரைப்படத்தில் ஆங்காங்கே இந்து சமய நம்பிக்கைகளுக்கு வலுவூட்டுவது போலவும் நீதிக் கருத்துகளை எடுத்துரைப்பது போலவும் வெளிவந்திருப்பது நலம். விஷுவல் எபெக்ட்ஸ் கற்றுத் தரும் கணிப்பொறி நிறுவனங்களில் தொடங்கி, கிரிக்கெட் வீரர், அரசியல் தலைவர் என எல்லாருமே இன்று பாகுபலியுடன் ஒப்பிட்டுப் பேசப்படுகின்றனர். அந்த அளவிற்கு பாகுபலியின் தாக்கம் மக்களிடையே பரவியுள்ளது. ஆயினும், மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட இந்த கற்பனைக் கதையின் மீது ஏன் இவ்வளவு மோகம்!
கற்பனையும் உண்மையும்
பாகுபலி தயாரித்தவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, பணம் சம்பாதிப்பது அவர்களின் தொழில். அதை அவர்கள் திறம்பட செய்துள்ளனர். இங்கே யாம் மக்களுக்கு நினைவூட்ட விரும்புவது யாதெனில், பாகுபலி ஒரு கற்பனைக் கதை. பாகுபலி என்னும் இந்தக் கற்பனைக் கதையில் இவ்வளவு ஆர்வத்தைக் காட்டும் மக்கள் மஹாபாரதம் என்னும் உண்மைக் கதையில் ஆர்வத்தைக் காட்டினால் என்ன? கற்பனையில் ஆர்வம் காட்டி புலனின்பத்தில் வாழ்ந்து வாழ்வை வீணடிக்க விரும்புவோருக்கென ஒரு விருந்தைப் படைத்துள்ளனர் பாகுபலியின் தயாரிப்பாளர்கள். உண்மையில் ஆர்வம் கொண்டு ஆன்மீகத்தில் வாழ்ந்து வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள விரும்புவோருக்கு ஒரு மாபெரும் விருந்தை, ஒப்பிடவியலா விருந்தை, மஹாபாரதத்தின் வடிவில் படைத்துள்ளார் வியாசர். எதை ஏற்பது என்பது நமது கையில் உள்ளது.
குறைந்தபட்சம் ஆன்மீக வாழ்வில் ஆர்வம் கொண்டுள்ள எமது பகவத் தரிசன வாசகர்களாவது உண்மையை நாடிச் செல்ல வேண்டும் என்று யாம் விரும்புகிறோம். பிரச்சனை என்னவெனில், பெரும்பாலான வாசகர்கள்கூட எனக்கு இரண்டும் வேண்டும்” என்று கேட்கின்றனர். உண்மையில், புலனின்பத்தில் ஆர்வம் கொண்டுள்ள மக்களும் படிப்படியாக ஆன்மீகத்தில் உயர்வு பெற்ற நிலையை அடைவதற்கான வழியை வேத சாஸ்திரங்கள் அமைத்துள்ளன. அத்தகைய வழிகளில் ஒன்றுதான் மஹாபாரதம். மஹாபாரதத்தில் என்ன இல்லை? வீர தீர சாகசங்களைக் காட்டும் சண்டைக் காட்சிகள், நாயகன் நாயகியிடம் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள், மனதை நெகிழ வைக்கும் சென்டிமெண்ட் காட்சிகள், திகிலூட்டும் சஸ்பென்ஸ் காட்சிகள், வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், நல்வழியை எடுத்துரைக்கும் அறிவுரைக் காட்சிகள் என இன்றைய திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துக் காட்சிகளையும், இன்றைய மக்களின் கற்பனைக்குத் துளியும் எட்டாத அளவில் உண்மைச் சம்பவங்களைக் கொண்டு, வியாசதேவர் பல மடங்கு திறம்பட அமைத்துள்ளார்.
நவீன காலத்தின் நாஸ்திக கல்வியினால் அறிவை இழந்துள்ள இன்றைய மக்கள் பலர் மஹாபாரதத்தையும் கற்பனைக் கதை என்று முட்டாள் தனமாக நினைக்கலாம். நினைப்பவர்கள் நினைக்கட்டும். எத்தனை ஆயிரம் மக்கள் கற்பனை என்று நினைத்தாலும் உண்மை ஒருபோதும் கற்பனையாகி விடாது. இதி என்றால் இவ்வாறு” என்றும், ஹாஸ என்றால் நிகழ்ந்தது” என்றும் பொருள்படும். அதன்படி, இதிஹாஸம் என்றால் இவ்வாறு நிகழ்ந்தது” என்று பொருள். அதாவது, வரலாற்றுச் சம்பவங்களை உள்ளது உள்ளபடி எடுத்துரைப்பதே இதிஹாஸம், இங்கே கற்பனைக்கு இடமில்லை. (இது குறித்து, மேலும் விவரங்களைப் பெற, மஹாபாரதம் நம்பக்கூடியதா என்ற பெயரில் யாம் எழுதிய கட்டுரையை இணையதளத்தில் படிக்கவும், நவம்பர்-2013.)
மனக் களங்கமும் தூய்மையும்
திரைப்படங்கள், மஹாபாரதம் ஆகிய இரண்டிலும் பல்சுவைக் காட்சிகள் இருக்கின்றன என்பதையும், மஹாபாரதத்தில் அக்காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக இருக்கின்றன என்பதையும் கேட்கும் சிலர், நான் வடை பாயசத்துடன் கூடிய பெரிய விருந்தையும் (மஹாபாரதம்) சாப்பிடுகிறேன், அவ்வப்போது சில எளிமையான விருந்தையும் (பாகுபலி) சாப்பிட்டுக்கொள்கிறேன்,” என்று கூறலாம். ஆனால், பிரச்சனை என்னவெனில், திரைப்படங்களில் மஹாபாரதம் போன்றே பல்சுவை விருந்து கிடைத்தால்கூட, அவை மக்களின் மனதைக் களங்கப்படுத்துபவை. மனதில் காமத்தையும் கோபத்தையும் பேராசையையும் ஊட்டி நரகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவை. மறுபுறம், திரைப்படங்களைப் போன்றே பல்சுவையுடன் தோன்றக்கூடிய மஹாபாரதம் மக்களின் மனதை தூய்மைப்படுத்தக்கூடியதும் மனதிலுள்ள காமம், கோபம், பேராசை முதலிய தீய குணங்களை அழித்து நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லக்கூடியதுமாக உள்ளது. இந்த முக்கிய வேறுபாட்டை நாம் அறிதல் அவசியம்.
போலியான நாயகனும் உண்மையான நாயகனும்
பாகுபலியின் நாயகன் ஒரே சமயத்தில் மூன்று அம்புகளை ஏவுகிறார், மஹாபாரதத்தின் நாயகர்களோ ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கில் அம்புகளை ஏவுகின்றனர். மஹாபாரத வீரர்களின் சாகச காட்சிகள் கலி யுக மக்களால் கற்பனைகூட செய்ய முடியாதவை. மஹாபாரத போரில் மடிந்த மொத்த சேனைகளின் எண்ணிக்கை 18 அக்குரோணி. ஓர் அக்குரோணி என்பது 21,870 தேர்களையும், 21,870 யானைகளையும், 65,610 குதிரைகளையும், 1,09,350 படை வீரர்களையும் உள்ளடக்கியது. ஒரு சிலரைத் தவிர 18 அக்குரோணியில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். போரில் பங்கு கொண்ட மாவீரர்களில், அர்ஜுனன், பீமன், பீஷ்மர் முதலியோர் தனிப்பட்ட முறையில் பல அக்குரோணி படைகளைக் கொன்று குவித்தனர். அவர்கள் அல்லவா உண்மையான நாயகர்கள்!
பீமனின் கர்ஜனையைக் கேட்டு யானைகளுக்கும் குறைப் பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன, அர்ஜுனனுடைய காண்டீபத்தின் ஒலி பல மைல் தூரத்திற்கு வீரர்களின் மத்தியில் அச்சத்தைக் கிளப்பியது. இவர்கள் உண்மையான நாயகர்கள், இவர்களின் சாகசங்கள் உண்மையாக நிகழ்ந்தவை. செட்டிங் போட்டு நிகழ்ந்தவையோ, விஷுவல் கிராபிக்ஸில் காட்டப்பட்டவையோ அன்று. பாகுபலியின் வீரர்கள் படத்தில் வருவதுபோல ஒரேயொரு முறை நிஜத்தில் உயரே இருந்து குதித்தால், கை, கால், முதுகு என அனைத்தும் உடைந்து விடும். பீமன் குதித்தாலோ தரை தான் உடையும். உலகிலுள்ள நாம் அனைவரும் யாருக்காவது ரசிகர்களாக இருக்க வேண்டியது அவசியமாகப்படுகிறது. நாம் ஏன் உண்மையான நாயகர்களுக்கு ரசிகர்களாக இருக்கக் கூடாது?
தற்காலிகமும் நிரந்தரமும்
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு சில கேமரா தந்திரங்கள் திரைப்படங்களில் காட்டப்படும்போது, மக்கள் அதனை ஆச்சரியமாக நினைத்தனர். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அடிப்படை கிராபிக்ஸ் வந்தபோது, அதை ஆச்சரியமாகப் பார்த்தனர். தற்போது அதன் அடுத்த பரிமாணம், விஷுவல் கிராபிக்ஸ். இதுவும் இன்னும் சில வருடத்தில் மாறிவிடும். நேற்றைய மக்கள் பிரமிப்புடன் பார்த்த காட்சிகள் இன்றைய மக்களுக்கு நகைச்சுவைக் காட்சிகளாகத் தெரிகின்றன. அதுபோலவே, தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்றைய பாகுபலியும் நாளை நிச்சயம் தோற்கடிக்கப்பட்டதாகவே திகழும்.
ஒரு 50 வருடம் கழிந்துவிட்டால் மக்கள் அனைவரும் பாகுபலியை ஏறக்குறைய முற்றிலுமாக மறந்துவிடுவர். ஆனால் 5,000 ஆண்டுகளைக் கடந்து மஹாபாரதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பதை அனைவரும் அறிவர். இராமாயணம் நிகழ்ந்து பல இலட்சம் வருடங்கள் கடந்து விட்டன. இன்றும் மக்கள் அதனை மறக்கவில்லை. இன்னும் பல இலட்சம் வருடம் கடந்தாலும் மஹாபாரதமும் இராமாயணமும் மறையப் போவதில்லை. நாம் ஏன் நிரந்தரமான அத்தகு சாஸ்திரங்களில் ஆர்வம் காட்டக் கூடாது? குழந்தைகளை ஆர்வத்துடன் பாகுபலிக்குக் கூட்டிச் செல்லும் பெற்றோர்கள், அவர்களை மஹாபாரதம், இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் முதலியவற்றை நோக்கி ஏன் அழைத்து வரக் கூடாது?
பாகுபலியின் தயாரிப்பாளருக்குக் கிடைத்த இலாபத்தைப் பார்த்து, ஒரு சிலர் மஹாபாரதத்தையும் இராமாயணத்தையும் திரைப்படமாக எடுக்க முனைகின்றனர். அவர்கள் அத்திரைப்படங்களை உள்ளது உள்ளபடி நேர்மையான மனதுடன் எடுத்தால், நிச்சயம் அது மாபெரும் சேவையாக அமையலாம். ஆயினும், பெரும்பாலும் இதிகாச திரைப்படங்களை எடுப்பவர்கள் (எந்த காரணமும் இன்றி) அவற்றில் தமது கற்பனைகளைச் சொருகி இதிகாசத்தின் நோக்கத்தைச் சிதறடித்து விடுகின்றனர். சமீபத்தில் மஹாபாரதம் என்ற பெயரில் விஜய் டிவியில் வெளிவந்த நாடகம் அதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். (இதுகுறித்து, மேலும் அறிய மஹாபாரதமா, மஹா அபத்தமா? என்ற பெயரில் யாம் எழுதிய கட்டுரையை இணைய தளத்தில் படிக்கவும், நவம்பர்-2014.)
மஹாபாரதத்தின் நீதி கருத்துகள்
மஹாபாரதம் நீதிக் கருத்துகளின் பொக்கிஷம், திரைப்படங்களில் ஆங்காங்கே வரும் ஒன்றிரண்டு பஞ்ச் டயலாக்குகளைக் கேட்டு பரவசமடையும் ரசிகர்கள் மஹாபாரதத்தை அணுகினால், ஆயிரக்கணக்கான பஞ்ச் டயலாக்குகளைப் பெற முடியும். மஹாபாரதத்தில் எல்லாத் தரப்பட்ட மக்களுக்கும் உரித்தான அறிவுரைகள் எண்ணற்ற அளவில் புதைந்து கிடக்கின்றன. அரசருக்கான அறிவுரைகள், அரசியற்கான அறிவுரைகள், அமைச்சருக்கான அறிவுரைகள், பெண்களுக்கான அறிவுரைகள், குழந்தைகளுக்கான அறிவுரைகள், விவசாயிகளுக்கான அறிவுரைகள், தொழிலாளர்களுக்கான அறிவுரைகள், தந்தைக்கான அறிவுரைகள், தாய்க்கான அறிவுரைகள், மகனுக்கான அறிவுரைகள் என நம்முடைய குடும்ப சமுதாய நிலைக்கேற்ற அறிவுரைகள் மஹாபாரதத்தில் நிறைய உள்ளன.
பாரதம் வழங்கும் பக்தி
எல்லாவற்றிற்கும் மேலாக, மஹாபாரதம் நமக்கு வாழ்வின் இறுதிக் குறிக்கோளைப் பற்றியும் அதை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றியும் வழிகாட்டுகிறது. துன்பம் நிறைந்த தற்காலிகமான இந்த உலகத்தை விட்டு இன்பமயமான நிரந்தரமான பகவானின் உலகை அடைவதே மனித வாழ்வின் நோக்கமாகும். இதனை நாம் கிருஷ்ண பக்தியின் மூலமாக அடைய முடியும். அந்த பக்தித் தொண்டே மஹாபாரதத்தின் சாரமாகும். அதை மையமாக வைத்தே ஒட்டுமொத்த மஹாபாரதமும் இயற்றப்பட்டுள்ளது. தூய பக்தர்களாக வாழ்ந்த பாண்டவர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் பகவான் கிருஷ்ணரால் காப்பாற்றப்பட்டனர். பக்தர்களுக்கு ஒருபோதும் அழிவில்லை என்பது மஹாபாரதத்தின் ஒரு முக்கியப் பாடமாகும். மஹாபாரதத்தின் மிக முக்கிய பகுதியான பகவத் கீதை வேத ஞானத்தின் மணி மகுடமாக வாழ்வைப் புரிந்து கொள்ள விரும்பும் அறிஞர்களுக்கு அறிவு விருந்தாகத் திகழ்கின்றது.
பாகுபலி குறித்து பாகவதம் கூறும் தகவல்
மனித வாழ்வின் நோக்கத்தை உணர்ந்தவர்கள் அந்த நோக்கத்தை நோக்கி தங்களது எல்லாச் சக்திகளையும் நேரத்தையும் செலவிடுவர். அவர்கள் தங்களது வாழ்வின் கண நேரத்தையும் வீணாகக் கழிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். நாம் நம்முடைய தற்போதைய நிலையில் அத்தகைய உயர்ந்த ஸ்தானத்தில் இல்லை என்றாலும்கூட, நம்முடைய இலக்கு அதனை நோக்கியே இருக்க வேண்டும். அதற்காகத்தானே நாம் ஹரே கிருஷ்ண மந்திரத்தைச் உச்சரிக்கிறோம், கோயிலுக்குச் செல்கிறோம், எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். எனவே, கிருஷ்ண பக்தியில் ஆர்வமுடன் இருப்பவர்கள், பக்திக்குப் புறம்பான காரியங்களில் கழிக்கப்படும் நேரமும் சக்தியும் விரயமானவை என்பதை உணர்ந்தவர்களாக இருப்பர். ஸ்ரீமத் பாகவதம் (1.2.8) கூறுகிறது,
தர்ம: ஸ்வனுஷ்டித: பும்ஸாம்
விஷ்வக்ஷேன-கதாஸு ய:
நோத்பாதயேத் யதி ரதிம்
ஷ்ரம ஏவ ஹி கேவலம்
அதாவது, நாம் நமது கடமைகளை முறையாகச் செய்தால்கூட, அச்செயல்கள் கிருஷ்ண பக்தியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லாவிடில், அவை வெறும் கால விரயமே. கிருஷ்ண பக்தியைப் பெறாவிடில், கடமைகளே கால விரயம் என்று கூறப்படுகையில், பாகுபலியைப் பற்றி என்ன சொல்வது? நேரமும் விரயம், பணமும் விரயம் அனைத்தும் விரயம்.
ஒரு சில மக்கள் கலைஞர்களையும் தொழில் நுட்பத்தையும் புகழலாம். ஆனால், அவர்களைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் (2.3.19) கூறுகிறது,
ஷ்வ-விட்-வராஹோஷ்ட்ர-கரை:
ஸம்ஸ்துத: புருஷ: பஷு:
ந யத்-கர்ண-பதோபேதோ
ஜாது நாம கதாக்ரஜ:
அதாவது, கிருஷ்ண லீலைகளைக் கேட்பதில் ஈடுபடாத மக்களைப் போற்றுபவர்கள் நாய், பன்றி, ஒட்டகம் அல்லது கழுதையைப் போன்றவர்கள். இந்த உலக விஷயத்தைச் சார்ந்த நூல்களும் படைப்புகளும் ஸ்ரீமத் பாகவதத்தில் துளியும் போற்றப்படுவதில்லை. அத்தகு படைப்புகளைப் பற்றி, ஸ்ரீமத் பாகவதம் (1.5.10), காகங்கள் செல்லக்கூடிய குப்பைக் கூடங்கள் (வாயஸம் தீர்தம்) என்றும், அன்னப் பறவைகளைப் போன்றோர், மஹாபாரதம், இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் முதலிய சாஸ்திரங்களில் இன்பம் காண்பர் (ஹம்ஸா: நிரமந்தி) என்றும் கூறுகிறது. எனவே, பாகவதத்தின்படி, கிருஷ்ண பக்தர்களைப் பொருத்தவரையில் பாகுபலி மட்டுமல்ல, எல்லாத் திரைப்படங்களுமே காகங்களுக்கான குப்பைகளே. அவற்றைப் போற்றுவோர், நாய், பன்றி, ஒட்டகம் அல்லது கழுதையைப் போன்றவர்களே.
சாஸ்திரம் படிப்போம்
எனவே, நாம் நமது பொன்னான நேரத்தை சாஸ்திரங்களைப் படிப்பதில் கழிக்கலாம். கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன் என்பதை அறிவதில் மக்கள் காட்டிய ஆர்வத்தை அர்ஜுனன் பீஷ்மரை வீழ்த்தியது ஏன் என்பதை காட்டியிருந்தால், எப்படி இருந்திருக்கும்?
எமது குரல் பாகுபலியை எதிர்ப்பதற்காக அன்று. மாறாக, மஹாபாரதத்தையும் பாகவதத்தையும் நோக்கி மக்களை அழைத்து வருவதே எமது நோக்கம். குறைந்தபட்சம், ஆன்மீக வாழ்வில் அக்கறை கொண்டுள்ள பக்தர்களாவது இதுபோன்ற மனதை மோகிக்கும் விஷயங்களில் நேரத்தைச் செலவிடாமல் இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இன்று பாகுபலி மீது மோகம், நாளை 2.0 மீது மோகம்! நாளை மறுநாள் மற்றொரு படம் வரும். மாறிக் கொண்டேயிருக்கும் இத்தகு மோகங்கள் மறைந்து, பாகவதத்தையும் மஹாபாரதத்தையும் மக்கள் கையிலெடுப்பது எந்நாளோ!
இந்த ஜடவுலகத்தைச் சார்ந்த ஏதேனும் ஒரு விஷயம் விரும்பத்தக்கது என்று நாம் எண்ணினால், நம்மால் தூய பக்தியின் பாதையில் முன்னேற்றம் பெற இயலாது. இந்த உயரிய விஷயத்தைச் சற்று யோசித்துப் பாருங்கள். பொழுதுபோக்கு என்ற பெயரில் அரிதான மனிதப் பிறவியின் பொழுதினை வீணாகப் போக்கிக் கொண்டுள்ளோமே! மரண நேரத்தில் நாம் படித்த மஹாபாரதமும் ஸ்ரீமத் பாகவதமும்தான் நமக்கு உதவுமே தவிர, எத்தனை பாகுபலியைப் பார்த்திருந்தாலும் அவை உதவா. வாழ்வின் எத்தனை மணி நேரங்களை பொழுதுபோக்கு என்ற பெயரில் பொழுதைப் போக்கியிருப்போம்? யோசித்துப் பாருங்கள். இனியாவது பொழுதைப் பயனுள்ளதாகப் போக்குங்கள்.
என்ன சாஸ்திரம் படிப்பது?
- முதலில் மஹாபாரதத்தின் மிக முக்கியப் பகுதியான பகவத் கீதையைப் படிக்க வேண்டும். ஸ்ரீல பிரபுபாதரால் வழங்கப்பட்டுள்ள பகவத் கீதை உண்மையுருவில் என்னும் நூல் பகவத் கீதைக்கான தலைசிறந்த உரையாகும்.
- மஹாபாரதத்தின் மற்றுமொரு முக்கியக் கிளை, பகவான் கிருஷ்ணரால் ஆற்றப்பட்ட லீலைகளாகும். அவற்றை அறிய ஸ்ரீல பிரபுபாதரால் வழங்கப்பட்டுள்ள கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்னும் நூலைப் படிக்கவும்.
- மஹாபாரதம், இராமாயணம் உட்பட எல்லா புராண இதிகாசங்களின் சாரமான ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்கவும். ஸ்ரீல பிரபுபாதர் பாகவதத்திற்கு அளித்துள்ள விளக்கமான உரையைப் படித்தல் வேண்டும்.
- மேற்கூறிய சாஸ்திரங்களில் நல்ல பரிச்சயம் ஏற்பட்ட பின்னர், மஹாபாரதத்தை முறைப்படி முழுமையாகப் படிக்கவும். இஸ்கானில் மஹாபாரதத்திற்கான முழு பதிப்பு இல்லை. வாசகர்கள் இதர வைஷ்ணவ பதிப்பகத்தாரிடமிருந்து பெற்று படிக்கலாம்.