வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
நானும் கோயிலுக்குச் செல்பவன், இறை நம்பிக்கை கொண்டவன் என்ற எண்ணத்தில் வாழும் பலர், ஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானத்தைக்கூட அறிந்துகொள்ளாமல் வாழ்கின்றனர்.
விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும்
இந்த புவியில் பல விதமான எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளனர். தங்களின் சிந்தனை சக்திக்கு உட்பட்டு, உண்ணுதல், உறங்குதல், இனப்பெருக்கம் செய்தல், தற்காத்தல் போன்ற அடிப்படை காரியங்களை மட்டுமே இலக்காக வைத்து வாழ்பவர்கள் பெரும்பாலும் வாழ்வின் அர்த்தத்தைப் பற்றிய தேடுதல் இல்லாதவர்கள். மற்றொரு வகையினர், மேற்கூறிய அடிப்படையான காரியங்களைத் தாண்டி, ஞானத்தினை தேடும் எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் விலங்குகளைப் போன்று பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உப உற்பத்தி செய்து, வீழ்ந்து, அழிந்து போய்விட விருப்பம் கொண்டவர்கள் அல்ல. இவர்களை பகுத்தறிவாளர்கள் (நாத்திகர்கள் அல்ல) என்று அழைக்கலாம். பகுத்தறிவாளர்கள் பொதுவாக இரண்டு வகைபடுவர்: (1) தங்களது துன்பங்களுக்கு விடை தேடி, விடுதலை தேடி, ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள்; (2) நிரந்தர தீர்வினை எதிர்பார்த்து துன்பங்களின் மூலத்தைத் தேடிடும் மெய்ஞானிகள் (ஆன்மீகவாதிகள்).
விஞ்ஞானிகள் சாதனையாளர்களா?
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் உதவியுடன் அதே பஞ்ச பூதங்களாலான மனித உடலினை நோயற்றதாக மாற்றுவதற்கு விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர், ஆட்கொல்லி நோய் களைத் தீர்ப்பதற்கு முயல்கின்றனர், மரணமில்லாத பெருவாழ்வு வாழ மருந்தினைத் தேடுகின்றனர், இன்பமாய் வாழ்ந்திட பல விஞ்ஞானக் கருவிகளை கண்டுபிடிக்கின்றனர், தாங்கள் மரணித்தாலும் மரணத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக இரவும் பகலும் ஒவ்வொரு விநாடியும் தங்களது இன்பத்தினைக்கூட இரண்டாம் தரமாக வைத்து உழைத்திடும் இந்த விஞ்ஞானிகள் நிச்சயம் கவனிக்கத் தக்கவர்கள். தங்களிடம் இருந்த சித்திகளினால் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டுமே கிடைத்த பல வசதிகளை தங்களின் தொழில் நுட்பங்களால் இவர்கள் சாதாரண மக்களும் பெற்றிட உதவியுள்ளனர். நடமாடும் கடவுள்களாக பார்க்கப்படும் மருத்துவர்கள், செவிலித்தாய், ஆகாயத் தினை வலம் வரும் விஞ்ஞானிகள் என்று
இவர்களில் எத்தனையோ வகையினர் உள்ளனர்.
இவர்கள் உண்மையான சாதனை யாளர்களா? பல மைல் கல்லினைக் கடந்தவர்களா? இவர்களின் விஞ்ஞான வளர்ச்சி மக்களுக்கு உண்மையான சந்தோஷத்தினைக் கொடுக்கின்றதா? மக்கள் தங்கள் உணவினை எளிதாக பெறுகின்றனரா? குடிநீர் தட்டுப்பாடின்றி, வரியின்றி கிடைக்கின்றதா? மருத்துவ வளர்ச்சி உண்மையிலேயே மரணத்தினை நிறுத்தி விட்டதா? மாறிக் கொண்டே இருக்கின்ற இந்த உலகில், மாறும் இந்த உடலினை, மாறாததாக செய்ய முயலும் இந்த விஞ்ஞானிகளின் வியாக்கியானத்தினை எவ்வாறு பாராட்டுவது? மாறிக் கொண்டிருப்பதே இந்த ஜடவுலகின் தன்மை; இரவு, பகல் என்னும் மாற்றம், நான்கு பருவ காலங்கள் என்னும் மாற்றம், காலங்கள் செல்லச் செல்ல தளரும் உடல் மாற்றம் என பல மாற்றங்கள் மரணம் வரை உள்ளன. இன்னும் சொல்லப் போனால், தளர்ந்த, நொந்த, திராணி இல்லாத உடலில் இருப்பதை விட மரணித்து விடுவது எவ்வளவோ மேல் என்று உணர்பவர்கள் பலர்.
மாயையால் அறிவை இழந்தவர்கள்
வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்க்க ஜட விஞ்ஞானத்தைக் கொண்டு முயற்சி செய்யும் இந்த விஞ்ஞானிகள் விலங்குகளைப் போன்று வாழும் மனிதர்களைக் காட்டிலும் சிறந்தவர்களே. இருப்பினும், இவர்கள் மாயையினால் அறிவை இழந்தவர்கள் என்று பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் (7.15) அழைக்கப்படுகின்றனர் (மாயயாபஹ்ருத ஜ்ஞானா). இவர்கள் தங்களது அறிவை மாயையிடம் இழந்து நிற்பதால், எங்கு தேட வேண்டுமோ, எங்கு ஆராய்ச்சி புரிய வேண்டுமோ, அங்கு செய்யாமல், “இயலாது” என்று அறிந்தும் முயல்கின்றனர். காளை மாடு என்று தெரிந்த பின்னரும் ஆழாக்கு பால் கேட்டவனைப் போல, இன்றைய ஜட விஞ்ஞானிகள் வாழ்கின்றனர். புத்தம் புதிய நோய்களுக்கு இவர்கள் இடுகின்ற பெயர்களும், புயலுக்கு இடுகின்ற பெயர்களும் அறியாத மக்களிடம் இவர்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரலாம். ஆனால் இந்த ஜட விஞ்ஞானிகளால், மனிதர்களின் செயற்கையான தேவைகள் தினம்தினம் அதிகரித்த வண்ணம் உள்ளன, அவற்றை அடைய போராடுவதால் மனிதர்களின் வாழ்வும் வீணே கழிகின்றது.
வாழ்க்கை என்பது உலகம் முழுவதும் பெரும் போராட்டமாக மாறிவிட்டது. எளிய வாழ்வு, நிறைந்த இன்பம் என்பது மறைந்து விட்டது. இன்பத்தினை கடைகளில் தேடும் காலமாக ஆகிவிட்டது. செயற்கையான இன்பத்தின் பின் செல்வதால், வாழ்வின் அடிப்படைத் தேவைகளும் கானல் நீராக மாறிக் கொண்டுள்ளது. மனிதர்களின் நிலையே இவ்வாறு எனில், மற்ற உயிரினங்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. இயற்கை வளங்கள் பேராசையினால் கொள்ளை போகின்றன. எந்நேரமும் வெடிக்க தயார் நிலையில் உள்ள அணுகுண்டுகள், ஏதேனும் பிரச்சனை வந்தால் பெரும் அழிவினை உண்டாக்கக்கூடிய அணு உலைகள், தினந்தோறும் மக்களை அச்சுறுத்தி வரும் சந்தை நிலவரம் என எங்கும் ஜட விஞ்ஞானிகளின் ஆதிக்கத்தால் இ(து)ன்ப மயம்!
மெய்ஞானத்தைத் தேடுவோம்
செயற்கையான இன்பங்களைத் தேடி விஞ்ஞானிகளின் பின்னே அலைவதற்குப் பதிலாக, பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியினைப் பற்றி நினைக்க வேண்டும்; அதுவே வாழ்வின் அடிப்படைத் தேவை. அதற்குதான் மானிடப் பிறவி. மரணமில்லா வாழ்வினை விரும்பும் நாம் நமது தவறான அடையாளங் களை விட்டொழித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். உண்மை ஞானத்தினால் மரணமில்லா வாழ்வைப் பெற இயலும். அந்த ஞானமே மக்களை நிலையான இன்பத்திற்கு கொண்டு செல்லும். இன்பமாய் இருக்க வேண்டிய உயிரினங்கள், அந்த இன்பத்திற்காக வெளியுலகப் பொருட்களை நாடும் போதுதான் மேற்கூறிய விஞ்ஞானிகளால் அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். அந்த இன்பத்தினை அவர்கள் மெய்ஞான வழியில் தேடினால், எந்த உபகரணங்களின் உதவியும் இன்றி, மரணமில்லா பெருவாழ்வையும் நிலைத்த ஆனந்தத் தினையும் பெறலாம். அஃது ஒன்றும் புதியதாகப் பெறப்படும் விஷயம் அல்ல. நம்முடைய ஆனந்த வாழ்வினை நாம் இன்று மறந்துள்ளோம். அதனை உணருதலே மெய்ஞானம்.
உடல் சார்ந்த மத எண்ணங்கள்
பொதுவாக, கோயில்களுக்குச் சென்று வழிபடுவோர், அல்லது கானகம் சென்று தவம் புரிவோரை மெய்ஞானிகள் என்று நினைத்துக் கொள்கிறோம். மேலும், திரைப்படங்களில் காட்டப்படுவதை பக்தி என்று எண்ணி ஏமாறுகின்றனர் மக்கள். தங்களது சொந்த இன்பங்களுக்காக விரதங்கள் இருப்பதை பக்தி என்று எண்ணுகின்றனர். வாரத்தில் ஒரு குறிப்பிட்ட கிழமையில் தங்களது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது என்பது அநேகமாக அனைத்து மதங்களிலும் உள்ளது. முஸ்லீம் வெள்ளிக் கிழமை தொழுகைக்குச் செல்வதும், கிருஸ்துவன் ஞாயிற்றுக் கிழமையை ஆண்டவருக்கு செலவிடுவதும், இந்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் அருகிலுள்ள கோயிலுக்குச் செல்வதும் வழக்கம்; ஆனால் அதுவே தனது மார்கத்தின் நோக்கம் என்று எண்ணினால், அது சரியல்ல.
வெறுமனே, தனது மதம் சார்ந்த சடங்குகளை நிறைவேற்றுவது மதத்தின் நோக்கம் அன்று. இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் போன்றவை அனைத்தும் உடல் சார்ந்த அடையாளங்களே. அந்த அடையாளத்தினை இழக்காத வரை, தான் இந்த உடலல்ல என்பதை புரிந்துகொள்ளாதவரை உண்மையான ஆனந்தம் கிடைக்காது. ஒவ்வொருவரும் உடலுக்கு அப்பாற்பட்ட தேடுதலில் ஈடுபட வேண்டும்; அந்த தேடுதலின்படி வாழ வேண்டும்; உடலால் ஏற்படும் உறவுகள் எல்லாம் தற்காலிகமானவை என்பதை உணர்ந்து உடலின் உறவுகளுக்காக கதறக் கூடாது; உடலினுள் உள்ள ஆத்மாவே நான் என்பதை உணர வேண்டும்; ஜட வாழ்வின் மயக்கத்தில் சிக்கியுள்ளதால், இன்று இந்த உடல், நாளை வேறு உடல் என நான் மாற்றிக் கொண்டே இருக்கின்றேன் என்பதை உணர வேண்டும்; உடலுக்குத் தேவையான வஸ்துக்கள் வரும்போது எழும் இன்பத்திலிருந்தும், அவை நம்மை விட்டுச் செல்லும்போது எழும் துன்பத்திலிருந்தும் விடுபட வேண்டும்; இவையெல்லாம் செய்தால் மட்டுமே மெய்ஞானம் வெளிப்படும்.
எனவே, அவ்வப்போது கோயிலுக்குச் செல்பவர்களை மெய்ஞானிகள் என்று தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மெய்ஞானிகளும் கோயிலுக்குச் செல்பவர்கள்தான். ஆனால் கோயிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் மெய்ஞானிகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான மெய்ஞானிகள், இறைவனின் மீது தீராத பக்தி கொண்டு, அவருக்கு சேவை செய்வதே தங்களின் (ஆத்மாவின்) தர்மம் என்பதை உணர்ந்தவர்கள். இறைவனை வணங்கிடாத நாத்திகன், இறைவனை தனது சொந்த தேவைகளுக்காக வணங்கும் ஆத்திகன் ஆகிய இருவருமே அறியாமையில் உள்ளனர். நாம் இந்த உடல் அல்ல என்பதே எல்லா மதத்திலும் போதிக்கப்பட வேண்டிய பால பாடம். இதனை போதிக்காத, அதன்படி அறிவுருத்தாத மதங்கள் மக்களை நிச்சயம் காப்பாற்ற இயலாதவை; மக்களைக் காப்பதற்கான அவர்களின் முயற்சி பேதமையைக் காட்டுகிறது.
மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்ம ஞானம்
தன்னுடைய பிரிந்த சக்திகளான இந்த ஜீவாத்மாக்கள், ஜட வஸ்துக்களில் சிக்கி போராடுகின்றனர் என பகவத் கீதையில் (15.7) கிருஷ்ணர் கூறுகிறார். நாம் அனைவரும் இறைவனின் சக்திகள் என்பதை உணர வேண்டும். அதை விட்டுவிட்டு, நான் இந்து, நான் முஸ்லீம், நான் கிருஸ்துவன் என்று உடலை அடிப்படையாகக் கொண்ட மதத்தில் மூழ்கிவிடக் கூடாது. ஆனால் இன்றைய சமுதாயத்தில் உணவுக்காக மதங்களில் ஒன்று கூடுகின்றோமே ஒழிய, உணர்வினை மேம்படுத்துவதற்காக அல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவோர், மற்ற மதங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களைப் பற்றி ஆலோசிப்பதே இல்லை. பெரும்பாலான சூழ்நிலையில், எந்தவொரு முஸ்லீமும் பகவத் கீதையைப் பற்றி பேசத் தயாராக இல்லை; கிருஸ்துவர்களும் கீதையை விவாதிக்கத் தயாராக இல்லை, இந்துக்களும் பைபிள், குரானைப் பற்றி கலந்தாலோசிக்க விரும்புவதில்லை. மதங்களைத் தாண்டி அதிலுள்ள கருத்துகளைத் தெரிந்துகொள்ள பெரும்பாலான மக்கள் தயாராக இல்லை.
எனவே, ஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானத்தை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது–நாம் இந்த உடல்கள் அல்ல, ஆத்மா என்பதே அந்த ஞானம். நமக்கும் இந்த உடலுக்கும் உள்ள உறவு தற்காலிகமானதாகும், அறியாமையினால் நாம் நம்மை உடலாக எண்ணுகின்றோம். அந்த அறியாமையிலிருந்து விடுபட்டு ஞானத்தினை அறியும் நிலைக்கு வர வேண்டும். என்றும் மாறிக் கொண்டே இருக்கின்ற உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவரால், உண்மை பக்தியினை, ஜடக் களங்கங்கள் இல்லாத அந்த பக்தியினைப் புரிந்துகொள்ள இயலாது. கட்டுச் சோற்றினைக் கட்டிக் கொண்டு திருப்பதி, பழனி, மெக்கா, ஜெருசலேம் என சுற்றுவதால் மட்டும் யாரும் மெய்ஞானி ஆகி விட முடியாது.
ஆத்மாக்களான நாம் அனைவரும் கடவுளின் அம்சங்கள்; அதாவது, அவருக்கு சேவை செய்ய வேண்டியவர்கள். அந்த சேவையை மறந்துள்ள காரணத்தினால் இவ்வுலகில் பல உடல்களில் துன்பப்பட்டுக் கொண்டுள்ளோம் என்பதையும் உணர வேண்டும்.
ஆன்மீக வாழ்வின் இந்த அடிப்படை ஞானம், சம்பந்த ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. ஜீவன், பகவான், ஜட இயற்கை ஆகியவற்றிற்கு இடையிலுள்ள தொடர்பை ஒவ்வொரு ஜீவனும் உணர வேண்டும். இதில் மதச் சாயம் எதுவும் பூசக் கூடாது. தன்னுணர்வை நோக்கி அடியெடுத்து வைத்தல் உத்தமம்; அவ்வாறு வருபவன் பாக்கியவான், அரிதானவன் என்று கிருஷ்ணர் கூறுகின்றார்,
மேலும், ஒவ்வொரு ஜீவனும் இறைவனிடம் தனக்குள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறை பக்தி யோகம், அல்லது இறைவனுக்கு அன்புடன் செய்யப்படும் தொண்டு எனப்படுகிறது. தன்னிடம் சரணடையும் ஜீவன்களுக்கான பொறுப்பினை தாமே ஏற்றுக் கொள்வதாக கிருஷ்ணர் கீதையில் (18.66) உறுதியளிக்கின்றார். எனவே, இனி என்ன தயக்கம்? ஜடவுடலின் அடையாளங்களையும் தேவைகளையும் விட்டுவிட்டு கிருஷ்ணரைச் சரணடைவோம், தன்னை உணர்வோம்.