கிருஷ்ணரிடமிருந்து பெறப்படும் பக்குவ அறிவு
வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
மானிடராய் பிறந்து மானிடராய் வாழாமல் மிருகமாக வாழும் மக்கள், அறியாமையினால் அவதியுற்று அல்லல்படுகின்றனர். அறியாமையை நீக்க அறிவு அவசியம், ஆனால் அறிவினை எங்கு அடைவது என்று அறியாமல் அங்குமிங்கும் அலையும் அன்பர்களுக்கு இதோ இங்கு பக்குவமான அறிவின் பாதை விளக்கப்படுகிறது.
ஸ்ரீ பகவான் உவாச
இமம் விவஸ்வதே யோகம்
ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ
மனுர் இக்ஷ்வாகவே ’ப்ரவீத்
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரியதேவனான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத் தந்தையான மனுவிற்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர். (பகவத் கீதை 4.1)
ஆறு ஐஸ்வர்யங்கள் பொருந்தியவர்
பகவத் கீதை, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளால் (பகவானால்) உரைக்கப்பட்டது. செல்வச் செழுமையுடன் அதிர்ஷ்டம் வாய்ந்த மனிதன், பாக்ய-வான் என்று கருதப்படுகிறான். பாக்ய என்ற சொல்லை அனைவரும் அறிவர், இது பகவானில் உள்ள பக என்னும் மூலத்திலிருந்து வருகிறது. பக என்னும் சொல், செல்வம், வலிமை, புகழ், அழகு, அறிவு, துறவு ஆகிய ஆறுவிதமான ஐஸ்வர்யங்களைக் குறிக்கின்றது. ஒருவனிடம் மிகுந்த செல்வம் இருந்தால் அவன் மக்களை வசீகரிக்கிறான். அதுபோலவே, பலசாலியும் வசீகரமான வனாகக் கருதப்படுகிறான். இப்படியே புகழ்மிக்கவன், அழகன், அறிஞன், துறவி என இவர்களெல்லாரும் வசீகர முள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். இவ்வாறு, இப்பௌதிக உலகில் சிலர் செல்வந்தராகவும் சிலர் வலிமை மிக்கவராகவும் சிலர் பண்டிதராகவும் சிலர் புகழ்பெற்றவராகவும் சிலர் அழகானவராகவும் சிலர் துறந்தவராகவும் இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் அந்த ஐஸ்வர்யத்தின் மிகச்சிறிய பகுதியையே பெற்றுள்ளனர். ஒருவன் மற்றவர்களை விட செல்வந்தனாக இருக்கலாம், ஆனால் எவருமே அனைத்து செல்வம், அனைத்து பலம், என அனைத்தையும் உடையவனாக தன்னைக் கூறிக் கொள்ள முடியாது. எவ்வளவு பலம் பொருந்திய வனாயினும் அவன் ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளான். அதனை மீறி அவன் செல்ல முடியாது. ஆகவே இந்த ஆறு ஐஸ்வர்யங்களையும் ஒரே சமயத்தில் அளவிடற்கரிய அளவில் பெற்றிருக்கும் ஒருவரை காண்பதரிது. இந்த ஸ்லோகத்தில் பகவான் உவாச என்று கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணரே இந்த ஐஸ்வர்யங்களை முழுமையாக பெற்றுள்ளார் என்பதே இதன் பொருள். அதனை அவர் இப்பூமியில் தோன்றிய போது நிரூபித்தார். அவரது செல்வம் ஈடு இணையற்றதாக இருந்தது.
குறைவான வாழ்நாள்
தற்போதைய சூழ்நிலையில், ஒருவர் தனது குடும்பத்திற்கு நல்ல வீடு, துணி மணி, நல்ல சாப்பாடு ஆகியவற்றை கொடுக்க முடிந்தாலே, அவன் வெற்றி பெற்ற மனிதனாகக் கருதப்படுகிறான். ஆனால், இவ்வாறு குடும்பத்தைப் பராமரிப்பது என்பது நாய்களாலும் பூனைகளாலும்கூடச் செய்யப்படுகின்றது; அவையும் குடும்பம், மனைவி, பிள்ளைகள் என்று தங்களது நிலைக்கு ஏற்றாற் போல பராமரிக்கின்றன. உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல் ஆகிய நான்கும் அத்தியாவசியத் தேவைகளாகும். இந்த யுகம் மிகவும் வீழ்ச்சியுற்று இருப்பதால், வாழ்வின் அத்தகு அத்தியாவசியத் தேவைகள்கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். உணவின்றி மக்கள் பசியினால் வருந்துகின்றனர், உறக்கத்தைப் பற்றி கூறவும் வேண்டுமோ? பெண்களும் ஆண்களும் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்வதில்லை. யாரும் பாதுகாப்பாக இல்லை, அடுத்த நொடியில் என்ன நேரும் என்று எவரும் அறிவதில்லை. இதுவே கலி யுகம் எனப்படும்.
கலி யுகம் எவ்வாறு இருக்கும் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (1.1.10) கூறப்பட்டுள்ளது:
ப்ராயேணால்பாயுஷ: ஷப்ய
கலாவ் அஸ்மின் யுகே ஜனா:
மந்தா: ஸுமந்த-மதயோ
மந்த-பாக்யா ஹி உபத்ருதா:
இக்கலி யுகத்தில் மக்கள் குறுகிய காலமே வாழ்கின்றனர். வாழ்நாளின் கால அளவு குறைந்து கொண்டே போகிறது. நமது பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் நூறு வருடங்கள் வாழ்ந்தனர், தந்தை எண்பது வருடங்கள் வரை வாழ்ந்திருப்பார், நாம் அதை விடக் குறுகிய வருடமே வாழ்வோம் என்பதை அனைவரும் அறிவர். இவ்வாறு காலப்போக்கில் வாழ்நாள் இருபது வருடங்களாகக் குறைந்துவிடும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன், இருபது அல்லது முப்பது வருடங்கள் வாழ்ந்தாலே மிகவும் வயோதிகனாகக் கருதப்படுவான், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
மகிழ்ச்சியாக வாழ்வோம்
உணவோ உறக்கமோயின்றி எவ்வாறு ஒருவன் வாழ முடியும். இவை மிகவும் அத்தியாவசியமானவை. அன்னாத் பவந்தி பூதானி (பகவத் கீதை 3.14), போதுமான உணவுத் தானியங்களால் மக்களும் விலங்குகளும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். குறிப்பாக, இந்தியாவை எடுத்துக் கொண்டால் கொழுத்த நாய், பூனை, அல்லது பசுவைக் காண்பது அரிதாக உள்ளது. ஏனெனில், அவற்றிற்குத் தகுந்த உணவு அளிக்கப்படுவதில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை உண்ணாநோன்பிருந்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜபிக்கச் சொல்லவில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத எதையும் கிருஷ்ணர் கூற மாட்டார். நன்றாக சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்து ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் செய்து வாழ்க்கையை பக்குவமுடையதாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்றே கிருஷ்ணர் கூறுகிறார். அதுவே கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானது அல்ல, எல்லாருக்கும் நன்மை பயப்பதாகும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம், மகிழ்ச்சியின்றி அமைதியான வாழ்வு சாத்தியமில்லை.
பக்குவமான ஞானம்
ஆகையால், அனைத்திலும் பூரணமாக விளங்கும் பகவானிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பிறழாமல், குற்றங்களின்றி முழுமுதற் கடவுளிடமிருந்து கேட்க முயற்சி செய்யுங்கள். கட்டுண்ட வாழ்வில் நான்கு குறைபாடுகள் உள்ளன: தவறு செய்தல், மாயையின் வசப்படுதல், ஏமாற்றும் தன்மை, மற்றும் பக்குவமற்ற புலன்கள் (பிரமா, பிரமாத, விப்ரலிப்சா, மற்றும் கரணாபாடவ). நமது பௌதிக வாழ்வில் நாம் அனைவரும் இந்த குறைபாடுகளால் களங்கமடைந்துள்ளோம். இந்த குறை பாடுகளினால் களங்கமுற்றவர்கள் பக்குவ மான ஞானத்தை அளிக்க முடியாது. அது சாத்தியமாகாது. பக்குவமற்ற புலன்களை கொண்டு எவ்வாறு பக்குவமான ஞானத்தை திரட்ட முடியும்? பக்குவமற்ற புலன்களைக் கொண்டோர், ’ஒரு வேளை இருந்திருக்கலாம், ’அநேகமாக இருக்கலாம் என்று கூற முடியுமே தவிர, இஃது இவ்வாறே நேர்ந்தது என்று வேதங் களில் இருப்பதுபோல உறுதியாகக் கூற முடியாது.
வேதங்களில் பல்வேறு விதமான உயிரினங்களின் எண்ணிக்கை துல்லிய மாக கொடுக்கப்பட்டுள்ளது. ஜலஜா நவ-லக்ஷானி ஸ்தாவரா லக்ஷ-விம்ஷதி: கிருமயோ ருத்ர-சாங்க்யகா: பக்ஷினாம் தஷ-லக்ஷணம். நீர்வாழ்வன, தாவரங் கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மனிதர்கள் உட்பட 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்பது இலட்சம் நீர்வாழ்வனவும், இருபது இலட்சம் தாவர வகைகளும், பதினோரு இலட்சம் பூச்சி இனங்களும் பத்து இலட்சம் பறவை இனங்களும், முப்பது இலட்சம் விலங்கு இனங்களும் நான்கு இலட்சம் மனித இனத்தவரும் என்று துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே வேத ஞானம். வேத ஞானமே பக்குவ ஞானம். இந்த ஞானம், மிகவும் பக்குவமானது, அழிவற்றது. அவ்யயம் என்றால் மாறுபாடுகளும் அழிவும் அற்ற ஒன்று. அதுவே பக்குவ ஞானம். ஆகையால் பக்குவ ஞானம் பெற விரும்புவோர் கிருஷ்ணரிடமிருந்தே கேட்க வேண்டும்.
மறுபிறவி
ஸ்ரீ பகவான் உவாச என்று இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்வம், புகழ், அழகு, அறிவு, வலிமை மற்றும் துறவு ஆகியவற்றை முழுமையாக உடையவர் என்பதால், கிருஷ்ணர் இங்கு பகவான் என்று அழைக்கப்படுகிறார். ஒரு கட்டிடத்தை நாம் கட்டினாலே அதன்மீது மிகவும் பற்றுடையவர்களாக ஆகி விடுகிறோம். ஆனால் கிருஷ்ணரோ இந்த மொத்த பிரபஞ்சத்தையும் படைத்தவர். இருந்தாலும், அவர் இதன்மீது உரிமை கொண்டாடுவதில்லை. இந்த ஜடவுலகை அனுபவிக்க விரும்பும் உயிர்வாழிகளுக்கு இதனைக் கொடுத்துவிடுகிறார்.
பிரம்மாவிலிருந்து தொடங்கி எறும்பு வரை எல்லாரும் அனுபவிக்கின்றனர். அதன் காரணத்தால் தங்களது சொந்த கர்ம பலன்களை உருவாக்கிக் கொள்கின்றனர். கர்மனா தைவ நேத்ரேன (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1) அத்தகு கர்ம பலன்களால் மற்றொரு உடல் கிடைக்கின்றது. அஃது எறும்பின் உடலாகவோ, பிரம்மாவின் உடலாகவோ, பூனையின் உடலாகவோ, அமெரிக்கனின் உடலாகவோ. இந்தியனின் உடலாகவோ, குரங்கின் உடலாகவோ எதுவாகவோ இருக்கலாம். ஆகவே எவரொருவர் புத்திசாலியோ, அவர் இந்த பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். தற்போது செல்வச் செழிப்பான அமெரிக்க உடலில் ஒருவன் இருக்கலாம், ஆனால் அடுத்த வாழ்வு என்ன என்பதை அவன் அறிவதில்லை. மக்கள் வருங்கால வாழ்விற்காக கல்வி கற்கின்றனர், ஆனால் அடுத்த வாழ்விற்காக தங்களைத் தயார் செய்கின்றனரா? மறுபிறவி உண்டா, இல்லையா என்பதைகூட அறியாமல் முட்டாள்களாக உள்ளனரே!
கிருஷ்ணரிடமிருந்து கேட்டல்
ஆகையால் நாம் பக்குவமான நபரான கிருஷ்ணரிடமிருந்து கேட்க வேண்டும். ஆத்மா இந்த உடலினுள் இருக்கும்போது குழந்தைப் பருவம், இளமை, முதுமை என்ற உடல் மாற்றங்களைக் கடந்து செல்வதைப் போலவே, மரணத்தின் போது வேறு உடலை ஏற்கிறான்” என்பதை தனது முதல் உபதேசமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் (2.13) கூறுகிறார். ஆன்மீக கல்வியின் ஆரம்பப் பாடம் இதுவே. நாம் இந்த உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாறுதல் அவசியம். ஆனால் எந்த ஒரு பல்கலைக்கழகமும் ஆத்மா எவ்வாறு ஓர் உடலிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகின்றது என்பதை பற்றியோ, அடுத்து கிடைக்கப்போகும் உடல் எம்மாதிரியானது என்பதை பற்றியோ கற்பிப்பதில்லை. இந்த விஞ்ஞானம் அங்கு இல்லை. ஆனால் இந்த உடல் மாற்றத்தை பற்றி அறியாமலிருப்பதே உண்மையான துன்பமாகும்.
பக்குவ ஞானத்தை பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து நாம் கேட்க வேண்டும். இதுவே முறையான வழிமுறை. உமக்கு உண்மையிலேயே பக்குவமான ஞானம் வேண்டுமெனில் கிருஷ்ணரிடமிருந்து மட்டுமே நீங்கள் கேட்க வேண்டும்.
பகவத் கீதை எல்லாருக்கும்
யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்
(பகவத் கீதை 4.7)
அவர் மிகக் கருணையுடன் இங்கு சுயமாக வந்து தமது உபதேசங்களை வழங்குகிறார். மேலும், பகவத் கீதையைப் போன்று தனது உபதேசங்கள் பதிவு செய்யப்படுவதற்கும் அவர் வழிவகுக்கின்றார். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பேசிய இந்த பகவத் கீதை, வியாசதேவரின் கருணையால் சஞ்சயனால் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வியாசதேவர் இந்த உரையாடலை மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக வைத்தார். மஹாபாரதம் என்றால் சிறப்பு வாய்ந்த இந்தியாவின் வரலாறு. இந்த பூலோகம் முழுவதுமே முன்பு பாரத வர்ஷம் என்று அழைக்கப்பட்டது. எனவே, மஹாபாரதம் என்பது இந்த முழு கிரகத்தின் (பூலோகத்தின்) வரலாறாகும். அனைத்து மனித வர்க்கத்தினருக்கும் அறிவு புகட்டுவதற்காக பகவத் கீதையானது மஹாபாரதத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டவர்களுக்கானது மட்டும் அல்ல. கிருஷ்ணரிடமிருந்து பக்குவமான ஞானத்தை பெற்று இன்புற்று வாழ்வதற்காக அனைவருக்காகவும் தொகுக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஒருவர் ஆனந்தமடைய விரும்பினால் கிருஷ்ணரது உபதேசங்களை ஏற்க வேண்டும். நாம் ஏற்கனவே வீழ்ச்சியுற்றவர்களாக உள்ளோம். இந்த வீழ்ச்சியுற்ற நிலையிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க வேண்டுமெனில், கிருஷ்ணரிடமிருந்து உபதேசத்தை ஏற்க வேண்டும். இதிலிருந்து சற்றும் பிறழாமல் இருக்க வேண்டும்; அயோக்கியத்தனமான வழியில் தான்தோன்றித்தனமாக பகவத் கீதைக்கு வியாக்கியானம் கொடுக்க முயற்சி செய்யக் கூடாது.
முதல் ஆன்மீக பாடம்
பலதரப்பட்ட உடலை உயிர்வாழிகளான நாம் ஏற்றிருந்தாலும், நாம் அனைவரும் ஆத்மாக்களே. இந்த உடல் ஓர் உடையைப் போன்றது என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. நான் இந்தியன் என்னும் உடையையும் நீங்கள் அமெரிக்கன் என்னும் உடையையும் அணிந்துள்ளீர் என்பதே வேறுபாடு. நான் இந்த உடலல்ல என்பதே ஆன்மீகத்தின் முதல் பாடம். பின்னரே ஆன்மீக அறிவு தொடங்குகின்றது. இல்லையெனில், ஆன்மீக ஞானத்திற்கான வாய்ப்பு இல்லை.
எவனொருவன் தன்னை இந்த உடல் என்று தவறாக அடையாளம் காண்கின்றானோ, அவன் ஒரு கொடூரமான விலங்காக கருதப்பட வேண்டும் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (10.84.13) கூறப்பட்டுள்ளது. இந்த மிருகத்தனமே உலகெங்கிலும் சென்று கொண்டிருக்கிறது. நான் அமெரிக்கன், இந்தியன், பிராமணன், சத்திரியன் என்று கூறுவதெல்லாம் வெறும் அயோக்கியத்தனமே. இதைக் கடந்து செல்லும் போதே ஆன்மீக ஞானம் தொடங்குகின்றது. அதுவே பக்தி யோகம். இந்த பக்தி யோக முறையை புரிந்துகொள்வதற்கு அஹம் ப்ரஹ்மாஸ்மி, நான் ஆன்மீக ஆத்மா என்பதை உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், பக்தி யோகத்தினால் மட்டுமே ஆன்மீகத் தளத்திற்கு வர முடியும்.
கிருஷ்ண பக்தராக மாறுங்கள்
வேதப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணங்கள் மற்றும் ஆஸ்ரமங்களான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பிரம்மசாரி, கிருஹஸ்தன், வானபிரஸ்தன், சந்நியாசி போன்ற உடலளவு அடையாளங்கள் அனைத்தையும் பகவான் சைதன்ய மஹாபிரபு நிராகரிக்கிறார். ஒருவரது நிலை என்னவாக இருக்க வேண்டு மென்று அவர் கூறுகிறார்: கோபி-பர்து: பத-கமலயோர் தாஸ-தாஸானுதாஸ: (சைதன்ய சரிதாம்ருதம், மத்ய லீலை 13.80), கோபியர்களது தலைவனின் நித்ய சேவகன்,” அதாவது, கிருஷ்ணரது சேவகன். மேலும், ஜீவேர ஸ்வரூப ஹயா நித்ய-கிருஷ்ண-தாஸ (சைதன்ய சரிதாம்ருதம், மத்ய லீலை 20.108) என்ற கூற்றின் மூலம், ஜீவன்களின் உண்மையான அடையாளம், கிருஷ்ணருக்கு நித்தியமாக சேவை புரிவதே” என்பதை அவர் பிரச்சாரம் செய்தார்.
கிருஷ்ணர் இங்கு வந்ததை பயன்படுத்திக் கொண்டு அவர் விட்டுச் சென்ற பகவத் கீதையை படித்து வாழ்க்கையை பக்குவப்படுத்தி கொள்வோமாக. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். இஃது ஒரு போலியான இயக்கம் அல்ல, மாறாக விஞ்ஞானப் பூர்வமான இயக்கம். வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் இவ்வாய்ப்பினை பின்பற்றி நன்மை அடைகின்றனர், ஏன் இந்திய இளைஞர்கள் இதை எடுத்துக்கொள்ள தயங்குகின்றனர்! இத்தகு தயக்கம் அவர்களுக்கு நல்ல தல்ல. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை மும்முரமாக பரப்புவோம். அதன் மூலம் துயருற்றிருக்கும் மனித சமுதாயத்தை மீட்க முடியும், இதுவே எமது நோக்கம். மக்கள் துன்புறுவதற்கான காரணம் அறியாமையே. தேவையான அனைத்தும் இங்கு நிறைவாகவே உள்ளது. அயோக்கியர்களாலும் திருடர்களின் தவறான வழிநடத்துதலாலும் மட்டுமே மக்கள் துன்புறுகின்றனர். ஆகையால் நீங்கள் இந்த கிருஷ்ண பக்தியில் பக்குவமுடையவர்களாகி, நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்வு வெற்றிகரமாக அமையும்.
மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண!