பகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

நம்முடைய சமுதாயத்தில் அண்டிக் கிடக்கும் பல்வேறு நம்பிக்கைகளில் ஒன்று: பகவத் கீதையை வீட்டில் வைத்து படித்தல் கூடாது என்பதாகும். இஃது உண்மையான நம்பிக்கையா, மூட நம்பிக்கையா? விரிவாகக் காண்போம்.

வீட்டில் வைத்து படிக்கலாமா?

உலக மக்களை அறியாமையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இவ்வுலகிற்கு வந்த தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு என்ன உரைத்தாரோ, அர்ஜுனன் என்ன புரிந்து கொண்டானோ, அதே தகவலை உள்ளது உள்ளபடி, முறையான குரு சீடப் பரம்பரையின் வாயிலாகப் பெற்று, பகவத் கீதை உண்மையுருவில் என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். இந்த உண்மையான ஞானம் அனைவரையும் சென்றயடைய வேண்டும் என்பதில் அவர் பேரார்வம் கொண்டிருந்தார். அதன் காரணத்தினால், அவரைப் பின்பற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சார்ந்த பக்தர்கள் அவரது புத்தகங்களை பரவலாக விநியோகம் செய்வது வழக்கம். பிரபுபாதரின் புத்தகங்களுடன் பொதுமக்களை பக்தர்கள் அணுகும்போது, அவர்கள் சந்திக்கும் கேள்விகள் ஏராளம், அடையப்படும் அனுபவங்களும் தாராளம். தமிழகத்தில் பகவத் கீதையை விநியோகம் செய்வதற்காக வெளியே செல்லும் பக்தர்கள் அடிக்கடி சந்திக்கும் கேள்விகளில் ஒன்று: கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா?

பகவத் கீதை போர்க்களத்தில் பேசப்பட்டது என்பதால், இதனை வீட்டில் வைத்திருந்தால், வீடே போர்க்களமாகி விடும் என்று சிலர் கூறுவதாக அவர்கள் காரணம் சொல்வதும் வழக்கம்.

ஆதாரம் என்ன?

எந்தவொரு கூற்றிற்கும் ஆதாரம் அவசியம். ஆதாரமின்றி கூறப்படும் கருத்துகளை வெறும் கற்பனை, அல்லது மூட நம்பிக்கை என்று உணர வேண்டும். அதன்படி, கீதையை வீட்டில் வைத்து படிக்கக் கூடாது என்று யாரேனும் கூறினால், அதற்கு நாம் ஆதாரம் கேட்க வேண்டும். எந்த சாஸ்திரமாவது கீதையை வீட்டில் வைத்து படிக்கக் கூடாது என்று கூறுகிறதா? நிச்சயம் இல்லை. அப்படியிருக்க, இத்தகைய எண்ணங்கள் எங்கிருந்து வந்தன? யாரோ சிலர், ஏதோ காரணத்திற்காக, இப்படி ஒரு கட்டுக் கதையை கட்டி விட்டுள்ளனர்; நமது மூட மக்களில் சிலரும் அதனை ஏற்றுள்ளனர்–இதுவே உண்மை.

பகவத் கீதையை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்  என்று பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது, அதனை வீட்டில் வைத்து படிக்கக் கூடாது என்று கூறினால், வேறு எங்கு வைத்து படிப்பது? சிலர், கோயிலில் மட்டும் படிக்க வேண்டும் என்பர். இதுபோன்ற தகவல்கள் கீதையின் அமிர்தத்திலிருந்து மக்களை திசை திருப்புவதற்கான நாத்திகர்களின் வேலையாகும்.

கீதையை ஏன் படிக்க வேண்டும்?

வேத ஞானத்தின் சாரமான பகவத் கீதை எல்லா ஆச்சாரியர்களாலும் போற்றப்பட்டு வந்துள்ளது. நான் யார், கடவுள் யார், கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் ஏன் இந்த உலகில் துன்பப்படுகிறேன், எனது துன்பத்திற்கு நிரந்தர தீர்வு உண்டா, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது போன்றவற்றை அறிய விரும்புவோர் கீதையைப் படிக்கலாம். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் குருக்ஷேத்திர போர்க்களத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல், உலக வாழ்க்கை என்னும் நிரந்தர போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் எல்லா ஜீவன்களுக்கும் உரியதாகும். இதைப் படிப்பதால், உலக வாழ்வின் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தர விடுதலையைப் பெற முடியும்.

வேதம் என்றால் அறிவு என்று பொருள். எல்லா அறிவிற்கும் அரசனாக, வேதங்களின் அரசனாக திகழ்வது பகவத் கீதை. இதனைப் படிக்கக் கூடாது என்று சொல்லலாமா? வேதங்கள் மிகவும் விரிவானவை, அவை அனைத்தையும் படித்து உறுதியான தீர்மானத்திற்கு வருதல் என்பது இயலாத காரியம்; வேத ஞானம் அனைத்தையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் பகவத் கீதை 700 ஸ்லோகங்களில் வழங்கியுள்ளது. இஃது எல்லா தரப்பட்ட மக்களுக்கும் எல்லா சூழ்நிலைக்கும் உகந்த புத்தகமாகும். இத்தகைய உயர்ந்த அறிவை வீட்டில் அமர்ந்து பெறுவதில் ஏதேனும் குற்றம் உண்டோ!

கீதையின் சில மகத்துவங்கள்

கீதையைப் படிப்பதன் மகத்துவத்தைப் புகழ்ந்து எழுதப்பட்ட கீதா மஹாத்மியத்திலிருந்து சில வரிகள் இங்கு வாசகர்களின் நன்மைக்காக.

மல-நிர்மோசனம் பும்ஸாம் ஜல-ஸ்நானம் தினே தினே

ஸக்ருத் கீதாம்ருத-ஸ்நானம்    ஸம்ஸார-மல-நாஷனம்

“தினமும் குளிப்பதால் ஒருவன் தன்னை சுத்தம் செய்துகொள்கிறான். ஆனால் கீதை எனும் புனித கங்கையில் ஒருமுறை குளிப்பதன் மூலம், ஜட வாழ்வின் களங்கங்கள் எல்லாவற்றையும் கழுவி விடுகிறான்.” (கீதா மஹாத்மியம் 3) 

கீதா-ஸு-கீதா கர்தவ்யா    கிம் அன்யை: ஷாஸ்த்ர-விஸ்தரை:

யா ஸ்வயம் பத்மனாபஸ்ய    முக-பத்மாத் வினி:ஸ்ருதா

“பரம புருஷ பகவானே (கீதையை) உபதேசித்திருப்பதால், வேறு சாஸ்திரங்களுக்கு என்ன அவசியம்? பகவத் கீதையை தொடர்ந்து கவனத்துடன் கேட்பதும் படிப்பதுமே அவசியம். பகவத் கீதை என்னும் இந்த ஒரு நூலே போதுமானது; ஏனெனில், இஃது எல்லா வேத நூல்களின் சாரமும் முழுமுதற் கடவுளால் உபதேசிக்கப்பட்டதுமாகும்.” (கீதா மஹாத்மியம் 4)

பாரதாம்ருத-ஸர்வஸ்வம்   விஷ்ணு-வக்த்ராத் வினி:ஸ்ருதம்

கீதா-கங்கோதகம் பீத்வா    புனர் ஜன்ம ந வித்யதே

“கங்கையின் நீரைக் குடிப்பவன் முக்தியடைகிறான், இப்படியிருக்க பகவத் கீதையின் அமிர்தத்தை குடிப்பவரைப் பற்றி என்ன சொல்வது? பகவத் கீதை மஹாபாரதத்தின் அமிர்தம், இது மூல விஷ்ணுவான ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது.” (கீதா மஹாத்மியம் 5)

பகவத் கீதை முழுமுதற் கடவுளின் திருவாயிலிருந்து தோன்றியது, கங்கையோ அவரது திருப்பாதங்களிலிருந்து வெளிப்பட்டது. உண்மையில், முழுமுதற் கடவுளின் திருவாய்க்கும் திருப்பாதங்களுக்கும் வேறுபாடில்லை என்றாலும், நமது பாரபட்சமற்ற ஆய்வின் மூலம் பகவத் கீதையை கங்கையைக் காட்டிலும் முக்கியமானதாக மதிக்கலாம்.

கங்கையில் தினமும் நீராடுவதால் ஒருவர் தூய்மையடை யலாம்; கீதை என்னும் புனித கங்கையில் ஒருமுறை நீராடினால் போதும், தூய்மையடைய முடியும்.

பாராயணம் செய்தால் போதுமா?

கீதையின் மகத்துவத்தை தெரிந்துகொண்டு அதனை ஆர்வத்துடன் வாங்குவோரில்கூட, பலர் அதனை வீட்டில் வெறுமனே அலமாரியில் அல்லது பூஜை அறையில் வைத்துவிடுகின்றனர். அது சரியல்ல. கீதை வெறுமனே பூஜை அறையில் வைப்பதற்கு அல்ல, படிக்கப்பட்டு வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியமான பாடம்.

வேறு சிலரோ, வெறுமனே ஸ்லோகங்களை பாராயணம் செய்கின்றனர், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்வதில்லை. இதுவும் சரியல்ல. ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து பாராயணம் செய்வதை நாங்களும் ஊக்குவிக்கின்றோம். ஆனால் அதே சமயத்தில், கீதையை முழுமையாக கற்க வேண்டியது அவசியம். அதனை முறையாகக் கற்று உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் விவாதியுங்கள். அதை எவ்வாறு உங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்துவது என்பதை யோசித்துப் பாருங்கள். பகவத் கீதை என்பது உங்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் பொக்கிஷம். பொக்கிஷத்தை பலரும் பல வழிகளில் உபயோகிக்கலாம், சிலர் அதனை வீட்டின் பின்புறம் புதைத்து வைத்துவிடுவர். அதாவது, அதனை முறையாக உபயோகிக்காமல் பத்திரமாக வைத்திருப்பர். கீதையைப் படித்து நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே பாராயணம் செய்தல் என்பது, அது போன்றதே.

கீதையும் இதர மத நூல்களும்

கிருஸ்துவர்களுக்கு பைபிளும் முகமதியர்களுக்கு குரானும் இருப்பதுபோல, இந்துக்களுக்கு பகவத் கீதை என்னும் கருத்து பரவலாக உள்ளது. ஆயினும் அஃது முழுமையான உண்மை அல்ல. பகவத் கீதையின் அறிவினை எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயமும் உரிமை கொண்டாட முடியாது. உண்மையில் சொல்லப்போனால், பைபிள், குரான் உட்பட அனைத்து நூல்களும் மக்களுக்கு நல்லுபதேசம் வழங்குவதற்கானவை. அவற்றை எந்தவொரு குறிப்பிட்ட மதப் பிரிவினரும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூற முடியாது.

அவ்வாறு மக்களுக்கு நல்லுபதேசம் வழங்கும் நூல்களில், கீதை தலைசிறந்ததாக உள்ளது என்பதை பாரபட்சமின்றி கவனித்துப் பார்ப்பவர்களால் உணர முடியும். கீதையில் உரைக்கப்படும் ஆத்ம ஞானம் வேறு எங்கும் காணப்படாத ஒன்றாகும். மேலும், கர்ம விதிகளின் தன்மைகள், ஜடவுலகத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை, இறைவனுக்குச் செய்யப்படும் தூய அன்புத் தொண்டு போன்றவை பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளதைப் போன்று வேறு எந்த நூலிலும் விளக்கப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அறிவின் பொக்கிஷமாக விளங்கும் கீதையினை இந்து மதம் என்னும் குறுகிய வட்டத்திற்குள் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அறிவை வழங்கும் நூல்களை மதம் என்ற முகமூடியுடன் அணுகக் கூடாது. அறிவியலின் ஒரு பிரிவான மின்னியல் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர், அதற்கான புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும். இதில் மதம் கலக்கப்படலாமா? நிச்சயம் இல்லை. அதுபோல, ஆத்மா, பரமாத்மா, ஜட இயற்கை, கர்ம விதிகள், மற்றும் காலத்தைப் பற்றிய விஞ்ஞானத்தை வழங்கும் பகவத் கீதைக்கு மதச் சாயம் பூசுதல் முற்றிலும் தவறு. உண்மையான அறிவைத் தேடுவோர் கீதையைப் படிக்க முன்வரலாம்.

எனவே, கீதை என்னும் அமிர்தத்தில் தினமும் நீராடுதல் சாலச் சிறந்ததாகும். தினமும் கீதையைப் படித்தால், வாழ்வின் அர்த்தங்களை படிப்படியாக உணர முடியும், பாவ வாழ்விலிருந்து விடுதலையும் பெறுவோம்.

 

எந்த கீதையைப் படிக்க வேண்டும்?

சின்ன கீதை கிடைக்குமா, பெரிய கீதை கிடைக்குமா என்றெல்லாம் சிலர் வினவுவதை அடிக்கடி காண்கிறோம். வேறுசிலர், கீதாசாரம் போஸ்டர் மட்டும் போதும் என்கின்றனர்.கீதையை அவ்வாறு அணுகுதல் சரியல்ல. ஒரு மருந்தை உட்கொள்ள வேண்டுமெனில், அதன் தலைப்புக் காகிதத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும், மனம்போன போக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுபோல, பௌதிக வாழ்வு என்னும் நமது நோயை குணப்படுத்துவதற்கான பகவத் கீதை என்னும் மருந்தினை அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எடுத்துக் கொள்ள வேண்டும். கீதையின் அர்த்தங்களை முறையாகப் பெற அதனை குரு சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியர்களின் வழியாகக் கற்றல் அவசியம். இதனை கிருஷ்ணரே கீதையில் (4.2) வலியுறுத்துகிறார்.

நமது வாழ்வின் அடிப்படை எண்ணங்களை மாற்றி புதுவாழ்வு வழங்கவிருக்கும் கீதையில் யாரும் கஞ்சத்தனம் காட்டக் கூடாது. சிறிய கீதை, பெரிய கீதை என்பதெல்லாம் முக்கியமல்ல. கீதையின் பொருள் முறையான ஆச்சாரியரால் விளக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அவசியம். கீதைக்கு நிறைய உரைகள் உள்ளபோதிலும், அவற்றில் பெரும்பாலானவை முறையான குரு சீடப் பரம்பரையில் வராத நபர்களாலும் பக்தரல்லாத நபர்களாலும் விளக்கமளிக்கப்பட்டவை. இதனால் கீதையின் கருத்துகள் அவர்களது சொந்த கருத்துகளுடன் கலந்துள்ளன; சில கருத்துகள் மறைக்கப்பட்டும், சில கருத்துகள் இடையில் சொருகப்பட்டும் உள்ளன.

எனவே, கீதையை உள்ளது உள்ளபடி வழங்கும் பொருட்டு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், பகவத் கீதை உண்மையுருவில் என்னும் பெயரில் விளக்கவுரை வழங்கியுள்ளார். அந்நூலை அவர் வெளியிட்ட குருகிய காலத்தில், உலகெங்கிலும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல இலட்சம் பிரதிகள் விநியோகிக்கப்பட்டது. மேலும், எந்தவொரு கீதையும் செய்யாத அதிசயத்தினை பகவத் கீதை உண்மையுருவில் தொடர்ந்து செய்து வருகின்றது. இதனைப் படிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வில் பெரும் மாற்றத்தை அடைகின்றனர். தற்போது 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல கோடி பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருக்கும் பெருமை பகவத் கீதை உண்மையுருவில் நூலை மட்டுமே சாரும். இன்று உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பகவத் கீதையின் பதிப்பாக இது விளங்குகின்றது. எனவே, பகவத் தரிசன வாசகர்கள் பகவத் கீதை உண்மையுருவில் நூலை இதுவரை வாங்கவில்லையெனில், இப்போதாவது வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பிரபுபாதரின் புத்தகங்களை தொடர்ந்து படித்தால், “கீதையை வீட்டில் வைக்கக் கூடாது” என்று அபத்தமாக உளருபவர்களுக்கு எளிதில் பதிலளிக்க முடியும், மக்களின் மூடத்தனத்திற்கு முடிவுகட்ட முடியும். கீதையை சற்றேனும் படிப்பவர்கள் எமராஜரை சந்திக்கும் அபாயத்திலிருந்து விடுபடுவார்கள் என்று கீதா மஹாத்மியம் (20) கூறுவதை உணர்ந்து அதன்படி நடப்போமாக.

ஸ்ரீல பிரபுபாதர் அருளிய பகவத் கீதை உண்மையுருவில் நூல், கீதையின் பொருளை உள்ளது உள்ளபடி அப்படியே வழங்குகின்றது.

அனைவரின் வீட்டிலும் கீதை இருக்க வேண்டும், அதனை அனைவரும் தினமும் படிக்க வேண்டும்.

வீட்டில் இல்லாவிடில் அதுவே தவறு

கீதையை வீட்டில் வைக்கலாமா என்ற கேள்விக்கு இனிமேல் அர்த்தம் ஏதுமில்லை என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள். உண்மையாக சொல்வோமெனில், பகவத் கீதையை உலகெங்கிலும் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வைத்தே ஆக வேண்டும். அவ்வாறு ஒரு சட்டம் இயற்றினால்கூட நன்றாக இருக்கும். வீட்டில் கீதை இருந்தால், என்றாவது ஒருநாள் அதை சில பக்கங்களாவது எடுத்துப் படிப்பார்கள். வாழ்வில் தாங்கவியலாத துன்பங்களை அடையும்போது, பலரின் கவனம் கீதையை நோக்கி திரும்பியுள்ளதை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். வீட்டில் கீதை இருந்தால்தானே கவனம் அதை நோக்கி திரும்பும்! எனவே, பகவத் கீதை வீட்டில் இல்லாவிடில், அதுவே குற்றமாக உணரப்பட வேண்டும்.

வீட்டில் பகவத் கீதையை வைத்தால் சண்டை வரும் என்று நினைப்பவர்கள் அதன் கடைசி ஸ்லோகத்தை சற்று படித்துப் பார்க்கலாம்.

யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்-தர:

தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம

“யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்யமாக செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.” (பகவத் கீதை 18.78)  

வாங்குவீர், பகவத் கீதை உண்மையுருவில்! படித்துப் பயன்பெறுவீர்!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives