பகவத் கீதை உண்மையுருவில்–ஒரு கண்ணோட்டம்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக நீங்கள் படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினை சென்ற இதழில் கண்டோம். கீதையின் முதல் அத்தியாயத்தினை இந்த இதழிலும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் படைகளைக் கவனித்தல்

பகவத் கீதை உரைக்கப்பட்ட சூழ்நிலைசுமார் 5000 வருடங்களுக்கு முன்பு மொத்த உலகமும் அஸ்தினாபுரத்தைத் (தற்போதைய தில்லியைத்) தலைநகராகக் கொண்ட குரு வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. குரு வம்சத்தினரின் செயல்களை எடுத்துரைக்கும் மாபெரும் காவியமான மஹாபாரதம், பாரத நாட்டின் பெருமை மிகு வரலாற்றை அறிவதற்குரிய முக்கிய இலக்கியமாகும்.

திருதராஷ்டிரரும் பாண்டுவும் குரு வம்சத்தில் பிறந்த சகோதரர்கள். மூத்த சகோதரரான திருதராஷ்டிரர் குருடராகப் பிறந்த காரணத்தினால், அவருக்குச் சேர வேண்டிய அரியணை பாண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டது. யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐந்து புதல்வர்களைப் பெற்றெடுத்த பாண்டு, இளம் வயதிலேயே மரணமடைந்தார். அதன் பின்னர், துரியோதனனைத் தலைமையாகக் கொண்ட திருதராஷ்டிரரின் நூறு குழந்தைகளும் பாண்டுவின் ஐந்து புதல்வர்களும் ஒரே அரசவையில் வளர்க்கப்பட்டனர். தேர்ச்சி பெற்ற துரோணரிடம் போர்க்கலையைப் பயின்ற அவர்கள், பாட்டனார் பீஷ்மரிடமிருந்து அறிவுரைகளைப் பெற்று வளர்ந்தனர்.

அனைவரிலும் மூத்தவரான யுதிஷ்டிரரே அரியணைக்கு உரியவர் என்றபோதிலும், பொறாமையினால் பாண்டவர்களை வெறுத்த துரியோதனன் தனது தந்தை திருதராஷ்டிரருடன் இணைந்து பல்வேறு திட்டங்களைத் தீட்டி பாண்டவர்களைக் கொல்ல முயற்சித்தான். அம்முயற்சிகளின் ஒரு கட்டமாக நடந்த சூதாட்டத்தில், பாண்டவர்கள் தங்களது அரசை இழந்து பதிமூன்று வருடங்கள் நாட்டை விட்டு விலகி வாழ்ந்தனர். வனவாசம் முடிந்த பின்னர் நாட்டைத் திருப்பித் தரும்படி துரியோதனனிடம் அவர்கள் கேட்டபோது அவன் திட்டவட்டமாக மறுத்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உட்பட பலரும் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போர் தவிர்க்க முடியாததாயிற்று.

உலகிலிருந்த எல்லா அரசர்களும் அஸ்தினாபுரத்தின் கீழ் இருந்ததால், அவர்கள் அனைவரும் இரு பிரிவாகப் பிரிந்து, சிலர் துரியோதனன் பக்கமும் சிலர் யுதிஷ்டிரர் பக்கமும் இணைந்து போரில் ஈடுபடுவதற்காக குருக்ஷேத்திரத்தில் கூடினர். இரு தரப்பினருக்கும் உறவினரான கிருஷ்ணர், துரியோதனனின் விருப்பப்படி தனது படைகளை அவனுக்கு அளித்துவிட்டு, ஆயுதம் ஏந்தாமல் அர்ஜுனனின் தேரோட்டியாக பாண்டவர்களின் பக்கம் இணைந்திருந்தார்.

போருக்குத் தயாராகுதல்

பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதையின் முதல் அத்தியாயம், தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் போர் புரியும் எண்ணத்துடன் கூடிய தனது மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்? என்ற திருதராஷ்டிரரின் கேள்வியுடன் தொடங்குகின்றது. புனித ஸ்தலத்தின் தாக்கத்தினால், தர்மத்தைப் பின்பற்றும் பாண்டவர்கள் ஒருவேளை மனம்மாறி போரிலிருந்து விலகி விடலாம் என்ற எதிர்பார்ப்புடனும், அதர்மத்தின் பக்கம் இருக்கும் தனது மகன்கள் போரில் வெற்றி பெறுவது இயலாத செயல் என்ற எண்ணத்துடனும் அக்கேள்வி அமைந்திருந்தது. வியாசரின் கருணையால் தெய்வீகப் பார்வையைப் பெற்றிருந்த திருதராஷ் டிரரின் காரியதரிசியான சஞ்ஜயன் அரண்மனையில் இருந்தபடியே போர்க் களத்தின் காட்சியை எடுத்துரைக்கத் தொடங்குகிறான்.

துரியோதனனின் இராஜ தந்திர பேச்சு: திருதராஷ்டிரரை மகிழ்விப்பதற்காக, சஞ்ஜயன் துரியோதனனை ’மன்னன் என்று வர்ணித்தான். பாண்டவர்களின் படையைப் பார்வையிட்ட துரியோதனன், தன் ஆச்சாரியரான துரோணரை அணுகி, அவரின் சீடனான துருபத குமாரனால் அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப் பார்வையிடுமாறு கூறினான். தனது பிரியமான சீடர்களான பாண்டவர்களிடம் துரோணாசாரியர் பரிவு காட்டுவார் என்று சந்தேகம் கொண்ட சிறந்த இராஜ தந்திரியான துரியோதனன், துரோணரைத் தூண்டி விடுவதற்குத் தகுந்தாற் போல பேசினான். துரோணரைக் கொல்வ தற்காகவே பிறந்த துருபத குமாரனான திருஷ்டத்யும்னனின் பெயரை முதலில் சுட்டிக் காட்டிய அவன், அதனைத் தொடர்ந்து, பாண்டவ படையின் மிகச்சிறந்த வெற்றிகொள்ளப்பட இயலாத மாவீரர்களான அர்ஜுனனையும் பீமனையும் குறிப்பிட்டான். அர்ஜுனனும் பீமனும் தனக்குப் பெரும் தலைவலியாக இருப்பார்கள் என்பதை துரியோதனன் உணர்ந்திருந்தான். அதன் பின்னர், பாண்டவப் படையின் இதர மாவீரர்களைச் சுட்டிக் காட்டினான்.

துரோணாசாரியர் துவண்டுவிடக் கூடாது என்பதை உணர்ந்து, தனது படையின் மாவீரர்களையும் அவரிடம் அறிவித்தான். முதலில் முகஸ்துதியாக துரோணரின் பெயரை உரைத்து, பின்னர், பீஷ்மர், கர்ணன், கிருபாசாரியர் போன்ற வெற்றி வீரர்களைக் குறிப்பிட்டான். பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட தமது படையின் பலம் அளவிட இயலாதது என்றும், பீமனால் பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனை அளவிடக்கூடியதே என்றும் கூறி பீஷ்மரையும் உற்சாகப்படுத்தினான். அவனது பேச்சைக் கேட்ட பீஷ்மர், அதனால் மயங்காதவராக தனது சங்கை சிம்ம கர்ஜனை போன்று உரக்க ஊதினார். பீஷ்மரின் உற்சாக முழக்கம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பீஷ்மரைத் தொடர்ந்து பல்வேறு சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாரைகள் என அனைத்தும் ஒரே சமயத்தில் கௌரவப் படையில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

திருதராஷ்டிரரின் வேண்டுகோளின்படி, போர்க்களத்தின் சம்பவங்களை அரண்மனையில் இருந்தபடியே சஞ்ஜயன் பார்த்து உரைத்தல்

பாண்டவர்களது வெற்றியின் சின்னங்கள்

மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பாஞ்சஜன்யம் என்னும் தெய்வீக சங்கையும், அர்ஜுனன் தனது தேவதத்தம் எனும் தெய்வீக சங்கையும் முழங்க, அவர்களைத் தொடர்ந்து இதர படைவீரர்கள் பல்வேறு சங்குகளை முழங்கினர். அச்சங்கொலிகளின் முழக்கம் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க, கௌரவர்களின் இதயங்கள் சிதறின. அச்சமயத்தில் ஹனுமான் கொடியைத் தாங்கிய ரதத்தில் இருந்த அர்ஜுனன், கிருஷ்ணரிடம் பேசத் தொடங்கினான்.

(அக்னி தேவரால் பரிசளிக்கப்பட் டிருந்த அர்ஜுனனின் மிகச்சிறந்த ரதம், கிருஷ்ண அர்ஜுனர்களின் தெய்வீக சங்கு கள், பாண்டவர்களின் பக்கம் இருக்கும் இலக்ஷ்மியின் கணவரான (மாதவரான) கிருஷ்ணர், சங்கொலியைக் கேட்ட கௌரவர்களின் இதயச் சிதறல், அர்ஜுனனுடைய ரதத்தின் கொடியில் எப்போதும் வெற்றியைத் தரும் ஹனுமான் குடிகொண்டிருத்தல் ஆகிய அறிகுறிகள், வெற்றி பாண்டவர்களின் பக்கமே என்பதை எடுத்துக்காட்டுகின்றன.)

பக்தவத்ஸலரான ஸ்ரீ கிருஷ்ணர்

போர்புரியும் விருப்பத்துடன் குழுமி யிருந்த அனைவரையும் காண்பதற் கான ஆவல் கொண்ட அர்ஜுனன், தனது தேரோட்டியாகச் செயல்பட்ட ஸ்ரீ கிருஷ்ணரிடம், ரதத்தை இரு சேனை களுக்கும் இடையில் செலுத்துமாறு வேண்டினான். கிருஷ்ணரை அச்யுத (வீழ்ச்சியடையாதவர்) என்று அழைத் ததன் மூலம், தனது சாரதியாக செயல் பட்டாலும், அவர் எப்போதும் புருஷோத்த மரான முழுமுதற் கடவுளே என்பதை அர்ஜுனன் உறுதி செய்கின்றான். தனது காரணமற்ற கருணையால் முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தனது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனின் தொண்டில் ஈடுபட்டிருந்தார். தேரோட்டியின் நிலையை அவர் ஏற்றிருந்ததால், அவர் தனது உன்னத நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. பகவானுக்கும் பக்தனுக்கும் இடையிலான உன்னத உறவின்படி, பக்தன் எப்போதுமே பகவானுக்குத் தொண்டாற்ற காத்துக் கொண்டுள்ளான்; அதுபோலவே, பகவானும் தனது பக்தனுக்குத் தொண்டாற்ற காத்துக் கொண்டுள்ளார். பக்தவத்ஸலராக (பக்தர்களிடம் பற்று கொண்டவராக) விளங்கும் கிருஷ்ணரின் மகிமையை அவர் அர்ஜுனனுக்குத் தேரோட்டுவதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அர்ஜுனனின் ஆணைப்படி, பீஷ்மருக்கும் துரோணருக்கும் முன்னிலையில், ரதத்தை இரு சேனைகளுக்கும் மத்தியில் நிறுத்திய கிருஷ்ணர், குரு வம்சத்தினரைப் பார்வையிடும்படி அர்ஜுனனிடம் கூறினார். தனது நண்பனான அர்ஜுனனைக் கருவியாகக் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் பகவத் கீதை என்னும் அரிய அறிவை அளிக்கும் பொருட்டு, அறியாமைக்கு அப்பாற்பட்ட அர்ஜுனனை அறியாமைக்கு உட்படுத் தினார் இறைவன். இரு சேனைகளுக்கும் நடுவில் நின்றபடி, தந்தைமார்கள், பாட்டனார்கள், ஆச்சாரியர்கள் உட்பட பல்வேறு உறவினர்களையும் நண்பர் களையும் பார்வையிட்ட அர்ஜுனன், பாசத்தினால் மூழ்கினான்.

கௌரவர்களின் இதயம் சிதறும்படியாக கிருஷ்ணரும் அர்ஜுனனும் தத்தம் தெய்வீக சங்குகளை முழங்குதல்

அர்ஜுனன் போரிட மறுத்தல்

பாசத்தால் மூழ்கிய அர்ஜுனன், பல்வேறு காரணங்களை முன்வைத்து தன்னால் போரிட இயலாது என்று கிருஷ்ணரிடம் தெரிவித்தான்.

உறவினர்களின் மீதான பாசம்: போரிடும் உணர்வுடன் தன்முன் கூடி யிருந்த நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு, அர்ஜுனனின் அங்கங்கள் நடுங்கி வாய் உலர்ந்தது, மயிர்கூச்செறிந்தது, கையிலிருந்த புகழ் பெற்ற காண்டீப வில்லும் நழுவியது. மனம் குழம்பித் தன்னையே மறந்தான், கெட்ட சகுனங்களையே கண்டான். மாபெரும் போர் வீரனான அர்ஜுனன் போரைக் கண்டு அச்சப்படவில்லை; மாறாக, போரில் தனக்கு பிரியமான உறவினர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளதே என்பதை எண்ணிப் போரிட மறுத்தான்.

சுகம் அனுபவிப்பதில் உள்ள தடை: பசியில்லாதவன் சமைக்க விரும்பாததைப் போல, உறவினர்களைக் கொல்வதால் மகிழ்ச்சியடைய முடியாது என்பதை உணர்ந்த அர்ஜுனன், போரினால் பெறப்படும் வெற்றியையோ இராஜ்யத்தையோ இன்பத்தையோ விரும்பவில்லை; மாறாக, வனத்திற்குச் சென்று விரக்தியுடன் தனிமையில் வாழ்வதற்கும் தயாரானான். ஆட்சி, மகிழ்ச்சி, வாழ்க்கை ஆகியவற்றை யாருக்காக அவன் விரும்பினானோ, அவர்கள் அனைவரும் அவனுக்கு எதிரில் அணிவகுத்திருக்க, அவர்களை அழித்தபின் அனுபவிப்பதற்கு என்ன இருக்கும் என்று எண்ணினான். அவர்கள் தன்னைக் கொன்றாலும் சரி, தான் அவர்களை ஏன் கொல்ல வேண்டும்? என்று கேள்விகேட்ட அர்ஜுனன், இந்த பூமி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகமும் கிடைப்பதாக இருந்தாலும், தான் போரிடத் தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தினான். சொந்த உறவினர்களைக் கொலை செய்துவிட்டு எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? என்றும் வினவினான்.

பாவத்தின் விளைவுகளைக் கண்ட பயம்: திருதராஷ்டிரரின் மகன்கள் பல்வேறு அக்கிரமங்களைச் செய்திருந்தபோதிலும், அவர்களைக் கொல்வதால் தனக்கு பாவம் வரும் என்று கூறிய அர்ஜுனன், பேராசையால் மதியிழந்த எதிர்தரப்பினர், துரோகம் செய்வதையும் குலநாசம் செய்வதையும் பாவம் என்று நினைக்கவில்லை என்றும், மாறாக, அவற்றை பாவம் என்று அறிந்த யாம் எவ்வாறு அப்பாவச் செயல்களில் ஈடுபட முடியும் என்றும் வாதிட்டான். மேலும், குல தர்மத்தைக் கெடுத்தவர்கள் நரகத்திற்குத்தான் செல்வர் என்பதையும் உறுதிபட உரைத்தான்.

குலம் நாசமடையும்: பெரியோர்கள் கொல்லப் படுவதால் குலம் அழிவடைந்து, குல தர்மம் கெட்டுவிடும்; வம்சத்தில் மீதமிருப்பவர்கள் அதர்மங்களில் ஈடுபடுவர்; அதர்மம் தலையெடுத்தால் குடும்பப் பெண்கள் களங்கமடைவர்; பெண்மையின் சீரழிவால் தேவையற்ற சந்ததி உண்டாகும்; தேவையற்ற சந்ததியினர் நரக நிலையை ஏற்படுத்துவர்; அதனால் அக்குடும்பங்களின் முன்னோர்கள் வீழ்ச்சியடைவர், அவர்களுக்குப் பிண்டமும் நீரும் வழங்கி செய்ய வேண்டிய காரியங்கள் நடைபெறாது–என ஒரு பட்டியலை வழங்கிய அர்ஜுனன், போரினால் குலம் நாசமடையும் என்ற கருத்தைத் தெரிவித்தான்.

இராஜ்ய சுகத்தை அனுபவிக்கும் ஆசையால், சொந்த உறவினர்களையும் கொல்லத் துணிந்திருப்பதை பாவமாக உரைத்த அர்ஜுனன், ஆயுதத்தையும் போரையும் துறந்து ஆயுதம் ஏந்திய திருதராஷ்டிரரின் மகன்களால் கொல்லப்படுவதை சிறந்ததாக உரைத்தான். சோகத்தால் மூழ்கிய அந்நிலையில், வில்லையும் அம்பையும் ஒதுக்கிவிட்டு ரதத்தில் அமர்ந்துவிட்டான்.

ரதத்தில் அமர்ந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் கூறிய கருத்துகளே மனித சமுதாயம் முழுவதற்கும் உரித்தான உன்னதமான பகவத் கீதை என்னும் ஞானக் களஞ்சியம். அவர் என்ன கூறினார் என்பதை அடுத்த இதழிலிருந்து (இரண்டாம் அத்தியாயத்திலிருந்து) காணலாம்.

உறவினர்களை எதிர்தரப்பில் கண்ட அர்ஜுனன், கிருஷ்ணரால் மயக்கப்பட்டு, பல்வேறு காரணங்களைக் கூறிப் போரிட மறுத்தல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives