பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் மூன்று அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் நான்காம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

 

உன்னத அறிவு

மூன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம்

கடமையைச் செய்வதா, துறப்பதா, இரண்டில் எது சிறந்தது என்னும் அர்ஜுனனின் கேள்வியுடன் தொடங்கிய மூன்றாம் அத்தியாயத்தில், கர்ம யோகத்தின் தன்மைகள் குறித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கமளித்தார். செயல்படுதல் என்பது அனைவருக்கும் கட்டாயமான ஒன்று, அச்செயல்கள் விஷ்ணுவின் திருப்திக்காகச் செய்யப் படும்போது அவை பந்தத்திலிருந்து விடுவிக்கக்கூடியவை. தன்னை யுணர்ந்த நபருக்குக் கடமைகள் இல்லை, இருப்பினும் மக்களை வழிநடத்து வதற்காக அவர்கள் தங்களது கடமைகளில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் பலவந்தமாக பாவச் செயல்களில் ஒருவர் ஈடுபடுவதற்கு காரணம் என்ன என்று அர்ஜுனன் வினவ, உயிர்வாழிகளின் நித்திய எதிரியான காமமே அதற்குக் காரணம் என்று கிருஷ்ணர் பதிலளித்தார். காமத்தின் பல்வேறு தன்மைகளையும் நிலைகளையும் விளக்கியபின்னர், காமத்தை தெய்வீக ஞானத்தினால் வெல்லு மாறு அர்ஜுனனை அறிவுறுத்தினார்.

மூன்றாம் அத்தியாயத்திற்கும் நான்காம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

மூன்றாம் அத்தியாயத்தின் இறுதியில் காமத்தை தெய்வீக ஞானத்தின் (உன்னத அறிவின்) மூலமாக வெற்றிகொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் அறிவுறுத்தினார். உன்னத அறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பின்னர், அந்த உன்னத அறிவு எவ்வாறு பெறப்படுகின்றது என்ற விளக்கத்துடன் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறார்.

சீடப் பரம்பரையில் பெறப்பட வேண்டும்

அழிவற்ற இந்த உன்னத விஞ்ஞானம் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சூரியதேவனான விவஸ்வானுக்கு உபதேசிக்கப்பட்டது. விவஸ்வான் அதனை மனித குலத் தந்தையான மனுவிற்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் முறையே உபதேசித்தனர். இவ்வாறு சீடப் பரம்பரை மூலமாகப் பெறப்பட்டு புனிதமான மன்னர்களால் உணரப்பட்டு வந்தது. காலப்போக்கில் அத்தொடர் விட்டுப்போகவே மீண்டும் அந்த தெய்வீக ஞானத்தை, தனது பக்தனாகவும் நண்பனாகவும் இருக்கும் காரணத்தினால், அர்ஜுனனுக்கு எடுத்துரைப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார். பகவத் கீதை என்னும் உன்னத ஞானம் முறையான குரு சீடப் பரம்பரையிலிருந்து பெறப்பட வேண்டும் என்னும் முக்கிய தகவலை நாம் இதிலிருந்து அறிகிறோம். கீதையை உண்மையில் புரிந்துகொள்ள விரும்பினால், அர்ஜுனனின் வழியைப் பின்பற்றி, ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனாகவும் நண்பராகவும் நாம் மாற வேண்டும்.

அர்ஜுனனின் கேள்வி

சூரியதேவன் பிறப்பால் கிருஷ்ணரை விடப் பெரியவர். பன்னெடுங் காலத்திற்கு முன்பே அவருக்கு கீதா உபதேசம் செய்யப்பட்டதை எவ்வாறு புரிந்துகொள்வது என்று அர்ஜுனன் கேள்வி எழுப்புகிறான். முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் காலத்திற்கு அப்பாற்பட்டவர். அர்ஜுனனைப் போன்ற பக்தர்களிடையே இதுகுறித்து எந்தவித ஐயமும் கிடையாது. கிருஷ்ணரை சாதாரண மனிதனாகக் கருதும் நாத்திகர்களின் மனப்பான்மையை முறியடிப்பதற் காகச் செய்யப்பட்ட முயற்சியே அர்ஜுனனால் பகவானின் முன்பு எழுப்பப்பட்ட இக்கேள்வியாகும்.

கிருஷ்ணரைப் பற்றிய திவ்ய ஞானம்

தான் பல்வேறு அவதாரங்களை எடுத்திருப்பதாகவும், தன்னால் அவற்றை நினைவுகொள்ள முடியும் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்தார். அவர் பிறப்பற்றவராக இருந்தாலும், அவரது உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் அவரே இறைவனாக இருந்தாலும், அவர் தமது அந்தரங்க சக்தியால் தனது சுய உருவில் தோன்றுகிறார். ஒரு சாதாரண ஜீவாத்மா பிறந்து வளர்வதைப் போலவே கிருஷ்ணரும் பிறந்து வளர்வதாகத் தோன்றினாலும், அவர் இளமையைத் தாண்டிச் செல்வதில்லை. உண்மையில் அவரது தோற்றமும் மறைவும் சூரியன் உதித்து நம் கண்முன் சில மணிநேரம் காட்சியளித்து பின்பு மறைவதைப் போன்றதே. அவர் அவ்வாறு தோன்றுவதற்கான காரணம் என்ன?

எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்போதெல்லாம் தோன்றும் அவர், பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து மீண்டும் தர்மத்தை நிலைநாட்டுகிறார். அன்புமிக்க தன்னுடைய பக்தர்களுக்குத் தனது லீலைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அக்காரணங்களில் முக்கிய மானதாகும். அவரால் அரங்கேற்றப்படும் லீலைகளும் அவரது பிறப்பும் முற்றிலும் தெய்வீகமானவை. பௌதிக இயற்கையின் தன்மை இவற்றில் துளியும் கிடையாது. இதனை தத்துவப்பூர்வமாக அறிந்துகொள்பவர்கள், தங்களது உடலை மாய்த்த பின்னர், கிருஷ்ணரின் நித்தியமான உலகிற்குச் செல்ல முடியும். அங்குச் சென்றோர் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவியெடுப்பதில்லை. அந்த நிலையை அடைய விரும்புவோர், கிருஷ்ணரிடம் சரணடைந்து அவரில் லயித்து, பற்றுதல், பயம், கோபம் ஆகியவற்றை விட்டொழிக்க வேண்டும்.

பகவத் கீதையின் ஞானம் பன்னெடுங் காலத்திற்கு முன்பே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் சூரிய தேவனான விவஸ்வானுக்கு உபதேசிக்கப்பட்டது. விவஸ்வான் அதனை மனுவிற்கு வழங்க, அவ்வாறே சீடப் பரம்பரை மூலமாகப் பெறப்பட்டு வந்தது.

தெய்வீக ஞானத்தை நடைமுறைப்படுத்துதல்

கிருஷ்ணரிடம் முற்றிலும் சரணடையாமல் இதர ஆசைகளை வைத்திருப்போர், சரணடைவதற்கு ஏற்ற பலனை அடைவர். தன்னை வழிபடுவோரிடம் இருக்கும் பௌதிக ஆசைகளை கிருஷ்ணர் தூய்மைப் படுத்துவதால், விரும்பும் பலனை அடைவதற்கு கால தாமதம் ஆகும். இதன் காரணத் தினால், இதர ஆசையுடைய   அத்தகுநபர்கள் பெரும் பாலும் தேவர்களை வழிபடுவர், தேவ வழிபாட்டினால் அவர்கள் எதிர்பார்க்கும் பலன்கள் விரைவிலேயே கிட்டும். பௌதிகப் படைப்பிற்கு அப்பாற்பட்ட முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடாமல், தற்காலிகமான பௌதிகச் செல்வங்களுக்காக தேவர்களை வழிபடும் முட்டாள்கள் கிருஷ்ண உணர்வில் ஆர்வம் காட்டுவதில்லை. அனைத்துப் பலன் களையும் இறுதியில் வழங்குபவர் கிருஷ்ணரே என்பதால், மக்களின் இன்ப துன்பங்களுக்கு அவர் பொறுப்பாளி ஆகின்றாரா?

இல்லை. ஜீவன்கள் ஒவ்வொருவரும் ஜட இயற்கையின் குணங்களால் ஆளப்படுகின்றனர். அந்த குணத்திற்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கும் ஏற்ப மனித சமுதாயம் நான்கு வித வர்ணங்களாக (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் சமூக அமைப்புகளாக) பிரிக்கப்படுகின்றது. பகவத் கீதை ஜாதியை வளர்ப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுவதுண்டு; ஆனால் கீதையில் கூறப்பட்டுள்ள பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உள்ள தற்போதைய ஜாதிகளைப் போன்றவை அல்ல என்பதை கவனித்தல் அவசியம். வர்ணாஷ்ரம முறையை ஏற்படுத்தியவர் கிருஷ்ணரே என்றபோதிலும், அவர் வர்ணாஷ்ரமத்திற்கு அப்பாற்பட்டவர். அவரை பாதிக்கும் செயல் ஏதுமில்லை; இதனை அறிபவன் செயல்களின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். முற்காலத்தில், முக்தி பெற்ற ஆத்மாக்கள், கிருஷ்ணரின் இந்த உன்னத தன்மையை உணர்ந்து செயல்பட்டனர். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றி மற்றவர்களும் செயல்பட வேண்டும்.

கர்மத்தை ஞானத்தின் தளத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்

போர்க்களத்தை விட்டு வெளியேறி செயலற்ற நிலைக்குச் செல்ல விரும்பிய அர்ஜுனனிடம், கர்மம் (செயல்) எவ்வாறு அகர்மமாக (செயலற்ற நிலையாக) காணப்பட முடியும் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார். கர்மம் (செயல்), விகர்மம் (தடை செய்யப்பட்ட செயல்), அகர்மம் (செயலற்ற நிலை) ஆகியவற்றின் நுணுக்கங்களை அறிவது கடினம், அறிவுள்ள நபர்களும் இதில் குழம்புவதுண்டு. கர்மம் என்பது வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள செயல்களைக் குறிக்கும், பௌதிக ஆசைகளுடன் செய்யப்படும் அச்செயல் கள் நற்பலன்களைக் கொடுப்பவை. விகர்மம் என்பது வேதங்களில் தடைசெய்யப்பட்டுள்ள செயல்களைக் குறிக்கும், அவை பாவ விளைவுகளைக் கொடுப்பவை. அகர்மம் என்றால் செயலற்ற நிலை என்று பொருள், செயலற்ற நிலையில் எந்தவொரு நல்ல தீய விளைவுகளும் ஏற்படுவதில்லை; இது கிருஷ்ணரின் திருப்திக்காகச் செய்யப்படும் செயல்களைக் குறிக்கின்றது. அகர்மத்தில் கர்மத்தையும் கர்மத்தில் அகர்மத்தையும் காண்பவன் அறிவாளி.

கர்மத்தில் அகர்மம் என்பது பக்தித் தொண்டைக் குறிக்கும்; பக்தித் தொண்டில் ஈடுபடும் பக்தன், கர்மத்தில் ஈடுபடுவதுபோலத் தோன்றினாலும், அச்செயல் எந்தவொரு பௌதிக விளைவுகளையும் ஏற்படுத்தாத காரணத்தில், அகர்மம் (செயலற்ற நிலை) என்று அழைக்கப்படுகிறது. அகர்மத்தில் கர்மம் என்பது அதற்கு எதிர்மறையானதாகும். கிருஷ்ணரைப் பற்றிய திவ்ய ஞானம் இல்லாததால், அகர்மத்தை பயிற்சி செய்வதாக எண்ணி செயல்களைச் செய்ய மறுத்து வாழும் ஞானிகளுக்கு இது பொருந்தக் கூடியதாகும். அத்தகு ஞானிகள், செயலற்ற நிலையில் இருக்க விரும்பினாலும், சுவாசித்தல், உண்ணுதல், நடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். ஆத்மாவின் செயல்படும் தன்மை தவிர்க்க இயலாததாகும். செயல்களைத் தவிர்ப்பதற்கான செயற்கையான முயற்சிகள் அபாயத்தில் முடியும். களங்கமுற்ற மனமும் ஈடுபாடுகள் அற்ற புலன்களும் வீழ்ச்சிக்கு வழிவகுப்பவை.

புலனின்பத்திற்கான முயற்சிகளை விட்டொழித்து கிருஷ்ணரைப் பற்றிய ஞானத்துடன் செயல்படுபவன் தனது பாவ விளைவுகள் அனைத்தையும் எரித்துவிடுகிறான். அவன் எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தாலும், எந்தச் செயலையும் செய்வதில்லை. அவன் தனது மனதையும் அறிவையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி, உரிமையுணர்வின்றி, தானாக வரும் இலாபத்தில் திருப்தியுற்று, பொறாமையின்றி செயல்படுவதால், கர்ம வினைகளில் பாதிக்கப்படுவதில்லை. அவ்வாறு கிருஷ்ண உணர்வில் ஆழ்ந்திருப்பவன், நிச்சயமாக ஆன்மீக உலகை அடைவான்.

திவ்ய ஞானத்திற்கு வழிவகுக்கும் யாகங்கள்

உன்னத அறிவைப் பெறுவதற்கு பல்வேறு யாகங்கள் உதவுகின்றன. சில யோகிகள் (கர்ம யோகிகள்) தேவ வழிபாடு என்னும் யாகத்தை செய்து படிப்படியான முன்னேற்றத்தை அடைகின்றனர். சிலர் (பிரம்மசாரிகள்) மனக் கட்டுப்பாடு என்னும் யாகத்தில் புலன்களையும் கேட்கும் முறையையும் அர்ப்பணிக்கின்றனர். சிலர் (கிருஹஸ்தர்கள்) புலன்கள் என்னும் நெருப்பில் புலனுகர்ச்சிப் பொருள்களை அர்ப்பணிக்கின்றனர். சிலர் புலன்களையும் பிராணனையும் அடக்கப்பட்ட மனம் என்னும் யாகத்தில் அர்ப்பணிக்கின்றனர். வேறு சிலரோ, உடமைகளை தியாகம் செய்தல், கடுமையான தவங்கள், அஷ்டாங்க யோகப் பயிற்சி, வேதங்களைக் கற்றல் போன்ற யாகங்களைச் செய்கின்றனர். இத்தகு யாகங்களைப் பயிற்சி செய்வோர் அனைவரும் முன்னேற்றமடைகின்றனர்; ஆனால் தூய கிருஷ்ண உணர்வு என்பது இவையனைத்திற்கும் அப்பாற்பட்ட மிகவுயர்ந்த நிலையில் உள்ளது. இத்தகு யாகங்களால் கிருஷ்ண உணர்வை ஒருபோதும் அடைய முடியாது. கிருஷ்ணரின் கருணையாலும் தூய பக்தரின் கருணையாலுமே அதனை அடைய முடியும். இருப்பினும், படிப்படியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இந்த யாகங்கள் பக்தித் தொண்டின் படிக்கற்களாகும்.

ஞான யாகம் மற்ற யாகங்களைக் காட்டிலும் சிறந்தது. முறையான ஆன்மீக குருவை அணுகி இதுகுறித்த உண்மைகளை அறிய வேண்டும். அடக்கத்துடன் தொண்டு செய்து கேள்விகள் கேட்கப்படும்போது ஆன்மீக குரு தனது சீடனுக்கு ஞானத்தை வழங்குகிறார். அவ்வாறு ஞானத்தைப் பெற்றோர் ஒருபோதும் மயங்கமாட்டார்கள். ஞானத்தின் மூலமாக எல்லா உயிர்களையும் கிருஷ்ணரின் அம்சங்களாகக் காண முடியும்.

திவ்ய ஞானத்தின் பெருமைகள்

ஒருவன் பாவிகளில் பெரும்பாவியாக இருந்தாலும், திவ்ய ஞானம் என்னும் படகில் ஏறிவிட்டால், துன்பக் கடலை கடந்துவிட முடியும். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு விறகைச் சாம்பலாக்குவதுபோல ஞான நெருப்பானது ஜடச் செயல்களின் விளைவுகள் அனைத்தையும் சாம்பலாக்குகின்றது. கிருஷ்ணரைப் பற்றிய தெய்வீக ஞானத்தைப் போல சிறந்ததும் தூய்மையானதும் வேறொன்றும் இல்லை. இந்த ஞானத்தை அடைவதற்கு, நம்பிக்கை, அர்ப்பணிக்கப்பட்ட மனம், புலன் கட்டுப்பாடு ஆகியவை அவசியம். நம்பிக்கையின்றி சந்தேகம் கொள்ளும் நபர்கள் இறையுணர்வை அடைவதில்லை; சந்தேகம் கொள்வோர் இவ்வுலகிலும் சரி, மறுவுலகிலும் சரி, இன்பமடைவதில்லை. செயல்களுக்கான பலனைத் துறந்து பக்தித் தொண்டில் ஈடுபடுபவன் திவ்ய ஞானத்தினால் எல்லா சந்தேகங்களையும் நீக்க முடியும். அவன் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை. எனவே, அறியாமையினால் இதயத்தில் எழுந்த சந்தேகங்களை ஞானமெனும் ஆயுதத்தால் அழிக்க வேண்டும் என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்திய ஸ்ரீ கிருஷ்ணர் யோகக் கவசம் பூண்டு எழுந்து போர்புரியும்படி கட்டளையிட்டார்.

எல்லாவித யாகங்களிலும் கிருஷ்ணரைப் பற்றிய ஞானமே மிகச்சிறந்த யாகமாகும். அதனை அறிய முறையான ஆன்மீக குருவிடம் சரணடைய வேண்டும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives