ஆன்மீக ஞானத்தின் மணிமகுடமாக விளங்கும் பகவத் கீதை, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் பெயரில், 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகின் வேறு எந்த பகவத் கீதை பதிப்பிற்கும் இல்லாத அளவில் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. எளிமையான விதத்தில் ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்த கண்ணோட்டம்.
பத்தொன்பது இதழ்களில் வெளிவர உள்ள இந்த நீண்ட தொடரின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக நீங்கள் படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய 37 பக்கங்களைக் கொண்ட அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அறிமுகம் இந்த இதழிலும், பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள் இனிவரும் இதழ்களிலும் காணக் கிடைக்கும்.
பகவத் கீதையை ஏற்றுக்கொள்ள வேண்டிய விதம்
ஆன்மீகப் புத்தகங்களை எழுது வதற்கு முன்பாக அதன் ஆசிரியர், தனது ஆன்மீக குரு, பூர்வீக ஆச்சாரியர்கள், மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி மங்களாசரணம் செய்வது வேதப் பண்பாடு. அதன்படியான மங்களாசரணத்துடன் பகவத் கீதையின் அறிமுகத்தை எடுத்துரைக்கும் ஸ்ரீல பிரபுபாதர், எத்தனையோ பகவத் கீதை ஏற்கனவே உள்ள சூழ்நிலையில், அவற்றின் ஒவ்வொரு கருத்துரையாளரும் தனது சொந்த அபிப்பிராயத்தையே பெரும்பாலும் வெளிப்படுத்தியிருப்பதால், பகவத் கீதை உண்மையுருவில் என்னும் இப்பதிப்பிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக விளக்குகிறார்.
ஒரு மருந்தை நாம் உட்கொள்ள விரும்பினால், அதன் தலைப்புக் காகிதத்தில் கூறப்பட்டுள்ளபடியோ, ஒரு மருத்துவரின் அறிவுரைப்படியோ அதனை உட்கொள்ள வேண்டும். அதுபோலவே பகவத் கீதையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பது கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் கூறப்பட்டு, அது பல்வேறு மிகச்சிறந்த ஆச்சாரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பகவத் கீதை, குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்ததாக கிருஷ்ணர் (4.1-3) கூறுவதால், நாமும் கீதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், குரு சீடப் பரம்பரையில் வருபவரை அணுகுதல் அவசியம்.
தனது நண்பனாகவும் பக்தனாகவும் அர்ஜுனன் இருப்பதால், இந்த பரம இரகசியத்தை அவனிடம் உரைப்பதாக பகவான் கூறுகின்றார். ஞானி, யோகி, பக்தன் என்று மூன்று விதமான ஆன்மீகவாதிகள் இருந்தாலும், பகவத் கீதையை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவர் அர்ஜுனனைப் போன்று பக்தராக இருத்தல் அவசியம். பகவானுடன் ஒருவர் சாந்தமாக, சேவகராக, நண்பராக, பெற்றோராக, அல்லது காதலராக உறவுகொள்ள முடியும். பகவானுடனான அந்த திவ்யமான உறவு முறையினை பக்திமய சேவையில் பக்குவமடையும்போது நம்மால் உணர முடியும். நமது தற்போதைய நிலையில் பகவானை மட்டுமின்றி அவருடனான நமது நித்திய உறவையும் நாம் மறந்துள்ளோம்; பக்தித் தொண்டில் ஈடுபடுவதால் நாம் நம்முடைய சுயநிலைக்குத் திரும்ப முடியும்.
மேலும், அர்ஜுனன் எவ்வாறு பகவத் கீதையை ஏற்றுக் கொண்டானோ (10.12-14), அதே போன்று நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்ட அர்ஜுனன், தனது கூற்றினை உறுதிப்படுத்துவதற்காக, நாரதர், வியாசர், அஸிதர், தேவலர் போன்ற மாமுனிவர்களும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுள்ளதை மேற்கோள் காட்டுகிறான். கிருஷ்ணர் கூறியவை அனைத்தையும் முற்றிலுமாக அர்ஜுனன் ஏற்றுக் கொண்டான். எனவே, கீதையானது குரு சீடப் பரம்பரையில், பக்தி உணர்வுடன், கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
பகவத் கீதையின் நோக்கம்
மனித குலத்தை வாழ்வின் குழப்பங் களிலிருந்து விடுவிப் பதே பகவத் கீதையின் நோக்கமாகும். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மாபெரும் குழப்பத்திற்கு உட்பட்ட அர்ஜுனன், கிருஷ்ணரிடம் சரணடைய, அதன் விளைவாக கீதை பேசப்பட்டது. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் அதே போன்று குழம்பிய நிலையில்தான் உள்ளான். ஆனால் அவர்களில் வெகுசிலரே, “நான் யார்? எங்கிருந்து வந்தேன்? மரணத்திற்குப் பின் எங்குச் செல்வேன்? வாழ்வின் குறிக்கோள் என்ன?” போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். அவ்வாறு கேள்வி கேட்கும் நபர்கள், அக்கேள்விகளுக்கான விடையினை கீதையில் காணலாம்.
பகவத் கீதை என்பது, அர்ஜுனனுக்காக மட்டும் உபதேசிக்கப்பட்டது அல்ல; மாறாக தன்னை அறிவதில் உண்மையான ஆர்வத்துடன் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் உபதேசிக்கப்பட்டதாகும். உண்மையில், கிருஷ்ணரின் தூய பக்தனான அர்ஜுனன் குழப்பங்களுக்கு அப்பாற்பட்டவன். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு எழுந்த சந்தேகங்கள் கிருஷ்ணரின் ஏற்பாட்டினால் எழுந்தவையே. அச்சந்தேகங்களுக்கு விடையளிப்பதன் மூலம் மனித வாழ்வின் இலட்சியத்தைப் பக்குவப்படுத்திக்கொள்வதற்கு அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பகவத் கீதையின் ஐந்து விஷயங்கள்
பகவத் கீதையினால் தன்னுணர்வு பெற முடியும் என்றால், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் யாவை? என்னும் கேள்வி இயற்கையாக எழலாம். பகவத் கீதை, ஐந்து அடிப்படை உண்மைகளைத் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்கு கின்றது: 1) எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இறைவன் (ஈஸ்வரன்), 2) உயிர்வாழிகள் (ஜீவன்), 3) ஜட இயற்கை (பிரக்ருதி), 4) ஜட இயற்கை தோன்றி மறைவதைக் குறிக்கும் காலம் (காலம்), 5) ஜீவன்களின் செயல் (கர்மா).
ஈஸ்வரன்: எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இவர், கிருஷ்ணர், பரமாத்மா, அல்லது பிரம்மன் என்று அறியப்படுகிறார். ஜீவன்களும் ஜட இயற்கையும் இவருக்குக் கீழ்படிந்த சக்திகளே. இவரது ஆணையின் கீழ்தான் ஜட இயற்கை செயல்படுகிறது. இயற்கைக்குப் பின்னால் இறைவன் இருப்பதை அறியாதவர்கள், மோட்டார் வாகனத்திற்குப் பின்னால் ஓட்டுநர் இருப்பதை அறியாத குழந்தையைப் போன்றவர்கள். அந்த இறைவன் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே, பரம்பொருளை அருவப் பிரம்மனாக அல்லது பரமாத்மாவாக உணர்வதைக் காட்டிலும் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணராக உணர்தலே சிறந்தது. குன்றிய அறிவுடையவர்களே பரம் பொருள் அருவமானது என்று கருது கின்றனர். ஜட இயற்கைக்கு எப்போதும் அப்பாற்பட்டவராகத் திகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இவ்வுலகிற்கு இறங்கிவரும் போது ஒருபோதும் ஜட இயற்கையினால் களங்கமடைவதில்லை.
ஜீவன்: ஜீவன்கள் எனப்படும் உயிர் வாழிகள், ஈஸ்வரனின் அம்சங்களாவர். தங்கத்தின் ஒரு துகள் எவ்வாறு தங்கமோ, கடல் நீரின் ஒரு துளி எவ்வாறு உப்புக் கரிக்கின்றதோ, அவ்வாறே ஈஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்களான ஜீவன்களுக்கும் அந்த முழுமுதற் கடவுளின் குணங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. ஜீவன்களுக்கு உணர்வுகள் இருப்பதால், அவர்கள் பிரக்ருதியைக்காட்டிலும் உயர்ந்தவர்கள். இருப்பினும், அவர்கள் ஒருபோதும் இறைவனுக்கு இணையாக மாட்டார்கள். அவர்கள் என்றுமே (ஜடத்தில் கட்டுண்ட நிலையிலும் சரி, முக்தி பெற்ற நிலையிலும் சரி) இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக உள்ளனர். ஜீவன்கள் ஜடத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் இந்த ஜடவுலகத்தில் பந்தப்படுகின்றனர். அதிலிருந்து விடுபட்டு தன்னுடைய உண்மையான உணர்விற்குத் திரும்பு வதே முக்தியடைதல் எனப்படும். வயிற்றிற்கு உணவளிப்பதால் உடலின் இதர பாகங்கள் திருப்தியடைவதுபோல, வேருக்குத் தண்ணீர் ஊற்றுவதால் மரத்தின் இதர பாகங்கள் திருப்தியடைவது போல, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தொண்டாற்றும்போது அவரின் அம்சங்களான ஜீவன்கள் பூரண திருப்தியடைகின்றன.
பிரக்ருதி: இது கிருஷ்ணரின் சக்தி என்றபோதிலும், கீழ்நிலை சக்தி, அதாவது ஜீவ சக்தியைக் காட்டிலும் கீழ்நிலையில் இருப்பதாகும். ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), தமோ குணம் (அறியாமை குணம்) ஆகிய முக்குணங்களால் அமைந்ததே இந்த ஜட இயற்கை. பிரக்ருதியின் தோற்றம் பொய்யானதாக சில தத்துவவாதிகள் கூறுகின்றனர்; ஆனால் பகவத் கீதையின்படி இதன் தோற்றம் பொய்யானதல்ல, மாறாக தற்காலிகமானதாகும். பிரக்ருதி (இயற்கை) ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி, சில காலம் இருந்து, பின் மறைகின்றது. ஆனால் இந்தச் சுழற்சி நித்தியமாகச் செயல்படுவதால், பிரக்ருதி நித்தியமானதாகும், பொய்யல்ல.
காலம்: ஜட இயற்கையானது காலத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது. இப்பௌதிக தோற்றத்தின் காலம், பரம் பொருளின் சக்தியினால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் காலம் முடிவுபெற்றவுடன், இவ்வுலகின் நிரந்தரமற்ற தோற்றங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். பின்னர், அதே காலத்தின் ஏற்பாட்டில் இவ்வுலகம் மீண்டும் படைக்கப்படுகிறது.
கர்மா: இயற்கை குணங்களின் கலவையினால், நித்தியமான காலத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறும் செயல்கள், கர்மா எனப்படுகின்றன. இச்செயல்கள் நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து வருபவை. அவற்றின் அடிப்படையில் நாம் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றோம். ஈஸ்வரன், ஜீவன், பிரக்ருதி, காலம், கர்மா ஆகிய ஐந்தில் கர்மாவைத் தவிர இதர நான்கும் நித்தியமானவை. கர்மத்தின் விளைவுகள் மிகவும் பழையதாக இருக்கலாம், ஆனால் அவற்றை நம்மால் மாற்ற இயலும். கர்ம பந்தத்திலிருந்து நிரந்தரமாக விடுபட முடியும், அதற்கான வழிமுறை கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேத ஞானத்தைப் புரிந்துகொள்ளுதல்
வேத ஞானத்தை நாம் அப்படியே, உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, மலம் அசுத்த மானது என்று கூறும் வேத சாஸ்திரங்கள், பசுஞ்சாணம் தூய்மையானது என்று கூறுகின்றன. இது முரண்பட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் இதில் முரண்பாடுகள் கிடையாது. பசுஞ்சாணம் மிகச்சிறந்த கிருமிநாசினி என்பது நவீன விஞ்ஞானமும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். எனவே, எல்லாத் தவறுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட வேத ஞானம் முழுமையானதாகும். பகவத் கீதை அத்தகைய எல்லா வேத ஞானத்திற்கும் சாரமாக விளங்குகிறது.
வேத ஞானத்தை ஆராய்ச்சியின் மூலம் தெரிந்து கொள்வது என்னும் கேள்விக்கே இடமில்லை. மிகவுயர்ந்த குருவாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரி லிருந்து வரும் பரம்பரையின் மூலமாக, அர்ஜுனனைப் போன்று எந்த எதிர்ப்புகளும் இன்றி வேத ஞானம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மேலும், கீதையின் ஒரு பகுதியை ஏற்று வேறொரு பகுதியைப் புறக்கணித்தல் என்பதும் அனுமதிக்கப்படுவதில்லை; ஏனெனில், வேத ஞானம் எல்லாவித குறைபாடுகளுக்கும் அப்பாற்பட்டது. சாதாரண மனிதன் நான்கு விதக் குறைபாடுகளுக்கு உட்பட்டவன், குறை பாடுகளுக்கு அப்பாற்பட்ட கோவிந் தனால் பிரம்மாவின் இதயத்தில் உபதே சிக்கப்பட்ட வேத ஞானத்தை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், அர்ஜுனனைப் போன்று சுயநல ஆசைகளைக் கைவிட்டு சரணடைந்த நிலையில் கீதை ஏற்கப்பட வேண்டும்.
கீதையைப் பயில்வதன் பலன்
நாய்களையும் பூனைகளையும் போல சண்டையிட்டுக் கொள்வதற்காக மனிதன் இவ்வுலகில் பிறக்கவில்லை. மனிதன் தனது வாழ்வின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இதற்கான வழிமுறை எல்லா வேத இலக்கியங்களிலும் உள்ளது, இதன் சாராம்சம் கீதையில் கூறப்பட்டுள்ளது. கீதையின் அறிவுரையை நாம் பின்பற்றி னால், இப்பௌதிக உலகிற்கு அப்பாலுள்ள ஆன்மீக உலகத்தை அடைய இயலும்.
இந்த பௌதிக உலகிலுள்ள அனைத்துமே தற்காலிகமானவை; ஆனால் இந்த நிரந்தரமற்ற உலகத்திற்கு அப்பாலுள்ள ஸநாதன உலகத்தைப் பற்றிய தகவல் பகவத் கீதையில் உள்ளது. ஸநாதன என்றால், நிரந்தரமானது என்று பொருள். ஸநாதனமான ஜீவன்கள் ஸநாதனமான இறைவனுடன் ஸநாதன உலகில் வசிக்க வேண்டியவர்கள். ஜீவன்களின் அக்கடமை, ஸநாதன தர்மம் எனப்படுகிறது. நிரந்தரமான அந்த தர்மத்தினை ஜீவன்களிடமிருந்து பிரிக்க முடியாது. ஸநாதன தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையோ மதப்பிரிவோ அல்ல. நீரிலிருந்து திரவத் தன்மையையும் நெருப்பிலிருந்து வெப்பத் தையும் பிரிக்க முடியாததைப் போல, ஜீவனிடமிருந்து அதன் தர்மத்தினை (தன்மையினை) பிரிக்க முடியாது.
ஜீவன்களிடமிருந்து பிரிக்க முடியாமல் விளங்கும் தன்மை என்ன என்று நாம் ஆராய்ந்தால், ஒவ்வொரு ஜீவனிடமும் சேவை செய்யும் மனப்பான்மை இருப் பதைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு வரும் (கணவன், மனைவி, சமுதாயம், முதலாளி, நாய்… என) யாராவது ஒருவருக்கு சேவை செய்து கொண்டுள் ளோம். ஆனால் உண்மையில் நாம் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டியவர்கள். அவருக்கு அன்புத் தொண்டு புரியாமல், ஜீவன்கள் மகிழ்ச்சியாக இருத்தல் என்பது சாத்தியமல்ல.
கிருஷ்ணரை வழிபடுவதற்குப் பதிலாக, பல்வேறு தேவர்களை வழிபடுதல் பகவத் கீதையில் அங்கீகரிக்கப்பட வில்லை. பௌதிக ஆசைகளால் அறிவை இழந்தவர்கள் மட்டுமே தேவர்களை வழிபடுவர் என்று கூறப்பட்டுள்ளது. தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகில் பிறவி எடுப்பர். ஆனால் பிரம்ம லோகம் முதற்கொண்டு இந்த உலகிலுள்ள எல்லா கிரகங்களும் தற்காலிகமானவை. அவற்றிற்கு அப்பாலுள்ள எண்ணற்ற வைகுண்ட லோகங்களில் பகவான் தனது பக்தர்களுடன் பரமமான லீலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆன்மீக கிரகங்கள் எல்லாவற்றிலும் மிகவுயர்ந்த கிரகமான கோலோக விருந்தாவனம் எனும் கிரகம், மூல புருஷோத்தமரான ஸ்ரீ கிருஷ்ணரின் வாசஸ்தலமாகும். கிருஷ்ணரின் லோகம், சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ ஒளியூட்டப்படுவதில்லை; அவையனைத்தும் சுய ஒளி கொண்ட கிரகங்கள். அங்கு நித்திய வாசம் செய்யும் கிருஷ்ணர், தன்னைப் பற்றிய மக்களின் கற்பனைகளைத் தடுப்பதற்காகவும், தனது நித்திய லீலைகளை வெளிப்படுத்தி இவ்வுலகிலுள்ள கட்டுண்ட ஜீவன்களைக் கவர்வதற்காகவும் இந்த பூவுலகில் தனது சுய ரூபத்தில் அவதரிக்கின்றார். அவர் நம்மில் ஒருவராக நம்முடன் விளையாடுவதால், மந்த புத்தியுடையோர் அவரை இழிந்துரைக்கின்றனர்; அது மிகவும் தவறு.
நாம் வாழும் இந்த பௌதிக உலகம், ஆன்மீக உலகத்தின் திரிபடைந்த பிம்ப மாகும். நிழலைப் போன்ற இவ்வுலகில் உண்மையான இன்பமோ மகிழ்ச்சியோ கிடையாது; அவை ஆன்மீக உலகில் கிடைக்கக்கூடியவை. பௌதிக வானிற்கு அப்பாற்பட்ட அவ்வுலகை அடைவதற்கு ஒவ்வொருவரும் இச்சையும் ஏக்கமும் கொள்ள வேண்டும்; ஏனெனில், அந்தத் திருநாட்டை அடைந்தவர் இப்பௌதிக உலகிற்கு மீண்டும் திரும்ப வேண்டிய தில்லை.
அவ்வுலகை அடைவது எப்படி?
அடுத்ததாக, பரம புருஷ பகவானின் அந்த உயர்ந்த வாசஸ்தலத்தை எவ்வாறு அடைவது என்னும் கேள்வி எழலாம். மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைப்பவன் அவரின் லோகத்தை அடைய முடியும் என்று பகவத் கீதையில் (8.5) கொடுக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய பிறவியில் இறைவனின் திருநாட்டிற்கு உயர்வு பெற நாம் நம்மைத் தயார் செய்தால், இந்த ஜடவுலகை விட்டு வெளியேறிய பின் ஆன்மீக உலகை அடைவது நிச்சயம். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று பகவான் உறுதி கூறுகிறார்.
பௌதிக எண்ணத்தில் மூழ்கியுள்ள நாம், ஆன்மீக உலகை அடைய வேண்டுமெனில், நமது எண்ணம் ஆன்மீகமாக மாற வேண்டும். செய்தித்தாள்கள், நாவல்கள், மற்றும் பல்வேறு புத்தகங்களுக்குப் பதிலாக, நமது சிந்தனையை பகவத் கீதை, பாகவதம், மஹாபாரதம் போன்ற வேத இலக்கியங்களை நோக்கித் திருப்ப வேண்டும். அதன் மூலம் மரண நேரத்தில் இறைவனை நினைப்பது சாத்தியமாகும். மனதையும் புத்தியையும் தனக்கு அர்ப்பணித்து தன்னை நினைத்தபடி, ஒவ்வொருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்றும்படி கிருஷ்ணர் (8.7) அறிவுறுத்துகிறார். வெறுமனே அவரை நினைத்துக் கொண்டு, வேலைகளை எல்லாம் விட்டுவிடும்படி கிருஷ்ணர் கூறவில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துகளை அவர் கீதையில் உபதேசிக்கவில்லை. வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் கிருஷ்ணரை நினைவுகொள்ள பழகிக் கொள்ளாவிடில், மரண நேரத்தில் அவரை நினைத்தல் இயலாது. கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிப்பதால் அந்நிலை எளிதில் சாத்தியமாகும்.
பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் அஷ்டாங்க யோகப் பயிற்சியைப் பற்றி விளக்கியபோது, அப்பயிற்சியை தன்னால் செய்ய இயலாது என்று அவன் கூறினான் (6.33). அதற்குப் பதிலளித்த பகவான், தனது பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப் பவனே உயர்ந்த யோகி (6.47) என்று கூறினார். பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கு கிருஷ்ணரின் சிந்தனையில் நாம் நமது மனதையும் புத்தியையும் ஈடுபடுத்த வேண்டும்; அப்போது புலன்களும் தாமாகவே அவர்தம் தொண்டில் ஈடுபடும். மனிதன் தனது ஆயுளின் மீதமுள்ள காலத்தினை முழுமுதற் கடவுளின் நினைவில் கழிக்கப் பயிற்சி செய்ய வேண்டும். அப்பயிற்சியே பக்தி எனப்படும். பக்தியின் ஒன்பது விதமான வழிமுறைகளில், பகவத் கீதையை தகுதியுள்ள நபரிடமிருந்து கேட்டல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அங்குமிங்கும் அமைதியற்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் நமது மனம், கிருஷ்ணரின் ஒலியதிர்வில் அமைதி பெறும். கீதையின் கதவுகள் எல்லாருக்கும் திறந்துள்ளன, யாருக்கும் தடை இல்லை. அனைத்துப் பிரிவைச் சார்ந்தவர்களும் கிருஷ்ணரை அவரது நாமத்தைச் சொல்லி அணுக இயலும் (9.32-33).
முடிவாக, பகவத் கீதை மிகவும் கவனத்துடன் படிக்க வேண்டிய திவ்யமான சாஸ்திரமாகும். கீதையைப் படிப்பதால் ஒருவனது பூர்வ ஜன்ம பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகி ஓடும். தன்னிடம் சரணடைபவர்களை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாக கிருஷ்ணர் (18.66) உறுதியளிக்கின்றார். கங்கையில் குளிப்பதைக்காட்டிலும், கீதை என்னும் புனித கங்கையில் குளிப்பவன், தனது எல்லாக் களங்கங்களையும் கழுவிவிடுகின்றான். கீதையைப் படிப்பவர்களுக்கு வேறு எந்த நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை; இந்த ஒரு நூலே போதுமானது. எல்லா உபநிஷத்துகளின் சாரமான கீதை பசுவைப் போன்றது. அர்ஜுனன் என்ற கன்றினைக் கொண்டு, கிருஷ்ணரால் கறக்கப்பட்ட அந்த அமிர்தப் பால், அறிவு சான்றவர்களாலும் தூய பக்தர்களாலும் அருந்தப்பட வேண்டியதாகும்.
உலகம் முழுமைக்கும் பகவத் கீதை என்னும் ஒரே நூல் இருக்கட்டும்; ஸ்ரீ கிருஷ்ணர் என்ற ஒரே கடவுள் இருக்கட்டும்; ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் ஒரே மந்திரம் இருக்கட்டும்; அவருக்குத் தொண்டு செய்தல் என்னும் ஒரே செயல் இருக்கட்டும்.
(அறிமுகத்தின் இறுதியில், பகவத் கீதை உண்மையுருவில் பெறப்பட்ட குரு சீடப் பரம்பரையினை ஸ்ரீல பிரபுபாதர் பட்டியலிட்டுள்ளார்)
பகவத் கீதையைப் படித்தல், பகவானின் திருநாமத்தை உச்சரித்தல் போன்ற பக்திச் செயல்களின் மூலம் ஸநாதன உலகை அடைய முடியும்.