தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் பதினாறு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் பதினேழாம் அத்தியாயத்தையும் அடுத்த இதழ்களில் இறுதி அத்தியாயத்தையும் காணலாம்.
பதினாறாம் அத்தியாயத்தின் சுருக்கம்
முக்தியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடிய 26 தெய்வீக குணங் களையும் ஆறு அசுர குணங்களையும் பட்டியலிட்ட கிருஷ்ணர், அசுர குணங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பயமின்மை, தானம், அகிம்சை போன்றவை தெய்வீக குணங்கள்; தற்பெருமை, கோபம், கொடூரம் போன்றவை அசுர குணங்களாகும். அசுரர்கள் செய்ய வேண்டியவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் அறியாதவர்கள். தூய்மையோ நடத்தையோ இல்லாத இவர்கள் கடவுள் இல்லை என்றும் காமமே முக்கியம் என்றும் கூறி, உலகை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவர். பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் பெயருக்காக சில சமயங்களில் யாகங்கள் செய்வர், இருப்பினும் இவர்களால் என்றுமே கிருஷ்ணரை அடைய முடியாது. இத்தகைய அசுரத் தன்மையிலிருந்து விடுபட விரும்புவோர், காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் கதவுகள் என்பதை உணர்ந்து, சாஸ்திரங்களின் வழியாகச் செயல்பட முயல வேண்டும். சாஸ்திரங்களை மதிக்காதவர்கள் பக்குவநிலையை அடைய மாட்டார்கள். மகிழ்ச்சி, பரம கதி ஆகியவற்றையும் அடைய மாட்டார்கள்.
முக்தியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடிய 26 தெய்வீக குணங் களையும் ஆறு அசுர குணங்களையும் பட்டியலிட்ட கிருஷ்ணர், அசுர குணங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பயமின்மை, தானம், அகிம்சை போன்றவை தெய்வீக குணங்கள்; தற்பெருமை, கோபம், கொடூரம் போன்றவை அசுர குணங்களாகும். அசுரர்கள் செய்ய வேண்டியவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் அறியாதவர்கள். தூய்மையோ நடத்தையோ இல்லாத இவர்கள் கடவுள் இல்லை என்றும் காமமே முக்கியம் என்றும் கூறி, உலகை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவர். பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் பெயருக்காக சில சமயங்களில் யாகங்கள் செய்வர், இருப்பினும் இவர்களால் என்றுமே கிருஷ்ணரை அடைய முடியாது. இத்தகைய அசுரத் தன்மையிலிருந்து விடுபட விரும்புவோர், காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் கதவுகள் என்பதை உணர்ந்து, சாஸ்திரங்களின் வழியாகச் செயல்பட முயல வேண்டும். சாஸ்திரங்களை மதிக்காதவர்கள் பக்குவநிலையை அடைய மாட்டார்கள். மகிழ்ச்சி, பரம கதி ஆகியவற்றையும் அடைய மாட்டார்கள்.
பதினாறாம் அத்தியாயத்திற்கும் பதினேழாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
நான்காம் அத்தியாயத்தின் முப்பத்தொன்பதாம் ஸ்லோகத்தில், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையில் நம்பிக்கையுடையவன், படிப்படியாக ஞானத்தின் தளத்திற்கு உயர்வு பெற்று, பக்குவநிலையை அடைகின்றான் என்று கூறப்பட்டது. பதினாறாம் அத்தியாயத்தில் சாஸ்திரங்களை பின்பற்றாதவன் அசுரன் என்றும், நம்பிக்கையுடன் பின்பற்றுபவன் தேவன் என்று கூறப்பட்டது. இருப்பினும், சாஸ்திரங்களில் இல்லாத விதிமுறைகளை பல்வேறு நபர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பின்பற்றி வருகின்றனர். அவர்களின் நிலை என்ன என்ற கேள்வி இயற்கையாக எழுகின்றது. பதினேழாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் இந்த முக்கியமான கேள்வியினை எழுப்பு கிறான்: சாதாரண மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனை கடவுளாக்கி, தங்களது நம்பிக்கையை அவன் மீது வைத்து வழிபடுபவர்கள், ஸத்வ, ரஜோ, தமோ என்னும் குணங்களில் எந்த குணத்தில் உள்ளனர்?
நான்காம் அத்தியாயத்தின் முப்பத்தொன்பதாம் ஸ்லோகத்தில், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையில் நம்பிக்கையுடையவன், படிப்படியாக ஞானத்தின் தளத்திற்கு உயர்வு பெற்று, பக்குவநிலையை அடைகின்றான் என்று கூறப்பட்டது. பதினாறாம் அத்தியாயத்தில் சாஸ்திரங்களை பின்பற்றாதவன் அசுரன் என்றும், நம்பிக்கையுடன் பின்பற்றுபவன் தேவன் என்று கூறப்பட்டது. இருப்பினும், சாஸ்திரங்களில் இல்லாத விதிமுறைகளை பல்வேறு நபர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பின்பற்றி வருகின்றனர். அவர்களின் நிலை என்ன என்ற கேள்வி இயற்கையாக எழுகின்றது. பதினேழாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் இந்த முக்கியமான கேள்வியினை எழுப்பு கிறான்: சாதாரண மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனை கடவுளாக்கி, தங்களது நம்பிக்கையை அவன் மீது வைத்து வழிபடுபவர்கள், ஸத்வ, ரஜோ, தமோ என்னும் குணங்களில் எந்த குணத்தில் உள்ளனர்?
நம்பிக்கையை தீர்மானிக்கும் குணங்கள்
அர்ஜுனனின் கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில், உடல் பெற்ற ஜீவனின் சுவாபத்திற்கு ஏற்ப, அவனது நம்பிக்கை ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படுவதாக பதிலளித்து, அவற்றை விளக்க ஆரம்பிக்கின்றார். சாஸ்திரங்களின் சட்டதிட்டங்களைப் பின்பற்றாமல், சோம்பேறித்தனத்தில் வாழ்பவர்கள் ஜட இயற்கையின் வேறுபட்ட குணங்களால் ஆளப்படுகின்றனர். ஒருவன் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், அவனிடம் சில நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் அவனுடைய இயற்கைக்கு தகுந்தாற் போல அவனது நம்பிக்கை மூன்றாக பிரிக்கப்படுகிறது.
ஆத்மா தனது தூய நிலையில் ஜட இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக உள்ளான், அந்த நிலையில் அவன் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வழிபடுகிறான். ஜட இயற்கையின் ஸத்வ குணத்தில் இருப்பவர்கள் தேவர்களையும், ரஜோ குணத்தில் இருப்பவர்கள் அசுரர்களையும், தமோ குணத்தில் இருப்பவர்கள் பேய்களையும் பூதகணங்களையும் வழிபடுகின்றனர்.
சாஸ்திர விதிகளின்படி கிருஷ்ணர் மட்டுமே வழிபாட்டிற்குரியவர். சாஸ்திர விதிகளை முறையாக அறியாத ஸத்வ குணத்தில் இருப்போர், பிரம்மா, சிவன், இந்திரன், சந்திரன் போன்ற தேவர்களை வழிபடுகின்றனர். சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாத ரஜோ குணத்தைச் சார்ந்தோர், யாரேனும் ஒரு சாதாரண மனிதனை கடவுளாக வழிபடுகின்றனர், அல்லது உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடமிருந்து சில நன்மைகளைப் பெறுவதற்காக அவர்களை வழிபடுகின்றனர். இந்தியாவின் சில குக்கிராமங்களில் மக்கள் பேய்களை வழிபடுவதையும் நாம் காணலாம், அத்தகு வழிபாடு தமோ குணத்தைச் சார்ந்ததாகும்.
காமத்தினாலும் பற்றுதலினாலும் பந்தப்பட்டவர்கள் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத கடுமையான தவங்களை தற்பெருமைக்காக அஹங்காரத்துடன் செய்வர். அத்தகு தவங்கள் ஜட உடலின் மூலக்கூறுகளை மட்டுமின்றி, உள்ளிருக்கும் பரமாத்மாவிற்கும் துன்பம் தரக்கூடியதாகும். அந்த முட்டாள்கள் அசுரர்களாக அறியப்படுகின்றனர். உதாரணமாக, ஏதேனும் அரசியல் உள்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உண்ணாவிரதம் இருப்பவர்கள் பகவத் கீதையின்படி நிச்சயமாக அசுரத் தன்மையுடையவர்கள். அவர்களது செயல்கள் சாஸ்திர விதிகளுக்கு எதிரானவை.
முக்குணங்களைச் சார்ந்த உணவுகள்
ஒவ்வொருவர் விரும்பும் உணவிலும்கூட முக்குணங்களுக்கு ஏற்ப மூன்று வகை உண்டு. இது யாகங்கள், தவங்கள், மற்றும் தானத்திற்கும் பொருந்தும்.
ஆயுளை நீட்டித்து, வாழ்வைத் தூய்மைப்படுத்தி, பலம், ஆரோக்கியம், சுகம், மற்றும் திருப்தியைக் கொடுக்கும் உணவுகள், ஸத்வ குணத்தில் இருப்போருக்கு பிரியமானவை. இத்தகு உணவுகள் ரசமுள்ளவையாக, கொழுப்பு சத்தும் ஊட்டச் சத்தும் மிக்கவையாக, இதயத்திற்கு இதமளிப்பவையாக உள்ளன.
மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, காரமான, உலர்ந்த, மற்றும் எரிகின்ற உணவுப் பொருட்கள் ரஜோ குணத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமானதாகும். இத்தகு உணவுகள் துன்பம், சோகம், மற்றும் நோயை உண்டாக்குகின்றன.
உண்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்ட, சுவையற்ற, பழைய, ஊசிப்போன, எச்சில்பட்ட, தீண்டத்தகாத பொருட்களைக் கொண்ட உணவுகள் தமோ குணத்தில் உள்ள மக்களால் விரும்பப்படுகின்றன.
முக்குணங்களைச் சார்ந்த யாகங்கள்
பலனை எதிர்பார்க்காமல் கடமையை நிறைவேற்றுவதற்காக சாஸ்திர விதிகளின் படி செய்யப்படும் யாகங்கள், ஸத்வ குணத்தைச் சார்ந்ததாகும். கோவிலுக்குச் செல்லுதல் தனது கடமை என்ற எண்ணத்துடன் கோவிலுக்குச் செல்வோர் இப்பிரிவைச் சார்ந்தவர்கள். விக்ரஹத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக மட்டுமே அங்கு செல்ல வேண்டுமே தவிர, பொருளாதார நன்மைக்காக அல்ல.
ஆனால் பௌதிக நன்மையை அடைவதற்காக அல்லது தற்பெருமைக்காகச் செய்யப்படும் யாகங்கள், ரஜோ குணத்தைச் சார்ந்தவை. கடமைக்காக அன்றி, ஸ்வர்க லோகத்திற்குச் செல்லுதல் உட்பட வேறு உள்நோக்கத்துடன் செய்யப்படும் யாகங்கள் இப்பிரிவில் அடங்குபவை.
சாஸ்திர விதிகளை மதிக்கமால், பிரசாத விநியோகம் இன்றி, வேத மந்திரங்களின் உச்சாடனம் இன்றி, புரோகிதர்களுக்கான தட்சணை இன்றி, நம்பிக்கையும் இன்றி செய்யப்படும் யாகம், தமோ குணத்தைச் சார்ந்தது.
முக்குணங்களைச் சார்ந்த தவங்கள்
தவங்கள் மூன்று வகைப்படும்: உடலின் தவங்கள், வாக்கின் தவங்கள், மனதின் தவங்கள்.
முழுமுதற் கடவுளை வழிபடுதல், உயர்ந்தவர்களுக்கு (பிராமணர்கள், ஆன்மீக குரு, தாய், தந்தையர்) மரியாதை செலுத்துதல், உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், நடத்தையில் எளிமையாக இருத்தல், திருமண வாழ்விற்குப் புறம்பான காம வாழ்வில் ஈடுபடாது பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்தல், அகிம்சை ஆகியவை உடலின் தவங்களாகும்.
உண்மையைப் பேசுதல், இனிமையாகப் பேசுதல், நன்மையளிக்கும்படி பேசுதல். பிறரது மனதை துன்புறுத்தாமல் பேசுதல், வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை வாக்கின் தவங்களாகும்.
புலனின்பத்தில் ஈடுபடாமல் திருப்தியோடு இருத்தல், எளிமையுடன் இருத்தல், தன்னுணர்விற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் மௌனமாக இருத்தல், சுயக் கட்டுப்பாடு, ஒளிவு மறைவின்றி தூய்மையாக இருத்தல் ஆகியவை மனதின் தவங்களாக அறியப்படுகின்றன.
இம்மூன்று தவங்களும் ஜட இலாபங்களை எதிர்பார்க்காமல், உன்னத நம்பிக்கையுடன் பக்தர்களால் அனுஷ்டிக்கப்படும்போது, அவை ஸத்வ குணத்தின் தவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மானம், மரியாதை, மற்றும் வழிபாட்டைப் பெறுவதற்காக, தற்பெருமையுடன் செய்யப்படும் தவங்கள் ரஜோ குணத்தில் இருப்பவை. இத்தகு தவங்கள் தற்காலிகமானவை; இவை சில காலத்திற்கு வேண்டுமானால் தொடரலாம், ஆனால் நிரந்தரமானவை அல்ல.
பிறரை அழிப்பதற்காகவோ துன்புறுத்துவதற்காகவோ, தன்னையே வருத்திக் கொண்டு முட்டாள்தனமான முறையில் செய்யப்படும் தவங்கள், தமோ குணத்தில் இருப்பவையாகக் கருதப்படுகின்றன.
முக்குணங்களைச் சார்ந்த தானம்
எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், கடமையை நிறைவேற்றும் விதத்தில், ஆன்மீகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு, முறையான இடத்தில், முறையான காலத்தில் செய்யப்படும் தானம், ஸத்வ குணத்தைச் சார்ந்தது. சில சமயங்களில் இரக்கத்தின் காரணமான ஏழைகளுக்கு தானம் வழங்கப்படுகிறது, ஆனால் தானம் பெறுவதற்கான தகுதி அந்த ஏழையிடம் இல்லாவிடில், அத்தகு தானத்தினால் எந்த ஆன்மீக முன்னேற்றமும் இருக்காது. வேறு விதமாகக் கூறினால், பாகுபாடற்ற தானங்கள் வேத இலக்கியங்களில் பரிந்துரைக்கப்படவில்லை.
பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து, ஏதேனும் பலனை விரும்பி, விருப்பமின்றி கொடுக்கப்படும் தானம், ரஜோ குணத்தைச் சார்ந்ததாகும். ஸ்வர்க லோகம் செல்வதற்காக தானம் கொடுத்தல், தானம் கொடுத்த பின்னர் ஏன் கொடுத்தோம் என்று வருத்தப்படுதல், கட்டாயத்தின் பேரில் தானமளித்தல் போன்றவை இப்பிரிவில் அடங்கும்.
தூய்மையற்ற இடத்தில், முறையற்ற காலத்தில், தகுதியற்ற நபர்களுக்கு, அல்லது தக்க கவனமும் மரியாதையும் இன்றி வழங்கப்படும் தானம், தமோ குணத்தைச் சேர்ந்ததாகும்.
முடிவு: ஓம் தத் ஸத்
தவம், யாகம், உணவு, தானம் ஆகியவற்றில் முக்குணங்களின் களங்கங்கள் இருப்பதால், அவை பந்தப்படுத்துபவையே. இருப்பினும், ஓம் தத் ஸத் என்னும் நித்தியமான பரம்பொருளை அவை குறிக்கோளாகக் கொள்ளும்போது ஆன்மீகத்தில் ஏற்றம் பெற உதவுகின்றன. ஓம் என்பது முழுமுதற் கடவுளைக் குறிக்கும், தத் என்பது முக்தியடைவதற்காக உச்சரிக்கப்படும் சப்தம், ஸத் என்பது பரம்பொருளின் திருப்திக்காக செய்யப்படும் செயல்கள்–இவ்வாறாக, ஓம் தத் ஸத் என்னும் இம்மூன்று சொற்களும் பரம புருஷ பகவானைக் குறிப்பதற்காக பிராமணர்களால் உச்சரிக்கப்பட்டு வருகின்றன.
யாகம், தானம், தவம் ஆகியவை அனைத்தும் ஓம்காரத்துடன் தொடங்கப்பட்டு, பலனை எதிர்பார்க்காமல் தத் என்னும் சப்த உச்சரிப்புடன் நிகழ்ந்தால் முக்தியடைய முடியும். இவை முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படும் போது ஸத் என்று அழைக்கப்படுகின்றன.
முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கான நோக்கமின்றியின் அவரின் மீதான நம்பிக்கையின்றியும் செய்யப்படும் யாகங்கள், தவங்கள், மற்றும் தானங்கள் நிலையற்றவை, அஸத் என்று அழைக்கப்படுகின்றன. இவை இப்பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் பயனற்றவை.
வேத அறிவுரைகளைப் பின்பற்றுவதன் இறுதி நோக்கம் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே. அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின்படி கிருஷ்ண உணர்வை நேரடியாக ஏற்பவன் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவன். படிப்படியாக உயர்வு பெறுவதற்கு வழிமுறை உள்ளபோதிலும், தூய பக்தர்களின் சங்கத்தினால் நேரடியாக கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால், அதுவே மிகச்சிறந்த வழி. இதுவே பதினேழாம் அத்தியாயத்தின் சுருக்கமாகும்.