அருளிய பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் ஒன்பது அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் பத்தாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.
பூரணத்தின் வைபவம்
ஒன்பதாம் அத்தியாயத்தின் சுருக்கம்
பொறாமையற்ற நபர்கள் கிருஷ்ண ரைப் பற்றிக் கேட்பதால் பெறக்கூடிய அறிவு, எல்லா அறிவின் அரசனாகவும் மிகமிக இரகசியமானதாகவும் உள்ளது. கிருஷ்ணர் அனைத்தையும் படைப்பவர், ஆனால் அவர் அவற்றிலிருந்து வேறுபட்டவர். ஜட இயற்கையின் மீது தனது பார்வையைச் செலுத்துவதாலேயே அவர் அதைப் படைக்கின்றார். இருப்பினும் முட்டாள்கள் அவரை சாதாரண மனிதனாக நினைத்து ஏளனம் செய்கின்றனர். அத்தகையோரின் அனைத்து முயற்சிகளும் அழிந்துவிடும். கிருஷ்ணரை இறைவனாக ஏற்று, எப்போதும் கீர்த்தனத்தில் ஈடுபட்டுள்ள மஹாத்மாக்கள் அவரது தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் இருக் கின்றனர். கிருஷ்ணரை நேரடியாக வழிபடாத மக்களில் சிலர் அவரது பௌதிகத் தோற்றத்தையும், சிலர் தேவர்களையும் வழிபடுகின்றனர். தேவர்களை வழிபடுவோர் தேவர்களை அடைவர் என்றபோதிலும், அத்தகு வழிபாடு தவறானதாகும். கிருஷ்ணரைத் தூய பக்தியுடன் வழிபடுவோரை அவரே கவனித்துக் கொள்கிறார். கிருஷ்ணரை வழிபடுதல் மிகவும் எளிதானது. அனைவரையும் சமமாகக் காணும் கிருஷ்ணர் தனது பக்தர்களிடம் தனிக்கவனம் செலுத்துகிறார். பக்தன் ஏதேனும் காரணத்தினால் தவறு செய்தாலும், அவனை கிருஷ்ணர் பக்தனாகவே கருதி, விரைவில் அவன் நல்லவனாக மாற உதவி புரிகிறார். பக்தித் தொண்டில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பரம கதியை அடைய முடியும் என்பதால், அனைவரும் கிருஷ்ணரை நினைத்து, அவரது பக்தனாகி, அவரையே வழிபடும்படி பரிந்துரைக்கப்படுகின்றனர்.
ஒன்பதாம் அத்தியாயத்திற்கும் பத்தாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
ஒன்பதாம் அத்தியாயத்தின் இறுதி யில், தூய பக்தித் தொண்டையும் தனது பக்தர்களுடன் பழகும் முறையையும் விளக்கிய கிருஷ்ணர், மன்-மனா பவ மத்-பக்தோ, என்னையே நினைத்து என்னுடைய பக்தனாகு,” என்று தனது மிகமிக இரகசியமான உபதேசத்தை வழங்கினார். ஒன்பதாம் அத்தியாயத்தில் கூறப்பட்ட அறிவின் இரகசியமான பகுதியினை கிருஷ்ணர் இந்த அத்தியாயத்திலும் தொடர்கிறார். அத்தியாயம் பத்து, பூரணத்தின் வைபவம்” என்று தலைப்பிடப்பட் டுள்ளது. இவ்வத்தியாயத்தில் கிருஷ்ணர் தனது ஐஸ்வர்யங்கள், சக்திகள் மற்றும் நிலையைப் பற்றி மேலும்விளக்குகிறார்.
கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம்
அர்ஜுனன் தனது நண்பன் என்பதால், தன்னைப் பற்றிய விவரங்களை கிருஷ்ணர் அவனுக்கு தாராளமாக எடுத்துரைக்கின்றார். வாழ்வின் குறிக்கோள் பக்தியே என்பதையும் தானே பரம புருஷ பகவான் என்பதையும் ஏற்கனவே கூறிவிட்ட கிருஷ்ணர், அர்ஜுனனின் நம்பிக்கையை மேலும் வலுப்பெறச் செய்வதற்காக தன்னுடைய வைபவங்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறுகிறார். ஒரு நண்பனின் மாபெரும் நிலையை உணரும்போது, அவரை நண்பராகப் பெற்றவன் தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக நினைப்பதைப் போல, கிருஷ்ணரின் மிகவுயர்ந்த நிலையை நாம் உணர்ந்தால், அதனால் பெருமைப்படுவது நிச்சயம்.
தேவர்கள், மாபெரும் ரிஷிகள் என அனைவருக்கும் கிருஷ்ணரே மூலமாக இருப்பதால், யாராலும் அவரது எல்லையற்ற வைபவங்களை முழுமையாக உணர முடியாது. இருப்பினும் அவரே தன்னுடைய வைபவங்களை நமக்கு தெரியப்படுத்தும்போது, நம்மால் அவற்றின் ஒரு சிறு பகுதியைப் புரிந்துகொண்டு அவருக்குத் தொண்டாற்ற முடியும். கிருஷ்ணரை பிறப்பற்றவராகவும் ஆரம்பமற்றவராகவும் எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிபவன் தனது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவான். புத்தி, ஞானம், மயக்கத்திலிருந்து விடுதலை, வாய்மை, அகிம்சை, தவம், தானம் போன்ற பல்வேறு குணங்களும் கிருஷ்ணரால் படைக்கப்பட்டவையே. சப்த ரிஷிகள், நான்கு குமாரர்கள், இதர உயிரினங்கள் என அனைத்தும் கிருஷ்ணரி டமிருந்து தோன்றியவை என்பதை உண்மையாக அறிபவன், கிருஷ்ணரின் மீதான களங்கமற்ற பக்தித் தொண்டில் ஈடுபடுகிறான்.
கீதையின் முக்கியமான நான்கு ஸ்லோகங்கள்
என்னைப் பற்றி அறிபவன் எனது பக்தித் தொண்டில் ஈடுபடுகிறான் என்று கூறிய கிருஷ்ணர், பத்தாம் அத்தியா யத்தின் எட்டு முதல் பதி னொன்று வரையுள்ள நான்கு ஸ்லோகங்களில் கீதையின் அனைத்து கருத்துகளையும் சுருக்கமாக எடுத்துரைக்கின் றார். எனவே, இந்த நான்கு ஸ்லோகங்களும் கீதையின் சதுர்-ஸ்லோகங்கள் என்று அறியப்படுகின்றன.
ஸ்லோகம் எட்டு: ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.” தானே முழுமுதற் கடவுள் என்பதையும் பக்தியே உயர்ந்த வழிமுறை என்பதையும் கிருஷ்ணர் இதில் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
ஸ்லோகம் ஒன்பது: எனது தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னில் மூழ்கியுள்ளன, அவர்களது வாழ்க்கை எனது தொண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னைப் பற்றி தங்களுக்குள் உரையாடுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்வதிலும் இவர்கள் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்.” தனது பக்தர்கள் தன்னை எவ்வாறு வழிபடுகின்றனர் என்பதை கிருஷ்ணர் இங்கு தெளிவுபடுத்துகிறார். பக்த சங்கத்தின் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.
ஸ்லோகம் பத்து: எனது அன்புத் தொண்டில் இடையறாது ஈடுபட்டிருப்பவர்களுக்கு, என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்.” தன்னை வழிபடும் பக்தர்களிடம் தான் எவ்வாறு நடந்து கொள்கிறேன் என்பதை கிருஷ்ணர் இங்குத் தெரியப்படுத்தி நம்மை ஊக்கப்படுத்துகிறார். கிருஷ்ண பக்தியை ஏற்றுக்கொள்வோர் தங்களிடம் போதிய அறிவு இல்லை என்று எண்ண வேண்டாம், தேவையான அறிவை கிருஷ்ணரே கொடுப்பார் என்ற நம்பிக்கை இதன்மூலம் ஊட்டப்படுகிறது.
ஸ்லோகம் பதினொன்று: அவர்களிடம் விசேஷ கருணை யைக் காட்டுவதற்காக, அவர்களது இதயத்தினுள் வசிக்கும் நான், அறியாமையினால் பிறந்த இருளை ஞானமெனும் சுடர்விடும் தீபத்தினால் அழிக்கின்றேன்.” கிருஷ்ணர் தனது பக்தனுக்கு அறிவைக் கொடுக்கும்போது, அவனது இதயத்தில் இருக்கும் அனைத்து இருளும் மறைந்துவிடுகிறது.
கிருஷ்ணர் யார் என்பதையும் அவர் தனது தூய பக்தர்களிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதையும் அறிந்த நபர்கள் இயற்கையாக அவரிடம் சரணடைவர். அதன்படி, சதுர் ஸ்லோகத்தைக் கேட்ட பின்னர், கிருஷ்ணரை அர்ஜுனன் மீண்டும் புகழத் தொடங்குகிறான்.
அர்ஜுனன் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ளுதல்
கிருஷ்ணர் உரைத்த சதுர் ஸ்லோகத்தைக் கேட்டவுடன், கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், பரபிரம்மன், பரம சத்தியம், ஆதி தேவர் என்று அர்ஜுனன் ஏற்றுக் கொண்டான். அர்ஜுனன் கிருஷ்ணருடைய நண்பன்; அதனால் அவன் அவரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டான் என்று சிலர் குறை கூறலாம் என்பதால், எல்லா வேத இலக்கியங்களையும் தொகுத்த வியாச தேவர், மாமுனிவர்களான நாரதர், தேவலர், அஸிதர் போன்ற பலரும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுள்ளனர் என்று அர்ஜுனன் மேற்கோள் காட்டினான். (தொடர்ச்சி, 26ஆம் பக்கம்)
கிருஷ்ணர் கூறியவை அனைத்தையும் அர்ஜுனன் முழுமையாக ஏற்றான். பாதியை ஏற்று பாதியை மறுக்கக்கூடிய நபர்களால் பகவத் கீதையையும் கிருஷ்ணரையும் புரிந்துகொள்ள முடியாது. நாம் கீதையைப் பின்பற்ற விரும்பினால், அர்ஜுனனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கீதையை முழுமையாக ஏற்க வேண்டும். கிருஷ்ணர் எவ்வாறு இவ்வுலகம் முழுவதும் வியாபித்துள்ளார் என்பதை அறிய விரும்பிய அர்ஜுனன், அவற்றை விளக்கும்படி கிருஷ்ணரிடம் வேண்டினான். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் ஒருபோதும் சோர்வடையாத அர்ஜுனன், அமிர்தம் போன்ற அவரது வார்த்தைகளை மேன்மேலும் சுவைக்க விரும்பினான்.
கிருஷ்ணரின் வைபவங்கள்
அர்ஜுனனின் வேண்டுகோளைத் தொடர்ந்து கிருஷ்ணர் தான் இவ்வுலகில் எவ்வாறெல்லாம் வீற்றுள்ளேன் என்பதை எடுத்துரைக்கத் தொடங் கினார். கிருஷ்ணரின் வைபவங்கள் அளவற்றவை என்பதால், அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறினார். கிருஷ்ணர் கூறிய வைபவங்களைப் பார்க்கும்போது, இவ்வுலகில் சிறப்பானதாக என்னவெல்லாம் உள்ளதோ, அவையனைத்தும் கிருஷ்ணரின் சக்தியே என்பதை நம்மால் உணர முடியும். இவ்வுலகிற்கு ஒளி கொடுக்க எத்தனையோ மூலங்கள் உள்ளபோதிலும், அவற்றில் தலைசிறந்ததாகவும் தன்னிகரற்றதாகவும் விளங்குவது சூரியனே. அந்த சூரியன் கிருஷ்ணரே என்று விளக்கப்படுகிறது. (முழுப் பட்டியல் பக்கம் 25இல் கொடுக்கப்பட்டுள்ளது)
நீண்ட பட்டியலை தனது வைபவங்களாக எடுத்துரைத்த பின்னர், இவையனைத்தும் எனது தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே,” என்று கூறியதன் மூலம், கிருஷ்ணர் தன்னுடைய உயரிய நிலையை மீண்டும் தெளிவுபடுத்தினார். மேலும், இவற்றை விவரமாக அறிவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும், பிரபஞ்சம் முழுவதும் உள்ள அனைத்தும் தன்னால் மட்டுமே தாங்கப்பட்டுள்ளதாகவும் கூறி கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தினை நிறைவு செய்கிறார்.