தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் பத்து அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் பதினொன்றாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.
விஸ்வரூபம்
பத்தாம் அத்தியாயத்தின் சுருக்கம்
அர்ஜுனன் தனது நண்பன் என்பதால், கிருஷ்ணர் தன்னைப் பற்றிய விவரங்களை தாராளமாக எடுத்துரைத் தார். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம்–தேவர்கள், ரிஷிகள் என யாராலும் அவரது வைபவங்களை முழுமையாக அறிய இயலாது. ஜடவுலகிலும் ஆன்மீக உலகிலும் என்னவெல்லாம் உள்ளதோ, அவை அனைத்திற்கும் கிருஷ்ணரே மூலம் என்பதை அறிந்தோர் அவரது பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர். அத்தகைய பக்தர்கள் தங்களுக்குள் கிருஷ்ணரைப் பற்றி உரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். அவர்கள் தன்னை நோக்கி வருவதற்குத் தேவையான அறிவை கிருஷ்ணரே அவர்களுக்கு வழங்கி, அந்த ஞான ஒளியைக் கொண்டு அவர்களின் இதயத்திலுள்ள அறியாமை என்னும் இருளை அகற்றுகிறார். கிருஷ்ணரே எல்லாவற்றின் ஆதி மூலம் என்பதை அவரது திருவாயிலிருந்து கேட்ட அர்ஜுனன் அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டான். நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற பலரும் கிருஷ்ணரை அவ்வாறே முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளதை அர்ஜுனன் மேற்கோள் காட்டினான். கிருஷ்ணர் கூறிய அனைத்தையும் முழுமையாக ஏற்ற அர்ஜுனன், இவ்வுலகில் கிருஷ்ணர் எவ்வாறெல்லாம் வீற்றுள்ளார் என்பதை அறிய விரும்பியதால், கிருஷ்ணர் தனது வைபவங்களைப் பட்டியலிட்டார். இறுதியில் அந்த வைபவங்கள் அனைத்தும் தனது தோற்றத்தின் சிறு பகுதியே என்று தெளிவுபடுத்தினார்.
அர்ஜுனனின் விருப்பம்
“விஸ்வரூபம்” என்னும் தலைப்பைக் கொண்ட பதினொன்றாம் அத்தியாயம், கிருஷ்ணர் கூறிய பரம இரகசியங்களைக் கேட்டதால் தனது மயக்கம் தெளிவடைந்து விட்டதாக அர்ஜுனன் அறிவிப்பதுடன் தொடங்குகின்றது. கிருஷ்ணரின் அழிவற்ற பெருமைகளை முற்றிலுமாக ஏற்றபோதிலும், அவர் தமது திருவாயினால் கூறிய வைபவங்கள் அனைத்தையும் அவரது விஸ்வரூபத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அர்ஜுனன் முன்வைத்தான். தனக்கு முன்பாக இரு கைகளுடன் வீற்றிருக்கும் கிருஷ்ணரே உத்தம புருஷர் என்பதை முற்றிலும் அறிந்திருந்த அர்ஜுனனுக்கு விஸ்வரூபத்தைப் பார்க்க வேண்டும் என்பதோ, அதன் மூலம் தெளிவுபெற வேண்டும் என்பதோ அவசியமில்லை; தான் ஏற்கனவே தெளிவு பெற்றுவிட்டதாக அவன் அறிவித்துவிட்டான். தம்மையே கடவுள் என்று பிரகடனம் செய்யும் மூடர்கள் பலரை நாம் தற்போது நமது சமுதாயத்தில் காண்கிறோம்; அத்தகு அயோக்கியர்களிடம் சென்று விஸ்வரூபத்தைக் காட்டும்படி கேட்டால், அவர்கள் சில வருடங்கள் கழித்துக் காட்டுவதாக கதை சொல்கின்றனர்–அவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு உதவியாக இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காகவே அர்ஜுனன் விஸ்வரூபத்தைக் காட்டும்படி கிருஷ்ணரிடம் வேண்டினான். வேறு எந்த காரணமும் கிடையாது. “நானே கடவுள்” என்று பிதற்றியபடி திரிந்து கொண்டிருக்கும் அனைத்து அயோக்கியர்களிடமும், “நீ கடவுள் என்றால், விஸ்வரூபத்தைக் காட்டு” என்று நாம் தைரியமாக சவால் விடலாம்.
விஸ்வரூபத்தைப் பற்றிய கிருஷ்ணரின் விளக்கம்
விஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு முன்பு கிருஷ்ணர் விஸ்வரூபத்தின் தன்மையினை அர்ஜுனனுக்கு எடுத்துரைத்தார். விஸ்வரூபமானது இலட்சக்கணக்கான வடிவில் பலதரப்பட்ட நிறத்துடன் இருக்கும் என்றும், அதில் ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அஸ்வினி குமாரர்கள் உட்பட பல்வேறு தேவர்களைக் காண முடியும் என்றும் கிருஷ்ணர் தெரிவித்தார். மேலும், அர்ஜுனன் பார்க்க விரும்பியவை அனைத்தையும் அதில் பார்க்க முடியும் என்றும், வருங்காலத்தில் பார்க்க விரும்புபவற்றையும் பார்க்க முடியும் என்றும் கூறினார். இருப்பினும், அர்ஜுனனுடைய தற்போதைய கண்களைக் கொண்டு அதைக் காண முடியாது என்பதால், கிருஷ்ணர் அவனுக்கு தெய்வீகக் கண்களை அளித்து தமது யோக ஐஸ்வர்யத்தைக் காணக் கோரினார்.
விஸ்வரூபத்தைப் பற்றிய விளக்கம்
கிருஷ்ணரின் விஸ்வரூபத்தில், அனேக கண்களையும் வாய்களையும் அற்புதமான தரிசனங்களையும் அர்ஜுனன் கண்டான். திவ்யமான ஆயுதங்கள், தெய்வீகமான மாலைகள், ஆடைகள் மற்றும் வாசனைத் திரவியங்களால் நிறைக்கப்பட்ட விஸ்வரூபம், அற்புதமாக, பிரகாசமாக, எல்லையற்றதாக, எங்கும் பரவிக் காணப்பட்டது. ஆகாயத்தில் பல்லாயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே நேரத்தில் உதயமானால், அஃது ஒருவேளை அந்த விஸ்வரூப ஜோதிக்கு இணையாகலாம். அதைக் கண்ட அர்ஜுனன் வியப்பும் குழப்பமும் அடைந்தான். கிருஷ்ணருடனான நண்பனாக (ஸக்ய ரஸத்தில்) பழகி வந்த அர்ஜுனன், ஆச்சரியத்தினால் மயங்கி, சிரம் தாழ்த்தி கூப்பிய கரங்களுடன் ஒரு தொண்டனைப் போன்று (தாஸ்ய ரஸத்தில்) பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.
“எல்லா தேவர்களும் பற்பல இதர உயிரினங்களும் உமது உடலில் வீற்றிருப்பதைக் காண்கிறேன். பிரம்ம தேவர், சிவபெருமான், ரிஷிகள், மற்றும் நாகங்களையும் நான் காண்கிறேன். உம்மில் நான் ஆதியையோ நடுவையோ முடிவையோ காண வில்லை. பற்பல கைகள், வயிறுகள், வாய்கள், கண்கள் எல்லையற்று எங்கும் பரவியுள்ளதைக் காண்கிறேன். மகுடங்கள், கதைகள் மற்றும் சக்கரத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ள உமது உருவம் எல்லா இடங்களிலும் பிரகாசமாக விளங்கு கின்றது. எல்லா அகிலங் களுக்கும் இறுதி ஆதாரம் நீரே, நீர் அழிவற்றவர், தர்மத்தின் நித்திய பாதுகாவலர், சூரியனும் சந்திரனும் உமது கண்கள். வானம், பூமி மற்றும் இரண்டிற்கும் இடைப்பட்ட இடம் என எல்லா திசைகளிலும் வியாபித்துள்ளீர். உம்மைக் கண்டு மூவுலகமும் குழம்பி யுள்ளது. தேவர்கள், ரிஷிகள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் என அனைவரும் உம்மை வியப்புடன் நோக்கி பிரார்த்தனை செய்கின்றனர். உமது உருவைக் கண்டு அவர்கள் அனைவரும் குழம்பியுள்ளதைப் போன்றே நானும் குழம்புகிறேன்.”
கிருஷ்ணரின் விஸ்வரூபத்தைப் பார்த்த மாத்திரத்தில், ஆச்சரியத்தை உணர்ந்த அர்ஜுனன் தற்போது பயத்தை உணரத் தொடங்கியுள்ளான். பயத்துடன் அர்ஜுனன் மேலும் தொடர்ந்தான்: “திறந்த வாய்களும் பிரகாசமான கண்களும் எனக்கு பயத்தைக் கொடுக்கின்றன. என்னால் மனதின் சமநிலையை தக்க வைக்க முடியவில்லை. என்மேல் கருணை கொள்ளும். கால நெருப்பினைப் போன்ற உமது முகங்களையும் பயங்கரமான பற்களையும் கண்டபின் மனதை என்னால் நிலைநிறுத்த முடியவில்லை. திருதராஷ்டிரரின் அனைத்து மகன்கள், அவர்களின் கூட்டத்தினர், பீஷ்மர், துரோணர், கர்ணன், நமது படையின் முக்கிய வீரர்கள் என பலரும் உமது வாயினுள் விரைகின்றனர். சிலர் பற்களுக்கிடையே நசுக்கப்படுவதையும் நான் காண்கிறேன். உக்கிரமான ரூபமே, தாங்கள் யாரென்று தயவுசெய்து எனக்குக் கூறும். உங்களது நோக்கம் என்ன என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்.”
கிருஷ்ணரின் கருவியாகச் செயல்படுதல்
கிருஷ்ணர் யார் என்பது அர்ஜுனனுக்கு முன்னரே தெரியும். இருப்பினும், விஸ்வரூபத்தைக் கண்ட பயத்தில் மூழ்கிய அர்ஜுனன், “நீங்கள் யார்?” என்ற கேள்வியை எழுப்புகிறான். கிருஷ்ணர் இரு கரங்களுடன் கூடிய தனது அழகிய ரூபத்திற்கு மாறாக, ஒரு கோரமான ரூபத்தை ஏற்றிருந்ததால், அர்ஜுனனின் இக்கேள்வி பொருத்தமானதே. பகவான் பதிலளித்தார்: “காலம் நான். உலகங்களை அழிப்பவற்றில் மிகப்பெரியவன், எல்லா மக்களையும் அழிப்பதற்காக வந்துள்ளேன். உங்களைத் (பாண்டவர்களைத்) தவிர இரு தரப்பிலுள்ள அனைவரும் அழிக்கப்படுவர்.” கிருஷ்ணர் இங்கு கால ரூபத்திலிருந்து பேசுவதால், தன்னை காலம் என்று அடையாளப்படுத்துகிறார். அவர் மேலும் தொடர்ந்தார்: அனைவரையும் நான் ஏற்கனவே கொன்றுவிட்டேன். நீ எழுந்து போரிடத் தயாராகு. உனது எதிரிகளை வென்று, புகழுடன் வளமான அரசினை அனுபவிப்பாயாக. போரில் எனது கருவியாக மட்டும் செயல்படு.” கருவியாக மட்டும் செயல்படும்படி கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விடுத்த அறிவுரை கவனிக்கத்தக்கதாகும். உலகிலுள்ள ஒவ்வொரு செயலும் பகவானின் திட்டத்தின்படி நடக்கின்றது. இருப்பினும், அத்திட்டத்தினை நிறைவேற்றியதற்கான பெருமையை அவர் தனது பக்தர்களுக்கு வழங்க விரும்புகிறார். எனவே, பகவத் பக்தர்களின் திட்டமும் பகவானின் திட்டமும் ஒன்றே. பக்தர்களின் திட்டத்தின்படி நடப்பவர்கள் பகவானின் செயலில் ஒரு கருவியாகச் செயல்படும் நல்வாய்ப்பினைப் பெறுவர்.
அர்ஜுனனின் பிரார்த்தனைகள்
கிருஷ்ணரின் உரையைக் கேட்ட அர்ஜுனன், கூப்பிய கரங்களுடன் நடுங்கியபடி மீண்டும் மீண்டும் அவரை வணங்கினான், மிகுந்த பயத்துடன் தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கினான். “புலன்களின் அதிபதியே, உமது திருநாமத்தைக் கேட்பதால் உலகம் மகிழ்கின்றது, அசுரர்களோ அங்குமிங்கும் ஓடுகின்றனர். நீரே ஆதிபுருஷர், நீரே வாயு, நீரே எமன், நீரே அக்னி, நீரே வருணன், நீரே பிரம்மா, நீரே அனைத்தும். உமக்கு எனது ஆயிரக்கணக்கான வந்தனங்கள். முன்னிருந்தும் பின்னிருந்தும் எல்லா திக்குகளில் இருந்தும் உமக்கு வணக்கங்கள்.
“உமது பெருமைகளை அறியாமல், நட்பின் காரணத்தினால், “கிருஷ்ணா, யாதவா, நண்பனே,” என்றெல்லாம் உம்மை நான் அழைத்துள்ளேன். நான் செய்த செயல்கள் பித்தத்தினாலோ பிரேமையினாலோ தெரியவில்லை–என்னை மன்னித்து அருளுங்கள். பொழுதுபோக்கான கேளிக்கையின் போதும், ஒரே படுக்கையில் படுத்திருந்த போதும், உடன் அமர்ந்து உணவ ருந்தியபோதும், தங்களை சில சமயங் களில் தனியாகவும் சில சமயங்களில் நண்பர்களுக்கு மத்தியிலும் அவமரியாதை செய்துள்ளேன். இத்தகைய குற்றங் களுக்காக என்னை மன்னிப்பீராக.”
கிருஷ்ணருடனான நெருங்கிய உறவுகளுக்காக அர்ஜுனன் இங்கு வருத்தப்படுவதுபோலத் தோன்றுகிறது. கிருஷ்ணரை மிகவுயர்ந்தவராக பார்த்து அவரிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ளுதல் என்பது, அவரை எஜமானராக பாவித்து பழகக்கூடிய தாஸ்ய ரஸமாகும். ஆனால், இறைவன் எவ்வளவு உயர்வு பெற்றவராக இருந்தாலும், அவர் தனது பக்தர்களுடன் சமமாகப் பழகும்போது, நண்பனாக விளையாடும்போது, அஃது அவரது உயர்நிலையினை மேலும் உயர்த்துகின்றது. கிருஷ்ணருடன் அவ்வாறு நண்பனாகப் பழகுபவர்கள் தங்களின் நட்பை என்றும் மறக்க இயலாது என்பதை நாம் இங்கு அர்ஜுனனின் பிரார்த்தனையிலிருந்து அறிகிறோம்.
ஒரு தந்தை தனது மகனின் குற்றங்களையும் ஒரு நண்பன் நண்பனின் குற்றங்களையும் பொறுத்துக்கொள்வதுபோல, தனது குற்றங்களை பொறுத்து அருளும்படி அர்ஜுனன் கிருஷ்ணரிடம் வேண்டினான். மேலும், விஸ்வரூபத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சியுற்றபோதிலும் பயத்தினால் குழம்புவதாகவும் அவன் கூறினான். அதைத் தொடர்ந்து, சங்கு, சக்கரம், கதை, தாமரை என நான்கு கரங்களுடன் கூடிய தெய்வீக ரூபத்தைக் (விஷ்ணுவின் ரூபத்தைக்) காண்பதற்கான தனது பேராவலை அவன் வெளிப்படுத்தினான்.
கிருஷ்ண ரூபத்தின் சிறப்புத் தன்மை
கோரமான உருவத்தைக் கண்டு பாதிக்கப்பட்டிருந்த தன் நண்பனிடம், இத்தகைய விஸ்வரூபத்தை இதுவரை யாரும் கண்டதில்லை என்று கூறி கிருஷ்ணர் உற்சாகப்படுத்தியபோதிலும், அவனை மேலும் தவிக்கச் செய்யாமல் இருக்கும்பொருட்டு விஸ்வரூபத்தை மறைத்தார். அர்ஜுனனின் விருப்பப்படி நான்கு கரங்களுடன் தனது விஷ்ணு ரூபத்தை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் இரண்டு கரங்களுடன் கிருஷ்ண ரூபத்திற்குத் திரும்பினார். அச்சமுற்று இருந்த அர்ஜுனன் உற்சாகமடைந்தான், மனதில் அமைதியை உணர்ந்தான், தனது சுய நிலையை (ஸக்ய ரஸத்தை) மீண்டும் பெற்றதாக உணர்ந்தான். இரு கரங்களுடன் மனிதனைப் போன்ற உருவில் அர்ஜுனனின் முன்பு தோன்றிய கிருஷ்ணர் தனது அந்த ரூபத்தின் மகிமையினை விளக்கினார்.
“இப்போது நீ பார்க்கும் இந்த உருவம் காண்பதற்கு மிகவும் அரிதானது. பிரியமான இந்த உருவத்தைக் காண்பதற்கான வாய்ப்பை தேவர்கள்கூட எப்போதும் நாடுகின்றனர். வேதங்களைக் கற்பதாலோ, கடுந்தவங்களைச் செய்வதாலோ, தானங்களைக் கொடுப்பதாலோ, வழிபாடு செய்வதாலோ என்னை இவ்வாறு புரிந்துகொள்ள முடியாது. கலப்படமற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே இதுபோன்று நேரடியாகக் காணவும் புரிந்துகொள்ளவும் முடியும். எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டு, கர்மம் மற்றும் ஞானத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, எனக்காகச் செயல்பட்டு, என்னையே வாழ்வின் பரம இலக்காக வைத்துள்ளவன் நிச்சயமாக என்னை வந்தடைகிறான்.”
விஸ்வரூபம் என்னும் இந்த அத்தியாயத்தின் இறுதி ஸ்லோகங்கள் பல்வேறு உண்மைகளை எடுத்துரைக்கின்றன. கிருஷ்ணர் இரு கரங்களுடன் மனிதரைப் போலத் தோன்றும்போது அவரை சாதாரண மனிதனாக நினைக்கக்கூடிய முட்டாள்களுக்கு புரிய வைக்கும் விதத்தில் தனது விஸ்வரூபத்தைக் காட்டிய கிருஷ்ணர், இரு கரங்களுடன் கூடிய தனது ரூபம் காண்பதற்கு அரிதானது என்று கூறியதன் வாயிலாக தனது பெருமையை நிலைநாட்டினார். கிருஷ்ணர் தனது யோக மாயை எனும் சக்தியினால் மறைக்கப்பட்டுள்ள காரணத்தினால், யார் வேண்டுமானாலும் அவரைக் காண்பதோ உணர்வதோ சாத்தியமல்ல. கிருஷ்ணர் தன்னை யாரிடம் வெளிப்படுத்துகிறாரோ, அவர் மட்டுமே அவரைக் காண முடியும். விஸ்வரூபத்தைக் காண்பதைக் காட்டிலும் கிருஷ்ணரைக் காண்பது கடினமானதாகும். விஷ்ணு ரூபத்தை கிருஷ்ணர் காட்டினார் என்பதைக் கொண்டு, கிருஷ்ணரே அனைத்து விஷ்ணு ரூபங்களுக்கும் மூலம் என்பதையும் நாம் அறியலாம். மேலும், கிருஷ்ணரை அடைவதற்கான ஒரே வழி, களங்கமற்ற பக்தித் தொண்டு மட்டுமே என்பதும் பக்தித் தொண்டை பயிற்சி செய்யாமல் கீதையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் அங்கீகாரமற்ற நபர்கள் தமது காலத்தை வெறுமனே விரயம் செய்து கொண்டுள்ளனர் என்பதும் தெள்ளத் தெளிவாக உணரத்தக்கவை.