தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் ஆறு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் ஏழாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.
பூரணத்தின் ஞானம்
ஆறாம் அத்தியாயத்தின் சுருக்கம்
தியான யோகத்தின் ஆரம்ப நிலையில் செயல் வழியாகவும் உயர் நிலையில் செயல்களைத் துறத்தல் வழியாகவும் உள்ளது என்று கூறிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மனமே ஒருவனின் நண்பனாகவும் எதிரியாகவும் இருப்பதால், மனதைக் கொண்டு ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றும் தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார். மேலும், இதயத்தில் வசிக்கும் பரமாத்மாவின் மீது தியானம் செய்யும் தியான யோக வழிமுறையும் எடுத்துரைக்கப்பட்டது. கிருஷ்ணரிடமிருந்து அஷ்டாங்க யோகத்தைக் கேட்ட அர்ஜுனன், அதன்படி மனதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் கடினமானது என்று வாதாடினான். மனதைக் கட்டுப்படுத்துதல் நிச்சயமாகவே கடினம் என்று ஏற்றுக்கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பயிற்சியின் மூலமாகவும் பற்றின்மையின் மூலமா கவும் மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்று பதிலளித்தார். யோக முயற்சியில் வெற்றியடையாத யோகியின் நிலை என்ன என்ற கேள்விக்கு, அவர்கள் நல்லோர்களின் குடும்பத்திலோ, செல்வந்தர்களின் குடும்பத்திலோ, யோகிகளின் குடும்பத்திலோ பிறவியெடுப்பர் என்று பதிலளித்த ஸ்ரீ கிருஷ்ணர், எல்லா யோகிகளிலும் பக்தி யோகியே சிறந்தவன் என்று தீர்ப்பளித்தார்.
ஆறாம் அத்தியாயத்திற்கும் ஏழாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
யோகிகளில் சிறந்தவன் பக்தி யோகியே என்று உரைத்த ஸ்ரீ கிருஷ்ணர் பக்தி யோகத்தினை விளக்கமாக எடுத்துரைக்க ஆரம்பிக்கின்றார். கீதை முழுவதும் பக்தி யோகமே கற்றுத் தரப்படுகிறது என்றபோதிலும், முதல் ஆறு அத்தியாயங்களில் கர்ம யோகம் அதிகமாகவும், இறுதி ஆறு அத்தியாயங்களில் ஞான யோகம் அதிகமாகவும் கூறப்பட்டுள்ளது. நடுவில் உள்ள ஆறு அத்தியாயங்கள் முழுவதும் பக்தி யோகத்தை பிரத்யேகமாக எடுத்துரைக்கின்றன. விலைமதிப்புடைய ஒரு பொருளை (உதாரணமாக, வைர நகையை) நாம் மேலும் கீழும் பாதுகாப்பாக உள்ள ஒரு பெட்டியினுள் வைக்கின்றோம். அதுபோல, பக்தி என்னும் உயர்ந்த பொக்கிஷம் ஏழாம் அத்தியாயத்திலிருந்து தொடங்கி பன்னிரண்டாம் அத்தியாயம் வரை மிகவும் விசேஷமாகப் பேசப்பட்டுள்ளது.
கிருஷ்ணரைப் பற்றிக் கேட்டல்
“என்னிடம் பற்றுதல் கொண்ட மனதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில் யோகத்தைப் பயில்வதால், நீ நிச்சயமாக என்னை வந்தடைவாய். இதற்கான வழிமுறையை தற்போது என்னிடமிருந்து கேள்,” என்று ஏழாம் அத்தியாயத்தினை ஸ்ரீ கிருஷ்ணர் தொடங்குகிறார். பக்தி யோகத்தை எவ்வாறு பயிற்சி செய்து கிருஷ்ணரை அடைவது என்பது குறித்து அறிந்துகொள்ள கிருஷ்ணரிடமிருந்து (அல்லது அவரது பிரதிநிதியிடமிருந்து) கேட்டல் என்பது மிகவும் அவசியம். அவ்வாறு தொடர்ந்து கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால், ஒருவனின் இதயத்திலுள்ள எல்லா மாசுகளும் களையப்பட்டு அவன் பக்தித் தொண்டில் நிலைபெறுவது மட்டுமின்றி, ஜட வாழ்க்கை என்னும் பந்தத்திலிருந்து விடுபடுகிறான். கிருஷ்ணர் இங்கு பௌதிக உலகம் பற்றிய அறிவையும் தெய்வீக அறிவையும் வழங்குகிறார். இதனை அறிந்த பின்னர் அறிவதற்கு வேறு ஒன்றும் இல்லை. கிருஷ்ணரைப் பற்றிய இந்த உயர் அறிவு அவ்வளவு எளிதில் அடையப்படக் கூடியது அல்ல. பெரும்பாலும், ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவனே பக்குவமடைய முயற்சி செய்யலாம்; அவ்வாறு முயற்சி செய்து பக்குவமடைந்தவர்களில் யாரேனும் ஒருவரே கிருஷ்ணரே பரம்பொருள் என்னும் உண்மையை அறிந்துகொள்கிறான்.
கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம்
இறை விஞ்ஞானம் என்பது, இறைவனையும் அவரது பல்வேறு சக்திகளையும் அறிவதாகும். இறை வனின் சக்திகளில் ஜட சக்தியும் ஜீவ சக்தியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய சூட்சும படைப்புகளும் அடங்கியது இறைவனின் ஜட சக்தி எனப்படுகிறது. இந்த ஜட சக்தியின் கலவையினால் ஜடவுலகத்தில் பல்வேறு படைப்புகள் சாத்தியமாகின்றன. தற்காலிகத் தன்மையைக் கொண்ட இந்த ஜட சக்தி கிருஷ்ணரால் படைக்கப்படுவதாகும்–இன்றைய விஞ்ஞானிகள் நினைப்பதுபோல தானாகத் தோன்றியது அல்ல. இந்த ஜட சக்தியைக் காட்டிலும் ஜீவ சக்தி (உயிர்வாழிகளாகிய ஜீவன்கள்) உயர்ந்தது; ஜீவ சக்திக்கும் கிருஷ்ணரே மூலம் என்பதால், ஜீவன்கள் கிருஷ்ணரைச் சார்ந்தவர்கள். சக்தி எப்போதும் சக்திமானால் (சக்தி யாரிடமிருந்து வருகிறதோ அவரால்) கட்டுப்படுத்தப்படுவதுபோல, ஜீவன்கள் எப்போதும் கிருஷ்ணரால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். கட்டுப்படுத்தப்படும் ஜீவன்கள் ஒருபோதும் கிருஷ்ணருக்குச் சமமானவர்கள் அல்ல. இந்த இரண்டு சக்திகளின் ஆதியும் அந்தமும் கிருஷ்ணரே, அவரைக் காட்டிலும் உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் கோர்க்கப்பட்டுள்ள முத்துக்கள் நூலைச் சார்ந்து இருப்பதைப் போல, அனைத்தும் கிருஷ்ணரைச் சார்ந்துள்ளன. கிருஷ்ணரே பரம்பொருள் என்பதையும் அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் இல்லை என்பதையும் இதிலிருந்து தெளிவாக அறியலாம்.
கிருஷ்ணரின் சக்திகள்
கிருஷ்ணரே எல்லாவற்றின் காரணமாக உள்ளார்; மேலும், அவரே எல்லாவற்றின் சாரமாகவும் உள்ளார். உதாரணமாக, நீரின் சிறப்பு அதன் தாகத்தைத் தணிக்கும் சுவையில் உள்ளது, சூரிய சந்திரனின் சிறப்பு அதன் ஒளியில் உள்ளது. கிருஷ்ணரே நீரின் சுவையாகவும், சூரிய சந்திரனின் ஒளியாகவும் இருக்கிறார். மேலும், வேத மந்திரங்களின் ஓம்காரமாகவும், ஆகாயத்தின் சப்தமாகவும், மனிதர்களின் திறமையாகவும், நிலத்தின் நறுமணமாகவும், நெருப்பின் வெப்பமாகவும், உயிரினங்களின் உயிராகவும், தவம் புரிபவனின் தவமாகவும், பலசாலியின் பலமாகவும், தர்மத்தின் கொள்கைக்கு விரோதமில்லாத காமமாகவும் என எல்லாவற்றின் முக்கிய அம்சமாகவும் கிருஷ்ணரே இருக்கிறார். இறைவனை நேரடியாக உணர இயலாதவன், அவரை இத்தகு அம்சங்களின் மூலம் உணரலாம். வாழ்க்கையின் அனைத்து நிலைகளும் ஸத்வ, ரஜோ, தமோ குணங்களால் உருவாகின்றன; இம்மூன்று குணங்களும் கிருஷ்ணரின் சக்தியால் படைக்கப்பட்டவையே. இக்குணங்கள் அவரிடமிருந்து தோன்றினாலும், அவர் இக்குணங்களுக்கு உட்பட்டவரல்ல. ஒருவிதத்தில் அவரே எல்லாம் என்றபோதிலும், அவர் முற்றிலும் சுதந்திரமானவர்.
கிருஷ்ணரே குணங்களைக் கட்டுப்படுத்துகிறார்
உலகம் முழுவதும் முக்குணங்களின் கீழ் மயங்கியிருப்பதால், அவற்றிற்கு அப்பாற்பட்ட கிருஷ்ணரை உலகத்தினர் அறிவதில்லை. ஜட இயற்கையின் குணங்களுக்கு அவர் அப்பாற்பட்டவர் என்பதை உணராமல், அவரும் இயற் கைக்கு உட்பட்டவர் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் எத்தகைய குணத்தினால் ஆளப்படுகின்றனர் என்பதை வைத்து, சமுதாயத்தில் பல்வேறு பிரிவினர்கள் உள்ளனர்; அவர்கள் அனைவரும் மாயச் சக்தியினால் மயக்கப்பட்டுள்ளதால், ஜடத் திரைக்குப் பின்னால் கிருஷ்ணர் இருக்கின்றார் என்பதை புரிந்துகொள்வதில்லை. ஜட சக்தி கிருஷ்ண ருடைய தெய்வீக சக்திகளில் ஒன்றாக இருப்பதால், ஜீவன்களால் அதனை வெற்றி கொள்வது என்பது மிகவும் அரிதானதாகும். ஆனால் யாரொருவர் கிருஷ்ணரிடம் சரணடைகின்றாரோ, அவர் வெல்லுவதற்கரிய அந்த மாயையை எளிதில் கடக்க முடியும். கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் ஒருவரை கட்டுப்படாத ஒருவரே விடுவிக்க முடியும்; அதுபோல, ஜட வாழ்வில் சிக்கித் தவிக்கும் நபர்களை கிருஷ்ணரே விடுவிக்க முடியும்.
கிருஷ்ணரிடம் சரணடையாதவர்கள்
கிருஷ்ணரிடம் சரணடைந்தால் மாயையை எளிதில் கடக்க முடியும்; இருப்பினும், பலர் கிருஷ்ணரிடம் சரணடைவது இல்லை, ஏன்? ஏனெனில், அவர்கள் சற்றும் அறிவற்ற மூடர்களாகவும், மனிதரில் கடைநிலை யோராகவும், மாயையிடம் அறிவை இழந்தவர்களாகவும், அசுரர்களின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களாகவும் உள்ளனர். இந்த நான்கு துஷ்டர்களும் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை.
மூடர்கள்: இவர்கள் இரவு பகலாக கழுதையைப் போன்று புலனின்பத் திற்காக உழைக்கின்றனர். ஆன்மீக விஷயங்களுக்கு ‘நேரமில்லை’ என்று கூறிவிட்டு, பணப் பைத்தியம் பிடித்து அலையும் முதலாளிகளுக்குத் தொண்டு செய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் உன்னத முதலாளியான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மனிதக் கழிவுகளை தின்று வாழும் பன்றி, நெய்யாலும் சர்க்கரையாலும் செய்யப் பட்ட இனிப்புகளை மதிப்பதில்லை; அதுபோல, புலனின்பத்தில் சலிப்பின்றி மூழ்கியிருக்கும் இத்தகு முட்டாள்கள் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதற்கு, நேரம் குறைவாக உள்ளது என்பர்.
மனிதர்களில் கடைநிலையோர் (நராதமர்): 84 இலட்சம் உயிரினங்களில் நான்கு இலட்சம் மனித வகையினர் உள்ளனர். அரசியலிலும் சமூகத் திலும் முன்னேற்றம் பெற்றிருந்தாலும், மதம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் பெறாத மனித வர்க்கத்தினர், ’மனிதரில் கடைநிலை யோர் எனப்படுகின்றனர். கடவுளற்ற மதத்தினை மதமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மதமற்ற மக்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதர்களை தூய்மைப் படுத்துவதற்காக பத்து வகையான சடங்குகள் மனு ஸ்மிருதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சடங்கு களை இன்றைய சமுதாயத்தில் இருக்கும் 99.9 சதவிகித மக்கள் பின்பற்றாமல் இருப்பதால், தற்போதைய சமூகத்திலுள்ள பெரும்பாலான மக்கள் மனிதர்களில் கடைநிலை யோராக உள்ளனர்.
மாயையிடம் அறிவை இழந்தவர்கள் (மாயயாபஹ்ருத-க்ஞானி): நிறைய கல்விகற்று வெளியில் பார்ப்பதற்கு படித்தவர்களைப் போலத் தோன்றி னாலும், தங்களது அறிவை மாயையிடம் ஒப்படைத்துவிட்ட நபர்கள் இப்பிரிவில் அடங்குவர். இவர்களுள் சிலர் பகவத் கீதைக்குக்கூட விளக்கமளிக்கலாம். ஆனால் அவர்கள் முறையான சீடப் பரம்பரையில் வராத காரணத்தினால், பரம்பொருள் அருவமானது என்றும், கிருஷ்ணர் சாதாரண நபர் என்றும் பறைசாற்றுவதைக் காணலாம். இத்தகு துஷ்டர்கள் தாங்களும் சரணடைவதில்லை, மற்றவர்களையும் சரணடைய அனுமதிப்பதில்லை.
அசுரர்கள்: இவர்கள் வெளிப்படையான நாத்திகர்கள். முழுமுதற் கடவுள் இவ்வுலகில் தோன்ற முடியாது என்று நினைத்து, அவரை எதிர்த்துப் பேசுவதையே வாழ்வின் முக்கிய நோக்கமாகக் கொண்டவர்கள்.
மேற்கூறிய நான்கு பிரிவினரால் கிருஷ்ணரிடம் சரணடைய முடியாது.
கிருஷ்ணரிடம் சரணடைவோர்
நான்கு வகையான துஷ்டர்கள் இருப்பதைப் போலவே, நான்கு வகையான நல்லோர்களும் உள்ளனர்; இவர்கள் சாஸ்திரங்களின் சட்ட திட்டங்களைப் பின்பற்றி நடப்பதால், இயற்கையாகவே முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வழிபடுவர். துன்பத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், ஞானத்தில் சிறந்தவர்கள் ஆகிய நால்வரும் பல்வேறு சூழ்நிலைகளின் காரணத்தினால், கிருஷ்ணருக்கு பக்தி செலுத்த வருகின்றனர். பக்தித் தொண்டின் மூலம் சில பலன்களை அடைய விரும்புவதால், இவர்கள் தூய பக்தர்கள் அல்ல. தூய பக்தித் தொண்டு எந்தவித ஆசைகளும் அற்றதாகும். இருப்பினும், இந்த நல்லோர்களுக்கு தூய பக்தர்களின் சங்கம் கிடைத்தால், இவர்களும் தூய பக்தர்களாக மாற்றம் பெறுவதற்கு அருமையான வாய்ப்பு உண்டு. இந்த நால்வரில், “நான் இந்த உடலல்ல,” என்னும் ஞானத்தில் நிலைபெற்றிருக்கும் ஞானியினால், தான் இறைவனின் நித்தியத் தொண்டன் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால், மற்றவர்களைக் காட்டிலும் இவன் சிறந்தவனாக அறியப்படுகிறான். நால்வரையும் உத்தமர்களாக கருதும் இறைவன், ஞானியை தன்னைப் போலக் கருதுகிறார். அத்தகு ஞானி, பற்பல பிறவிகளுக்குப் பின்னர், கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணமானவர் என்பதை பக்குவமாக அறிந்து, தூய பக்தித் தொண்டினால் அவரிடம் சரணடைகிறான். அத்தகு மகாத்மா மிகவும் அரிதானவன். (தூய பக்தித் தொண்டை நேரடியாக ஏற்றுக் கொள்பவன் பற்பல பிறவிகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை கவனித்தல் அவசியம்)
தேவர்களிடம் சரணடைவோர்
இவ்வளவு விளக்கங்களுக்குப் பின்னும் சிலர் கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு மறுப்புத் தெரிவித்து, தேவர்களிடமும் அருவ பிரம்மனிடமும் சரணடைகின்றனர். அதற்கான காரணத்தையும் அவர்களைப் பற்றிய இதர தகவல்களையும் கிருஷ்ணர் தொடர்ந்து விளக்குகின்றார்.
ஜட ஆசைகளால் (காமத்தினால்) அறிவை இழந்த நபர்கள், தேவர்களைச் சரணடைந்து அதற்கேற்ற நியமங்களை கடைப்பிடிக்கின்றனர். ஒருவன் ஜட ஆசையுடையவனாக இருந்தாலும், அவன் வாஸுதேவரையே தீவிரமாக வழிபட வேண்டும் என்று கூறப்படும்போதிலும், இவர்கள் உடனடி விளைவுகளைப் பெறுவதில் ஆர்வமாக இருப்பதால் பல்வேறு தேவர்களை அணுகுகின்றனர். பல்வேறு பலன்களைப் பெறுவதற்கு வெவ்வேறு தேவர்களை வழிபடும்படி வேதங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதை ஏற்று, இவர்கள் அத்தகு வழிபாட்டில் ஈடுபடும்போது, பரமாத்மாவாக எல்லோரின் இதயத்திலும் வீற்றுள்ள கிருஷ்ணர், இவர்களது நம்பிக்கையை பலப்படுத்துகிறார். தேவர்களால் வழங்கப்படும் நன்மைகள் யாவும் உண்மையில் கிருஷ்ணரால் வழங்கப்படுபவையே. ஆனால் அற்ப புத்தியுடைய இவர்கள் தொடர்ந்து தேவர்களை வழிபடுவதால், தேவர்களின் லோகங்களுக்குச் செல்வர்; கிருஷ்ணரை வழிபடுவோர் அவரது தெய்வீக உலகை அடையலாம்.
தேவர்களை வழிபடுவோரும் பரம இலக்கை (முக்தியை) அடைய முடியும் என்று சிலர் கூறுவதுண்டு; ஆனால் கீதையின் கருத்துப்படி அது சாத்தியமல்ல என்பதை இங்குக் காண்கிறோம். உடலுக்கு உணவூட்ட வேண்டுமெனில், வயிற்றுக்குத்தான் உணவளிக்க வேண்டுமேயொழிய கண்கள், காதுகள் என எல்லா பக்கங்களிலும் உணவை வழங்கினால் அது பயன்தராது. (சூரியன், சந்திரன், விநாயகர் போன்றவர்கள் மட்டுமின்றி, சிவபெருமான், பிரம்மதேவர் உட்பட) தேவர்களை வழிபடுவதால் கிடைக்கப்பெறும் பலன்கள் தற்காலிகமானவை; ஏனெனில், அவர்கள் செல்லும் தேவ லோகமும் அங்குள்ள தேவலோக வாசிகளும்கூட தற்காலிகமானவர்கள் ஆயிற்றே.
அருவவாதத்தைப் பின்பற்றுவோர்
பகவத் கீதையானது கிருஷ்ணர் என்னும் ஒரு குறிப்பிட்ட நபரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது; இங்கு தானே பரம்பொருள் என்பதை கிருஷ்ணர் பல்வேறு இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அறியாமையில் மூழ்கியுள்ள சிலர், இறைவனுக்கு உண்மையான உருவம் கிடையாது என்றும், அவர் இவ்வுலகில் அவதரிக்கும்போது மட்டுமே உருவத்தை ஏற்று வருகிறார் என்றும் கூறுகின்றனர். அத்தகையோர் கீதையில் அபுத்தய:, புத்தியில்லாதவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அழிவற்ற மிகவுயர்ந்த கிருஷ்ணரின் பரம இயற்கையை அவர்கள் அறியார்கள். இவர்கள் வேதாந்த சூத்திரம், உபநிஷத் என பற்பல சாஸ்திரங்களைப் படித்தாலும், பக்தி இல்லாத காரணத்தினால் இவர்களால் இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது. அருவப் பிரம்மன், பரமாத்மா, பகவான் என மூன்று நிலைகளில் பரம்பொருள் உணரப்படுவதாக அறிகிறோம். பரம்பொருளின் இறுதி நிலை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே. இதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள், கிருஷ்ணரின் உடல் ஜடத்தினால் ஆனது என்றும், அவரது லீலைகள், ரூபம் என அனைத்தும் மாயை என்றும் எண்ணுகின்றனர். அத்தகு மூடர்களுக்கு அவர் ஒருபோதும் தன்னை வெளிப்படுத்துவதில்லை; அவர் தனது அந்தரங்க சக்தியால் தன்னை மறைத்துக் கொள்வதால், பிறப்போ அழிவோ அற்ற இறைவனை அவர்கள் அறிவதில்லை.
மயக்கமும் முக்தியும்
அறிவற்றோர் கிருஷ்ணரை அறிய முடிவதில்லை; ஆனால் கிருஷ்ணரோ அனைத்தையும் அறிந்தவர். கடந்த காலம், நிகழ் காலம், வருங் காலம் என அனைத்தையும் அவர் அறிவார்; அனைத்து ஜீவன்களையும் அவர் அறிவார், ஆனால் அவரை முழுமையாக அறிந்தோர் யாருமில்லை. கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவோர் மட்டுமே அவரை அறிய முடியும், அத்தகு ஜீவன்கள் மிகவும் அரிது. பொதுவாக உயிர்வாழிகள் அனைவரும், விருப்பு வெறுப்பினால் பாதிக்கப்பட்டு, மான அவமானம், இன்ப துன்பம், ஆண் பெண், நல்லது கெட்டது போன்ற இருமைகளில் மயங்கியுள்ளதால், மிகுந்த குழப்பத்துடன் இவ்வுலகில் வசித்து வருகின்றனர். அத்தகு நபர்கள் பல்வேறு பிறவிகளில் நற்காரியங்களைச் செய்து, பக்தர்களின் கருணையைப் பெறும்போது, பாவங்கள் அனைத்தும் விலகி, கிருஷ்ண பக்தியில் உறுதியான நிலையை அடைகின்றனர். முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைய விரும்பும் அறிவுடையோரும் கிருஷ்ணரிடம் சரணடைகின்றனர். திவ்யமான செயல்கள் அனைத்தையும் அறிந்திருப்பதால், அவர்கள் பிரம்மன் எனப்படுகின்றனர். மேலும், ஜட இயற்கை, தேவர்கள், யாகங்கள் என எல்லாவற்றையும் ஆளும் பரம புருஷராக கிருஷ்ணரை அறிந்து, அவரிடம் பக்தி செய்பவர்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவரையே நினைத்து அவரை அடைகின்றனர்.