தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் இரண்டு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் மூன்றாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.
கர்ம யோகம்
இரண்டாம் அத்தியாயத்தின் சுருக்கம்
சோகத்தால் மூழ்கிய அர்ஜுனனிடம், இக்களங்கங்கள் எங்கிருந்து வந்தன என்றும், பலவீனத்தைக் கைவிட்டுப் போரிடும்படியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துரைத்தார். இருப்பினும், பாசத்தால் மூழ்கியிருந்த அர்ஜுனன், என்ன செய்வது என்பதில் குழம்பியிருப்பதாகவும் தனக்குத் தக்க அறிவுரை கூறும்படியும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சீடனாக சரணடைந்தான். உடனே குருவின் ஸ்தானத்தை ஏற்ற பகவான், தனது சீடனின் நிலையினைக் கண்டித்தார். அதனைத் தொடர்ந்து ஆத்ம ஞானம், ஸ்வர்க லோகத்திற்கு ஏற்றம் பெற உதவும் கர்ம காண்டம், பாவமின்றி செயல்பட உதவும் புத்தி யோகம் ஆகியவற்றை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணர், முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனன் எழுப்பிய எல்லா வாதங்களையும் முறியடித்தார். புத்தி யோகத்தில் நிலைபெற்றவனின் அறிகுறிகளைப் பற்றிய அர்ஜுனனின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
கர்ம யோகம் எனப்படும் மூன்றாம் அத்தியாயத்திற்குள் நுழைவதற்கு முன்பு, அனைத்து யோக முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் உதவியாக அமையும். யோகத்தின் ஏணிப்படிகள் என்னும் (அடுத்த பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள) வரைபடத்தின் உதவியுடன் யோக முறைகளை நாம் ஒப்பிடலாம்.
யோகத்தின் ஏணிப்படிகள்
யோகம் என்றால் “இணைத்தல்” என்று பொருள். ஜடவுலகில் கட்டுண்டு வசிக்கும் ஜீவனை முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைப்பதற்கான வழிமுறையே யோகம் எனப்படும். செய்யும் தொழிலைக் கொண்டு (கர்மத்தைக் கொண்டு) இணைத்தல், “கர்ம யோகம்” என்றும், ஞானத்தைக் கொண்டு இணைத்தல் “ஞான யோகம்” என்றும், எட்டு அங்கங்களைக் கொண்ட பயிற்சியினால் இணைத்தல் “அஷ்டாங்க யோகம்” (அல்லது தியான யோகம்) என்றும், பக்தியைக் கொண்டு இணைத்தல் “பக்தி யோகம்” என்றும் அறியப்படுகின்றன.
எல்லா யோக முறைகளும் ஒரே பலனைக் கொடுப்பவை என்னும் அபிப்பிராயம் மக்கள் மனதில் பரவலாக உள்ளது; ஆனால் அஃது உண்மையல்ல. எல்லா யோக முறைகளுமே இறைவனுடன் உறவு கொள்வதற்கானவை என்றபோதிலும், உண்மையில் அவை இறைவனை அணுகுவதற்கான பாதையில் பல்வேறு படிக்கட்டுகளைப் போன்றவையே. எல்லா யோகிகளிலும் பக்தி யோகியே சிறந்தவன் என்பது கீதையில் (6.47) தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த ஏணிப்படியின் முதல் நிலை “கர்ம காண்டம்” என்று அழைக்கப்படுகிறது. முற்றிலும் மிருகத்தைப் போல வாழும் மனிதன், அதிலிருந்து சற்று உயர்வு பெற்று, மனிதர்களைக் காட்டிலும் உயர் சக்தி உண்டு என்பதை அங்கீகரித்து, வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி பல்வேறு தேவர்களை வழிபட்டு, இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மரணத்திற்குப் பின்னர் ஸ்வர்கத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உதவக்கூடிய வழிமுறை “கர்ம காண்டம்” எனப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே (விஷ்ணுவே) எல்லா தேவர்களுக்கும் ஆதியானவர் என்பதையும் முழுமுதற் கடவுள் என்பதையும் இவர்கள் அறியாத காரணத்தினால், பரம்பொருளுக்கும் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு (யோகம்) கிடையாது. இருப்பினும், இவர்கள் வேதச் சடங்குகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதால், காலப்போக்கில் பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பதை உணர்ந்து அவரை வழிபடத் தொடங்கும்போது, கர்ம யோகத்தினுள் நுழைகின்றனர்.
கர்ம யோகத்தின்படி, வர்ணாஷ்ரம தர்மத்தின் குறிக்கோள் விஷ்ணுவைத் திருப்திப்படுத்துவதே என்பதை உணரும் சாதகன் (பயிற்சியாளன்), தனது கடமைகளை விஷ்ணுவிற்காக நிறை வேற்றுகின்றான். ஜடவுலக ஆசைகளுடன் பலனை எதிர்பார்த்து கர்ம யோகத்தில் ஈடுபடும்போது, அது “ஸகாம கர்ம யோகம்” என்றும், பலனை எதிர்பாராமல் ஆசைகளின்றி ஈடுபடும்போது, அது “நிஷ்காம கர்ம யோகம்” என்றும் அழைக்கப்படுகிறது.
நிஷ்காம கர்ம யோகத்தில் நிலைபெற்றிருப்பவர்களில் சிலர் பக்தியில் ஆர்வமுடையவர்களாகவும், வேறு சிலர் ஞானத்தில் ஆர்வமுடையவர்களாகவும் இருப்பர். பக்தியில் ஆர்வமுடையோர் நேரடியாக பக்தி யோகத்தை ஏற்றுக் கொள்வர்; ஞானத்தில் ஆர்வமுடையோர் ஞான யோகத்தைத் தழுவி, பிரம்மத்தை உணர்வதற்காக கடுந்தவங்களைப் புரிந்து வேதங்களிலுள்ள உபநிஷத்துகளை கற்கின்றான். பிரம்மத்தை உணர்வதில் அவன் சற்று உயர்வு பெறும்போது, எல்லோரின் இதயத்திலும் வீற்றுள்ள பரமாத்மாவைப் பற்றி அறிகின்றான். பரமாத்மாவை உணர்வதற்காக எட்டு அங்கங்களைக் கொண்ட அஷ்டாங்க “யோகம்” என்னும் வழிமுறையை ஏற்கின்றான். பரமாத்மாவின் மீது தியானம் செய்வதை முக்கிய அங்கமாகக் கொண்ட இந்த யோக முறை, தியான யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.
எந்தவொரு பௌதிக ஆசையும் இன்றி, பரப்பிரம்மனுடன் ஐக்கியமாவதற்கோ யோக சித்திகளைப் பெறுவதற்கோ விரும்பாமல், முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அவரைப் பற்றி கேட்டல், கூறுதல், நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் வழிமுறை “பக்தி யோகம்” எனப்படுகிறது. தூய பக்தர்களின் சகவாசத்தினால் அடையப்படும் இம்முறை எல்லா யோகத்திலும் சிறந்ததாகவும் உயர்ந்ததாகவும் எளிமையானதாகவும் திகழ்கின்றது.
கர்ம யோகம் என்னும் தலைப்பிலுள்ள பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தில், கர்ம காண்டம், ஸகாம கர்ம யோகம், நிஷ்காம கர்ம யோகம் ஆகிய மூன்று நிலைகள் விளக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
இரண்டாம் அத்தியாயத்திற்கும் மூன்றாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
இரண்டாம் அத்தியாயத்தில் புத்தி யோகத்தைப் பற்றிக் கூறும்போது, (49ஆவது ஸ்லோகத்தில்) மோசமான செயல்களைப் புறக்கணித்துவிடும்படி இறைவன் அறிவுறுத்தினார். போரில் ஈடுபடுவதை மோசமான செயலாகக் கருதிய அர்ஜுனன், “கடமையைச் செய்வதைக்காட்டிலும் புத்தி யோகம் சிறந்தது என்னும் பட்சத்தில், கோரமான போரில் என்னை ஏன் பலவந்தமாக ஈடுபடுத்துகின்றீர்,” என்று கிருஷ்ணரிடம் கேட்கும் கேள்வியுடன் கர்ம யோகம்” என்னும் மூன்றாம் அத்தியாயம் தொடங்குகின்றது.
எது சிறந்தது?
“கடமையைச் செய்வதா, கடமையைத் துறப்பதா, இரண்டில் எது சிறந்தது? இரண்டையும் ஒன்று போலக் கூறும் உமது அறிவுரையால் எனது புத்தி பேதலிக்கின்றது. தெளிவுபடுத்த வேண்டுகிறேன்,” என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் உரைக்க, கிருஷ்ணர் கர்ம யோகம் குறித்து விளக்கமளிக்கத் தொடங்குகின்றார். கர்ம யோகம். ஞான யோகம் ஆகிய இரண்டு பாதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஞானமின்றி செய்யப்படும் கர்மங்கள் வெறும் சடங்குகளே, கர்மங்கள் இல்லாத ஞானம் வெறும் மனக் கற்பனையே. செயல்களிலிருந்து விலகிக் கொள்வதாலோ துறவறம் ஏற்பதாலோ பக்குவமடைய முடியாது. கர்ம யோகத்தைப் பின்பற்றி இதயம் தூய்மையடைந்த பின்னர், வாழ்வின் இறுதியில் துறவை ஏற்க முடியும்.
துறவை ஏற்பவர்களும் சரி, கடமையைச் செய்பவர்களும் சரி, செயல்படுதல் என்பது அனைவருக்கும் உரியதாகும். ஒரு கணம்கூட செயல்கள் எதையும் செய்யாமல் இருப்பது எவருக்கும் சாத்தியமல்ல. செயல்பட மறுத்து, அதே சமயத்தில் மனதை புலனின்பப் பொருள்களில் அலைபாய விடுபவன், போலி மனிதன் எனப்படுகிறான். அத்தகு போலி மனிதனைக் காட்டிலும், புலன்களை மனதால் கட்டுப்படுத்தி, பற்றின்றி கர்ம யோகத்தில் செயல்படும் மனிதன், மிக உயர்ந்தவனாவான். விஷ்ணுவிற்காகச் செய்யப்படும் செயல்கள் தூய்மைப்படுத்துபவை; மற்ற செயல்கள் ஜடவுலகத்துடன் பந்தப்படுத்துபவை. எனவே, அவரது திருப்திக்காக உனது கடமைகளைச் செய், நீ எப்போதும் பந்தத்திலிருந்து விடுபடுவாய்.
கர்ம காண்டத்திலிருந்து கர்ம யோகம்
யாகங்கள் அனைத்தும் விஷ்ணு வைத் திருப்திப்படுத்துவதற்கானவை. ஆரம்ப நிலையில் (கர்ம காண்ட நிலையில்) ஜடவுலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக அந்த யாகங்கள் தேவர்களை நோக்கி நிறைவேற்றப்படுகின்றன. யாகங்களால் மகிழ்ச்சியடையும் தேவர்கள், மனிதர் களுக்கு வேண்டியவற்றை வழங்க, இரு தரப்பினரும் தங்களது ஒத்துழைப் பினால் நலமுடன் வாழ முடியும். தேவர்கள் தருவதைப் பெற்றுக் கொண்டு, அவற்றை அவர்களுக்குப் படைக்காமல் அனுபவிப்பவன் நிச்சயம் திருடனாகக் கருதப்படுகிறான். யாகத்தில் அர்ப்பணிக் கப்பட்ட உணவை உண்பவன் பாவங் களிலிருந்து விடுபடுகிறான், சுய புலனின் பத்திற்காக உணவு தயாரிப்பவன் பாவத் தையே உண்கிறான்.
எல்லா ஜீவன்களின் உடல்களும் தானியங்களைச் சார்ந்தவை; தானியங்கள் மழையைச் சார்ந்தவை; மழை யாகங்களைச் சார்ந்தது; யாகங்கள் கடமையைச் சார்ந்தவை; கடமைகள் வேதங்களைச் சார்ந்தவை; வேதங்கள் முழுமுதற் கடவுளிடமிருந்து வருபவை. யாகச் சக்கரம் எனப்படும் இவ்வழிமுறை நிச்சயம் பின்பற்றப்பட வேண்டும். ஜடவுலக இன்பத்திற்காக தேவர்களை வழிபடுவோர் (கர்ம காண்டத்தைப் பின்பற்றுவோர்), வேதங்கள் முழுமுதற் கடவுளிடமிருந்து வருகின்றன என்பதை அறியும் பட்சத்தில், கர்ம யோகத்திற்கு உயர்வு பெறுகின்றனர்.
பற்றற்று கடமைகளைச் செய்தல்
தன்னையுணர்ந்த நபருக்குக் கடமைகள் ஏதுமில்லை; அவர் அடைய வேண்டியதும் ஏதுமில்லை. இருப்பினும், கடமையைச் செய்யாதிருக்கும் அவசியமும் அவருக்கு இல்லை. செயல்களின் பலனில் பற்றுதல் கொள்ளாமல் செயல்படும் அத்தகு நபர்கள் பரத்தை அடைவர். அவர்கள் உயர்ந்த நபர்களாக இருப்பதால், பொதுமக்கள் இயற்கையாகவே அவர்களைப் பின்பற்றுவர். எனவே, பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக, ஜனகரைப் போன்ற தன்னையுணர்ந்த நபர்களும் தங்களது கடமைகளைச் செய்து வந்தனர்.
அதே காரணத்திற்காக, மூவுலகங்களிலும் எந்தக் கடமையும் இல்லாத முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் கடமைகளைச் செய்யாவிடில், உலகம் முழுவதும் சீரழிந்துவிடும், தேவையற்ற ஜனத்தொகை உருவாகி, உயிர்வாழிகளின் அமைதி சீர்குலைந்து விடும். தனது கடமையைச் செய்தால் (போர் புரிந்தால்) தேவையற்ற ஜனத்தொகை உருவாகும் என்னும் அர்ஜுனனின் வாதம், கடமையைச் செய்யாவிடில் தேவையற்ற ஜனத்தொகை உருவாகும் என்னும் இக்கூற்றின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரால் முறியடிக்கப்படுகிறது.
பலனில் பற்றுதல் கொண்டுள்ள அறிவற்றோரை சரியான பாதையில் வழிநடத்துவதற்காக, தங்களுக்கென்று கடமைகள் இல்லாத அறிஞர்களும் கடமைகளைச் செய்கின்றனர். அத்தகு அறிஞர்கள் அறிவற்றோரைக் குழப்பக் கூடாது; கடமைகளைத் துறக்கும்படி ஊக்குவிக்கக் கூடாது. எல்லாவிதச் செயல்களிலும் அவர்களை ஈடுபடுத்தி படிப்படியாக அவர்களை முன்னேற்ற வேண்டும். அறிவற்ற அந்த நபர்கள், அஹங்காரத்தின் காரணத்தினால், ஜட இயற்கையின் முக்குணங்களால் நடைபெறும் செயல்களுக்குத் தங்களையே காரணமாக எண்ணிக் கொள்கின்றனர். அறிவுடையவனோ, புலனுகர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.
அத்தகு அறிவுடையோன் மேலும் வளர்ச்சிபெறும்போது, பக்தி யோகத்தின் தளத்தை அடைகிறான். கிருஷ்ணரைப் பற்றிய முழு அறிவுடன் எல்லாச் செயல்களையும் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, பலனில் ஆசைகளின்றி கிருஷ்ணருக்காகச் செயல்படத் தொடங்குவான். அத்தகு நபர்கள், கர்ம பந்தத்திலிருந்து எளிதில் விடுதலையடைகின்றனர். ஆனால் கிருஷ்ணரின் அறிவுரைகளை அவமதித்து, பொறாமையினால் அவற்றைப் பின்பற்ற மறுப்பவன், அறிவை இழந்த முட்டாளாகக் கருதப்படுகிறான்.
காமம், கோபத்தின் விளைவுகள்
செயல்களை எவ்வாறு நல்லபடியாக முறைப்படி செய்வது என்பதைக் கேட்டறிந்த அர்ஜுனன், “ஒருவனுக்கு விருப்பமில்லாவிட்டாலும் பலவந்தப்படுத்தப்பட்டது போன்று, சில சமயங்களில் பாவ காரியங்களைச் செய்வது ஏன்?” என்று வினவினான். காமமே இதற்குக் காரணம்; ரஜோ குணத்தில் தோன்றி பின்னர் கோபமாக உருவெடுக்கும் காமமே, உயிர்வாழியின் மிகப்பெரிய எதிரியாகும். எவ்வாறு நெருப்பு புகையாலும் கண்ணாடி தூசியாலும் கரு கருப்பையாலும் மறைக்கப்பட்டுள்ளதோ, அதுபோல, எல்லா உயிர்வாழிகளும் காமத்தின் பல்வேறு நிலைகளால் மறைக்கப்பட்டுள்ளனர். ஒருபோதும் திருப்தியடையாத இந்த காமம், ஜீவனின் புலன்கள், மனம், புத்தி ஆகிய இடங்களில் அமர்ந்தபடி ஜீவனைக் கட்டுப்படுத்துகின்றது. ஜடப் பொருள்கள், புலன்கள், மனம், புத்தி என இவையனைத்திற்கும் உயர்ந்ததாக விளங்கும் ஆத்மாவைப் பற்றிய அறிவினால் நித்திய எதிரியான காமத்தை வெற்றி கொள்ள வேண்டும்.
கீதையின் இந்த மூன்றாம் அத்தியாயம், உருவற்ற சூன்யத்தை இறுதி இலட்சியமாகக் கொள்ளாமல், தான் பரம புருஷ பகவானுடைய நித்தியத் தொண்டன் என்பதை அறியும் கிருஷ்ண உணர்வினை முடிவாகச் சுட்டிக் காட்டுகிறது. பௌதிக வாழ்வில், காம உந்துதல்களாலும் ஜட இயற்கையின் வளங்களை அடக்கியாளும் ஆசையாலும் ஒருவன் நிச்சயமாக வசப்படுத்தப்படுகிறான். அதிகாரத்தன்மைக்கான ஆசைகளும் புலனுகர்ச்சிக்கான ஆசைகளும் கட்டுண்ட ஆத்மாவின் பரம எதிரிகளாகும்; ஆனால் கிருஷ்ண உணர்வின் பலத்தால், ஜடப் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியும். தொழிலையும் விதிக்கப்பட்ட கடமையையும் திடீரென விட்டுவிடத் தேவையில்லை; மாறாக, படிப்படியாக கிருஷ்ண உணர்வை அபிவிருத்தி செய்துகொள்வதன் மூலம், தனது ஸ்வரூபத்தை நோக்கிச் செலுத்தப்படும் ஸ்திரமான புத்தியினால், பௌதிகப் புலன்களாலும் மனதாலும் பாதிக்கப்படாத திவ்யமான தளத்தில் நிலைபெற முடியும். இதுவே இந்த அத்தியாயத்தின் சாரமாகும்..