தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.
இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் பன்னிரண்டு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் பதிமூன்றாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.
பன்னிரண்டாம் அத்தியாயத்தின் சுருக்கம்
பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர், அருவ பிரம்மனை வழிபடுபவர்–இருவரில் யார் சிறந்தவர்? என்னும் அர்ஜுனனின் கேள்வியுடன் பன்னிரண்டாம் அத்தியாயம் தொடங்கியது. தனது தனிப்பட்ட உருவத்தை வழிபடுவதே உயர்ந்தது என்பதை உறுதிப்படுத்தி, பரம்பொருளின் அருவத் தன்மையை வழிபடுவோரின் பாதை துன்பங்கள் நிறைந்தது என்பதையும் ஆணித்தரமாக கிருஷ்ணர் எடுத்துரைத்தார். மேலும், தனது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளோரை ஸம்ஸாரக் கடலிலிருந்து விடுவிக்கும் பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். தூய பக்தியில் நிலைபெற இயலாதோர் ஸாதன பக்தியைப் பயிற்சி செய்யலாம் என்றும், அதைச் செய்யவும் இயலாதோர் கர்மம், ஞானம், யோகம் போன்றவற்றில் ஈடுபடலாம் என்றும் கூறிய கிருஷ்ணர், தனது பக்தனின் உயரிய குணங்களை எடுத்துரைத்து பக்தனே தனக்கு பிரியமானவன் என்று நிலைநாட்டினார்.
பன்னிரண்டாம் அத்தியாயத்திற்கும் பதிமூன்றாம் அத்தியாயத்திற்கும் இடையிலான தொடர்பு
தனது பக்தர்களைத் தானே விடுவிப்பதாக கிருஷ்ணர் கூறினார்; அவர்களை விடுவிப்பதற்கு உகந்த தத்துவ அறிவினை அர்ஜுனன் வினவ அதற்கான பதிலை கிருஷ்ணர் இந்த அத்தியாயத்திலும் இதைத் தொடர்ந்து வரும் அத்தியாயத்திலும் விளக்குகின்றார்.
கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் பக்தியை நோக்கி இட்டுச் செல்லும் கர்ம யோகம் (பெரும்பாலான இடங்களில்) விவாதிக்கப்பட்டது. கீதையின் இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் பக்தி யோகம் பூரணமாக எடுத்துரைக்கப்பட்டது. இறுதி ஆறு அத்தியாயங்களில் பக்தியை நோக்கி இட்டுச் செல்லும் ஞான யோகம் விளக்கப்படுகின்றது. கர்மமும் ஞானமும் பக்தி என்னும் உன்னதமான பொக்கிஷத்தின் மேல் மூடியாகவும் கீழ் மூடியாகவும் இருந்து அதனைப் பாதுகாக்கின்றன.
அர்ஜுனனின் கேள்விகள்
அர்ஜுனன் கேட்கும் ஆறு கேள்விகளுடன் பதிமூன்றாம் அத்தியாயம் ஆரம்பமாகின்றது. இக்கேள்விகளே பின்வரும் அனைத்து அத்தியாயங்களுக்கும் ஆதாரமாக விளங்குகின்றன. வேத இலக்கியங்களில் அடிக்கடி உபயோகிக்கப்படும் சில வார்த்தைகளின் பொருளை அறிந்துகொள்ள விரும்பிய அர்ஜுனன் அதற்கான விளக்கத்தினைக் கேட்கிறான். “ப்ரக்ருதி (இயற்கை) என்றால் என்ன? புருஷ (அனுபவிப்பவன்) என்றால் என்ன? க்ஷேத்ர (களம்) என்றால் என்ன? க்ஷேத்ரக்ஞ (களத்தை அறிபவன்) என்றால் என்ன? க்ஞானம் (அறிவு) என்றால் என்ன? க்ஞேயம் (அறியப்படும் பொருள்) என்றால் என்ன?”–இவையே அர்ஜுனனின் ஆறு கேள்விகள்.
க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ
அர்ஜுனனால் கேட்கப்பட்ட ஆறு கேள்விகளில், கிருஷ்ணர் முதலில் மூன்றாவது கேள்விக்கும் நான்காவது கேள்விக்கும் பதிலளிக்கின்றார். இந்த உடலே க்ஷேத்ர (களம்) என்று அறியப்படுவதாகவும், இந்த உடலை அறிபவன் க்ஷேத்ரக்ஞ (களத்தை அறிபவன்) என்று அறியப்படுவதாகவும் அவர் பதிலளித்தார். பல தரப்பட்ட நல்ல தீய செயல்கள் அனைத்தும் உடல் என்னும் களத்தில்தான் செய்யப்படுவதால், இவ்வுடல், களம் (க்ஷேத்ர) என்று அறியப்படுகிறது. ஒரு நிலத்தில் (களத்தில்) விதையை விதைத்தவன் அதன் தன்மைகளை அறிவதுபோல, உடல் என்னும் களத்தில் செயல்களைச் செய்பவன் அவ்வுடலை அறிபவனாகிறான். உடலை அறிபவனான ஆத்மா, க்ஷேத்ரக்ஞ (களத்தை அறிபவன்) என்று அறியப்படுகிறான்.
ஒவ்வொரு ஆத்மாவும் தத்தமது சொந்த உடலைப் பற்றி மட்டுமே அறிவர். ஆனால் பரமாத்மாவான இறைவன் எல்லோரது உடலையும் அறிபவர். எனவே, பரமாத்மாவும் (கிருஷ்ணரும்) க்ஷேத்ரக்ஞ (களத்தை அறிபவர்) என்று அழைக்கப்படுகிறார். ஒரு விவசாயி தனது சொந்த நிலத்தைப் பற்றி மட்டுமே அறிவான்; ஆனால் மன்னன் தனது நாட்டிலுள்ள எல்லா நிலங்களையும் அறிவான்–அதுபோல, கிருஷ்ணர் அனைத்து உடல்களையும் அறிபவர். களத்தையும் (உடலையும்) களத்தை அறியும் இரு நபர்களையும் (ஆத்மா, பரமாத்மா) அறிவதே க்ஞானம் (அறிவு) எனப்படுகிறது.
க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ பற்றிய தகவல்கள் எல்லையற்றவை என்பதால், அவற்றை சுருக்கமாக மட்டுமே தெரிவிப்பதாகக் கூறும் கிருஷ்ணர், மேலும் விளக்கங்களைப் பெற விரும்பினால், வேதாந்த சூத்திரத்தை அணுகும்படி அறிவுறுத்துகிறார். க்ஷேத்ர (உடல்) என்பது, பஞ்ச பூதங்கள், அஹங்காரம், புத்தி, அவ்யக்தம், பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் பொருள்கள், விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உயிரின் அறிகுறிகள், திட நம்பிக்கை ஆகியவற்றினால் உருவானதாகும். இக்கலவையினால் பல்வேறு செயல்கள் தோன்றி, க்ஷேத்ரத்தின் (உடலின்) மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.
ஞானம்
உடல், ஆத்மா, பரமாத்மா ஆகியவற்றின் வேறுபாட்டை அறிவதே ஞானம் என்பதை முதலில் எடுத்துரைத்த கிருஷ்ணர் இதர ஞானத்தினைப் பட்டியலிடுகிறார். அடக்கம், கர்வமின்மை, அகிம்சை, பொறுமை, எளிமை, அங்கீகரிக்கப்பட்ட குருவை அணுகுதல், தூய்மை, தளராமை, சுயக் கட்டுப்பாடு, புலனின்பப் பொருட்களைத் துறத்தல், பொய் அஹங்காரம் இல்லாதிருத்தல், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றின் துன்பத்தினைக் கவனித்தல், குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் இதர பந்தங்களிலிருந்து விடுபட்டிருத்தல், விருப்பு வெறுப்புகளில் சமநிலை, கிருஷ்ணரின் மீதான களங்கமற்ற பக்தி, தனிமையான இடங்களில் வாழ விரும்புதல். பொதுமக்களிடமிருந்து விலகியிருத்தல், ஆத்ம ஞானத்தின் முக்கியத்துவத்தை ஏற்றல், பரம்பொருளை அறிவதற்கான தத்துவ ஆய்வு–இவையனைத்தும் ஞானமாக ஏற்கப்படுகின்றன. மற்றவை அனைத்தும் அறியாமையே.
க்ஞேயம்
ஞானத்தினால் அடையப்படும் பொருள் (நபர்), க்ஞேயம் எனப்படும். ஞானத்தினால் அடையப்படுபவர் எங்கும் வீற்றிருப்பவரான பரமாத்மாவே. அவரை அறிவதால் அமிர்தத்தை சுவைக்க முடியும். பரமாத்மா இவ்வுலகின் செயல்களுக்கு அப்பாற்பட்டு விளங்குகிறார். அவரது கரங்கள், கால்கள், கைகள், முகங்கள் மற்றும் காதுகள் எல்லா திசைகளிலும் உள்ளன. எல்லா புலன்களுக்கும் அந்த பரமாத்மாவே மூல காரணம், இருப்பினும் அவரிடம் பௌதிகப் புலன்கள் கிடையாது. எல்லா உயிர்வாழிகளையும் பராமரிப்பவர் அவரே, இருப்பினும் அவரிடம் பற்றுதல் கிடையாது. எல்லா உயிர்வாழிகளின் உள்ளும் புறமும் உள்ளார், அசைவன அசையாதவை என அனைத்திலும் உள்ளார். புலன்களால் அறிவதற்கு அப்பாற்பட்டவர். மிகமிகத் தொலைவில் இருப்பினும் அனைவரின் அருகிலும் உள்ளார். எல்லா உயிர்களுக்குமிடையே பரமாத்மா பிரிந்திருப்பதாகத் தோன்றினாலும், அவர் ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதவர். இருட்டிற்கு அப்பாற்பட்டவராக பிரகாசிக்கும் பொருட்கள் எல்லாவற்றின் மூலமாக அவரே விளங்குகிறார். அவரே அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், அறிவின் இலக்காகவும் உள்ளார்.
க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ, ஞானம், க்ஞேயம் இவற்றை அறிவதற்கு தன்னுடைய பக்தர்களால் மட்டுமே முடியும் என்று கிருஷ்ணர் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
ப்ரக்ருதி, புருஷ
ப்ரக்ருதி (ஜட இயற்கை), புருஷ (உயிர்வாழிகள்) ஆகிய இரண்டுமே ஆரம்பமற்றவை. இருப்பினும், இவையிரண்டின் கலவையினால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. எல்லா செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இயற்கையே காரணமாகக் கூறப்படுகின்றது; இருப்பினும் இவ்வுலகின் பல்வேறு இன்ப துன்பங்களுக்கு உயிர்வாழியே காரணமாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு, ஜட இயற்கையினால் பந்தப்பட்டுள்ள உயிர்வாழி, முக்குணங்களை அனுபவித்துக் கொண்டு, அதற்கேற்ப பல்வேறு உயிரினங்களில் பிறவியெடுத்து நன்மை தீமைகளைச் சந்திக்கின்றான்.
நன்மை தீமைகளைச் சந்திக்கும் ஜீவனுடன் இணைந்து, இவ்வுடலில் மற்றுமொரு அனுபவிப்பாளர் (புருஷ) உள்ளார். அவரே இறைவன், பரம உரிமையாளர்; மேற்பார்வையிட்டு அனுமதி வழங்குபவரும் பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.
ப்ரக்ருதி, புருஷ, குணங்களுடனான உறவு ஆகியவற்றின் தத்துவத்தைப் புரிந்துகொள்பவன் முக்தியடைவான், அவன் மீண்டும் பிறவியெடுக்கப் போவதில்லை. தியானம், ஞானம், பலனை எதிர்பாராது செயல்படுதல், பிறரிடமிருந்து முழுமுதற் கடவுளைப் பற்றி கேட்டல் ஆகிய வழிமுறைகளினாலும் சிலர் முக்தியடைகின்றனர்.
ஞானத்தின் பார்வை
ப்ரக்ருதி, புருஷ, க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ, க்ஞானம், க்ஞேயம் ஆகியவற்றை முறையாக அறிபவன், அத்தகைய ஞானத்தின் பார்வையுடன் அனைத்தையும் காண்பான். இவ்வுலகில் அசைவன, அசையாதவை என்று எவையெல்லாம் உள்ளனவோ, அவையனைத்தும் களமும் களத்தை அறிபவனும் இணைந்த கலவையே. எல்லா உடல்களிலும் ஜீவாத்மாவுடன் இணைந்து பரமாத்மாவைக் காண்பவனும், அழியக்கூடிய உடலினுள் இருக்கும் ஆத்மாவும் பரமாத்மாவும் அழிவடைவதில்லை என்பதைப் புரிந்துகொள்பவனுமே, உண்மையில் காண்பவனாவான்.
பரமாத்மா, எல்லா இடங்களிலும் எல்லா உயிர்வாழிகளிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. ஜட இயற்கையே எல்லாச் செயல்களையும் செய்கின்றது என்பதையும் ஆத்மா எதையும் செய்வதில்லை என்பதையும் காண்பவனே உண்மையில் காண்கிறான். நித்தியத்தின் பார்வையை உடையவர்கள், ஆத்மா தெய்வீகமானது, நித்தியமானது, குணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைக் காண முடியும்.
எங்கும் நிறைந்துள்ள ஆகாயம் தனது நுண்ணிய இயற்கையினால் எதனுடனும் கலக்காமல் இருப்பதைப் போலவே, ஆத்மா உடலில் அமைந்திருந்தாலும் உடலுடன் கலப்பதில்லை. ஒரே ஒரு சூரியன் பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசப்படுத்துவதைப் போலவே, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகிறான். உடலுக்கும் உடலின் உரிமை யாளனுக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை ஞானக் கண்களைக் கொண்டு அறிந்து, ஜட இயற்கையின் பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான வழிமுறையினைப் புரிந்து கொண்டவர்கள், பரம இலக்கினை அடைகின்றனர்.