பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் பதினான்கு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் பதினைந்தாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

பதினான்காம் அத்தியாயத்தின் சுருக்கம்

இயற்கையின் முக்குணங்களைப் பற்றி அறிவதால் முக்தி அடையலாம் என்பதால், அனைத்து ஜீவன்களின் தந்தையான கிருஷ்ணர் முக்குணங்களைப் பற்றி விளக்கினார். தூய்மை, பிரகாசம், பாவ விளைவுகளிலிருந்து விடுதலை ஆகியவை ஸத்வ குணத்தின் தன்மைகள்; எல்லையற்ற ஆசைகள், ஏக்கம் ஆகியவை ரஜோ குணத்தின் தன்மைகள்; சோம்பல், உறக்கம் போன்றவை தமோ குணத்தின் தன்மைகள். ஸத்வ குணம் மகிழ்ச்சியினாலும் ரஜோ குணம் பலன்நோக்குச் செயல்களாலும் தமோ குணம் பைத்தியக்காரத்தனத்தினாலும் ஆத்மாவைக் கட்டுப்படுத்துகின்றன. இம்மூன்று குணங்களும் ஒன்றையொன்று போட்டியிடுவதால், சில நேரங்களில் ஒரு குணம் மற்ற குணங்களைக் காட்டிலும் மேலோங்கி நிற்கும். ஸத்வ குணத்தில் வாழ்பவன் தனது தூய செயல்களால் உயர் லோகங்களை அடைகிறான்; ரஜோ குணத்தில் வாழ்பவன் தனது துன்பமான செயல்களால் பூலோக வாழ்க்கையை தொடர்கிறான்; தமோ குணத்தில் வாழ்பவன் தனது முட்டாள்தனமான செயல்களால் நரக வாழ்க்கையை அடைகிறான். மூன்று குணங்களுமே பந்தப்படுத்துபவை என்பதால், இவற்றிலிருந்து வெளிவர வேண்டும். அவ்வாறு முக்குணங்களிலிருந்து விடுபட்டவன், பற்றுதல் மற்றும் மயக்கத்திலிருந்து விலகியவனாக, இன்ப துன்பங்களில் சமநிலை கொண்டவனாக இருப்பான். பிரம்மனின் ஆதாரமாக விளங்கும் கிருஷ்ணரின் மீது செலுத்தப்படும் கலப்படமற்ற பக்தியே முக்குணங்களை விட்டு வெளியேறுவதற்கான எளிய வழியாகும்.

14ஆம் அத்தியாயத்திற்கும் 15ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

பதினான்காம் அத்தியாயத்தின் இறுதியில், பக்தித் தொண்டின் மூலமாக குணங்களைக் கடக்க முடியும் என்று கிருஷ்ணர் அறிவித்தார். ஆனால் கிருஷ்ணரின் மீதான பக்தியைப் பெறுவதற்கு, பௌதிக விஷயங்களின் மீது பற்றின்றி இருத்தல் அவசியம் என்பதால், ஜடவுலகின் மீதான பற்றின்மையின் அவசியம் குறித்து, அரச மரத்தினை உதாரணமாகக் கொண்டு கிருஷ்ணர் பதினைந்தாம் அத்தியாயத்தைத் தொடங்குகிறார்.

 

ஜடவுலகின் பற்றுதலிலிருந்து விடுபடுதல்

ஜடவுலகின் பிணைப்புகளை கிருஷ்ணர் ஓர் அரசமரத்திற்கு ஒப்பிடுகிறார். வேத பதங்களை இலைகளாகக் கொண்ட முடிவற்ற இந்த மரத்தின் வேர்கள் மேல்நோக்கியும், கிளைகள் கீழ்நோக்கியும் காணப்படுகின்றன. இத்தகைய தலைகீழான மரத்தினை ஏதேனும் ஒரு நீர்த்தேக்கத்தில் காண முடியும். கரையில் இருக்கும் மரங்கள் நீரில் தலைகீழாகத் தெரியும். வேறு விதமாகக் கூறினால், ஜடவுலகம் என்னும் இந்த மரம், ஆன்மீக உலகம் என்னும் உண்மையான மரத்தின் பிரதிபலிப்பாகும். ஆன்மீக உலகில் உண்மையாக இருப்பவை அனைத்தும், ஜடவுலகில் ஒரு பிம்பம் போன்று தென்படுகின்றன.

பிம்பம் போன்ற இந்த அரச மரத்தின் கிளைகள், ஜட இயற்கையின் முக்குணங்களால் வளப்படுத்தப்படுகின்றன. இஃது எங்கே முடிகின்றது, எங்கே தொடங்குகின்றது, இதன் அஸ்திவாரம் எங்கே உள்ளது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தின் (ஜடவுலக வாழ்க்கையின்) ஆரம்பத்தினைக் காண்பதற்கு முயற்சி செய்வதற்குப் பதிலாக, பற்றின்மை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இம்மரத்தை வெட்டி வீழ்த்த வேண்டும்.

அவ்வாறு வெட்டி வீழ்த்திய பின்னர், எங்கே செல்வதால் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அந்த இடத்தை நாடி, யாரிடமிருந்து எல்லாம் தோன்றுகின்றதோ, யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகின்றதோ, அந்த பரம புருஷ பகவானிடம் (கிருஷ்ணரிடம்) சரணடைய வேண்டும். கௌரவம், மயக்கம், காமம், மற்றும் தவறான சங்கத்திலிருந்து விடுபட்டு, இன்ப துன்பத்தின் இருமையை ஒழித்து, கிருஷ்ணரிடம் சரணடைபவர்கள் அவரது லோகத்தை அடைய முடியும்.

 

ஆன்மீக உலகின் தன்மைகள்

கிருஷ்ணரின் உலகம் இந்த ஜடவுலகத்தைப் போன்று சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அந்த உலகம் தானாகவே பிரகாசமாக உள்ளது. இந்த ஜடவுலகில் சூரிய கிரகம் மட்டுமே சுயப் பிரகாசம் கொண்டுள்ளது. வைகுண்டம் என்று அழைக்கப்படும் அந்த ஆன்மீக உலகிலோ அனைத்து கிரகங்களும் சுயப் பிரகாசமுடையவை. அவற்றின் பிரகாசமே பிரம்மஜோதி. வைகுண்டத்திலுள்ள எண்ணற்ற கிரகங்கள் அனைத்தும் பிரம்மஜோதியின் ஒளிரும் வானத்தில் நிரம்பியுள்ளன; அந்த லோகங்களில் முதன்மையானதாக கிருஷ்ணர் வசிக்கும் கோலோக விருந்தாவனம் உள்ளது.

இருண்டு கிடக்கும் ஜடவுலகிலுள்ள ஜீவன்கள் ஆன்மீக உலகின் தன்மையினால் கவரப்பட வேண்டும். நித்திய உலகிற்கு தம்மை மாற்றிக் கொள்ளவும் பொய்யான இந்த பிம்பத்திலிருந்து விடுவித்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அத்தகைய ஆர்வத்துடன் பக்தித் தொண்டினை முறையாகப் பின்பற்றினால், வைகுண்ட லோகத்தை அடைய முடியும். அங்கு சென்ற பின்னர், மீண்டும் இந்த ஜடவுலகில் யாரும் பிறவி எடுப்பதில்லை. பிறப்பு, இறப்பு என்னும் முடிவற்ற சுழற்சியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.

ஜீவன்களின் பரிணாமம்

ஆன்மீக உலகில் கிருஷ்ணருடன் நித்தியமாக வாழ வேண்டிய ஜீவன்கள், இந்த ஜடவுலகில் கட்டுண்டு வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் நித்திய அம்சங்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நித்திய அம்சம் என்றால், “இறைவனின் அம்சங்கள்” என்னும் தனித்தன்மையினை ஜீவன்கள் என்றும் கைவிடுவதில்லை என்று பொருள். வேறுவிதமாகக் கூறினால், முக்திக்குப் பின்னர், ஜீவன்கள் பரமனுடன் ஒன்றாகக் கலந்துவிடுவர் என்னும் கருத்து பகவத் கீதையில் ஏற்கப்படவில்லை. முக்தி பெற்ற நிலையில், ஜீவன்கள் பரம புருஷரான கிருஷ்ணரின் தூய அன்புத் தொண்டில் ஈடுபடுகின்றனர்.

கிருஷ்ணரின் நித்திய அம்சங்கள் என்பதால், ஜீவன்கள் அனைவரும் அவரது நித்திய சேவகர்கள். முழுமையிடம் உள்ள அனைத்து குணங்களும் அம்சங்களிடம் சிறிய அளவில் காணப்படும். அதுபோல, முழுமையான கிருஷ்ணரிடம் உள்ள பூரண சுதந்திரம் அவரது அம்சங்களான ஜீவன்களிடம் சிறிய அளவில் காணப்படுகிறது. அந்த சுதந்திரத்தை ஜீவன்கள் தவறாகப் பயன்படுத்தும்போது, அவர்கள் ஆன்மீக உலகிலிருந்து விலகி ஜட இயற்கையுடன் தொடர்பு கொள்கின்றனர். அத்தகைய கட்டுண்ட வாழ்வின் காரணத்தினால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.

காற்று நறுமணத்தைத் தாங்கிச் செல்வதைப் போல, ஜடவுலகில் வசிக்கும் உயிர்வாழி, ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்குச் செல்லும்போது, பல்வேறு உணர்வுகளைத் தாங்கிச் செல்கிறான். ஒருவன் எத்தகைய உணர்வுகளை வளர்க்கின்றானோ, அந்த உணர்வுகள் அவனுடன் கூடவே வரும். ஏனெனில், உணர்வுகள் என்பது மனதில் பதியக்கூடியவை; மனமானது சூட்சும உடலின் ஓர் அங்கம். மரணத்தின்போது ஒருவனின் ஸ்தூல உடல் (வெளிப்புற உடல்) மட்டுமே அழிகின்றது, சூட்சும உடல் அழிவதில்லை என்பதால், உணர்வுகளை ஒவ்வொருவரும் அடுத்தடுத்த பிறவிகளுக்குத் தாங்கிச் செல்கிறோம்.

உணர்வுகளைத் தாங்கியபடி வேறொரு ஸ்தூல உடலைப் பெறும் உயிர்வாழி, மனதை மையமாகக் கொண்டுள்ள புலன்களை மீண்டும் பெற்று, தொடர்ந்து பௌதிக இன்பத்தில் ஈடுபடுகிறான். வேறு விதமாகக் கூறினால், மனிதனின் உணர்வானது நாய் அல்லது பூனையின் உணர்வினால் பாதிக்கப்படுமானால், அவன் தனது அடுத்த பிறவியில், நாய் அல்லது பூனையின் உடலைப் பெற்று அனுபவிக்கின்றான்.

உயிர்வாழிகள் எவ்வாறு ஓர் உடலைக் கைவிட்டு மற்றோர் உடலை அடைகின்றனர் என்பதை முட்டாள்கள் அறியார்கள். ஆனால் யாருடைய கண்கள் ஞானத்தில் பயிற்சி பெற்றுள்ளதோ, அவர்கள் இவற்றைக் காண முடியும். வளர்ச்சி பெறாத மனம் கொண்டவர்களும் தன்னுணர்வில் நிலைபெறாதவர்களும், என்ன நடக்கின்றது என்பதை முயற்சி செய்தால்கூட காண முடியாது.

ஜடவுலகம் ஆன்மீக உலகின் பிம்பம் என்பதால், தலைகீழான அரச மரத்திற்கு இஃது ஒப்பிடப்படுகிறது.

கிருஷ்ணரே உலகினைப் பராமரிப்பவர்

ஆத்மாவின் பரிமாணத்தைக் காண இயலாத குறைமதி கொண்டவர்கள், ஜடவுலகில் காணப்படும் கிருஷ்ணரின் ஐஸ்வர்யத் தன்மையினைக் காண முடியும், அதனால் கவரப்படக் கூடும் என்பதால், கிருஷ்ணர் இதனைத் தொடர்ந்து தானே இவ்வுலகினைப் பராமரிப்பவன் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

உலகின் இருளைப் போக்கும் சூரியன், சந்திரன், மற்றும் நெருப்பின் பிரகாசங்கள் கிருஷ்ணரிடமிருந்தே வருகின்றன. கிருஷ்ணர் தனது பரமாத்மா உருவில் எல்லா கிரகங்களிலும் நுழைவதால் மட்டுமே அவையனைத்தும் தத்தமது பாதையில் நிலைபெற்றுள்ளன. மேலும், காய்கறிகளுக்குத் தேவையான வாழ்வு ரஸத்தினை சந்திரனின் மூலமாக வழங்குபவரும் அவரே. காய்கறிகள் இல்லாவிடில் ஜீவன்கள் உயிர் வாழ முடியாது என்பதால், ஜீவன்களின் வாழ்வாதாரத்திற்கு கிருஷ்ணரே காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உணவினை வழங்குவது மட்டுமின்றி, அந்த உணவினைச் செரிப்பதற்கான ஜீரண நெருப்பாகவும் கிருஷ்ணர் உள்ளார். உட்சுவாசக் காற்றுடனும் வெளிசுவாசக் காற்றுடனும் இணைந்து, நான்கு வித உணவுகளைச் செரிப்பவராக அவர் உள்ளார்.

எல்லோருடைய இதயத்திலும் அவர் பரமாத்மாவாக வீற்றுள்ளார். அவரிடமிருந்தே நினைவாற்றல், அறிவு, மறதி ஆகியவை உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவர் அவரே. வேதாந்தத்தை தொகுத்தவரும் வேதங்களை அறிந்தவரும் அவரே. வேதங்களால் அறியப்பட வேண்டியவன் தானே என்பதை நிலைநாட்டிய பின்னர், வேதாந்தத்தினை சுருக்கி மூன்று ஸ்லோகங்களில் கிருஷ்ணர் வழங்குகிறார்.

 

இரு வகையான ஜீவன்களுக்கு அப்பால் பரமாத்மா உள்ளார். கிருஷ்ணரே அந்த பரமாத்மா என எல்லா வேதங்களும் உரைக்கின்றன.

கீதையின் திரி-ஸ்லோகம் (வேதாந்தத்தின் சாரம்)

தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் என்று இரண்டு விதமான ஜீவன்கள் உள்ளனர். ஜடவுலகில் இருப்பவர்கள் தவறக்கூடியவர்கள் என்றும், ஆன்மீக உலகில் இருப்பவர்கள் தவறாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். முழுமுதற் கடவுளின் நித்திய அம்சமான ஜீவன்கள், இந்த ஜடவுலகத்துடன் தொடர்புகொள்ளும்போது, ஜீவ–பூதா (கட்டுண்ட ஜீவன்கள்) என்று அழைக்கப்படுகின்றனர். ஜீவன்கள் இறைவனின் விருப்பத்துடன் ஒன்றி வாழும்போது, ஆன்மீக உலகில் முக்தி பெற்றவர்களாக வாழ்கின்றனர்.

இந்த இரு தரப்பு உயிர்வாழிகளுக்கு அப்பால், உத்தம புருஷரான பரமாத்மா இருக்கின்றார். அழிவற்றவரான அவர் மூவுலகங்களிலும் நுழைந்து அவற்றைக் காக்கின்றார்.

தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் என்னும் இருவருக்கும் அப்பாற்பட்டு கிருஷ்ணர் திவ்யமானவராக இருப்பதாலும், அவரே உத்தமமானவர் என்பதாலும், உலகிலும் வேதங்களிலும் அவரே அந்த புருஷோத்தமராகக் கொண்டாடப்படுகிறார்.

 

கிருஷ்ணரை அறிந்தவர் எல்லாவற்றையும் அறிந்தவர்

கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை ஐயமின்றி அறிந்தவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். பக்குவ மற்ற அறிவாளிகள் பரம்பொருளைப் பற்றி கற்பனை செய்து கொண்டே இருக்கலாம்; ஆனால் பக்குவமான அறிஞனோ தனது மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்காமல், கிருஷ்ண ஏற்று அவரது பக்தித் தொண்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான். வேதங்களின் செய்திகளை அதிகாரப்பூர்வமான மூலத்திடமிருந்து கேட்பவன், வேதங்களின் நோக்கத்தை (கிருஷ்ணரை) அறியக் கூடும். கிருஷ்ணரை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்.

கிருஷ்ணரைப் பற்றிய இந்த அறிவு வேத சாஸ்திரங்களின் மிகமிக இரகசியமான பகுதியாகும். கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம், யாரொருவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டவரோ அவரே கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியும். இருப்பினும், பக்தித் தொண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், இதில் ஈடுபட்ட உடனேயே ஒருவன் தானாகவே பாவமற்ற நிலைக்கு வந்து விடுகிறான். இந்த உண்மையை புரிந்துகொள்பவன் பக்குவமான அறிஞனாவான்.

பதினைந்தாம் அத்தியாயத்தின் ஐந்து பகுதிகள்

(1) ஜடவுலகின் பற்றுதலிலிருந்து விடுபடுதல் (15.1–5)

பௌதிக உலகம் ஆன்மீக உலகின் பிம்பத்தைப் போன்றது.

தலை கீழான அரச மரத்தின் உதாரணம் ஆதியைக் காண இயலாது, பற்றின்மையைக் கொண்டு வெட்டி வீழ்த்த வேண்டும்

 

(2) ஜீவன்களின் பரிணாமம் (15.6–11)

கிருஷ்ணரின் லோகம் சூரிய சந்திரனால் ஒளியூட்டப்பட்டதல்ல

அங்கு சென்றோர் இங்கு திரும்பி வருவதில்லை

ஜீவன்கள் அனைவரும் கிருஷ்ணரின் நித்தியமான அம்சங்கள்

ஜீவன் உடலை மாற்றும்போது, உணர்வுகளை எடுத்துச் செல்கிறான்

முட்டாள்களால் உணர முடியாது; ஞான கண்களால் உணர முடியும்

 

(3) கிருஷ்ணரே உலகினைப் பராமரிப்பவர் (15.12–15)

சூரியன், சந்திரன், அக்னி அனைத்தும் கிருஷ்ணரிடமிருந்தே

தோன்றுகின்றன.

நிலவின் மூலம் காய்கறிகளுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றார்

செரிப்பதற்குத் தேவையான நெருப்பும் அவரே

எல்லோர் இதயத்திலும் இருந்து, ஞாபகம், அறிவு, மறதியை அளிக்கின்றார்.

வேதங்களால் உணரப்பட வேண்டியவர், தொகுத்தவர், அறிந்தவர்

 

(4) கீதையின் திரி-ஸ்லோகம் (வேதாந்தத்தின் சாரம்) (15.16–18)

கட்டுண்ட ஜீவன்கள் தவறிழைக்கக்கூடியவர்கள்; இறைவனின்

விருப்பத்துடன் ஒன்றிணைந்தவர்கள் தவறிழைக்காதவர்கள்

இருவருக்கும் அப்பால் பரமாத்மா

கிருஷ்ணரே அந்த பரமாத்மா

 

(5) கிருஷ்ணரை அறிந்தவர் எல்லாவற்றையும் அறிந்தவர் (15.19–20)

இதை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவன்

பக்தியில் ஈடுபடுவான்

மிகமிக இரகசியமானது

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives